Advertisement

22
உதிரன் ஊஞ்சலில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தான். சமையலறையில் இருந்து வெளியில் வந்த அவன் மனைவி “என்னங்க பூரி இன்னொன்னு கொண்டு வரவா??”
“இதென்ன கேள்வி கொண்டுட்டு வா”
சினமிகா நான்கு பூரியை ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்தாள். கணவனின் தட்டில் ஒவ்வொன்றாய் எடுத்து வைக்க “அம்மா தாயே நீ பாட்டுக்கு அடுக்கிடாதா. ஏற்கனவே பத்து பூரி உள்ள இறங்கி இருக்கு. ரெண்டு மட்டும் போதும்” என்று சொல்ல மீதியை உள்ளே கொண்டு சென்றாள்.
சீதா கடையில் இருந்தார், கடையை எப்போதும் பார்த்துக் கொள்ளும் மல்லிகா அன்று விடுமுறை எடுத்திருந்தார். மற்றொரு பெண் பத்து மணிக்கு மேல் தான் வருவார் என்பதால் சீதா அங்கிருந்தார்.
உதிரன் சாப்பிட்டு கை கழுவி வந்தவன் மீண்டும் ஊஞ்சலில் அமர்ந்திருந்தான்.
“சிமி” என்றழைத்தான்.
“இதோ வர்றேங்க” என்றவள் மேல் வேலைகளை முடித்த பின்னே வெளியில் வந்தாள்.
“சொல்லுங்க”
“இங்க வந்து உட்காரு” என்றவன் அவளை தன்னருகில் இழுத்து அமர வைத்தான்.
சினமிகாவிற்கோ அது அவன் முன்பே அவள் கனவில் செய்தது போலவே இருந்தது. நிமிர்ந்து தன் கணவனை அவள் பார்க்க “என்ன??”
“இப்போ எதுக்கு என்னை கூப்பிட்டீங்க??”
“சும்மா தான் உன்னோட சேர்ந்து ஊஞ்சல் ஆடணும் போல இருந்துச்சு” என்றவன் காலை நன்றாக கீழே ஊன்றி ஊஞ்சலை ஆட்டினான்.
சுகமாய் இருந்த போதும் உடன் கனவும் ஞாபகம் வந்தது அவளுக்கு. கனவில் நடந்தெல்லாம் ஓரளவு நடந்துக் கொண்டே வருவதாகவே தோன்றியது.
என்ன அந்த நிகழ்வுகள் மட்டும் தான் சற்று முன்னுக்குப்பின் முரணாக நடக்கிறதோ என்ற எண்ணம். ஒரு வேளை அந்த கனவெல்லாம் தனக்கு எதையும் உணர்ந்த விரும்புகிறதோ என்று யோசனை தாவ உதிரன் அவள் தொடையில் கிள்ள ஆவென்று கத்திவிட்டாள்.
“எதுக்கு இப்படி கிள்ளினீங்க??”
“நான் எவ்வளவு நேரமாக உன்கிட்ட பேசிட்டு இருக்கேன். நீ எந்த லோகத்திலே இருக்கே??”
“ஓ!! ஆமா என்ன சொன்னீங்க??”
“ஹ்ம்ம் இப்போ கேளு என்ன சொன்னேன்னு போடி” என்றான்.
“இல்லை ஏதோ யோசனை??”
“என்ன யோசனை??”
“கனவைப்பத்தி தான்” என்று அவள் சொல்ல உதிரனுக்கு சற்று ஆர்வம் எட்டிப்பார்த்தது.
“என்ன மறுபடியும் கனவு கண்டியா என்ன வந்துச்சு??”
“மறுபடியும் எந்த கனவும் வரலை. இது ஏற்கனவே வந்த கனவு”
“என்ன வந்துச்சு இதுக்கு முன்னாடி”
“இதே மாதிரி உங்களோட ஊஞ்சல் ஆடுற மாதிரி”
“என்ன!!” என்றான் ஆச்சரியமாய்.
