Advertisement

21
ஹேய் வினயா உனக்கு இப்போ தான் இங்க வர்றதுக்கு நேரம் கிடைச்சதா??” என்று தன் கணவனின் சித்தப்பா மகள் வினயாவை சந்தோஷமாக வரவேற்றாள் சினமிகா.
“எங்கண்ணி உடனே வரமுடிஞ்சது. பைனல் இயர் எக்ஸாம்ஸ் எல்லாம் வந்திடுச்சு. அதெல்லாம் முடிச்சுட்டு அப்பாடா ஒரு வழியா காலேஜ் படிப்பை முடிச்சிட்டேன்னு இருக்கு. இப்போ தான் கொஞ்சம் ப்ரீ ஆனேன், அதான் உங்களை எல்லாம் பார்க்க வந்திட்டேன். வீட்டில யாருமில்லையா அண்ணி??” என்றாள் சுற்றுமுற்றும் ஆராச்சியாய் பார்த்தவாறே.
“ஹ்ம்ம் உங்க அண்ணன் பேங்க் போயிருக்காங்க. அத்தை கோவிலுக்கு போய் இருக்காங்க. பக்கம் தான் கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க. நீ உட்காரு உனக்கு காபி போடறேன்” என்று நகர்ந்தாள் சினமிகா.
“அண்ணி வாசல்ல கடையெல்லாம் இருக்கு. எனக்கு சொல்லவே இல்லை. எப்போ ஆரம்பிச்சது இதெல்லாம்”
“கொஞ்ச நாளாகுதும்மா… ஸ்வீட்ஸ் சாப்பிடறியா??” என்றாள் அவள்.
“கண்டிப்பா கரும்பு தின்ன கூலி வேணுமா என்ன??” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் அவள்.
“ஆனா அண்ணி குல்பின்னு ஒரு வார்த்தை பார்த்தேனே அதை கண்ணுல காட்டலாமே??”

“உனக்கு குல்பி வேணும்னா கேளேன். அதை ஏன் சுத்தி வளைச்சு கேட்கறே” என்ற சினமிகா உள்ளே சென்றாள்.
“அண்ணி குல்பி வீட்டுக்குள்ள தான் இருக்கா…” என்றவாறே பின்னால் வந்திருந்தாள்.
“கடையில இருக்கும் தான், வீட்டில கொஞ்சம் செட் பண்ணி வைச்சேன் நேத்து நைட். ரெடியா தான் இருக்கும்” என்றவள் பிரீசரை திறந்து குல்பி வைத்திருந்த பாக்சை வெளியில் எடுத்தாள். வினயாவிற்கு இரண்டு குல்பியை எடுத்து கொடுத்தவள் தானும் ஒன்றை எடுத்துக் கொண்டாள்.
“வா வெளிய போய் சாப்பிடுவோம்” என்று மற்றவளையும் அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்து பேசிக்கொண்டே அமர்ந்து சாப்பிட்டனர்.
“அண்ணி குல்பி செமையா இருக்கு. எப்படி செஞ்சீங்க??”
“ஒரு நாள் வா சொல்லித் தர்றேன். தினமும் காலையிலயும், சாயங்காலமும் செய்வேன் நீ வா கத்துத் தர்றேன்”
“அதெல்லாம் நமக்கு செட்டாகுதுப்பா. நான் தினமும் குல்பி சாப்பிட வேணா வர்றேன்”
“நோ ப்ரோப்ளம் நீ எப்போ வேணும்னாலும் வந்து சாப்பிடு ஓகே வா”
“ஹ்ம்ம் கண்டிப்பா… அப்புறம் அண்ணி ஸ்வீட்டு கண்ணுல காட்டுவீங்களா?? இல்லை அவ்வளவு தானா” என்று கிண்டலாக கேட்க ஞாபகம் வந்தவளாக எழுந்து கடையை நோக்கிச் சென்றாள் சினமிகா.
