Advertisement

27
சினமிகா “அத்தை” என்று சொல்லவும் அவர்களின் அறைக்கதவை சீதா தட்டவும் சரியாக இருந்தது. “உதிரா கதவைத் திற” என்று படபடவென்று அவர் தட்ட சினமிகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறை விளக்கை ஒளிரவிட்டு உதிரன் கதவை திறக்கச் சென்றான்.
வெளியில் நின்றிருந்த சீதாவிற்கு வியர்த்திருந்தது. எதையோ பார்த்து பயந்த தோற்றம் அவரிடத்தில். வேகமாக அறைக்குள் வந்து கதவை மூடிவிட்டார் அவர்.
“என்னம்மா என்னாச்சு?? எதுக்கு கதவை சாத்துறீங்க??”
“உதிரா வெளிய யாரோ இருக்காங்க. என் கழுத்தை வந்து பிடிச்சாங்க அவங்க… நான் ரொம்ப நேரமா அவங்ககிட்ட போராடினேன். எப்படியோ அவங்களை தள்ளிவிட்டு இங்க ஓடி வந்திட்டேன்…” என்று அவர் கழுத்தை தடவிக் கொண்டே சொல்ல உதிரன் முகத்தில் அப்பட்டமான குழப்பம்.
சினமிகாவோ சீதாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அழுவதை தடுக்கக் கூட இல்லாமல் வெறுமே பார்த்தாள்.
உதிரன் கதவை திறந்துக் கொண்டு வெளியே செல்லப் போக “வேணாம் உதிரா இங்கவே இருப்பா எனக்கு பயமா இருக்கு” என்று அவர் சொல்ல “அம்மா சிமி தான் இங்க இருக்கால்ல அப்புறம் என்ன பயம், நான் போய் என்னன்னு பார்த்திட்டு வர்றேன்” என்றவன் சென்றுவிட்டான்.
ஹால் விளக்கை உமிழவிட்டு ஒரு இண்டு இடுக்கென்றில்லாமல் எல்லா இடத்தையும் அவன் சல்லடையாய் சலித்தான் கண்களால். அவன் அன்னையின் அறைக்கும் சென்று முழுதாய் அலசிவிட்டு தான் வந்தான். கண்கள் தன்னைப்போல் மாடியை நோக்க தாமதிக்காது அங்கும் சென்று பார்த்துவிட்டு தான் வந்தான். ஒருவரும் இல்லை என்று அவனுக்கு உறுதியாகும் வரை மீண்டும் மீண்டும் பார்த்துவிட்டு அவர்களின் அறைக்கு வந்தான்.
“என்ன உதிரா?? யாராச்சும் இருந்தாங்களா??”
அவன் தலை இல்லையென்பது போல் ஆடியது. 
“யாரும் இல்லையா??”
“இல்லைம்மா…”
“மேல கூட போய் பார்த்திட்டு வந்திட்டேன் யாரும் இல்லை…” என்றவன் அப்படியே தலையை பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்துவிட்டான்.
‘என்னைச் சுற்றி என்ன தான் நடக்கிறது. எதுவும் தெரியாமல் இருந்துவிட்டேனா இல்லை தெரிந்துக் கொள்ளாமல் இருந்துவிட்டேனா. முட்டாளாக இருந்திருக்கிறேனே’ என்ற எண்ணம் தான் அவனுக்குள் சுழன்றது.
சினமிகா உதிரனையும் சீதாவையும் மாறி மாறி பார்த்தவள் எதுவும் பேசாமல் திரும்பி படுத்துக் கொண்டாள்.
அவளின் அசைவை கண்டு திரும்பி பார்த்த உதிரனுக்கு அவளின் செயல் முகம் சுருங்க வைத்தது. சீதாவிடம் “நீங்க மேல படுத்துக்கோங்கம்மா. நான் கீழே படுத்துக்கறேன்” என்றவன் ஒரு போர்வையும் தலையணையும் எடுத்துக்கொண்டு கீழே படுத்துக் கொண்டான். உறக்கம் தான் அவனை ஆட்கொள்வேனா என்றிருந்தது.
