Advertisement

                                                               அத்தியாயம் 1
அது ஒரு அதிகாலை நேரம் புலர்ந்தும், புலராமலும், சூரியன் தன் வரவை பறை சாற்றுவது போல் இருக்க, பறவைகளும் இரை தேடி கூண்டை விட்டு செல்லும் காட்ச்சி இல்லாமலேயே! ஓரிரண்டு வாகனங்கள் ஹார்ன் சத்தத்துடன் அந்த பாலத்தை கடக்க, கோவில்  மணியோசையை கேட்டவாறே தீரனும், ஸ்கூபியோடு தனது ஓட்டத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தான். சுற்றும் முற்றும் தனது கழுகுக்கு கண்ணால் அளந்தவாறே ஓடியவன் வீட்டை வந்தடைந்தான்.
ஸ்கூபி தோட்டத்தில் ஒரு ரவுண்ட் போக “ஹாய் டேட்” காலை நேர ஓட்டத்தை முடித்துக் கொண்ட தீரமுகுந்தன் அப்பா திருமாறன் படித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையை உருவி அன்றைய செய்திகளை அலச அவன் செய்த செயலால் கடுப்பானவர்
“மேர்னஸ்னா என்னன்னே தெரியாம வளந்து என் உயிர வாங்குற நீ”
அவரை திரும்பியும் பாராமல் “எந்த நாளும் நடக்குறது தானே! அப்பாகும் பையனுக்குமிடைல மேர்னஸ் எதுக்கு” என்றவன் “சலீம் பா…ய்.  எங்க என் கிரீன் டி” உள்ளே குரல் கொடுக்க
வெளியே இருந்து தாத்தா தீரமணி வர அவருக்கு கஞ்சியை கொடுத்த சலீம் பாய் தீரமுகுந்தனுக்கு  கிரீன் டீயை கொடுக்க தன்னுடைய பால் டம்ளரை வாங்கி கொண்ட திருமாறன்
“டேய் முகுந்த், தீரன் எப்போ வறானாம்? போன் பண்ணானா?”
“வந்து கிட்டே தான் இருக்கான். எதுக்கு அவன மட்டும் தீரன்னு கூப்பிடுறீங்க? என் பேரும் தீரன் தான்” அவரை முறைத்தவாறே கூற
“இவனுங்க அக்கப்போர் எப்போ முடியும்னு தெரியலையே!” என்று முணுமுணுத்தவர் “என் அப்பத்தா தான் பா உங்களுக்கு பேரு வச்சாங்க, அவங்க ராஜஸ்தான் ராஜவம்சம் அவங்க தாத்தா ஒருத்தர் அரசனோட தளபதியா இருந்தப்போ”
“நிறுத்து… இந்த கதய கேட்டு, கேட்டு புளிச்சு போச்சு, ராஜாவும், தளபதியும், வாளும். நம்புற மாதிரியா இருக்கு எல்லாம் கட்டுக் கத, நீ சின்ன வயசுல வாய பொளந்து கேட்டு கிட்டு இருந்துட்டு, அதே கதய எங்க கிட்டயும் சொல்லி எங்களையும் ஏமாத்தின. இப்போவுமா?” என்று தீரன் புருவம் நீவியவாறே கிண்டலடிக்க
“அப்பா முதல்ல இவனுங்களுக்கு பொண்ணு பாத்து கல்யாணத்த முடிங்க” திருமாறன்  சொல்ல
“உன் பசங்க உன் பொறுப்பு எனக்கெதுக்கு சொல்லுற” என்ற முகபாவத்தை தாத்தா வைத்திருக்க
“ஆமா முதல்ல அத பண்ணுங்க ஏதோ இன்னும் மிலிட்டரி கேம்பிலேயே இருக்குற மாதிரி இருக்கு, பொண்ணுங்கலயாச்சும் பெத்து இருந்தா வீடு கலகலன்னு இருந்திருக்கும், ஒருத்தன் காக்கி சட்டைக்கு போடுற கஞ்சிய அவனும் குடிச்ச மாதிரி அலையிறான். இன்னொருத்தன் காக்கி சட்ட போடாமலேயே வெறப்பா சுத்துறான், இந்த வீட்டு நாய் கூட ஆண் நாய். அதுக்காவது ஜோடி சேக்கணும்னு எண்ணம் இருக்கா?   இவனுங்கள அடக்கி ஆளுற அந்த மகராசிங்க எங்க இருக்காங்களோ! யா அல்லாஹ்” என்றவாறே சலீம் பாய் உள்ளே செல்ல தீரனும் குளிக்க சென்றான்.
