Advertisement

18
ஒரு வாரம் தன்னை போல சென்றிருந்தது. உதிரனுக்கு காலில் காயம் இப்போது நன்றாகவே ஆறியிருந்தது. சினமிகா தான் அவனை அங்கிங்கு நகரவிடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கடைக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்துவிட்டு கடையை மல்லிகா மற்றும் தன் மாமியாரின் பொறுப்பில்விட்டு அவள் சிரத்தையாய் தன் கணவனை தான் கவனித்தாள்.
“நீ இப்படி இருந்தா எனக்கு பேஷன்ட்ன்னு பீல் இருந்திட்டே இருக்கும் சிமி” என்று சொல்லியேவிட்டான் உதிரன்.
அதிலிருந்து அவனிடம் எதாவது பேச்சுக் கொடுப்பது அடுத்து என்ன செய்வது என்று இப்படி அவள் வேறு பேச அவனும் அதில் சந்தோசமாகவே கலந்துக் கொண்டு பதில் சொன்னான்.
மதிய நேரம் உதிரன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்க சினமிகா சமையலறையில் இருந்தாள். அவர்களின் கடை குல்பிக்கு நிறைய மவுசு என்பதால் எவ்வளவு செய்தாலும் அது தீர்ந்து போய் விடுவதால் அவள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதை செய்து வைத்துவிடுவாள்.
தற்போதும் அந்த வேலையில் தானிருந்தாள். சினமிகாவின் கைபேசி தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தது. அவள் படுக்கயறையிலேயே கைபேசியை விட்டுச் சென்றிருந்தாள்.
உதிரனின் கைபேசி ஆக்சிடென்ட் நடந்த அன்று தொலைந்திருந்ததால் இன்னமும் புது கைபேசி வாங்கியிருக்கவில்லை. அவனுக்கு வரும் அழைப்பு கூட தற்போது சினமிகாவிற்கு தான் வந்துக் கொண்டிருந்தது. உறக்கத்தின் பிடியில் இருந்து விடுபடாமலே கையை நீட்டி போனை எடுத்து காதில் வைத்திருந்தான்.
எதிர்புறம் சொன்ன விஷயத்தை கேட்டதும் படக்கென்று எழுந்தமர்ந்தவன் எப்போ?? எத்தனை மணி?? நாங்க வந்திடறோம்… என்று சொல்லி போனை வைத்தவன் தன் மனைவியை தேடி வந்தான்.
“சிமி…” என்று அவன் அழைத்துக் கொண்டே சமையலறை வந்து பார்க்க அவள் ப்ரீசரில் குல்பியை செட் செய்துக் கொண்டிருந்தவள் திரும்பி தன் கணவனை பார்த்தாள்.
“தூங்கலையா நீங்க??”
“தூங்கிட்டு தான் இருந்தேன், போன் வந்துச்சு”
“அச்சோ அங்கவே விட்டு வந்திட்டேனா… யாரு பண்ணா??” என்றாள்.
“மாமா போன் பண்ணாங்க. மேகாவுக்கு பெயின் வந்து ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருப்பாங்க போல. அதைச் சொல்லத்தான் கூப்பிட்டாங்க. நீ சீக்கிரம் கிளம்பு நாம போயிட்டு வந்திடுவோம்” என்றான்.
அவன் சொல்ல ஆரம்பத்த போது முகத்தில் லேசாய் ஒரு பதட்டம் வந்திருந்தாலும் அவன் முடிவாய் அவளை கிளம்பச் சொல்லி சொன்ன போது முகம் என்னவோ போலானது அவளுக்கு. பின் நிதானமாக “எங்கே போகணும்??” என்றாள்.
“சிமி!!” என்றான் அவன் அழுத்தமாய்.
“என்னங்க??”
“கிளம்பு”
“எங்கேன்னு கேட்டேனே??”
“ஆஸ்பிட்டல் போயிட்டு வருவோம் சிமி”
“நான் வரலை” என்றாள் பிடிவாதக்குரலில்.