நடுஇரவில் திடிரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்க அறையெங்கும் இருள் சூழ்ந்திருந்தது. உதிரனின் அருகே யாரோ நின்றிருக்கும் உணர்வு தோன்ற சட்டென்று கண் விழித்து பார்த்தவனின் விழிகள் தெறித்துவிடும் போலிருந்தது.
பைரவர் அவனையே பார்த்துக் கொண்டு அருகேயே துணை நின்றிருந்தார். சடக்கென்று எழுந்து அமர்ந்தவன் பைரவரை தொடப் போக இவனை ஒரு பார்வை பார்த்து அவர் முன்னே நடக்க ஆரம்பித்தார்.
அவ்வப்போது அவரின் பார்வை இவனை பார்ப்பதும் பின் செல்வதுமாய் இருக்க தன்னைப்போல இவனும் எழுந்து அவரின் பின்னேயே சென்றான்.
அறையை திறந்து வெளியே வந்திருந்தனர். ஹாலில் மாட்டியிருந்த ஊஞ்சலின் அருகே சில நொடி சென்று நின்றார் அவர்.
அவனை ஏதோ குறிப்பாய் பார்த்து வேறு செல்ல அவனுக்கு தான் எதுவும் புரியாத நிலை. பின் சமையலறைக்கு சென்றவர்  அதை அடுத்திருந்த ஸ்டோர் ரூமின் வாசலில் ஓரிரு நொடிகள் நின்று அந்த அறையை பார்த்தார்.
உதிரன் அவர் சொல்ல வருவதை புரிந்துக்கொள்ள முயற்சி செய்துக் கொண்டிருந்தான். பின் வாசல் கதவை தன் காலால் மெதுவாய் பைரவர் திறக்க உதிரன் பின்னோடே சென்றான்.
கீழே ஏதோ விழும் சத்தம் கேட்கவும் உடல் தூக்கிவாரிப் போட உறக்கம் கலைந்து எழுந்திருந்தான் உதிரன். அவனுக்கு நடந்ததெல்லாம் கனவு என்பது புரியவே சில நொடிகள் பிடித்தது.  சுற்றிலும் பார்வையை ஓட்ட பைரவர் வந்ததிற்கான அறிகுறியே தென்படவில்லை. மெதுவாய் எழுந்தவன் கட்டிலின் மேலே படுத்திருந்தவர்களை பார்த்தான்.
சீதாவும் சினமிகாவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டவன் சத்தமில்லாமல் எழுந்து கதவை திறந்து வெளியில் வந்தவன் அறையை வெளியில் தாழிட்டு மெல்ல அடியெடுத்து வைத்தான்.
ஊஞ்சலருகே சென்றவன் ஓரிரு நொடி நின்று பின் அதில் அமர்ந்தான். பெரிதாய் எந்த உணர்வும் அவனுக்கு தோன்றவில்லை.
கனவில் கண்டது போல சமையலறை தாண்டி ஸ்டோர் ரூம் வாயிலில் நின்றவன் அதன் கதவை திறந்து உள்ளிருந்த விளக்கை போட்டு பார்த்தான். பின் விளக்கணைத்து கதவை முன்பு போல மூடியவன் பின் வாசலுக்கு செல்ல அப்படியே அதிர்ந்து நின்றான்.
இரவு படுக்கச் செல்லும் முன் வீட்டின் கதவுகளை அடைப்பது அவன் வேலை தான். அன்றும் அவன் தான் அடைத்துவிட்டு வந்து படுத்திருந்தான்.
தற்போது அது திறந்திருப்பது அவனுக்கு குழப்பத்தை ஏற்படுத்த கதவை திறந்து வெளியில் பார்க்க தூரத்தில் யாரோ கையில் சிறு டார்ச்சை எடுத்துக் கொண்டு நடந்து செல்வது கண்ணில் விழ பின்னோடு செல்ல எண்ணம் கொண்டவன் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.
