Advertisement

அத்தியாயம் 32
பிங்கியின் நோக்கமே சலீம்பாய் மற்றும் ஆயிஷாவின் உறவு என்ன என்று அறிந்துக் கொள்வதே. அதற்காகவே காத்துக் கொண்டிருக்க நல்ல சந்தர்ப்பம் அமைந்ததை பயன் படுத்திக் கொண்டாள்.  
“சலீம் பாய் ஏன் நீங்க கல்யாணமே பண்ணிக்கல” கலவையான முகபாவங்களை கொடுத்துக் கேக்க 
“அதையேன் மா கேக்குற? எல்லாருக்கும் ஆசைப்பட்ட பொண்ணு கிடைச்சிடுமா?” கொஞ்சம் விரக்தியாக குரல் ஒலிக்க
“அப்போ நீங்க லவ் பண்ணீங்களா? சொல்லுங்க உங்க லவ் ஸ்டோரிய கேப்போம்” ஆரோஹி ஆர்வமாக, அஜய்யும், விஜய்யும் தூங்கி வழிய ஆயிஷா அஜய்யையும், விஷ்வதீரன் விஜய்யையும் தட்டிக் கொடுக்க இருவரும் தூங்க ஆரம்பித்திருந்தனர். 
பிங்கி ஆயிஷாவை பார்க்க அவரோ சாதாரணமாக இருக்க சலீம்பாய் சொல்ல ஆரம்பித்தார். 
“இதே திருச்சி தான் மா என் சொந்த ஊரு. படிப்பு அவ்வளவு ஏறாது, பசங்க கூட சுத்திகிட்டு இருந்தேன். அப்படி சுத்தும் போதுதான் அவள பாத்தேன். யாரு வீட்டு பொண்ணுன்னு விசாரிச்சு தெரிஞ்சிக்கவே மாசக்கணக்காச்சு. ஏன்னா எங்க வீட்டு பொண்ணுங்க லேசுல வெளிய வர மாட்டேங்குறாங்க. சமையல் தான் குலத்தொழில், அப்படியே அப்பா கூட சேர்ந்து கல்யாண வீட்டுல சமைக்க போனப்போ தான் மறுபடியும் அவள பாத்தேன். அங்க வச்சுதான் இன்னார் பொண்ணுன்னு தெரிஞ்சி கிட்டேன். எனக்கும் கல்யாண வயசு வரல, இத வீட்டுல சொல்லி பொண்ணு கேக்க சொல்ல முடியுமா? அவ கிட்ட பேசவாவது சந்தர்ப்பம் கிடைக்குமான்னு பாத்தேன். அமையவே இல்ல. அப்படியும், இப்படியும் ரெண்டு வருஷம் ஓடி போச்சு. நா வேற நல்ல சமயல்காரன்னு பேர் எடுத்துட்டேன். வீட்டுல கூட சொல்லாம அவங்க அப்பாவ போய் பாத்து பொண்ணு கேட்டேன். ஒரு  மில்டரிகாரனுக்குத்தான் பொண்ணு கொடுப்பேன்னு சொன்னாரு. இது  தெரியாம நாம வேற ரெண்டு வருஷத்த வீணடிச்சோட்டோமேன்னு ஒரே கவலையாகிப்போச்சு. எல்லாத்தையும் வச்சிட்டு மில்டரில சேரப்போனேன். வீட்டுல அம்மா ஒரே அழுக ஒரே பையனா போய்ட்டேனா? கூடப்பொறந்ததெல்லாம் பொண்ணுங்க. அவங்க நல்லது கெட்டதுக்கு எல்லாத்துக்கும் நா கூட இருக்கணும்னு அப்பா கறாரா சொல்லிட்டாரு. குடும்பமா? காதலானு? வரும் போது குடும்பம் தான் முன்ன நின்னது. ஏன்னா நா காதலிச்சது கூட அந்த பொண்ணுக்கு தெரியாதே! சொல்லும் போது  அடிக்கடி ஆயிஷாவை பார்த்தவாறே சொல்லலானார்.
