வீடே பரபரப்பாக இருந்தது அந்த அதிகாலை வேளையில் இன்று திரும்பிச் செல்கிறானே, மகனுக்குக் காப்பியை ஆற்றிக்கொண்டிருந்த பார்வதி இந்தமுறை கொஞ்சம் சந்தோஷத்தோடு இருந்தார்.
இந்த முறை செல்வதுதான் இறுதி இதோடு வந்துவிடுவான் குடும்பமாக அவன் வாழ்வதை கண்நிறைய காண மனம் விரும்பியது.
நிச்சயம் நடக்கும் தினத்தில் குழந்தையை ஆப்பரேஷன் செய்து எடுத்துவிட வேண்டும் என்று முடிவோடு இருந்த நிர்மலாவின் திட்டம் நடக்கவில்லை அவளின் பெற்றோரே அதற்க்கு மறுத்துவிட்டார்கள்.
“இன்னும் நாள் இருக்கு, ஆதி தம்பியே நேர்ல வந்து அழைச்சுட்டு போயிருக்கு நாங்க நிச்சயத்துக்கு கண்டிப்பா போவோம் உனக்குத் துணைக்கு பக்கத்துவீட்டு ராணி இருப்பா நாங்க வரவரைக்கும் இல்ல… அன்னைக்குதான் போவேன்னு போனீன்னா நீயும் உன் வீட்டுக்காரரும் மட்டும்தான் போகணும் நாங்க வரமாட்டோம்” என்று முடிவாகச் சொல்லிவிட்டார் அவளின் தாய்.
ஆதவனும் “கொஞ்சம் புரிஞ்சுக்கோ நிம்மி சொந்த தம்பி நிச்சயம் நான் போகலானா நல்லா இருக்காது எல்லாரும் ஒருமாதிரி பேசுவாங்க நாளைக்கே நம்ம பிள்ளைக்குப் பேர் வெக்குறது தொட்டில் போடறது எல்லாத்துலயும் நமக்கும் சொந்தம் வந்து நிக்கனும்ல” என்க அரை மனதாகச் சம்மதம் கூறிவிட்டாள்.
“அடடே யாரிது வாங்க வாங்க…” என்ற பார்த்திபனின் குரலில் அனைவரின் பார்வையும் வாயில் புறம் சென்றது விடிந்தும் விடியாத அந்த நேரத்தில் வாசலில் நின்றிருந்தனர் சுகுமாரும் முத்துவும்.
“உள்ளவங்கப்பா என்ன வாசலையே நிக்குறீங்க” என்றார் பார்வதி.
உள்ளே வந்தவர்களுக்கு மிகுந்த தயக்கம் இருந்தது நேற்று நிச்சயம் முடிந்திருக்க இன்று பெண்வீட்டிலிருந்து இப்படி காலையிலே வந்து நிற்பதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்றதோடு, கையில் இருக்கும் பொருளை எப்படி கொடுக்க என்ற தயக்கமும் இருந்தது.
தங்கை முகம் வாடுவதை காண முடியாமல் கொண்டுவந்துவிட்டார்கள் ஆனால் இங்கே அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள், கீழே பேச்சுக்குரல் கேட்டு வேகமாகக் கீழிறங்கிவந்தான் அதிவீரன்.
“வாங்க” என்றவன் அழைப்பில் ஒரு சிரிப்பை உதிர்த்து தலை அசைத்தனர் இருவரும்.
“எல்லாம் எடுத்தாச்சா மாப்ள” என்றான் முத்து “ஹ்ம்ம் எல்லாம் எடுத்தாச்சு எனக்காக நீங்க ஒண்ணுமே கொண்டுவரலயா” என்றான் அவர்களை ஆழ்ந்து பார்த்து.
“அது…” என்று இருவரும் தயங்க “எனக்குக் கொண்டுவந்தத தராம திரும்ப எடுத்துட்டு போறீங்களா” என்றவன் அருகில் நெருங்கிக் கையில் இருந்த பையை வாங்கினான், பிரித்துப் பார்த்தவன் இதழ்கள் மெல்ல விரிந்தது.
‘அவளைப் பிடித்ததால் தானே எனக்கு இதுவும் பிடித்தது’ என்று மனதில் நினைத்துக்கொண்டவன் அந்தக் கண்ணாடி குப்பியை வெளியில் எடுத்தான், நல்ல குண்டு குண்டாக ஜீராவில் ஊறிய தேன்மிட்டாய் சிகப்பு நிறத்தில் கண்ணைப் பறித்தது.
