Advertisement

23
உதிரனும் அவனின் சித்தப்பா சிவக்குமாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நேரம் உள்ளறையில் ஏதோ கீழே விழுந்த சத்தம் கேட்க இருவருமே அங்கு விரைந்தனர்.
அந்த அறையில் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அந்த படம் தான் கீழே விழுந்திருந்தது. உதிரன் அருகே சென்று அந்த படத்தை கையில் எடுத்தவன் படத்தை முழுதாய் பார்க்க அதிலிருந்த அப்பெண்மணி ஆக்ரோஷமாய் பார்ப்பது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட கைநழுவி அப்படம் கீழே விழுந்தது.
ஆவென்ற அலறல் உதிரனின் சித்தப்பாவிடமிருந்து. அந்த படம் அவரின் இடது காலின் பெருவிரலில் நச்சென்று விழுந்திருக்க அதிலிருந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது.
“டேய்” என்று அவர் கத்திவிட உதிரன் படத்தை ஓர வைத்துவிட்டு அவரை கைத்தாங்கலாய் அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்தினான்.
அந்த அறையில் காகிதங்களை தவிர வேறொன்றும் இல்லையென்பதை அறிந்தவனாதலால் தன் கைக்குட்டையை எடுத்து பெருவிரலில் வழிந்த உதிரத்தை துடைத்தான்.
இருந்தும் நிற்காமல் ரத்தம் வந்துக் கொண்டேயிருக்க நன்றாக சுத்தி இறுக்கி கட்டிவிட்டான். “சித்தப்பா இதோ வந்திர்றேன் மருந்து போடலாம்” என்று அவன் நகர “என்னை கொல்ல பார்க்கறீங்களாடா” என்ற வார்த்தை அவன் காதில் விழுந்தும் அதை கண்டிக்கொள்ளாமல் வெளியே சென்றான்.
மாடியில் இருந்தவாறே கீழே பார்த்து குரல் கொடுத்தான். “சிமி பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்திட்டு வாயேன். கொஞ்சம் அர்ஜென்ட் அப்படியே தண்ணி பாட்டிலும்” என்றுவிட்டு அங்கிருந்தே கீழே பார்க்க “என்னாச்சுங்க” என்றாள் அவள் எட்டிப்பார்த்து.
“நீ சீக்கிரம் வா” என்றவனும் கீழே ஓடினான். அவன் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து வர சினமிகா தண்ணீர் பாட்டிலுடன் விரைந்து வந்தாள்.
“என்னாச்சுங்க” என்றாள் மீண்டும்.
“சித்தப்பா கால்ல சின்ன அடி” என்று சொல்லிக்கொண்டே படிகளில் தாவி தாவி மேலேறினான்.
அறைக்குள் நுழைய அமர்ந்திருந்த அவன் சித்தப்பா காலை நன்றாக நீட்டி அசையாமல் படுத்திருந்தார் எதுவுமே நடவாதது போல.
“என்னங்க அடிப்பட்டிருக்குன்னு சொன்னீங்க. மயக்கமாகிட்டாரு போல, டாக்டர் கூப்பிட்டு வாங்க” என்றாள் சினமிகா பயந்து.
“இல்லை சிமி சித்தப்பா உட்கார்ந்திட்டு தான் இருந்தார். நான் தான் உட்கார வைச்சேன். உன்னை கூப்பிட்டு இதை எடுத்திட்டு வர்றதுக்குள்ள படுத்திருக்காரு” என்றவனுக்கும் லேசாய் பதட்டம் தான்.
“சித்தப்பா… சித்தப்பா…” என்று அவன் இரண்டு மூன்று முறை அழைக்க லேசாய் கண் விழித்தவர் சட்டென்று எழுந்து அமர்ந்தார்.
“நீ எப்படி இங்கே??” என்ற கேள்வி வேறு.
“சித்தப்பா நீங்க தான் எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க…”
“ஓ!!” என்றார் அவர்.
“சித்தப்பா என்னாச்சு உங்களுக்கு?? மயக்கம் வந்திடுச்சா, டாக்டர்கிட்ட போகலாமா??”
“எனக்கு என்ன நல்லா தானே இருக்கேன்”
“கால்ல அடி??” என்று உதிரன் சொல்லவும் அவர் குனிந்து காலை பார்க்க லேசாய் ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது அங்கு.
“உட்காருங்க சித்தப்பா நான் மருந்து போடறேன். உங்களுக்கு சுகர் வேற இருக்கே” என்றவன் முதலுதவி பெட்டி எடுத்து அவர் காலில் மருந்திட்டு லேசாய் கட்டு போட்டு விட்டான்.
“என்னங்க மாமாவை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போங்க. சுகர் வேற இருக்குன்னு சொல்றீங்க” என்றாள் சினமிகா.
