Advertisement

20
கடைக்கு மேலும் ஒரு ஆள் வேலைக்கு வந்திருக்க அவர்கள் அமர சரியான இருக்கை வேண்டும் மேஜை ஒன்று கூட இருந்தால் நன்றாக இருக்கும் என்று சினமிகா கேட்டிருந்தாள்.
“மேல அப்பா ரூம்ல ரெண்டு டேபிள் இருக்கும், மர சேர் வேற சேர்ஸ் கூட இருக்கும் நினைக்கிறேன். கடை பையன் வந்தா அவனை வைச்சுக்கிட்டு அதை எடுத்து போட்டுக்கறியா”
“நீங்களே வந்து எடுத்து கொடுங்களேன்”
“எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு சிமி. நான் ஸ்ரீவில்லிபுத்தூர் வரை போகணும், மாமாவை பார்த்து கொஞ்சம் பேசணும். போயிட்டு வந்திடறேன்”
இப்போதெல்லாம் அவனை தனியே போக விட்டிருந்தாள் அவள். என்ன அனைத்திற்கும் பஸ்ஸில் தான் சென்று வந்து கொண்டிருக்கிறான். வண்டி இன்னும் வாங்கவில்லை.
முதலில் வாங்கிய வண்டிக்கே ஒரு மாதம் முன்பு தான் கடன் முடிந்திருந்தது. கடன் முடியும் முன்பே வண்டி ஆக்சிடென்ட்டில் நொறுங்கியிருந்தது.
“சரி நான் பார்க்கறேன், மேல ரூம் சாவி??”
“நம்ம பீரோல லாக்கர்ல ஒரு பாக்ஸ் இருக்கும். அதுல தான் இருக்கு எல்லா முக்கியமான சாவியும்” என்றான்.
“சாவியை போய் லாக்கர்ல வைப்பாங்களா??”
“அது எங்களோட பொக்கிஷம் அப்பாவோட நினைவுகள்” என்று அவன் சட்டென்று பதில் சொல்லவும் என்னவோ போலானது அவளுக்கு.
“சாரி நான் சாதாரணமா தான் கேட்டேன்”
“நீ இயல்பா தான் கேட்டேன்னு எனக்கு தெரியும் சிமி. மேல சித்தப்பா, அத்தைங்க எல்லாரோட ரூமும் இருக்கு. அதோட இன்னொரு கீ எல்லாம் கூட அதுல தான் இருக்கு”
“சித்தாப்பாங்க, அத்தைங்க வந்தா தங்குறதுக்கு தான் அந்த ரூம் எல்லாம். இந்த வீட்டில அவங்க தங்கி இருந்த ரூம் எல்லாம் அவங்களோட கட்டுப்பாட்டில தான் இப்பவும் இருக்கு”
“அதுல உள்ள திங்க்ஸ் எல்லாம் நாங்க எடுக்கக்கூடாதுன்னு பூட்டி வைச்சுட்டு தான் போனாங்க. ஆனா பாட்டிகிட்ட இருந்த இன்னொரு சாவி செட் பத்தி அவங்களுக்கு தெரியலை போல”
“அது அவங்க இறந்ததும் அப்பாகிட்ட இருந்துச்சு இப்போ என்கிட்ட இருக்கு. சோ சாவி எல்லாம் அங்க இங்க போட்டு வைக்க முடியாதும்மா அதான்”
“ஏங்க தெரியாம கேட்டுட்டேன் எதுக்கு இவ்வளவு விளக்கம்??”
“உனக்கு தெரிஞ்சிருக்கணும்ல அதான் சொன்னேன். அப்புறம் இன்னொரு விஷயம் சிமி அங்க சென்டரா இருக்க டேபிள் சேர் எல்லாம் எடுக்காத அது அப்பாவோடது” என்று அவன் சொல்ல அவல தலையாட்டினாள்.
அவன் வெளியே சென்ற பிறகு சாவியை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றாள். இவள் கதவை திறக்கப் போகும் தருணம் உள்ளே ஏதோவொரு அரவம் கேட்டது அவளுக்கு.
