Advertisement

26
“சிமி நீ எழுந்துக்க வேணாம், பேசாம படு. கையில ட்ரிப்ஸ் போயிட்டு இருக்கு” என்று அவளுக்கு சுட்டிக்காட்டினான் உதிரன்.
சினமிகாவின் முகம் முழுதும் வியர்த்திருந்தது. “என்னாச்சு என்ன பண்ணுது உனக்கு??” என்று கேட்க அவள் ஒன்றும் இல்லையென்பதாய் தலையாட்டினாள்.
சினமிகாவிற்கு கண்களை மூடவே பயமாக இருந்தது. அப்பெண்மணியின் முகம் கண்களை திறந்த போதும் கூட எதிரில் நிற்பது போன்ற உணர்வு அவளுக்கு இன்னமும் தோன்றியது.
உதிரன் சினமிகாவின் முகத்தையும் அதில் தெரிந்த பாவத்தையும் தான் விடாது பார்த்திருந்தான். அவளுக்கு உறங்குவதற்கு ஊசி போட்டிருந்தும் அதையும் மீறி அவள் கனவு கண்டு எழுந்திருக்கிறாள் என்பதை அவன் புரிந்துக் கொண்டான்.
அதுநாள் வரை அவளின் கனவும் தங்களின் வீட்டில் நடக்கும் சில நிகழ்வுகளையும் அவன் அத்தனை தீவிரமாய் எடுத்துக் கொண்டிருக்கவில்லை.
ஏனோ அக்கணம் முதல் அவனால் அப்படியிருக்க முடியும் என்று தோன்றவில்லை. அதிக கவனமாக இருந்தான் காதுகளை கூர்மையாக்கினான், பார்வையை விரிவுப்படுத்தினான்.
வெளியில் அவன் சித்தப்பா காத்திருப்பது புரிய “சிமி சித்தப்பா வெளிய இருக்கார். அவரை வீட்டுக்கு போகச்சொல்லிட்டு வர்றேன்” என்று எழுந்தான்.
அவள் தலையசைக்கவும் யோசனையோடே அவள் முகம் பார்த்து வெளியே சென்றான். “சித்தப்பா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சித்தப்பா நீங்க கூடவே வந்தது. ரொம்ப பெரிய ஹெல்ப் பண்ணியிருக்கீங்க… உங்களுக்கு எப்படி நன்றி சொல்லப் போறேன்னு எனக்கு தெரியலை…” என்றவன் இருகரம் கூப்பினான்.
“உதிரா என்னை பெரிய மனுஷன் ஆக்காதே. நானும் சராசரி மனுஷன் தான். நான் செய்தது பெரிய உதவி எல்லாம் இல்லை நீ செய்யப் போறது தான் எனக்கு பெரிய உதவிப்பா” என்றார் அவர்.
‘என்னது நான் உதவி செய்யப் போறேனா. என்ன சொல்றார் இவர்’ என்று அவரை கேள்வியாய் பார்த்தான்.
“சரி உதிரா நேரமாச்சு நீ பார்த்துக்கோ நான் கிளம்பறேன். உனக்கு எதுவும் உதவி??”
“சித்தப்பா இது செஞ்சதே போதும், வேற எந்த உதவியும் வேணாம்…” என்றான் அவன்.
“இல்லை பணம்??”
“நாங்க நல்ல நிலைமையில தான் இருக்கோம். கடவுள் செயலா இதுவரைக்கும் யார்கிட்டயும் எதுக்கும் கையேந்துற நிலைமை வந்ததில்லை சித்தப்பா. நீங்க கேட்டதே சந்தோசம்” என்றுவிட்டான் அவன்.
“சரிப்பா நான் கிளம்பறேன்”
“சித்தப்பா ஒரு நிமிஷம்”
“சொல்லுப்பா”
“நான் ஏதோ உதவி செய்யணும்ன்னு கேட்டீங்களே?? என்ன அது??”