திரும்ப அவரை போய் சந்திச்சு வீட்டு சூழ்நிலையையும் சொல்லிப்பார்த்தேன். அவரு இறங்கிவரவே இல்ல. அப்போ தான் உங்க தாத்தாவ ஒரு கல்யாண வீட்டுல பாத்தேன். என் சமையல சாப்பிட்டவரு, ஒரு நல்ல சமயல்காரன் இருந்தா சொல்லுன்னு சொன்னாரு. இராணுவத்துல சமயல்காரனா சேர்ந்துடலாம் னு  தோணுச்சு… போய்ட்டேன். ஆறுமாசம் கழிச்சு தான் ஊருக்கு வந்தேன். திரும்ப போய் பேசிப்பாக்கலாம்னு போனா கல்யாணம் பண்ணி கொடுத்துட்டதாக சொல்லிட்டாரு. அவ எங்கயாவது சந்தோஷமா இருப்பா” ஒரு பெரு மூச்சு விட்டவாறே சொல்லி முடிக்க 
“அப்போ உங்க குடும்பம்” தீரமுகுந்தன் தான் கேட்டான். 
“எல்லாரும் கல்யாணம் பண்ணி வேற ஊருல இருக்காங்க, வீட்டுக்கு போனாலும் நா தனியாத்தான் இருக்கணும் அம்மா, அப்பாவும் இறந்துட்டாங்க, அப்படியே இங்க வந்து தங்கிட்டேன்” என்றவர் பாடலானார். 
நீ இல்லாத உலகத்திலே! நிம்மதி இல்லை 
உன் நினைவில்லாத இதயத்திலே! சிந்தனையில்லை. 
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை.
உன்னை கண்டு கொண்ட நாள் முதலாய் 
கண்ணுறங்கவில்லை 
கண்ணுறங்கவில்லை.
அவரின் ஏக்கப்பார்வை ஆயிஷாவின் மேலே இருக்க அந்த பொண்ணு ஆயிஷா தான்னு அங்கிருந்த தீரன்ஸ்க்கும், பிங்கிக்கும் நன்றாகவே புரிந்தது. 
“இது சரியில்லையே! அப்போ அன்னைக்கி நைட்டு ரெண்டு பேரும் என்ன பண்ணாங்க. ஒரே குழப்பமா இருக்கு” பிங்கியின் மண்டைக்குள் கேள்வி குடைய, 
அவளின் முகபாவனைகளை கண்டு “ரொம்ப யோசிக்காத மூள உருகி மூக்கால ஒழிகிடும்” தீரன் சிரிக்காமல் சொல்ல அவனை மொத்த ஆரம்பித்தாள் பிங்கி.  
“சரி, சரி பாட்டுல உருட்டுங்க தூக்கம் வருது” ஆரோஹியை பார்த்து கண்ணடித்தவாறே விஷ்வதீரன் சொல்ல முகமாற்றத்தை மறைக்க ஆரோஹி பெரும் பாடுபடலானாள். 
ஒருவாறு பிங்கி பாட்டிலை சுற்ற அது அவள் புறமே வந்து நின்றது. 
“மாட்டிக்கிச்சே! மாட்டிக்கிச்சே! மாட்டிக்கிச்சே!” விஷ்வதீரன் பாட 
“வதனி கிட்ட நான் தான் கேள்வி கேப்பேன். என் கிட்ட அவதான் கேட்டா” திருமாறன் கையை தூக்கி ஆர்ப்பரிக்க 
“நீரே கேளும், கேட்டுத் தொலயும்” தீரமுகுந்தன் ஆசிர்வதித்து போல் சொல்ல 
சிரித்தவாறே “வதனிமா நீ மேல என்ன படிக்க போற? பேசாம என் கிட்ட ஜூனியரா சேர்ந்துடுறியா? நல்ல பேசுவியே, எதிர்காலத்துல நல்ல லாயரா வருவா” பெருமை போங்க அவர் சொல்ல தீரமுகுந்தன் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்கலானான். 
