“வீட்ல வந்து ரெண்டு நாள் இருக்கியா பாப்பா” என்ற அண்ணன்களை நிமிர்ந்து பார்த்தவள் விழிகள் பார்வதியின் மீது பதிந்தது.
“போ மலரு உனக்கும் கொஞ்சம் மாறுதலா இருக்கும்” என்றார் அவர், மீண்டும் அண்ணனைப் பார்த்தவள் “இல்லண்ணா அத்த தனியா இருப்பாங்க நான் அப்புறம் வரேன்” என்க பார்வதியின் விழிகள் நிறைந்தது.
அதிவீரனுக்கு பிறகு அவரின் தனிமையை பற்றிப் புரிந்துகொண்ட ஒரே ஜீவன் “எண்ணப்பத்தி யோசிக்காத மலர் எனக்குப் பழகிடுச்சு” என்ற பார்வதியின் அருகில் சென்றவள் “மாட்டேன் என் எடத்துல இருந்து அம்மாவ நீதான் பாத்துக்கணும்னு என்கிட்டே சொல்லிட்டு போயிருக்கார்” என்றாள் மாமியாரை கட்டிக்கொண்டு.
ஆதரவாக அவள் முதுகை வருடிநின்றார் பார்வதி “சரி சரி இப்போ வர வேண்டாம் அடுத்த மாசம் ஊர் திருவிழா வருது அத்தையை கூட்டிட்டு வந்து ஒருவாரம் அங்க தங்கிட்டு போகணும் சரியா” என்ற வள்ளியிடம் சம்மதமாகத் தலை அசைத்தாள்.
அவர்கள் சொன்னதுபோலவே மருமகளுடன் அவள் வீட்டிற்கு சென்று இரண்டு நாட்கள் தங்கினார் பார்வதி, திருவிழாவில் கயல்விழியுடன் குழந்தையாகத் துள்ளி திரியும் மருமகளை வாஞ்சையாகப் பார்த்திருந்தார்.
கோவில் பூஜை, திருவிழா கடைகள், இரவில் சாமி ஊர்வலம் விடிய விடிய உறவுகளுடன் கதை என்று பார்வதியின் வாழ்விலே பொன்னான இரண்டு நாட்கள், திருவிழாவிற்கு வாருங்கள் என்று ராஜவேலுவையும் அழைத்திருந்தான் சுகுமார் ஈகோவை கட்டிக்கொண்டு திரிபவருக்கு அதெல்லாம் புரியவில்லை.
கணவனையும் உடன் வரச்சொல்லி அழைத்தார் பார்வதி, அவரோ மனைவியை முறைத்துவிட்டு சென்றார்.
“மா நீங்கக் கொடி கூடப் போய்ட்டுவாங்க உங்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும்” என்ற மகனின் கூற்றில் தயக்கத்தை விட்டுக் கிளம்பிவிட்டார்.
வீட்டுப்பெண்களுக்கு எடுத்தைப்போலவே நல்ல பட்டுப்புடவையை பார்வதிக்கும் எடுத்துக்கொடுத்திருந்தனர் மலர் வீட்டினர் பூஜைக்காக.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது காலை இரவு இரண்டு வேளையும் தவறாமல் அழைத்துவிடுவான் அதிவீரன், பேச்சுக்கள் குறைவே ஒருவரை ஒருவர் பார்த்திருக்கவே அந்த அழைப்பு.
பிறந்தநாளுக்கு இன்னும் எவ்வளவு நாட்கள் இருக்கிறது என்று காலை எழுந்தவுடன் தாயிடம் வந்து கேட்கும் குழந்தைபோல் தினமும் காலை நாட்க்காட்டியில் ஒவ்வொரு நாள் குறைவதையும் மின்னும் விழிகளுடன் பார்த்திருந்தாள்.
சில சமயம் முதலில் தாயின் போனிற்கு அழைப்பான் சில சமயம் மனைவியை அழைப்பான் என்னவானாலும் சரியாக அழைப்பு வந்துவிடும், இரண்டு மாதங்கள் கடந்திருந்த நிலையில் அன்று காலை மனைவியை அழைத்திருக்க அலைபேசியை ஆன் செய்தவள் முகத்தைக் காட்டாமல் பார்வதியின் பின்னில் ஒளிந்திருந்தாள்.
மகனின் விழிகள் மனைவியைத் தேடுவதை பார்த்த பார்வதி “புள்ளயே பொறக்க போகுது இன்னும் சின்னப் புள்ள மாதிரி கண்ணாம்மூச்சி வெளயாடுறா பாரு” என்றார் முகம் முழுதும் சந்தோஷத்தோடு, அவரின் கூற்றில் சிரித்துக்கொண்டிருந்தவன் தாய் அவனை வாஞ்சையோடு பார்த்திருப்பதை கவனித்தான்.
