Advertisement

17
வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர் உதிரனும் சினமிகாவும். உதிரனுக்கு உதவிய ஷியாம் மருத்துமனையில் இருந்து அப்படியே கிளம்பியிருந்தான்.
வேலன் அழைத்து வந்திருந்த காரில் வந்து இறங்கியிருந்தனர் இருவரும். சீதாவை பொறுத்தவரை மகன் செத்து பிழைத்து வந்ததாகத் தான் நினைத்தார். தமிழிடம் சொல்லி திருஷ்டி கழித்துவிட்டு உள்ளே அழைக்கச் சொன்னார்.
அவர் சொன்னது போலவே தமிழும் செய்ய உள்ளே வந்தனர். சீதா ஒரு மூச்சு மகனை கட்டிக்கொண்டு அழுக தமிழும் வேலனும் தான் அவரை சமாதானம் செய்யும்படியாய் இருந்தது.
சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு பின்னர் வந்து பார்ப்பதாகச் சொல்லி வேலனும் தமிழும் கிளம்பிவிட்டிருந்தனர்.
மேகாவை வேறு வீட்டில் விட்டு வந்திருக்கிறோமே என்ற பதைபதைப்பு அவர்களுக்கு இருக்கவே செய்தது. இரவு மேகாவின் கணவனை அழைத்து விஷயத்தை அவரிடம் சொல்லி மேகாவுடன் தங்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார் வேலனும்.
பின்னர் நடந்ததை மருத்துமனையில் இருந்து கிளம்பும் முன் மேகாவின் கணவனிடம் சொல்லி தாங்கள் முடித்த வரை சீக்கிரம் வருவதாக கூறி வைத்திருந்தார். தமிழ் கிளம்பும் முன் வீட்டினருக்கு உணவை சமைத்து வைத்த பின்பே அங்கிருந்து கிளம்பியிருந்தார்.
“உதிரா ரெண்டு பேரும் போய் குளிச்சுட்டு வந்து சாமி கும்பிடுங்க…” என்று சொல்ல அவர்கள் அறைக்கு சென்றனர் உதிரனும் சினமிகாவும்.
மருத்துவமனையில் உதிரனை கண்டதும் கட்டிப்பிடித்து அழுதிருந்தவள் அதற்கு பின் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசியிருந்ததை அவளின் கணவன் உணர்ந்தே தானிருந்தான். 
பொம்மை போல தான் இருந்தாள். உதிரனை அழைத்துக் கொண்டு அவர்கள் மார்ச்சுவரிக்கு செல்லும் போது அவள் சொன்ன அந்த வார்த்தைகள் தான் அவன் காதில் இன்னமும் கேட்பது போலிருந்தது.
பின்னே அவனுக்கு அட்டாப்சி செய்வதாக சொன்னால் அவன் அதிரத்தானே செய்வான். சினமிகா உதிரனுடன் வந்து அந்த காவலர் முன் நின்றவள் “இவர் தான் என்னோட ஹஸ்பெண்ட்” என்று சொல்ல அதிர்ந்தவர் வேலனை பார்த்தார்.
அப்போது தான் அட்டாப்சி முடிந்து பாடி வந்திருந்தது. வேலன் உதிரனை பற்றி சொல்ல வந்த வேளை காவலர் மருத்துவரின் அருகில் நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்ததால் அவரால் நடந்ததை உடனே சொல்லியிருக்க முடியவில்லை.
அதற்குள் மகளே வந்து விஷயத்தை சொல்ல காவலரிடம் “ஆமா சார் இவங்க தான் எங்க மாப்பிள்ளை” என்றார் வேலனும்.
“என்ன சார் சொல்றீங்க, அடையாளம் எல்லாம் சொன்னீங்க??” என்றார் அவர்.
“என்ன நடந்துச்சுன்னு மாப்பிள்ளைக்கிட்ட கேட்டா தான் தெரியும்” என்றார் வேலன்.
“இங்க என்ன நடக்குது முதல்ல அதை எனக்கு சொல்லுங்க” என்றான் உதிரன் கடுப்பாக.