எதுவோ நகர்வது போல ஒரு சத்தம், அடிவயிற்றில் இருந்து ஒரு பயம் எழுந்து வந்து தொண்டையில் நின்றது போன்ற உணர்வு அவளுக்கு.
கதவை சாவியைக் கொண்டு மெதுவாய் திறந்தாள். முதலில் அவள் சென்று தேவையானது பார்த்துவிட்டு பின் கடைப்பையனை அழைத்துக் கொள்ளலாம் என்று அவள் மட்டுமே முதலில் வந்திருந்தாள்.
சீதா தேவி பின்னால் வீட்டில் குடியிருந்த பெண்மணியுடன் கோவிலுக்கு சென்றிருந்தார் அப்போது. 
உள்ளே சென்றவள் அந்த அறையை பார்த்து அதிர்ந்தாள். அது அவள் கனவில் முன்பே கண்ட அறை தான். விளக்கை தேடி ஆன் செய்ய அறைக்குள் இப்போது நன்றாகவே வெளிச்சம் வந்தது.
அறைக்குள் அவள் நுழைவதற்கு முன்பு ஏதோ சத்தம் வந்திருந்தது ஞாபகத்தில் வர கண்களை அறையெங்கும் சுற்றி சுழல விட்டாள். அந்த அறையின் பக்கவாட்டில் வலது புறம் மற்றொரு அறை இருந்தது.
இடது புறம் அவள் பார்வையில் சட்டென்று அவள் கருத்தை கவர்ந்தது அங்கு மர அலமாரியின் அருகில் இருந்த அப்பொருள். அது கனவில் அவள் கண்ட அதே குடுவை, அதனருகே சென்று அதன் வேலைப்பாட்டை பார்த்தாள். 
பெரிய நண்டின் படத்தை அந்த மரக்குடுவையில் செதுக்கி இருந்தார்கள். அவ்வளவு தத்ரூபமாக இருந்தது அந்த வேலைப்பாடு. பெரிய குடுவையாக இருந்தது, அதை நகர்த்தவே கஷ்டமாக இருக்கும் என்று தான் தோன்றியது அவளுக்கு.
‘இதெல்லாம் மாமாவோட கலெக்ஷன்ஸ் போல’ என்று எண்ணிக்கொண்டு அவள் வந்த வேலையை பார்க்க ஆரம்பித்தாள். 
சுவற்றில் சில படங்கள் சட்டமிடப்பட்டு மாட்டப்பட்டிருந்தது. அவர்களின் பாட்டன் பூட்டன் புகைப்படங்கள் போல இருந்தது அது. சில வித்தியாசமான படங்களும் மாட்டப்பட்டிருந்தது.
அந்த அறையில் நடுவாந்திரமாய் ஒரு மேஜையிருந்தது. 
அதனெதிரில் இரண்டு இருக்கைகள் இருந்தது. மேஜையில் இருந்த  சில பொருட்கள் கலைந்திருந்தது. அருகே சென்று பார்க்க அப்போது தான் கலைந்தது போன்று தோன்றியது அவளுக்கு.
தூசியாய் இருந்த மேஜையில் ஆங்காங்கே சில இடங்கள் திட்டு திட்டாய் கைப்பட்டு துடைத்தது போல இருந்தது. ‘யாராச்சும் வந்து துடைப்பாங்களா இருக்கும்’ என்று எண்ணிய மறுகணமே ‘துடைச்சா மொத்தமா தானே துடைப்பாங்க’
‘இப்படி இருக்க வாய்ப்பில்லையே. ஒரு வேளை இவர் எதையும் எடுக்க வந்திருப்பாரா இருக்கும்’ என்று தன்னையே சமாதானம் செய்துக் கொண்டாள்.
ஓரத்தில் இரு மேஜைகளும் அங்கிருந்த இன்னொரு அறையில் கட்டில் மெத்தையும் இருந்தது. உதிரன் சொன்னது போல நாற்காலிகளும் அந்த அறையில் தான் இருந்தது.
