அனைத்தையும் ஒருவிதம் அவனுக்குச் சொல்லிக்கொடுத்தவன் “ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருக்கும் செய்யச் செய்யப் பழகிடும், என்ன வேணும்னாலும் எனக்குப் போன் பன்னு எல்லாரோடையும் அனுசரிச்சு போ, இங்க வேற யாரும் நமக்காக வரமாட்டாங்க” என்று அவனை விட்டுச்சென்றான்.
அந்த வார இறுதி ராகேஷை அழைத்தவன் “அனைத்தும் சரியாக இருக்கிறதா” என்று கேட்டுக்கொண்டான், அடுத்த வாரம் அதிவீரனிடமிருந்து அழைப்பு வரவில்லை இவனே அழைத்துப் பார்க்க… அந்தப்பக்கம் ஸ்விட்ச்ட் ஆப் என்று வந்தது,
“சரி அண்ணா வேரேதும் வேலையா இருப்பாங்க” என்று எண்ணி விட்டுவிட்டான்.
இங்கே இரண்டு நாட்களாகக் கணவனிடமிருந்து அழைப்பு வரவில்லை என்றதில் உள்ளே ஏதோ பயப்பந்து உழன்றது கொடிமலருக்கு, முதல் நாள் அழைப்பு வராதபோது பார்வதிதான் சமாதானப்படுத்தினார் “ஏதாவது வேலையா போயிருப்பான் மலர் சில நேரம் அப்படி நடக்கும் அடுத்தநாள் பண்ணிடுவான்” என்றார்.
மனம் தடுமாறினாலும் அமைதியாக இருந்துவிட்டாள், மறுநாளும் அழைப்பு வரவில்லை பார்வதிக்கே கொஞ்சம் பதட்டம் வந்தது, அதற்க்கு அடுத்தநாளும் எந்தத் தகவலும் இல்லை ‘ஒருவேளை உடல்நிலை சரி இல்லாமல் இருக்குமோ’ என்று நினைத்தனர்
அவனுடன் தங்கியிருந்த ஒருவனை அழைத்துப்பார்க்க அதுவும் எடுக்கவில்லை, மலர் அழத்தொடங்கிவிட்டாள் உணவும் அவளுக்கு இறங்கவில்லை, உடனே தம்பியை அழைத்துவிட்டார் பார்வதி.
“ஆத்தா மலரு ஒண்ணுமில்லமா எதுக்கு பயப்படுற என்னனு நான் பாக்குறேன்” என்றவர், யாரை அழைக்க என்று தெரியாமல் கலங்கி நின்றார்.
முதல் தகவல் பிரபுவிற்கு வந்து சேர்ந்தது ராகேஷ் மூலமாக, செய்தி அவனை வந்து சேரவே இரு தினங்கள் எடுத்தது, எப்படி அங்கே செல்ல வேண்டும் என்ன செய்ய வேண்டும் ஒன்றுமே அவனுக்குத் தெரியவில்லை அவனுடைய நிலை கண்ட உடனிருந்த ஒருவன் அவனை அழைத்துச்சென்றான் காதில் கேட்ட செய்தியை அவனால் நம்பவே முடியவில்லை.
அதிவீரனோடு தங்கியிருந்தவர்கள் இருவருமே மும்பையை சேர்ந்தவர்கள் கரண் மற்றும் புனித், சுதந்திரத்திற்கு முன்பு நாற்பதுகளில் திருநெல்வேலி மற்றும் கும்பகோணத்திலிருந்து மும்பை சென்று செட்டில் ஆனவர்கள் துபாய் வந்த பிறகே மூவருக்கும் பழக்கம் அவர்களுக்குக் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது, நான்கு வருடங்களாக மூவரும் அங்கே இருக்கிறார்கள்.
ஒரு சிறிய அப்பார்ட்மெண்ட் இரண்டு சிறிய அறைகள் ஒரு ஹால் மற்றும் அதோடு தடுப்பு வைத்துக் கிட்சேன், மூவருக்கும் கொஞ்சம் நல்ல வேலை நல்ல சம்பளம் என்பதால் தனியாக வீடு பார்த்து வந்துவிட்டனர், அதிவீரன் துபாய் சென்ற புதிதில் அவர்களுடன்தான் முதலில் இருந்தே தங்கியிருந்தான் அதனாலே நல்ல நட்பு மூவருக்கும்.
அதில் புனித்தை கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்ற குற்றத்தில் அதிவீரன் கைதுசெய்யப்பட்டிருந்தான், இரண்டு மாதங்களுக்கு முன்பு கரண் அதிவீரனுடன் ஏற்பட்ட பிரச்சனையில் வீட்டைக் காலி செய்து வேறிடம் சென்றதாகச் சொல்லியிருக்க சந்தேகம் இன்னும் வலுத்தது.