“இதென்ன பிடிவாதம்”
“பிடிவாதம் இல்லைங்க. என் தன்மானம் அதை நான் காப்பாத்திக்க வேணாமா. என்னை பிடிக்காதவங்க முன்னாடி எதுக்கு போயி வீணா நிக்கணும், ஏன் அவங்க வன்மத்தை நான் இன்னும் கூட்டணும்” என்றாள் தெளிவாய்.
“சிமி நீ கோவத்துல பேசுறே??”
“நிச்சயம் எனக்கு கோபமில்லை, வருத்தம் தான். கூடப் பிறந்த பிறப்புன்னு எனக்கு யாருமில்லைன்னு அன்னைக்கே சொல்லிட்டேன். ப்ளீஸ் என்னை எங்கயும் கூப்பிடாதீங்க” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே கைபேசி அலற அழைப்பை ஏற்று காதில் வைத்தான் உதிரன்.
முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு பேசியவனின் முகம் தற்போது இளகியது. “ஹ்ம்ம் ஓகே மாமா…” என்றுவிட்டு வைத்தவன் “நீ பெரியம்மா ஆகிட்டியாம் மாமா சொன்னாங்க” என்று சொல்ல உள்ளுக்குள் உருகத்தான் செய்தது அவளுக்கு.
வெளியில் காட்டிக்கொள்ளாமல் தன் வேலையை பார்க்கப் போக அவளருகே நெருங்கி வந்திருந்தான் உதிரன்.
அவளை பின்னிருந்து அணைத்தவன் “சிமி” என்றான் காதில் கிசுகிசுப்பாய். அவள் பதிலொன்றும் சொல்லவில்லை.
“பெண் குழந்தையாம் உனக்கு பார்க்கணும்ன்னு தோணலையா…”
அவள் அவன் சொல்வதை கேட்டுக் கொண்டு மட்டுமிருந்தாள். “மேகா மேல உனக்கு எவ்வளவு வருத்தம் வேணாம் இருக்கட்டும். அதை அவகிட்ட காமிக்க உனக்கு உரிமையிருக்கு” என்று சொல்லவும் சட்டென்று திரும்பி அவனை பார்த்தாள்.
“உரிமையில்லை” என்றாள்.
“சரி அந்த பேச்சை விடு. ஆனா அந்த சின்ன குழந்தை யாரு, உங்க வீட்டோட முத வாரிசு இல்லையா, உனக்கு பார்க்க வேணாமா அந்த குழந்தையை”
“சின்ன குழந்தை மேல நமக்கென்ன வருத்தம் சொல்லு. நீ மேகாவுக்கு அக்கா இல்லைன்னு சொன்னாலும் அந்த குழந்தைக்கு நீ தானே பெரியம்மா, அதை மாத்திட முடியுமா சொல்லு…” என்று சொல்லவும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென கொட்டியது.
தன் மனைவியை பற்றி அவனுக்கு தெரியாதா, பாசம் இன்னமும் அவள் மனதில் இருப்பதை அறிவானாவன். அவள் வேதனையும் புரிந்ததால் தான் அவள் மேகாவிடம் பேசிய போது ஒன்றும் சொல்லவில்லை.
குழந்தையிடம் அதை காட்டுமளவுக்கு சினமிகா இரக்கமற்றவள் அல்ல என்று அறிந்து தான் அவளிடம் பேசினான்.
“கிளம்பு போய் பார்த்திட்டு வந்திடலாம்” என்று சொல்ல அவன் பிடியில் இருந்து விலாகாதவள் கண்களை மெல்ல துடைத்துவிட்டான்.
“அம்மாவையும் ரெடி ஆகச்சொல்லு” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
மூவருமாக கடையை மல்லிகாவிடம் விட்டு குழந்தையை பார்க்கச் சென்றனர். மேகாவின் குழந்தை அப்படியே அவள் தந்தையை கொண்டிருந்தது.
“என் பேத்தி என்னைய மாதிரியே இருக்கா” சொல்லி சொல்லி சிலாகித்து போனார் வேலன்.
குழந்தையை தூக்கி வந்து தன் மகளின் கையில் அவர் கொடுக்க தள்ளி நின்று பார்த்துவிட்டு வந்தவள் திடுக்கிட்டு உதிரனை பார்த்தாள், அவன் கண் மூடி திறக்க குழந்தையை நன்றாக பிடித்துக்கொண்டவள் பின் குழந்தையை கொஞ்ச ஆரம்பித்துவிட்டாள்.