அவர் ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டார். தான் தான் ஏதோ அவனிடம் உளறியிருக்கிறோம் என்று உணர்ந்தவர் “இல்லைப்பா இப்போ எதுவும் இல்லை. அதைப்பத்தி இன்னொரு நாள் பேசலாம். இப்போ அதுக்கு நேரமுமில்லை. நீ அந்த பொண்ணை கவனி” என்றார்.
“எதுவும் பிரச்சனையா சித்தப்பா??”

“இல்லைப்பா அதெல்லாம் இல்லை…”
அவனுக்கு ஏதோ புரிந்தும் புரியாத ஒரு நிலை. அவர் திரும்பி செல்லப் போக “வினயாவா??” என்றிருந்தான்.
சட்டென்று திரும்பி அவனைப் பார்த்தவர் ஒன்றும் சொல்லாமல் விறுவிறுவென்று வெளியேறி சென்றுவிட்டார்.
சினமிகாவிற்கு ட்ரிப்ஸ் முடித்து அன்று இரவே வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். அவள் விழும் போது எங்கோ காலில் இடித்திருக்க அதனால் தான் ரத்தம் வேறு வந்திருந்தது. அதற்கு சிறிதாய் கட்டு ஒன்றும் போடப்பட்டிருந்தது.
அவ்வளவு கனமான குடுவை என்பதால் உடலில் எல்லாம் ஒரு வலி இருந்தது சினமிகாவிற்கு. கோவிலுக்கு சென்றிருந்த சீதா இடையில் அவனுக்கு போன் செய்திருக்க அவன் அவரிடம் விஷயத்தை சொல்லியிருந்தான்.
அவரும் நேரே மருத்துவமனைக்கு வருவதாக கூறியிருந்தார். உதிரன் தான் ட்ரிப்ஸ் முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள் என்று சொல்லி வரவேண்டாம் என்றிருந்தான்.
டாக்சி ஒன்றை பிடித்து வந்தவன் அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றான். வாசலிலேயே நின்றிருந்தார் சீதா கவலையாக.
அவள் இறங்கியதுமே ஓடி அருகே வந்திருந்தார். “என்னாச்சு சினா?? ஏன் நம்ம குடும்பத்துக்கு இப்படி மாத்தி மாத்தி ஒவ்வொன்னா நடக்குது…” என்று அவர் கண்கள் கலங்க சினமிகா அவரிடம் ஒன்றும் பேசவில்லை.
அவரை பார்த்துக் கொண்டேயிருந்தாள். “நான் பாரு பேசிட்டே இருக்கேன். உள்ள வாங்க…” என்று வழிவிட்டார் அவர்.
உதிரன் சினமிகாவை கைத்தாங்கலாய் அழைத்துக்கொண்டு உள்ளே சென்று அவர்கள் அறையில் படுக்க வைத்தான். பின்னோடே சீதாவும் வந்துவிட்டார்.
“உதிரா நைட்க்கு என்ன சாப்பிட கொடுக்கலாம் எதுவும் சொன்னாங்களா??”
“லைட்டா கொடுக்க சொன்னாங்கம்மா வேற எதுவும் சொல்லலை”
“சரி நான் போய் ரெடி பண்றேன்” என்று அவர் கிளம்ப உதிரன் சினமிகாவின் அருகில் அமர்ந்தான். 
“சிமி”
அவள் கண் திறந்து தன் கணவனை பார்த்தாள். “இப்போ பரவாயில்லையா உனக்கு”
“ஹ்ம்ம்”
“நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா??”
அவளிடம் பதிலில்லை அமைதியாக அவனை பார்த்திருந்தாள். “இந்த பார்வைக்கு என்ன அர்த்தம் பேசலாம்ன்னா?? இல்லை??” என்று நிறுத்தினான்.
