கொடிமலர் அந்தப் பெரிய விழிகளை விரித்துப் பார்த்தது பார்த்தபடி அப்படியே நின்றாள், நிலைமையைப் புரிந்துகொண்ட கயல்விழி மெல்ல அவளைத் தள்ளிக்கொண்டே அறையின் உள்ளே நுழைந்துகொண்டாள்.
கொடிமலரால் இப்பொழுதும் நம்பமுடியவில்லை “விழி நீ பாத்தியா நிஜமா அவங்க வந்துருக்காங்களா…” என்றாள் பத்தாவது முறையாக.
வெளியில் மகனின் கையைப் பற்றிக்கொண்ட பார்வதி “ஆதி எப்படியா இருக்க… நேத்து பேசும்போதுகூட சொல்லல” என்றவர் முகத்தில் மகனைக் கண்ட சந்தோசம் தாண்டவமாடியது.
“சும்மாதான் மா உங்களுக்குச் சர்ப்ரைஸ்” என்று அன்னையை அழைத்துச் சென்று அமர வைத்தவன் சுகுமாரின் முன் சென்று நின்றான்.
“கொடிகிட்ட நான் கொஞ்சம் பேசணும்”என்றதும் சுகுமார் தயக்கமாக ராஜவேலுவை திரும்பிப் பார்த்தான், வந்ததிலிருந்து மனிதரின் முகமே சரியில்லை அதோடு அவர் எதையும் பேசவில்லை, அனைத்தையும் பார்த்திபன் பேசியிருக்க அதிவீரன் உள்ளே நுழைந்ததும் அனைத்தும் அவன் கட்டுப்பாட்டிற்கு மாறியதாகத் தோன்றியது அனைவருக்கும்.
“எதுக்குப்பா பேசிகிட்டு வீட்ல போய்க் கலந்து பேசிப் பதில் சொல்லலாம்” என்ற தந்தையை திரும்பியும் பாராமல் சுகுமாரின் மீதே பார்வையை பதித்து நின்றான் அதிவீரன், கைகளைக் கட்டி அழுத்தமாக அவன் நின்ற விதமே இன்று பேசாமல் செல்லமாட்டேன் என்றது அவனிடம்.
‘மகன் சொல்லுவதை கேட்பதா? தந்தை சொல்லுவதை கேட்பதா?’ என்ற குழப்பம் அப்பட்டமாகத் தெரிந்தது சுகுமாரின் முகத்தில், ஒருவேளை இந்தச் சம்மந்தம் முடிந்தால் தங்கை சென்று வாழ வேண்டிய வீடு ஒருவருக்கு சாதகமாகப் பேசி அதனால் தங்கைக்கு நாளைப் பாதிப்பு வந்தால்? என்று அவன் கைபிசைந்து நிற்க.
“அட என்ன தம்பி நீங்க, அந்தக் காலம் மாதிரியா இப்போ…. என் பாட்டி மொத புள்ள பொறந்த அப்புறம்தான் புருஷன் முகத்தையே ஒழுங்கா பாத்தாங்கலாம்!, என் அம்மா கல்யாணத்துக்கு அடுத்தநாள் தான் என் அப்பார சரியா பாதங்காலம்”.
“நான் தாலிகட்டி முடிச்ச அப்பறம் தானே இவங்க அப்பாரு முகத்தையே பாத்தேன் அப்படிலாம் இப்போ இருக்க முடியுமா, கட்டிக்கப்போறாங்க நாலு வார்த்தை பேசிக்கிட்டா தானே என்ன எதுன்னு புரியும் புள்ளய அனுப்புங்க ரெண்டு வார்த்தை பேசட்டும்” என்றார் பார்வதி.
மறந்தும் கணவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை தன்னை பார்வையாலே கடித்து குதறிக்கொண்டிருப்பார் என்று தெரியும், சம்மந்தியம்மா தந்த தைரியத்தில் “ஏம்மா விழி, மலரத் தோட்டத்துக்குக் கூட்டிட்டு போ” என்ற அண்ணனின் குரலில் உடல் நடுங்க தொடங்கியது கொடிமலருக்கு.
“நா மாட்டேன்…” என்று அந்தப் பக்கம் இழுத்த தோழியை இந்தப் பக்கம் இழுத்துக்கொண்டிருந்தாள்.
