Advertisement

EPISODE 1
அந்தி மாலை வேளையில் அந்த ஓடக்கரையில் அமர்ந்து வானத்தை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள் நம் மின்மினி. முன்பெல்லாம் இந்த ஓடத்தில் நீச்சல் அடிக்கும் அளவிற்கு கோடையிலும் தண்ணீர் இருக்கும் ஆனால் இப்போ அதன் சுவடே இல்லாமல் வெறும் மணல் திட்டாய் காட்சி அளித்தது. நம் மினியின் பொழுது போக்கு இடமும் இது தான். ஓடை அருகே வளர்ந்து இருக்கும் வேப்பமரம் காற்று இதமாய் இருக்க அமைதியாக அமர்ந்திருந்தாள். 
அப்போது அவள் தோழி நதியா தூரத்தில் இருந்தே கத்தி கொண்டு வந்தாள் “ஏய் புள்ள மினி… மினி.. சீக்கிரம் வாடி உன் வீட்டில் ஒரே தகராறு.. “
“என்ன டி”
“வேறென்ன உங்க அப்பா குடிச்சிட்டு வந்து கத்திட்டு இருந்திருக்கார்.. உன் தம்பி கோவபட்டு சண்டை போடுறான் டி நான் சொன்னா கேட்கலை.. “
“நிதம் இவங்களுக்கு இதுவே வேலையா போச்சுடி … சை.. வா போகலாம்”
மின்மினியும் நதியாவும் சிறு வயது முதல் தோழிகள். பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒரே பிரிவில் படித்தார்கள். இப்போது தேர்வு முடிவிற்கு காத்திருக்கிறார்கள். 
இருவரும் வேகமாக மினியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு மினியின் தம்பி கதிர் அவர் தந்தையுடன் சண்டையிட்டு கொண்டிருந்தான். இருவரையும் சமாதானம் செய்து முடிப்பதற்குள்  மின்மினியும் நதியாவும் ஒரு வழி ஆணார்கள். கதிர் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கிறான். அவர்களது தாய் சாந்தி இறந்து 3 மாதம் ஆகிறது. அவர் காரியம் முடிந்த அடுத்த நாளிலிருந்து அப்பா ரகு தினமும் குடித்து விட்டு எங்காவது விழுந்து கிடப்பார். அவரை வீட்டிற்கு அழைத்து வருவதே பரும் பாடாக இருக்கும் இருவருக்கும். 
கதிர் நன்றாக படிப்பான். பல வகையான கார், பைக் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் அவனுக்கு அத்துபடி. அவர்கள் வசிக்கும் ஊர் திருச்சி அருகே இருக்கும் ஒரு சிறு கிராமம். பக்கத்தில் இருக்கும் பெரிய ஊர் லால்குடியில் உள்ள மெகானிக் ஷெட்டில் 2 வருடங்களாக பள்ளியின் விடுமுறை நாட்களில் வேலை பார்க்கிறான். 
சாந்தி தொண்டையில் புற்று நோய் வந்து 3 வருடங்களாக ரொம்பவும் அவதி பட்டார். அவர் மருத்துவ செலவிற்காக ரகு தன் 2 ஏக்கர் விவசாய நிலத்தை கொஞ்சம் கொஞ்சமாக விற்று கடைசியில் ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டது. இப்பொழுது மற்றவர்கள் நிலத்தில் கூலி வேலை பார்ப்பார். அவர்கள் தரும் கூலி வீடு வந்து சேராது. பாதி மது கடைக்கு சென்றுவிடும். 
சாந்தியின் தம்பி வரதராஜன் பக்கத்து ஊரில் இருக்கிறார். அவர் தான் அவ்வப்போது தன் அக்காளின் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி குடுத்து விட்டு செல்கிறார் கடந்த 2 வருடங்களாக. வரதராஜன், நிஷா தம்பதிக்கு 2 ஆண் பிள்ளைகள் – சர்வேஷ் , கிஷோர். இருவரும்  அங்குள்ள சீபிஎஸ்சி பள்ளியில் எட்டு மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கிறார்கள். வரதராஜன் லால்குடியில் எலக்ட்ராநிக்ஸ் (electronics) ஷோ ரூம் வைத்திருக்கிறார்.
