Advertisement

மது கடை எரிப்பிற்கு பிறகு  தில்லையூர் கிராமம் கொஞ்சம் மாறி இருந்தது. தினமும் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது, சில திருந்தாத குடிமகன்கள் வெளியூர் சென்று வாங்கி வந்தால் வீட்டில் மாட்டி கொண்டார்கள். அந்த ஏரியாவில் நிறைய டிப்பர் வகையான லாரிகள் அதிகம் ஓடுவதால் நிறைய செக் போஸ்ட் இருக்கும், குடித்து விட்டு வந்தால் போலீஸிடம் நன்றாக மாட்டி கொண்டார்கள். 
ராமசாமியிடம் கொஞ்சம் மாற்றம் தெரிந்தது… யாரையும் திட்டாமல் அமைதியாக இருப்பதே சகுந்தலாவிற்கு ஆச்சரியமாய் இருந்தது.. அவருக்கும் மனைவியின் அருமை புரிய தொடங்கியது.
ரகு பல நேரம் தூங்கி கொண்டிருந்தாலும், இப்போது தன் மகளிற்கு சிறு சிறு உதவிகள் செய்ய ஆரம்பித்தார். தோட்டத்திற்கு தண்ணீர் விடுவது, காய்கள் நறுக்குவது என பிள்ளைகளுடன் நேரம் செலவழித்தார். வேலைக்கு கூட போவதாய் சொன்னார் ஆனால் கதிரும் மினியும் விடவில்லை.. 
நதியாவும் அவளது அன்னை மீராவும் மினியின் தந்தையை பார்க்க வந்தார்கள். மினி அப்போது தான் தன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தாள். இவர்களை பார்த்ததும்,
“வாங்க அத்தை.. வாடி “ என்று உள்ளே அழைத்து கொண்டு சென்றாள். அவளிடம் பழங்களை கொண்ட பையை கொடித்த மீரா, “அப்பாவுக்கு குடுமா.. முன்னாடியே வந்தோம்.. அப்பா தூங்கிட்டு இருந்தார்.”
“ஆமாம் அத்தை.. நிறைய மருந்து எடுத்துக்கிறார் அதனால் தூக்கம் வருதோ என்னமோ..”
“ம்ம்ம் ஆமாம் மினி.. கதிர் எங்க ? “
“அவன் வேலை முடிஞ்சு வரை நேரமாகும்.. இந்த வாரத்தோட வேலை விட்டு நிற்க சொல்லிட்டேன் அத்தை.. ஒரு வாரத்தில் ஸ்கூல் ஆரம்பிக்கும் அது வரைக்கும் அவன் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்”
“ஆமாம்மா.. அப்பாவை நல்லா பார்த்துக்கோ.. என்ன உதவி வேணுமோ.. இந்த அத்தை இருக்கிறேன் மறந்திடாத.. மாமா வந்திடுவார்.. நான் கிளம்புறேன்.. நதி நீ வரியா இல்லை அப்புறமா வரியா ?”
“நான் கொஞ்ச நேரம் கழிச்சி வரேன் மா.. “
“சரி இருட்டிடுச்சு பார்த்து வா நதி.. வரேன் மினி” 
மீரா சென்றதும் சிறிது நேரம் இருவரும் கதை பேசி விட்டு நதியா புறப்படும் போது அங்கு ஓவியன் பதற்றமாக வந்தான். அவனை கண்ட நதியா முகத்தை திருப்பி கொண்டாள். மினி இதற்கு முன் ஓவியனிடம் அவ்வளவாக பேசியதில்லை ஆனாலும் “வாங்க அண்ணா..” என கூறினாள்.
“மினி ஒரு உதவி கேட்டு வந்திருக்கேன்” 
“சொல்லுங்க அண்ணா” 
“நதியா இங்கயே இருக்கட்டும் நைட்.. “
மினி பதிலளிக்கும் முன் “ஏன்… நான் தங்கனும் ? நான் எங்க வீட்டிற்கு கிளம்புறேன்”
“நதி மாமாவிற்கு சின்ன ஆக்ஸிடன்ட் ஆச்சு.. எங்க அம்மாவையும் உங்க அம்மாவையும் ஹாஸ்பிட்டல் கிளம்ப சொல்லியிருக்கேன். நீ தனியா எங்கேயும் தங்க வேண்டாம்.. மினி கொஞ்சம் பார்த்துக்கோ மா “ என கூறிவிட்டு சென்றான்.
நதியா ரொம்ப பயந்து விட்டாள். வெகு நேரம் அழுது கரைந்தவளை மினியும் ரகுவும் தேற்ற முயன்று தோற்றார்கள். 