“சொல்லிட்டு சிரிடா” விஷ்வதீரன் முறைக்க 
“இவ வாய் மட்டும் தான். எல்லா சப்ஜக்டிலையும் ஜஸ்ட்டு பாஸு.  உன் லோ பார்ம இழுத்து மூடிட வேண்டியது தான்” 
“யார் டா சொன்னா” பிங்கி எகிற 
“எல்லாம் நம்ப தகுந்த வட்டாரம். என் மச்சான் அகில் தன் சொன்னான்” சொன்னவனை போட்டும் கொடுக்க 
“இருக்கு அவனுக்கு” கருவிக்கு கொண்டாள் பிங்கி.
“போதும்பா தூங்கலாம் எனக்கு தூக்கம் வருது” தாத்தா எழுந்து கொள்ள 
“என்ன தாத்தா மிலிட்டரி சரக்கு வச்சி பார்ட்டி குடுப்பீங்கனு சொன்னாங்க. எதுவும் இல்லையா” தீரமுகுந்தன் தாத்தாவை அறிந்தவனாக கேக்க 
அவனை முறைத்தவர் “யார் டா சொன்னா” அதட்டலாக அவர் குரல் ஒலிக்க 
“திரு தான் சொன்னான்” என்று அப்பாவை மாட்டி விட 
“கணம் அப்பா அவர்களே! இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் நிரபராதி. நிரபராதி. நிரபராதி” என்று கத்தி சொல்ல 
“அப்பா நீ இப்போ தான் வக்கீல்னு ப்ரூப் பண்ணிட்ட.  வா பிங்கிமா நாம போலாம்” என்று பிங்கியை அழைக்க அவளோ அவன் முதுகில் தொங்கி இருந்தாள். 
“இன்னும் குழந்தையாவே இருக்கா” 
“வாலில்லா குரங்குனு சொல்லுங்க” விஷ்வதீரன் சொல்ல 
“நீங்க என்னா வேணாலும் சொல்லுங்க என் புருஷன் வாய் தொறந்தான் செத்தான்” என்று தீரமுகுந்தன் காதில் கிசுகிசுக்க அதன் பின் அவன் வாய் திறப்பானா?
நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தோடு கழித்த இனிமையான பொழுது மனதில் ரம்யமாக பதிய அனைவரும் தங்களது அறைக்கு திரும்பினர்.  
குழந்தைகளை தூக்கிக் கொண்டு வந்து கட்டிலில் கிடத்த போர்வையை போர்த்தியவாறே “சலீம்பாய் பாவமில்ல. ஏன் விஷ் பத்து வருஷத்துக்கு அப்பொறம் நாம சந்திச்சது போல அவரும் அவங்க லவ்வர சந்திக்க வாய்ப்பிருக்கு தானே. அவங்க லைஃப்ல என்ன வேணா நடந்திருக்குமில்ல” ஆரோஹி யோசனையாக கேக்க  
“ஆ..மாடி இப்போ அதுதான் ரொம்ப முக்கியம் பாரு. இங்க நா ஒருத்தன் இளமையா, தனிமைல தவிக்கிறேன் அந்த கிழவனுக்கு போய் பாவம் பாத்து கிட்டு நிக்கிற, முதல்ல என்ன கவனி டி” விஷ்வதீரன் அவளை பின்னால் அணைத்தவாறு கழுத்து வளைவில் முகம் புதைக்க 
“விஷ் இன்னக்கி முடியாது” 
“உன் கிட்ட பெமிசன் எல்லாம் கேட்டிருக்க கூடாது” என்றவன் அவளை கைகளில் ஏந்திக்கொள்ள 
“விஷ் சொல்லுறத கேளு ஒரு மூனு நாள் போகட்டும் ப்ளீஸ்” எவ்வாறு சொல்வதென்று நெளிய 
விளக்கொளியில் அவள் சங்கடம் அவனுக்கு தெரியவில்லையோ! அவளை சோபாவில் அமர்த்தியவன் மடியில் படுத்துக்க கொண்டு அவள் கையை பிடித்துக் கொண்டவன் “ஆரா ஆயிஷாம்மா லைப்பை பத்தி உனக்கென்ன தெரியும்?” 