அந்நேரம் அவன் தோளில் ஒரு கரம் விழ அப்படியே நின்றுவிட்டான். திரும்பி பார்க்க சினமிகா நின்றிருந்தாள்.
“நீ எப்படி இங்கே வந்தே??”
“சுவத்தை பிடிச்சிட்டே வந்திட்டேன்”
“சரி வா உள்ள போகலாம்” என்றவன் பின் வாசலை அடைத்து தாழிட்டு அவள் கைத்தாங்கலாய் பிடித்துக்கொண்டு உள்ளே சென்றான்.
“அந்த ஊஞ்சல்ல உட்காரலாமா கொஞ்ச நேரம்” என்று அவன் மனைவி கேட்க அதை மறுக்காமல் அவளை அழைத்து வந்து அதில் அமர வைத்தவன் தானும் அமர்ந்துக் கொண்டான்.
இரவு விளக்கின் ஒளி அந்த அறையை நிறைத்திருந்தது. உதிரன் சினமிகாவின் மடி மீது படுத்துக்கொள்ள அவள் அவன் தலைக் கோதினாள். அதில் அவன் மனதில் இருந்த குழப்பங்கள் எல்லாம் தூரச் செல்லும் உணர்வு அவனுக்கு.
“நீங்க அங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க??”
“தூக்கம் வரலை அதான்…”
“உண்மையை சொல்லுங்க…” என்றாள் அவள் மடிமீது படுத்திருந்தவனின் கண்களை உற்றுநோக்கி.
உதிரன் அதற்கு மேல் எதையும் மறைக்கவில்லை. அவன் கனவை சொல்ல சினமிகா அதை கேட்டுக் கொண்டிருந்தாள்.
“உங்களுக்கு எதுவும் புரிஞ்சுதா??”
உதிரனின் அமைதி அவனுக்கு முழுதாய் எதுவும் புரியவில்லை என்பதை அவளுக்கு உணர்த்தியது.
உதிரன் அவளைப் பார்த்து “உனக்கு புரியுதா??” என்று கேட்க சினமிகா தலையை மெதுவாய் ஆட்ட சட்டென்று எழுந்து அமர்ந்தான்.
“என்னன்னு சொல்லு சிமி?? எனக்கு தலையே சுத்துது என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியணும்…”
“சொல்றேன் அதுக்கு முன்னாடி நான் உங்களுக்கு ஒண்ணை காட்டுறேன்” என்றாள். இருவரும் பேசிக்கொண்டிருக்க சட்டென்று இடையிட்ட குரலில் பேச்சை நிறுத்தினாள் சினமிகா.
“இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்க??” என்ற சீதாவின் குரல் தான் அது.
——————
“நீ எதுக்கு இங்கே வந்தே?? வெளிய போடி” என்று கத்தினார் ராமசாமி.
“என்னங்க என்ன பேசறீங்க??”
“திரும்ப என் கண்ணு முன்னால வராதன்னு சொன்னேன்ல” என்று ஆவேசமாய் கூச்சல் போட்டார்.
“நீங்க ஏன் இப்படி பண்றீங்க எனக்கு புரியலைங்க” என்று சீதா கதறி அழுதவாறே தரையில் அமர்ந்துவிட தன் உணர்வு பெற்றவராய் மெதுவாய் திரும்பி தன் மனைவியை பார்த்தார் அவர்.
கண் மூடி சில நொடி தன்னை நிதானித்தவர் அழுதுக் கொண்டிருந்த மனைவியின் அருகில் சென்றார். “சீதா எழுந்திரு” என்ற குரலில் அழுகையை நிறுத்தி கணவரை ஏறிட்டார் அவர்.
“எழுந்திரு” என்று அவர் கைக்கொடுக்க சீதா எழுந்து நின்றார்.
“என்னாச்சுங்க உங்களுக்கு உடம்புக்கு எதுவும் செய்யுதா??” என்றார் சீதா.