தட்டில் சில வெரைட்டிகளை எடுத்து வைத்தவள் அவளுக்கு கொண்டு வந்து கொடுக்க அதையும் சாப்பிட்டு ஆஹா ஓஹோவென்று சப்புக்கொட்டி சாப்பிட்டாள் சின்னவள்.
அவளுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்ஸ் கொஞ்சம் பார்சலும் கட்டிக்கொண்டாள். அவள் பார்வை அவ்வப்போது வீட்டையே ஆராய்ச்சியாக பார்த்தது. இதென்ன இவள் புதிதாய் பார்ப்பது போல இப்படி பார்க்கிறாளே என்று சினமிகாவிற்கு கூட தோன்றியது.
பின் மெதுவாய் “அண்ணி மேல பெரியப்பா ரூம் சாவி கொண்டு வாங்களேன். அப்பா அங்க ஏதோ டாக்குமென்ட்ஸ் எடுக்கணும் சொன்னாங்க” என்று ஆரம்பித்தாள்.
“பெரியப்பா ரூமா??”
“அதான் உங்க மாமனார்”
“அது எனக்கு புரியுது, ஆனா சாவியை எதுக்கு என்கிட்ட கேட்கறே??” என்றாள் பெரியவள்.
“நீங்க தானே இந்த வீட்டு மருமக உங்ககிட்ட சாவி இருக்காதா என்ன??” என்று அவள் சொல்லிய தினுசு புதுசாய் இருந்தது. ஏதோ பொடி வைத்து பேசுவது போல இருந்தது அவளின் பேச்சு.
சாவி இருக்குமிடம் அவளுக்கு தெரிந்தாலும் ஏனோ அதை அவளிடம் கொடுக்க தோன்றவில்லை சினமிகாவிற்கு. உதிரனோ, சீதாவோ இருந்திருந்தால் அதை யோசித்திருக்க மாட்டாள். அவர்கள் இல்லாததால் அதை எடுத்து வினயாவிடம் கொடுக்கும் எண்ணமில்லை அவளுக்கு.
சினமிகா யோசித்துக் கொண்டிருக்கும் போதே “சரி கொத்து சாவி கொடுங்க, நானே தேடிக்கறேன்” என்று அவள் கையை நீட்ட சினமிகா மற்றவளை ஆராய்ச்சியாக பார்த்தாள்.
அவள் வீட்டிற்கு வந்த போது இருந்த அந்த வினயா போல இல்லை இவள். அவர்கள் திருமணத்தின் போது விளையாட்டாய் குறும்பாய் சுற்றி வந்த பெண் அல்ல அவள்.
அப்பெண்ணின் பேச்சில் ஒரு உற்சாகம், குதூகலம், கள்ளமில்லா சிரிப்பு எல்லாமே இருக்கும். ஏன் சற்று முன்பு வீட்டிற்கு வந்ததும் அவளிடம் பேசிய போது கூட அதை உணர்ந்திருந்தாள்.
ஆனால் இப்போது பேசும் வினயா ஏதோ வினயமாக பேசுகிறாள் என்றளவில் அவளுக்கு புரிந்தது, அது எதற்காய் என்று தான் அவளுக்கு புரியவில்லை.
“இல்லைம்மா என்கிட்ட எந்த சாவியும் இல்லை. உங்க அண்ணனும் பெரியம்மாவும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க. எது கேட்கறதா இருந்தாலும் அவங்ககிட்ட கேட்டுக்கோ” என்று அவள் பட்டென்று சொல்லிவிட வினயா சுதாரித்தாள்.
