Advertisement

24
“என்ன சொன்னாங்க அவங்க??” என்றார் தாய்.
“என்ன சொல்ல முடியும்மா, நம்ம சொல்றதை அவங்க கேட்டு தானே ஆகணும்” என்று மகன் கோணலாய் ஒரு சிரிப்பை சிந்தினான்.
“ஹ்ம்ம் நல்லது, இப்படியே எவ்வளவு நாளைக்கு தான் தேடிட்டே இருக்கறது. முதல்ல அந்த வீட்டை நம்ம கைக்கு கொண்டு வரணும். அதுக்கு நீ அவங்களுக்கு இன்னும் அழுத்தம் கொடுக்கணும்”
“இப்போவே அதை தானேம்மா செய்யறேன்”
“இப்போ கொடுக்கறது பத்தாது, இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுக்கணும். கத்திரிக்காய் முத்தினா கடை வீதிக்கு வந்திடும்ன்னு சொல்லி பயமுறுத்தணும்”
“ஹ்ம்ம் புரியுதும்மா”
“ஏன்மா எனக்கு ஒரு சந்தேகம் பேசாம அந்த உதிரனை போட்டுத்தள்ளிட்டா அந்த வீடு நம்ம எடுத்துக்கலாம்ல”
“அப்பப்போ நீ முட்டாள்ன்னு நிரூபிக்காத?? உதிரன் போனா அந்த சொத்து அவன் பொண்டாட்டிக்கு தான் போகும்”
“அவளையும் போட்டு தள்ளிறலாம்”
“போட்டு தள்ளிட்டு நாளைக்கு நாம ஜெயில்ல போய் களி திங்கவா. அதுக்கா இவ்வளவு பாடுபடுறோம். தவிர நாம ஒரு முயற்சி செஞ்சதே போதும். திரும்பவும் அதுல இறங்கறது ரிஸ்க். நாம அனுபவிக்க பிறந்தவங்கடா இல்லைன்னா அந்த ரகசியம் என் கண்ணுல எப்படி சிக்கும் சொல்லு. கோடி கோடியாய் அனுபவிக்க இருந்தும் ஒண்ணும் இல்லாம அவளும் உதிரனும் ஏன் கஷ்டப்படணும் சொல்லு. எல்லாம் நம்மோட நல்ல நேரம் தான் அது நமக்கு வரணும்ன்னு இருக்கு. அதுக்கு நாம என்ன செய்யணுமோ அதை செய்வோம்”
“சரிம்மா”
“சீக்கிரமே உனக்கு கல்யாணம் பண்ணிடணும்”
“அம்மா என்னால முடியாது”
“ஏன்??”
“அவ என்னளவுக்கு இல்லைன்னாலும் ரொம்ப சுமாரா இருக்காம்மா”
“அதுக்காக”
“என்னால அவளை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாதும்மா”
“இங்க பாரு உன்னைவிட அந்த உதிரன் லட்சணமானவன், அவன் உயரமும் திடகாத்திரமான உடம்பும் ராஜகளையோட இருப்பான். அவன்ல பாதி கூட கிடையாது அவன் கட்டிக்கிட்டு வந்தவ”
“இதை எதுக்கு என்கிட்ட சொல்றீங்க??” என்று முறைத்தான் அவன் தன் தாயை.
“அந்த பொண்ணு அழகில்லைன்னு அர்த்தமில்லை. அவளும் லட்சணம் தான் ஆனா அவனுக்கு இணையில்லை. அவளை உதிரன் கட்டிக்கலையா”
“ஒரு தீக்குச்சி போதும் இந்த முகம் அழகு போக. ஆனா அக அழகை யாராலையும் எதுவும் செய்ய முடியாது” என்று பெரிதாய் அவர் விளக்கம் கொடுத்தார்.
“அம்மா”
“உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்”
“ஹ்ம்ம்”
“தவிர அதுல இன்னொரு விஷயமும் இருக்கு. அதுக்கு தான் சொல்றேன்”
“என்ன விஷயம்மா??”
“யோசிச்சு பாரு உனக்கே புரியும்” என்றவர் “சீக்கிரம் வேலையை ஆரம்பிக்கணும், கையில இருக்கறதை வைச்சு ஒரு இன்ச் கூட எதையும் கண்டுப்பிடிக்க முடியலை” என்றுவிட்டு நகர்ந்தார் அவர்.