“அடியே அவர கட்டிக்கணும்னு அடி பிரதிஷணம் செஞ்சா மட்டும் போதாது பேசவும் செய்யணும் வா, இல்ல…. அண்ணனைக் கூப்பிட்டுருவேன்” என்க.
அவள் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் தோட்டத்திற்கு நடந்தாள்.
கத்திரிப்பூ நிற மெல்லிய ஜரிகை வைத்த பட்டுப் புடவையில் அழகோவியாமாக வந்துகொண்டிருந்தாள் கொடிமலர், எத்தனை மறைக்க முயன்றும் வலது காலின் இரண்டாவது விரலில் சுற்றியிருந்த வெள்ளை துணி அவன் கண்களில் சிக்கியது.
அவனை நெருங்க முடியாமல் பத்தடி தள்ளியே நின்றாள், அவன் நின்ற இடத்தை வைத்து அவனை இன்னும் இன்னும் பிடித்தது.
தோட்டத்தில் நார்த்தங்காய் மரத்தைச் சுற்றி சிமெண்ட் கொண்டு அமர்வதற்கு வசதியாகக் கல் திட்டுக் கட்டி வைத்திருந்தனர், அவள் தாயின் இடம் அது எப்பொழுதும் அங்கே அவரைக் காணலாம், பறந்து விரிந்த அந்த மரத்தின் நிழலில் அமர்ந்து ஏதேனும் செய்துகொண்டிருப்பார்.
சுற்றிலும் எத்தனையோ மரங்களும் ஊஞ்சலும், சிறிய கொட்டகையும் இருந்தும் அவன் அங்கே நின்றது மனதிற்கு ஏனோ ஒரு நிறைவை தந்தது.
என் அருகில் வரமால் பேசப்போவதில்லை என்று அவன் பிடிவாதமாக நிற்க “போடி” என்று அவளைப் பிடித்துத் தள்ளினாள் விழி.
இடைவெளி மூன்றடியாகக் குறைந்ததும் “ஏன் என்ன பிடிக்கல சொன்ன?” என்றான் அவளை ஆழ்ந்து பார்த்து.
“இல்ல அப்படி சொல்லல!!” என்றாள் அவசரமாக அவனை நிமிர்ந்து பார்த்து.
“அப்போ பிடிச்சுருக்கு” என்க.
காற்றில் ஆடும் மயிலிறகாக அனைத்து பக்கமும் ஆடியது அவள் தலை, அவன் இதழில் மெல்லிய புன்னகை விரிய, பிறகே புரிந்தது தனக்கே தெரியாமல் தன மனதை படித்துவிட்டான் என்று.
“என்ன செய்கிறாய் நீ” என்று தன்னையே கடிந்து கொண்டவளுக்கு அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை, கொஞ்சம் அருகில் நின்றிருந்தவளின் கரத்தைப் பற்றியவன் அந்த மரத்தின் திட்டில் அமரவைத்தான்.
மந்திரத்திற்கு கட்டுப்பட்ட பொம்மையாக அவனின் இழுப்புக்கு சென்றது அவள் பாதமும் காதல் கொண்ட மனமும்.
அவள் விரல்களின் நடுக்கம் உணர்ந்தவன் அவளை நிமிர்ந்து பார்த்து “என்ன” என்றான் புருவமுயர்த்தி.
“ஒன்றுமில்லை” என்று வேகமாக ஆடிய சிரம் நிலம் நோக்கியது.
கீழே காலை மடித்து அமர்ந்தவன் அவள் பாதத்தைப் பிடித்து விரலில் சுற்றியிருந்த துணியை அவிழ்த்தான், தடுக்கவும் முடியாமல் யாரேனும் வந்துவிட்டால் என்ற பயமும் சூழ பதட்டம் கூடியது கொடிமலருக்கு.
“யாரும் வரமாட்டாங்க உன் சிநேகிதி பாத்துப்பா” என்றான் அவளை நிமிர்ந்து பார்க்காமலே, அங்கே வாயிலை மறைத்துக்கொண்டு நின்றிருந்தாள் கயல்விழி.
