Advertisement

25
மேலே கேட்டே மனைவியின் குரலில் பதட்டம் கூட “சிமி” என்றழைத்தவாறே வேகமாய் படியேறினான் உதிரன். சக்திக்கு என்னவோ ஏதோவென்று இருந்த போதும் ஒன்றும் அதிகம் காட்டிக்கொள்ளாமல் அவரும் பின்னோடே சென்றார்.
சிவக்குமாரின் முகம் தான் பதட்டத்துடன் பயமும் கூடி முகம் வெளிறிப்போயிருந்தது. ஒருவித நடுக்கத்துடனே அவர் மேலே பார்த்துக்கொண்டே ஏறினார்.
உதிரன் முதல் ஆளாய் மேலேறி வந்திருந்தவன் பூட்டியிருந்த அறையை கண்டு குழம்பினான். அவன் கீழே இறங்கும் போது அறை பூட்டியிருக்கவில்லையே இப்போது என்ன இப்படி இருக்கிறதே என்ற குழப்பம் தான் அவனுக்கு.
அறைக்கதவை வெறுமே சாத்தியிருக்கலாம் என்று எண்ணியிருக்க அது உள்புறம் தாழிடப்பட்டிருந்தது அப்போது தான் புரிந்தது அவனுக்கு. அது இன்னமும் அவன் பதட்டத்தை கூட்டியது.
“சிமி என்னாச்சு கதவை திற” என்று இவன் ஓங்கி தட்ட உள்ளிருந்து அவளின் முனகல் குரல் மட்டுமே கேட்டது.
“சிமி என்னன்னு சொல்லு??” என்றான்.
“என்னங்க” என்ற குரல் மட்டுமே மெலிதாய் கேட்டது அவனுக்கு.
அதற்குள் அவனின் இரு சித்தப்பாக்களும் மேலேறி வந்திருந்தனர். “என்னாச்சு உதிரா??”
“தெரியலை சித்தப்பா நான் கீழே வரும் போது ரூம் திறந்து தான் இருந்துச்சு இப்போ பூட்டியிருக்கு. உள்ள அவளுக்கு என்னாச்சுன்னு தெரியலை” என்று அவன் கவலையாய் சொன்னதை சிவக்குமார் இருண்ட முகத்தோடு கண்டிருந்தார்.
“இப்போ என்ன செய்ய?? கதவை தட்டினியா??” என்றார் அவனின் பெரிய சித்தப்பா சக்தி.
“தட்டிட்டு தான் இருக்கேன் திறக்கலை” என்றவன் மீண்டும் மீண்டும் கதவை ஓங்கி தட்டினான்.
அவன் ஓங்கியதிலேயே கதவு அதிர்ந்தது, விட்டால் கதவு திறந்து கொள்ளும் நிலை தானிருந்தது.
“உதிரா” என்றார் இப்போது மெதுவாய்.
“என்ன சித்தப்பா??” என்றவனின் பேச்சு மட்டுமே அவரிடம் இருந்தாலும் பார்வை முழுதும் மூடியிருந்த கதவின் மேலேயும் அதன் பின்னே இருந்த அவன் மனைவியின் மீதும் மட்டுமே இருந்தது.
“கதவை உடைச்சிட்டு போய் பார்க்கலாமா??”
அவனுக்குமே அதுவே சரியாக இருக்கும் என்றே தோன்றியது. சினமிகாவின் அலறலை கேட்டால் அது அவள் கீழே விழுந்தது போலத்தான் இருந்தது. வலியுடன் அவள் வந்து கதவை திறக்க முடியாதாயிருக்கும் அதனால் தான் வரவில்லையோ என்ற எண்ணம் வேறு அவனுக்கு.
எதற்கும் கடைசியாய் ஒரு முறை அவளை கேட்போம் என்று தோன்ற “சிமி என்னாச்சுன்னு சொல்லு சிமி” என்று வெளியில் இருந்து அவன் கத்த மெதுவாய் கதவின் தாள் விலகும் சத்தம் கேட்க உதிரன் தட்டுவதை நிறுத்தினான்.