திருமாறன் ஒரு சட்டத்தரனி. திருமாறனின் தந்தை தீரமணி இராணுவத்தில் இருந்தவர், அங்கே சமையல் வேளையில் இருந்த சலீம் பாய், அவர் ரிட்டையர் ஆகும் போது கூடவே வந்துவிட்டார்.
திருமாறனின் மனைவி இரட்டையர்களான விஷ்வதீரனையும், தீரமுகுந்தனையும் பெற்ற உடன் இறைவனடி சேர இருவரையும் தனியாக வளர்த்து நாட்டை காப்பாயடா நான் பெத்த செல்வங்களே!  என்று போலீஸில் சேர்க்க ஆர்வத்துடன் இளம் சிங்கங்கள் இரண்டும் வேட்டையாடி வருகின்றன.
*******************************************************************
“வதனி…  எந்திரிடி காலேஜ் முடிச்சாலும் முடிச்சா , வேலைக்கு போகணும்னு அக்கறையில்ல. ஒன்னு கல்யாணம் பண்ணனும் இல்ல வேலைக்கு போகணும்” புஷ்பா புலம்ப
“பசங்களத்தான் தண்டசோறுன்னு திட்டுறாங்கனு பாத்தா பொண்ணுங்களையுமா? என் பொழப்பு சிரிப்பா சிரிக்க போகுது” என்று அகிலேஷ்வர் முணுமுணுக்க
“நீ என்ன வாய பத்து கிட்டு நிக்கிற சீக்கிரம் சாப்டுட்டு காலேஜிக்கு கிளம்பு” அப்பா தங்கதுரை தோசையை பித்து வாயில் வைக்க
“இவ இன்னைக்கு எந்திரிச்சு வர மாட்ட, இருடி வரேன் ஒரு பாக்கெட் தண்ணிய கொண்டுவந்து உன் தலையில ஊத்துறேன்” புஷ்பா புலம்பியவாறே தோசையை கொண்டு வந்து தங்கத்துறையின் தட்டில் வைக்க
“நீ பாக்குற மாப்பிள்ளையை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டால்ல. அவ தான் காலேஜ் முடிஞ்சி ஒரு வருஷம் வீட்டுல இருக்கேன் அப்பொறம் வேலைக்கு போறேன்னு சொன்னாளே! இப்போ எதுக்கு சும்மா நொய் நொய் னு கத்துற,  இந்த வீட்டுல நிம்மதியா சாப்பிட கூட முடியல” என்று கையை கழுவியவர் புஷ்பா கூப்பிட கூப்பிட வங்கிக்கு கிளம்பி சென்றார்.
இது வீட்டில் என்றும் நடக்கும் கூத்து என்பதால் அகில் தலை குனிந்தவாறே சாப்பிட்டவன் காலேஜ் கிளம்பிச்செல்ல கீழே நடக்கும் யுத்தம் அறியாமல் வழமைபோல் தன் தூக்கத்தை தொடர்ந்தாள் பிங்கி எனும் பிரியங்வதனி.
She is a fantasy shanana nana oh oh
Sweet as a harmony shanana nana oh oh
No no no she is a mystery shanana nana oh oh
Fills your heart with ecstasy oh oh yeah yeah hey
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே
பல வருட பரிச்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள்தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
அந்த இரவில்  திறந்த நிலையில் அமைந்த மேடையில் தோன்றியவளை பார்த்து நாயகன் பாடிக்கொண்டிருக்க மழை சாரலில் நனைய, திடீரென மழை புயலாய் மாறியது போல் அவள் தொப்பலாக நனைய, அவளின் அம்மாவின் குரலும் கேக்க, அவளுடன் ஆடிக்கொண்டிருந்த நாயகனும் காணாமல் போக, பட்டென்று கண்ணை திறந்தவளுக்கோ அங்கே புஷ்பாவின் கோபமுகமே காணக் கிடைத்தது.