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார் அவர்.
“சொல்லுங்க…”
“இங்க வேணாம் கீழ போய்டலாம்” என்றவர் “நீ போ நான் ஒரு பத்து நிமிஷத்துல வர்றேன்… நான் வரலைன்னா கீழ இருந்து குரல் கொடு சரியா” என்றார் மனைவியிடம்.
சீதா தலையாட்டி கீழே இறங்கி சென்றுவிட்டார். ராமசாமி அவர் மேஜை இழுப்பறையில் இருந்த கத்தை காதிதங்களை எடுத்தவர் அதை ஒரு பைலில் போட்டார். அலமாரியின் அருகே இருந்த ஜாடியை நகர்த்தி அலமாரியை லேசாய் முன் தள்ள அதன் பின்னே இருந்த அறைக்கதவு கண்ணில் விழுந்தது.
அந்த அறையின் கதவை இழுத்து பூட்டியவர் அனைத்தையும் மீண்டும் முன்போல நகர்த்திவிட்டு ஜாடியில் எதையோ போட்டார்.
கையில் இருந்த பைலுடன் அவர் வெளியே வரவும் சீதா அழைக்கவும் சரியாக இருந்தது.
மேலே சுற்றிமுற்றி ஒரு முறை பார்வையை ஓட்டியவர் பின் கீழே இறங்கி வந்தார். “சீதா ஒரு காபி கொடேன், நான் நம்ம ரூம்ல இருக்கேன் நீ அங்க வந்திடு” என்றவர் அவர்கள் அறைக்குள் நுழைந்துவிட்டார்.
தற்போது உதிரன் சினமிகா பயன்படுத்திக் கொண்டிருந்த அவர்களின் பாரம்பரிய கட்டில் அப்போது அந்த அறையில் தானிருந்தது.
வேகமாய் அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டவர் கட்டிலில் மறைவாய் இருந்த அந்த குமிழை இழுக்க ஒரு சிறிய இழுப்பறை இருந்தது அங்கு. அதில் சில காகிதங்களை வைத்து மூடினார்.
அதற்குள் அறைக்கதவு தட்டப்பட “இதோ வர்றேன் சீதா” என்றவர் அனைத்தும் வைத்து முடித்து கதவை திறந்தார்.
“காபி கேட்டுட்டு இங்க வந்து கதவை மூடிட்டு என்ன பண்றீங்க??” என்றவாறே உள்ளே நுழைந்தார் சீதா.
“ஒண்ணுமில்லை நீ காபியை கொடு” என்றவர் அதை வாங்கி பருகினார்.
காலி கோப்பையை மனைவியிடம் நீட்டியவர் “சீதா நான் ஒண்ணு சொல்வேன் என்ன ஏதுன்னு கேட்காம சரின்னு சொல்லணும்” என்றார்.
“என்னன்னு சொல்லுங்க”
“என் தம்பிகளோ இல்லை என் அக்கா தங்கையோ இந்த வீடு வேணும்ன்னு கேட்டா எக்காரணத்தை கொண்டும் கொடுக்கக் கூடாது சரியா…”
“என்ன பேசறீங்க நீங்க?? நீங்க இருக்கும் போது நான் ஏன் இதை எல்லாம் சொல்லணும். நீங்க பேசறேதே எனக்கு ஏதோ பயமா இருக்குங்க. என்னன்னு சொல்லுங்க” என்றார் கலங்கிய விழிகளுடன்.
“சீதா நான் உன்கூட தான் இருப்பேன். இருந்தாலும் உன்கிட்ட சொல்றேன் சரியா நீ செய்வியா??”