“பெருசா ஒன்னும் இல்ல. ஹஸ்பனும் பையனும் மில்டரில இறந்துட்டாங்க, பொண்ணு அமெரிக்கால இருக்கா, அவங்க அங்க போக விருப்ப படல” அவனின் தலையை கோதியவாறே சொல்ல
கண்மூடி ரசித்தவாறே “மும்பைல இருந்து திருச்சி வர நீயா முடிவு பண்ணியா? இல்ல அவங்க முடிவு பண்ணாங்களா?”
சிறிது நேரம் யோசித்தவள் “அவங்க தான்” 
“அவங்களும் சலீம் பாயும் ஒரே ஏரியா, வேற வேற தெரு”
“அப்படியா” 
“இன்னுமா புரியல”
“அப்போ அவர் சொன்னது ஆயிஷா அத்தைய பத்தியா?” 
“இப்போவாச்சும் பல்பு எரிஞ்சதே!” 
“எனக்கென்ன காதல பத்தி தெரியும்” 
“சொல்லி கொடுக்க தான் நான் இருக்கேனே! யாம் இருக்க பயமேன் செல்லம்.  நீ இவ்வளவு சூப்பரா டான்ஸ் ஆடுவானு ஏன் சொல்லல”  
“ஆமா இவரு லவ் சொல்லி தாலி கட்டிட்டு அம்போன்னு விட்டு போவாராம், டேலி போன் பேசி, வாரத்துக்கு ஒரு லெட்டர் போட்ட மாதிரி கேக்குற. உன்ன…” 
சடுதியான அவள் முக மாற்றமும் பேச்சின் தொனியும் அவள் நிலை உரைக்க எழுந்தமர்ந்தவன் “சாரி டி, உன்ன பத்தி சரியா புரிஞ்சிக்காம” 
அவன் சொல்லி முடிக்க முன் அவனை இறுக அணைத்தவள் நான் தான் சாரி சொல்லணும் விஷ். என் மேலயே எனக்கு நிறைய கோவம் இருக்கு, யார் மேலயோ உள்ள கோபத்தையும் உன் மேல தான் காட்டுறேன். பயமா இருக்கு விஷ் என்ன ஒத்துக்கிட மாட்டியே!”
“ஆமா இவ அப்படியே என்ன உருகி உருகி காதலிச்சு விட்டுட்டு போய்ட்டா, கோவத்துல ஒதுக்கி வைக்க” அவள் சொன்னது போல் சொல்லி சிரிக்க 
“விஷ்” என்றவாறே அவன் மார்பில் தஞ்சமடைந்தாள் ஆரோஹி. 
“விஷ் நான் இன்னைக்கி டாக்டர பாக்க போய் இருந்தேன்” திக்கித்திணறி என்ன சொல்வானோனு ஏறிட
“நமக்குள்ள தான் ஒண்ணுமே நடக்கலையே! அப்போ எப்படி ப்ரெக்னன்ட் ஆன? கனவுல வந்து தொல்லை பண்ணினேனா?” குறும்பாக கேக்க  
அவன் சொல்வதை புரிந்துக் கொண்டவள்  “வீ…ஷ்” நெஞ்சிலே சில அடிகளை கொடுக்க 
“எந்த டாக்டர பாக்க போன? என்ன பிரச்சினை?” விளையாட்டில் அவள் சொல்லவந்ததை மறந்து விடாமல் எடுத்துக் கொடுக்க 
ஆரோஹியின் கைகள் அடிப்பதை நிறுத்தி  அவள் அவனை பார்க்க, புருவம் உயர்த்தி “என்ன” என்று கேட்டான். 
