Advertisement

19
“சிமி நான் வெளிய கிளம்பிட்டேன், எனக்கு டிபன் வை” என்று சொல்லியவாறே வந்தான் உதிரன்.
சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டுக் கொண்டிருந்தவன் தான் பேசியதற்கு எதிர்வினை இல்லாது போகவும் நிமிர்ந்து பார்க்க சினமிகா ஒன்றும் சொல்லாமல் அவனையே வெறித்திருந்தாள்.
“என்ன சிமி நான் சொன்னது உனக்கு காதுல விழுகலையா??”
“ஹ்ம்ம் இதோ வர்றேன்” என்றவள் சமையலறை புகுந்தாள்.
“அம்மா எங்கே??” என்று கேட்டவாறே அவனும் சமையலறைக்குள் நுழைந்தான்.
“கடையில இருக்காங்க, இன்னைக்கு மல்லிக்காக்கா லீவு. அடுத்த வாரத்துல இருந்து புதுசா ஒரு ஆள் வருவாங்கன்னு அப்பா சொன்னாங்க. அதுவரைக்கும் இப்படி தான்” என்றாள்.
அவள் கை தானாய் தோசையை ஊற்றும் வேலையை பார்த்தாலும் முகம் ஏதோ போலிருந்ததை கவனித்துக் கொண்டுதானிருந்தான் அவன்.
“என்னாச்சு டல்லா இருக்கே??” என்றவாறே அவளை பின்னிருந்து அவள் இடையை கட்டிக்கொண்டான்.
தோசையை திருப்பி போட்டவள் வெந்ததும் எடுத்து “சாப்பிடுங்க” என்றவாறே தட்டில் வைத்தாள். அவளிடம் இருந்து பிரிந்தவன் அவளை பார்த்துக் கொண்டே தோசையை பிய்த்து வாயில் போட்டான். அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அவளாக வாயை திறக்கவேயில்லை.
அவன் கை கழுவி வந்த பின்னே அவன் முகத்தை பார்த்தாள். அவள் பார்வையின் பொருள் அப்போது தான் அவனுக்கு புரிவது போல இருந்தது.
அவள் பேசும் முன் “நான் கிளம்பறேன்” என்று அவன் நழுவப் போக “நீங்க எங்கயும் போக வேண்டாம்” என்றாள் அழுத்தந்திருத்தமாய்.
திரும்பி அவளை முறைத்தான் உதிரன். அதை சற்றும் பொருட்படுத்தவில்லை அவள்.
“உன் மனசுல நீ என்ன நினைச்சுட்டு இருக்கே??”
“உங்களுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு நினைச்சுட்டு இருக்கேன்” என்றாள்.
“இப்போ எனக்கு என்னாகிப் போச்சுன்னு இப்படி பண்றே நீ??” என்றான் காட்டமாய்.
“எதுவும் ஆக வேண்டாம்ன்னு தான் சொல்றேன்”
“சிமி!! நீ பண்ணுறது சரியே இல்லை, எனக்கு விதி போகணும்ன்னு இருந்தா வெளிய போய் தான் எதுவும் ஆகணும்ன்னு இல்லை. வீட்டுக்குள்ள நீ என்னை பூட்டி வைச்சாலும் என் உயிர்…” என்று அவன் முடிக்கும் முன்னே அவன் வாய் பொத்தினாள்.
அதை விலக்கியவன் “இப்படி சொன்னா அது நடந்திரும்ன்னு எல்லாம் அர்த்தம் கிடையாது. எது நடக்கணுமோ அது நடந்து தான் தீரும்ன்னு சொல்றேன். பரீக்ஷித்து மகாராஜா கதை தெரியும் தானே”
“ஒரு வாரத்துல தக்ஷகன் அப்படிங்கற பாம்பு கடிச்சு செத்து போவார்ன்னு அவருக்கு ஒரு சாபமிருந்துச்சாம். அதை தடுக்க அவர் என்னென்னவோ செஞ்சாராம். ஆனா அந்த பாம்பு ஒரு பழத்துலகுள்ள இருந்து வெளிய வந்து அவரை தீண்டிடுச்சாம்”
“எனக்கும் அந்த கதை தெரியும்”
“அப்புறம் எதுக்கு என்னை வெளிய விடாம தடுக்கறே??”