“அண்ணி அதில்லை நீங்க தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ். நான் பெரியப்பா ரூம் சாவி கேட்டேன்னு அண்ணனுக்கும் பெரியம்மாக்கும் தெரிஞ்சா சங்கடப்படுவாங்க. பெரியப்பா இல்லைன்னாலும் இன்னும் அவங்களை அவங்க மறக்கலை அண்ணி”
“தவிர எங்கப்பா தான் சாவி கேட்டாங்கன்னு தெரிஞ்சா அவங்களுக்கு கோபம் வரும். கல்யாணத்துல தான் நீங்களே பார்த்தீங்களே அண்ணனுக்கும் எங்க சின்ன பெரியப்பாக்கும் அப்பாவுக்கும் சண்டை வந்ததை”
“அப்பா ஏதோ மில் விஷயம்ன்னு சொன்னாங்க. அண்ணன்கிட்ட கேட்டா எதுவும் எடுத்தெறிஞ்சு பேசுவாங்க. அதான் அப்பா என்கிட்ட சொல்லி கேட்கச் சொன்னாங்க அண்ணி. ப்ளீஸ் அவங்களுக்கு தெரியாம நீங்க சாவியை எப்படியாச்சும் வாங்கி வைங்க. நான் இன்னொரு நாள் வர்றேன் சரியா” என்று சமாதானம் சொல்ல சினமிகா அமைதியானாள்.
அவள் சமாதானம் சரி தான் உதிரன் தான் முன்பே அவளிடம் சொல்லியிருக்கிறானே அவன் தந்தையின் அறை அவர்களுக்கு பொக்கிஷ அறை போன்றதென்று.
ஆனாலும் ஏதோவொரு நெருடல் அக்கணம் அவளுக்கு தோன்றத்தான் செய்தது. எதுவும் பேசாமலிருந்தாள் அமைதியாக. அதை கண்ட வினயா “அண்ணி என்ன யோசிக்கறீங்க?? நான் எதுவும் பொய் சொல்லலை நீங்க புரிஞ்சுக்குவீங்கன்னு தான் உங்ககிட்ட சொல்றேன்”
எதையோ ஊகித்தவள் போல் “அப்போ உங்க அண்ணனும் பெரியம்மாவும் வீட்டில இல்லைன்னு தெரிஞ்சு தான் நீ வந்தியா” என்று மீண்டும் பட்டென்று கேட்டுவிட வினயா முகம் சுருங்கினாள்.
நொடியில் தன்னை சரி செய்துக் கொண்டவள் “அவங்களையும் பார்க்கத்தான் வந்தேன். அவங்க இருந்திருந்தாலும் உங்ககிட்ட இந்த விஷயத்தை தனியா கூப்பிட்டு சொல்லிட்டு தான் போயிருப்பேன் அண்ணி”
“கடைசியில என்னை நீங்க தப்பா நினைச்சுட்டீங்கள்ள” என்று சொல்லும் போது அவளுக்கு கண்கள் கலங்கிவிட சினமிகாவுக்கு ஒரு மாதிரியாகிப் போனது.
“உன்னை தப்பா எல்லாம் நினைக்கலை. எனக்கு தோணினதை தான் கேட்டேன் விடு…” என்றாள் அவள்.
“நான் கிளம்பறேன் அண்ணி” என்றவள் சினமிகா கொடுத்ததை எடுக்காமலே கிளம்ப “உங்க அண்ணனும் பெரியம்மாவும் இப்போ வந்திடுவாங்க. இருந்து அவங்களை பார்த்திட்டு போ” என்றாள் சினமிகா.
“இல்லை அண்ணி இன்னொரு நாள் வர்றேன். எனக்கு மனசே சரியில்லை” என்றாள்.
“என்ன மனசு சரியில்லை உனக்கு. ஆமா இதெல்லாம் இங்கவே விட்டுட்டு போறே??” என்றாள் மற்றவள்.
“வேணாம் அண்ணி எனக்கு என்னவோ போல இருக்கு. என் மனசு இன்னும் சமாதானம் ஆகலை. நீங்க என்னை தப்பா நினைச்ச பீல் இப்பவும் எனக்கிருக்கு” என்றாள் அவள்.
