அமர்ந்துவிட்டான் எட்டு மாதங்கள் ஆகிறது அவன் திரும்பி வந்து இத்தனை நாட்களும் தவ வாழ்வு தான் கணவன் மனைவி இருவருக்கும், கணவன் தன்னை நெருங்காமல் இருப்பதை சரியான விதத்தில் புரிந்துகொண்டாள் கொடிமலர்.
அவன் மனம் விரும்பும் அனைத்தும் நடக்கும்வரை அவனுக்கான நேரத்தைக் கொடுத்துவிட்டாள், அவளின் புரிதலே அவனை இயங்கவைத்தது, மீண்டும் திரும்பி உள்ளே பார்த்தான் அவள் பாதங்களை மறைத்துக்கொண்டு கிடந்தது புடவை எழுந்து அவள் அருகில் சென்றவன் புடவையைக் கையில் எடுத்துக்கொண்டு அந்த மிஞ்சியில் இதழ்பதித்து வருடிக்கொடுத்தான், புடவையைத் தன்னை சுற்றி போட்டுக்கொண்டவன் மீண்டும் பால்கனியில் வந்து அமர்ந்தான்.
துபாயிலிருந்து வந்த அன்று குளிப்பதற்காக மேலே அறைக்குச் சென்றவனை பதட்டத்தோடு பின் தொடர்ந்தாள் கொடிமலர், தங்களின் அறைக்குள் நுழைவதற்கு முன் அவனைத் தடுத்தவள் “இங்கயில்ல அங்க” என்றாள் அந்த அறையைக் காண்பித்து.
அவள் முகத்தைப் பார்த்தவன் ஒன்றும் கூறாமல் அந்த அறைக்குள் நுழைந்தான் “ஏன்?” என்றவனின் கேள்விக்கு அவளிடம் பதிலில்லை, தரையை பார்த்து நின்றிருந்தவளின் முகத்தை நிமிர்த்தியவன் “ஏன்” என்க.
“அவங்க எடுத்துகிட்டாங்க”.
“எப்போல இருந்து இங்க இருக்க”.
“மூணு வருஷமா…”.
அவளின் கையைப் பற்றியவன் கீழே செல்ல முனைய அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டவள் “வேண்டாம்… இப்போ வேண்டாம், எல்லாரும் இருக்காங்க ப்ளீஸ்” என்றாள் நிறையும் விழிகளோடு.
அவளை இன்னும் தன்னோடு சேர்த்து இறுக்கினான்,
தான் இல்லாதபோது இதுதான் தன்னவளின் நிலையா?, ஒருவேளை வராமலே போயிருந்தால்… அதை அவனால் நினைத்தே பார்க்கமுடியவில்லை.
குளித்துமுடித்து கீழே சென்றபிறகு விருந்து, உறவுகளின் விசாரிப்பு என்று அன்றைய நாள் ஓய்வே இல்லாமல் சென்றது “மாப்ள நேரம் கிடைச்சதும் பாப்பாவை கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க” என்று அழைத்துவிட்டு சென்றனர் மலரின் வீட்டினர்.
அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்தாலும் அவனின் சிந்தை முழுதும் ‘இதையெல்லாம் எப்படி சரி செய்ய’ என்ற யோசனையே, அவன் இல்லாதபோது ஆட்டமாய் ஆடிக்கொண்டிருந்த ராஜவேலு அமைதியாகிவிட்டார், அளவுக்கதிகமான வெறுப்பும் கோபமும் ராஜவேலுவின் மீதுதான் அவனுக்கு.
இரவு உறங்குவதற்காக அறைக்குள் வந்தவனுக்கு அந்தச் சூழலே பிடிக்கவில்லை, வீடு முழுவதும் நம்முடையதுதான் என்றாலும் நம்முடைய அறை அது எப்பொழுதும் நமக்குத் தனித்துவமானது தானே அதிலும் திருமணத்துக்குப் பிறகு அவனின் தேன்மிட்டாயுடன் அவன் ரசித்து வாழ்ந்த ஒவ்வொரு நொடிகளையும் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கும் பொக்கிஷம் அந்த அறை.
அவனுக்கு இங்கே பொருந்தமுடியவில்லை அந்தக் கட்டிலில் படுப்பதை நினைத்தாலே அருவருப்பான ஒரு எண்ணம் சூழ்ந்தது, சுற்றிலும் பார்வைவை சுழற்ற மூலையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பாய் அவன் கண்ணில் பட்டது அதை எடுத்து அவன் விரிக்க உள்ளே நுழைந்தாள் கொடிமலர்.
“இருங்க நான் செய்றேன்” என்றவளை பார்த்துப் புன்னகைத்தவன் “ஏன் நான் விரிச்சா என்ன!” என்றதுடன் அமைதியாகிவிட்டான், மீண்டும் அவளுடன் இதுபோல் இருக்கமுடியுமா என்பதே பெரும் கேள்விக்குறியாக அல்லவா இருந்தது.
“நீ கீழதான் படுக்குறியா கொடி” என்றான் அவளைப் பிடித்து அருகில் அமர்த்திக்கொண்டு.
“ஹ்ம்ம்… அந்தப் பெட்ல படுக்கப் பிடிக்கல” என்றவள் அவன் மார்பில் சாய்ந்துகொண்டு அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள், அவனுடைய வாசத்தை தன்னுள் முழுதாக நிரப்ப முயன்றாள்.
