Advertisement

கதிர் தன் மிதி வண்டியை வேகமாக ஓட்டி கொண்டு வீட்டிற்கு வந்தான். உள்ளே வந்தவன் தன் அக்காவிடம் , “ அக்கா அப்ளிகேஷன் அனுப்பிட்டேன்.. கன்பர்மேஷன் வந்ததும் ஒரு தடவை நேரில் போய் பீஸ் கட்டி விட்டு புக்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரலாம்”
மினிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தந்தை செய்ய வேண்டியதை தன் தம்பி செய்திருக்கிறான், இவன் கூட பிறந்தது நம் பாக்கியம் என நினைத்தாள்.
“சரி டா சாப்பிட வா”
“குளிச்சிட்டு வரேன் கா”
அவன் குளித்து விட்டு வந்ததும் கதிரும் மினியும் சாப்பிட்டனர். கதிர், “இவர் எப்ப வந்தார்?” என திண்ணையில் படுத்திருக்கும் ரகுவை பார்த்து கேட்டான்.
“அதை ஏன் டா கேக்குற “ என நடந்ததை கூறினாள்.
“இந்த ஆள் திருந்த மாட்டான்.. நம்ம உயிரை தான் வாங்குவான்”
“கதிரு அப்பாவ இப்படியெல்லாம் மரியாதை இல்லாமல் பேசாத”
“அப்பாவா நடந்து கிட்டா மரியாதை தானாக வரும்”
“சரி விடு.. நாளைக்கு என்ன சமைச்சி தரட்டும் மதிய சாப்பாட்டுக்கு”
“சுண்டைக்காய் குழம்பு கா.. “
“சரி தூங்கு போ “
அவன் சென்று படுத்ததும், சிறிது நேரம் தோட்டத்தில்  அமர்ந்திருந்தவள், நேரமாவதை உணர்ந்து  உறங்க சென்றாள்.
****************************************************** 
மாலை வேளையில் பெரிய பண்ணை எங்கு செல்கிறார் என்று அவர் பின் சென்று அவர் அறியா வண்ணம் ஓவியன் வண்டியில் தொடர்ந்தான். தன் தோப்பு வீட்டிற்கு தான் சென்றார். அங்கு ஒரு பெண் ஏற்கனவே இவருக்காக காத்து கொண்டு இருந்தாள். இவரை பார்த்ததும் வாயெல்லாம் பல்லாக ஏதோ பேசி கொண்டு உள்ளே சென்றனர். ஒரு மாமரத்தின் பின் நின்று இதை அனைத்தும் பார்த்தவன் , தன் போனில் இருவரையும் ஒரு போட்டோ மட்டும் எடுத்து கொண்டு சென்று விட்டான். அவன் நேரே சென்றது ஓவியன் வீட்டிற்கு தான். அவனுக்கு கட்டுக்கடங்காத கோவம் வந்தது. 
அந்த போட்டோவை காட்டி , “ஓவி எதாவது பண்ணணும் டா இவர.. அடிச்சி காலை உடைக்கலாமா ?”
“அதுக்கு முன்னாடி நாம சில விஷயம் பண்ணணும் டா”
“நம்ம ஊர் மாரியம்மன் கோவில் பக்கத்தில் டாஸ்மாக் (tasmac) இருக்கு அதை முதலில் தூக்கனும் டா.. அங்க இருந்து தான் உங்க அப்பாவிற்கு தினமும் பாட்டில் போகுது.. அவருக்கு மட்டுமில்ல ஊரில் உள்ள பாதி பேர் அதால் தான் கெட்டு போகுது.. “
“இத்தனை நாள் ஏன்டா சும்மா இருந்தீங்க “
“டேய் எத்தனை தடவ கம்ப்ளைன்ட் குடுத்தாலும் உங்க அப்பா காசு குடுத்து அமுக்கிடறாரு டா”
“ முதலில் எங்க அப்பாவை வீட்ட விட்டு வெளியில் வராத மாதிரி பண்ணணும் அடுத்து அந்த கடையை ஒழிக்கனும்”
“ஓவி, நான் சொல்லுற மாதிரி செய் “ என சில விஷயங்களை கூறினான்.