“மா…” என்றான் ஒரு வித எதிர்பார்ப்போடு “மலர் கர்ப்பமா இருக்கா ஆதி நான் பாட்டியாகப்போறேன், என் ஆதிக்கு ஒரு குட்டி வரப்போறான்” என்றார் நெகிழ்ச்சியாக.
இருகைகளாலும் முகத்தின் பாதியை மறைத்து அமர்ந்திருந்தவன் விழிகள் அவனுள்ளே நிறைந்து தளும்பும் சந்தோஷத்தைப் பறைசாற்றியது, மலரின் கையில் அலைபேசியை கொடுத்த பார்வதி “ரூமுக்கு போ” என்று அவளை அனுப்பிவைத்தார்.
கட்டிலில் அமர்ந்திருந்தவளின் விழிகள் இப்பொழுதும் நிலம் நோக்கியே இருந்தது “கொடி பாருடி” என்றவனின் குரலில் அவனை நிமிர்ந்து பார்த்தவள் விழிகளில் ‘அவன் அருகில் வேண்டும்’ என்னும் ஏக்கம் கொட்டிக்கிடந்தது.
இந்த நொடி அருகிலிருந்து அவளை அணைத்து நிற்கும் சுகத்திற்கு ஏங்கியது அவன் உள்ளம், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தது பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
“டாக்டர்கிட்ட போனியா”.
“ஹ்ம்ம்…”
“என்ன சொன்னாங்க”.
“நேரத்துக்குச் சாப்பிடணும் ப்ருட்ஸ் எடுத்துக்கணும் சொன்னாங்க, டேப்ளெட்ஸ் குடுத்துருக்காங்க” என்றவள் “பயமா இருக்கு எனக்கு நீங்க வேணும் என் பக்கத்துல, டாக்டர் நல்லா தூங்க சொல்றாங்க, ஆனா எனக்குத் தூக்கம் வரமாட்டுது எப்போ வருவீங்க” என்றவளை பார்த்தபோது நெஞ்சம் வலித்தது.
“வேண்டாம்” என்றாள், அவள் மிகவும் சோர்ந்திருப்பதாகத் தோன்றியது அதிவீரனுக்கு “கொஞ்சம் நேரம் தூங்கு கொடி நான் கூடவே இருக்கேன்” என்றான்.
அலைபேசியை தன்னருகே வைத்துக்கொண்டவள் அவனைப் பார்த்துக்கொண்டே மெல்ல மெல்ல உறக்கத்திற்கு சென்றாள், அவள் நன்றாக உறங்கியதை உறுதி படுத்திக்கொண்டவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு பார்வதியை அழைத்தான்.
“அவ சரியா தூங்கறதில்லைனு எனக்குத் தெரியவேயில்லை, கேட்டா தூங்க முடியல அத்த சொல்றா நேத்து டாக்டர் சொன்னதுல இருந்து அவகூட ரூம்லயே நானும் படுத்துக்குறேன் ஆதி, நீ கவலைப்படாத தம்பி அம்மா பாத்துக்குறேன் எல்லாரும் இருக்கோமே” என்றார் மகனின் கலங்கிய முகம் பார்த்து மனதே இல்லாமல் தான் அன்று வேலைக்குச் சென்றிருந்தான்.
விடிந்தும் விடியாத காலை வேளையில் மலரின் மொத்த குடும்பமும் வந்து நிறைந்துவிட்டது அதிவீரன் வீட்டில், பழங்கள் பேரிச்சை நட்ஸ் பூ புடவை பலகாரம் என்று கூடத்தை நிறைத்துவிட்டனர்.
நிர்மலாவே வாய் பிளந்துவிட்டாள் ‘அடேயப்பா மாசமா இருக்கான்னு சொன்னதுக்கா இம்முட்டு’ என்று கல்யாணமே ஒரு குறை சொல்ல முடியாமல்தான் நடத்தினர்.
அன்று தேன்மிட்டாய் கொடுத்தார்கள் என்று கேவலமாய் நினைத்த ராஜவேலு கூடக் குறை சொல்லமுடியாமல் நின்றார் “பாப்பா உனக்கு ஒரு பாப்பாவா” என்று தலையில் கை வைத்து ஆசிர்வதித்த அண்ணணனின் தோள் சாய்ந்துகொண்டாள்.