“உதிரா” என்று அவன் அன்னையின் குரல் வெளியில் கேட்க “இதோ வர்றேன்ம்மா” என்று அங்கிருந்தே குரல் கொடுத்தான்.
“போயிட்டு வர்றேன் நீ ரெஸ்ட் எடு” என்றுவிட்டு எழுந்துச் சென்றான்.
சீதா சமையலறையில் இருந்தார். “என்னாச்சு உதிரா?? எப்படி இப்படியாச்சு?? போன்ல நீ எதுவும் சொல்லலை. சினா முன்னாடி கேட்க வேணாம்ன்னு தான் இப்போ கேட்கறேன்” என்றார் அவர்.
உதிரன் நடந்ததைச் சொன்னான் சுருங்க. “அந்த ஜாடி தள்ளி வைச்சது என்னோட தப்பு தான்மா அது எப்படியோ அவ கால்ல விழுந்திடுச்சு” என்று இறுதியாக நடந்ததை மட்டும் மாற்றி சொல்லியிருந்தான்.
நடந்ததை நடந்தது போலவே சொன்னால் அன்னை கலவரப்பட்டுவிடுவாரோ என்ற எண்ணமும் சேர்ந்துகொண்டது அவனுக்கு.
“சரிப்பா என்னவோ நமக்கு நேரமே சரியில்லை. அந்த பைரவர் தான் நம்ம குடும்பத்தை காப்பாத்தணும்” என்று கையெடுத்து கும்பிட்டார். “நீ போ உதிரா நான் இதை எடுத்திட்டு வர்றேன்” என்று சொல்ல அவன் வெளியேறினான்.
இரவு உறங்குவதற்கு முன் அவளை பாத்ரூமிற்கு அவனே அழைத்துச் சென்றான். காலில் ஒரு பிளாஸ்டிக் கவரை கட்டிவிட்டு உள்ளே அனுப்பினான். “தண்ணி படக்கூடாது ஒரு ரெண்டு மூணு நாளைக்குன்னு சொன்னாங்க. பார்த்துக்கோ சிமி” என்றான் அவளிடமும். அவள் வரவும் கூட்டி வந்து படுக்கையில் விட்டான். 
அறையின் விளக்கணைத்து இரவு விளக்கை போட்டுவிட்டு அவளருகே வந்து படுக்கவும் சினமிகா அவன் புறம் திரும்பி படுத்தாள். அவன் மீது அணைவாய் அவள் கைப்போட்டுக்கொள்ள தன்னை அவள் தேடுகிறாள் என்று புரிந்து அவனும் அவளை அணைத்துக் கொண்டு அவள் நெற்றியில் மெதுவாய் முத்தமிட்டான்.
அவள் இன்னமும் உறங்கவில்லை என்பது அவள் அவனை விழித்து பார்ப்பதிலேயே புரிந்தது. “சிமி நீ என்கிட்ட எதையும் மறைக்கறியா??” என்று அவன் சொன்னதும் அவள் முகம் சுருங்கியது.
“நான் தப்பா சொல்ல வரலை. எனக்கு ரொம்ப பயமாயிருக்கு இதுவரைக்கும் இந்த வீடு எனக்கு அந்நியமா தெரிஞ்சதில்லை. ஆனா இன்னைக்கு தோணுது. என்னால தான் உனக்கு பிரச்சனையோன்னு நினைக்கிறேன்”
“என்னை கல்யாணம் பண்ணாம இருந்தா உனக்கு இப்படியெல்லாம்” என்று அவன் சொல்லி முடிக்குமுன்னே அவன் வாய் மீது கை வைத்தாள் சொல்லாதே என்பது போல்.