ஏதோ தோன்ற குனிந்து கட்டிலுக்கு அடியில் பார்த்தாள். உள்ளே வரும் போது அவளுக்கு கேட்ட அந்த சத்தத்தின் விளைவே அது.
அவள் அந்த அறையில் முக்கியமாய் வீற்றிருந்த அந்த படத்தை சரியாக கவனிக்காது விட்டிருந்தாள். பார்த்திருந்தால்??
பின் அந்த அறையில் அவளுக்கு தேவையானதாய் தோன்றிய இரு நாற்காலிகளை அவளே வெளியே எடுத்து வந்து வைத்தாள்.
முன்னறையில் போட்டிருந்த மேஜையில் ஒன்றை மெதுவாய் இழுத்து வந்து அறைக்கு வெளியில் வைத்துவிட்டு கீழே சென்றாள் கடைப்பையனை அழைக்க.
அவனை அழைக்க படியிறங்க மீண்டும் அறைக்குள் ஏதோ நகரும் நகர்த்தும் சத்தம் கேட்டது. பாதி படியை அவள் கடந்திருந்ததால் எந்த புறம் செல்வது என்ற குழப்ப சிந்தனை.
சட்டென்று முடிவெடுத்து மேலே செல்லாமல் கீழே இறங்கிச் சென்றாள் மேலே வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று. ஆனால் பார்வை முழுதும் மேல் அறையின் மீதே இருந்தது.
கடைப்பையன் உதவியுடன் அனைத்தும் இறக்கி கீழே வைத்த பின் இவள் மட்டும் படியேற யாரோ ஓடும் சத்தம் கேட்டது. உள்ளுக்குள் மீண்டும் அதே பயம் கவ்விப் பிடித்தது.
அறையில் ஒளிர்ந்த விளக்கை அமர்த்த சென்றவள் உள்ளறை வெளியறை எல்லாம் மீண்டும் ஒரு முறை நன்றாக ஆராய்ந்து பார்த்தாள். 
கதவுக்கு பின்னே மேஜையின் பின்புறம் கட்டிலின் அடியில், மர அலமாரியின் அடியில் இருந்த சிறிய இடைவெளியை கூட குனிந்து ஒரு முறை நோட்டமிட்டாள். 
அறையில் இருந்து வெளியேறும் முன் மீண்டுமொருமுறை பார்வையால் அனைத்து இடத்திலும் பார்வையை ஓட்டினாள்.
பெரிதாய் ஒன்றும் தெரியவில்லை அவளுக்கு. ஆனால் அங்கு வேறு யாரோ இருக்கிறார்கள் என்ற எண்ணம் அழுத்தமாய் அவளுக்கு தோன்றியது.
பகலில் சில நேரத்தில் யாரோ நடமாடும் உணர்வு அவளுக்கு அவ்வப்போது வந்ததுண்டு. அப்போது அதை பெரிதாய் எண்ணியிருக்கவில்லை. இப்போது அது பூதாகரமாய் தோன்றியது.
உதிரன் சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்துவிட அவள் எண்ணத்தை சொல்லியிருந்தாள். 
மனைவி சொன்னதிற்காய் அதை புறம் தள்ளாது அவனும் சென்று பார்த்து வந்தான். பெரிதாய் எதுவும் அவனுக்கு தோன்றாததால் அப்படியே விட்டுவிட்டான்.
“என்னங்க பார்த்தீங்களா??” என்று திரும்பி வந்தவனிடம் வினவினாள் அவள்.
“பார்த்தேன் சிமி ஒண்ணுமில்லைடா. இந்த பெரிச்சாளி எதுவும் வந்திருக்குமா இருக்கும். ஒரு நாள் மேல ரூமை கிளீன் பண்ணுவோம்” என்று முடித்துவிட அவளும் அப்படியே விட்டுவிட்டாள்.
அந்த வாரத்தில் மீண்டுமொருநாள் இரவில் யாரோ நடமாடும் சத்தம் கேட்கும் வரை இருவருமே அதை பெரிதாய் எடுத்திருக்கவில்லை.
கனவின்றி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் சினமிகா. வழமை போல யாரோ காலை சுரண்டும் உணர்வு. கண் விழித்து பார்க்க பைரவர் தான்.