‘என்ன நடந்தது’ என்பதையே அதிவீரன் அறியவில்லை, இரவு வேலை முடிந்து வந்தபோதே தலைவலியும் காய்ச்சலும் இருந்தது உடல் எல்லாம் நல்ல வலியிருக்க மருந்தை விழுங்கிவிட்டு படுத்துவிட்டான், இடையில் ஏதோ கெட்ட கனவு வரப் பதறி எழுந்திருந்தான்.
மொத்தமாக ரத்தத்தில் குளித்துத் தன் கையில் கிடக்கும் கொடிமலரின் உயிர் மெல்ல மெல்ல அடங்குவதாகக் கோரமான கனவு, உடல் வியர்வையில் குளித்திருந்தது படபடப்பு அடங்கவில்லை தண்ணீர் குடித்தவன் எழுந்து வெளியில் வந்தான், மீண்டும் அறைக்குள் செல்லவே அவன் மனம் விரும்பவில்லை இனி உறங்க முடியும் என்றும் தோன்றவில்லை.
நண்பனிடம் சொல்லிவிட்டு சிறிதுநேரம் நடந்துவரலாம் என்று தோன்றியது, புனித் ஒரு நல்ல நண்பன் எப்பொழுதும் துணை நிற்பவன் கரணை போல அல்ல, கொடிமலருக்கு அப்பொழுதே அழைக்க மனம் துடித்தது அவள் குரலைக் கேட்க வேண்டும் அவளை ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் காட்டுத்தீயாக உயிரை எரித்தது.
புனித்தின் அறை வாயிலில் நின்று கதவைத் தட்டினான் மூன்றுமுறை தட்டியும் அவன் திறக்கவில்லை கதவைத் தாழ் போடுவதில்லை இருவருமே என்றாலும் நாகரிகம் கருதி வெளியில் நிற்க அது திறக்கப்படவில்லை, மெல்ல கதவைத் திறந்து பார்க்க விடிவிளக்கின் வெளிச்சத்தில் புனித் கட்டிலில் நேரே படுத்திருப்பது தெரிந்தது.
அருகில் சென்று எழுப்ப முயன்றவன் அப்படியே உறைந்துநின்றான், தரையில் ரத்தம் குளம் கட்டிக்கிடக்க குரல்வளையில் கொஞ்சம் உயிர் ஒட்டிக்கொண்டு தவித்துக்கொண்டிருந்தான், உலகமே ஒருநொடி ஸ்தம்பித்துவிட்டது அவனுக்கு.
என்ன செய்ய ஏது ஒன்றும் புரியவில்லை உடனடியாக ஆம்புலன்ஸ் அழைத்தவன் போலீசுக்கும் தகவல் கொடுத்தான், உடனடி மருத்துவ உதவி கிடைத்தது புனித்தை அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல உடன் செல்லப் பார்த்த அதிவீரனை பிடித்து நிறுத்திய காவலர்கள் அவன் கையில் விலங்கிட்டனர், நண்பனைக் கொலைசெய்ய முயன்ற குற்றத்திற்கு.
“நான் செய்யவில்லை” என்றவனின் கூற்றை அவர்கள் செவிமடுக்கவில்லை, பூட்டிய வீட்டிற்குள் நடந்த கொலைமுயற்சியில் மூன்றாம் நபர் சம்மந்தப்பட்டிருக்க முடியாது என்பது அவர்கள் வாதம்.
அதிவீரனுக்கு எதிராகவே கரணின் மொழி இருந்தது “அவன் சொல்றதைத்தான் கேக்கணும் சொல்றபடிதான் இருக்கணும்னு ரொம்ப அதிகாரம் பண்ணுவான், எனக்குப் புடிக்காம நான் வந்துட்டேன் புனித்தும் வரேன்னு சொல்லியிருந்தான், என்கிட்டே ஒரு லக்ஷம் வாங்கியிருந்தான் அதை இன்னும் குடுக்கல புனிதக்கிட்ட அஞ்சு லக்ஷம் வாங்கியிருந்தான், ரெண்டுபேருக்கும் அதுல எப்போவும் சண்டை வரும் அந்தப் பிரச்சனைல தான் இப்படி பண்ணிட்டான் போல” என்றிருந்தான்.
மலரின் குடும்பத்தினர் இடிந்து போயினர், பிரபுவே விஷயத்தைப் பார்த்திபனிடம் நேரில் சென்று கூறிவிட்டான் மனிதர் நின்ற நிலையில் அப்படியே தரையில் சரிந்துவிட்டார் “அய்யா என்னய்யா சொல்றீங்க ஐயோ நான் எப்படி இதை என் புள்ளைகிட்ட சொல்லுவேன், என் அக்கா எப்படி தாங்குவா” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுத்தவரை எப்படி தேற்ற என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.
இவரே இப்படி உடைந்து போய்விட்டாரே மலரிடம் இந்தச் செய்தியை எப்படி சொல்ல என்ற பயமே அனைவருக்கும், கருவில் குழந்தையைத் தாங்கி நிற்கிறாள்… பெயரைப் போல மனம் படைத்தவள் கணவனைப் பற்றிய செய்தியோடு யாரேனும் வருவர் என்று வாசலையே பார்த்திருந்த அவளின் தலையில் இடியை இறக்கினார் ராஜவேலு.