உண்மையில் கண்ணனிற்கு ஆக்ஸிடன்ட் எல்லாம் ஆகவில்லை.. நதியாவிற்காக பொய் சொன்னான் ஓவியன். தனது வயலில் வெகு நேரம் வரை நின்றார், இருட்டிய பிறகே தன் வீட்டிற்கு கிளம்பினார். நடந்து வரும் வழியில் சர்ப்பம் ஒன்று வரப்பில் இருப்பதை அவர் கவனிக்காமல் மிதித்து விட, அது அவர் காலில் தீண்டிவிட்டது. தன் காலில் ஏதோ கடித்தது போன்று உணர்ந்ததால், தன் போன் எடுத்து டார்ச் ஒலியில் நல்ல பாம்பை பார்த்ததும் பதற்றமானார். தன் துண்டை கொண்டு காலில் இருக்கமாக கட்டியவர், உடனே ஓவியநுக்கு அழைத்தார். மெதுவாக நடந்து சென்று மெயின் ரோட்டில் அமர்ந்து கொண்டார். ஏனென்றால் பாம்பு கடித்தால் நடக்கவோ ஓடவோ கூடாது. அப்படியே படுக்க வேண்டும். உடலில் அசைவு இருந்து, ரத்த ஓட்டம் அதிகரித்தால், விஷம் உடல் முழுக்க வேகமாகப் பரவிவிடும்.
விஷயம் அறிந்த ஓவியன் வேகமாக வந்து தன் மாமாவை அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சேர்த்தான். பிறகு தன் தந்தைக்கு அழைத்தான் “சொல்லுடா எங்க இருக்க? “
“அப்பா.. கண்ணன் மாமாவை பாம்பு கடிச்சிடுச்சிப்பா.. “
“ஐய்யோ என்னடா சொல்ற ?”
“ஆமாம் பா.. அம்மாவையும் அத்தையயும் கிளம்ப சொல்லிட்டு நீங்க முதலில் வாங்க.. நான் வந்து அவங்க 2 பேரையும் கூட்டிட்டு வரேன் “
“சரிப்பா “ என உடனே கிளம்பி விட்டார்.
மீராவும் ஹாஸ்பிட்டலில் அழுது கொண்டு தான் இருந்தார். கண்ணன் மயக்கத்தில் இருந்ததால் எல்லாருக்கும் சற்று பயமாக இருந்தது. 
நல்ல பாம்பிலிருந்து வரும் நியூரோடாக்ஸின் (Neurotoxin) என்ற விஷம். இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மிகவும் ஆபத்தானது. ஆனால் 15 நிமிடத்தில் மருத்துவமனை வந்து விஷமுறிவு மருந்து கொடுத்துவிட்டதால் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் கூறினார்கள். 
இரவு முழுதும் தூங்காமல் விழித்திருந்தாள் நதியா, தன் தந்தையை நினைத்து கவலையுடன் இருந்தாள். காலையில் அங்கு வந்த ஓவியன், அவளை கிளப்பி அவனது வண்டியில் மருத்துவமணை கூட்டி சென்றான். போகும் வழியில் “நதியா மாமாவிற்கு வபத்தில்லை.. பாம்பு கடிச்சிடுச்சு.. “
“ஐய்யோ.. அப்பா..” என அழ ஆரம்பித்தாள்
“ஷ்ஷ்ஷ்.. அழாதே நதி.. இப்போ பரவாயில்லை.. நைட் தான் மயக்கத்தில் இருந்தார். இப்ப முழிச்சிட்டார். ரொம்ப பயந்திடுவனு தான் நைட் பொய் சொல்லிட்டேன் சாரி நதி”
“ம்ம்ம் “
“கவலை படாதேடி மாமாவிற்கு ஒன்னும் இல்லை,,, “
“ம்ம்ம் “
“இப்ப மட்டுமில்ல எப்பவும் உன் கஷ்டத்தில் நான் துணை நிற்பேன். அதை மட்டும் மனதில் வை.. எனக்கு எல்லாமே நீங்க தான் “
“ம்ம்ம்ம் “ அவள் சோகத்தில் ஓவியன் கூறிய அனைத்திற்கும் “ம்ம்ம் “ சொல்லி கொண்டே வந்தாள். நன்றாக கவனித்து இருந்தால் அவன் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் புரிந்திருக்கும்.. அது பின் நாட்களில் வரும் மன கஷ்டம் வராமல் காத்திருக்கும். 