“இல்லை எனக்கொன்னுமில்லை ஐ யம் ஆல்ரைட்” என்றார் அவர்.
“ஆமா இந்த போட்டோ ஏன் கீழே இருக்கு?? எடுத்து மாட்டு” என்றார் அவர்.
உதிரனுக்கு அவர் நடந்து கொள்ளும் முறை சத்தியமாய் புரியவில்லை. அவர் முதலில் நடந்து கொண்டதற்கும் தற்போது நடந்து கொள்வதற்கும் எந்தவித சம்மந்தமுமில்லை.
உதிரன் அந்த படத்தை எடுத்து சுவற்றில் மாட்டினான். சிவக்குமாரோ அதையே உற்று பார்த்துக் கொண்டிருந்தார்.
உதிரனும் அப்படத்தை பார்க்க முதலில் தோன்ற ஆக்ரோஷ முகமில்லாது சாந்தமாய் புன்னகை தவழ நின்றிருந்தது அவ்வுருவம். அவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.
“இது யாரு சித்தப்பா?? ரொம்ப நாளாவே இந்த ரூம்ல இந்த போட்டோ இருக்கே??”
“எங்க பாட்டியோட பாட்டி எங்களுக்கு எள்ளு பாட்டின்னு நினைக்கிறேன். நானும் இவங்களை பார்த்ததில்லை எங்க பாட்டி சொல்ல கேள்வி” என்றார் அவர்.
“இந்த போட்டோ ஏன் இங்க இருக்கு??”
“இது எங்க தாத்தா முதல்ல யூஸ் பண்ணிட்டு இருந்த ரூம், அவருக்கு அப்புறம் உங்கப்பா யூஸ் பண்ணாரு. தாத்தா இந்த போட்டோ எப்பவும் இங்க தான் இருக்கணும்ன்னு சொல்வாங்க”
“அப்போலாம் போட்டோ கிடையாதுல”
“யாரோ ஓவியரை கூப்பிட்டு அவங்க வரைஞ்சதுன்னு எங்க பாட்டி சொல்லி இருக்காங்க சின்ன வயசுல” என்றார்.
“சரி நான் வீட்டுக்கு கிளம்பறேன்” என்றார்.
“சித்தப்பா முதல்ல டாக்டர் பார்த்திட்டு போகலாம்”
“அதுக்கெல்லாம் அவசியமில்லை, எல்லாம் சரியாகிடும் நான் பார்த்துக்கறேன், வீட்டுக்கு கிளம்பறேன்”
“சிமி” என்று உதிரன் சினமிகாவை பார்க்க அவள் அதிர்ந்த முகத்துடன் உதிரனை பார்த்தாள்.
“சிமி” என்று அவன் மறுபடியும் அழைக்க சட்டென்று தன்னை சரிப்படுத்திக் கொண்டவள் என்னவென்று பார்க்க கீழே போ என்று ஜாடை காட்டினான் அவன். அதை புரிந்தவளாய் அவள் முன்னே இறங்கி சென்றாள்.
“சித்தப்பா நீங்க ஏதோ டாக்குமென்ட்ஸ் எடுக்க வந்ததா சொன்னீங்களே??”
“அதெல்லாம் வேணாம் உதிரா பார்த்துக்கலாம்” என்றார் அவர் கூலான குரலில்.
‘இவருக்கு மறைகழன்றுவிட்டதா’ என்று தான் தோன்றியது அவனுக்கு.
“சரி போகலாம் சித்தப்பா” என்றவன் அவருடனே நடந்தான். அந்த அறையின் விளக்கணைத்து கதவடைத்து அவர்கள் கீழே இறங்கிச் சென்றனர்.
“ஆமா முன்னாடி கடை எப்போ ஆரம்பிச்சீங்க சொல்லவே இல்லையே”
‘என்னது சொல்லலையா சொன்னா முதல் ஆளா இவங்க வந்திருப்பாங்களா என்ன’ என்று மனதிற்குள் தோன்றிய எண்ணத்தை ஒதுக்கி வைத்து “கொஞ்ச நாள் ஆகுது சித்தப்பா”
“ஏன் எனக்கு சொல்லலை??”
“சொல்லற மாதிரியா இருந்துச்சு” என்று பட்டென்று சொல்லிவிட்டான்.
“போனது போகட்டும், இனிமே அப்படி இருக்காத” என்றார் அவரும்.
உதிரனுக்கு மயக்கம் வராத குறை தான் அவரின் பேச்சில். முரணான அவர் பேச்சு இன்னமும் அவனுக்கு வியப்பாய் தானிருந்தது. சினமிகாவும் அதை தான் பார்த்திருந்தாள்.
