Advertisement

“அந்த வார்த்தை எல்லாம் அவருக்கு தான் பொருந்தும். நான் இதுக்கெல்லாம் வருத்தப்படலை. உங்களுக்கு ஜூஸ் கொண்டு வரவா” என்று அவள் சாதாரணமாய் கேட்க உதிரன் மெச்சுதலாய் பார்த்தான் சினமிகாவை.
“கொண்டு வா… ஒண்ணில்லை ரெண்டு. அவருக்கு மரியாதை தெரியாம இருக்கலாம் நமக்கு தெரியுமே”

“நீங்க சொல்லலைன்னாலும் நான் அதை தான் செஞ்சிருப்பேன்” என்றவள் உள்ளே சென்றாள்.
சினமிகாவிற்கு அவர் மேல் கோபமிருந்தாலும் அவர் தாழ்த்துவது போல் பேசியது அவளுக்கு நிச்சயமாய் வருத்தமாயில்லை. அது அவர் குணம் என்று தான் எண்ணினாள். ஆனாலும் இப்படியும் மனிதர்களா என்ற எண்ணம் தான் அவள் முகக்கன்றலுக்கு காரணம். சினமிகா உள்ளே நகர்ந்ததும் “உட்காருங்க” என்றான் உதிரன்.
“நான் ஒண்ணும் உட்கார வரலை”
“அப்போ நில்லுங்க” என்றுவிட்டு அவன் அமர்ந்துக் கொண்டான்.
“கொஞ்சமும் மரியாதை தெரியாதவங்க” என்று முணுமுணுத்தார் அவர். அவருக்கு தெரியும் உதிரனிடம் பேசினால் அவன் தக்க பதிலடி கொடுப்பான் என்று. சினமிகாவை பேசியது போல அவனிடம் பேச முயலவில்லை அவர்.
“என்ன விஷயமா வந்திருக்கீங்க. எதுக்கு பூட்டை உடைக்கணும் சொன்னீங்க. உங்க ரூம் சாவியை தொலைச்சுட்டீங்களா??” என்றான் உதிரன்.
“எங்க ரூம் சாவியை நான் ஏன் தொலைக்க போறேன்”
“அப்போ??”
“உங்கப்பா ரூம் சாவியை தான் கேட்டேன். அதை கேட்டதுக்கு தான் உன் பொண்டாட்டி மரியாதை இல்லாம பேசிட்டா”
“என்ன பேசினா??”
“சாவியை பத்தி தெரியாதுன்னு சொல்றா”
“அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க??”
“பூட்டை உடைப்பேன்னு சொன்னேன்”
“எங்களை நாய்ன்னு வேற சொன்னீங்க. அப்புறம் என் பொண்டாட்டி உங்களுக்கு கண்டது அப்படித்தானே” என்று அவரை கூர்மையாக பார்த்தான்.
“நான் ஒண்ணும் அதெல்லாம் சொல்லலை” என்று அவர் பல்டி அடிக்க அதற்குள் சினமிகா பழச்சாறு அடங்கிய தட்டை கொண்டு வந்தாள்.
இரண்டு கோப்பையையும் தன் கையில் எடுத்துக் கொண்டவன் ஒன்றை தன் சித்தப்பாவை நோக்கி நீட்டினான்.
“எனக்கு ஒண்ணும் வேணாம்” என்றார் அவர்.
“சிமி நீ சாப்பிடு” என்று அதை தன் மனைவியிடம் கொடுக்க அவன் சித்தப்பாவிற்கு அப்படியொரு ஆத்திரம் அதை அடக்கிக்கொண்டு அமைதியாகவே நின்றார்.
“எனக்கு வேண்டாங்க அத்தை வெளிய போய் இருக்காங்க. டயர்டா வருவாங்க, அவங்களுக்கு கொடுக்கறேன்” என்றுவிட்டு அதை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள். உதிரன் நிதானமாகவே பழச்சாறை அருந்தி முடிந்தவன் நிமிர்ந்து தன் சித்தப்பாவை பார்த்தான்.
“சரி சொல்லுங்க நான் நாய் என் பொண்டாட்டி” என்று மீண்டும் ஆரம்பிக்க அவர் பொறுமை இழந்தார்.
“ஆமா நீ நாய் அவ கண்டது இப்போ என்னடா அதுக்கு” என்று கத்தினார் அவர்.
