“மா…” என்ற அழைப்பில் பார்வதி பெரிதாக வெடித்தழுதார் “மன்னிச்சுருங்கம்மா” என்றதோடு அந்த வாய்ஸ் மெஸ்சேஞ்ஜ் நின்று போனது.
‘மன்னிப்பு வேண்டாம்’ என்று அவன் மறுத்திருக்க புனித்தின் வீட்டில் அவனைக் கருணைக்கொலை செய்ய மனு செய்திருந்தனர், இன்னும் எத்தனை காலம் அந்த உயிரைப் பிடித்துவைக்க “எங்களால் இப்படி பார்த்துக்கொண்டு இருக்கமுடியவில்லை” என்று அவர்கள் கேட்டிருந்தனர்.
நீண்ட ஆலோசனைக்குப் பிறகு மருத்துவர்கள் பரிந்துரைக்க, துபாய் அரசு கருணைக்கொலைக்கு அனுமதி வழங்கியது அதற்கான நாளும் குறிக்கப்பட்டிருந்தது, இறுதி முயற்சியாகக் கணவனின் மனம் மாற இறைவனிடம் இறுதியாக மன்றாட வந்திருந்தாள் கொடிமலர்.
இன்று…
பூக்களைக் கட்டிமுடித்து அங்கேயே அமர்ந்திருந்தாள் ‘அடுத்து என்ன’ என்று தெரியவில்லை, இன்றிலிருந்து மூன்றாம் நாள் புனித்திருக்கு கொடுக்கப்பட்டு கொண்டிருக்கும் சிகிச்சை நிறுத்தப்படும், கையில் இருப்பது இரண்டே நாட்கள்.
‘அடுத்து தான் என்ன செய்ய வேண்டும்’ என்ற யோசனை மட்டுமே அவளுக்கு இப்பொழுது “அவர் இல்லைங்கிற வார்த்தையைக் கேக்க நான் இருக்கமாட்டேன்” என்பது மட்டும் உறுதியான முடிவாக இருந்தது.
பதுமையாக அவள் அமர்ந்திருக்க சரவணன் பைக்கை நிறுத்தும்முன் அதிலிருந்து குதித்திறங்கி கோவிலுக்குள் ஓடிவந்தார் பார்வதி, வந்தவர் புடவை தடுக்கி கீழே விழ “பாத்துமா” என்றவர்களின் சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள் கொடிமலர்.
“அத்த” என்று அவர் அருகில் ஓடிவந்து அவரைப் பிடிக்க, அவளை அனைத்துக்கொண்டவர் அவள் கன்னம் வழித்து முத்தம் வைத்து உணர்ச்சி பெருக்கில் பேச்சு வரமால் தடுமாறினார் “என்னத்த” என்றவளுக்கு கைகள் நடுங்கியது.
பின்னிலே ஓடி வந்த சரவணனை பார்த்த பார்வதி “சொல்லேன்ப்பா” என்பதாக அவனைப்பார்த்து கை அசைக்க அவனைப் பதட்டமாகப் பார்த்தாள் கொடிமலர், அவளின் அருகில் முட்டிபோட்டு அமர்ந்தவன் “புனித் கண்ணுதொறந்துட்டான் அண்ணி, அவனைக் கொலைப்பண்ண முயற்சி பண்ணது அண்ணா இல்லன்னு வாக்குமூலம் குடுத்துட்டான், அண்ணா நிரபராதியண்ணி… நிரபராதி…” என்க.
அதிகப்படியான சந்தோஷத்தில் அவளுக்கு நெஞ்சை அடைத்தது மூச்சுக்கு தவித்தவளை பார்த்த மாமி வேகமாகத் தண்ணீர் கொண்டுவந்து “குடிமா குடி” என்றவளிடம் கொடுக்க அதை என்ன செய்ய வேண்டும் என்று கூடத் தெரியாமல் அவரைப் பார்த்தாள்.
அவள் வாயைப் பற்றித் தண்ணீரை ஊற்றியவர் மெல்ல நெஞ்சை நீவிவிட்டு “அழுமா அழுதுடு” என்றவளை உலுக்க மெல்ல மெல்ல தொடங்கிய அழுகை பெரும் கதறலாக வெடித்து வெளிவந்தது, மாமியும் பார்வதியும் அவளை இருபக்கமும் அனைத்துக்கொண்டனர்.