“இந்த வாசம் வேணும்னுதான் திரும்ப இங்க வந்தேன் ஆனா… அவங்க என்னை உள்ள விடல” என்க.
அதிவீரனின் இடது கை அவளின் வயிற்றை மெல்ல வருடியது அவன் சட்டையை இறுக்கமாகப் பற்றியவள் “தொலைச்சுட்டேன் பாப்பாவை தொலைச்சுட்டேன்” என்றவள் விழிநீர் அவன் சட்டையை நனைத்தது.
அவளைத் தன்னுள் இன்னும் இறுக்கமாகப் புதைத்துக்கொண்டான், எந்த ஆறுதல் மொழிகளையும் கூறவில்லை, அவளுக்கு அது தேவைப்படவில்லை அவன் அருகாமை அது போதும்.
இன்று கொடிமலருக்கு நிம்மதியான உறக்கம் கணவனின் அணைப்பில் சுகமாக உறங்கினாள், ஆனால் அவனுக்குத்தான் உறக்கம் வரவில்லை அடுத்துவந்த நாட்களும் அவளை அணைத்துக்கொண்டு படுத்திருப்பான், விடியும் வரை தன் அணைப்பிலிருந்து அவளை விடுவதில்லை என்றாலும் அவன் உறங்குவதில்லை என்பதை அறிந்திருந்தாள் கொடிமலர்.
மீண்டும் மலரத்தொடங்கும் தங்களின் வாழ்வை இப்படி விருப்பமில்லாத ஒரு இடத்திலும் சூழலிலும் தொடங்க இருவருமே விரும்பவில்லை.
நான்கு நாட்களுக்குப் பிறகு சுகுமார் முத்து மற்றும் கயல்விழியின் குழந்தைகளுக்குப் புது துணிகள் விளையாட்டுப் பொருட்கள் கேக் பிஸ்கட் மற்றும் மூவருக்கும் இரண்டு பவனில் ஒரே போன்ற கழுத்து செயின் எடுத்திருந்தனர் அனைத்தையும் எடுத்துக்கொண்டு காலையிலே மலரின் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
அவர்களின் சந்தோஷத்திற்கு அளவில்லை பழையதை பேசிக் கவலைகொள்ளாமல் அந்த நாளைக் கொண்டாடினர், மதியம் விருந்துக்குப் பிறகு கடலூரில் கயல்விழியின் புகுந்த வீட்டிற்க்கு சென்று சரவணனுக்கு நேரில் நன்றி உரைத்தனர் தம்பதியர்.
ராஜவேலுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயம் இருந்தது ‘வந்து ஒருவாரம் ஆகிறது இன்னும் தன்னிடம் ஒன்றும் கேட்கவோ பேசவோ இல்லை, என்ன நினைக்கிறான் என்றும் தெரியவில்லை கடைக்கும் வரவில்லை’.
எப்பொழுதும்போலக் கடையைப் பூட்டிவிட்டு செல்ல வேலை செய்யும் பிள்ளைகளிடம் கூறிவிட்டு கொஞ்சம் பொருட்ட்களை எடுத்துக்கொண்டு நேரே அந்த வீட்டிற்கு சென்றார்.
கதவு திறந்தே இருக்க உள்ளே நுழைந்தவர் கண்டது சோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அதிவீரனை தான், அவன் அருகில் பார்த்திபன்…. தொண்டை வறண்டுபோனது மனிதருக்கு எதிரே இருந்த இருக்கையில் இரண்டாம் மனைவியும் அவள் மகளும் அமர்ந்திருந்தனர்.
மனிதர் அவர்களை இங்கே நிச்சயம் எதிர்பார்க்கவில்லை முன்பு இருந்த வீட்டை மாற்றி வேறு இடத்திற்கு வந்திருந்தனர் “நீங்க எப்படி இங்க” என்றவர் முடிக்கும் முன் ராஜவேலுவின் வலது கையைப் பின்னில் பிடித்து முறுக்கித் திருப்பத் தோள்பட்டையில் எலும்பு சடசடவென்று உடையும் சத்தம் கேட்டது.
“கடைசில என்னையே கைநீட்ட வெச்சுட்டல்ல” என்றவன் ராஜவேலுவை அப்படியே உதறிவிட்டு திரும்பி நின்றான், வலியில் கால்களை மடக்கி முட்டிபோட்டு அமர்ந்திருந்த ராஜவேலுவின் வலது காலின் மீது ஏறி நின்று கால் எலும்பை உடைத்தார் பார்த்திபன்.
“மாமா வா இப்படி” என்று அவரைப் பிடித்து மாற்றினான்.
“என் அக்காவை மாதிரி ஒரு மஹாலக்ஷ்மி இருக்கும்போது உனக்கு ஒரு சின்ன வீடு கேக்குது, வரம் குடுத்த சிவன் தலையிலே கைவெச்ச கதையா இடுப்பு எலும்பு ஒடிஞ்சு கிடந்த உன்னை ராப்பகலா காவக்காத்து நாங்க காப்பாத்தி எழுந்து நடமாட வெச்சோம்ல அந்தக் கொழுப்புதான் உன்னை இவளைத் தேடி வர வெச்சுருக்கு, இனிமே காலத்துக்கும் நீ நடக்க கூடாது என்றார் வெறிபிடித்தவராக.