மெதுவாக சொல்ல ஆரம்பித்தவள் காலையில் அர்ச்சனாவை சந்தித்ததை சொல்ல, புதிதாய் கேப்பதை போல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான். 
இதில் அவள் பல்லவனை பற்றி எங்குமே சொல்லவில்லை. அப்படி ஒருவன் தன வாழ்வில் செய்த அநியாயம் அவள் அறியாமலே இருப்பது நல்லது என்று தோன்ற அமைதி காத்தான். 
“விஷ் அப்பா மேல உள்ள கோவம், ஆகாஷ் மேல உள்ள கோவம் எல்லாம் சேர்ந்து உன் மேலதான் காட்டிட்டேன்” விசும்ப ஆரம்பிக்க 
“அம்மா தாயே! டேம தொறந்துடாத, நல்ல மூட் ஸ்பாயில் ஆகிடும்” 
விசுக்கென அவனை நிமிர்ந்து பார்க்க அவனின் குறும்பு சிரிப்பே ஆறுதலாக இருக்க கண்களை துடைத்துக் கொண்டாள். 
உங்க அப்பாக்கு என்ன நிலைமையோ அத தெரிஞ்சிக்க நீ முயற்சிக்கவே இல்ல. ஆகாஷ் தப்பு பண்ணிட்டதா நீயே முடிவு பண்ணிட்ட, அவன் நிலமைல இருந்து யோசிக்கவும் இல்ல” விஷ்வதீரன் பொறுமையாக விளக்க முயற்சிக்க 
“என்ன நிலைமை? கட்டின பொண்டாட்டிய ஒருத்தன் ரேப் பண்ணிட்டான். அது அவளுக்கும் தெரியல? அவன் காதல் உண்மையாக இருந்தா அத ஒரு விஷயமாகவே எடுத்துக்காம, விட்டு தள்ளிட்டு  அவ கூட சேர்ந்து வாழணுமா? இல்லையா? அப்படியே அவளுக்கு தெரிஞ்சிருந்தாலும் அவளுக்கு ஆறுதலா அவன் இருந்திருக்கணுமா? இல்லையா? அவ ப்ரெக்னன்ட்டா  இருக்கும் போதுதான் ரேப் நடந்திருக்கு அது கூட தெரியாம, குழந்தையை வேற அழிக்க சொல்லி அவள மனசளவுல கஷ்டப்படுத்தி, அவனும் கஷ்டப்பட்டு, வாழ்க்கையை நரகமாக்கி, அவ தற்கொலை பண்ணிக்க இவனும் அவ கூடவே போய் சேர்ந்துட்டான். தான் குழந்தைனு கூட தெரியாம அந்த பிஞ்சு முகத்தை கூட பாக்காம, ஒதுக்கி வச்சுட்டானே!” ஆதங்கமாக ஆரம்பித்தவள் குரல் கம்மா முடிக்க 
“ஆரா உண்மை என்னன்னா” விஷ்வதீரன் அவள் எண்ணத்தை மாற்ற எதை  சொல்லவே கூடாது என்று முடிவெடுத்திருந்தானோ அதை சொல்ல விளைய அவன் மனையாள் அவனை பேச விட்டாள் தானே!  
“எந்த உண்மை, ஓ….ஹ் நீ போலீஸ் இல்ல கண்டு பிடிச்சிருப்ப. அப்போ அஜய்யும், விஜய்யும் என் குழந்தைங்க இல்லனு தெரிஞ்சி கிட்டு தான் என்ன கல்யாணம் பண்ண முடிவு பண்ணியா” வெறுப்பாக அவள் குரல் ஒலித்தது. 