“சூப்பர் டா.. பக்காவா பண்ணிடலாம் “
“ இன்னும் 2 வாரத்தில் கிளம்பிடுவேன் டா. அதுக்குள்ள இந்த பிரச்சனையை  தீர்க்கனும் “
“சரி டா.. நாளைக்கு பார்ப்போம்” என வீட்டிற்குள் ஓவியன் நுழைந்தான் 
அவன் தந்தை அன்பழகன் “ அப்படி என்ன தான் டா 2 பேரும் ரகசியம் பேசுவீங்க ? அவன் வீட்டுக்கு உள்ள கூட வராமல் உன் கூட பேசிட்டு ஓடுறான்”
“அதாப்பா.. மாமாவிற்கு அன்பும் இல்லை அழகும் இல்லை ஆனால் எப்படி அன்பழகன் பேர் வச்சாங்கனு கேட்டான், அதான் சந்தேகத்தை தீர்த்திட்டு வரேன்”
“அடிங்க எடுபட்ட நாயே.. வாய் கொழுப்பு கூடி போச்சு.. “ என அவர் தடி எடுக்க போக, இவன் சமையல் கட்டிற்கு ஓடி விட்டான்.
************************************************** 
தேவ் வீட்டிற்கு போகும் போது எப்பொழுதும் போல் மினியின் வீடு இருக்கும் தெரு வழியாக சென்றான்.  வேறு வழி இருந்தாலும் அவன் இவ்வழியில் தான் வருவான். நேற்றிலிருந்து அவன் மனதே சரியில்லாமல் இருந்தான். அவளை காணவில்லை , அவள் வீட்டை சுற்றி கொண்டு செல்ல, பின் வாசலில் இருக்கும் மருதாணி செடியை பார்த்ததும் மனதிற்கு இதமாய் இருக்க, அப்படியே தன் வீட்டிற்கு சென்றான்.
இரவு உணவு தன் தாயுடன் உண்டு முடித்தவன். 
“அம்மா நாளைக்கு உச்சி பிள்ளையார் கோவிலுக்கு போகலாமா?”
“சரி பா.. நான் அப்பா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுறேன்”
“நீ திருந்தவே மாட்ட மா” என்று முறைத்தான்.
“கோவிக்காத கண்ணு.. “
“காலையில் 6 மணிக்கு கிளம்பலாம். வெளிய நாம சாப்பிடலாம் அம்மா. நாளைக்கு மதியம் தான் வருவோம். இதையும் சொல்லிடு உன் புருஷன் கிட்ட” என கூறிவிட்டு தன் அறைக்கு சென்று கதவை அடைத்து கொண்டான். 
உள்ளே வந்தவன் ஓவியனுக்கு அழைத்தான். 
“சொல்லு தேவ்”
“என்னடா ப்ளான் படி எல்லாம் நடக்குமா?”
“நீ கவலை படாத டா.. நான் என் கூட படிக்கிற பையன் , க்ளோஸ் ப்ரண்டு ராஜ் இருக்கான்ல உனக்கு நல்லா தெரியுமே.. அவன் கிட்ட சொல்லிட்டேன். எல்லாம் பக்காவா நடக்கும். “
“அப்ப சரி நான் நாளைக்கு அம்மாவை கூட்டிட்டு கோவிலுக்கு போறேன். நீ முடிஞ்சதும் எனக்கு சொல்லு. “
“சரி டா … ஏதாவது பிரச்சனை இல்லை மாட்டி கிட்டால் என் பெயரை சொல்ல சொல்லு நான் பார்த்துக்கிறேன்”
“டேய் அதெல்லாம் அவன் பக்காவா பண்ணுவான். நீ தைரியமா போ”
“சரி டா.. பை.. குட் நைட்”
************************************************************** 
காலை 5 மணிக்கு எல்லாம் சகுந்தலா எழுந்து, தன் கணவருக்கு பிடித்த உணவை சமைத்து விட்டு ராக்காமாளிடம் சூடு பண்ணி பரிமாறு என்று கூறி விட்டு கிள்மபினார்.
தேவும் கிளம்பியதும் இருவரும் தேவ் காரில் சென்றார்கள். தேவ் வண்டி ஓட்டி கொண்டிருக்க சகுந்தலா முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். காலை நேர சுகமான காற்றை அனுபவித்தவாரே அவர் வர, தூரத்தில் மினியும் கதிரும் சைக்கிளில் செல்வதை பார்த்த சகுந்தலா,
“பாவம் பா நம்ம சாந்தி பிள்ளைங்கள்.. அவ போய் சேர்ந்திட்டா.. இவங்க 2 பேரும் ரொம்ப கஷ்ட படுறாங்க.. அந்த பொண்ணு ரொம்ப நல்லா படிக்கும். முதல் மார்க்கு தான் வாங்கும் ஆனால் வீட்டு வேலையும் பார்த்து கிட்டு படிக்கவும் முடியலை போல.. இந்த காலையிலயே எங்க கிளம்பிட்டாங்க.. வண்டியை ஓரமாக நிறுத்து பா.. நான் கேட்குறேன்.. “
தேவ் சைக்கிளை மறித்தவாறு ஓரமாக நிறுத்தியதும், சகுந்தலா, “ஏன் கண்ணுங்களா காலையில் எங்க கிளம்பிட்டீங்க? பஸ்ஸில் போகலாம்ல.. பாவம் கதிரு எவ்வளவு தூரம் அக்காவை வச்சி ஓட்டுவ?”