தாள் விலக்கும் சத்தம் கேட்டும் இன்னும் கதவு திறக்கப்படாததை உணர்ந்தவன் அவனே கதவை மெதுவாய் தள்ளி திறக்க அறை முழுதும் இருளில் இருந்தது.
சிவக்குமாரோ அறையை சுற்றுமுற்றும் ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டே வந்தார். சக்தி தான் சுதாரித்தவர் கையில் இருந்த போனின் உதவியுடன் டார்ச் லைட்டை ஆன் செய்ய அலமாரிக்கு அருகில் விழுந்து கிடந்தாள் சினமிகா.
அவள் எழ முடியாதவாறு அவள் மேலே அந்த ஜாடியும் சாய்ந்திருக்க காலில் இருந்து ரத்தம் வந்துக் கொண்டிருந்தது.
சக்தி அறையின் விளக்கைத் தேடி அதை உமிழவிட உதிரன் அதற்குள் சினமிகாவின் மீதிருந்த ஜாடியை எடுத்து ஓரமாய் வைத்தான்.
“என்னாச்சு சிமி?? எப்படி அடிப்பட்டிச்சு??” என்றான்.
அவளிடம் பதிலில்லை கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே வந்துக் கொண்டிருந்தது.
“என்னம்மா ரொம்ப வலிக்குதா??” என்றவன் அவளை இருகைகளால் தூக்கிக் கொண்டான். 
அவள் வலியை மீறி அறையைப் பார்த்து “அத்தை… அத்தை…” என்று முனகினாள். “அம்மாவா…” என்று அவள் முகம் பார்க்க அவள் தலை இருபுறமும் ஆடியது.
அவனுக்கு அவள் வலி கொண்ட முகமே முதலில் கண்ணில்பட அவள் பேச்சை புறம் தள்ளி. படிகளில் வேகமாய் இறங்கினான்.
சோபாவில் அவளை இறக்கிவிட்டு பர்ஸ்ட் எய்ட் பாக்சை எடுத்து வந்து அவள் காலில் இருந்த காயத்தை துடைத்துவிட்டு லேசாய் ஒரு கட்டிட்டான்.
“உதிரா பண்ணிட்டு இருக்கே நீ, டாக்டர்கிட்ட கூட்டிட்டு போற வழியை பாரு… நான் இன்னொரு நாள் வந்து பார்க்கறேன்” என்று கிளம்பத் தாயாரானார் அவனின் பெரிய சித்தப்பா.
அவரின் பேச்சில் முகத்தில் அப்பட்டமான அதிருப்தி தோன்றிய போதும் ‘அவர்கள் எப்போதும் இப்படித்தானே’ என்ற எண்ணம் வந்துவிட அவரிடம் தலையசைக்க கூட மனதில்லாமல் மனைவியை பார்த்திருந்தான்.
சிவக்குமார் தான் “அண்ணே நீங்க போங்க நான் அப்புறம் வர்றேன்” என்றார் சக்தியிடம்.
“நீ இங்க என்ன பண்ணப்போறே அவன் ஆஸ்பிட்டல் கிளம்பப் போறான்” என்று தம்பியை குறிப்பாய் பார்த்தார்.
“தெரியும் நான் பார்த்துக்கறேன் நீங்க கிளம்புங்க” என்றவர் “உதிரா அந்த பொண்ணை தூக்கு கார்ல போய்டலாம்” என்று சொல்லிவிட அந்த நொடி அவனுக்கு என்னவோ போலானது.
நிஜமாகவே அவளை தனியே விட்டு வெளியே சென்று எப்படி ஆட்டோ பிடித்து வருவது என்ற யோசனை தான் அவனுக்கு அதுவரை.
திருமணதிற்கு முன் அவனுக்கென்று ஒரு வேலை வேண்டும் சம்பாத்தியம் வேண்டும் குடும்பத்தை நகர்த்த என்று மட்டும் தான் எண்ணியிருந்தான். 
அவனுக்கு பெண் பார்த்த போதும் பெண் வீட்டினரும் வேலையை தான் பார்த்தார்கள் என்பதால் அவனும் வேலை ஒன்றையே குறியாய் கொண்டிருந்தான்.