“அதெப்படி நாம தரமுடியாதுன்னு சொல்ல முடியுங்க… அவங்களுக்கும் இந்த வீட்டு மேல உரிமை இருக்கு தானே…”
“எங்கம்மா எல்லாருக்கும் சரியா பங்கு பிரிச்சு கொடுத்திட்டாங்க. இந்த வீடு இப்போ என்னோட பேருல தான் இருக்கு. அது உனக்கும் தெரியும் தானே…”
“தெரியும்… ஆனாலும்”
“அவங்களோட பங்கு எல்லாம் கொடுத்தாச்சு. நான் சொல்றது உனக்கு புரியுதுல. இது தலைமுறை தலைமுறையா மூத்த வாரிசுக்கு தான் வரும். என் காலத்துக்கு பிறகு இந்த வீடு உதிரனுக்கு தான் போகணும்”
“பார்க்கப்போனா அடுத்த தலைமுறையோட ஆண் வாரிசு நம்ம உதிரன் மட்டும் தான்…” என்றார் நீண்ட விளக்கமாய்.
சீதாவுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் தலையை ஆட்டி வைத்தார் கணவரிடம்.
“சரி நீ போய் வேலையை பாரு…” என்று மனைவியை அனுப்பி வைத்தவர் இரண்டு மூன்று நாட்களாக யோசனையிலேயே கழித்திருக்க ஒரு நாள் அளவுக்கதிகமான அழுத்தத்தில் இருந்தவருக்கு நெஞ்சுவலி வந்துவிட சீதா தவித்து போனார்.
உடனே மருத்துவமனை அழைத்துச் சென்றிருக்க வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர் கூறிவிட அடுத்தடுத்த காரியங்கள் நடந்தேறியது.
————
பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியில் புலம்பெயர்ந்த குறுநில மன்னர் பரம்பரையின் வழியில் வந்தவர் தான் தான் சின்னசாமி. அவரின் மனைவி பெயர் முத்துலட்சுமி அம்மாள். கணவன் மனைவி இருவருமே பாராக்கிரமசாலிகள். எதிலும் ஒழுங்கு, நேர்மை, தைரியம், விடாமுயற்சி என்றிருப்பவர்கள். 
அவர்களின் மக்கள் முத்துசாமி, துரைசாமி, குமாரசாமி, ராமசாமி, மகாலட்சுமி மற்றும் வீரலட்சுமி அறுவர் ஆவர். அறுவரும் ஒவ்வொருவிதமான குணாதிசயங்கள் கொண்டவர்கள்.
அவர்களுக்கு தொழில் விவசாயம் செய்வதாகத் தானிருந்தது. ஏராளமான நிலபுலன்கள் அவர்களின் வசமிருந்தது.
சின்னசாமியின் மூத்த மகன் அத்தொழிலின் அடுத்த கட்டமாக அந்த ஊரில் மில் ஒன்றை ஆரம்பித்தார் அந்த காலத்திலேயே வெளிநாட்டிற்கு சென்று படித்துவிட்டு வந்தவர் அவர்.
மற்ற பிள்ளைகளுக்கு படிப்பு அவ்வளவாக ஏறவில்லை. உள்ளுரிலேயே அவர்கள் ஐந்து ஆறாம் வகுப்பு என்று தந்தியடித்து படிப்பை மூட்டை கட்டியிருந்தனர்.
பெண்கள் இருவரும் இரண்டாம் வகுப்பை தாண்டவில்லை. பதினெட்டு வயது வரவுமே அவர்களுக்கு திருமணம் முடித்துவிட்டனர் சின்னசாமி முத்துலட்சுமி தம்பதியினர்.
பெண்களுக்கு மட்டுமல்லாது தங்களின் ஆண் மக்களுக்கும் அடுத்தடுத்து திருமணம் முடித்திருந்தனர் ராமசாமியை தவிர. பேரன் பேத்தி என்று வீடே நிறைந்திருந்தது. மகிழ்ச்சியாய் சென்றுக் கொண்டிருந்த அவர்களின் வாழ்வை சில தினங்களில் புரட்டிப்போடவென்று நடந்த நிகழ்வுகள் அக்குடும்பத்தின் ஆணிவேரையே அசைத்திருந்தது…

Advertisement