மினியின் வீடு சிறிய ஓட்டு வீடாகும். வீட்டின் முன் திண்ணை இருக்க, உள்ளே நுழைந்தால் ஒரு கூடமும், சமையலறையும் , ஒரு படுக்கை அறையும் இருக்கும். வீட்டிற்கு பின் புறத்தில் குளியலறையும் கழிவறையும் இருந்தது. மினிக்கு பிடித்தது அவளது சிறு காய்கறி தோட்டம் தான். அவள் குடும்பத்திற்கு போதுமான கத்திரி, வெண்டை, தக்காளி, பாகற்காய், புடலங்காய் , முருங்கை மற்றும் வாழை வளர்த்து வருகிறாள். சாந்தி ஆரம்பித்தது இந்த தோட்டம், அதை மினி அப்படியே தொடர்ந்து வருகிறாள். 
நதியா, “மினி தெரு பைப்பில் தண்ணி வருது வாடி”
மினி “வரேன் டி”
அவர்கள் வீட்டில் கிணறு இருக்கிறது ஆனாலும் குடிப்பதற்கு அது நன்றாக இருக்காது , அதனால் தெருவில் வரும் கொல்லிடம் ஆற்று தண்ணீரை பிடித்து வைத்து கொள்வாள் மினி.
அவள் தண்ணீர் எடுத்து கொண்டு வருவதை பார்த்த கதிர்,
“என்ன கூப்பிட வேண்டியது தான அக்கா. நீ ஏன் வெயிட் தூக்குற?”
“பரவால்லை டா.. 2 குடம் பிடிச்சுட்டேன் போதும் வா”
நதியா வீட்டில் ஒரே பெண் என்பதால் கதிரிடம் அன்புடன் இருப்பாள். மூவரும் பேசி கொண்டே வீட்டிற்கு வந்தார்கள். சிறிது நேரம் அங்கு இருந்த நதியா பிறகு தன் வீட்டிற்கு சென்றாள்.
“கதிர் காலையில் அரைச்ச பூண்டு துவையல் இருக்கு தோசை ஊத்தட்டுமா?”
“சரிக்கா”
“சரி நீ தோசை கல்லை அடுப்பில் போடு நான் அப்பாவை எழுப்புறேன்”
“அவருக்கு அது தான் இப்ப ரொம்ப தேவை.. நம்ம பத்தி யோசிக்காமல் இருக்கிற ஆளுக்கு எதுக்குக்கா சாப்பாடு போடனும்?”
“சும்மா இருடா நமக்கு இருக்கும் ஒரே ஆதரவு அவர் தான் .. அப்படி எல்லாம் சொல்ல கூடாது”
மினி சென்று திண்ணையில் படுத்து இருக்கும் தந்தையை எழுப்ப அவர் போதையில் எழவில்லை. சிறிது நேரம் எழுப்பி பார்த்து விட்டு அவர் எழாததால், கதிரும் மினியும் சாப்பிட்டு விட்டு படுத்து கொண்டனர்.
அடுத்த நாள் காலை பட படப்புடன் இருந்தான் கதிர். இன்று +2 தேர்வு முடிவு வெளியாகிறது. ஆனால்  மினி கண்டுகொள்ளவே இல்லை. மேலே படிக்க வாய்ப்பில்லை அதனால் அதை பற்றி கவலை படாமல் இருந்தாள். காலையில் சீக்கிரம் கிளம்பி கோவிலுக்கு சென்று விட்டு நேராக பள்ளிக்கு சென்றான். மினி நல்ல மதிப்பெண் பெற்றாள். 1010/1200 எடுத்திருந்தாள். நதியாவும் 1050 மதிப்பெண் வாங்கியிருந்தாள் அவள் வீட்டில் திருச்சியிலுள்ள கலை கல்லூரியில் பி.அஸ்சி படிக்க வைப்பதாய் முடிவு செய்தார்கள். 