அடித்துபிடித்து ஓடிவந்த சுகுமாரும் முத்துவும் தங்கையை அப்படியே தங்களோடு சேர்ந்து அனைத்துக்கொண்டனர் “ஆத்தா மலரு…” என்றதை தவிர வேறு வார்த்தைகள் வரவில்லை அவர்களுக்கு, ஒட்டுமொத்த குடும்பமும் அங்கே கூடியிருக்க இது எப்படி நடந்தது என்று மாற்று மாற்றிப் பேசித் தீர்த்தனர் அனைவரும்.
புனித்தின் இறுதிநாளின் வழியனுப்பலுக்காக அவனின் மனைவியும் பிள்ளைகளும் வந்திருந்தனர் துபாய்க்கு கணவனின் கைகளைப் பற்றிக்கொண்டு அருகில் அமர்ந்திருந்தாள் அவனின் மனைவி, அவர்களின் இழப்பும் பெரியதுதானே கணவனின் உயிருக்கு விலைபேசிய மாமியார் மாமனாரின் மீது கோபம்தான் ஆனால் அதைக் காட்டகூட அவளுக்கு உரிமை இல்லையே.
இப்படி வெறும் கூடாகப் படுக்கையில் கிடப்பவனை கண்டு கண்டு மனம் மறுத்துப்போயிருந்தது அவளுக்கு, நாளையொடு இந்த உடலும் போய்விடும் இனி வெறும் நினைவுகள் மட்டுமே அவன் கைகளில் முகம் புதைத்து அமர்ந்திருந்தவள் அதன் அசைவில் பதறி எழுந்தாள், மெல்ல மெல்ல இமைகளை அசைத்துக் கடினப்பட்டு விழிகளைத் திறந்து அவளைப் பார்த்தான் புனித்.
‘நிச்சயமாக இது கனவுதான்’ என்று தோன்றியது அவளுக்குத் தலையை நன்றாக உலுக்கி உலுக்கி பார்த்தாள் ‘இல்லை உண்மையில் அவன் விழித்திருக்கிறான், தன்னை பார்க்கிறான்’ அந்த நொடி என்ன செய்ய வேண்டும் ஒன்றும் புரியவில்லை.
பிறகு எல்லாம் புயல் வேகம் மருத்துவர்கள் மீண்டும் மீண்டும் சோத்தித்துப்பார்த்தனர், நாளை உயிர் காக்கும் கருவிகளை எடுக்க முடிவு செய்திருக்க இன்று மீண்டுவந்திருக்கிறான் அவர்களின் பேரில் விசாரணை வருமே என்ற பயம் அவர்களுக்கு இறைவனின் கணக்கு என்ன என்பதை யார் அறிவர்.
போலீஸ் வந்திருந்தது தங்களுடைய விசாரணை சரியாக நடந்திருக்கிறது என்பதை உறுதி படுத்திக்கொள்ள பாதிக்கப்பட்டவனின் வாக்குமூலம் இன்னும் வலு சேர்க்குமே முதல் கேள்விக்கான பதிலே அவர்கள் வயிற்றில் புளியை கரைத்தது.
உங்களைக் கொலை செய்ய முயற்சி செய்தது இவன் தானே என்று அதிவீரனின் புகைப்படத்தைக் காட்ட “இல்லை” என்றான் தலையை மெல்ல அசைத்து ‘அவனுக்குச் சரியாகப் புரியவில்லையோ’ என்று யோசித்தவர்கள் மீண்டும் நிறுத்தி நிதானமாகக் கேட்க மீண்டும் “இல்லை” என்றான் அழுத்தமாக.
‘வேறு யார்?’ என்று யோசித்தவர்கள் கரனாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் அவனிடம் கேட்க அதற்கும் “இல்லை” என்ற பதிலே ‘பிறகு யார்’ என்ற கேள்விக்கு “பேனா வேண்டும்” என்று சைகையில் காட்டினான், மொத்தமாகப் பேச்சு நிலைத்துவிட்டது நரம்பு அறுபட்டதில்.
முயன்று கஷ்டப்பட்டு கிறுக்கலாக எழுதிக் காண்பித்தான் “புஷ்கர்” என்று “புஷ்கர்?” என்றவர்கள் கேள்வியாய் நிறுத்த “அவரோட சித்தப்பா பையன்” என்றாள் அவனின் மனைவி அதிர்ச்சிவிலக்காமல்.