“தூ இதைத்தான் காலையிலே தூக்கிட்டு வந்தானுங்களா பிச்சைக்கார பயலுங்க” என்று முணுமுணுத்தார் ராஜவேலு நல்லவேளையாக அது யாரின் செவியிலும் விழவில்லை.
‘கேவலம் வெறும் தேன்மிட்டாய்’ என்ற எண்ணவோட்டத்தில் பார்த்த ராஜவேலுக்கு புரிய வாய்ப்பில்லை அதில் இருக்கும் ஒவ்வொரு மிட்டாயும் சுமந்து வந்திருப்பது கொடிமலரின் காதலையும் அன்பையும் என்பதை.
“அக்கா பாத்தியா இப்போவே மருமக எப்படி கவனிக்குதுன்னு” என்றார் பார்த்திபன்.
“ஆமாடா” என்ற பார்வதி “ஏய்யா ஆதி ஒரு மிட்டாய் குடு என் மறுமவ எப்படி செஞ்சிருக்கான்னு நானும் சாப்பிட்டு பாக்குறேன்” என்க.
அனைவரின் கையிலும் ஒரு ஒரு மிட்டாயை வைத்தவன் “அவ்ளோதான் இனிமே யாரும் கேட்கக் கூடாது” என்றுவிட்டு பாட்டிலோடு மாடிக்குச் சென்றான், அனைவரின் கேலிச்சிரிப்பும் அவனைப் பின்தொடர்ந்தது.
“என்னையே வெட்கப்பட வெச்சுட்டியே தேன்மிட்டாய்” என்று அவளை மனதில் கொஞ்சிக்கொண்டவன் பெட்டியில் வைத்திருந்த துணிகள் சிலவற்றை எடுத்து விட்டுப் பாட்டிலை பத்திரப்படுத்தினான்.
அனைவரின் எதிர்ப்பார்ப்பு என்ன கொடிமலரின் கவலை என்ன என்பதை இருவரிடமும் தெளிவாகக் கூறியாகிவிட்டது மீண்டும் மீண்டும் அதை அதேயே பேச அவன் விரும்பவில்லை ஆகையால் பொதுவாகப் பேசிவிட்டு விடைபெற்றான், ஆனால் சுகுமாரும் முத்துவும் அதை எளிதாக எடுத்துக்கொண்டனர்.
அக்காள் மற்றும் அவர்களின் கணவர்கள் கூறுவதை போல அவனும் கூறுகிறான் என்று எண்ணிவிட்டார்கள் அவனின் உறுதி தெரியவில்லை பிடிவாதம் புரியவில்லை.
நாட்கள் மாதங்களாகக் கரைந்தது “நிச்சயம் முடிஞ்ச பொண்ண இன்னும் வீட்டிலேயே வெச்சிருக்கீங்க மாப்ள வரதப்பத்தி ஒன்னும் சொல்லலையா” என்ற சுற்றத்தாரின் கேள்வியில் மெல்ல மெல்ல பயம் வரத்தொடங்கியது இருவருக்கும்.
இவர்களே அழைத்துப் பேசினர் அதிவீரனுக்கு அனைவரின் நலத்தையும் விசாரித்தவன் வேறு வேறு விஷயங்களைப் பேசினான் ஒழிய ஊருக்கு வருவதை பற்றி ஒன்றும் பேசவில்லை “மாப்ள கல்யாணம் எப்போ வெச்சுக்கலாம் எப்போ வரீங்க” என்றான் முத்து.
“பொண்ணு பாத்துட்டிங்களா எந்த ஊரு!” என்றவனை இருவரும் புரியாமல் பார்த்து “மாப்ள உங்களுக்கும் மலருக்குமான கல்யாணம் பத்தி பேசுறோம்” என்க.
அமைதியாக இருந்தவன் “அப்போ நான் சொன்ன எதைப்பத்தியும் நீங்க யோசிக்கல இதை உங்ககிட்ட எதிர்பார்க்கல மச்சான்” என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.
பலமுறை அனைவரும் பேசிப்பார்த்தும் தங்கள் முடிவில் மாறாமல் நின்றனர் இருவரும், இப்பொழுது நேரம் கடந்துகொண்டிருக்க என்ன செய்ய என்ற பதட்டம் சூழ்ந்தது இப்படி ஒரேயடியாய் பிடிவாதம் பிடிப்பான் என்று நினைக்கவில்லையே.