வீடு பெரிய வீடு சொந்த வீடு என்பதால் மேற்கொண்டு எந்த வசதிகளையும் அவன் என்னிப்பார்த்திருக்கவில்லை அந்த நொடி வரை. வண்டியும் கூட அவன் தேவைக்கு என்று எண்ணித்தான் வாங்கியிருந்தான்.
இந்த நிமிடம் தான் அவனுக்கு தங்கள் வசதியை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுவாய் வேரூன்றியது.
ஒரு மருத்துவமனை செல்லக்கூட அடுத்தவர் உதவி தேவைப்படும் நிலை அவனுக்கு பிடிக்கவில்லை. சொந்தங்கள் அவ்வளவு தான் என்று தெரியும் அவனுக்கு இருந்தாலும் வலித்தது.
அவனின் சித்தப்பா சிவக்குமார் பேசியது சற்று ஆறுதலாக இருந்தது. அவர் உதவியை ஏற்க அவனுக்கு மனம் ஒப்பவில்லை வேறு வழியும் இல்லை ஒன்றும் புரியா நிலை அவனுக்கு.
“என்னடா யோசிக்கறே?? தூக்கிட்டு வா அந்த பொண்ணு எவ்வளவு நேரம் வலி பொறுக்கும், ரத்தம் வேற வருதுடா”
“சிவா உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை… நீ பேசாம வீட்டுக்கு கிளம்பு” என்றார் சக்தி.
“நீங்க கிளம்புறதா இருந்தா கிளம்புங்க நான் பார்த்துக்கறேன் இங்க. நாளைக்கு நமக்கு ஒண்ணுன்னா பிள்ளைன்னு இவன் தான் இருக்கான். இவனும் வேணாம்ன்னு போய் என்ன தேடிக்கப் போறீங்க நீங்க” என்று பட்டென்று தன் மூத்த சகோதரனை பார்த்து கேட்டுவிட்டார் அவர்.
உதிரனே அவரை ஆச்சரியமாக தான் பார்த்தான். “உதிரா கிளம்பு. பாரு அந்த பொண்ணு மயங்கிடுச்சு போல” என்று அவர் சொல்லவும் தான் சினமிகாவை திரும்பி பார்த்தான் உதிரன்.
அதன் பின் எதுவும் யோசிக்கவில்லை சினமிகாவை கையில் தூக்கியவன் அவரின் காரில் அவளை கிடத்தினான். கதவை பூட்டிவிட்டு வர அவர்கள் மூவரும் மருத்துவமனை நோக்கி விரைந்தனர்.
சக்தி ஒரு புருவ சுளிப்புடன் அவர்கள் போவதை வேடிக்கைப் பார்த்துவிட்டு அவரும் கிளம்பினார்.
——————-
சில வருடங்களுக்கு முன்னால்
——————————————
“சீதா… சீதா…”
“என்னத்தை” என்றவாறே வந்து நின்றார் சீதாதேவி.
“பெரியவன் எங்கே??”
“மேலே அவங்க ரூம்ல இருக்காங்க, மில்லு ஆரம்பிக்கணும்ன்னு சொல்லிட்டு இருந்தாங்கல்ல அந்த வேலையா இருக்காங்க”
“அவனை வரச்சொல்லு பேசணும்” என்றார் உதிரன் பாட்டி ஜானகியம்மா.
அவருக்கு உடம்பு முடியாமல் கை கால் இரண்டும் பக்கவாதத்தில் முடங்கிவிட படுக்கையில் தான் அவர் காலம் கழிந்துக் கொண்டிருந்தது.
அவர் பார்த்து கட்டி வைத்த மற்ற இரு மகன்களின் மனைவிகள் தங்களால் அவரை பார்க்க முடியாது என்று கை கழுவிட சீதா மட்டுமே முழுதாய் அவரை கவனித்துக் கொண்டிருக்கிறார்.
மகள்களும் கூட எப்போதாவது மட்டுமே வந்து எட்ட்ப்பார்ப்பர். எங்கே அங்கேயே இருந்தால் தங்களையும் ஊழியம் செய்ய வைத்துவிடுவார்களோ என்ற எண்ணத்தில் அவர்களும் அதிகம் வருவதில்லை.