பட்டுப்போன்று இருக்கும் குழந்தையை பார்த்தால் ஆசை தானே தோன்றும் அள்ளிக்கொஞ்ச. அவளும் அதைத்தான் செய்தாள், குழந்தையை திருப்பி கொடுக்கவே அவளுக்கு மனதில்லை. “பட்டு பெரியம்மா வந்திருக்கேன் கண்ணு திறந்து பாருங்க” என்று அவள் பேசுவதை மேகா தான் குற்றவுணர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
கிளம்பும் வரை குழந்தையை தன் கையிலேயே தான் வைத்திருந்தாள் சினமிகா. மற்றவர்கள் அதைக் கண்டுக்கொண்டாலும் ஒன்றும் சொல்லவில்லை.
கிளம்பும் தருவாயில் தங்கையிடம் “உடம்பை பார்த்துக்கோ, தம்பியையும் கவனிச்சுக்கோ” என்று அவள் சொல்ல மேகாவின் விழிகளில் இருந்து கண்ணீர் பெருகியது.
தங்கைக்கு பெரிதாய் ஆறுதல் எல்லாம் அவளுக்கு சொல்லத் தோன்றவில்லை, அவள் கண்ணீரை மட்டும் துடைத்துவிட்டவள் போகலாம் என்பது போல் தன் கணவனிடம் ஜாடை காட்ட ஒருவழியாய் அங்கிருந்து கிளம்பினர்.
வீட்டிற்கு வந்தும் சீதா மறுநாள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வரவேண்டும் என்றார்.
“என்னம்மா திடீர்ன்னு கோவிலுக்கு போகணும்ன்னு சொல்றீங்க??”
“உங்க கல்யாணத்துக்கு முன்னாடி போனது. கல்யாணம் முடிச்சு போகணும்ன்னு நினைச்சேன் ஆனா போக முடியலை”
“கோவிலுக்கு போகாததுனால தான் நமக்கு தேவையில்லாத மனக்கஷ்டம் வந்துசுச்சோன்னு இருக்கு. அதானால நாளைக்கு நாம கோவிலுக்கு போறோம், நீங்க ரெடியா இருங்க” என்றார் அவர்.
“கடையை என்ன செய்ய??”
“நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே, வாரத்துல ஒரு நாள் நாம லீவு விடுறது தானே. அப்புறம் என்ன” என்றுவிட்டார் அவர் மகனிடம்.
“என்ன சிமி இதெல்லாம் நாளைக்காச்சும் எங்காச்சும் வெளிய போகலாம்ன்னு நினைச்சேன்” என்றான் தனியே தன் மனைவியிடம்.
“இப்போ மட்டும் என்ன நாம நாளைக்கு வீட்டுலவா இருக்கப் போறோம். வெளிய தானே போறோம்”
“கோவிலுக்கு போறோம்”
“ஆமாகோவிலுக்கு போறோம்”
“இத்தனை நாளா என்னை ஹவுஸ் அரெஸ்ட்ல வைச்சிருந்தீங்க. இன்னைக்கு தான் கொஞ்சம் வெளிய போனோம். நாளைக்கு ஒருத்தரை பார்க்க போகலாம்ன்னு நினைச்சேன்”
“எதுவா இருந்தாலும் கோவிலுக்கு போயிட்டு வந்த பிறகு பார்த்துக்கலாம்” என்று அவள் முடித்துவிட பேச்சும் முடிந்தது.
மறுநாள் மூவருமாக கிளம்பி சஞ்சீவி மலைக்கு சென்றனர். இந்த மலைக்கும் நம் இதிகாசமான இராமாயணத்திற்கும் தொடர்புள்ளதாக நம்பப்படுகிறது. இராம, இலக்குவனுக்கும் இந்திரஜித்திற்குமான போரில் இந்திரஜித் செலுத்திய பிரம்மாஸ்திரத்திம் தாக்கியதன் விளைவால் இராமன், இலக்குவன் மற்றும் படையினர் மயங்கி விழுந்தனர்.