அதை மெதுவாய் விலக்கியவன் “நான் இவ்வளவு நேரம் பேசறேன் நீ என்கிட்ட இதுவரைக்கும் ஒரு வார்த்தை சரியா பேசலை. என் மேல எதுவும் கோவமா உனக்கு?? எனக்கு பயமாயிருக்கு சிமி, எனக்குன்னு கிடைச்ச உறவு நீ. எனக்கு நீ ரொம்ப ரொம்ப முக்கியம், நீ இல்லாம நான் நானா இருக்க முடியாது”
“இன்னைக்கு காலையில இருந்து என் உயிரே என்கிட்ட இல்லை. இது பெரிய காயமா இல்லாம இருக்கலாம், ஆனா… எனக்கு… எனக்கு சொல்லத் தெரியலை சிமி என்னவோ ஒண்ணு என்னைப் போட்டு அரிக்குது. எப்பவும் நீ சொல்வியே என்னவோ நடக்கப் போகுதுன்னு. இப்போ எனக்கு அது போலத்தான் இருக்கு”
“எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் மேல என்னாச்சு. நான் போகும் போது ரூம் திறந்து தானே இருந்துச்சு அப்புறம் எப்படி முடிச்சு. அதைவிட என்னை குழப்பற இன்னொரு விஷயம் அடிப்பட்டு எழ முடியாம நீ இருக்க மூடியிருந்த கதவை திறந்தது யார்??”
“சித்தப்பாங்க வேணா நான் கற்பனை பண்ணிக்கறேன்னு நினைச்சிருக்கலாம். எனக்கு தெரியும் கதவு திறக்கற சத்தம் எனக்கு நல்லாவே கேட்டுச்சு. ஆனா நீ அதை திறக்கலை. சொல்லு அங்க என்ன நடந்துச்சு??”
சினமிகா என்னவென்று சொல்ல ஆரம்பிக்கும் தருவாயில் “உதிரா” என்று சீதா பதட்டத்துடன் வேகமாக அவர்களின் அறைக்கதவை பலமாக தட்ட அறை விளக்கை உமிழவிட்டு உதிரன் எழுந்துச் சென்றான்…
——————
“உதிரா”
“அம்மா உங்களுக்கு இப்போ தான் என்னை வந்து பார்க்கணும்ன்னு தோணிச்சா. ஹாஸ்டல்ல சேர்த்தா அவ்வளவு தானா. நீங்க என்னை பார்க்க வந்து மாசம் ஒண்ணாச்சு”
“எனக்கு எக்ஸாம்ஸ் போயிட்டு இருக்குன்னு உங்களுக்கு தெரியம் தானே. இல்லைன்னா நானே கிளம்பி வந்திருப்பேன்” என்றான் அரும்பு மீசை உதிரன்.
“உங்கப்பாவை நான் கேட்டுட்டே தான் இருந்தேன் உதிரா. அவர் இப்போ தான் என்னை கூட்டிட்டு வந்தார். நீ நல்லாயிருக்கல்ல, பரீட்சை எல்லாம் எப்படி எழுதி இருக்கே??”
“நல்லாயிருக்கேன், எழுதின வரை நல்லாவே எழுதியிருக்கேன்ம்மா… அப்பா எங்கே??”
“நீ ஏதோ புக் வேணும்ன்னு சொன்னியாமே. அதை வாங்கிட்டு வந்து தான் என் புள்ளைய பார்ப்பேன்ன்னு சொல்லிட்டு என்னை வாசல்லவே இறக்கிவிட்டு போயிருக்கார்”
அம்மாவும் பிள்ளையும் பேசிக்கொண்டிருக்க சிறிது நேரத்திலேயே ராமசாமி வந்துவிட்டார். “உதிரா நீ கேட்ட புக்” என்று மகனிடத்தில் அவர் கொடுக்க அவனோ அவர் கையில் இருந்த மற்ற புத்தகங்களின் மீது பார்வையை ஓட்டினான்.