நதியா சென்று தன் தந்தையை பார்த்து விட்டு வந்தாள், சிறிது நேரம் கழித்து, கதிரும் மினியும் வந்து பார்த்து விட்டு சென்றார்கள். கண்ணன் இப்பொழுது நன்றாக இருக்கிறார் என்று கூறிய மருத்துவர்கள் 5 நாள் கழித்து வீட்டிற்கு செல்லலாம் என்று கூறியதும் அனைவரும் நிம்மதி ஆனார்கள். மீரா மட்டும் மருத்துவமநையில் இருக்க, மற்றவர்கள் வீட்டிற்கு புறப்பட்டார்கள்.
******************************************************* 
தேவ் காலேஜ் ஹாஸ்டல் சென்றான், அவன் ரூம் மேட் தீபக் ஏற்கனவே வந்திருந்தான்..
தீபக், “மச்சி… எப்படி டா இருக்க? “ என்று கட்டிக்கொண்டான்
“நல்லா இருக்கேன் டா.. அப்புறம் லீவ் எப்படி போச்சு.. “
“ஏதோ போச்சு டா.. உனக்கு “
“ம்ம்ம் நல்லா போச்சு.. சரி வா காண்டீன்  போய் டீ குடிச்சிட்டு வரலாம்“
இருவரும் காண்டீன்  சென்று டீயும் வடையும் வாங்கி சாப்பிட்டு கொண்டே அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்.
தீபக், “டேய் ஊருக்கு போனால் ஒரு போன் அட்டன் பண்ண மாட்டியா”
தேவ், “அடிங்க நாயே.. நான் தானே டா உனக்கு வார வாரம் போன் பண்ணினேன்.. நீ எப்ப பண்ணின ?”
“மடையா.. நான் என் போன் காலை பத்தி சொல்லல நிஷா பத்தி சொல்றேன்”
“அவ எதுக்கு எனக்கு போன் பண்ணனும் ? தேவையில்லாமல் சும்மா இந்த கடலை போடறது எல்லாம் எனக்கு பிடிக்காது.. “
“டேய் அந்த மாதிரி அழகான பொண்ணெல்லாம் நம்ம கூட படிக்கிறதே நமக்கு பெருமை, அவளா வந்து பேசுறா நீ இப்படி சொதப்புறியே டா”
“அட போடா..  வா போய் ஒரு தூக்கத்தை போடுவோம்.. நாளையிலிருந்து க்ளாஸ் ஸ்டார்ட் ஆகிடும் “
“ஹம்ம்ம்.. நீ சிக்க மாட்டடா.. போகலாம் வா.. “
இவர்கள் தங்கள் அறைக்கு செல்லும் வழியில் அவர்களுக்காக காத்திருந்தாள் நிஷா.
“ஹாய் தீபக், ஹாய் தேவ்வ்வ்வ் .. எப்படி இருக்க?” என்று அணைக்க வந்தவளை ஒரு கை குலுக்கோடு நிறுத்தி கொண்டான் தேவ். 
“நல்லா இருக்கேன் நிஷா.. நீ என்ன இந்த பக்கம்.. நாளைக்கு தான் க்ளாஸ் ஸ்டார்ட் ஆகுது, நீ வீட்டிலிருந்து தானே வர .. “
“உன்னை பார்க்க தான் வந்தேன் தேவ்.. நீ இன்னக்கு ஹாஸ்டல் வருவதாய் தகவல் கிடைச்சது… “ தேவ் திரும்பி தீபக்கை முறைத்தான்.
“என்ன ஏன் பார்க்கனும் நிஷா.. நானும் 2 வருஷமாக பார்த்துகிட்டு இருக்கேன் நீ பண்றது சரியில்லை.. சும்மா என் நம்பருக்கு கால் பண்ணாத..  நீ என் க்ளாஸ் மேட் அவ்வளவு தான் நமக்குள் இருக்கும் உறவு.. இப்படி தேவையில்லாமல் இந்த வேலையெல்லாம் பார்க்காத.. எனக்கு பிடிக்கலை.. “
“தேவ்… “
“ப்ளீஸ் நிஷா.. என்ன புரிஞ்சுக்கோ.. என்ன ஹர்ட் பண்ண வைக்காத.. போ முதலில் இங்கிருந்து.. “
நிஷா தேவை முறைத்து கொண்டே தன் காரை எடுத்து கொண்டு சென்று விட்டாள்.
அவள் சென்றதும் ,” தீபக் நாயே.. நீ தான் இந்த தகவல் எல்லாம் சொல்லுறதா? நில்லுடா.” அவன் ஓடிக்கொண்டே “போடா.. உனக்கு எல்லாம் நல்லது பண்ண நினைச்சா இப்படி தான் அடிக்க வருவியா ?”
“நீ தூங்க வருவல்ல, அப்ப பார்த்துக்கிறேன்டா உன்னை” என சென்று விட்டான்.