அவர்களை குணமாக்க சாம்பவானின் ஆலோசனையின் பேரில் இமயமலையில் உள்ள சஞ்சீவி மலையில் இருந்து மூலிகைகளை கொண்டு வரச் சென்ற அனுமனுக்கு அந்த மூலிகையை அடையாளம் காண இயலவில்லை.
ஆதலால் அவர் அம்மலையையே பெயர்த்து வந்தார். அதிலிருந்து விழுந்த ஒரு சிறு பகுதி தான் தற்போது இராஜபாளையத்தில் இருக்கும் அம்மலை என்பதாக நம்பப்படுகிறது.
அம்மலையில் நிறைய மூலிகை செடிகள், மருத்துவ குணம் கொண்ட மரங்கள் காணப்படுகிறது. அங்கு தான் சென்றிருந்தனர் உதிரனின் குடும்பத்தினர்.
“இங்க தான் கோவில் இருக்கா அத்தை??” என்றாள் சினமிகா.
“ஆமா சினா”
“நீ இங்க வந்திருக்கியா இதுக்கு முன்னாடி”
“இல்லை இப்போ தான் பார்க்கறேன்” என்று அவள் வாய் சொன்னாலும் மனமோ அந்த இடத்தை புதிதாய் பார்ப்பது போல் பார்க்கவில்லை.
முன்பே பார்த்தது போன்ற உணர்வையே அது கொடுத்தது. கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து முடித்த பின் சீதா அங்கேயே சற்று இளைப்பாறினார்.
“சிமி வர்றியா மேலே போயிட்டு வருவோம்” என்று அழைத்தான் உதிரன்.
“அத்தை இங்க தனியா விட்டு போகவா… உங்களுக்கு கால் வலிக்க போகுது வேணாம்” என்று மறுத்தாள்.
“எவ்வளவு நாளைக்கு கால் வலிக்கும், நடக்க நடக்கத்தானே சரியாகும், எனக்கு இப்போ ஒண்ணுமில்லை. நீ வா, அம்மா இங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று மனைவியிடம் சொன்னவன் “அம்மா நீங்க இருந்துப்பீங்க தானே” என்று சொல்ல “நீங்க போயிட்டு வாங்க, நான் இங்க இருக்கேன்” என்றுவிட்டார் அவரும்.
சினமிகாவை அழைத்துக் கொண்டு பக்கவாட்டில் சென்ற ஒரு கிளைப்பாதையில் அவன் செல்ல “உங்களுக்கு இங்க ரொம்ப பழக்கமா”
“ஹ்ம்ம் அடிக்கடி பிரண்ட்ஸ் கூட வருவேன்”
மேலே நடக்க நடக்க சினமிகாவின் கால்கள் பின்னிக்கொண்டது. கண்கள் அப்பாதையை அப்படியே வெறித்திருக்க ஒரு பாறையின் மறைவில் இருந்து எட்டிப்பார்த்தார் பைரவர்.
அவள் கனவில் கண்ட மலைப்பாதையும் அங்கு சுற்றி அவள் பார்த்த காட்சிகளும் அப்படியே இருக்க நடையை நிறுத்தியிருந்தாள் அவள்.
உதிரன் முன்னே தன் போக்கில் பேசிக்கொண்டே நடந்திருந்தவன் பின்னால் எந்த பதிலும் இல்லாது போக திரும்பி பார்த்தவன் சினமிகா சற்று தள்ளி நின்றுவிட்டது கண்டு அவளருகே சென்றான்.
“என்னாச்சு சிமி?? வா போகலாம்” என்று அவள் கைப்பிடித்துக் கொண்டான்.
“என்னங்க” என்றவள் அவன் கையை இறுக்கிப் பிடிக்க அப்போது தான் அவள் கை சில்லிட்டு இருப்பதை உணர்ந்தவன் “என்னம்மா??” என்றான்.
“இந்த இடம்”
“இந்த இடத்துக்கு என்ன??”
“நான் முன்னாடியே பார்த்திருக்கேன்”
“நீ தான் இங்க வந்ததேயில்லைன்னு சொன்னியே??”