—————–
“சிமி”
“சொல்லுங்க” என்றவாறே ஹாலுக்கு வந்தாள் அவள்.
“அம்மா எங்கே??”
“சொல்லு உதிரா” என்று வந்து நின்றார் அவரும்.
“எங்கம்மா வெளிய கிளம்பிட்டீங்களா??” என்று அவர் தயாராகி நிற்பதை பார்த்து கேட்டான்.
“ஹ்ம்ம் ஆமா உதிரா கோவிலுக்கு போகத்தான் கிளம்பினேன்”

“என்னம்மா விஷயம் அடிக்கடி கோவிலுக்கு கிளம்பறீங்க??”
அவரோ ஒன்றும் சொல்லாமல் இருவரின் முகத்தையும் பார்த்தார்.
“என்னமா என்னன்னு சொல்லுங்க??”
“இல்லை உதிரா அது வந்து”
“என்னத்தை எதுவும் பிரச்சனையா??”
“இல்லைம்மா கொஞ்ச நாளாவே ஏதோ மனசுக்கு சரியில்லை. கெட்ட கெட்ட கனவாவே வருது. அதனால தான் தினமும் கோவிலுக்கு போயிட்டு இருக்கேன். ஒரு மண்டலம் கோவிலுக்கு போய் விளக்கு போடுறதா வேண்டிக்கிட்டேன். அதனால தான் தினமும் போகறேன்”
“உனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு தான் உதிரா சொல்லலை”
உதிரனோ அன்னை கோவிலுக்கு செல்வதைப் பற்றி கேள்வியை விட்டு அவரின் கனவை பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வம் காட்டினான்.
“கனவா?? என்ன கனவும்மா??”
“ஏதோ அசம்பாவிதமா இருக்கு உதிரா. திடிர்னு பத்திட்டு எரியற மாதிரி வருது. அப்புறம் நம்ம நம்ம…”
“என்னம்மா??”
“நம்ம சினா ஏதோ இக்கட்டுல மாட்டிக்கிற மாதிரி அவளை அதுல இருந்து மீட்க முடியாம…” என்று முடிக்காமல் நிறுத்தினார் அவர்.
“அவளுக்கு ஏதோ ஆகிடற மாதிரி கனவு கண்டீங்களா??” என்றான் உதிரன்.
அவர் ஆமென்று தலையசைத்தார். மேற்கொண்டு அவன் எதுவும் சொல்லவில்லை. “நீங்க போயிட்டு வாங்கம்மா” என்று முடித்துக் கொண்டான். அவர் கிளம்பியதும் “சிமி அம்மா கனவை பத்தி உனக்கென்ன தோணுது??” என்று கேட்கவும் தவறவில்லை.
“எதுக்கு அப்படி கேட்கறீங்க??”
“சொல்லு…”
“எதுவும் தோணலை”
“உனக்கு எதுவும் ஆகிடும்ன்னு”
“ஆகாது”
“எப்படி அவ்வளவு உறுதியா சொல்றே??”
“நீங்க என் கூட இருப்பீங்களே அப்புறம் என்ன ஆகும். இதுவரைக்கும் என் கனவுல அப்படியொரு சம்பவம் நடக்கலை அதுக்காக அது போல நிஜத்துல நடக்கவே நடக்காதுன்னு நான் சொல்ல வரலை”
“எனக்கு அந்த பைரவர் துணையா இருப்பார்ன்னு நான் நம்புறேன்”
“சரி வா”
“எங்கே??”
“இன்னைக்கு கடை லீவு தானே. மேலே அப்பா ரூம் கிளீன் பண்ணிடலாம். எனக்கென்னவோ சித்தப்பா வந்து போனதுல இருந்து ஒரே நெருடலாவே இருக்கு” என்றவன் படியேற “நீங்க போங்க நான் கிளீன் பண்ணுறதுக்கு தேவையானதை எடுத்திட்டு வந்திடறேன்” என்று நகர்ந்தாள் சினமிகா.
உதிரன் அந்த அறைக்கதவை திறந்து விளக்கை எரியவிட்டு உள்ளறையில் இருந்த சன்னலை முழுதாய் திறந்துவிட்டு வரவும் சினமிகா வரவும் சரியாக இருந்தது.
