Advertisement

அத்தியாயம் 31
சொன்னது போல் விஷ்வதீரன் நேரங்காலத்தோடு வீடு வந்தான். வரும் போது அல்வா மல்லிகைப்பூ, புடவை என்று ஆரோஹிக்கும். குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ், விளையாட்டு பொருட்களும், மற்றவர்களுக்கும் சிலது வாங்கி வந்திருந்தான். 
குளித்து விட்டு வந்தவன் ஆரோஹி புன்னகை முகமாக நீட்டிய காபியை பருகியவாறே அவளையும் கண்ணால் பருக்கலானான். அவன் பார்வையில் வெக்கப்பட்டு சிரித்தவள் நகரப்பாக்க அவளின் கையை பிடித்திருந்தான் விஷ்வதீரன். 
“எங்கடி ஓடப்போற? பூ வாங்கிட்டு வந்தேனே! வைக்கலயா?” சொல்லியவாறே காபி கப்பை கட்டிலின் அருகில் உள்ள மேசையில் வைத்தவன் அவளை மடியில் அமர்த்திக் கொள்ள 
“எனக்கா வாங்கிட்டு வந்த? சாமிக்குனு நினைச்சிட்டேன்” குறும்பாக அவள் சொல்ல 
“அவருக்கு சாத்த தோட்டத்துல விதவிதமா பூத்து குலுங்குதே! நான் என் பொண்டாட்டிக்கு வாங்கிட்டு வந்தேன்” அவளின் நெற்றியில் முட்டியவாறே 
“அப்படியா விஷ்வதீரா… அல்வா எதுக்கு வாங்கிட்டு வந்தீங்க?” அவன் மூக்கோடு உரச 
“அதுவும் என் பொண்டாட்டிக்கு புடிக்கும்.. னு வாங்கிட்டு வந்தேன்” அவள் இதழ்களில் மெல்லிய முத்தம் வைக்க கதவு படபடவென தட்டப்பட்டது. 
ஆரோஹி அவனை விட்டு விலக முற்பட “இரு ஆரா” என்றவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டே சென்று கதவை திறந்தான். 
வெளியே அஜய் “டாடி எல்லாரையும் மொட்டைமாடிக்கு வரும் படி பெரிய தாத்தா உத்தரவு” இடுப்பில் கைவைத்து அதட்டலாக சொல்லி விட்டு ஓடியிருக்க விஷ்வதீரன் புன்னகைத்தவாறே கதவை தாப்பாளிட்டான்.  
அஜய்யின் குரல் கேட்டு எழுந்து கொண்ட ஆரோஹி வெளியே செல்ல முற்பட “ஒரு ஐஞ்சு நிமிஷம் கழிச்சு போனா தாத்தா மிலிட்டரி கன்ன எடுத்து சுட்டுட மாட்டாரு” என்றவன் காலையில் அவள் பேசியவைகள் நினைவில் வந்து அவளின் இடையோடு இறுக அணைத்திருந்தான்.  
“விஷ் ஐ லவ் யு” என்று அவனின் கன்னத்தில் முத்தம் வைத்தவள் கைகளை மாலையாக்கி அவன் கழுத்தில் போட அவளின் மூக்கோடு முக்கை வைத்து உரசியவன் 
“அதான் அப்போவே தெரிஞ்சிருச்சே என் கியூட் பொண்டாட்டி, உன் கண்ணுல காதல் அப்படியே நிறைஞ்சி வழியுதே! ஆனா வாய் இப்போ தான் ஒத்து கிட்டு இருக்கு, இந்த குட்டி லிப்ஸ்க்கு ஒரு கிப்ட் கொடுக்கலாமா” கிசுகிசுப்பாய் கேக்க ஆரோஹியும் வெக்கிச்சிவந்தவாறே தலையசைக்க மெதுவாக அவள் இதழ்களில் கவி எழுத ஆரம்பித்தான் விஷ்வதீரன்.  
முத்தே முத்தம்மா முத்தம் ஒன்று தரலாமா?
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா? 
கடலுக்கு காதல் வந்தால்? 
கரையேறி நீ வந்தால் போதும். 
கவிதைக்கு காதல் வந்தால்?
தாங்காதம்மா…..