“நிஜம் தான் இதே மாதிரி தான் ஊஞ்சல் ஆடிட்டு இருந்தோம்”
“ஹ்ம்ம் அப்புறம் நான் என்ன செஞ்சேன்” என்றான் அவன் கிண்டல் தொனியில்.
“அப்புறம் என்ன வேற ஒண்ணுமில்லை”
“சரி சரி சொல்லு அப்புறம் என்னாச்சு??”
“நிஜமாவே அப்புறம் எதுவுமில்லை”
“சொல்ல மாட்ட”
“அப்படிலாம் இல்லைங்க” என்றவள் “ஏங்க அன்னைக்கு கீழ இறங்கும் போது மேலவே பார்த்திட்டு இருந்தீங்களே. அங்க யாரையும் பார்த்தீங்களா??”
உதிரன் பதில் சொல்லவில்லை. “என்னங்க??” என்று உலுக்கினாள் அவள்.
“ஹ்ம்ம்”
“என்ன யோசிக்கறீங்க??”
“தெரியலை சிமி, என்னமோ வித்தியாசமா உணர்றேன். சொல்லத் தெரியலை”
“என்ன சொல்றீங்க புரியலை எனக்கு”
“நீ சொன்னது சரி தான் மேலே யாரோ இருந்த பீல் எனக்கும் வந்துச்சு” என்று ஒத்துக்கொண்டான்.
“அப்புறம் ஏன் கீழ இறங்கி வந்திட்டீங்க??”
“இல்லை திரும்ப போய் பார்த்தேன் ஆனா யாருமில்லை. உறுதியா எனக்கும் தெரியுது யாரோ இருந்தாங்கன்னு. தவிர சமீபமா நடக்கற விஷயம் எல்லாம் தொடர்பில்லாம இருக்கற மாதிரி இருந்தாலும் நமக்கும் அதுக்கும் ஏதோ பெரிசா தொடர்பு இருக்க மாதிரி இருக்கு”
“என்னங்க என்னைவிட அதிகமா யோசிக்கறீங்க??”
“உன்னோட கனவோட தாக்கம் எனக்கும் வந்திடுச்சோ என்னவோ” என்றான் கிண்டல் குரலில்.
“என்ன நக்கலா??”
“இல்லை அப்படியும் இருக்கலாம்ன்னு தோணுது”
“என்னோட கனவு உங்களுக்கு சிரிப்பா தான் இருக்கும். அதை அனுபவிக்கற எனக்கு தான் தெரியும் அதோட வீரியம் என்னன்னு”
“ஓகே ஓகே விடு நான் உன்னை கிண்டல் பண்ணலை. ஆனா நீயே யோசிச்சு பாரேன்” 
“வேணாம் நாம எதையும் யோசிக்க வேண்டாம் விடுங்க. எது நடக்கணுமோ அது நடக்கும். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படாமலா போய்டுவான். இருட்டு சீக்கிரம் வெளிச்சத்துக்கு வரும்” என்று எந்த நேரத்தில் சொன்னாளோ அது விரைவில் நடந்தேறியது.
———————-
“வீட்டில யாருமில்லையா??” என்ற குரலில் அடுப்பை அணைத்துவிட்டு வேகமாய் வெளியில் வந்தாள் சினமிகா.
வந்தவரோ அவளை ஒரு பொருட்டாய் கூட பார்க்காமல் அங்குமிங்கும் பார்வையை சுழலவிட்டார்.
அதற்குள் வெளியில் இருந்து வந்த மல்லிகா “சாரை தேடி வந்திருக்காங்க போல சினா” என்றுவிட்டு சென்றார். “ஓகே அக்கா நான் பார்த்துக்கறேன்” என்ற சினமிகா வந்தவரை திரும்பி பார்த்தாள். “சொல்லுங்க என்ன வேணும்” என்றாள்.