எந்தநாளும் குளியல் கட்டிலில் தானே! என்ற பார்வையோடு அன்னையை பார்த்தவள் ‘என்ன புஷ்பா டார்லிங் சந்திரமுகியா மாறி இருக்க? தங்கதுரை மிஸ்..டர் தங்கதுரை சந்திரமுகியா மாறி இருக்கும் உன் புஷ்பாவ காண ஓடோடி வா” என்றவாறே எந்திரிக்க ஏற்கனவே கடுப்பில் இருந்த புஷ்பா
“ஏன்டி ஒரு வருஷம் கழிச்சு வேலைக்கு போறதுன்னு சொன்ன அதுக்காக சூரியன் முதுகுல படும்வரை தூங்குவியா? காலைலயே எந்திருச்சு வீட்டு வேலைகளை செய்யவேணா? சமையல் கத்துக்க வேணா? அம்மா தனியா கஷ்டப்படுறாளே! உதவி செய்யணும் என்ற எண்ணம் வேணா?” மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க புஷ்பா பேச
“நான் ஹோட்டல்ல வேல பாக்குற ஒரு செப்ப கல்யாணம் பண்ணிக்கிறேன், பிரப்லம் முடிஞ்சது” என்றவள் குளியலறைக்குள் புக, புஷ்பா தலையில் அடித்துக் கொண்டு பிங்கியை வசை மழையில் நனைய வைத்தவாறே கீழே சென்றாள்.
ப்ரியங்வதனி  எந்த ஒரு விஷயத்துக்கும் அலட்டிக் கொள்ளாதவள். பிறவி எடுத்ததே ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்கத்தான் என்று வாழ்ந்துக் கொண்டிருப்பவள். அப்பா தங்கதுரை வங்கியில் கணக்காளராக பணிபுரிபவர். அம்மா புஷ்பா  ப்ரியங்வதனிக்கு தங்கதுரை செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறார் என்று புலம்பும் சாதாரண குடும்பத்தலைவி. தம்பி அகிலேஷ்வர்  இன்ஜினியரிங் காலேஜில் இரண்டாம் வருடம் படிக்கும் மாணவன். தீரமுகுந்தனை ஆளப்போகும் மகராசி நம்ம பிங்கி.
*******************************************************************
அது  சாதாரண மக்களிலிருந்தும், பெரிய பணக்காரர்களிலிருந்தும் வேறுபட்டு நாங்களும் பணக்காரர்கள் தான் என்பதுபோல் சொந்தமான வீடும், வாகனமும், அமைதியான சூழலும் வேண்டும் என்று கேப்போருக்காக அமைக்கப்பட்ட தனித்தனி வீடுகளை கொண்ட பணக்காரர்கள் குடியிருக்கும் பகுதி, அதிகமான சத்தங்கள் இல்லாமல், மாசுமருவற்ற சூழல். ஆரோஹியின் குரல் சற்று எரிச்சலாக ஒலித்துக் கொண்டிருந்தது.
“அஜய், விஜய் எங்கடா இருக்கீங்க ரெண்டு பேரும்? எங்க போய் ஒழிஞ்சிகிட்டாங்கனு தெரியலையே!” ஆரோஹி வீடு முழவதும் பசங்களை தேட  
சாப்பாடு மூடும் கூடையினும் புகுந்த  அஜய் அதனூடாக அன்னையை நோட்டமிட்டு சிரிக்க, துவைக்கும் துணிகளை போடும் கூடையில் இறங்கிய விஜய் அதனூடாக அன்னையை பார்த்து சிரிக்க
“இவனுங்களுக்கு இதுவே வேலையா போச்சு, காலைல எந்திருச்சு பல்லு விளக்கி, குளிப்பாட்டி, இவனுங்க டீச்சர் கிட்ட விட்டுட்டு என் கிளாஸ நான் எடன்ட் பண்ண போதும் போதும்னு ஆகுது” எந்தநாளும் நடக்கும் போராட்டத்தால் கண்கள் கலங்க அமர்ந்து விட அவளருகில் வந்த ஆயிஷாபேகம் அவளின் தலையை தடவியவாறே
“ரூஹி  நடந்ததையே நினைச்சி கிட்டு இருக்கனு தானே நாம மும்பாயில இருந்து இங்க வந்தோம்? இங்க வந்தும் வாழ்க்கையே வெறுத்து போன மாதிரி பேசிகிட்டு, என்ன இது? பசங்கனா இப்படித்தான் வாலுங்களா இருப்பாங்க, நான் பெத்த ரெண்டும் அப்படித்தான்” என்று முகத்தில் புன்னகை பூசிக்கொள்ள, சட்டென்று மனம் கலங்க ஒரு பெரு மூச்சு விட்டு தன்னை சமன் செய்தவர்
“இப்போ பாரு எப்படி வெளிய வருவாங்கனு” என்றவர் எழுந்து வீட்டின் நடுக் கூடத்துக்கு சென்றவர் “ரூஹி இன்னைக்கி பீச் போலாம்னு சொன்னியே” என்றவர் தலையில் கை வைக்க ஆரோஹிக்கும் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
“இங்க எங்க பீச்? வேற ஏதாவது சொல்லுங்க” என்று சைகையால் சொல்ல
“ஆ… ஐஸ் கிரீம் பாலர் போலாம்னு சொன்னியே”  என்று கட்டை விரலை உயர்த்த
“ஆமா ஸ்கூல் விட்டதும் போகணும், நீங்க ஸ்கூல் விடுற டைம்ல அங்க வாரீங்களா? இல்ல நான் இங்க வந்து உங்கள கூட்டிட்டு போகவா?