அறையில் இருந்த மேஜையை சற்று நகர்த்தி துடைத்து சுத்தம் செய்து மீண்டும் அதே இடத்தில் வைத்தனர்.
இப்படியே ஒவ்வொன்றாய் சுத்தம் செய்துக் கொண்டிருக்கும் போதே எங்கே ஏதோ நகரும் சத்தம் கேட்டது. அறையில் இருந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
உதிரன் வாயில் விரல் வைத்து அமைதியாய் இருக்கும்படி சினமிகாவிடம் சைகை செய்தவன் வெளியில் சென்று அந்த கடைசி வரை பார்த்து வந்தான், ஒருவருமே இல்லை.
“என்னாச்சுங்க??” என்று வாயசைத்தாள் சினமிகா.
“யாருமில்லை” என்றான் அவனும் அதே போல்.
மீண்டும் அதே போல சத்தம் வந்தது, சில நொடிகளில் அமைதியாகிப் போனது. அந்த அமைதியை அவன் கைபேசி குலைக்க அழைத்தது யாரென்று எடுத்து பார்த்த உதிரனின் முகம் யோசனைக்கு தாவியது.
“யாருங்க??”
“எங்க சித்தப்பா”
“என்னவாம்??”
“தெரியலையே” என்றவன் போனை அட்டென்ட் செய்தான்.
“உதிரா…”
“சொல்லுங்க சித்தப்பா…”
“நான் வீட்டுக்கு தான் வந்திட்டு இருக்கேன். உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”
“என்ன விஷயமா??”
“மில்லைப்பத்தி”
“அதைப்பத்தி என்கிட்ட பேச என்ன இருக்கு??”
“என்ன உதிரா சித்தப்பான்னு மரியாதை இல்லாமல் எடுத்தெறிஞ்சு பேசறே??”
“நான் அப்படி சொல்லலை, மில்லைப்பத்தி என்கிட்ட பேச வேண்டிய அவசியம் என்ன?? எனக்கும் அதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே…”
“உங்கப்பா அதுல செஞ்சு வைச்ச குழப்பத்தை பத்தி உன்கிட்ட பேசாம வேற யார்கிட்ட பேச சொல்றே??” என்றார் அவர்.
“என்னது எங்கப்பா செஞ்ச குழப்பமா??”
“ஆமா இதெல்லாம் போன்ல பேசற விஷயமில்லை நேர்ல வர்றேன். பத்து நிமிசத்துல வீட்டில இருப்பேன்” என்று வைத்துவிட்டார் அவர்.
“என்னங்க என்ன சொல்றாங்க??”
“நம்மளை சுத்தி என்னவோ நடக்குது சிமி… எனக்கு சொல்லத் தெரியலை ஏதோ பெரிசா நடக்க போகுது. என் சித்தப்பா சொத்தை வாங்கிட்டு போனதோட சரி அதைப்பத்தி இதுவரை பேசினதேயில்லை”
“இன்னைக்கு புதுசா எங்கப்பா மில்லுல குழப்பம் பண்ணி வைச்சிருக்கார் அதை பத்தி பேசணும் வீட்டுக்கு வர்றேன்னு சொல்றார். அந்த மில்லை அவருக்கு எழுதிக்கொடுத்து எத்தனையோ வருஷம் ஆகுது”
“இப்போ வந்து இப்படி சொல்றார்ன்னா எங்கயோ என்னவோ உதைக்குது”
“அன்னைக்கு வந்தாரே அவரா??”
“இல்லை இவரு சக்தி சித்தப்பா”
“ஓ!!”
“அவர் வரும் போது வரட்டும் நாம இந்த ஜாடியை நகர்த்திட்டு அலமாரி நகர்த்தி கிளீன் பண்ணிடுவோம்” என்று சொல்ல சினமிகா தலையசைத்தாள்.
உதிரன் அந்த ஜாடியை நகர்த்தப் போக அதை அவ்வளவு எளிதில் நகர்த்த முடியவில்லை. சினமிகாவும் உடன் சேர்ந்து பிடித்த பிறகே ஓரளவிற்கு அதை நகர்த்த முடிந்தது.
இருவரும் சற்று ஆசுவாசமாக உட்கார்ந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினர்.
“இதை எதுக்கு அப்பா இங்க வைச்சிருக்கார்ன்னு தெரியலை. என்ன கனம் கனக்குது” என்றான் உதிரன்.