ஞாயிறு காலைக் குளித்து அழகாகப் பின்னலிட்டு பூச்சூடி நார்த்தங்காய் மரத்தின் திட்டில் அமர்ந்திருந்தாள் கொடிமலர், கடந்து போன பதினோரு மாதத்தின் அனைத்து ஞாயிற்று கிழமை காலை வேலையும் இப்படியே என்றாலும் அந்தப் படபடப்பும் வெட்கமும் கொஞ்சம் கூடக் குறையவில்லை.
அலைபேசி அவன் அழகிய முகத்தோடு மிளிர்ந்தது, கொடிமலருக்கு தனியாக அலைபேசி கிடையாது சுகுமாரின் அலைபேசிக்கே அதிவீரனின் அழைப்பு வரும், புதிதாக ஒன்றை வாங்கி கொடுக்க அவனுக்கு மிகுந்த ஆசை இருந்தபோதும் செய்யவில்லை.
அவளுக்கு இது இறுதிவருடம் அதோடு நிச்சயம் முடிந்துவிட்டது என்றாலும் திருமணம் எப்பொழுதும் நடக்கும் என்று அவனுக்கே உறுதியாகத் தெரியவில்லை, பதினோரு மாதம் கடந்த பிறகும் கொடிமலரின் அண்ணன்மார்கள் தங்கள் திருமணத்தைப் பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை.
‘அன்று ஏதோ ஒரு வேகத்தில் பேசிவிட்டார் மாப்பிள்ளை நிச்சயம் கொடிமலரை அதிக நாட்கள் பிரிந்து அவரால் இருக்க முடியாது எப்படியும் ஒரு வருடத்திற்குள் வந்துவிடுவார்’ என்று கற்பனை கோட்டை கட்டி வைத்திருந்தனர்.
தினம தினம் அவளைப் பார்க்க முடியாத ஏக்கம் நெஞ்சம் முட்ட நின்றும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான் அதிவீரன்.
அழைப்பு ஏற்கப்பட்டவுடன் அவன் முகத்தை ஒருமுறை பார்த்தவள் எப்பொழுதும் போல விழிகளைத் தாழ்த்திக்கொண்டாள், அழைப்பு ஏற்கப்பட்டவுடன் அவன் பேசுவதில்லை அந்த மதிமுகத்தை முழுதாகத் தன் விழிகளில் நிரப்பிக்கொள்வான்.
பல நொடிகளுக்கு அவனிடம் மௌனம் மட்டுமே ஆட்சி செய்யும் அதன்பிறகு தொடங்கும் முதல் வார்த்தையே “கொடி…” என்பதாகத்தான் இருக்கும், இன்றும் அந்த அழைப்பில் அவள் விழிகள் மீண்டும் அவனில் பதிந்தது.
“நல்லாயிருக்கியா” என்றவனுக்கு “ம்ம்” என்ற பதிலை மட்டும் கொடுத்தாள், அவன் விரல்கள் மெல்ல நீண்டு திரையில் தெரிந்த அவள் கன்னத்தை வருடியது, நேரிலே தொட்டுவிட்டதை போலச் சட்டென்று சிவந்துவிட்டாள் கொடிமலர்.
உண்மையில் வெகுவாக அவனைத் தேடுகிறது அவளுக்கும், வாய்விட்டு அண்ணன்களிடம் கேட்க முடியவில்லை என்ன முடிவு உங்கள் திருமணத்தைப் பற்றி எடுத்திருக்கிறீர்கள் என்று.
அக்கா மாமா அனைவரும் பேசிப்பார்த்தும் திருமணம் வேண்டாம், இனிமேல் எதற்கு என்ற முடிவிலே இருக்கிறார்கள் இருவரும், ஒருமுறையாவது அவர்கள் மனது மாறாதா என்று காத்திருந்து காத்திருந்து ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது அவளுக்கு.
“ஏன் வரணும் கொடி” என்றவனிடம் “எனக்கு… எனக்கு உங்களைப் பாக்கணும்” என்றாள் விதும்பலோடு.
“உப்ப்” என்று தலையை அழுந்தக் கோதிக்கொண்டான், அவளிடமிருந்து முதல்முறையாக இப்படியொரு வார்த்தை ‘உன்னைத் தேடுகிறேன் என் அருகில் நீ வேண்டும்’ என்று கேட்டு நிற்கிறாள்.