“எதுக்கு அப்படி சொன்னீங்க??”
“வேற எப்படி சொல்றதுன்னு நீ வேணா கிளாஸ் எடு”
“உங்களை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் கிளாஸ் எடுக்கற அளவுக்கு நான் லோ கிளாஸ் இல்லை” என்று அவருக்கு திருப்பிக் கொடுத்தான் அவன்.
“டேய்!!” என்று பல்லைக் கடித்தார் அவர்.
“போதும் நீங்க கிளம்புங்க”
“இங்க பாரு எங்க அண்ணா ரூம்ல கொஞ்சம் டாக்குமென்ட் இருக்கு அதை எடுக்க அன்னைக்கு வினயாவை அனுப்பினா உன் பொண்டாட்டி கேள்வி கேட்டு அவளை திருப்பி அனுப்பிட்டா”
“அந்த கோபத்துல வார்த்தையை விட்டேன், போதுமா. தயவு பண்ணி ரூம் சாவியை கொடு, நான் போய் அதை எடுத்துக்கறேன்” என்றார் முற்றிலும் தணிந்த குரலில்.
‘இதென்னடா ஓவர் சீனா இருக்கே’ என்ற எண்ணம் தான் உதிரனுக்கு. ‘எதுக்கு இப்படி ஆளாளுக்கு வந்து கேட்கறாங்க. அங்க என்ன இருக்கு. சிமியும் அன்னைக்கு யாரோ அந்த ரூம் வாசல்ல தான் நின்னாங்கன்னு சொன்னா. இவரும் அதே தான் கேட்கறார்’
‘ஒரு வேளை அன்னைக்கு வந்தது இவரா இருக்குமோ. இவரா இருந்தா இதோ இப்போ உரிமையா வந்து கேட்கற மாதிரி அன்னைக்கே செஞ்சிருக்கலாமே. அன்னைக்கு வந்தது வேற யாரோ. அவங்களுக்கும் இவருக்கும் எதுவும் சம்மந்தமிருக்குமா’ இப்படி தான் அவன் எண்ணத்தின் வழி பயணித்தது.
“உதிரா!!” என்ற அவர் குரலில் கலைந்தான்.
“ஹ்ம்ம் சொல்லுங்க”
“சாவி”
“எடுத்திட்டு வர்றேன்” என்றவன் உள்ளே சென்றான். பின்னாலேயே வந்து நின்றாள் சினமிகா.
“என்ன சிமி??”
“ஒண்ணுமில்லை”
“சாவியை கொடுக்கக் கூடாதுன்னு நினைக்கறியா??”
ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தாள், பின் “தெரியலை நீங்க அன்னைக்கு சொன்ன மாதிரி ஏதோ நடக்குது. அதெல்லாம் எதுக்குன்னு புரியலை. என்னவோ நடக்கப் போற உணர்வு. பயமாயிருக்கு” என்றவளின் முகத்தில் கவலையின் சாயல்.
அருகே வந்து அவள் முகத்தை இரு கைகளாலும் ஏந்திக் கொண்டான். “எந்த கவலையும் உனக்கு வேணாம். எதுவா இருந்தாலும் நாம தைரியமா பேஸ் பண்ணலாம் சரியா”
“ஹ்ம்ம்”
“நான் போய் அங்க என்ன தான் இருக்குன்னு பார்த்திட்டு வர்றேன்”
“ஏன் நீங்க அந்த ரூமுக்கு போனதில்லையா இதுக்கு முன்னாடி”
“போயிருக்கேன் சிமி”
“அப்புறம் என்ன எதிர்பார்க்கறீங்க??”
“இவங்கலாம் அந்த ரூம் சாமியை கேட்கற அளவுக்கு அங்க என்ன இருக்குன்னு நானும் தெரிஞ்சுக்கணும்ல” என்றான் அவன்.
“நான் பார்த்தேன் அங்க டேபிள் சேர், கட்டில், அலமாரி அப்புறம் ஒரு பெரிய ஜாடி அதைத் தவிர ஒண்ணுமில்லையே”
“ஹ்ம்ம் தெரியும்” என்றவன் வெளியில் சென்றான்.