மற்ற இரு மகன்களின் மனைவிமார்களும் தங்கள் சொத்தை பிரித்துக் கேட்டு அவர்களும் தனித்தனியே சென்றுவிட்டனர். மாதத்தில் ஒரு முறை வந்து எட்டிப்பார்த்து செல்வார்கள் அவ்வளவே.
மற்றபடி ஜானகியம்மாவிற்கு அனைத்தும் முகம் சுளிக்காமல் செய்வது சீதா மட்டுமே. சீதா படியேறி மாடியறைக்கு வந்தவர் அவரின் கணவர் ராமசாமியை பார்த்தார்.
அவர் மேஜையில் குனிந்து ஏதோ தீவிரமாய் பார்த்துக் கொண்டிருந்தார். “என்னங்க” என்ற குரலில் விழியேடுக்காமலே “சொல்லும்மா சீதா” என்றார்.
“அத்தை உங்ககிட்ட ஏதோ பேசணுமாம் கீழே வரச்சொல்லி சொல்லிவிட்டாங்க” என்றார்.
“கொஞ்சம் வேலையா இருக்கேனே, முடிக்கவும் வரட்டுமா” என்றார் குனிந்த தலை நிமிராமல்.
“வயசானவங்க அவங்க நினைச்சா மேலே ஏறி வந்தா பேச முடியும். நீங்க உங்க வேலையை கொஞ்சம் ஒதுக்கி அவங்ககிட்ட பேசக்கூடாதா” என்ற சீதாவின் நியாமான பேச்சில் லேசான புன்னகையை முகத்தில் தேக்கி நிமிர்ந்து மனைவியை பார்த்தார்.
“சரி வர்றேன்” என்றவன் கையோடு இருக்கையில் இருந்து எழுந்திருந்தார்.
சீதாவும் அங்கேயே நிற்க “நம்பமாட்டியா நான் வருவேன்னு”
“அதுக்கில்லை…” என்று நிறுத்தினார்.
“என்ன??”
“உதிரனை பார்த்து நாளாச்சு, அவனை இப்படியே ஹாஸ்டல்ல விட்டா எப்படிங்க?? நம்மளை எல்லாம் மறந்திடுவான்…”
“அதெல்லாம் உதிரன் மறக்கமாட்டான் நீ வா முதல்ல அம்மாவை பார்ப்போம் அப்புறம் நம்ம பையனை பார்க்கறதை பத்தி பேசுவோம்” என்றவர் கீழே இறங்கிச் சென்றார் மனைவியுடன்.
அவர் அன்னையின் அறைக்கு மனைவியுடன் உள்ளே நுழைந்தார். அவரின் அருகில் அமர்ந்தவர் “என்னம்மா கூப்பிட்டீங்களாம், உடம்புக்கு எதுவும் செய்யுதா” என்றார் அன்னையின் முகம் நோக்கி.
அந்த பேச்சில் கண்ணில் நீர் வந்துவிட்டது அவருக்கு. அதை மெதுவாய் துடைவிட்டார் ராமசாமி.
“எதுக்கும்மா இப்போ அழறீங்க??” என்றவர் மனைவியை பார்த்தார்.
அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்று தலையசைக்க மீண்டும் அன்னையை பார்த்தார்.
“ராமா உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்டா ராமா…”
“அதெல்லாம் எதுக்கும்மா இப்போ??”
“சீதாவையும் ரொம்ப படுத்திட்டேன்”
“அந்த பேச்சை விடுங்க அத்தை”
“எப்படி விட முடியும். நீங்க தானே என்னை இப்போ பார்க்கறீங்க”
“அம்மா!!” என்று கண்டிப்போடு அவரை ராமசாமி பார்க்க அவர் நிறுத்தினார்.
பின் மெதுவாய் “ராமா அம்மா ரொம்ப நாளைக்கு இருக்க மாட்டேன்னு தோணுது…”
“எதுக்கு இப்படிலாம் பேசறீங்க??”