புனித் துபாய் வந்தபிறகு குடும்பத்தில் கஷ்டப்பட்ட சித்தப்பா பிள்ளைகள் பெரியப்பாவின் மருமகன் அத்தையின் மகன் என்று பலரையும் கொண்டுவந்தான், புஷ்கரின் தந்தைக்கு மகன் புனித் போலத் திறமைசாலியாக இல்லை என்ற எரிச்சல் நிறைய இருந்தது, வார்த்தைகளால் அவனைக் குத்திக்கொண்டே இருந்தார்.
“அவனைப் பார் எப்படி வேலை செய்கிறான், எப்படி சம்பாதிக்கிறான் வீடு கட்டினான்” என்று புனித்தின் மேல் ஒரு வன்மத்தை புஷ்கரின் மனதில் விதைத்தார், குடிக்கவும் செய்தான் சம்பளம் கையில் நிற்காமல் தண்ணீராய் செலவழிந்தது கட்டிய வீடு பாதியில் நிற்கப் புனித்திடம் பணம் கேட்டான்.
பலமுறை சிறிது சிறிதாக உதவியவன் அதற்குமேல் முடியாது என்றான், அன்று இரவு அதிவீரன் உடல்நலம் இல்லாமல் உறங்கிவிட புனித்துடன் வீட்டிற்கு வந்தவன் மீண்டும் பணம் கேட்டு நச்சரித்தான், வார்த்தைகள் தடிக்க குடிபோதையில் இருந்தவன் ஒரு நொடி கோபத்தில் செய்துவிட்டான்.
ரத்தம் பீச்சி அடிப்பதை பார்த்ததும் போதை முழுவதுமாக இறங்கிவிட்டது, சிறிது நேரம் ஒன்றும் புரியாமல் தடுமாறியவன் மனதில் தோன்றிய திட்டத்தை நிறைவேற்றினான் கத்தியை ஆதியின் அறையில் அவனின் கைரேகையை பதித்து ஒளித்துவைத்துவிட்டு வெளியேறும்போது கதவை அடைக்க அது ஆட்டோமேட்டிக் லாக் என்பதால் தானாகப் பூட்டிக்கொண்டது.
வழக்கின் திசையே மாறிப்போக சரியாக விசாரிக்காமல் ஒரு நிரபராதியை மூன்றரை வருடம் தண்டித்து அவன் வாழ்வின் நாட்களை வீணடித்துவிட்டார்கள் என்று காவல்துறை மீது நஷ்டஈடு கேட்டு வழக்கைப் பதிந்துவிட்டார் அதிவீரனின் வழக்கறிஞர்.
புஷ்கரை கைதுசெய்தனர் அதிவீரனின் விடுதலை நாளில் ராகேஷ் அங்கேயே காத்திருந்தான், அதிவீரனை பார்த்தநொடி ஓடி சென்று அனைத்துக்கொண்டவனை தானும் அனைத்தவன் மெல்ல தட்டிக்கொடுத்தான், ஆள் மெலிந்து பாதியாகியிருந்தான் அந்த சிரிப்பு மட்டும் கொஞ்சம் மிச்சமிருந்தது.
“பேசுங்கண்ணா எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருக்காங்க” என்றான் அலைபேசியை எடுத்துக்கொண்டு, திரையில் தெரிந்த மகனை ஆசைதீர பார்த்துநின்றார் பார்வதி, மனைவியை அவன் விழிகள் தேட “பார்க்கமாட்டேன்” என்றுவிட்டாள் அவன் தேன்மிட்டாய்.
“என்னை போகச்சொல்லிவிட்டார் வேறு வாழ்க்கையை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டார் அவருடன் பேசமாட்டேன்” என்று வீம்பாக நின்றது அந்த குழந்தை.
யாரிடமும் ஒன்றும் பேசவில்லை அனைவரையும் ஒருமுறை பார்த்துக்கொண்டவன் “போதும்” என்றுவிட்டான் ராகேஷிடம், அவனுடைய மூன்றுவருட சம்பளத்தை நஷ்டஈடாக தர அரசு சம்மதித்தது, வெளியில் வந்த அன்றே நேரே நண்பனைக்காணவே சென்றான், கரணும் அங்கிருந்தான்.
“சாரி ஆதி உன்மேல இருந்த கோவத்துல யோசிக்காம அப்படி சொல்லிட்டேன்” என்றான் இந்த மன்னிப்பு எதையும் மாற்றிவிட போவதில்லை “பரவாயில்லை” என்றவன் புனித்தின் கைகளை பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டான்.