“அப்பா என்னப்பா புக் அதெல்லாம். என்னமோ புதையல், ரகசியம்ன்னு என்னென்னவோ போட்டிருக்கு. இதேல்லாமா நீங்க படிக்கறீங்க”
“உதிரா இது எனக்கில்லை, என்னோட பிரண்ட் ஒருத்தர் கேட்டார் அவருக்கு தான் வாங்கிட்டு போறேன்”
உதிரனோ சிரித்தான் “இந்த காலத்துல இதெல்லாமா இன்னும் நம்புறாங்க…” என்றான்.
லேசாய் சிரித்தவர் மகனிடம் கொஞ்ச நேரம் அளவளாவி விட்டு அன்றே மனைவியுடன் அவர்கள் ஊருக்கு திரும்பினார். 
ராமசாமி அடுத்த இரண்டு மாதங்களிலேயே அவர் நினைத்ததை போல மில்லை தொடங்கியிருந்தார். சாதாரணமாய் அல்லாது பிரமாண்டமாய் தொடங்கியிருந்தார். அதுவே அவரின் மற்ற உடன்பிறப்புகளின் கண்ணை உறுத்தியது.
“எப்படிடா இவன் இவ்வளவு பெரிசா மில்லு தொடங்கியிருக்கான்” என்று அவரின் இரு தம்பிகளும் தங்களுக்குள் பெரிய விவாதமே நடத்தி முடித்திருந்தனர்.
ராமசாமியின் முகத்திலும் அவ்வளவு பூரிப்பிருந்தது. “என்னங்க மில்லு சின்னதா தானே ஆரம்பிக்கறேன்னு சொன்னீங்க. இவ்வளவு பெரிசா இருக்கு நானே எதிர்ப்பார்க்கலை. என்னோட நகைங்க எல்லாம் பத்தியிருக்காதேங்க” என்றார் சீதா தன் கணவரிடம்.
“அதெல்லாம் உனக்கெதுக்கு சீதா. நான் நினைச்ச மாதிரியே மில்லு தொடங்கியாச்சு”
“இல்லைங்க அது வந்து…” என்று ஆரம்பித்த மனைவியை “பேச்சை விடு சீதா” என்று சொல்லி தடுத்துவிட்டார்.
———
“சீதா”
“என்னங்க அத்தை”
“எனக்கு மனசே என்னவோ போல இருக்கு. கொஞ்ச நாளா மனசை ஒரு விஷயம் போட்டு அழுத்திட்டு இருக்கு” என்றார்.
“சொல்லுங்க அத்தை”
“நம்ம குல தெய்வம் கோவிலுக்கு போய் நாளாச்சு. தவிர பைரவர் கோவிலுக்கும் போய் விளக்கு போடணும்” என்றார்.
“குல தெய்வம் கோவிலுக்கு ஓகே தானே. ஆனா பைரவர் கோவிலுக்கு ஏன் அத்தை. எதுவும் வேண்டுதல் மிச்சம் வைச்சு இருக்கீங்களா செய்யணுமா??”
“உனக்கு தெரியாதுல்ல நமக்கு குல தெய்வம் எப்படியோ அப்படித்தான் பைரவரும். அவரை கும்பிடாதது தான் தப்போன்னு எனக்கு தோணுது. அதான் எம்புள்ளைங்க எல்லாம் ஆளுக்கொரு திசைக்கு நிக்கறாங்களோன்னு எனக்கு தோணுது”
“புரியலை அத்தை”
“அது எப்பவோ நடந்தது அவங்க காலத்துல நடந்த ஏதோ சம்பவத்துல அவங்க பைரவருக்கு நன்றி செலுத்துற விதமா அவரையும் இனி நம்ம குல சாமியோட சாமியா கும்பிடறதா சத்தியம் பண்ணிக்கிட்டாங்களாம்”
“என் மாமியார் கூட கும்பிட்டு தான் இருந்தாங்க. நான் மட்டும் தான் கும்பிடலை, நீயும் அப்படி இருக்காத. ராமாவை கூட்டிட்டு நீயும் அவனுமா ஒரு நாளைக்கு கோவிலுக்கு போயிட்டு வாங்க” என்று கோவில் இருக்குமிடத்தை சொன்னார்.