“ரொம்ப அழகா இருக்குலங்க அதனால தான் வாங்கி வைச்சிருப்பாங்களா இருக்கும்” என்றாள் அவன் மனைவி.
“இந்த அலமாரில என்னங்க இருக்கு??”
“எல்லாம் அப்பாவோட திங்க்ஸ் தான். நான் எடுத்து அதுல வைச்சேன், ஒண்ணும் முக்கியமானதா இல்லை. எல்லாமே பேப்பர்ஸ் தான்”
“அப்போ இதை கிளீன் பண்ணணுமா??”
“தேவையில்லாததை எல்லாம் தூக்கிப் போட்டா இந்த அலமாரியை கீழ கொண்டு போய் வைச்சிடலாம்ன்னு பார்க்கறேன்” என்று அவன் சொல்லவும் திபுதிபுவென்று ஏதோ உருளும் சத்தமும் கேட்க இருவரும் திகைத்து பார்த்தனர்.
சத்தம் மட்டும் வருகிறது எங்கென்று தான் அவர்களுக்கு மட்டுப்படவில்லை.
அழைப்பு மணி ஓசை வேறு கேட்க “சித்தப்பா வந்திட்டாங்கன்னு நினைக்கிறேன். நீ ரூமை பூட்டிட்டு வா. நான் முன்னாடி போறேன்” என்று உதிரன் நகர்ந்தான்.
அவன் அப்புறம் செல்லவும் சினமிகா அரவமில்லாமல் ஓரிரு நொடி நின்றவள் விளக்கணைத்து  மெதுவாய் கதவை அடைத்து உள்புறம் தாழிட்டாள் எதையோ தெரிந்து கொள்ளும் நோக்குடன்.
—————-
“வாங்க சித்தப்பா…” என்று வந்தவரை வரவேற்றான்.
அவன் எதிர்பார்த்தது போல அவனுடைய பெரிய சித்தப்பா மட்டும் அங்கு வந்திருக்கவில்லை, அடுத்தவரும் உடன் வந்திருந்தார். ‘ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்காங்க… என்ன விஷயமா இருக்கும்’ என்று யோசித்துக்கொண்டே இருவரையும் ஏறிட்டான்.
“எங்க வீட்டில யாருமில்லையா??” என்றார் அவனின் பெரிய சித்தப்பா சக்தி.
“நான் தான் இருக்கேனே” என்றான் இவன்.
“என்னடா பேச்செல்லாம் ஒரு மாதிரியா போகுது”
“நீங்க வீட்டில யாரை எதிர்பார்த்து வந்தீங்க என்னையவா இல்லை வேற யாரையாச்சுமா??”
“உன்னைப் பார்க்க வர்றேன்னு தானே சொன்னேன் அப்புறம் என்ன கேள்வி”
“உதிரா அண்ணன் உங்கம்மா, வைப் எங்கேன்னு கேட்கறாங்க” என்றார் சிவக்குமார். அவர் பேச்சில் நிதானமே இருந்தது. அதை உதிரன் கவனித்திருந்தான், ஒரு நாளில் என்ன நடந்திருக்கும் என்று இன்னமும் அதே குழப்பம் தான்.
“அம்மா கோவிலுக்கு போயிருக்காங்க… சிமி மேலே ரூம் கிளீன் பண்ணிட்டு இருக்கா இப்போ வந்திடுவா”
“மேலேயே எந்த ரூம்??” என்றார் இப்போது சிவக்குமார் பரபரப்பாய்.
“ஏன்?? அப்பா ரூம் தான்…” என்றான் உதிரன்.
அவன் தன்னை கவனிப்பதை உணர்ந்தவர் சட்டென்று தணிந்தார். “ஓ!! அங்கயா சரி சரி…”
“என்னடா அவன்கிட்ட தணிஞ்சு பேசிட்டு இருக்க. வந்த வேலையை பார்ப்போம்” என்றார் சக்தி.
“சொல்லுங்க நீங்க வந்த விஷயம்??” என்றான் கேள்வியாய்.
“மில்லைப்பத்தி தான் பேசணும்”
“என்ன பேசணும்??”
“உங்கப்பா எங்களை ஏமாத்திட்டான்”
“என்ன??”
