“உறவு இருக்கு உரிமை இருக்குனு அந்த வீட்டுப்பக்கம் வந்துடாத, இன்னையோடு உனக்கு நாங்க காரியம் பண்ணிட்டோம் இனிமே எங்க வாழ்க்கைல நீ இல்லை” என்றவன் “நீயும் உன் புள்ளையும் சேர்ந்து மொத்தமா என்னோட பணம் முப்பது லக்ஷம் அடிச்சிருக்கீங்க அதை வட்டியும் முதலுமா சேத்து வாங்காம விடமாட்டேன்”  என்றவன் மாமனாயும் அழைத்துக்கொண்டு வெளியேற “ஐயோ… இப்படி விட்டுட்டு போறீங்களே ஹாஸ்பிடல் கொண்டுபோகணும்” என்று பின்னிலே வந்தாள் அவள்.

“அதெல்லாம் உன் தலைவலி, கொண்டுபோ பாத்துக்கோ இல்ல பாக்கமுடியாதுன்னா தூக்கி தெருவுல போடு” என்றார் பார்த்திபன்.

“நாங்க வந்ததோ இங்க நடந்ததோ வெளில வரக் கூடாது வந்தாலும் எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை, அசிங்கப்பட்டு நிக்க போறது நீங்களும் நீங்கப் பண்ண தப்பால உங்க பொண்ணும்” என்றவன் பைக்கை எடுக்கப் பின்னில் ஏறிக்கொண்டார் பார்த்திபன்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜவேலுக்கு எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டிடப்பட்டிருந்தது “கொஞ்சம் கஷ்டம்தான்மா ஏற்கனவே அடிபட்டு மீண்டுவந்தவர்  எலும்பு அவ்ளோ வலுவா இல்ல, அதோட இப்போ வயசும் ஆயிருச்சு நடக்கறது ரொம்ப கஷ்டம்” என்றனர் மருத்துவர்கள்.

‘படுக்கையில் கிடப்பவனை கொண்டுபோய் வைத்துத் தன்னால் எப்படி பார்த்துக்கொள்ள முடியும், தன்னுடைய சம்பாத்தியம் மகளின் எதிர்கால சேமிப்பிற்கே சரியாக இருக்கிறது, இத்தனை நாட்கள் ராஜவேலு தந்த  பணத்தில் குடும்பத்தை ஓட்டியாகிவிட்டது’.

‘இப்பொழுது இவரைக் கொண்டுபோய் வீட்டில் வைத்து யார் பார்க்க… மருத்துவ செலவு அதோடு இனி படுக்கையிலே கிடக்கும் இவரைத் தூக்கி சுமக்கவேண்டுமா’ என்று பலவாறாக யோசித்தவள் இரண்டே மாதத்தில் அரசு மருத்துவமனையில் அவரைச் சேர்த்துவிட்டு சொல்லிக்கொள்ளாமல் வேறு ஊருக்குச் சென்றுவிட்டாள்.

யாரும் பார்த்துக்கொள்ள இல்லாமல் செவிலியர்களின் வசவுகளை வாங்கியவர் ஒரு கட்டத்தில் மூத்த மகன் ஆதவனை அழைத்தார் “எதுக்கு கூப்டீங்க இப்படியொரு காரியம் செஞ்சிருக்கீங்க வெக்கமா இல்ல, அங்க எல்லார்க்கும் உண்மை தெரிஞ்சுடுச்சு, அம்மா நீங்கக் கட்டின தாலியை கழட்டி தூக்கி வீசிட்டாங்க”.

“ஊர்ல தலைகாட்ட முடியல என் பொண்டாட்டி உன் அப்பனை மாதிரி உனக்கும் ஏதாவது இருக்கானு தினம் தினம் சாவடிக்குறா” என்றவனை பார்த்தவர் “ஆதவா என்னைக் கூட்டிட்டு போ… பாத்துக்க யாருமே இல்லை” என்க.

“யாரும் வரமாட்டாங்க” என்றான் முகத்தைத் திருப்பிக்கொண்டு.