தந்தையாக அவர் நடந்து கொள்ளவில்லை என்றாலும் மகனைப் பற்றிய செய்தியை முதலில் அவரிடம் கூறுவோம் பிறகு பார்வதிக்கும் மலருக்கும் பக்குவமாக எடுத்துக் கூறலாம் என்றிவர்கள் முடிவு செய்து ராஜகோபாலிடம் சென்று கூறினர்.
வீட்டிற்கு வெளியே பார்த்திபன் பிரபு பரமு மற்றும் ராஜவேலு நின்று பேசிக்கொண்டிருந்தனர் “அத்த என்ன பேசுறாங்க, மாமாங்க ஏன் உள்ள வராம அங்கேயே நிக்குறாங்க என்னனு கேளுங்க அத்த எனக்குப் பயமாயிருக்கு” என்ற மருமகளை தன்னோடு சேர்த்தனைத்தார் பார்வதி, அவரின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தது.
மகனைப் பற்றித்தான் ஏதோ பேசுகிறார்கள் என்ன என்று தெரியவில்லையே “ஆண்டவா என் புள்ளைய பத்திரமா கொண்டுவந்து சேர்த்திடப்பா” என்ற வேண்டுதலை இடைவிடாமல் உள்ளே ஜபித்துக்கொண்டிருந்தார், ஆதவனிடமும் செய்தி கூறப்பட்டிருந்தது, தடுமாறி அமர்ந்திருந்த சுகுமாரை கிளப்பிக்கொண்டு அவர்கள் அனைவரும் வந்துகொண்டிருந்தனர்.
பிரபு விஷயத்தைச் சொல்லிமுடிக்க கேட்டுக்கொண்டிருந்த ராஜவேலுவின் முகம் கடுமையாக மாறியது “மாமா மலருகிட்ட எடுத்தோம் கவுத்தோம்னு சொல்ல முடியாது கொஞ்சம் பொறுமையா சொல்லலாம், அவங்க வீட்ல வந்திடட்டும்” என்றார் பார்த்திபன்.
“இன்னும் என்னடா பொறுமையா… இவ வந்த நேரம்தான் எல்லாமே நாசமா போச்சு, இவ வந்த நேரம் என் பொண்ணு வீட்டுக்கே வரமுடியுமா அம்மாவீடே இல்லாம நிக்குறா” என்றார் அபாண்டமாக, என்னவோ இவர் மருமகன் உத்தமனாக இருந்த மாதிரியும் இப்பொழுதான் பிரச்சனை செய்வதை போலவும்.
“எந்த நேரத்துல எத பேசுறீங்க உங்ககிட்ட போய்ச் சொன்னேன் பாருங்க” என்ற பார்த்திபன் மாமியாரையும் மருமகளையும் நோக்கி நகர, அவரைத் தள்ளிவிட்டு முன்னே சென்ற ராஜவேலு மலரின் கையைப் பிடித்து இழுத்து வெளியில் தள்ளி “போய்த்தொலை என் புள்ள ஜெயில்ல கிடக்குறானாம் உனக்கு இங்க என்ன வேலை தரித்திரம் பிடிச்சவளே” என்க.
தள்ளிவிட்டதைவிட கேட்ட வசவுகளைவிட அவர் கூறிய செய்தி அவளை மொத்தமாக உடைத்தது “ஐயோ புள்ளையை என்ன பண்றீங்க” என்று இறங்கி அவளின் அருகில் வந்த பார்வதி கணவர் கூறிய செய்தியில் மயங்கிச் சரிந்தார்.
மலரின் வீட்டினர் வந்தபோது கொடிமலரை கைகளில் அள்ளிக்கொண்டு ஓடினர் பிரபுவும் பரமுவும் “மனுஷனா நீ அந்தப் புள்ளைக்கு ஏதாவது ஆச்சு உன்னைச் சும்மாவிட மாட்டேன்” என்று ராஜவேலுவின் சட்டையைப் பிடித்திருந்தார் பார்த்திபன்.
“ஐயோ யாராவது வந்து தூக்குங்க” என்ற செல்வியின் குரலில் அங்கே ஓடினர் அனைவரும், பார்வதியை சுகுமார் தூக்கிக்கொள்ள மலரைத் தேடி ஓடினர் அவள் வீட்டினர், இருவரையும் மருத்துவமனையில் சேர்த்து வெளியில் அமர்ந்திருந்த குடும்பத்திற்கு உயிரே இல்லை.
அனைவரும் முகம் வெளிறி அழுது ஓய்ந்து அமர்ந்திருந்தனர், தங்களின் மூத்த மகளுக்கு வாரிசு வருகிறது என்ற அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியை ஒரு நொடியில் அழித்திருந்தார் ராஜவேலு.