விஷ்வதீரனின் பொறுமை குற்றவாளிகளிடம் எல்லை கடக்கும், ஆரோஹியை வெறுத்து பழிவாங்கணும் என்று இருந்தவன் குழந்தைகள் தனதே என்றுதான் மனம் மாறினான். அவளுக்கு அநியாயம் இழைத்து விட்டதாக எண்ணி இருந்தவன் அவளை சந்தித்து உண்மையை கூறி அவளை கரம் பிடிக்க எண்ணி அவளின் வீட்டுக்கு சென்றவன் முத்தமிட முயல, அவள் மயங்கி விழ அன்றே ஆயிஷாவின் மூலம் உண்மையை அறிந்துக் கொண்டான். அதுவே தன் குழந்தைகள் இல்லை என்ற போதிலும், ஆரோஹிக்காக அவர்களை ஏற்றுக்கொண்டானா? இல்லை. “டாடி” என்று செல்லம் கொஞ்சும் குழந்தைகளுக்காகவே அவர்களை ஏற்றுக் கொண்டவன். ஆரோஹி உண்மையை சொன்ன பின்பும் கூட ஆகாஷின் குழந்தை எது என்று பிரித்து கேட்கவில்லை. கேட்கவும் தோன்றவில்லை. அவனை போய் ஆரோஹி இவ்வாறு பேசுவது கொஞ்சமேனும் நியாயமில்லை. அவள் மனநிலையை உணர்ந்து பொறுமை காத்தவன், உண்மை அனைத்தும் அறிந்த பின் மௌனமானான். 
“ஏன் விஷ் பேசாம இருக்க? ஏதாவது பேசு” குரலில் கோபம் இருந்தாலும் கண்கள் அவனிடம் கெஞ்சலாக பார்க்க அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. 
“உண்மை என்னனு உனக்கே தெரியும் ஆரா, உன் குழந்தைகள் என் குழந்தைகள். அது நீ சுமந்து பெத்தாலு, இல்லைலனாலும்” அவளின் கண்களை பார்த்து திமிராகவே சொன்னான் விஷ்வதீரன்.
அவனின் பதிலில் அவள் நிம்மதி பெருமூச்சு விட 
“ஆரா நா ஒன்னு கேப்பேன் உண்மையாகவே பதில் சொல்லு” விஷ்வதீரன் “சொல்லுவியா” என்ற பார்வையை வீச “என்ன” என்ற பார்வை தான் ஆரோஹியிடம். 
“கல்யாணத்த நிறுத்த முடிவு பண்ணி நீ அன்னைக்கி டில்லி ஹோட்டல் ரூம்ல உன்ன யாரோ ரேப்  பண்ணத தான் சொல்ல வந்த? ஆனா அத நீ சொல்லாம பேச்ச மாத்தி குழந்தைகளை பத்தி பேசின. ஏன்?” 
“நீ என் கழுத்துல தாலி கட்டிட்டேன், நீ தான் என் புருஷன்னு சொல்லிட்டு போயிட்ட, சித்தி மாப்புள, மாப்புளனு உன்ன கூப்பிட்டு சொந்தம் கொண்டாட, ஆயிஷாம்மா  உன் குழந்தைகள் னு நினைச்சி அப்பா கிட்ட இருந்து குழந்தைகளை பிரிக்காதான்னு சொன்னாங்க. எல்லாத்துக்கும் மேல என் மனசு உன் பக்கம் சாய ஆரம்பிரிச்சு, எங்க என்ன ஒருத்தன் ரேப் பண்ணிட்டதா சொன்னா ஆகாஷ் மாதிரி நீயும்” விஷ்வதீரன் அவளை முறைத்து பார்க்க 
உடனே பதட்டமாக “இப்போ அப்படி நினைக்கல. அன்னைக்கி நீதான் என் கூட இருந்தனு சொன்னப்போ! ரொம்ப நிம்மதியாக இருந்தது. கூடவே உன் மேல கோவமும் எப்படி நீ என் கிட்ட தப்பா நடந்துக்கலாம்னு” கடைசி முடிக்கும் போது குரல் உள்ளே போக 