“ப்ளீஸ் சொன்னா புரிஞ்சுக்கோங்களேன்”
“என்னை கண்ட்ரோல் பண்றது எனக்கு பிடிக்கலை. இத்தனை நாளா வீட்டில அடைஞ்சு இருந்ததே எனக்கு என்னவோ போல இருக்கு. நமக்கு நிறைய வேலை இருக்கு சிமி அதையெல்லாம் பார்க்க வேணாமா”
“இப்படியே குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட்டிட்டு இருக்க முடியுமா”
“எனக்கு நீங்க சொல்றது எல்லாம் புரியாம இல்லை”
“அப்புறம் ஏன் என்னை படுத்தறே??” என்றான் முகச்சுளிப்பாய்.
“கொஞ்ச நாளைக்கு தான் இதெல்லாம்” என்றாள் அவனுக்கு புரிய வைக்கும் நோக்குடன்.
“எவ்வளவு நாளைக்கு??” என்றான் அவனும் விடாது.
“ஒரு ரெண்டு இல்ல மூணு மாசம் அப்புறம்…”
“ஹ்ம்ம் அப்புறம்…” என்றவனின் முகத்தில் அதீத கோபமிருந்தது.
அது அவளுக்கு வருத்தத்தை கொடுக்க பொறுக்க முடியாதவள் “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றாள் அவனிடம்.
“எதுக்கு??”
“நானும் உங்க கூட வர்றேன்”
“என்ன??”
“இருங்க வந்திடறேன்” என்று உள்ளே திரும்பியவளின் கரத்தை பற்றி தன் புறம் இழுத்தான்.
அதில் அவன் புறம் திரும்பியவளிடம் “இப்போ நீ என்ன நினைக்கிறே அதை முதல்ல சொல்லு”
அவள் தலை குனிந்திருந்தாள். “பதில் சொல்லு சினமிகா”
“தெரியலை, மனசுக்கு ஏதோ போலவே இருக்கு. என்னன்னு சொல்லத் தெரியலை. ஏதோ பெரிசா நடக்கப் போற மாதிரி தோணுது”
“அதெல்லாம் வெறும்…”
“கற்பனைன்னு எனக்கு தோணலை”
“அதுக்காக நீ என்ன பண்ண நினைக்கிறே??”
“நானும் உங்க கூடவே வர்றேன்”
“அதனால என்ன மாறிட போகுது”
“உங்களுக்கு ஒண்ணுன்னா அது எனக்கும் தான். எதுவா இருந்தாலும் அதை சேர்ந்தே பார்த்துப்போம்”
“அப்படின்னா??”

“செத்தாலும் சேர்ந்தே சாவோம்ன்னு அர்த்தம்” என்று சொன்னவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
“என்னடி பேசறே நீ?? நமக்கு எதுவும் ஆகாது, என்னை மீறி உனக்கோ உன்னை மீறி எனக்கோ ஒண்ணும் நடக்காது”
“இதை உன் மன நிம்மதிக்காக நான் சொல்லலை. உன் மனசுல தோணுற மாதிரி எனக்கும் தோணாதா. அந்த உணர்வு தான் என்னை சொல்ல வைக்குது. நீ கவலைப்படாதே நான் பத்திரமா போயிட்டு வருவேன்”
“ப்ளீஸ் நானும்…” என்று ஆரம்பித்தவளை அதற்கு மேல் அவனால் மறுக்க முடியவில்லை. ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவன் “சரி கிளம்பு” என்றான்.
கிளம்ப உள்ளே சென்றவளின் பின்னேயே வந்தவன் “யாருக்கு கிடைக்கும் இப்படி கொடுப்பினை, பொண்டாட்டி கூடவே வேலை பார்க்கறது. சீக்கிரமா ஒரு வண்டி வாங்கணும்”
“ஆமாங்க வாங்கணும்”
“ஸ்கூட்டி வாங்கிடலாம் உனக்கு வண்டி ஓட்டத் தெரியும் தானே”
“தெரியும், ஆனா ஸ்கூட்டி எதுக்கு??”
“நீ ஓட்ட நான் பின்னாடி உட்கார்ந்து வருவேன்ல” என்றான் கண்ணடித்து. அவள் மனக்குழப்பத்தை மாற்றும் பொருட்டு பேச்சை திசை திருப்ப அது நன்றாகவே வேலை செய்தது.
“ஆசை தோசை அப்பள வடை” என்று அவனுக்கு ஒழுங்கு காட்டியவள் படுக்கையறை கதவை அவன் வரும் முன்னே சாற்றினாள்.