அப்பொழுதுதான் கவனித்தான் அந்த விரலில் இருந்த மச்சத்தை மெல்ல அவன் விரல்கள் அதை வருட சட்டென்று பாதத்தை இழுத்துக்கொண்டாள் கொடிமலர், அவன் இதழ்களில் குறும்பு புன்னகை மின்ன “அடுத்ததடவ எப்படி இழுத்துக்குறன்னு பாக்குறேன்” என்றான் காற்றாக
அதற்குமேல் அங்கே நிற்கமுடியாமல் அவளின் இதயம் தாளம் தப்பியது வேகமாக எழுந்து திரும்பி நடக்க தொடங்க, “கொடி…” என்றவன் அழைப்பு கண்ணனின் புல்லாங்குழல் இசையாகக் கட்டி இழுத்தது.
வெகு அருகில் அவனின் குரல் “சீக்கிரமா காயத்தைச் சரி பண்ணிடு இல்லனா மெட்டி போட முடியாது” என்றவன் முன்னே நடக்க.
தன்னை பிடித்துக்கொண்டு துள்ளும் கயல்விழியை தளும்பும் விழிகளோடு பார்த்திருந்தாள் கொடிமலர்.
உள்ளே நுழைந்தவனின் முகத்தை ஆர்வமாகப் பார்த்திருந்தனர் அனைவரும், அன்னையை பார்த்துத் தன் அக்மார்க் புன்னகையை சிந்தியவன் “எனக்கு ஒரு வாரம் தான் லீவ் அடுத்த சனிக்கிழமை போகணும்” என்க அனைவரின் முகமும் சட்டென்று வாடியது.
அவனின் கையைச் சேர்த்து பிடித்துக்கொண்ட சுகுமார் “எங்களுக்கு முழு சம்மதம் மாப்ள” என்றான் நெகிழ்ச்சியாக, முத்துவும் புன்னகைமுகமாக அருகில் வந்து நின்றான்.
“அட என்ன தம்பி நீங்க” என்று அவன் அருகில் நெருங்கியவர்கள் “என்னப்பா எங்க பையன் பொண்ண பிடிச்சுருக்கு சொல்லியாச்சு உங்க பொண்ணுகிட்ட என்னனு கேட்டுச் சொல்லுங்க” என்க அங்குச் சூழலே மாறிவிட்டது அனைவரின் முகமும் சிரிப்பில் விரிந்தது.
அறைக்குள் நுழைந்து கொடிமலரை பார்த்த கஸ்தூரி கயல்விழியிடம் “என்ன” என்று கேட்க “கல்யாணத்துக்கு நாள் குறிக்காம என்ன வெட்டிக்கதை உங்களுக்குனு கேக்குறா உங்க பாப்பா!” என்றாள்.
“இல்லக்கா!” என்று கஸ்தூரியை நிமிர்ந்து பார்த்த கொடிமலர் குங்குமமாகச் சிவந்திருந்தாள்.
பார்த்ததும் உள்ளம் நெகிழ்ந்துவிட்டது சகோதரிகளுக்கு அவளின் கன்னம் வழித்து முத்தம் வைத்த சுமதி, அறைக்கு வெளியில் வந்து “பூ வெக்க நாத்தனார் எப்போ வருவாங்க” என்றாள் ஆதி லட்சுமியை பார்த்து.
“எங்க வீட்டு மருமகளை உங்க வீட்டில ஒளிச்சுவெச்சுக்கிட்டா நா எப்படி பூ வெக்க” என்ற ஆதிலட்சுமி அன்னையை திரும்பிப் பார்க்கத் தட்டிலிருந்து அப்படியே பூப்பந்தை மகளின் கையில் கொடுத்தார் பார்வதி.
அவள் விழிகள் தமயனில் பதிய அதே புன்னகையோடு “போ” என்றான் அக்காவிடம், கொடிமலரின் கூந்தலில் பூவைச் சூடிய லச்சுமி “என் தம்பியை உனக்குப் பிடிச்சிருக்கா மலர்” என்க.
“ஹ்ம்ம்” என்றவள் தலையாட்டலில் காதோடு உறவாடிய ஜிமிக்கியும் தன் சம்மதம் சொன்னது.