“இல்லைப்பா என் உடம்பு எனக்கு தெரியாதா”
“என்னை பேசவிடாம தடுக்காத ராமா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”
“சொல்லுங்கம்மா” என்று அவர் சொல்ல ஜானகியம்மாவின் பார்வை மருமகளை தொட்டு நின்றது.
“அம்மா…” என்று ஏதோ பேச ஆரம்பித்த ராமசாமி மனைவியை நோக்கி திரும்ப “நான் அத்தைக்கு ஜூஸ் போடணும் போட்டுட்டு சாப்பாடு ரெடி பண்ணிட்டு வர்றேன்” என்று நகர்ந்துவிட்டார் சீதா அதை புரிந்தார் போல்.
“ஹ்ம்ம் சொல்லுங்கம்மா” என்று அன்னையை நோக்கினார் அவர்.
“ராமா என்னை தப்பா எடுத்துக்காத. அவளோட நல்லதுக்கு தான் நான் அவளை வெளியேத்தினேன்”
“அம்மா எதுவா இருந்தாலும் ஒரே வார்த்தையில சொல்லுங்க எனக்கு புரியற மாதிரி”
“சொல்றேன் ராமா…” என்றவர் அவர் படுத்திருந்த கட்டிலை சுட்டிக்காட்டினார்.
“ராமா இந்த கட்டில்ல ஒரு கைப்பிடி இருக்குல்ல அதை இழு”
தாய் சொன்னதை கேட்டவர் அப்படியே செய்ய உள்ளே ஏதோ பத்திரங்களும் வரைப்படங்களும் இருந்தன.
“அதுல இருக்கறதை எடு” என்று சொல்லவும் அதைச் செய்தார் அவர். அதிலிருந்ததை தன் அன்னையை நோக்கி நீட்டியவர் அந்த வரைப்படங்களின் மீது பார்வையை ஓட்ட அப்படியே அதை பார்த்துக் கொண்டிருந்தார்.
“ராமா இதெல்லாம்…”
“தாத்தா சொன்னதாம்மா”
“உனக்கு தெரியுமா??”
“தாத்தா ஏதோ சும்மா சொல்றாங்கன்னு நினைச்சேன்ம்மா… நிஜமாவே இப்படி புதையல் எல்லாம் இருக்கா என்ன”
“இருக்குப்பா அது இப்போ தான் வெளிய வரணும்ன்னு இருக்கு. உங்கப்பா இதை அவர் காலத்துக்கு அப்புறம் என்கிட்ட கொடுத்தார். நான் இப்போ இதை உன்கிட்ட கொடுக்கறேன். இதை இனி நீ தான் பார்த்துக்கணும்”
“அம்மா!!”
“உன் தம்பிகளை நம்பியோ உன் அக்கா தங்கையை நம்பியோ இதை கொடுக்க முடியாது மட்டுமில்லை. இது இந்த பரம்பரையோட முதல் வாரிசைத்தான் போய் சேரணும்ன்னு சொன்னாங்க…”
“நான் சில விஷயங்களை நம்பலை அப்போ. இப்போ நம்பறேன் ராமா… நீ பார்த்துக்கோ”
“இதுல என்னம்மா இருக்கு”
“எனக்கும் தெரியாது”
“அப்போ இதெல்லாம் பொய்யா கூட இருக்கலாம்ல, காலம் காலமா இதையெல்லாம் நீங்க எதுக்கு பாதுக்காத்துட்டு வர்றீங்க”
“ராமா எதையும் தப்பா பேசாத”
“எனக்கு அப்போ நடந்த கதை எதுவும் முழுசா தெரியாது. என் மாமியார்க்கு மாமியார் காலத்துல நடந்த கதை. ஏதோ பெரிய பிரச்சனையில அவங்க பரம்பரை சொத்தை மறைச்சு வைச்சுட்டாங்கலாம்”
“ஹ்ம்ம் அப்புறம்” என்றார் அவர் கதை கேட்கும் பாவனையுடன்.