“உங்க வண்டி ஆக்ஸிடென்ட் ஆகி அதை ஓட்டிட்டு வந்தவர் ஸ்பாட் அவுட் சார்… வண்டியில இருந்த டாக்குமெண்ட்ஸ் வைச்சு உங்க வீட்டுக்கு நாங்க இன்பார்ம் பண்ணிட்டோம், வந்து அடையாளம் காட்டச் சொல்லி”
“இவங்களும் வண்டியில இருந்த டாக்குமெண்ட்ஸ், உங்க ஜெர்கின், வண்டி நம்பர் எல்லாம் பார்த்து அடையாளம் சொன்னாங்க. சோ நீங்க தான் செத்து போயிட்டீங்கன்னு நாங்க கன்பார்ம் பண்ணிட்டோம்” என்று அந்த காவலர் விளக்கம் சொல்ல சொல்ல தன் மனைவியை தான் பார்த்தான் உதிரன்.
‘கடவுளே இதில் இவ்வளவு நடந்திருக்கிறதா’ என்று எண்ணியவனுக்கு அய்யோவென்றிருந்தது. ஏற்கனவே கெட்ட கனவென்று நினைத்து பயந்திருந்தாள், அதை உறுதி செய்வது போல இப்படி நடந்திருக்கிறது.
மனதளவில் எந்தளவிற்கு அது அவளை பாதித்திருக்கும் என்று அவனால் உணர முடிந்தது. அவளை எப்படி சமாதானம் செய்யப் போகிறோம் என்று தான் யோசித்துக் கொண்டிருந்தான்.
“சார்… சார்…” என்று வெகு நேரமாய் காவலர் அழைப்பது விளங்க முயன்று தன் பார்வையை அவரிடம் செலுத்தினான்.
“சொல்லுங்க சார்…”
“என்னத்தை சொல்ல இனி இந்த பாடி யாரோடதுன்னு நீங்க தான் சார் சொல்லணும்” என்று அவர் கேட்க உதிரன் சொல்லவாரம்பித்தான்.
“சார் நான் சிவகாசி வரைக்கும் ஒரு வேலையா போயிருந்தான். திரும்பி வரும் போது ஸ்ரீவில்லிபுத்தூர்ல ரூட்ல தான் வந்தேன். அங்க ஒரு கஸ்டமர் பார்க்க வேண்டி இருந்துச்சு”
“அவரை பார்த்ததும் பைக் நிறுத்திட்டு அவர்கிட்ட பேச போயிட்டேன். வண்டியில இருந்த சாவியை எடுக்க மறந்திட்டேன். மேல போட்டிருந்த கோட் கூட வெயிலா இருந்ததால கழட்டி பெட்ரோல் டேங்க் மேல வைச்சிருந்தேன். அப்போ ஒருத்தன் அதை பார்த்திட்டு வண்டியை எடுத்துட்டு போய்ட்டான் சார்”
“பின்னாடியே விரட்டிட்டு தான் போனேன். அவன் வண்டியை வேகமாய் ஓட்டிட்டு போய்ட்டான் சார்…”
“என்ன சார் நீங்க இப்படி அஜாக்கிரதையா இருந்திருக்கீங்க…” என்று கடிந்தார் காவலர்.
“சார் எப்பவும் அப்படி மறக்க மாட்டேன் சார். இதோ பக்கத்துல தானே பேசிட்டு போய்டுவோம்ன்னு மறந்தாப்போல போயிட்டேன் சார். அது என்னோட தப்பு தான் என்று ஒத்துக் கொண்டான் அவன்…”
“இப்போ வந்து கேளுங்க மன்னிப்பு அது இதுன்னு. இனி செத்தவன் யாருன்னு வேற நாங்க கண்டுப்பிடிக்கணும் போலவே. இது வேற பெரிய தலைவலி ஆகப் போகுது…” என்று புலம்பினார் அந்த காவலர்.
“ஏன் சார் வண்டியை எடுத்திட்டு போனவனை உங்களுக்கு அடையாளம் தெரியுமா. இதுக்கு முன்னாடி அவன நீங்க வேற எங்கயாச்சும் பார்த்து இருக்கீங்களா??” என்று கேள்விகளை அடுக்கினார் அவர்.