“என்னை இப்படி அடிச்சு படுக்கவெச்சது உன் தம்பிதான், அடிச்சதும் இல்லாம என்னை என் பசங்க பாத்துக்கலைனு போலீஸ்ல சொன்னா என்ன பண்ணுவீங்க? அப்போ பாத்துதானே ஆகணும்” என்றார் அப்பொழுதும் வீம்பு குறையாமல்.

“முதல்ல நீ சொல்றதை மத்தவங்க நம்பணுமே, அதோட யாருமே உனக்குச் சப்போர்ட் பண்ண மாட்டாங்க” என்றவன் திரும்பிச் சென்றுவிட்டான்.

மலரின் இடைவிடாத கெஞ்சலின் பேரில் அவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனை வந்தான் அதிவீரன் “நீ சொல்றதுக்காகப் பணம் வேணா குடுக்குறேன் அந்த ஆள் வீட்டுக்கு வரக் கூடாது” என்றுவிட்டான் முடிவாக, இறுதியில் சுகுமாரின் மூலமாக ஒரு முதியோர் இல்லத்தில் பணம் கட்டி ராஜவேலுவை சேர்த்துவிட்டாள்.

பார்வதி தேறிவிட்டார் கணவனாக அவருக்கு எப்பொழுதுமே ராஜவேலு துணை நின்றதில்லை, அதிகாரம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த போதே பெரிதாக ஓட்டுதல் இல்லை இனி என்ன என்ற தெளிவு வந்துவிட்டது.

அன்று அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த நிர்மலா மற்றும் ஆதவனை காத்திருந்தான் சரவணன் “இந்த வீட்டை என் கட்சிக்காரர் விக்க நினைக்கிறார், இடத்துக்கு மட்டும்தான் நீங்க உரிமை கொண்டாடலாம் வீடு முழுக்க முழுக்க அவரோட உழைப்பு அதுல உங்களுக்குப் பங்கு இல்லை, நாங்க விசாரிச்ச வரைக்கும் இந்த இடம் மட்டும் என்பது லச்சம் போகுது  அதுல உங்க பங்கு இருபது வேற சந்தேகம் இருந்தா கேக்கலாம்” என்றான்.

“அதெப்படி வீட்டோட சேத்துதானே வாங்குவாங்க” என்றாள் நிர்மலா.

“ஆமா அப்படிதான், ஆனா  வீட்டோட மதிப்பு அப்படியே மிஸ்டர்  அதிவீரனுக்கு போகும், நீங்க எந்தக் கோர்ட்டுக்கு போனாலும் ஒன்னும் பண்ண முடியாது, அதோட என் கட்சிக்காரரோட பணம் பதினஞ்சு லச்சத்தை அவரோட கடையிலிருந்து பொய் கணக்கு எழுதித் திருடியிருக்கீங்க அதுக்கான ஆதாரம் இது”.

“இதை நாங்க ஆதாரமா கொடுப்போம், இதெல்லாம் நீங்கக் கோர்ட் போனாதான்” என்றான், அதில் நீங்கள் வழக்கு தொடுக்க முடியாது மீறிச் செய்தால் பாதிப்பு உங்களுக்குத்தான் என்ற  உள்ளர்த்தம் இருந்தது “சோ… மீதி உங்களுக்கு அஞ்சு லச்சம் வரலாம்” என்று முடித்தான்.

“அப்போ எங்க அப்பாக்கு சொந்தமான பங்கு பணம்” என்றான் ஆதவன்.

“அப்பா மட்டும்தான் செத்துட்டாரு அம்மா இன்னும் உயிரோடுதான் இருக்கேன், அது என் பங்கு” என்றார் பார்வதி,

அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்திருந்தான் அதிவீரன்.

“போச்சு போச்சு எல்லாமே போச்சு, இப்போ எப்படி நம்ம வீட்டுக்கு மீதி பணம் குடுக்குறது, இன்னும் ஒரு மாசத்துல குடுக்கலனா அட்வான்ஸ் குடுத்த பணத்துல பாதியை அவன் எடுத்துப்பான்” என்று நெஞ்சை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள் நிர்மலா.