“அஜய்யும், விஜய்யும் ஸ்கூல் போக இன்னும் தயாராகவே இல்லையே! அப்போ ஐஸ் கிரீம் கேன்சலா?
இவர்களின் பேச்சை கேட்டு கொண்டிருந்த இருவரும் தாங்கள் ஒழிந்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து வெளியே வர ஆயிஷா ரூஹியை பார்த்து கண்சிமிட்ட
“என்ன மம்மி, கொஞ்சமாச்சும் எங்கள தேடி பாக்கணுமா இல்லையா? மும்பாயிலே இருக்கும் போது எங்கள கண்டு பிடிப்பியே இங்க வந்த பிறகு நீ ரொம்ப மாறிட்ட” அஜய் சொல்ல
“ஆமா பேட் மம்மி” என்று முகத்தை திருப்பிய விஜய் “நிஜமாவே ஐஸ் கிரீம் பாலர் கூட்டிகிட்டு போறியா? ப்ரோமிஸ் பண்ணு. சளிபிடிக்கும்னு ஏமாத்த மாட்டியே!” என்று கிடுக்கு பிடி போட
அஜய் சொன்னதில் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவம் நொடியில் நியாபகத்தில் வந்தாலும், விஜய் பேசியதில் “உங்க காரியத்துல கண்ணாத்தான் இருக்கீங்க டா” என்று இருவரையும் இழுத்து அணைத்து கிச்சு கிச்சு மூட்ட
“விடு மம்மி விடு மம்மி” என்று சிரிப்பு சத்தம் வீட்டை நிறைத்தது.
ஆரோஹி தனியார் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக புதிதாக சேர்ந்தவள். பதினாறு வயதிலேயே தாயை இழந்து,  இளம் வயதிலேயே நெஞ்சம் முழுவதும் கவலைகளை சுமக்கும் இளம் தாய்.
*******************************************************************
“குட் மோர்னிங் சார்” விஷ்வதீரன் காலை வாழ்த்தை சொல்ல
“குட் மோர்னிங், உக்காருங்க தீரன். இந்த கேச உங்க கைலதான் கொடுக்கணும்னு உங்கள சொந்த ஊருக்கே வர வச்சிட்டேன். பத்து வருஷத்துக்கு பிறகு ஊருக்கு வாரீங்கனு கேள்ளவி பட்டேன். நேரா இங்க தான் வாரீங்களா?” என்று அவனுக்கு முன்னால் அமர்ந்திருந்த முதலமைச்சர் கூற
அவருக்கு புன்னகையை மாத்திரம் பதிலாக கொடுத்தவன் கேஸை பற்றி விசாரிக்க.
“ஒரு முக்கியமான ஒருத்தர் வரணும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, ஏதாவது சாப்பிடுறீங்களா?” அவர் கேக்க தலையசைத்து வேண்டாம் என்றவன் அவர் பேசுவதை மாத்திரம் கேக்கலானான்.
உள்ளே நுழைந்த தீரமுகுந்தனை கண்டு புருவம் தூக்கியவன் எழுந்து கொள்ள
“உங்களுக்கு இவரோட உதவி தேவைப்படும்” என்று அவர் புன்னகைத்து சொல்லாமல் சொன்னது உன் சகோதரனுடன் நீ வேலை பார்த்தே ஆகவேண்டும் என்பதே!