“ஆமாடா உங்கப்பன் எங்களை எல்லாம் ஏமாத்திட்டான்”
“புரியற மாதிரி பேசறீங்களா… இல்லாதவரை பத்தி தப்பு தப்பா பேசாதீங்க…”
“தப்பா நான் ஏன் பேசப் போறேன் உண்மையை தான் சொல்றேன். அவன் அந்த மில் பேருல நிறைய கடன் வாங்கி வைச்சிருக்கான். நீ அதெல்லாம் தெரிஞ்சு தானே எங்களுக்கு நைசா மாத்தி விட்டே”
“என்ன உளர்றீங்க நீங்க?? கடனா?? அதுவும் மில் மேல வாய்ப்பே இல்லை…”
“இருக்கு இப்போ ஒருத்தன் வந்து நிக்கறான் காசை கட்டுன்னு. தெளிவா டாக்குமென்ட்ஸ் எல்லாம் வைச்சிருக்கான். ஒரு வாரம் தான் டைம் கொடுத்திருக்கான் கடன் கட்டுறதுக்கு”
“கடனை கட்டு இல்லை இந்த வீட்டை கொடுன்னு கேட்கறான்”
“என்ன சொன்னீங்க??”
“என்னடா கிண்டலா நான் சொல்றது உனக்கு புரியலை எல்லாம் தெளிவா தானே சொல்லிட்டு இருக்கேன்”
“புரியது இதெல்லாம் எதுக்கு என்கிட்ட வந்து சொல்றீங்க. நான் என்ன பண்ண முடியும் நினைக்கறீங்க”
“உன் கடனை நீ தான் அடைக்கணும்”
“என்னது என்னோட கடனா??”
“உங்கப்பன் வாங்கினது”
“உங்க அண்ணன்ன்னு கூட சொல்லலாமே…”
“அதுக்கொண்ணும் குறைச்சலில்லை”
“எனக்கும் அதுக்கும் எந்த சம்மந்தமுமில்லை. சொத்து உங்க கைக்கு கொடுக்கும் போது எந்த கடனும் இல்லை. எங்கப்பா ஆரம்பிச்ச மில்லை உங்களுக்கும் பங்கு இருக்குன்னு சொல்லி நீங்க கேட்டப்போ எதுவும் பேசாம கொடுத்தேன்னா எங்கம்மாவோட வார்த்தைகாக தான்”
“உங்களுக்காக அதை நான் கொடுக்கலை. அந்த மில் ஆரம்பிக்க எங்கப்பா பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை, பாட்டி காசு கொடுக்கலை, நீங்க யாரும் உதவலை. எங்கம்மாவோட நகை பேங்க் லோன்னு அவர் ஆரம்பிச்சது”
“பேங்க் லோன் கூட அவர அடைச்சிட்டார். இப்போ வந்து கடன் இருக்குன்னு சொல்றீங்க. அப்படியே இருந்தாலும் எனக்கென்ன வந்துச்சு”
“என்னடா திமிரா பேசற. நீ தான் அந்த கடனை கொடுக்கணும், இல்லைன்னா வீட்டை எழுதிக்கொடு”
“இந்த வீடு ஒண்ணு தான் இப்போ இருக்கு. அதுவும் உங்க கண்ணை உறுத்துதா!! எக்காரணம் கொண்டும் வீடு உங்க யாருக்கும் கிடைக்காது. இது சொத்து ஆசைக்காக நான் சொல்லலை”
“இது எங்கப்பா பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீடு. எங்கம்மாவை பொறுத்தவரை எங்கப்பா இன்னமும் வாழ்ந்திட்டு இருக்க வீடு. அதனால இதை யாருக்கும் நான் விட்டுக்கொடுக்கறதா இல்லை” என்றான் முகத்திலடித்தது போல்.
“உங்கப்பன் மட்டும் தான் இந்த வீட்டில பிறந்தானா நாங்களும் இந்த வீட்டில பிறந்து வளர்ந்தோம். என்ன சிவா நீ பேசாம இருக்க, சொல்லு அந்த கடன்காரனை நீ தானே கூட்டிட்டு வந்தே. உன் முன்னாடி தானே அவன் எல்லாம் சொன்னான் சொல்லு…”
“உதிரா…” என்று அவன் ஆரம்பிக்கவும் சினமிகாவின் அலறல் கேட்கவும் சரியாக இருந்தது…

Advertisement