சும்மாவா… அம்பது லச்சம் கொடுத்திருக்கிறார்கள் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று படுக்கையறை கொண்ட வீட்டிற்கு, இன்னும் மீதம் முப்பது லட்சத்தை ஒரு மாதத்திற்குள் கொடுக்க வேண்டும் இந்த வீட்டை விற்பதை பற்றி அவனிடம் பேச வேண்டும் என்று எண்ணியிருக்க இப்படியொரு இடியை அவள் தலையில் இறக்கிவிட்டானே.

மறுநாள் காலை ஆதிலெச்சுமியின் கணவன்  முருகன் மனைவியிடம் மன்னிப்பை வேண்டி நின்றிருந்தான் “தயவு செஞ்சு வீட்டுக்கு வா லெச்சுமி இனிமே எந்தப் பிரச்சனையும் வராது, என்னால அம்மாவைத் தனியா பாதுக்கமுடியல அவங்க பேச்சைக் கேட்டு உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இப்போ எல்லாம் புரிஞ்சுடுச்சு உன்னையும் புள்ளைகளையும் பிரிஞ்சு இருக்கமுடியல வாப்போலாம்” என்று கெஞ்சி நின்றான்.

அவள் எந்தப் பதிலும் பேசாமல் அமைதியாக இருந்தாள், அதிவீரன் திரும்பிவந்த அன்று கணவனுடன் சண்டையிட்டே அம்மாவீட்டிற்கு வந்திருந்தாள் ஆதிலெச்சுமி.

“இனி உன்னோடு வாழ்வதில்லை நீயும் உன் அம்மாவும் சந்தோஷமா இருங்க” என்று அவள் வெளியேற “அப்பாவுடன் இருக்கமாட்டோம்” என்று பெண்பிள்ளைகளும் அவளுடன் வந்துவிட்டனர்.

ஆதி கூறிவிட்டான் “அவள் வாழ்வு இது போகவேண்டுமா வேண்டாமா என்பதை அவளே முடிவு செய்யட்டும்” என்று.

பலமணி நேர கெஞ்சலுக்கு பிறகு கணவனுடன் திரும்பிச் சென்றாள் லெச்சுமி “உங்க பங்கு பணத்தை வந்து வாங்கிக்கோங்க” என்ற அதிவீரனை பார்த்துக் கும்பிட்டவன்  “வேண்டாம் சாமி எனக்கு இனிமே பணமே வேண்டாம் அதை உன் இஷ்டம் போல என்ன வேணா செஞ்சுக்கோ” என்றான் முருகன்.

இறுதிவரையிலும் முயன்றும் மீதி பணம் கிடைக்கவில்லை நிர்மலாவுக்கு, அட்வான்ஸ் கொடுத்த பணத்திலும் பாதியை எடுத்துக்கொண்ட கன்ஸ்ட்ரக்க்ஷன் கம்பெனிக்காரர்கள் மீதியை தவணை முறையில் தருகிறோம் என்றுவிட்டார்கள்.

“சும்மா சும்மா பணம் கேட்டுட்டு இருந்த உயிருக்கு உத்தரவாதம் இல்ல பாத்துக்கோ” என்று மிரட்டவும் செய்தார்கள், மொத்த பணத்தையும் இழந்து இருக்க வீடு இல்லாமல் வீதியில் நின்றனர் இருவரும்.

இறுதியில் நிர்மலாவின் தாய் வீட்டில் சென்று தங்க வேண்டிய நிலை, அனுதினமும் கணவன் மணைவி இடையே சண்டை “உன்னாலதான் இப்படி ஆச்சு உன் பேச்சைக் கேட்டு நடுத்தெருவுக்கு வந்துட்டேன், உன் அம்மாவேற கேவலமா பாக்குறாங்க, உன்னால என்வீடு போச்சு நிம்மதி போச்சு சொந்தமெல்லாம் போச்சு”.