“இங்க பாரு நான் அப்போவே சொல்லிட்டேன். எனக்கு ஒளிச்சு மறைச்சு எல்லாம் பேசத்தெரியாது வினயா. எனக்கு என்ன தோணிச்சோ அதை உன்கிட்ட கேட்டுட்டேன். நீ தான் தெளிவு படுத்திட்டல்ல அப்புறமென்ன உனக்கு என் மேல கோபம்”
“அச்சோ எனக்கு உங்க மேல கோபமெல்லாம் இல்லை அண்ணி…”
“அப்போ எடுத்திட்டு போ. அண்ணி சொல்றதை கேட்பல்ல” என்று அவள் சொல்ல அதற்கு மேல் வினயா அதை மறுக்காமல் தனக்காய் கொடுத்ததை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
செல்லும் அவளையே பார்த்திருந்தாள் சினமிகா. எதுவோ மனதிற்கு சரியாகப்படவில்லை அவளுக்கு. வினயா கிளம்பிச் சென்ற அடுத்த பத்து பதினைந்து நிமிடத்திலேயே சொல்லி வைத்தாற் போல உதிரனும் சீதாதேவியும் வீட்டிற்கு வந்திருந்தனர்.
கணவன் தங்கள் அறைக்கு செல்வதை பார்த்திருந்தவள் அவனை நாடிச் சென்றாள். தன் பின்னேயே வரும் மனைவியை கண்டுவிட்டவன் யோசனையோடே பீரோவை திறந்து பாஸ்புக்கை வைத்துவிட்டு அவளை நோக்கி திரும்பினான்.
“சொல்லு சிமி”
“என்ன சொல்லணும்??” என்றாள் அவன் சட்டென்று கேட்கவும்.
“ஏதோ பேசணும்ன்னு தானே வந்தே??”

“ஆமா எப்படி தெரியும்??”
“ஸ்பை வைச்சிருக்கேன்” என்றான் கிண்டலாக.
“என்னது??”
“இதென்ன பெரிய சிதம்பர ரகசியமா நீ என் பின்னாடியே வந்தே?? அப்போ ஏதோ பேசத்தானே வந்திருக்கே?? அதை தான் சொன்னேன்” என்றான் அவன்.
“ஓ!!”
“சரி சொல்லு என்ன விஷயம்??” என்றான் நேரிடையாய்.
“வினயா வந்திருந்தா…”
“எப்போ வந்தா?? நான் வர்றதுக்கு முன்னாடியே கிளம்பிட்டாளா ஏன்?? நீ இருக்கச் சொல்லலையா??”
“சொன்னேன் அவ தான் கிளம்பிட்டா…” என்றவள் அவள் வந்த விஷயத்தை கணவனிடம் மறைக்காது சொல்லிவிட அவன் முகம் யோசனைக்கு தாவியது.
அவனுக்கு நான்கு அக்கா தங்கைகள் இருந்தாலும் வினயா மட்டும் தான் எப்போதும் அவனுடன் ஒட்டுதலாக இருப்பாள். இந்த பெரிய வீட்டில் அனைவரும் ஒன்றாக இருந்த சில காலம் அவள் தான் அவனுக்கு விளையாட உற்ற துணை.
அவள் தத்தித்தாவி நடை பழகியது அவனுடன் தான். அதனாலேயே அவனுக்கு அவளிடம் பெரிய இணக்கமுண்டு.
மனைவி பொய் சொல்பவல்ல என்பதை நன்கறிவான் அவன். சினமிகாவை போல தங்கையை அவனால் தப்பாக எண்ண முடியவில்லை. 
“என்னங்க நான் சொன்னதுக்கு எதுவுமே சொல்லலை??”