“எங்க உன் புருஷன்??” என்று அவர் மரியாதைவிட்டு பேசவும் லேசாய் கோபம் எட்டி பார்த்தது அவளுக்கு. வந்தவரை அவள் எங்கோ பார்த்த உணர்வும் தோன்ற மரியாதையாகவே பதில் கொடுத்தாள்.
“வெளிய போய் இருக்காங்க, நீங்க…” என்றுவிட்டு நிறுத்தினாள்.
“அந்தளவுக்கு ஆகிப் போச்சா. நான் யாருன்னு கூட உனக்கு மறந்து போச்சா. எங்க போய்ட்டா அவ??” என்று அவர் கேட்க சினமிகாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
“யார் நீங்க?? யாரைப்பத்தி கேட்கறீங்க?? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க” 
“உன் புருஷனோட சித்தப்பா” என்று அவர் சொல்லவும் அவள் நினைவடுக்கில் தேட ஆர்மபித்தாள். வந்தவர் உதிரன் சின்ன சித்தப்பா சிவக்குமார், வினயாவின் தந்தை. வந்தவரை ஒரே முறை தான் அவள் பார்த்திருக்கிறாள். அதுவும் திருமணத்தன்று மட்டுமே. அதனாலேயே அவளுக்கு அவர் முகம் நினைவில் இல்லை. 
சீதா கோவிலுக்கு சென்றுவிட்டு மார்கெட் சென்று காய்கறி வாங்கி வருவதாக சொல்லி அரைமணி நேரம் முன்பு தான் வெளியில் சென்றிருந்தார். அவர் இருந்தாலாவது அவளுக்கு தெரிந்திருக்கும் வந்தவர் யார் என்று.
“மன்னிடுங்க மாமா எனக்கு சரியா ஞாபகம் இல்லை. ஒரு தரம் தானே உங்களை பார்த்திருக்கேன்”
“ஒரு தரம் பார்த்தா மறந்திடுமா??” என்றவர் “எங்க அவ எங்க போய்ட்டா??” என்றார் மரியாதைவிட்டு.
“யாரை கேட்கறீங்க??”
“உன் மாமியார் தான்” என்று அவர் சொல்லவும் அவளுக்கு சுள்ளென்று கோபம் வந்தது. அவள் மாமியாரை விட அவர் வயது குறைந்தவராக கூட இருக்கலாம். அதற்காக அண்ணன் மனைவியை அவள் இவள் என்று ஏக வசனத்தில் பேசுவதா என்று எண்ண முகம் கன்றியது அவளுக்கு.
“அவங்க உங்களுக்கு என்ன வேணும்??”
“ஏய் என்ன சொன்னா புரியாதா உனக்கு?? எல்லாம் என் கூட பிறந்தவனை சொல்லணும் அவன் தான் வக்கத்த குடும்பத்துல பொண்ணெடுத்தான்னா அவனுக்கு பிறந்தவனும் அதையே செஞ்சிருக்கான்” என்று சொல்ல முகம் சிவந்து போனது சினமிகாவிற்கு.
“கொஞ்சம் மரியாதையா பேசுங்க. நாங்க ஒண்ணுமே இல்லாத குடும்பம் இல்லை”
“என்ன இருக்கு பெரிய மாட மாளிகையா இருக்கு உனக்கு. இந்த வீட்டு ஸ்டோர் ரூம் சைஸ்ல உங்கப்பனுக்கு ஒரு கடை, அதை வைச்சு உங்கப்பன் என்ன கோபுரமா கட்டி வைச்சிருக்கான். தீப்பெட்டி சைஸ்ல ஒரு வீடு கட்டியிருப்பான் அவ்வளவு தானே” என்றார் இகழ்ச்சியாய்.