“சித்தப்பா களைப்பா இருப்பீங்க ஏதாச்சும் குடிக்கறீங்களா?? ஜூஸ்…”
“இல்லை காபி தான் அண்ணி போடுற காபி நல்லா இருக்கும்” என்று அவர் சொல்ல அதே நேரம் சீதா உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்.
“யார்கிட்ட பேசிட்டு இருக்க உதிரா” என்று சொல்லிக்கொண்டே வந்தவர் சோபாவில் அமர்ந்திருந்த தன் கணவனின் சகோதரனை கண்டதும் லேசாய் அதிர்ந்தார்.
‘இவர் எங்க இங்க??’ என்ற கேள்வியும் உடன் எழுந்தது அவருக்கு.
“எப்படியிருக்கீங்க அண்ணி??” என்று கேட்டதில் வீட்டினர் மூவரும் மயங்காத குறை தான்.
‘இவரு ஏதோ அவங்க சித்தப்பாகிட்ட பேசியிருக்கார் போல அதான் அவர் அதை புரிஞ்சுக்கிட்டு இப்போ நல்ல விதமா பேசுறாரு’ என்று தன் கணவனை உள்ளுக்குள் மெச்சிக் கொண்டாள் சினமிகா.
“ஹ்ம்ம் நல்லாயிருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?? வீட்டில எல்லாரும் நல்லா இருக்காங்களா??” என்றார் சீதா.
“எல்லாரும் நல்லா இருக்காங்க அண்ணி. இப்போ தான் நீங்க போடுற காபி பத்தி பேசிட்டு இருந்தேன்”
“இதோ போடுறேன்” என்றவர் தன் கையில் இருந்ததை கீழே வைக்கப் போக சினமிகா அவருக்கு உதவினாள்.
அவர் இருந்து காபி குடித்து கிளம்பியவர் கடைக்கு சென்று நின்றார். “அந்த ஸ்வீட் ஒரு கால் கிலோ கொடுங்க, இது… ஹான் அப்புறம் அது…” என்று அவர் வாங்க அதை வேடிக்கை பார்த்தனர் வீட்டினர்.
“மாமா உங்களுக்கு சுகர்ன்னு இவர் சொன்னாருல. நீங்க கருப்பட்டியில செஞ்ச ஸ்வீட்ஸ் எடுத்திட்டு போங்க” என்றாள் சினமிகா.
“இதெல்லாம் உங்க அத்தை நல்லா சாப்பிடுவா. எனக்கு தனியா வாங்கிக்கறேன்” என்றுவிட்டு அவர் அடுக்கியதை பார்க்க கணவன், மனைவி இருவருக்கும் கண் கட்டியது. ஆயிரம் ரூபாய்க்கும் மேல் இருக்கும் இனிப்புகளை அவர் அள்ளிக் கொண்டிருந்தார்.
உறவினர் வேறு ஒன்றும் சொல்ல முடியாதே. எப்போதாவது தானே வருகிறார் என்ற எண்ணத்தில் பேசாமல் பார்த்திருந்தனர்.
“எவ்வளவு ஆச்சு” என்று அவர் கேட்கும் வரை இருவரும் சிலை போலவே நின்றனர்.
“மாமா அதெல்லாம் வேணாம். வேணாம் சித்தப்பா” என்று இருவருமே ஒரு சேர சொன்னார்கள்.
“அதெப்படி வியாபாரம்ன்னா அது வியாபாராமா தான் இருக்கணும். வியாபாரத்துல சொந்தம் பந்தம் எல்லாம் இருக்கக்கூடாது, இருந்தா நம்ம பொழைப்பு எப்படி ஓடுறது” என்றவர் “நீங்க பில் போடுங்க” என்று மல்லிகாவை பார்த்து சொன்னார்.
மல்லிகாவோ உதிரனையும் சினமிகாவையும் பார்க்க அவர்கள் தலையசைத்ததும் பின்னே பில் போட்டுக் கொடுக்க அவர் காசை எடுத்துக் கொடுத்தார்.
சினமிகா உள்ளிருந்து குல்பி அடங்கிய சிறிய பாக்ஸ் ஒன்றை எடுத்து வந்து அவரிடம் நீட்டினாள். “இது வீட்டில செஞ்சது கடையில வைக்கலை எடுத்திட்டு போங்க, வினயாக்கு பிடிக்கும்” என்று கொடுக்க மறுக்காமல் வாங்கிக் கொண்டார் அவர்.
அனைவரிடமும் விடைப்பெற்று அவர் கிளம்பியும் சென்றுவிட்டார். உதிரன் தானும் உடன் வருவதாக கூற தனக்கொன்றும் இல்லை என்று மறுத்து கிளம்பிவிட்டார்.