“ஹேய் நான் தானே எதுக்கு சாத்தினே??”
“நீங்கன்னு தான் சாத்தினேன்”
“ரொம்ப தான் பண்ணுறே நைட் வைச்சுக்கறேன் உன்னை” என்றான்.
நாட்கள் எந்த சச்சரவுமின்றி அமைதியாகவே கழிந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் சினமிகா. யாரோ அவளை தட்டி எழுப்பிக் கொண்டிருந்தனர். கண் திறந்து பார்க்க பைரவர் தன் காலால் அவளை தட்டிக் கொண்டிருந்தார். சட்டென்று எழுந்து அமர்ந்தவள் அருகிருந்தவனை பார்க்க அவன் உறக்கத்திலிருந்தான்.
அவள் பைரவரை பார்க்க அவர் இவள் முகத்தை ஒரு பார்வை பார்த்து முன்னே நடைப் போட்டார். தன்னைப் போல இவளும் எழுந்து பின்னே சென்றாள்.
மீண்டும் அதே மலைப்பாதை. ஆனால் இம்முறை இவர்கள் இருந்தது அடிவாரத்தில். அங்கிருந்து மெதுவே மேலேறினர். அடிவாரத்தில் இருந்து கிளம்பும் போது மயில் ஒன்று அங்கிருந்ததை கண்டாள்.
“இங்க மயில் எப்படி??” என்ற கேள்வியை மனதிற்குள் புதைத்து பைரவருடன் நடந்தாள்.
மெல்ல மேலே ஏற அகிலின் நறுமணம் அவள் நாசியை வந்தடைந்தது. அன்னைக்கு வரும் போது இந்த மணம் வரலையே என்று யோசித்தாள்.
பைரவர் முன்னேறிக் கொண்டிருக்க இவளும் அவரை பின் தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்தாள். எங்கோ தொலைவில் நீர் விழுகும் ஓசை கேட்க அவள் காதுகள் அவ்வொலியை துல்லியமாய் உள்வாங்கி கொண்டிருந்தது.
இங்க தண்ணி சத்தம் எல்லாம் எப்படி கேட்குது. ஓடை மாதிரி எதுவும் இருக்குமோ என்ற எண்ணத்தை ஒதுக்கி வைத்து முன்னேறினாள்.
அவள் சுற்றிமுற்றி பார்த்துக் கொண்டிருந்ததில் பைரவர் எங்கோ சென்றிருந்தார். இவள் வேக வேகமாய் அங்குமிங்கும் ஓடி அவரைத் தேட கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமில்லை. முழுநிலவின் பொழுதது என்பதால் வெளிச்சம் நன்றாகவே இருந்தது.
ஆங்காங்கே மரங்கள் நிலவின் ஒளியை மறைத்தாலும் இலைகளின் இடைவழியில் புகுந்து சந்திரன் தன் தடத்தை பதித்துக் கொண்டிருந்தான் அவ்வழியில்.
வெகு தூரம் நடந்து வந்ததில் களைத்து போனவள் தூரத்தில் ஓரிடத்தில் வெளிச்சப்புள்ளி தெரிய குத்து மதிப்பாய் அந்த பாதையை நோக்கி நடந்தாள்.
அவ்விடத்தை அவள் நெருங்கியிருக்க அது ஒரு குகை போலிருந்தது. அதனுள்ளே இவள் செல்லவும் அவ்வொளி முற்றிலும் அணைந்து போனது. காற்று வந்துக் கொண்டிருந்த குகையின் வழியையும் யாரோ அடைத்து போயினர்.
அதை உணர்ந்தவளாய் தடுக்கும் பொருட்டு இவள் ஓட அந்தோ பரிதாபம் பாறையில் முட்டிக் கொண்டாள். சில நொடிகளில் வேர்த்து விறுவிறுத்து அவள் மூச்சுக்கு தவித்தாள். யாரோ ஒரு பெண் ஆக்ரோஷமாய் அவள் முன் தோன்றினாள் ஒரு நொடி.
ஏற்கனவே மூச்சுக்கு தவித்துக் கொண்டிருந்தவள் முன்னே தோன்றிய அப்பெண்ணின் கண்ணில் தெரிந்த கனலில் இன்னும் வேர்ப்பது போல தோன்றியது அவளுக்கு.