மிகுந்த மகிழ்ச்சியுடன் கதிர் “அக்கா நீயும் படிக்கிறாயா?”
“அடப்போடா நான் ஏதாவது வேலைக்கு போக போறேன்” 
“ஏன் அப்படி சொல்லுற நான் படிக்க வைக்கிறேன் கா” 
“வேண்டாம் கதிர், நீயாவது நல்லா படிச்சு பெரிய ஆளா வரனும். எனக்காக உன் வாழ்க்கையை கெடுக்க விரும்பலை.”
கதிர் எவ்வளவு கூறியும் மினி சம்மதிக்கவில்லை. ரகு எல்லாவற்றையும் கேட்டு கொண்டு அமர்ந்திருந்தார் ஆனால் எதுவும் பேசவில்லை. அப்படி அவர் ஏதாவது கூறினாலும் கதிர் முகத்தில் அடித்தது போல் பேசி விடுவான். அவசியத்திற்கு மட்டுமே அவர் பேசுவார். எப்போதாவது வீட்டிற்கு காய், பழங்கள் என வாங்கி வருவார். மற்றபடி ஒரு ஒதுக்கத்துடன் தான் இருப்பார்.
************************************************ 
இன்று அந்த ஊர் பெரிய பண்ணை என அழைக்கப்படும் ராமசாமியின் வீடு பர பரப்பாக இருந்தது. சென்னையில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் தேவ் இன்று ஒரு மாத காலம் விடுமுறைக்கு வீட்டிற்கு வருகிறான்.
ராமசாமி, “சகுந்தலா என்ன எல்லாம் ரெடியா “
“ம்ம்ம் ஆச்சு ஆச்சு ஆப்பம் சுட்டு கிட்டு இருக்கேன். பாவம் புள்ள நாக்கு செத்து போய் வருவான்”
வீட்டின் கேட் அருகே கார் சத்தம் கேட்டதும் சகுந்தலா ஓடி வந்தார்.
“வாய்யா வா.. நீ ஏன் கண்ணு காரை ஓட்டி கிட்டு வர? டிரைவர் வச்சு வரலாம்ல”
“அம்ம்மா வந்த உடனே ஆரம்பிக்காத “ என கூறிக்கொண்டே தன் பைகளை எடுத்தான்.  
“நீ பையை வை கண்ணு.. டேய் கேசவா தம்பி பையை எல்லாம் எடுத்துட்டு போ” அவர் சொல்லி முடிக்கும் முன்பே இவன் தன் உடைமைகளை எடுத்து கொண்டு சென்று விட்டான். தேவ் அப்படி தான், இந்த பந்தாவெல்லாம் பிடிக்காது. தன் வேலைகளை தான் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பான். 
அவன் உள்ளே வந்ததும் நானும் இங்கே தான் இருக்கேன் என்று காட்டி கொள்ள இருமல் வந்தது போல் இருமி காட்டினர் ராமசாமி. அதை கண்டும் காணாது சென்று விட்டான் தேவ். 
சிறு வயதில் தன் தந்தை மேல் மிகுந்த பாசத்தில் இருந்தவன் நாள் ஆக ஆக அவர் செய்யும் தவறுகள் கண்ணில் பட அவரை வெறுத்தான். ஊரில் பல பேரிடம் அவர்கள் இடம், தோட்டம், வயல் போன்றவைகளை பாதி விலைக்கு வாங்குவார். அவர்களும் அவசர தேவைக்காக உடனே பணம் வேண்டும் என விற்று விட்டு செல்வார்கள். சிலர் கடன் வாங்கியிருப்பர், குடுக்க தவறினால் சொத்தை பிடுங்கி விடுவார் ராமசாமி.