“இந்த கேச பத்தி நான் ஸ்டடி பண்ண வரைக்கும் கொலையா? தற்கொலையா? ட்ரக்ஸ்? பாலியல் வன்கொடுமை? இப்படி எல்லாமே கன்பியூஸ் பண்ணுது” தீரமுகுந்தன் சொல்ல
“இதுவரைக்கும் இறந்து போனவங்க பதினெட்டிலிருந்து முப்பத்து வயதுக்குள் உள்ள பெண்கள், இந்த கேச நான் எடுத்துகிறதுல எந்த பிரச்சினையும் இல்ல, ஐ நீட் எ டீம் போஸ்ட்மோட்டம் செய்யும் டாக்டரிலிருந்து புகைப்படம் எடுக்கும் போட்டோகிராபர் வரைக்கும் நான் சொல்றவங்க வேணும், நீங்க ஏற்பாடு பண்ணா நான் இந்த கேச தாராளமா எடுத்துக்கிறேன். அண்ட் யார் தலையீடும் இருக்க கூடாது” என்றவன் முகுந்தனை முறைத்து விட்டு “நீங்க கூட கேச பத்தி எந்த டீடைல்ஸையும் என் கிட்ட தோண்டி துருவக் கூடாது ” பேசி முடிந்ததன் அடையாளமாக கூலரை கண்களில் மாட்ட
“எல்லா ஏற்பாடும் பக்காவா பண்ணித்தரேன்”  என்று தலையசைத்தவர்,  “விஷ்வா இப்போயாச்சும் வீட்டுக்கு போ” என்று குடும்ப நண்பனாக சொல்லி விடைக்கொடுக்க பதில் ஏதும் கூறாது, அண்ணன் தம்பி இருவரும் அவரின் அறையை விட்டு வெளியேறினர்.   
வெளியே வந்த தீரமுகுந்தன் “எப்போ வீட்டுக்கு வருவ” என்று கேக்க
சுவிங்கத்தை வாயில் திணித்து மென்றவாறே அவனை கூலரூடாக பார்த்தவன் “ஆபீஸ் போயிட்டு தான் வருவேன், இந்த கேஸ்ல உனக்கு நிறைய வேலை இருக்கு, இப்போ நீ எங்க போற?”
அண்ணன் இந்த கேஸை அலசாமல் வீடு வரமாட்டான் என்று அறிந்தவனாக அவனுடைய கண்கள் அண்ணனை கூர்மையாக பார்த்து விட்டு சிமிட்டியவாறே
“கடைசியா செத்துப்போன பொண்ணோட பிளாட்டை இன்னொரு தடவ பாக்கணும். ஏதாவது க்ளூ கிடைக்கும்”
விஷ்வதீரனின் உதடு கொஞ்சம் மலர்ந்தது. தன்னுடைய தம்பியை அறிந்தவனாக சந்தேகம் என்று வந்து விட்டால் விழுந்து வேலை பார்ப்பவன் கண்டிப்பாக ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் “கோ ஹெட்” என்றவன் ஆபீசை நோக்கி கேஸ் பைலுடன் நகர முகுந்தன் தன பைக்கை நோக்கி நடந்தான்.
விஷ்வதீரன், தீரமுகுந்தன் இருவருமே ஆறடிக்கு மேலான உயரம், பார்த்த உடனே போலீஸ்  என்று சொல்ல கூடிய உடற்கட்டு, இரட்டையர்கள் என்றாலும் வெவ்வேறு குணமுள்ள, விருப்பமுள்ள, பழக்க வழக்கங்களை கொண்டவர்கள். இருவருக்கும் சண்டை என்றால் அது தங்களது பெயராலேயே வரும். எதிர் எதிரா ஆடுவதில் வல்லவர்கள்.      
*******************************************************************
அந்த ட்ராபிக் சிஃனலில் தனது ஸ்கூட்டியில் பிங்கி அமர்ந்திருக்க தோழிகள் சிலரும் அவளுடன்
“சே.. எறும்பு ஊறுவது போல போனா எப்போ நாம சினிமாக்கு போறதாம்?” ஒருத்தி சொல்ல
“இந்த பக்கம் கொசுத்தொல்ல தாங்க முடியல” என்று இன்னொருத்தி சொல்ல, அனைவரும் அவள் புறம் திரும்ப அங்கே இரண்டு இளைஞர்கள் இவர்களுடைய உடையையும், ஆங்கிலம் கலந்த தமிழையும் பார்த்து கமாண்ட் வைக்க பிங்கியின் முகம் பிங்க் நிறத்தை பூசிக்க கொள்ள
“இருடா வரேன்” என்றவள் சுவிங்கத்தை வாயில் போட்டு மென்றவாறே அவர்கள் இருவரிடமும் சென்று மேலும் கீழும் பார்க்க அவர்கள் கலவரமடைந்தனர்.