“அன்னைக்கி என்ன நடந்ததுன்னு சத்தியமா என் நியாபகத்துல இல்ல. அன்னைக்கி இருந்த மனநிலைல தப்பு பண்ணாலும் பண்ணி இருப்பேன். நா கண்முழிச்சு பாத்தப்போ நீ இருந்த. குளிச்சிட்டு வந்து பாக்கும் போது நீ இல்ல. கனவுனு முடிவு பண்ணிட்டேன். இல்லனா உன்ன தேடி கண்டிப்பா வந்திருப்பேன். மால்ல உன்ன பிரக்னன்ட்டா  ஒருத்தனோட பாத்தப்போ அவன் உன் புருஷன் னு நினைச்சி கோபத்துல உன் கூட பேசாமலையே வந்துட்டேன்” 
“விதி நம்ம லைஃப்ல என்ன மாதிரியெல்லாம் விளையாடி இருக்கு” ஆரோஹி கவலையாக சொல்ல 
“எது நடக்கணும்னு இருக்கோ அது நடந்தே தீரும்” அவள் கண்களை பார்த்து தீர்க்கமாக சொல்ல 
அவன் சொல்ல விளைவது ஆகாஷ், நிஷா வாழ்க்கையை பற்றி என்று புரிந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் மனம் முரண்டியது. 
“தூங்கலாமா விஷ் தூக்கம் வருது” 
“ஓகே.. ஆனா உன்ன கட்டிக்கிட்டே தூங்கணும், பசங்க கொஞ்சம் தள்ளி படுக்கட்டும் ஓகே வா?” தாடையை தடவியவாறே கண்ணை சுருக்கிச் சொல்ல 
பலமாக தலையாட்டினாள் ஆரோஹி.
கன்னி உந்தன் மடி சாய வேண்டும்
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்
உன்னைக் கட்டிக்கொண்டு தூங்க வேண்டும்
உந்தன் விரல் தலைகோதிட வேண்டும்
கையோடு இதம் காண வேண்டும்
கண்ணீரில் குளிர் காய வேண்டும்
உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்
உயிருக்குள் உயிர் சென்று சேர வேண்டும்
இருவரும் ஒரு சுரம் பாட வேண்டும்
உன்னில் என்னை தேட வேண்டும்
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன்
என்ன தான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னன்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்தேன் தவித்தேன்
“பிங்கி பேபி ஹனிமூனுக்கு எங்க போலாம்” தீரமுகுந்தன் தாபமாக அவள் கழுத்து வலைவில் முகம் புதைத்தவாறே கேக்க 
“லவ்வே ஒழுங்கா சொல்லல,  கல்யாணத்தையும் வேண்டா வெறுப்பா பண்ணிகிட்ட. உனக்கு ஹனிமூன் ஒரு கேடா” முழங்கையால் அவன் இடுப்பில் குத்தியவாறே அவனை விட்டு விலக. 
“ஐயோ அம்மா கையா இது உலகை மாதிரி இருக்கே” வேண்டுமென்றே அவளை வம்பிழுக்க அவனை தள்ளி விட்டு கட்டிலில் ஏறி படுத்துக்க கொள்ள 
“வம்பிழுத்தால் பதிலடி கொடுக்கும் தன்னவள் சிறு குழந்தையாய் கோவம் கொண்டிருப்பது ஏன் என்று புரியாமல் அவளை பின்னால் அணைத்துக் கொண்டவன் தன் புறம் திருப்ப முயற்சிக்க வம்பாக அவளும் திரும்பாமல் இருக்க 
“டி ப்ரியா ரொம்ப ஓவரா பண்ணுற நீ” 
“என்ன அப்படி கூப்பிடாத, யாரையோ கூப்பிட்ற மாதிரி இருக்கு” 
“சரி கூப்பிடல. உன் பிரச்சினை தான் என்ன?” 