வீட்டினரை பார்த்ததும் கொஞ்சம் தெம்பு வந்தது, சுமதியும் கஸ்தூரியும் அவளை வீட்டிற்கு அழைத்துச்செல்ல கேட்கலாமா என்ற யோசனையில் இருந்தனர், ஏனோ மிகவும் சோர்வாக இருந்தாள், இங்குப் பார்வதி தவிர யாருமில்லை அவளிடம் சகஜமாகப் பேசவோ பழகவோ, அவள் வீட்டிலானாள் எப்பொழுதும் வீடே சலசலவென்று உயிர்ப்போடு இருக்கும்.
கணவன் அருகில் இல்லாத இந்த நேரத்தில் தங்களுடன் இருந்தாள் கொஞ்சம் சந்தோஷமாக இருப்பாள் என்று தோன்றியது, அவர்கள் இருவரும் இதுபற்றி யோசித்துக்கொண்டிருக்க வள்ளி நேரடியாகப் பார்வதியிடம் பேசிவிட்டாள்.
“மா… மலரக் கொஞ்சநாள் வீட்டுக்குக் கூட்டிட்டு போகவா” என்று, ராஜவேலுவை திரும்பிப் பார்த்தார் பார்வதி, யார் இருந்தால் என்ன போனால் என்ன என்று அவர் அமர்ந்திருக்க பார்வதிக்கு மனதே விட்டுப்போனது “இதுல என்ன இருக்கு தாராளமா கூட்டிட்டு போங்க” என்றவர் “மலர் போமா ரெடி ஆகு” என்க.
“அவர்கிட்ட சொல்லலையே அத்த”.
“ஆதி ஒன்னும் சொல்லமாட்டான் அவனுக்கு உன்னைப்பத்தின கவலைதான் சாப்பிடுறாளா தூங்குறாளான்னு, நீ வீட்டுக்குப் போ உனக்கும் ஒரு மாறுதலா இருக்கும் கிளம்புடா” என்க, அவர்களுடன் வீட்டிற்கு சென்றாள், பத்து நாட்களில் நன்றாகத் தேறியிருந்தாள்.
நல்ல கவனிப்பு அதோடு அவள் தாயின் பிடித்தமான இடமான நார்த்தங்காய் மரத்தின் கல் திட்டு அதில் படுத்துக்கொள்ள தாயின் மடியில் கிடந்த சுகம் கிட்டியது, அங்கு வராத உறக்கம் இங்கே அவளைத் தழுகிக்கொண்டது, தினமும் காலை மாலை கணவன் அழைப்பதைப் போல மாமியாரும் அழைத்துவிடுவார், இரண்டுவாரங்கள் சென்று அவளைப் புகுந்த வீட்டில் கொண்டு விட்டுவந்தனர்.
அதிவீரன் சொன்னது போலவே அனைத்தையும் தயார் செய்து அனுப்பி வைத்தான் ராகேஷ், முன்பே தன்னுடைய கம்பெனியில் பேசியிருக்க இவன் பணிசெய்யும் இடத்திலிருந்து இரண்டுமணி நேர பயணத்தில் இருக்கும் அவர்களுடைய வேறொரு சிறிய கம்பெனியில் சேர்த்துக்கொள்ளலாம் என்று கூறியிருந்தார்கள்.
அங்கேயும் நல்ல சம்பளம் கிடைக்கும், ராகேஷின் வேலைசெய்யும் முறை திறமையைப் பொறுத்து சம்பளத்திலும் வேளையிலும் உயர்வு வரலாம், ராகேஷின் விசா வந்து சேர்ந்தது, அடுத்த இருபது நாட்களில் துபாய் சென்றுவிட்டான், போவதற்கு முன் அதிவீரனின் வீட்டிற்கு வந்து அனைவரிடமும் முறையாகக் கூறிக்கொண்டான்.
ராகேஷை அதிவீரனே ஏர்போர்ட் வந்து அழைத்துச்சென்றான் நேரே அவனுக்கென்று பார்த்திருந்த தங்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றவன் “நல்லா தூங்கி எழு சாப்பாடு சொல்லியிருக்கேன் இவங்க பாத்துப்பாங்க” என்றான் அந்த அறையில் இருந்தவர்களை காண்பித்து.
அதிவீரனை அவர்களுக்குத் தெரியும் “டேய் பாத்துக்கோங்க நான் நாளைக்கு வரேன், ஆபிஸ் நாளைக்கு போலாம்” என்றான், மறுநாள் காலையே வந்து ராகேஷை அழைத்துச்சென்று கம்பெனியில் அறிமுகப்படுத்தி வைத்தான்.