“ரொம்ப சந்தோசம் மனசு நிறைவாயிருக்கு” என்ற பார்த்திபன் மருமகனின் சைகையைப் புரிந்துகொண்டு “சின்னதா ஒரு நிச்சயதார்த்தம் வெச்சுப்போமே, ஆதி இப்போ போனா வர ஒரு வர்ஷம் ஆகும் வீட்ல பொண்ணு இருந்தா நாலு பேரு கேட்டு வருவாங்க, சொந்தத்த கூட்டி தட்டை மாத்திகிட்டா நல்லா இருக்கும்னு தோணுது, நீங்க என்ன சொல்றீங்க” என்றார் ராஜப்பானை பார்த்து.
அவரும் யோசனையாகச் சுகுமாரையும் முத்துவையும் பார்க்க, அவர்கள் அக்காளின் கணவரைப் பார்த்தனர் “இதுல யோசிக்க என்ன இருக்கு மாப்ள அவங்க சொல்றதும் சரிதானே ஒரு நிச்சயம் வெச்சுடுவோம், பொண்ணுக்கு மாப்ள முடிவாயிடுச்ன்னு எல்லார்க்கும் தெரிஞ்சமாதிரியும் இருக்கும்” என்றார்கள் அவர்கள்.
அப்படி இப்படி என்று வெள்ளிக்கிழமை நிச்சயம் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது, மண்டபம் பார்த்து வைக்கலாம் என்று சுகுமார் சொல்ல வீண் செலவு வேண்டாம் வீட்டிலே பந்தல் இட்டு வைத்துக்கொள்ளலாம் என்றுவிட்டான் அதிவீரன்.
கொடிமலரின் வீட்டினருக்கு ராஜவேலுவின் அமைதி மட்டும் மனதை உறுத்தியது, மற்ற அனைவருமே பழகுவதற்கு இனிமையாக இருந்தனர்.
பார்வதி ராஜவேலு, மாமா பார்த்திபன் அத்தை மற்றும் ஆதிலச்சுமி அவளின் மகள்கள் என்று அனைவரும் வந்திருந்தனர், புதிதாக வீட்டிற்கு வரப்போகும் அத்தையை எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தனர் பிள்ளைகள்.
கயல்விழி வந்து அழைத்துச்செல்ல பிள்ளைகள் கொடிமலர் மற்றும் விழியிடம் நன்றாக ஒட்டிக்கொண்டார்கள், ஆதிலச்சுமியின் கணவன் வரவில்லை.
“பொண்ணுபாக்க என் பையன் எதுக்கு” என்று மாமியார் முகத்தைக் காமிக்க பிள்ளைகளை மட்டும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டாள், ஆதவன் வரவில்லை நிர்மலா நிறைமாதமாக இருக்க “எனக்குப் பயமா இருக்கு நீங்க என் பக்கத்துலே இருங்க” என்று கணவனைப் பிடித்து வைத்துக்கொண்டாள்.
தந்தையை பற்றி இப்பொழுது எதுவும் பேசவிரும்பாத அதிவீரன் கொடிமலரின் வீட்டினர் எண்ணம் புரிந்தாலும் அமைதியாக நின்றுகொண்டான்.
‘சீதனம் பற்றி ஒன்றும் பேசவில்லையே’ என்ற யோசனையில் அமர்ந்திருந்தார் ராஜவேலு, மூத்த மருமகள் பெரிதாக ஒன்றும் கொண்டுவரவில்லை இவர்களும் பெரிதாக ஒன்றும் தருவதை போலத் தெரியவில்லை, ‘நாமே கேட்கலாமா… வேண்டாம் இவன் எப்போ எப்படி மாறுவான் தெரியல’.
இப்பொழுது மகன் பேசாமலே அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தது அவருக்கு “உங்க பொண்ணுக்கு நீங்கச் செய்றதுதான் இதுல நாங்க சொல்ல என்ன இருக்கு உங்க இஷ்டம்” என்றார் வராத புன்னகையை வலுக்கட்டாயமாக உதட்டில் ஒட்டவைத்து.
மிகுந்த மனநிறைவோடு விடைபெற்றனர் அனைவரும், தன்னுடைய புல்லெட்டில் வந்திருந்தவன் மற்றவர்களை முன்னில்விட்டு பின் தங்கினான்.
கதவின் பின்னில் நின்று எட்டி பார்த்த கொடிமலரை பார்த்தவன் “தேன்மிட்டாய்” என்று உதட்டசைக்க பட்டாம்பூச்சிகள் சிறகடிக்க தொடங்கியது கொடிமலரின் மேனியெங்கும்.