அருகே பார்க்க உதிரன் குப்புறப்படுத்திருப்பது தெரிந்தது. இவளுக்கு அது கனவா நினைவா என்ற குழப்பம் கண்களை அகல விரித்து பார்க்க அறையில் ஒருவருமில்லை.
‘அப்போ என் காலை சுரண்டினது?? பைரவர் எங்கே?? எப்பவும் வந்தா என்னையும் தானே கூட்டிட்டு போவார்??’ என்று அடுக்கடுக்காய் கேள்விகள் அவளுக்குள்.
யோசனையுடனே எழுந்து பாத்ரூம் சென்றுவிட்டு வந்தவள் கட்டிலின் அருகில் இருந்த மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலை பார்க்க அது கீழே கவிழ்ந்து தண்ணீர் கொட்டியிருந்தது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   
பாட்டிலை எடுத்துக்கொண்டு கதவை திறந்து இவள் வெளியே செல்லப் போக யாரோ படியேறியதை பார்த்தவளுக்குள் உள்ளுக்குள் குளிர் பிறந்தது. சத்தம் போட்டுவிடலாமா என்று கூட தோன்றியது.
நம் எண்ணம் பொய்யல்ல என்று நிரூபிக்க வேண்டும் பேசாமல் நாமும் படியேறி மாடிக்கு சென்றால் என்ன என்று தோன்ற ஓசையின்றி அவளும் படியேறினாள் மெதுவாய்.
இருள் அவள் கண்களுக்கு நன்றாகவே பழக்கப்பட்டிருந்தது. 
பூஜையறையில் இருந்து கசிந்த லேசான ஒளியில் பெரிதாய் யாரும் அவளை கண்டுக்கொள்ள முடியாது என்று எண்ணியவள் மெதுவே சென்றாள்.
அவ்வுருவம் நன்றாய் பழக்கப்பட்ட இடத்திற்கு வந்தது போல சற்றும் தயங்காமல் நடைப் போட்டது முன்னே. இவள் கடைசி படியில் கால் வைத்திருந்தாலும் மேலே அவ்வுருவத்தின் நடமாட்டத்தை பார்க்க முடிந்தது அவளால்.
உதிரனின் அப்பாவின் அறையின் முன்னே நின்றிருந்த உருவம் கதவை திறக்க சினமிகாவிற்கு சகலமும் ஆடியது.
அறையின் சாவி இவர்களின் அறையில் லாக்கரில் இருக்க இருளில் கண்ட உருவம் எப்படி கதவை திறந்தது என்று ஓடியது அவளுக்கு.
அந்த உருவம் கதவை மூடுவதற்கு முன்பு பின்னே சென்று பிடித்துவிட வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட வேகமாய் வந்தவள் அறையின் வாயிலில் நின்று யாரது உள்ளே?? என்று சத்தமாய் கேட்க சட்டென்று அவள் வாயடைக்கப்பட்டது.
அவ்வுருவம் தன் கைக்கொண்டு அவளின் மூக்கையும் வாயையும் ஒரே சேர பொத்திக் கொள்ள சினமிகா மூச்சுக்கு திணறினாள்.
தன் பலம் கொண்டு அந்த உருவத்தை தன் கைக்கொண்டு அவள் தள்ளப் பார்க்க ஒரு வித்தியாசத்தை அவள் உணர்ந்தாள்.
அதை அவள் கண்டுக்கொள்ளும் முன்னே அந்த உருவம் அவள் தொண்டையை இறுக்கி பிடித்து வெளியே தள்ளிக் கொண்டு வந்து கதவை அடைத்து தாழிட்டது. 
உதிரன் அறையில் படுத்திருந்தவன் திரும்பி படுக்க அருகே மனைவி இல்லாதது கண்டு படுத்த வாக்கிலேயே குளியலறையை பார்க்க அங்கு வெளிச்சப்புள்ளி தெரியாது போகவும் படுக்கையறை வாயிலை பார்த்தான்.