இரவு பயத்துடன் ரூமிற்கு வந்த தீபக்கை நன்றாக சாத்தினான் தேவ்.. பிறகு மினியை பற்றி கூறியவன் “ப்ளீஸ் தீபக் இனி என்ன பத்தி அவ கிட்ட பேசாதே.. அவள் போன் பண்ணால் கூட நீ பேச வேண்டாம். ரொம்ப தொல்லை பண்ணினால் எனக்கு ஆள் இருக்குனு சொல்லிடு “   
“சரி டா.. ஆனால் இத்தனை நாள் நீ லவ் பண்ணுற மாதிரி ஒரு அறிகுறியும் எனக்கு தெரியலையே டா என் கிட்டயே பொய் சொல்றியா ?”
“என்ன அறிகுறி உனக்கு தெரியலை ?”
“ நீ நல்லா சாப்பிடுற.. குறட்டை விட்டு 10 மணி தூங்குற.. முக்கியமா போன் பேசறதே இல்லை.. வெளிய ஊர் சுத்தல..எப்படி நான் நம்புவேன்”
“அடிங்க நாயே படம் பார்த்து ரொம்ப கிட்டு போயிட்ட நீ.. என் ஆளோட போன் நம்பர் கூட என் கிட்ட இல்லை… என் நம்பர் அவள் கிட்ட குடுத்துட்டு வந்திருக்கேன் எதாவது தேவைனா கூப்பிடுவா.. அது மாதிரி நான் ஊருக்கு போனால் நேரில் பார்ப்பேன்.. அவ்வளவு தான்.. நாங்க கொஞ்சம் வித்தியாசமானவங்க டா.. உனக்கு அதெல்லாம் புரியாது..”
“ம்ம்ம்ம்… என்ன காதலோ.. “ என்றதும் தீபக்கின் போன் அலறியது, எடுத்து பார்த்தால் நிஷா தான் அழைத்தாள். 
“டேய் அவ தான்டா.. “
“சரி நீ பேசிட்டு படுடா.. நான் தூங்க போறேன். குட் நைட் “ என்று படுத்து கொண்டான் தேவ்.
“அடப்பாவி டேய் டேய் அவ உன்ன தான் டா கேட்பாள்
தேவ் பதிலளிக்க வில்லை. போனும் கட்டானதால் “அப்பாடி” என்று பெருமூச்சி விட்டான் தீபக்.. மீண்டும் கால் வந்ததும் கடுப்பானவன் போனை எடுத்து “ஹலோ “
“என்ன தீபக் என் கால் நீயும் எடுக்க மாட்டேங்குற “
“அப்படியில்ல நிஷா.. நான் படுத்துட்டேன்.. “
“அப்படியா தேவ் இருந்தா கொஞ்சம் கூப்பிடேன்.. நான் அவன் நம்பருக்கு கூப்பிட்டேன் ஸ்விட்சுடு ஆப் ஆகிருக்கு”
“தேவ் எப்பவோ தூங்கிட்டான் மா.. அவசரமா எழுப்பனுமா ?”
“இல்லை வேண்டாம்.. நான் கிளாஸில் பார்த்துக்கிறேன்” என்று வைத்து விட்டாள்.
தேவ் கண்ணை திறவாமல் “தேங்க்ஸ் டா மச்சான்” என கூறினான்.
“போடா டேய் “ என்று தலையணையை தூக்கி அவன் மேல் வீசி விட்டு தூங்க சென்றான்.
அடுத்த நாள் க்ளாஸ் முடிந்ததும் தேவ் முன்னே வந்து நின்றாள் நிஷா.. 
தேவ் கோபமாக அவளை முறைத்து கொண்டிருந்தான். ஆனாலும் அவள் அதற்கெல்லாம் கவலை படவில்லை.
“தேவ் ப்ளீஸ் நில்லு ..”
“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா.. க்ளாஸ் முன்னாடி சீன் க்ரியேட் பண்ணாத”
“உன் கிட்ட தனியா பேசனும்.. சாயங்காலம் 6 மணிக்கு பக்கத்தில் இருக்கும் பார்க் வரியா ப்ளீஸ்”
“முடியாது “
“நான் என்ன சொல்ல வரேன்னு கேட்க மாட்டியா?”
“அவசியம் இல்லை நிஷா”
“நீ வரலை.. நேரா உன் ரூமுக்கு வந்திடுவேன்”
“ஏய்!!! “
“அப்ப வரேன்னு சொல்லு”
“வந்து தொலையுறேன்”
“தேங்க்ஸ் தேவ்வ்வ் “
— மின்னுவாள்..

Advertisement