கதிர் , “ இல்லைமா லால்குடி வரைக்கும் சைக்கிளில் போய் விடுவோம்”
“நாங்களும் அந்த வழியா தான் போறோம். நீ அக்காவை ஏத்தி விடு பா.. எங்க இறக்கி விடனும் சொல்லு.. நான் இறக்கி விடுறேன்”
“பரவாயில்லை மா.. “
“ஏன் கதிரு பயப்படுற”
மினி “ அப்படியெல்லாம் இல்லைமா உங்களுக்கு சங்கடமா இருக்கும் “
“அதுலாம் இல்ல நீ வந்து ஏறு கண்ணு”
தன் தம்பியிடம், “நான் அவங்க கூட போறேன் கதிர், நீ வீட்டுக்கு  போ.. மதியம் சாப்பாடு செஞ்சுட்டேன், மறக்காமல் எடுத்துக்கோ”
“நீ பத்திரமாக போ கா” என கூறி விட்டு தன் சைக்கிளை திருப்பினான்
மினி பின் பக்கம் ஏறி அமர்ந்து கொண்டாள்.
“உன்னை விட தான் வந்தானாமா ?”
“ஆமாம் அம்மா.. லால்குடியில் ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலைக்கு சேர்ந்திருக்கேன்”
இதை கேட்டதும் தேவ் தன் காரை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தி விட்டான்.
சகுந்தலா “என்ன பா ஆச்சு?”
“ஒன்னும் இல்லை மா.. “ என கூறி விட்டு காரை மீண்டும் எடுத்தான். 
சகுந்தலா மினியிடம் “ஏம்மா நல்ல மார்க் தானே வாங்கி இருக்க காலேஜ் சேர வேண்டி தானே?”
“கரசில் பி.காம் போட்டு இருக்கேன் மா.. நான் வேலைக்கு போனால் தம்பியை நல்லா படிக்க வைக்க முடியும் .. “
“கேட்கவே கஷ்டமா இருக்குமா எப்படி இருந்த குடும்பம்? நானும் ரகுவை பார்க்கும் போதெல்லாம் சொல்லுவேன் பிள்ளைங்கள பாருனு .. அவன் திருந்துவது போல தெரியலை.. சாப்பிட்டாயா கண்ணு?”
“இல்லை மா.. எடுத்துட்டு வந்திருக்கேன். மணி 7 தான் ஆகுது, 8 மணிக்கு கடை திறக்கனும் அதுக்கப்புறம் சாப்பிடுவேன்”
“சரி கண்ணு.. “
அவள் சொல்லும் ஒவ்வொரு பதிலும், தேவின் இதயத்தில் யாரோ ஈட்டி கொண்டு குத்தியது போல் வலித்தது.. ஆயினும் எதுவும் பேசாது காரை ஓட்டினான். 
“சாயங்காலம் எப்ப மா முடியும்?”
“6 மணிக்கு மா.. 6.30 பஸ்ஸில் கிளம்பிடுவேன்”
“சரிமா உடம்பை பார்த்துக்கோ.. படிப்பை மட்டும் விட்டுடாத கண்ணு”
“சரிங்க மா”
அவ்வப்போது கண்ணாடியில் இவளை பார்த்து முறைத்து கொண்டே வந்தான் தேவ். அதை கவனித்த மினியும் தலையை கவிழ்ந்து கொண்டாள். சிறிது நேரம்  சென்றதும் அவள் சொன்ன மெடிக்கல் கடை வர, காரை நிறுத்தினான்.
காரை விட்டு இறங்கியவள், இருவருக்கும் நன்றி கூறி விட்டு சென்றாள்.
செல்லும் வழியெங்கும் சகுந்தலாவோ மகனின் எண்ணம் தெரியாது, அவள் படும் கஷ்டங்களை சொல்லி கொண்டே வந்தார். தேவ் மனதிற்குள் சில முடிவுகள் எடுத்தவாறு காரை ஓட்டி கொண்டு சென்றான்.
கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்து கொண்டு வர மணி 11 ஆனது.. காலை உணவு வேறு உண்ணாததால் பசி எடுக்க, இருவரும் ஹோட்டல் சென்று சாப்பிட்டு விட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.  அப்போது அவன் போன் ஒலிக்க அதை அட்டன் செய்தான் ஓவியன் தான் அழைத்திருந்தான். 