“ஹ்ம்ம் என்ன சொல்லன்னு தெரியலை சிமி… வினயா” என்று அவன் ஆரம்பிக்க “நான் அவளை தப்பா எல்லாம் நினைக்கலை”
“ஆனா என்னவோ எனக்கு சரியா சொல்லத் தெரியலை. என்னமோ தப்பா இருக்கு…”
அவனுக்கும் அதே எண்ணம் எதையும் உரிமையுடன் தன்னிடம் கேட்கும் தன் தங்கை எதனால் தன்னிடம் மறைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாள் என்று தான் புரியவில்லை.
தவிர சித்தப்பாவிற்கு டாக்குமென்ட்ஸ் எதுவும் தேவையென்றால் அவரே நேரில் வரலாமே. என்னிடம் கேட்டிருந்தால் நான் என்ன சொல்லப் போகிறேன். எதற்கு வினயாவை அனுப்பி கேட்கின்றனர் என்று குழப்பமாக இருந்தது அவனுக்கு.
“சரி விடு பார்த்துக்கலாம். அடுத்து அவ வந்தா நீ எனக்கு உடனே போன் பண்ணு அவளுக்கு தெரியாம” என்று அவன் சொல்லவும் கணவனை ஏற இறங்க பார்த்தாள்.
“என்ன பார்க்கறே??”
“நான் ஏன் மறைச்சு பண்ணனும் எனக்கு புரியலை” என்று முறைத்தாள்.
“சிமி எனக்கு தெரியாம நீ மறைச்சா தான் அது தப்பு. அவளுக்கு தெரியாம எனக்கு போன் பண்ணுறதுல என்ன தப்பிருக்கு சொல்லு…”
“நான் கேட்கறது உங்களுக்கு புரியலை”
“புரியுது எதுக்கு மறைச்சு பண்ணனும் அதானே”
அவள் ஆமென்று தலையசைக்க “அவ எதுக்கு என்கிட்ட மறைக்கணும்ன்னு நான் தெரிஞ்சுக்க வேணாமா அதுக்காக தான். நீ சொல்றதை பார்த்தா அவ மறுபடியும் வந்தாலும் வரலாம்ன்னு தோணுது”
“அவ வரலைன்னா நம்ம எண்ணம் பொய்யா இருக்கலாம். அவ வந்தா எதுக்குன்னு நாம தெரிஞ்சுக்கறதுல என்ன தப்பிருக்கு”
“அதை அவளை நேரா கூப்பிட்டு கேட்கலாம் தானே…”
“சிமி நான் சொல்றது உனக்கு புரியலையா”
“புரியுது எனக்கு இந்த சுத்தி வளைச்சு பண்ணுறது தான் பிடிக்கலை”
“சரி நான் கேட்கறதுக்கு நீ பதில். அவகிட்ட நீ இந்த விஷயத்தை என்கிட்ட சொல்வேன்னு சொன்னியா??”
“இல்லை”
“ஏன்??”
“அவ தான் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லியிருக்காளே. ஆனா உங்ககிட்ட நான் எதையும் மறைக்க விரும்பலை. தவிர அவ கேட்ட விதமும் சரியில்லை, எனக்கு ஒப்புதலாவும் இல்லை…”
“அதுக்காக அவளை எனக்கு பிடிக்காதுன்னு நினைக்க வேண்டாம். எனக்கு உங்க மத்த சிஸ்டர்ஸ் பத்தி அவ்வளவு தெரியாது. வினயா மட்டும் தான் கொஞ்சம் தெரியும், நான் பார்த்த வரையில அவ நல்ல பொண்ணா இருந்தா. இன்னைக்கு அவளோட பேச்சு ஏதோ வித்தியாசமா பட்டுச்சு எனக்கு” என்று நீண்ட விளக்கம் கொடுத்தாள்.
“என்கிட்ட நீ மறைக்காததுக்கு காரணம் என்ன??”