“ராமா நான் கதை சொல்லலை. அதெல்லாம் நடந்ததுன்னு கேள்விப்பட்டேன். உங்களோட பாட்டிக்கும் பாட்டி. ரொம்பவும் தைரியமான பெண்ணாம், எதையும் தட்டிக் கேட்பாங்களாம், நேர்மையா இருப்பாங்களாம்”

“அவங்க பிள்ளைகளால ஏதோ பிரச்சனை வந்து அதுல எல்லா பொக்கிஷத்தையும் மறைச்சு வைச்சு அதுக்கு குறிப்பும் வைச்சு பாதுக்காக்க சொல்லிட்டு அவங்க காலத்தை முடிச்சுக்கிட்டாங்களாம்”
“அவங்க காலத்தை முடிச்சிக்கிட்டாங்களா?? அப்படின்னா??”
“அவங்க தன்னையே மாய்ச்சுக்கிட்டாங்களாம்”
“எதுக்கு?? அப்படி என்ன பிரச்சனை??”
“அது எனக்கும் தெரியலை… இப்போ நமக்கெதுக்கு அந்த ஆராய்ச்சி. இது இப்போ உன் கையில நாளைக்கு உன் மகன் கைக்கு தான் இது போகணும்”
“இப்படியே போய்கிட்டு இருந்தா யாருக்கு இதனால லாபம்” என்றார் அவர்.
“ராமா சொல்றதை கேளு இதை ஆராயறேன்னு விபரீதத்துல மாட்டிக்காத” என்று முடித்தார் ஜானகியம்மா.
“சரிம்மா” என்று அவரிடம் முடித்துவிட்டார் அவர். 
அவரின் தாய் கொடுத்த பத்திரங்கள் வரைப்படங்கள் அனைத்தும் எடுத்துக்கொண்டு அவர் அறைக்கு சென்றுவிட்டார்.
அந்த பொக்கிஷத்திற்கான மிகத்தெளிவான குறிப்புகள் அதிலிருந்தன. வரைப்படம் தான் சற்று அவரை குழப்பிற்று.
‘நிஜமாவே இதுல பொக்கிஷம் இருக்குமா, இல்லை சும்மாவே கதை கட்டி விடுறாங்களா’ என்ற தலையாய சந்தேகம் அவருக்கு.
தாங்கள் ராஜ பரம்பரை என்பதில் அவருக்கு எந்த ஐயப்பாடும் இல்லை அதை வைத்து யாரும் விளையாடி இருப்பார்களோ என்று கூட தோன்றத்தான் செய்தது.
ஆனாலும் விளையாடுபவர்கள் இப்படி பாதுக்காக்க மாட்டார்கள் என்றும் தோன்றிற்று. இதை தேடித்தான் பார்ப்போமே என்ற எண்ணம் வலுப்பெற்றது அவருக்குள்.
முடிவே செய்துவிட்டார் அதை தேடிப்பார்ப்பது என்று. வந்தால் வரட்டும் இல்லையென்றால் போகட்டும். பெரிதாய் என்னவாகிவிடப் போகிறது என்ற எண்ணத்தில் தீவிரமாய் அதில் இறங்கினார் பின்னால் வரப்போகும் தடையை கவனிக்காது.
———————
“இனி யாருக்கும் இந்த பொக்கிஷம் கிடைக்காது. உடன் பிறந்தவன் என்றும் பாராமல் அவன் உயிரை குடித்த உங்களுக்கு எதுவுமே கிடைக்காமல் போகும்”
“அவனை பெற்ற வயிற்றில் தான் உங்களையும் பெற்றேன். அந்த அவமானத்தை போக்கவும் பொக்கிஷத்தின் ரகசியம் என்னோடு பொசுங்கி போகவும் என்னையே தீக்கிரையாக்கிக் கொள்கிறேன்” என்று ஆக்ரோஷமாய் சொன்ன அப்பெண்மணி ஏற்கனவே எரிந்துக் கொண்டிருந்த சடலத்தின் சிதையின் முன் பாய்ந்துவிட யாராலும் தடுக்க முடியாமல் போனது.
அவரின் கண்களில் அப்படியொரு கனலும் கோபமும். ஆக்ரோஷமுமாய் ஆங்காரமாய் நின்றிருந்த அவரின் தோற்றம் சினமிகாவை ஏதோ செய்ய சட்டென்று எழுந்து அமரப் போனவளை தடுத்தது உதிரனின் கரம்…

Advertisement