“பார்த்ததில்லை சார்… நான் அவன் முகத்தை பார்க்கலை, அவன் வண்டியில ஏறினதும் என்னோட ஹெல்மெட் எடுத்து மாட்டிகிட்டான்”
“நான் பின்னாடி தான் அவனை பார்த்தேன். நல்லா ஹைட்டா இருந்தான். அவ்வளவு தான் ஞாபகம் இருக்கு சார்… நான் அவனைப் பிடிக்க பின்னாடியே விரட்டிட்டு போகும் போது தான் வண்டி ஒண்ணு இடிச்சு நான் ரோட்டுக்கு அந்த பக்கம் இருந்த செடிக்கு நடுவுல விழுந்திட்டேன்”
“விழுந்த அதிர்ச்சியில மயக்கமாகிட்டேன் சார்… நான் எழுந்து பார்க்கும் போது கால்ல நல்லா காயமா இருந்துச்சு. போனை தேடினேன் அது காணோம், மெதுவா எழுந்து வந்து ரோட்ல நிக்கவும் சார் வந்தார். ஹெல்ப் கேட்டேன் என்னை இங்க கூட்டிட்டு வந்தார். வர்ற வழியில போலீஸ் ஸ்டேஷன்ல வண்டியை காணோம்ன்னு கம்பிளைன்ட் பண்ணிட்டு தான் சார் வந்தோம்”
“எழுதி மட்டும் கொடுத்திட்டு வந்தோம், காலையில் வந்து கம்பிளைன்ட் காபி வாங்கிக்க சொன்னாங்க” என்று நடந்ததை அப்படியே சொல்லி முடித்தான் அவன்.
“ஏன் சார் இது வண்டியை எடுத்திட்டு போனவனோட பிளானா கூட இருக்கலாம்ல. பின்னாடி வேற ஆளை செட் பண்ணி உங்களை தொடர்ந்து ஓடவிடாம பண்ணிட்டு அவங்க எஸ்கேப் ஆகியிருக்கலாம்ல”
“வண்டி புது வண்டி மாதிரி இருந்துச்சு. அதை எடுத்திட்டு போய் வித்தா காசு கூட கிடைக்கும்ன்னு இப்படி செஞ்சாங்களோ என்னவோ” என்றார் காவலர்.
“சார் எனக்கு அப்படி ஒண்ணும் தெரியலையே”
“என்ன சார் கூடவே இருந்து நீங்க பார்த்த மாதிரி சொல்றீங்க” என்று காவலர் சொல்லவும் உதிரன் “எனக்கு அப்படி தோணலைன்னு தான் சொன்னேன் சார்… அப்படி இருக்கா இல்லையான்னு நீங்க தான் விசாரிச்சு சொல்லணும்” என்று முடித்தான்.
அதன் அவர்கள் கேட்ட கேள்விக்கு பொறுமையாகவே பதில் சொன்னான். ஷ்யாமை கூட விட்டு வைக்கவில்லை அவர் அவனிடமும் மாற்றி மாற்றி கேள்வி கேட்டார்.
“உங்களுக்கு எப்படி தெரியும். நீங்க ஏன் அவருக்கு ஹெல்ப் பண்ணனும்” இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் உதவும் எண்ணம் கொண்டவன் கூட ஓடியே போய் விடுவான்.
அப்படித்தானிருந்தது காவலர் கேட்ட கேள்வி. என்ன செய்வது அது அவரின் பணியாயிற்றே கேட்டுத்தான் ஆக வேண்டும். அவர் கடமையை அவர் செய்தார். அவர்கள் எப்போது கூப்பிட்டாலும் வர வேண்டும் என்று சொல்லி அனைவரின் எண்ணையும் வாங்கிக் கொண்டு தான் கிளம்பவே விட்டார் அவர்.
அதை எண்ணிக்கொண்டே அவன் கட்டிலில் அமர்ந்திருந்தான். சினமிகா குளியலறை புகுந்திருந்தாள். அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது குளிக்க வந்தவள் துணியை கூட கொண்டு செல்லவில்லை என்று.