“இனிமே நீ எதுமே பேசக் கூடாது கூரையோ குடிசையோ நான் வடக்கை வீடு பாப்பேன் இஷ்டம் இருந்தா வந்து வாழு இல்ல நான் என் குடும்பத்துக்கூட போய் இருந்துக்குறேன்” என்றுவிட்டான்.

‘அனைத்தும் தனக்கு மட்டுமே வேண்டும்’ என்ற எண்ணத்தோடு வாழ்ந்தவள் இன்று தனக்கென்று ஒன்றுமே இல்லாமல் நின்றாள்.

வீட்டிற்க்கான பணத்தை மட்டும் தான் எடுத்துக்கொண்டு மீதம் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அதிவீரனும் கொடிமலரும் மும்பை சென்றனர், அவனுடைய தவறு இல்லையென்றாலும் புனித்தின் ஒரு வாக்குமூலமே அதிவீரனின் உயிரை மீட்டு தந்திருக்கிறது.

நண்பனின் மருத்துவ செலவு மற்றும் அவன் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு உதவும் என்று நினைத்தவன் பணத்தை நண்பனின் மனைவியிடம் கொடுத்து வாழ்வை மீட்டு தந்ததற்கு நன்றி உரைத்து வந்தனர்.

எட்டு மாதங்கள் வீட்டைப் பூர்த்தி செய்துவிட்டான், காலை வீடு குடிபோவதற்கு முன் கணபதி ஹோமம் நடத்தினர், அதிவீரன் கொடிமலர் இருவரும் தம்பதி சமேதராகப் பூஜையில் அமர்ந்திருக்க அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்தது.

பூஜை முடிந்த பிறகு கழட்டி வைத்திருந்த மிஞ்சிய மனைவிக்கு மீண்டும் அணிவித்து அழகுபார்த்தான் அதிவீரன், தாய் வீட்டு சீரால் புது வீட்டை நிறைத்துவிட்டனர் மலரின் குடும்பத்தார்.

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவன் சிந்தையை கலைத்தது மிஞ்சியின் சிணுங்கல், திரும்பிப் பார்க்க அவனைக் காணாமல் எழுந்து அமர்ந்திருந்தாள்  கொடிமலர் “இங்கதாண்டா இருக்கேன்” என்றவன் அவளை நெருங்கி அணைத்துக்கொண்டான்.

‘ஏன் அமைதியாய் இருக்கிறாய்…’ என்று ஒலியெழுப்பி அவனைச் சீண்டியது மிஞ்சி, மீண்டும் தன் தேடலைத் தொடங்கியவனை சுகமாகத் தன்னுள் நிறைத்துக்கொண்டாள் கொடிமலர்.

பத்து வருடங்களுக்குப் பிறகு

“ஆதி… ஆதி…” என்ற அன்னையின் அழைப்பில் வேகமாக அந்த ரூமிற்குள் நுழைந்தவன் “என்னமா” என்க.

“இந்தா நீ இங்கயே இரு மத்த எல்லா வேலையும் அதுபாட்டுக்கு நடக்கும் உன் பொண்டாட்டியை சமாளிக்கத்தான் முடியல, இன்னும் சாப்பிடாம இருக்கா இந்தா” என்று தட்டை அவனிடம் கொடுத்தவர் வெளியில் செல்ல.

சிரிப்போடு மனைவியை நெருங்கினான், அவனின் சட்டையைப் பற்றி இழுத்து அவனுடைய வாசத்தை தன்னில் நிறைத்துக்கொண்டாள், நிறைமாத வயிறு அவனை இறுக்கமாக அணைக்க முடியாமல் தடுக்க அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

“கேடி தேன்மிட்டாய்…” என்றவன் அவளுக்கு உணவை ஊட்டிவிட்டான், இன்று கொடிமலருக்கு வளைகாப்பு நான்காம் முறை கருவைச் சுமக்கிறாள், இந்த முறை இரட்டை குழந்தைகள்.