“ஒண்ணுமில்ல. பேசாம தூங்கு. தூக்கம் வரலையா? உன் குடனுக்குள்ள போய் கதவ சாத்திக்க” 
தான் காதலிக்கும் அளவுக்கு கணவன் தன்னை காதலிக்க வில்லையோ? விருப்பம் இல்லாமல் பண்ணிக்க கொண்டாலும், நடந்த கல்யாணத்தை ஏற்றுக் கொண்டானோ? அவன் வேலைப்பளுவால் அவளோடு இருக்கும் நேரம் குறைய பிங்கி அதை தவறாக புரிந்துக் கொண்டாள்.  
“சுண்டெலி சைஸ்ல இருந்து கிட்டு என்னமா ஆட்டி படைக்கிறா” மனதுக்குள் ரசித்தவாறே “ஓகே டேலி காலைலயும் மாலைலயும் ஐ லவ் யு சொல்லுறேன். பதிலுக்கு நீ என்ன கிஸ் பண்ணு. டீல் ஓகே வா” அவளிடமிருந்து பதில் வராது போகவே எம்பி மறுபுறம் குதித்தவன் அவள் முகம்  பார்க்க கண்களை இறுக மூடி இருந்தாள் பிங்கி. “என்ன பாருடி. பாக்க மாட்டியா” அவள் மேலும் கண்களை இறுக மூடிக் கொள்ள “இப்போ நீ என்ன பார்க்கல அப்பொறம் நடக்க போற சேதாரத்துக்கு நா பொறுப்பில்ல” சொல்லி முடிக்க முன் பட்டென்று கண்களை திறந்தவள் அவனை முறைக்க “அப்படி வா வழிக்கு” அவள் நெற்றியோடு நெற்றி முட்டியவாறே மூக்கோடு மூக்கு உரச பிங்கி விலகி நின்றாள்.  
“இன்னும் பின்னாடி போனா கட்டில்ல இருந்து விழுந்துடுவ” என்றவாறே அவளின் கழுத்துக்கு அடியில் கையை நுழைத்து இழுத்தவன் மறுகையை இடுப்பின் மேல் போட்டு தன் புறம் இழுத்திருக்க பிங்கி வழுக்கிக் கொண்டு அவன் மேல் மோதினாள். 
“ஐயோ ஒரு இழுப்புக்கே இப்படி ஒட்டிக்கிட்டியே! வீம்பு பண்ணா என்னெவெல்லாம் பண்ணுவானோ!” பிங்கியின் மனம் எச்சரிக்க மெதுவாக அவன் முகம் பார்த்தாள்.  
“என்ன பிங்கி மேடம் சரணடைஞ்சா சேதாரம் குறைவுன்னு யோசிக்கிறீங்க போல” அவளின் நெற்றியில் முட்டியவாறே கேக்க 
“ஹீ ஹீ ஹீ” என்று இளித்தவள் உதட்டை குவித்து அவனின் இதழ்களை மெதுவாக முத்தம் வைக்க தீரனின் கண்கள் தானாக மூடிக்கொண்டது. அவளின் முத்தத்தை ஆழ்ந்து அனுபவிக்க அவன் காத்திருக்க, சரணடைய நினைத்தவள் அவன் அதையே சொல்லவும் “சேன்ஜ் தி மூட்” என்று மனம் சொல்ல பிங்கியோ அவனின் மூக்கை கடித்திருந்தாள்.
 
“ஆ…” என்று அலறியவாறே  அவளை விட்டு விலகி மூக்கை தடவியவாறே “ராட்சசி, ராட்சசி. பேய், பிசாசு, அரக்கி, ரத்த காட்டேரி” என்று ஊரில் உள்ள எல்லாவற்றையும் கூப்பிட 
“போய் அவங்க கூடவே குடும்பம் நடத்து” என்றவள் திரும்பி படுத்துக்க கொண்டாள். 
அவளின் மனக்குறையை புரிந்து அதை தீர்த்து வைக்காமல் அவன் வாழ்வு சிறக்காது.

Advertisement