“வாங்க போகலாம்” என்று அவன் முன்னே நடக்க “நீ எதுக்கு சாவியை கொடு நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லி அவன் சந்தேகத்தை அவர் இன்னமும் அதிகப்படுத்திக் கொண்டிருந்தார்.
“நான் கூட வர்றதுல உங்களுக்கென்ன பிரச்சனை” என்றவன் பேச்சை வளர்த்தாமல் மேலே சென்றான். அறையை திறந்துவிட்டு விளக்கை உமிழவிட்டான்.
வந்தவர் அங்கிருந்த மேஜையின் இழுப்பறையை திறந்து அதிலிருந்த காகிதங்களை எடுத்து பார்த்தார்.  பின் மூடினார். ஒவ்வொரு இழுப்பறையாக தேடினார்.
“இந்த டாக்குமென்ட்ஸ் இல்லையா வேறயா” என்ற உதிரன் அவர் எடுத்து மேலே வைத்திருந்ததை பார்வையிட்டான். அது அவன் தந்தை எழுதிய கவிதையும் சில வரைப்படங்கள் மற்றும் சில தேவையில்லாத காகிதங்கள் அவ்வளவே.
மேஜையில் தேடி முடித்தவர் உள்ளறைக்கு சென்று அங்கும் ஒரு அலசு அலசினார். பின் வெளியே வந்தவர் “அந்த அலமாரியை திற” என்றார்.
“அது எதுக்கு உங்களுக்கு??”
“அதுல தான் அந்த டாக்குமென்ட்ஸ் இருக்கு”
“அதுல இருக்குன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?? அப்படி முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஏன் மத்த இடத்துல தேடினீங்க??”
“அந்த அலமாரில இருக்குமான்னு பார்க்கணும் அதுக்கு தான்” என்றார் அவர்.
“அதோட சாவியை எல்லாம் உங்களுக்கு தர முடியாது. அதுல எல்லாமே அப்பாவோட திங்க்ஸ் தான் இருக்கு. நான் தான் அப்பா போனதுக்கு பிறகு அவரோடது எல்லாம் எடுத்து அதுல பூட்டி வைச்சேன்”
“அப்போ திற அதுல தான் இருக்கு” என்று பரபரத்தார் அவர்.
“முடியாதுன்னு சொல்றேன்ல அது அப்பாவோடது. உங்களோடதுன்னு ஒண்ணுமே அதுல இல்லை” என்று மறுத்தான் அவன்.
“என்னடா திமிராகி போச்சா உனக்கு”
“உங்களுக்கு என்ன தேவைன்னு சொல்லுங்க அதை நானே தேடி வைக்கிறேன்” என்றான் உதிரன் இழுத்து பிடித்த பொறுமையுடன்.
“அதெல்லாம் சொல்ல முடியாது”
அவரை மேலிருந்து கீழாய் நிதானமாய் அளவிட்டவன் “உங்களை யாரு இங்க அனுப்பி வைச்சா??” என்று கேட்க அவன் சித்தப்பா ஒரு நொடி அதிர்ந்தார்.
“அ… அதெல்லாம் இல்லை… யாருமில்லை… யாரும் என்னை அனுப்பலை… எனக்கு எதுவும் தெரியாது…” என்று உளறினார்.
“அப்போ கிளம்புங்க”
“இல்லை சாவி”
“தரமுடியாது”
அதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்டவர் “பாக்குறேன்டா பாக்குறேன். நீ எப்படி எனக்கு சாவி தராம போறேன்னு நானும் பாக்குறேன்டா…”
“இந்த வீட்டில எங்களுக்கும் பங்கிருக்கு கேஸ் போடுறேன் நாளைக்கே கேஸ் போடுறேன், இந்த வீட்டை பிரிச்சு உங்களை இங்க இருந்து துரத்துறனா இல்லையான்னு பாரு”
“அப்படியா முடிஞ்சா அதை செய்ங்க பார்ப்போம். நானும் சும்மா இருக்க மாட்டேன்னு உங்களுக்கு தெரியும். இந்த வீட்டை விட பல மடங்கு சொத்து எல்லாம் ஏமாத்தி நீங்க கையெழுத்து வாங்குனீங்கன்னு நானும் சொல்லுவேன். தயாரா இருங்க” என்று உதிரன் சொல்லி முடிக்கவும் உள்ளறையில் எதுவோ கீழே விழும் சத்தம் கேட்டது.

Advertisement