கண் முன் தோன்றிய உருவம் சட்டென்று மறைய, இன்னும் சில நொடிகளில் அவள் உயிர் பிரிந்துவிடும் என்று அவள் உணர ஆரம்பித்த தருணம் “சிமி என்னாச்சு உனக்கு” என்ற உதிரனின் குரல் தொலைவில் எங்கோ அவள் காதில் விழ இருளிலேயே அவள் கைகளை துழாவி அவனைத் தேடினாள்.
அவன் கை அகப்பட்டதும் தாவி அவனை அணைத்துக் கொண்டாள். “சிமி கண்ணைத் திற, எழுந்திரு” என்றான் அவன். அவள் விழி திறக்காமல் ஏதோ போல் குரலெழுப்ப அவளை உலுக்கி எழுப்பி அருகில் அமர வைத்தான் அவன். அப்போது தான் கண் விழித்து பார்த்தாள் அவள்.
இன்னமும் அவள் மூச்சுவிட முடியாமல் சிரமப்பட “என்னாச்சு என்ன பண்ணுது உனக்கு, டாக்டர்கிட்ட போகலாமா??” என்று அவன் கேட்க அவள் சுற்றிலும் தன் பார்வையை ஓடவிட்டாள்.
மெல்ல ஆசுவாசமாக சாதாரணமாக மூச்சை இழுத்துவிட்டாள். அவனுக்கு புரிந்து போனது ஏதோ கனவு கண்டிருக்கிறாள் என்று.
“கனவா??”
“ஹ்ம்ம்”
“பயந்துட்டியா??”
“செத்து போய்டுவேன்னு நினைச்சேன், நல்ல வேளை நீங்க காப்பாத்திட்டீங்க”
“உனக்கு வந்தது வெறும் கனவு, தவிர நான் உன்னை காப்பாத்தலை. உன் கனவை கலைச்சு உன்னை எழுப்பினதை தவிர நான் எதுவும் செய்யலை”
“இல்லை எனக்கு வந்த ஆபத்தை நீங்க தான் தடுத்தீங்க” என்று முணுமுணுத்தாள்.
“நீ என்னைவிட்டு அவ்வளவு சீக்கிரம் எல்லாம் போய்ட முடியாது, புரிஞ்சுதா. உனக்கு ஒண்ணுன்னா நான் அங்க இருப்பேன்” என்றான்.
“ஹ்ம்ம்”
“சிமி”
“ஹ்ம்ம்”
“என்ன கனவு??”
“தெரியலை”
“தெரியலைன்னா…”
“எனக்கு தெளிவா தெரியலை. இந்த கனவு ஏன் வந்துச்சுன்னு. இதுவரைக்கும் வந்த கனவுக்கும் என்னோட நிஜ வாழ்க்கைக்கும் தொடர்பு இருந்துச்சு. ஆனா…”
“ஆனா??”
“இந்த கனவு எனக்கு என்ன சொல்ல வருதுன்னு எனக்கு புரியலை. தவிர கனவுல ஒருத்தரை பார்த்தேன்”
“சரி அதனாலென்ன”
“அவங்களை நான் இதுவரைக்கும் பார்த்ததேயில்லை”
“அவங்க உன்கிட்ட எதுவும் சொன்னாங்களா??”

“இல்லை அவங்க ரொம்ப ஆக்ரோஷமா தெரிஞ்சாங்க. அவங்க கண்ணுல அப்படியொரு கோபம் தெரிஞ்சது. அதை பார்த்தாலே குலை நடுங்கி போகும் பாக்குறவங்களுக்கு அப்படியிருந்தாங்க. அவங்க போட்டிருந்த டிரஸ்…” என்று சொல்லி நிறுத்திவிட்டாள்.
“ஏன் டிரஸ் போடலையா??” என்று அவன் சொல்ல திரும்பி அவனை முறைத்தாள்.
“இல்லை”
“அதைத்தானே நானும் சொன்னேன் முறைச்சே??”
“அவங்க புடவையை எப்படியோ கட்டியிருந்தாங்க”
“ஹ்ம்ம்”
“எப்படின்னு தெரியலையா??”
“ஹிஸ்டாரிக்கல் நாவல்லாம் படம் போட்டிருப்பாங்களே ராணியோட படம். அதுல இருக்க மாதிரி இருந்தாங்க…”
“ராணி மாதிரியா?? நேத்து டிவில பாகுபலி படம் பார்த்த எபெக்ட்ன்னு நினைக்கிறேன்” என்று சொல்லி சிரித்தான்.