“பதினோரு மாசம் தேவப்பட்டுச்சா கொடி உனக்கு என்ன தேடுறதுக்கு” என்றவனின் குரலில் இருந்த உணர்வு என்ன என்று புரியவில்லை அவளுக்கு, அந்தக் குரல் உயிர்வரை சென்று சுட்டது.
தங்கையின் அழுகை சத்தத்தில் ஓடி வந்த சுமதி கண்டது தவிப்பில் இருக்கும் இரு உயிர்களைத்தான், வந்த சுவடே தெரியாமல் மீண்டும் உள்ளே சென்றுவிட்டாள்.
பரிதாபமாகத் தங்கையையும் அக்காவையும் பார்த்துநின்றார்கள் சுகுமாரும் முத்துவும் “என்னதான்டா பிரச்சனை உங்களுக்கு நாங்க இத்தனை பேர் சொல்லியும் கேக்கல, இப்போ அவர் சொல்லியும் கேக்கல நீங்க என்ன சொல்றது நாங்க என்ன கேக்குறதுனு இருக்கீங்கல”.
“நாங்க என்ன பொட்டச்சிங்க, அம்மா அப்பா அண்ணன் தம்பி யார் சொன்னாலும் சொல்றவனுக்கு கழுத்தை நீட்டனும் அங்கே சண்டையோ சச்சரவோ அடியோ மிதியோ அமைதியா குடும்பத்தை நடத்தி வம்சத்தை வளக்கணும், ஒரு பொட்டச்சிக்கு கல்யாணம் வேண்டாம் இல்ல இவனைத்தான் கட்டிப்பேன்னு தைரியமா சொல்ற… பிடிவாதமா நிக்குற உரிமை இருக்கா குடுப்பீங்களா யாரவது”.
“நீங்க ஆம்பள உங்களுக்குப் பிடிச்சமாதிரி இருந்துபீங்க உங்ககிட்ட என்ன கேட்டோம் சொத்தைக் குடு வீட்டைகுடுன்னா கேட்டோம் உங்களுக்குனு ஒரு துணையை கொண்டுவாங்கன்னுதானே கேக்குறோம் அதுக்குகூட எங்களுக்கு உரிமை இல்லையா”.
“நாங்க நல்லா இருக்கணும்னு நீங்க நினைக்கிற மாதிரி நீங்கப் பொண்டாட்டி புள்ளை குட்டின்னு இருக்கணும்னு நாங்க நினைக்கக் கூடாதா, போதும்டா சாமி உங்ககிட்ட மல்லுக்கட்ட முடியல இந்த வருஷத்துல இருந்து பொங்கல் தீபாவளிக்கு பொறந்த வீட்டு சீறு எங்களுக்கு நீங்கக் கொண்டுவர கூடாது, உங்க பொண்டாட்டியோட வரதா இருந்த எடுத்துட்டு வாங்க இல்ல நீங்களே வெச்சுக்கோங்க” என்ற சுமதி “வாடி” என்று மலரின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள்.
இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை சகோதரர்கள், ஒரே மாதம் நடையாய் நடந்து வாழ்க்கை துணையை கண்டுபிடித்துவிட்டார்கள், துணை நின்றவர் பார்த்திபன்.
கையிலே வைத்திருந்தார் சில சம்பந்தங்களை இவர்களாகக் கேட்க்காமல் எப்படி கொடுப்பது என்ற எண்ணத்தோடு, நாட்கள் செல்லச் செல்ல அவருக்கு வருத்தமும் கூடியது அவர் மருமகனின் வாழ்க்கையாயிற்றே.
செல்விக்கு இது இரண்டாம் திருமணம் அப்படியும் சொல்லிவிட முடியாது தாலி மட்டுமே கட்டப்பட்டது, அன்று இரவே அது இறங்கியும்விட்டது ஏழை குடும்பத்தில் பிறந்த சகோதரிகள் செல்வியும் வள்ளியும்.
செல்வியின் இருப்பத்தியொன்பதாம் வயதிலே அவளுக்கு ஒரு திருமணம் கூடி வந்தது, மாப்பிள்ளைக்கு முப்பத்தியெட்டு வயது தேடி தேடி பார்த்து இறுதியாக வசதி இல்லையென்றாலும் பரவாயில்லை பெண் கிடைத்தால் போதும் என்று செல்வியை மனம் முடித்தார்கள்.