சீதாவும் தன் மாமியார் சொன்னதை சொல்லி கணவரை அழைக்க அவர் வருவதாகவே இல்லை. மில்லில் வேலை என்று சொல்லி தட்டிக் கழித்தார் அவர்.
இந்நிலையில் தான் ஜானகியம்மா உடல் நிலை மோசமடைந்தது. ஒரு நாள் இரவில் உறக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து போனது. சீதாவிற்கு தன் மாமியார் சொன்னதை செய்ய முடியவில்லையே என்ற எண்ணம் மனதை பெரிதும் அரித்தெடுத்தது.
வீட்டிலும் சில பல குழப்பங்கள் நடந்தது அப்போது. கோவிலுக்கு போகாததால் தான் அதெல்லாம் நடக்கிறதோ என்று நினைத்தார் சீதா. அவர் நினைப்பு சரியே என்பது போல் அவர்கள் மில் பற்றி எரிவது போன்று அவர் கனவில் ஓர் நிகழ்வு வர பயந்து போனார் சீதா.
அந்த பைரவரே வந்து அதை உணர்த்தியிருக்க அதற்குமேலும் அவர் தாமதிக்கவில்லை. கணவரிடம் அழுது சண்டையிட்டு கோவிலுக்கு சென்று விளக்கு போட்டுவிட்டு வந்தார்.
கனவில் வந்த அந்த நிகழ்வு மில்லில் நடந்தேறியது. ராமசாமி தன் மனைவியின் கனவை பெரிதாய் எண்ணியிருக்கவில்லை. அவரின் தொல்லை தாங்காது தான் கோவிலுக்கு சென்று வந்தார். 
சீதாவோ தினமும் தன் கணவரிடம் கவனமாய் இருக்குமாறு சொல்லிக் கொண்டே தானிருந்தார். ராமசாமியிடம் அதை பொருட்டாய் கூட மதிக்காது போக அன்று தற்செயலாக மில்லிற்கு கணவனுக்கு உணவெடுத்து சென்றிருந்த சீதாவின் கண்ணில் ஓரிடத்தில் நெருப்பு பற்றியிருந்ததை பார்த்து கணவரிடம் சொல்ல பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது அன்று.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. ராமசாமி இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு சீதாவிற்கு மீண்டுமொரு கனவு, ராமசாமிக்கு ஏதோ ஆகிவிடுவது போல. அதன்பின் இரவெல்லாம் அவர் உறங்கவே இல்லை.
மறுநாள் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று அவர் எண்ணியிருக்க ராமசாமி மனைவியை அழைத்துக்கொண்டு மகனை பார்த்துவர கோவைக்கு வந்திருந்தார்.
மனைவியை மகனிடத்தில் விட்டு இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வருமாறு சொல்லி அவர் மட்டும் தனியே ஊருக்கு சென்றுவிட்டார். சீதாவும் மகனுடன் இருந்துவிட்டு இரண்டே நாளில் ராஜபாளையாதிற்கு வந்து சேர்ந்தார்.
அன்று ராமசாமியின் முகம் பெரும் குழப்பத்திலிருந்தது. ஏதோ யோசனையாகவே இருந்தார், மில்லிற்கு கூட செல்லவில்லை, தன்னுடையை பெரும்பாலான நேரத்தை அவரின் அறையிலேயே கழித்தார்.
“என்னங்க சாப்பிட கூட வராம இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க??”
“நீயா?? நீ எதுக்கு இங்க வந்தே?? ஏன் வந்தே?? உன்னை இங்க வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல… வெளிய போடி…” என்று கத்தினார் அவர். அதில் அதிர்ந்து போய் நின்றுவிட்டார் சீதா…

Advertisement