“எங்க வீட்டில நாங்க அஞ்சு பேர் அதனால நமக்கும் அஞ்சு வேணும்” என்று அவனைக் கெஞ்சி கொஞ்சி சாதித்துக்கொண்டாள்,  அவளை வளர்த்தவர்களுக்கு அவள் பிள்ளைகளை வளர்க்க  கசக்குமா என்ன, உறவுகள் எல்லாம் உடனிருக்க நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த ஒரு வாழ்வு பார்த்திபனும் சிவகாமியும் இவர்களுடனே வந்துவிட்டார்கள்.

ஆதவனும் நிர்மலாவும் எத்தனை முயன்றும் இந்த அன்பு கூட்டிற்குள் அவர்களால் இனைய முடியவில்லை, அனைத்து விசேஷங்களுக்கும் அவர்களுக்கும் அழைப்பு செல்லும், அவர்களும் வருவார்கள் என்றாலும் பெரிதாக யாரும் உறவாட முயல்வதில்லை, கேட்பதற்கு மட்டும் மற்றவர்கள் பதில் உறைப்பார்கள்.

ஆதிலெச்சுமி இப்பொழுதெல்லாம் நினைக்கும் நேரம் தாய் வீடு வந்து செல்கிறாள் முருகன் நல்ல கணவனாக நடந்துகொள்கிறான்.

“முதல் குழந்தைக்கு மட்டும்தான் சிறப்பாக வளைகாப்பு வைக்குவேண்டுமா எல்லா குழந்தையும் நம்முடையதுதானே” என்று நான்கு முறையும் சிறப்பாகவே செய்தான் அதிவீரன்.

விருந்தெல்லாம் முடிய “மாப்ள… எதுன்னாலும் ஒடனே போன் போடுங்க” என்று பத்துமுறை சொல்லிச் சென்றான் சுகுமார்,

ஒவ்வொருமுறை வந்து செல்லும்போதும் இதைக் கூறாமல் அவன் செல்வதில்லை, அதிவீரனும் “சரிங்க மச்சான்” என்று அவர்களை வழியனுப்பினான்.

கடையை இப்பொழுது பார்வதியும் சிவகாமியும் பார்த்துக்கொள்கிறார்கள், பார்த்திபன் முழுவீச்சில் மருமகனுடன் விவசாயத்தில் இறங்கிவிட்டார், தங்கள் வயலில் வேலைக்கு ஆட்கள் இருக்கிறார்களோ இல்லையோ கொடிமலரின் வயலில் வேலை என்றால் எப்படியும் ஆட்களைப் பிடித்து அனுப்பிவிடுவார்கள் அவளின் பாசமலர்கள்.

அதிவீரன் கொடிமலரின் மூத்தமகன் மணிமாறனுக்கு தந்தையை போலப் பார்த்திபன் வேண்டும் அனைத்திற்கும் “மாமாதாத்தா” என்றுதான் அழைப்பான்.

அதிவீரன் “மாமா” என்று அழைப்பதை பார்த்து அப்படியே அவனும் பழகிவிட்டான், உறங்குவதுகூட பார்த்திபன் சிவகாமியுடன்தான்.

அடுத்த பிள்ளைகள் ஆதிரையும் அனன்யாவும் பாட்டி பார்வதியுடன் உறங்குவர், கதவுகள் பூட்டியிருக்கிறதா என்பதை சரிபார்த்தவன் அனைவரும் உறங்குவதை ஒருமுறை பார்த்துவிட்டுத் தங்களின் அறைக்கு வந்தான்.

கணவனைக் காத்து அமர்ந்திருந்தாள் அவனின் தேன்மிட்டாய், அவளின் கால்களுக்குத் தைலம் தேய்த்து பிடித்துவிட்டான் அவன் மார்பில் தலை சாய்த்து படுத்திருந்தவள் விழிகளை உறக்கம் தழுகியது சரியாக அவளைப் படுக்கவைத்தவன் அவள் இதழில் முத்தமிட்டு மெதுவாக அணைத்துக்கொண்டான்.

இந்த நிம்மதியும் சந்தோஷமும் அவர்களுக்கு என்றும் நிலைத்திருக்கட்டும்.