இரவு மாப்பிள்ளை வீட்டில் நடந்த கறி விருந்தில் சாராயம் தலைக்கேறிய ஒருவன் வாய் தகராறாகத் தொடங்கிய பிரச்சனை கைகலப்பாகி வீச்சருவாளில் முற்று பெற்றபோது காலைப் புதுப்பெண்ணுக்கு குங்குமம் வைத்த மாப்பிள்ளையின் வலது கை முழுதாக வெட்டப்பட்டு தரையில் கிடந்தது.
யாரோ தொடங்கிய பிரச்சனையில் சம்மந்தமே இல்லாமல் மாப்பிள்ளையின் கைப்பறிபோக எந்தப் பாவமும் அறியாத செல்வியின் தலையில் அனைத்து பழியும் விழுந்தது.
“உன் கழுத்துல தாலி கட்டுனதுக்கே என் புள்ளைக்கு கைப்போய்டுச்சு உன்கூட வாழ ஆரம்பிச்சுருந்தா அவனை நாங்க உயிரோட பாத்துருக்கவே முடியாது போல” என்று அவள் கழுத்தில் கிடந்த தாலியை பிடுங்கிக்கொண்டு அனுப்பிவிட்டனர்.
அக்காவைப் போலத் தங்கையின் ராசியும் இருந்தால் என்ன செய்ய என்ற பயமே அந்த வீட்டுக்கு எந்த வரன்களையும் கொண்டுவரவில்லை, இந்தப் பிள்ளைகளின் வாழ்வு என்னவாகும் என்ற கவலையே தந்தையை படுக்கையில் தள்ளியது, தையல் வேலை வயல் வேலை என்று செய்து எப்படியோ நாட்களை ஓட்டினார்கள்.
அவர்களுக்கு வயதான தாய் தந்தையை தனியே விட முடியாது இவர்களுக்குக் குடும்பத்தைப் பிரிக்காமல் ஒற்றுமையாக வழிநடத்துபவர்கள் வேண்டும் இரண்டு பக்கமும் பெரிதாக எதிர்ப்பார்ப்புகள் இல்லை.
சுகுமார் முத்துவின் கண்ணியமான நடத்தையும் “எங்க அக்கா தங்கச்சி எங்ககூட இருக்கணும்னு நாங்க விரும்புற மாதிரி அம்மா அப்பாவைக் கூட வெச்சுக்கணும்னு நீங்க விரும்புறதும் நியாயம்தானே இதுல நாங்க மறுப்பு சொல்ல என்ன இருக்கு” என்றவர்களின் பேச்சே பெண் வீட்டாரை சம்மதம் சொல்ல வைத்துவிட்டது.
கோவிலில் வைத்து முதல் நாள் சுகுமார் செல்வி திருமணமும் மறுநாள் முத்து வள்ளி திருமணமும் எளிமையாக நடந்து முடிந்தது.
அவன் அருகில் இல்லை என்ற ஒரு குறையைத் தவிர மிகுந்த சந்தோஷத்தில் இருந்தாள் கொடிமலர், திருமணம் முடிவான இரண்டாம் நாளே வீட்டைக் கொஞ்சம் இடித்துத் தனியாக அறைகள் எடுத்துக்கொண்டனர், வீட்டு வேலை திருமணவேளை என்று குடும்பம் முழுதும் ஒரே ஆர்ப்பாட்டமாக இருந்தது.
செல்வியும் வள்ளியும் அந்தக் குடும்பத்தில் அழகாகப் பொருந்திவிட்டனர், திருமணத்தை வீடியோ காலில் பார்த்திருந்தவன் விழிகள் அவனின் தேன்மிட்டாயை தவிர்த்து எங்கும் செல்லவில்லை, அப்படியே கட்டிக்கொள்ள துடித்தது அவனுக்கு.
இந்த வருடத்தோடு அனைத்தையும் முடித்துவிட்டு வந்துவிட வேண்டும் என்ற முடிவில் இருந்தான், இவர்கள் இருவரும் செய்த குளறுபடியால் அடுத்த வருடத்திற்கு ஒப்பந்தத்தை நீட்டிவிட்டான், இப்பொழுது லீவில் மட்டுமே வர முடியும்.
அனைத்தும் விதிப்படிதானே நடக்கும்… சுகுமார், முத்துத் திருமணம் முடிந்த இரண்டாம் மாதம் ஒருமாத விடுமுறையில் வந்து சேர்ந்தான் அதிவீரன் தன்னவளை சொந்தமாக்கிக்கொள்ள.