இவர்கள் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் ஆதவனும் வீட்டிற்கு வந்துவிட்டான், நிர்மலாவின் பெற்றோர் வீட்டிலிருந்து வந்தவன் விவரங்களைக் கேட்டுக்கொண்டு “அன்று ஏன் வைத்தீர்கள் அன்று நல்ல நாள் என்பதால் ஆபரேஷன் செய்துகொள்ளலாம்” என்று முடிவு செய்திருக்கிறோம் என்றான்.
“சுகப்பிரசவம் ஆகாதுன்னு யார் சொன்னா உங்ககிட்ட வீட்ல யார்கிட்டயும் கேக்காம நீங்களே முடிவு பண்ணிடீங்களா” என்றார் பார்வதி.
“அவளுக்குச் சுகப்பிரசவம் வேண்டாம்னு சொல்றா பயமா இருக்காம் நான் என்ன பண்றது” என்றான் ஆதவன்.
ஏதோ சொல்லவந்த பார்வதியை தடுத்த ஆதி “ம்மா… புள்ளைய சுமக்குறவங்களுக்கு அதை எப்படி பெத்துக்கணும்னு முடிவு பண்ற உரிமைகூட இல்லையா, பயமா இருக்குனு சொல்லும்போது ஏன் கட்டாயப்படுத்தனும் அவங்க விருப்பப்படி செய்யட்டும்” என்றான்.
“இல்லப்பா சுகப்பிரசவம் அந்த நேர வலிதான் தேவையில்லாம ஏன் உடம்புல கத்தி வைக்கணும், போகப்போக பிரச்சனைகள் வந்தா…” என்றார் கவலையாக, ஒரு கிராமத்து சாதாரன பெண்மணியாக அவரின் அனுபவம் பேசியது.
அவர்களின் காலம்போல இப்பொழுதும் இருப்பார்கள் என்று சொல்லமுடியாதே “அது அவங்க இஷ்டம்மா விடுங்க இதைச் சொல்லிப் பிரச்சனை வேண்டாம்” என்றவன்.
“சரி” என்று தங்களின் அறைக்குச் சென்ற ஆதவன் நிர்மலாவுக்கு அழைத்து இங்கு நடந்ததை கூறினான்.
“இதெல்லாம் தேவையில்லாத வேலை நிம்மி அவனுக்கு என்னைக்காவது தெரிஞ்சது ரொம்ப பெரிய பிரச்சனையா போய்டும்” என்றான் கொஞ்சமேனும் இவள் புரிந்துகொள்ளமாட்டாளா என்ற எதிர்பார்ப்போடு.
“உன் கல்யாணத்துக்கு நான் எதுக்கு காசு தரணும்னு கேட்டவன் தானே அவனோட நிச்சயத்துக்கு நாம போக வேண்டிய அவசியம் இல்ல பேசாம இருங்க” என்று வாயடைத்தாள்.
இந்த ஒருவருடத்தில் ராஜவேலுவின் நன்மதிப்பை பெற்றுவிட்டாள் நிர்மலா, அதிவீரன் பணம் அனுப்பாமல் கடையில் இருந்தும் கைக்குக் காசு வராமல் பைத்தியம் பிடித்த நிலையில் இருந்த ராஜவேலுவை ஆதவன் மூலமாகப் பணம் கொடுத்துத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டாள்.
அவருடைய தேவைகளைத் தெரிந்துகொண்டு உதவி செய்ய இவர்களிடம் இணக்கமாகப் போகத்தொடங்கினார் ராஜவேலு, இன்றும் அங்கு நடப்பதை தந்தை மூலமாக முன்பே அறிந்துகொண்டான் ஆதவன்.
வெள்ளிக்கிழமை நிச்சயம் என்றவுடன் கணவனிடம் தெளிவாகக் கூறிவிட்டாள் நிர்மலா “இங்க பாருங்க வீட்ல போய் வெள்ளிக்கிழமை ஆபரேஷன்னு சொல்றீங்க, நிச்சயத்துக்கு நாம போகப்போறதில்லை” என்க அவனும் மண்டையை நன்றாக ஆட்டிவிட்டு இங்கு வந்து ஒப்புவித்துவிட்டான்.