“ஆமா வந்ததில்லை”
“அப்புறம் எப்படி??”
“பார்த்தேன் என்… என்னோட கனவுல??”
“அதெப்படி சாத்தியம்”
“உண்மையா தான் சொல்றேன் நான் பார்த்திருக்கேன், அங்க பாருங்க அந்த பாறைகிட்ட பைரவர்” என்று அவள் சுட்டிக்காட்டிய திசையில் யாருமே இல்லை.
உதிரன் திரும்பி தன் மனைவியை பார்க்க “இல்லை நான் பார்த்தேன் கொஞ்சம் முன்னாடி”
“சரி கண்டதும் யோசிச்சு குழம்பாத வா போவோம்…”
“எங்கே??”
“மேலே கூட்டிட்டு போய் காட்டுறேன். அங்க கொய்யா மரமெல்லாம் இருக்கு, கொய்யா பறிச்சு தர்றேன். பக்கத்துலவே குட்டியா ஒரு கோவில் கூட இருக்கு”
“என்ன அங்கயும் கோவிலா??”
“ஹ்ம்ம் சின்ன கோவில் தான் வா” என்றவன் அவளை அங்கு அழைத்துச் சென்றான்.
சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு அவர்கள் வேறு பாதையில் திரும்பி வர “நாம இந்த வழியில வரலையே??” என்றாள் சினமிகா.
“இது வேற வழி” என்றவன் முன்னே செல்ல கனவில் அவள் உதிரனை ரத்தவெள்ளத்தில் கண்ட இடம் கண்ணில்பட விரைந்து சென்று அவன் கையை பிடித்துக் கொண்டாள்.
“எதுக்கு தான் இப்படி பயப்படுறியோ??” என்று சிரித்தவன் அவளுடனே நடந்தான்.
மூவருமாக மலையைவிட்டு கீழே இறங்கி வந்தனர். “அம்மா வீட்டுக்கு தானே”
“இல்லை இன்னொரு கோவிலுக்கு போகணும்” என்றவர் வழியை டிரைவரிடம் சொல்ல “இன்னைக்கு நல்லா மாட்டிக்கிட்டேன் நானு” என்று புலம்பிக் கொண்டே வந்தான் உதிரன்.
“என்ன கோவில் அத்தை??”
“அதுவும் நமக்கு குல சாமி தான் சினா. நீ தான் பார்க்க போறியே” என்றவர் மேற்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை.
சில நிமிடத் தொலைவில் தான் அந்த கோவிலும் இருந்தது. வண்டியில் இருந்து இறங்கிய உதிரனும் சினமிகாவும் அந்த கோவிலைக் கண்டு திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
உதிரன் சுதாரித்தவன் “அம்மா இங்க எதுக்கு வந்திருக்கோம்??”
“சாமிக் கும்பிடத்தான்” என்ற அவர் பதிலில் கடுப்பாகியது அவனுக்கு.
“அம்மா!!” என்றான் இம்முறை அழுத்தமாய்.
“பைரவ சாமி எப்போ நாம கும்பிட ஆரம்பிச்சோம்??”
“ஏன் நாம பைரவ சாமி கும்பிடக் கூடாதா??” என்றார் அவர் பதில் கேள்வியாய்.
“நான் கும்பிட கூடாதுன்னு சொல்லலை. இதுவரைக்கும் நான் ஒரு தரம் இங்க வந்ததில்லையே, நீங்களும் பேசினதில்லையே” என்றான்.
“சாமி கும்பிட்டு வந்து சொல்றேன்” என்றவர் முன்னே செல்ல உதிரனும் சினமிகாவும் பின்னே சென்றனர்.
கோவில் பூசாரிக்கு சீதாவை முன்பே தெரிந்திருந்தது. பூஜை முடித்து ஒரு ஓரமாய் அவர்கள் வந்து அமர சீதாவின் கண்கள் யாரையோ எதிர்பார்த்தது.
அவர் சுற்றிமுற்றி பார்க்க “என்னத்தை தேடுறீங்க??”