“முன்னூறுவா தேறாத சர்ட்டு, பிஞ்ச ஜீன்ஸ் ஐநூறுவ தேறாது, பைக்கு செகண்ட் ஹாண்டில் வாங்கியது, ஷெம்போ போடாத தல, எம்ட்டி பொக்கட், ஒரு டப்பா செல்போனு, மேட் இன் சைனாவா?” என்று கடகடவென கணக்கு போட்டவள் தோழிகளிடம் திரும்பி
“இவனுங்க அப்பன் காச கரைக்கும் மகாபிரபுங்க டி, இவனுங்கள ஒருதடவ பாத்தா போதும் கஞ்சிக்கே வழியில்லாத பொறம்போக்குனு உடனே தெரிஞ்சிடும்” என்று சத்தமாக சொல்ல  அங்கே ஒரு சிரிப்பலை
வேண்டுமென்றே பிங்கியும் தோழிகளும் அவர்களை பார்த்து பார்த்து சிரிக்க அவர்களை கண்களால் எரித்தவாறே அகன்றனர் அவ்விருவரும்.
வண்டிகள் மெதுவாக நகர்ந்ததால் அடுத்த சிஃனலிலும் பிங்கி மாட்டிக் கொள்ள அங்கே வந்து சேர்ந்தான் தீரமுகுந்தன்.
அவனின் கழுகுக் கண்களில் சிக்கினால் பிங்கி, சுவிங்கத்தை மெல்லும் போது அவளின் கொலு கொலு கன்னங்கள் நர்த்தனமாட அண்ணனின் நியாபத்தோடு  ஒரு குட்டிப்பெண்ணின் எங்கோ பார்த்த முகம் நியாபகத்தில் வரவே
“ஏய் உன்ன எங்கயோ பாத்திருக்கேன்” எங்க என்று தீரன் புருவம் நீவி யோசிக்க,
முன்ன, பின்ன தெரியாத பொண்ணுக கிட்ட பசங்க யூஸ் பண்ணும் டெக்னிக் இது என்று பல்லை கடித்தாள் பிங்கி.
“ஆமா எங்கயோ பாத்திருக்கேன்னு  சொல்லுவ அப்பொறம் ஐ லவ் யு னு சொல்லுவ நானும் வெக்கப் பட்டு கிட்டே சரினு தலையாட்டணுமா? சொன்னது மாத்திரமல்லாது நடித்தும் காட்ட அவளை ஏற இறங்க பார்த்தவன்
“பரிச்சயமான பேஸ்னு கேட்டா குட்டச்சிக்கு ரொம்பதான் நினைப்பு. நான் உன்ன லவ் பண்ணனுமா?” கடுப்பாகவே சொல்ல
“யாருடா? குட்டச்சி வளந்து கெட்டவனே நான் ஐஞ்சு அடில அம்மசமா தான் இருக்கேன். நீதான் ஆறடிக்குமேல போய் வானத்துல முட்டிக்க போற. உன் ஆறடிய நான் ஹை ஹீல்ஸ் போட்டு கவர் பண்ணிடுவேன். பசங்க பண்ணுறதெல்லாம் பொண்ணுங்களால பண்ண முடியாதுனு பீத்திக்கிறீங்களே எங்க ஹை ஹீல்ஸ் போட்டு பத்தடி நடந்து காட்டு பாப்போம்” ஏற்கனவே எரிமலையாய் கொத்தித்துக் கொண்டிருந்தவள் தீரன் பேசியதில் கடுப்பாகி மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கிய பிங்கி பொறித்துத்தள்ள முகுந்தனின்  கண்கள் பளிச்சிட்டன.
“இவள பெத்தாங்களா செஞ்சாங்களானு தெரியலே , இந்த பேச்சு பேசுறா, இருடி உன்ன ஆப் பண்ணுறேன்” புன்னகைத்தவன். “எதுக்கு ஜானு ஹை ஹீல்ஸ் போட்டு ஹைட்ட பேலன்ஸ் பண்ணனும் உன்ன தூக்கி வச்சி  கிஸ் அடிக்கிறேன். செம கிக்கா இருக்கும்” என்றவன் அவளின் பதிலை எதிர்பாக்காது பைக்கில் பறந்து விட
தீரன் சொன்னதை உள்வாங்கி கிரகித்தவள் “டேய்” என்று கத்தியது காற்றோடு கலந்து தூரத்தில் செல்பவனின் காதை அடையுமோ?     
பிங்கி மோர்டன் தேவதை. ஆரோஹி மறுகும் தாரகை. இவர்கள் இந்த அண்ணன், தம்பியின் வாழ்க்கையில் வந்து……

Advertisement