“ப்ளீஸ் நீங்க என்னை புரிஞ்சுக்கலைன்னா பரவாயில்லை. தயவு செஞ்சு கிண்டல் பண்ணாதீங்க” என்றாள் சீரியஸ் குரலில்.
“ஓகே சொல்லலை. ஆனா இதெல்லாம் நீ எங்கயோ பார்த்த இல்ல கேட்ட விஷயத்தோட தாக்கம்ன்னு தான் எனக்கு தோணுது”
“அதெப்படி அப்படித் தோணும். அத்தைக்கும் எப்படி பைரவர் கனவு வருது??” என்று கேள்வி கேட்க அவனுக்கும் அது தான் புரியவில்லை. 
ஆனாலும் அதை ஒத்துக்கொள்ள அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. தானும் அதை உணரும் தருணம் வரும் என்று அந்நொடி அவன் நினைத்திருக்கவில்லை.
——————- 
“இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் நீங்க தேடிட்டே இருக்கப் போறீங்க??” என்றது ஒரு ஆண்குரல்.
“எனக்கு மட்டும் ஆசையா தேடிட்டே இருக்கணும்ன்னு. தேடினது கிடைச்சிருந்தா இந்த தேடுதலுக்கு முடிவு வந்திருக்கும். சாகப் போறவன் சும்மா போகாம ஏதோ குறிப்பெடுத்து வைச்சுட்டு போயிருக்கான்…”
“அதையும் முழுசா வைக்காம என்னவோ செஞ்சுட்டு போயிருக்கான்… நம்மகிட்ட அந்த புதையல் இருக்க இடத்துக்கு போற வழியை காட்டுற வரைப்படம் மட்டும் தான் இருக்கு. அதை வைச்சுட்டு அங்க போய் நிக்கலாம். அவ்வளவு தான் செய்ய முடியும். அங்க எந்த இடத்துல புதையல் இருக்குன்னு எப்படி கண்டு பிடிக்கறது. அதுக்கு தான் நான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அது பபுரியாம நீ பேசிட்டு இருக்க” என்றது பெண் குரல் நீண்ட விளக்கமாய்.
“ஏன் அங்க போனா நம்மால அந்த புதையலை எடுக்க முடியாதா. போய் எல்லா இடத்துலயும் தேடுவோம்”
“முட்டாள்… முட்டாள்… நீயெல்லாம் என்னன்னு தான் பிறந்தியோ. அதென்ன சின்ன இடம்ன்னு நினைச்சியா சும்மா போய் தேடிப் பார்க்கலாம்ன்னு சொல்றே??” என்று திட்டியது அதே பெண் குரல்.
“சும்மா சும்மா என்னை முட்டாள்ன்னு சொல்லாதீங்க. முயற்சி பண்ணி பார்ப்போம்ன்னு தானே சொல்றேன். அதைக் கூட செய்யாம இத்தனை வருஷம் முட்டாள் மாதிரி வேஸ்ட் பண்ணது நீங்க தான்” என்று சொன்ன ஆண் குரலின் கன்னத்தில் இடியென இறங்கியது பெண்ணின் கரம். 
“அம்மா!!”
“வாயை மூடுடா… அம்மாவை முட்டாள்ன்னு சொல்வியா நீ… எவ்வளவு தைரியம் உனக்கு. நீ நல்லா இருக்கணும்ன்னு நான் செய்யறேன், நீ பைத்தியக்காரத்தனமா பேசிட்டு இருக்கே. நீயே இவ்வளவு யோசிக்கும் போது இதெல்லாம் நான் யோசிச்சிருக்க மாட்டேன்னு நினைக்கிறியா…”
“அப்புறம் ஏன்??”
“நீ சொன்ன முயற்சி எல்லாம் எப்பவோ செஞ்சி பார்த்தாச்சு. அந்த முயற்சியில தான் உங்கப்பா போய் சேர்ந்திட்டார்” என்று அவன் தாய் கூறவும் அதிர்ந்து விழித்தான் அம்மகன்.
காணக் கிடைக்காத
பொக்கிஷம்
சாபம் கொண்ட
பொக்கிஷம்
பேராசைக்கு 
துஷ்டனாகும்
நல்லோர்க்கு
மித்ரனாகும்
சதி செய்தவன்
விதி கொல்லும்
விதி கொண்டவன்
சதி வெல்வான்
வென்றவன் யார்?? கொண்டவன் யார்?? செய்தவன் யார்?? மாண்டவன் யாரோ??

Advertisement