“நீங்க என்னோட புருஷன் நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் எப்பவும் இருக்கக்கூடாது”
“அதே தான் நானும் சொல்ல வர்றேன். அவளுக்கு தெரியாம நீ மறைக்கலாம். எனக்கு தெரியாம நீ எதையும் மறைக்க விரும்பலை. அதை தான் மறுபடியும் செய்ய சொல்றேன்” என்று அவளுக்கு விளக்க அதில் உடன்பாடில்லாவிட்டாலும் சரியென்று பொத்தாம் பொதுவாய் தலையாட்டி வைத்தாள்.
அக்கணம் அவளறியாள் அது அவளை பெரும் இக்கட்டில் இருந்து காப்பாற்றும் என்று.
“சிமி அம்மா அப்போ எங்க போயிருந்தாங்க??” என்றான் கேள்வியாய்.
“கோவிலுக்கு”
“கோவிலுக்கா??”
“ஆமா நேத்தே சொன்னாங்கல்ல…”
“ஹ்ம்ம் ஆமா. அது சரி அவங்க இப்போலாம் அடிக்கடி கோவிலுக்கு போறாங்கல்ல”
அவன் சொல்லவும் அவளுக்கும் அப்படித்தான் தோன்றியது. “ஹ்ம்ம்” என்றாள் அவனிடம்.
“ஏன்??”
“கோவிலுக்கு போனா தப்பா. அதை ஏன்னு நான் எப்படி கேட்க முடியும்??”
“தப்பில்லை தான்…” என்று தனக்குள் சொல்லி கொண்டான்.
இரண்டு நாட்களாகவே அவனுக்குள் ஏதோவொரு யோசனை. சினமிகா சொல்வதை அவன் நம்புவதற்கு சில மூலக்காரணங்கள் உண்டு.
சினமிகா மாடியில் ஆள் நடமாட்டம் இருப்பதாகவும் யாரோ தன் கழுத்தை பிடித்ததாகவும் சொன்ன அன்று கீழே இருந்த அவனுக்குமே யாரோ ஓடுவது போல தோன்றியிருந்தது.
அதனால் தான் அவனுமே வெளியே வந்திருந்தான். சினமிகா கத்தியதும் அவன் ஓடியதும் பின்னே நடந்தது. அவன் மாடியை ஒரு அலசு அலசிவிட்டு திரும்பி வரும் போது யாரோ அவன் வருகையை உணர்ந்ததும் ஏதோவொரு மறைவில் சென்று மறைந்ததை பார்த்தான். 
அவன் அங்கு செல்லப் போகும் முன்னே சினமிகா இவனை நோக்கி வந்திருக்க அவளை அங்கிருந்து அப்புறப்படுத்த எண்ணியவன் அவளை சமாதானம் செய்து கீழே அனுப்பப் பார்த்தான்.
அவ்வுருவம் இன்னமும் அம்மறைவிலேயே இருக்க அவன் அதை கண்டுகொண்டாலும் காணாதது போல கண்களை சுழற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு சினமிகாவுடன் பாதி படி வரை கீழே இறங்கியவன் சத்தமில்லாமல் மீண்டும் மேலேறினான்.
மறைந்திருந்த உருவம் வெகு எச்சரிக்கையாய் அங்கிருந்து நகர்ந்ததை கண்டதும் இவன் பின்னே போக நொடியில் அவ்வுருவம் எங்கோ மறைந்திருந்தது.
அன்றிலிருந்து அதே யோசனை தான் அவனுக்கு. ஏதோ தங்களை சுற்றி நடக்கிறது என்று புரிந்தது அவனுக்கு. அவன் மனைவியின் எண்ணம் போலே தான் அவனுக்கும் தோன்றியது. நடக்கிறது எதற்காய் ஏன் என்று புரியவில்லை.
அடுத்தடுத்த நிகழ்வுகள் பெரும் விபரீதங்களையும் நிகழ்வுகளையும் உள்ளடக்கியுள்ளது என்பதை ஓரிரு தினங்களில் அவனுக்கு உணர்த்தினார் அந்த காலத்தை அறிந்த கால பைரவன்…

Advertisement