புனித்தின் மனைவியும் மன்னிப்பை வேண்டினாள் “எங்க குடும்பத்து ஆள் பண்ணின பாவத்துக்கு உங்கள சபிச்சுட்டேன் மன்னிச்சுடுங்க” என்றவளிடம் “இல்ல வேண்டாம் உங்க தப்பில்லை, ஊருக்கு வந்ததும் சொல்லுங்க” என்றுவிட்டு “சரியாயிடும் கண்டிப்பா உன்னை பார்க்க வருவேன்” என்று கூறி விடைபெற்றான்.
“நஷ்டஈடு சரியாக அம்பது நாட்களில் அவனுக்கு வந்து சேரும்” என்று தெரிவித்தனர்.
அழைத்துவர நங்கள் யாரேனும் வருகிறோம் என்றவர்கள் அனைவரையும் தடுத்துவிட்டான், நிரபராதி என்றவுடன் பஸ் பிடித்து வீட்டிற்கு வந்துவிட முடியாதே அங்கிருக்கும் சட்ட சிக்கல்களைத் தீர்த்து அதன் பிறகே வர முடியும் ஆகையால் கிட்டத்தட்ட ஒருமாதம் அங்கேயே இருந்தான்.
ராகேஷ் மூலம் இந்த மூன்றரை வருடங்கள் நடந்த அனைத்தும் அவன் செவிகளை வந்தடைந்தது “கொடியும் குழந்தையும் நல்லா இருக்காங்களா” என்று ஒருமுறை வழக்கறிஞரிடம் கேட்டபோது “சாரி ஆதி… உங்க மனைவிக்குக் கரு கலைஞ்சிருச்சு” என்ற பதில் அவர் அடுத்தமுறை வந்தபோது தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அது தன் தந்தையால் நிகழ்ந்தது என்பதை அவன் இப்பொழுதே அறிந்துகொணடான், ராகேஷ் உடன்வர சென்னை வந்தடைந்தவனை எப்பொழுதும்போலக் காத்திருந்தார் பார்த்திபன், அவரைப் பார்த்து அவன் அப்படியே நின்றிருக்க சிறுபிள்ளையென ஓடிவந்தவர் அவனை மார்போடு தழுகிக்கொண்டார்.
ஊரைநோக்கி சென்றுகொண்டிருந்த வாகனத்தில் மிகுந்த அமைதி விழிகள் மூடி அவன் சாய்ந்திருக்க அவன் கையைத் தன் கரங்களுக்குள் பொதிந்துகொண்டு வெளியில் பார்வை பதித்திருந்தார் பார்த்திபன்.
வீட்டின் வாயிலிலே நின்றிருந்தனர் ஒட்டுமொத்த குடும்பமும், ஆரத்தி எடுப்பதும் அழுகையும் சிரிப்பும் ஆரத்தழுவலுமாக நெகிழ்சியான தருணங்கள், மனைவியை மட்டும் காணவில்லை மகனை உச்சிமுகர்ந்த பார்வதி “உள்ள இருக்கா போ” என்று அடுக்களைக்கு அனுப்பிவைத்தார்.
சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் கால் முட்டியில் கைகளை விரித்துவைத்து அதில் முகத்தைப் புதைத்திருந்தாள், புடைவை மறைக்காத பாதங்களில் அவன் அணிவித்த மெட்டி இல்லை தான் இல்லாத அவள் வாழ்வு போல அந்தப் பாதங்களும் வெறுமையாக இருந்தது, அவனின் காலடி சத்தம் கேட்டு இன்னும் உடலைச் சுருக்கினாள், மிக அருகில் நெருங்கியவன் அவள் பாதத்தின் மச்சத்தை மெல்ல தன் விரல்களால் வருடி “கொடி…” என்றழைக்க அவள் உடல் நடுங்கியது.
“தப்புதான் நான் அப்படி சொல்லியிருக்க கூடாது, நீ இல்லனா அவ இருக்கமாட்டா அதனால போய்த் தொலன்னு சாமி உன்கிட்டயே என்னைத் திருப்பி அனுப்பிடுச்சு” என்றவனின் விழிநீர் அவள் பாதங்களில் பட்டுதெறிக்க அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டவளின் அழுகை சத்தம் இந்தமுறை அனைவர் முகத்திலும் கண்ணீரையும் தாண்டிப் புன்னகையையும் பூக்கச்செய்தது.