“நான் எப்போ இங்க வந்தாலும் சரி அந்த பைரவரை நேர்ல பார்க்காம போக மாட்டேன்” என்றார்.
“அம்மா”
“சொல்லு உதிரா”
“இந்த கோவிலைப்பத்தி நீங்க…” என்று அவன் ஆரம்பிக்க “சொல்றேன்” என்றார் அவர்.
“எனக்கும் இந்த கோவிலைப்பத்தி தெரியாது. என் மாமியார் உடம்பு முடியாம படுத்திருக்கும் போது ஒரு முறை சொன்னாங்க. நமக்கு குல தெய்வம் ஒரு சாமியா இருந்தாலும் நாம பைரவரை கும்பிடுறதா நம்ம பரம்பரையில சத்தியம் செஞ்சிருக்கோம்”
“நான் இருந்த வரைக்கும் பைரவரை கும்பிடவே இல்லை. எனக்கு பெரிசா அந்த நம்பிக்கை இல்லை, ஆனா நம்ம குடும்பம் உடைஞ்சு போச்சு. நான் அவரை கும்பிடாதது தான் அதுக்கு காரணமா இருக்குமோன்னு தோணுது. நீயும் என் மகனும் ஒரு தரம் அந்த கோவிலுக்கு போயிட்டு வாங்கன்னு சொன்னாங்க”
“அதுக்கு பிறகு கொஞ்ச நாள்ல அவங்க இறந்திட்டாங்க. நாங்க அவங்க சொன்னதை மறந்திட்டோம். அப்போ தான் எனக்கு ஒரு கனவு வந்துச்சு” என்று அவர் நிறுத்த உதிரனின் கண்கள் தன்னைப்போல தன் மனைவியை ஏறிட்டது.
“என்ன கனவு அத்தை??”
“உங்க மாமா அப்போ தான் மில் ஆரம்பிச்சு இருந்தாங்க. அதுல ஏதோ விபத்து நடக்குற மாதிரி இருந்துச்சு. அங்க அந்த விபத்தை எனக்கு காமிச்சு கொடுத்தது அந்த பைரவ சாமி தான்”
“அந்த கனவு வந்ததுல இருந்து எனக்கு மனசே சரியில்லை. அவர்கிட்ட பேசி அழுது அவரையும் கூட்டிட்டு இந்த கோவிலுக்கு வந்தேன். எந்த அசம்பாவிதமும் நடக்கக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டு போனோம். அடுத்த வாரம் மில்லுல நடக்க இருந்த அந்த அசம்பாவிதத்துல இருந்து அவர் அதிர்ஷ்டவசமா தப்பிச்சார்”
“என்னம்மா சொல்றீங்க??”
“ஆமா உதிரா, நீ அப்போ கோயம்புத்தூர்ல படிச்சுட்டு இருந்த. உனக்கு இதெல்லாம் சொல்லி கலவரப்படுத்த வேண்டாம்ன்னு நாங்க எதுவும் சொல்லலை”
“அதுக்கு பிறகு தான் இந்த கோவிலுக்கு என்னால எப்போலாம் வர முடியுதோ வந்திடுவேன். உங்கப்பா சாகறதுக்கு முன்ன கூட கனவு வந்தது, ஆனா அப்போ என்னால கோவிலுக்கு வர முடியலை” என்று சொல்லும் போது கண்கள் கலங்கிப் போனது அவருக்கு.
சினமிகா அவரை சமாதானம் செய்தாள். “உங்க கல்யாணத்துக்கு முன்னாடி கூட ஒரு கனவு. பொண்ணு வீட்டுல இருந்து வீடு தேடி வந்து பொண்ணு கேட்குற மாதிரி. கொஞ்ச நாள்லயே சினாவோட அப்பா நம்ம வீட்டுக்கு வந்தாங்க”
“அம்மா நீங்க சொல்றது எல்லாம்…”
“உனக்கு நம்புற மாதிரி இருக்காது. ஆனா இதெல்லாம் நிஜம்” என்றவரின் கண்கள் தூரத்தில் வாலை ஆட்டிக்கொண்டு அவரைப் பார்த்து தலையசைத்த பைரவரின் மீது நின்றது இப்போது.

Advertisement