இது போல் ஏராளம்.. அதனால் தந்தையிடம் அதிகமாக பேச மாட்டான். ஊருக்கு வரவும் பிடித்தம் இருக்காது. தன் தாயிற்காக மட்டுமே 6 மாதம் ஒரு முறை வீட்டிற்கு வருவான். ஏமாற்றி வாங்கிய அவரவர் சொத்தை திரும்பி தர வேண்டும் என்ற எண்ணம் தேவிற்கு இருக்கிறது, ஆயினும் அது தன் தந்தை பெயரில் இருப்பதால் பொறுமை காண்கிறான்.
சகுந்தலா , “கண்ணு சாப்பிட வாப்பா”
“குளிச்சிட்டு வரேன் மா”
சாப்பிட வந்ததும் தேவிற்கு பிடித்த ஆப்பம் , தேங்காய் பால், சிக்கன் குருமா என்று பரிமாறி தன் பிள்ளை பசி ஆற்றினார் சகுந்தலா.
“ அம்மா நீயும் சாப்பிடு” அவர் தன் கணவன் முகம் பார்த்தார். அவர் முறைப்பதை கண்டதும்,
“இல்லை கண்ணு நீ சாப்பிடு முதலில்”
தேவிற்கு தெரியும் அப்பா சாப்பிட்டால் தான் அம்மா சாப்பிட வேண்டும் என்ற எழுத படாத விதி அந்த வீட்டில் உள்ளது என்று. 
ராமசாமி சாப்பிட்டு விட்டு வெளியே சென்றதும், தன் தாயிற்கு அவன் பரிமாறி உண்ண வைத்தான். 
அவனுக்கு நண்பர்கள் என்று ஊரில் யாரும் இல்லை. அவன் பள்ளி திருச்சியில் படித்தான். கல்லூரி சென்னையில் படிக்கிறான். அதனால் எப்பவாவது வரும் தன் அத்தை மகன் ஓவியன் வந்தால் மட்டும் வெளியே எங்காவது செல்வான்.
************************************************** 
மாலை 6 மணி அளவில் நதியா மிநி வீட்டிற்கு சென்றாள்.
“மினி”
“வாடி காலேஜ் எல்லாம் பார்த்தியா? எப்படி இருக்கு”
“நல்லா இருக்கு டி. இப்ப தான் பீஸ் கட்டிட்டு வரோம். 2 மாதம் கழிச்சு ஓபன் பண்ணுவாங்க”
“ரொம்ப சந்தோஷமாக இருக்கு டி”
“ஆனால் எனக்கு அப்படி இல்லை “
“ஏன் ஹாஸ்டல் தங்க வேண்டி இருக்கும் அதனால் அப்படி சொல்றியா வாராவாரம் வீட்டுக்கு வந்துடுவனு உங்க அம்மா சொன்னாங்களே?”
“இல்லை டி.. சின்ன வயசு முதல் நாம பிரிந்ததே இல்லை “ என்று கண் கலங்கினாள்.
“லூசு இதுக்கு போய் கலங்குற.. நீ நல்லா படி டி.. என் விதி படிக்க முடியலை நீயாவது படிக்கனும்”
“ம்ம்ம்”
“அழு மூஞ்சி வா ஓடை பக்கம் போவோம்”
இவர்கள் ஓடை பக்கம் உள்ள மரத்தடியில் கதை பேசி கொண்டு இருக்க, தேவும்  ஓவியனும் அங்கு நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.
ஓவியனை பார்த்த நதியா, “வானரம் வருது டி வா போகலாம்”
“யாருடி” என திரும்பி பார்த்தாள்.
“உன் மாமா மகன் தானடி” 
“அவனை பார்த்தாலே எனக்கு பிடிக்காது டி”
“ஏன்?”
“தெரியலை எப்ப பார்த்தாலும் வம்பு இழுப்பான். நீ என்ன கொஞ்சம் மறைச்சிக்க “ என்று அவள் மரத்தின் பின் மறைந்து கொண்டாள்.
  • மின்னுவாள்..
 

Advertisement