அது திறந்திருக்கவும் வெளியே சென்றிருக்கிறாளா இந்த நேரத்தில் எங்கே போயிருப்பாள் என்ற எண்ணம் தோன்ற சட்டென்று எழுந்து அமர்ந்தவனின் காலில் நீர் பட குனிந்து பார்த்தான்.
அவன் எழுந்து வெளியே வரவும் மேலே ஏதோ சத்தம் கேட்கவும் அவன் படியேற போக அப்போது தான் சினமிகா அவ்வுருவத்தை தள்ளிவிட்டு கத்தியிருந்தாள்.
இரண்டிரண்டு படிகளாக தாவியேறிவன் கீழே விழுந்து கிடந்த மனைவியை தான் பார்த்தான். “சிமி என்னாச்சு??” என்று பதறியவன் அவளை தூக்கி நிறுத்தினான்.
“அங்க யாரோ?? யாரோ இருக்காங்க…” என்றாள் திக்கி திக்கி.
“நீ இங்க எப்படி வந்தே??”
“ப்ளீஸ் போய் பாருங்க… யாரோ வந்தாங்க…” என்றாள் இவள்.
உதிரன் மேற்கொண்டு பேச்சை வளர்த்தாமல் சென்றவன் அங்கிருந்த விளக்கின் ஒளியை உமிழவிட்டான். ஒவ்வொரு அறையின் வாயிலிலும் சென்று நின்றவன் அறையில் ஏதேனும் சத்தம் கேட்கிறதா என்று உற்றுக் கவனித்துக் கொண்டே வந்தான்.
யாருமில்லை என்று அவனுக்கு உறுதியான பின்னே அவன் திரும்பி வர சினமிகா அவனை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள்.
“யாருமில்லை சிமி…”
“இல்லைங்க நிச்சயமா யாரோ வந்தாங்க. மாமா ரூம் கதவை திறந்தாங்க நான் பார்த்தேன்” என்றவளை அழைத்துக் கொண்டு தந்தையின் அறை வாயிலில் நிற்க அறை பூட்டப்பட்டிருந்தது.
“பாரு ரூம் பூட்டியிருக்கு, நீ இருட்டுல எதையோ பார்த்து பயந்திருக்கே” என்றான் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு.
“இல்லைங்க என் கழுத்தை பிடிச்சாங்க. இல்லைன்னா நான் ஏன் கத்தப் போறேன் சொல்லுங்க”
“சிமி நீ சொல்ற மாதிரி இங்க யாருமே இல்லை. நீயும் பார்த்த தானே நான் புல்லா போய் பார்த்து வந்திட்டேன். தவிர இங்க வர்றது வேற வழி எல்லாம் கிடையாது படியேறி வர்றதை தவிர”

“எப்படி வந்தாங்களோ அப்படியே தான் இறங்கியாகணும். நீ சொல்ற மாதிரி பார்த்தா அவன் வந்த வழியே தானே போய் இருக்கணும்”
“அவங்க எங்கயாச்சும் ஒளிஞ்சு இருந்தா??”
“இங்க சித்தப்பா, அத்தைங்க ரூம், அப்பா ரூம் தவிர வேற இடமில்லை. பால்கனி கூட அவங்கவங்க ரூம்ல மட்டும் தான் இருக்கு”
“அப்படி யாரும் வந்து தப்பிக்கணும்ன்னா எதாச்சும் ஒரு ரூம்குள்ள போய் பால்கனி வழியா தப்பிக்கலாம். ஆனா எல்லா ரூமும் பூட்டியிருக்கு”
“இல்லைங்க வந்து…”
“நீ ஏதோ குழம்பி இருக்கே… இருட்டுல எங்காச்சும் இடிச்சு விழுந்திருப்பே வா போகலாம்” என்று சொல்ல அவள் கனவா நனவா என்ற குழப்பத்தில் இருந்ததால் அதற்கு மேல் எந்த வாக்குவாதமும் செய்யாமல் அவனுடன் நடந்தாள்.
அவளை முன்னே நடக்கவிட்டு பின்னே நடந்தவன் இருளில் குறிப்பிட்ட அந்த இடத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே இறங்கினான்…

Advertisement