“சொல்லுடா.. “
“சக்ஸஸ் டா”
“சரி அவன் எங்கே.. ?”
“ஏன் டா உங்க அப்பா வண்டியை இடிச்சிட்டு பக்கத்திலே வா உட்கார்ந்திருப்பான். அவன் எப்பவோ எஸ்கேப் ஆகிட்டான்.”
“சரி சரி நான் ஊருக்கு வந்துட்டே இருக்கேன் “ என கூறி விட்டு போனை வைத்து விட்டான். சகுந்தலா நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் அவருக்கு எதுவும் தெரியவில்லை. அவன் கார் வீட்டிற்குள் நுழைந்ததும் “அம்மா வீடு வந்தாச்சு” என்று எழுப்பி விட்டான்.
“நல்லா தூங்கிட்டேன் பா” என்று சொல்லி விட்டு இறங்கி வீட்டிற்குள் சென்றார்.
அங்கு சோகமாக முகத்தை வைத்து கொண்டு ஓவியன் அமர்ந்திருந்தான்.
“ஏன் டா இப்படி உட்கார்ந்திருக்க?” 
“உள்ளே போய் பாருங்க அத்தை” என கூறினான்.
இவர் வேகமாக உள்ளே சென்று பார்த்தார். அங்க ராமசாமி இடது காலில் நன்றாக அடி பட்டு படுத்திருந்தார். 
“என்னங்க என்னங்க “ என எழுப்பினார். அப்போது உள்ளே வந்த ஓவியன், 
“அத்தை வலி மாத்திரை சாப்பிட்டு தூங்குகிறார் மாமா” 
“எப்படி பா ஆச்சு “ என கண் கலங்கினர்.
ஓவியனுக்கு அத்தையை பார்க்க கஷ்டமாக இருந்தாலும் அவர் நல்லதிற்காகவே இது என நினைத்து “வண்டியில் போகும் போது தடுமாறி கீழே விழுந்துட்டார் அத்தை.. அந்த வழியா போன நம்ம ஊர்காரங்க ஹாஸ்பிட்டலில் சேர்த்துட்டு எங்க அப்பாவிற்கு போன் போட்டாங்க..  பெருசா அடி இல்லை.. கால் தான் கொஞ்சம் எலும்பு முறிவு இருக்கிறதால் ஒரு 2 மாசம் நடக்க கூடாதுனு டாக்டர் சொல்லி இருக்காங்க.. பத்திரமாக பார்த்துக்கோங்க.. நீங்க கோவிலுக்கு போகிறதா தேவ் சொன்னான் அதான் நான் நீங்க வர வரைக்கும் இருந்தேன்.. சரி வரேன் அத்தை.. நாளைக்கு வந்து பார்க்கிறேன். “ என்று ஓடி விட்டான்.
தேவ் “அம்மா.. “ என்று அழைத்ததும் வெளியே வந்தவர், 
”அப்பாவை பாரு கண்ணு” 
“அம்மா அவர் உனக்கு எவ்வளவு கஷ்டம் தராரு ஆனாலும் அவரை இப்படி தாங்குற”
“அப்படி சொல்லாத கண்ணு.. அவர் உன் அப்பா”
“அட போம்மா.. சரி நான் வெளியே கொஞ்சம் போயிட்டு வரேன். வர லேட்டாகும் “
அவர் பதிலை கூட எதிர் பாராது சென்று விட்டான்.
ரொம்ப நாள் கழித்து தன் பல்சர் பைக்கை எடுத்து கொண்டு வெளியே சென்றான்.
மினி தன் வேலை முடித்ததும் மாலை பேருந்தில் திரும்பி வந்து இறங்கினாள். தேவும் அங்கு தான் நின்று கொண்டிருந்தான். அவள் நடந்து வீடு சேரும் வரை பார்வையாலே தொடர்ந்தான். பிறகு அங்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று தன் ஊரில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டி புகார் கொடுத்தான். பெயருக்கு புகாரை வாங்கி கொண்டு அவனை அனுப்பி வைத்தனர். இது அவனும் ஓர் அளவிற்கு எதிர் பார்த்து தான் வந்தான். அரசு கஜானாவை நிரப்பும்  டாஸ்மாக்கை அவ்வளவு எளிதில் மூட முடியாது என்று. ஆயினும் முதலில் சட்டப்படி முயற்சிக்க வேண்டும் என எண்ணினான்.
 — மின்னுவாள்..

Advertisement