படுக்கையறை கதவை அடைத்து தாழிட்டு வந்தவன் குளியலறை கதவை தட்ட தாழிடப்படாத கதவு திறந்துக் கொண்டது.
சினமிகா ஷவரை திறந்துவிட்டு அதனடியில் அப்படியே நின்றிருந்தாள். அழுது கொண்டிருந்தாளோ என்ற சந்தேகம் அவனுக்கிருந்தது.
தண்ணிரில் கண்ணீரும் சேர்ந்தே கரைந்து கொண்டது போல. “சிமி” என்று இவன் அழைக்க பதிலில்லை அவளிடம்.
உள்ளே சென்றவன் “சிமி” என்று இம்முறை சத்தமாய் அழைக்க கைகளால் முகத்தில் இருந்த தண்ணிரை விலக்கி அவனை பார்த்தாள்.
“என்ன பண்ணிட்டு இருக்கே நீ?? வா முதல்ல நீ குளிச்சது போதும்” என்றவன் அவளை நோக்கி கையை நீட்டினான்.
அவளோ அவன் கையை பற்றியவள் அவனை நோக்கி இழுத்து அவனையும் ஷவரடியில் நிற்கச் செய்திருந்தாள். அவளின் போக்கே அவனுக்கு பயம் கொடுத்தது.
‘எதுக்கு இப்படி இருக்கா??’ என்ற எண்ணம் தான் ஓடிக் கொண்டிருந்தது அவனுக்குள்.
“சிமி என்னம்மா பண்றே??”
அவளோ அவன் கையை விடாது பற்றிக்கொண்டு விழும் தண்ணீருக்கடியில் அமைதியாய் நின்றிருந்தாள். “சிமி போதும்” என்றவன் அவள் கையை அழுத்தமாய் பற்றி இழுக்க அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள் அவன் நகராதவாறு.
அவள் செயல்கள் அவனை மேலும் மேலும் அச்சம் கொள்ளவே செய்தது அவனுக்கு. சட்டென்று அவளை தன்னில் இருந்து விலக்கி இரு கையால் அவளை தூக்கிக் கொண்டான்.
வெளியில் வந்து அவளை நிற்க வைக்க வெகு நேரமாய் ஈரத்தில் நின்றவளின் உடல் நடுங்கியது. குளியலறையில் இருந்த கொடியிலிருந்த துவாலையை எடுத்தவன் அவளுக்கு துடைத்துவிட்டான்.
கப்போர்ட்டை திறந்து அவளுக்கு தேவையான துணியை எடுத்து வைத்தவன் “புடவையை மாத்து சிமி” என்றான்.
அவள் அப்படியே நிற்க அவனே ஈரப்புடவையை உருவி கீழே போட்டான். துவாலையை எடுத்து அவள் மேல் போர்த்திவிட்டு ஓங்கி அவள் கன்னத்தில் அறைய உணர்வு வந்தது அவளுக்கு.
“புடவையை கட்டு” என்று அவன் கட்டிலில் இருந்ததை சுட்டிக்காட்டிவிட்டு அவன் குளியலறை புகுந்துவிட்டான்.
பத்து நிமிடம் கழித்து வெளியே அவன் வந்திருந்த போது சினமிகா வேறு உடைக்கு மாறி கட்டிலில் படுத்திருந்தாள். அவனும் வேறு உடைக்கு மாறி அவளருகில் வந்து அமர்ந்தான்.
அதற்குள் வெளியில் இருந்து சீதா அவர்கள் இருவரையும் அழைக்க “சிமி வா வெளிய போகலாம்” என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு வந்தான்.
சீதா விளக்கேற்றி கடவுளின் முன்னே அமர்ந்திருந்தார். “ரெண்டு பேரும் உள்ள வந்து சாமி கும்பிடுங்க. போக கூடாத இடத்துக்கு போயிட்டு வந்திருக்கீங்க. இன்னையோட உங்களுக்கு இருந்த எல்லா கஷ்டமும் போய்டணும்” என்றார் அவர்.
சீதா சொன்னதை கேட்டு கடவுளின் முன்னே நின்றிருந்தனர் இருவரும். சினமிகாவிற்கு முதல் நாளிருந்த திடமும் தைரியமும் ஏனோ அப்போது இல்லை.
கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் பொழிந்துக் கொண்டிருக்க அவள் கண் மூடி நின்றிருந்தாள். மற்ற இருவரும் கூட கண் மூடி வேண்டுதலில் இருக்க அவள் கண்ணீரை காணவில்லை.
மெல்லிய விசும்பலில் தான் சட்டென்று விழித்தனர் சீதாவும், உதிரனும். “சிமி எதுக்கு அழறே??” என்றான் உதிரன்.
“உதிரா விடு அவ மனசு என்ன பாடு பட்டுச்சோ அவ அழட்டும். நேத்து கூட அவ அழவே இல்லை, நான் கூட என்னடா இவ இவ்வளவு தைரியமா இருக்கான்னு நினைச்சேன்”
“எனக்கு ஆறுதல் சொல்லிட்டு அவ துக்கத்தை மனசுக்குள்ளவே அடக்கிட்டு இருந்திருக்கா போல. நீ ரூமுக்கு கூட்டிட்டு போ. நான் சாப்பாடை அங்கவே எடுத்திட்டு வர்றேன்” என்றார் அவர்.
“அம்மா எங்களுக்கு சாப்பாடு வேணாம் இப்போ. வேணும்ன்னா நானே வந்து எடுத்துக்கறேன்” என்றவன் சினமிகாவை அழைத்துக் கொண்டு மீண்டும் அறைக்குள் சென்றான்.
கதவை அடைத்துவிட்டு அவளருகே மண்டியிட்டு அமர்ந்தான் அவன். “சிமி எதாச்சும் பேசுடி, ரொம்ப பயமா இருக்கு. நீ இப்படி இருக்கறதை பார்த்தா” என்றான் அவன்.
நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் “என்ன பேச??”
“இப்படி என்னவோ போல இருக்கியே என்னால உன்னை இப்படி பார்க்க முடியலை சிமி. மத்தவங்களுக்கு வேணா தெரியாம இருக்கலாம் ஆனா எனக்கு தெரியும் நீ எவ்வளவு பயந்திருப்பேன்னு” என்றான் அவன்.
“நான் பயந்தேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்??”
“நேத்து காலையில உன்னோட கனவைப் பத்தி நீ சொன்னியே. அதெல்லாம் எனக்கு ஞாபகமிருக்கு சிமி”
“கடைசில நான் சொன்னது தான் நடந்திருக்கு பாரு. உன்னைவிட்டு எங்கயும் போக மாட்டேன்னு சொன்னேன்ல” என்றான் அவன்.
“நீங்க என்னைவிட்டு போக மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்” என்றவளின் பதிலில் நிமிர்ந்து தன் மனையாளை பார்த்தான் அவன் குழப்பமாய்.
“அப்புறம் எதுக்கு பயந்து அழுதே??”
“நான் பயந்தேன்னு யாரு சொன்னது??”