மழையடித்து ஓய்ந்தது போலிருந்தது அவர் வந்ததும் பின் சென்றது. அவர் வரும் போது இருந்த ஆர்ப்பாட்டம் செல்லும் போது துளியும் இல்லை.
சீதாவோ “உதிரா என்ன அதிசயம் உங்க சித்தப்பா என்னை மரியாதையா அண்ணின்னு கூப்பிட்டார். மரியாதை கொடுத்து பேச மாட்டாரு, எனக்கு ஆச்சரியமா இருக்கு” என்றார் அவர்.
“எனக்கும் தான்மா” என்று முணுமுணுத்தான் உதிரன்.
“ஆமா அவரு எதுக்கு வந்தாரு??”
உதிரன் என்னவென்று சொல்வான். அவர் வந்ததும் கலாட்டா செய்ததும் சத்தமில்லாமல் சென்றதும் அவனுக்கே ஒன்றும் புரியவில்லை இதில் என்னவென்று அவருக்கு விளக்குவான்.
“சும்மா பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தாரு. மில்லைப்பத்தி ஏதோ டவுட் கேட்டாரு”
“உன்கிட்டயா??”
“ஏன்மா??”
“நீ எப்படி சொல்வே??”
“அம்மா நானும் மில்லுல கொஞ்ச நாள் வேலை பார்த்திருக்கேன். அப்பா மில்லை பத்தி எனக்கு தெரியாது தான் ஆனா மில்லைப் பத்தியே எனக்கு தெரியாத மாதிரி பேசறீங்க” என்றான்.
அன்றைய இரவின் தனிமையில் சினமிகா தன் கணவனிடம் “என்னங்க நீங்க மாமாகிட்ட என்ன பேசுனீங்க?? அவர் எப்படி அப்படியே தலைகீழா மாறிட்டாரு” என்றாள்.
“நான் எதுவும் பேசலை சிமி எனக்கே அவர் நடவடிக்கை குழப்பமா தான் இருக்கு” என்றவன் அறையில் நடந்ததை மனைவியிடம் விளக்க அவளும் முகம் சுருக்கினாள்.
தன் மனைவியையே உற்று நோக்கியவன் “ஆமா அந்த படத்தை பார்த்து உனக்கு எதுக்கு ஷாக்” என்று அறையில் அவள் முகம் மாறியதை பற்றி கேட்டான்.
‘இவரு எப்போ அதை பார்த்தாரு’ என்று யோசித்தாள் சினமிகா.
“சொல்லு சிமி”
“நான் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க, கிண்டல் பண்ணுவீங்க”
“நிச்சயம் கிண்டல் பண்ண மாட்டேன், என்னன்னு சொல்லு”
“அந்த படத்துல இருந்தவங்களை நான் என் கனவுல பார்த்திருக்கேன்”
“வாட்!!” என்று அதிர்ந்தான் உதிரன்.
சினமிகா சொல்வதை நம்பாமல் அவனால் இருக்கவே முடியவில்லை. அவள் முகத்தில் அந்த படத்தை பார்த்ததும் அப்பட்டமான அதிர்ச்சியை அவன் பார்த்தான். அது பொய்யாய் இருக்க முடியாது என்பதை உறுதியாய் நம்பினான்.
“நிஜமா தான் சொல்றியா??”
“நான் தான் சொன்னேன்ல நீங்க நம்ப மாட்டீங்கன்னு”
“நான் நம்பாம கேட்கலை, உறுதிப்படுத்திக்கத் தான் கேட்கறேன்…”
“உறுதியா தான் சொல்றேன், அவங்களை என் கனவுல தான் பார்த்தேன். அப்போ நான் பார்க்கும் போது என்னவொரு கனல் வீசுச்சு தெரியுமா அவங்க கண்ணுல. மதுரையை எரிச்ச கண்ணகி இப்படித்தான் இருந்திருப்பாங்களோன்னு எனக்கு தோணுச்சு. அப்படியொரு பார்வை. என்னால இப்பவும் மறக்க முடியலை”
“அந்த கனவை பத்தி நீ என்கிட்ட சொல்லவே இல்லையே”
“அந்த கனவுல பெரிசா எதுவும் நடக்கலை. ஒரு குகைக்குள்ள இருக்கேன், அங்க தான் அவங்களை பார்த்தேன்”
உதிரன் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான். ‘முதல்ல அப்பாவோட ரூமை நல்லா செக் பண்ணணும். அங்க தான் என்னவோ இருக்கு…’ என்று அவன் மனம் ஆணித்தரமாய் நம்பியது.
அவன் தன் தேடுதலை தொடங்கும் முன் சினமிகா மாடியில் மறைந்து போகும் மர்மத்தை கண்டறிந்திருந்தாள்…

Advertisement