“எங்களுக்குன்னு நல்ல பேரு இருக்கு. பெரிய மாளிகைல இருக்கவங்க மட்டும் தான் மனுஷங்களா என்ன… நீங்கலாம் ஏன் குடிசையில இருக்கவன் சாப்பிடுற மாதிரி அரிசி சோறு சாப்பிடறீங்க. பணத்தை நகையை சாப்பிட வேண்டியது தானே. உங்ககிட்ட அது தான் நிறைய இருக்கே” என்றாள் சற்றும் ஆத்திரம் குறையாமல்.
“ஏய்!! என்ன கொஞ்சமும் நாகரீகமில்லாம மட்டுமரியாதை இல்லாம என்னையவே எதிர்த்து பேசுற. உன்கிட்ட எல்லாம் பேசணும்ன்னு எனக்கு அவசியமில்லை. எங்க அவ அவளை வரச்சொல்லு” என்று மீண்டும் ஏக வசனத்தில் பேசினார்.
“இங்க பாருங்க மரியாதை கொடுத்தா தான் அது திரும்ப கிடைக்கும். உங்களுக்கு நான் இப்போ கொடுக்கற மரியாதை நீங்க பேசுற பேச்சுக்காகவோ உங்களுக்காகவோ இல்லை. அவரோட சித்தப்பா அப்படிங்கற ஒரே காரணத்துக்காக தான். இல்லைன்னா எங்க அத்தையை மரியாதை இல்லாம பேசினதுக்கு என்ன நடந்திருக்கும்ன்னு எனக்கே தெரியாது”
“என்னடி என்ன பண்ணுவே?? வளர்த்து வைச்சிருக்காங்க பாரு பொண்ணை. இப்படியா வளர்ப்பாங்க…” என்று அவள் வளர்ப்பை குறை சொல்ல பொங்கிவிட்டாள் அவள்.
“என்ன ரொம்ப பேசிட்டே போறீங்க. எங்க வளர்ப்பு எல்லாம் நல்ல விதம், அதை குறை சொல்ற தகுதி உங்களுக்கு இல்லை. ஒரு வேளை உங்க பிள்ளைங்களை நீங்க இப்படி தான் வளர்க்கறீங்கலோ என்னவோ அதான் அடுத்தவங்களை குறை சொல்றீங்க” என்று அவள் சொல்லவும் அவர் முக கருத்து போனது. சினமிகா பேசப்பேச அவருக்கு அது குத்துவது போலவே இருந்தது. 
“உன்கிட்ட எனக்கென்ன பேச்சு. போ… போய் எங்க அண்ணன் ரூமோட சாவியை கொண்டு வா” என்றார் அதிகாரமாய்.
“அது எதுக்கு உங்களுக்கு?? தவிர அந்த சாவியை பத்தி எனக்கு தெரியாது”
“பொய் சொல்லாத உனக்கு தெரியாம இருக்காது. போய் எடுத்திட்டு வா. இல்லை நான் பூட்டை உடைப்பேன்” என்றவர் வேகமாய் மாடிப்படியை நோக்கிச் செல்ல “பூட்டை உடைப்பீங்களா எதுக்கு??” என்ற குரலில் இருவருமே ஒரு சேர வாசலை பார்க்க உதிரன் உள்ளே வந்துக் கொண்டிருந்தான்.
“எங்கடா போவீங்க நீங்க எல்லாம். வீட்டுக்கு வந்தா பார்க்க ஒரு நாயும் இல்லை. கண்டதும் என்னை நிக்க வைச்சு கேள்வி கேட்குது” என்று அப்பட்டமாக அவர் பேச சினமிகாவின் முகம் கன்றியது.
உதிரன் சட்டென்று திரும்பி தன் மனைவியை தான் பார்த்தான். “சிமி” என்று அவன் ஏதோ சமாதானம் செய்ய முயல “அவர் பேசுறதை எல்லாம் நான் கணக்குல எடுக்கவே இல்லை”

Advertisement