“சிமி”
“அந்த போலீஸ் சொன்னப்போ உங்களுக்கு என்னாச்சோன்னு எனக்கு கவலை இருந்துச்சு. ஆனா உங்க உயிருக்கு எதுவும் ஆகி இருக்காது. நீங்க என்னைவிட்டு போக மாட்டீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு”
“என் மனசுக்கு தோணிச்சு அப்படி ஒண்ணு நடக்கலைன்னு. ஆனா சந்தர்ப்பம் எல்லாம் எதுவோ நடந்திடுச்சுன்னு சொல்லுது. என் முன்னாடி வந்து அந்த போலீஸ் நிக்கறார்”
“உங்க வண்டி நம்பரை சொல்றார் அது யாரோடதுன்னு கேட்கறார். வண்டியில போனது யாருன்னு கேட்கறார். வண்டியில போனவருக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சுன்னு சொல்றார். அந்த நேரத்துல நான் என்ன செய்ய முடியும். இல்லை அது அவரில்லைன்னு சொல்லவா முடியும்”
“என்னோட உணர்வுக்கு தெரிஞ்சதை வெளிய சொன்னா யாரும் நம்புவாங்களா… சரி ஆஸ்பிட்டல் போய் பாடியை பார்த்தா அடையாளம் காட்டலாம்ன்னு நம்பிக்கையோட போனா, அங்க வண்டி டாக்குமெண்ட் முதக்கொண்டு ரத்தக்கறையோட இருக்க உங்க ஜெர்கின் வரை எடுத்து காட்டறாங்க”
“ஆக்ஸிடென்ட் ஆனா வண்டியோட போட்டோவும் காட்டுறாங்க. நான் என்ன சொல்ல சொல்லுங்க நான் என்ன சொல்ல”
அவள் சொல்லச்சொல்ல அவனுக்கு என்னவோ போலானது. எழுந்து அவளருகில் அமர்ந்துக் கொண்டான். “போலீஸ் பாடியை அட்டாப்சி பண்ணதுக்கு அப்புறம் கொடுக்கறோம் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டார்”
“மார்ச்சுவரி வாசல்லவே உட்கார்ந்திருந்தேன். அவருக்கு எதுவும் ஆகலைன்னு கத்தி சொல்லணும் போல இருந்துச்சு எனக்கு. நான் அப்படி சொல்லியிருந்தா எல்லாரும் எனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சுன்னு சொல்லி இருப்பாங்கல”
“என்னால முடியலைங்க நரகம் அந்த நொடி. ஒவ்வொரு நிமிஷமும் நீங்க எங்கன்னு யோசிச்சு யோசிச்சு நகர்ந்த அந்த பொழுது தான் எனக்கு பைத்தியமே பிடிச்ச மாதிரி இருந்துச்சு” என்று சொல்லி அவள் அழவும் அவளை இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டான் அவன்.
“சிமி சாரிடா”

“இதுல உங்க தப்பு என்ன இருக்கு?? இதெல்லாம் அனுபவிக்கணும்ன்னு என் தலையெழுத்து போல” என்றவளின் அழுகை ஓயவில்லை.
“சிமி ப்ளீஸ்…”
“அந்த பைரவர் என்னை கைவிடலை தெரியுமா??” என்றவள் சட்டென்று எழுந்து அவன் கண்ணை பார்த்து சொன்னாள்.
“என்ன?? என்ன சொன்னே சிமி?? பைரவரா?? உன் கனவுல வர்ற அந்த நா…” என்றவன் நிறுத்திவிட்டு “பைரவரா??” என்றான்.
“ஹ்ம்ம் ஆமா அவர் தான்…”
“என்ன சொல்றே நீ?? புரியற மாதிரி சொல்லு சிமி…”
“என் பிரார்த்தனை முழுக்க நீங்க என் கண்ணுல படணும்ன்னு அந்த பைரவரை நினைச்சு தான் நான் வேண்டிட்டே இருந்தேன்”
“அப்போ தான் உங்களை அங்க பார்த்தேன். உங்களை பார்க்கறதுக்கு முன்னாடி பைரவரையும் அங்க பார்த்தேன். இங்க எப்படி கனவில பார்த்த பைரவர்ன்னு நினைச்சு நான் எழுந்து நின்னப்போ நீங்க இருந்த திசையை நோக்கி ஓடிவந்தார் அவர்” என்று முடித்தாள்.
உதிரனுக்கு அவள் சொல்வதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவ்வளவு நேரம் அனைத்தும் சொல்லி முடித்திருந்தவளின் முகத்தில் இப்போது லேசாய் ஒரு பயமிருந்தது. 
“சிமி என்னாச்சு??” என்றான் அவள் முகம் பார்த்து.
“அத்தை சொன்னாங்க திருஷ்டி கழிஞ்சு போச்சு, இனி எதுவும் நடக்காதுன்னு. எனக்கென்னவோ இனிமே தான் ஏதோ நடக்கப் போகுதுன்னு தோணுது” என்றவள் அவன் கழுத்தில் தன் கையை மாலையாக்கி அவன் தோளில் முகம் புதைத்தாள். 
அடுத்த நிகழப் போவதை கண்டு சினமிகா சினந்தாளா அல்லது சிதைந்தாளா எதிர்த்து சீறிப்பாய்வாளா என்பதை பார்ப்போம்.

Advertisement