உல்லாசம் உல்லாசம் உலகெங்கும் உல்லாசம்
சந்தோசம் சந்தோசம் எங்கெங்கும் சந்தோசம்
  “டேய் முகுந்த் உன் அண்ணன பாத்தாவது கத்துக்கோடா” குளித்து விட்டு வந்தவனிடம் சண்டைக்கு தயாரானாள் பிங்கி 
“அவன் கிட்ட என்ன மிச்சமிருக்கு கத்துக்க” எதற்காக கேக்கின்றாள் என்று புரியாதவன் தலையை துவட்டியவாறே அவளை கேள்வியாக ஏறிட 
“அவர் பொண்டாட்டிக்கு பூ, அல்வா, புடவைனு வாங்கிட்டு வந்திருக்காரு, நீயும் இருக்கியே! தத்தி லவ் தான் பண்ண மாட்டேங்குற, அட்லீஸ்ட் இதையாச்சும் வாங்கிட்டு வந்து பொண்டாட்டிய கரெக்ட் பண்ணனும்னு தோணுதா உனக்கு” கட்டிலில் அமர்ந்து அவனையே வெறித்து பாத்திருந்தவள் முகத்தை சுருக்க 
 “ஏன் டி டெய்லி காலையும், மாலையும் ஐ லவ் யு னு சொன்னா கூட லவ் பண்ணலன்னு சொல்லுவா போல இருக்கே! இதெல்லாம் வாங்கிட்டு வந்தா தான் காதல்னு அர்த்தமா? பொண்டாட்டிய கரெக்ட் வேற பண்ணனுமா” அவள் என்ன சொல்ல விளைகிறாள் என்று புரிந்து கொள்ளாமல் சிரிக்க 
“போடா உனக்கு எல்லாமே நக்கல் தான். இந்த கடவுள் அப்படி என்ன பிசியா இருக்காரே என் லைஃப்ல லவ் எங்குற அத்தியாயத்த எப்போ எழுத போறாரோ” கடுப்பாக கத்தினாள் பிங்கி. 
“என்னடி இப்போ உனக்கு பிரச்சினை? அல்வா வேணுமா? எந்த ஊரு அல்வா வேணும், இருட்டு கட அல்வா வேணுமா ஒன்லைன்லேயே ஆடர் பண்ணிக்கலாம் டி. புடவை? பட்டு புடவையோ? டிசைனர் புடவையோ? எந்த கலரு? பட்டுனா? காஞ்சி  பட்டா? பனாரஸ் பட்டா? டிசைனர் நா பேர்ல் ஒர்க்? எம்ப்ரோய்டரி? ஆரி? என்ன வேணும் சொல்ல உடனே வரவைக்கிறேன்” மூச்சுவிடாமல் விளம்பர பாணியில் சொல்ல பிங்கி கை தட்டியவாறே அவன் மேல் பாய்ந்து முத்தம் வைக்க
“எங்கண்ணனுக்கே நான் தாண்டி குரு” காலரை தூக்கி விட 
“ஆமா எனக்கொரு சந்தேகம்?” பிங்கியின் டிடெக்டிவ் மூளை விழித்துக் கொள்ள தலையை தட்டி யோசித்தவாறே  
“என்ன சந்தேகம்? கேளு”  தனக்கு ஆப்பு வைத்துக் கொண்டான் தீரன். 
“உங்கம்மாவும்  இல்ல. பொண்ணுகளையே திரும்பியும் பாக்கலைனு எல்லாரும் சொல்லுறாங்க, புடவைய பத்தி இவ்வளவு தெளிவா சொல்லுறியே! எங்கயோ இடிக்குதே! சொல்லு யாரவ? 
“………”   தீரன் முழிக்க 
“கண்ண நோண்டிப்புடுவேன் சொல்லுடா” பத்ரகாளியாக மாறி இருந்தாள் பிங்கி. 
 “என்னடி விட்டா எத்தன பொண்ணுங்கள சைட்டடிச்சன்னு வேற கேப்ப போல இருக்கு” தீரன் கடுப்பாக 
“சைட் அடிச்சியா? கொன்னுடுவேன். சொல்லுடா” 
“அடியே என் செல்ல பொண்டாட்டி மாமா போலீஸ் டி அண்டர் கவர் வேல பாக்கும் போது நிறைய விஷயம் கத்துக்கிட்டேன் டி ஒரு அக்கியூஸ்ட புடிக்க புடவை கடைல மூனுமாசம் வேல பாத்தேண்டி அங்க வச்சி தான் கத்து கிட்டேன்” அவளை இழுத்து மடியில் இருத்திக் கொண்டவன் கன்னத்தில் முத்தம் வைக்க 
“நிஜமாவா சொல்லுற? உண்மை தானே!” சந்தேகம் தெளியாமல் கேக்க 
“எங்கம்மா மேல சாத்தியமா நீ மட்டும் தான்டி எனக்கு நல்லா தெரிஞ்ச ஒரே பொண்ணு” 
“சரி எனக்கு என்னெல்லாம் புடிக்கும்னு சொல்லு” குழந்தை போல் சிணுங்கியவள் “மாட்டினாண்டா போலீஸ்” உள்ளுக்குள் சிரித்தவாறே ஏறிட கதவு தட்டுப்பட 
“இரு வரேன்” என்றவன் கதவை திறக்க விஜய் நின்று கொண்டிருந்தான் அவனை தூக்கியவாறே “சொல்லுடா குட்டி என்ன விஷயம்”
“எல்லாரு மொட்டை மாடிக்கு வரணும். இது பெரிய தாத்தா உத்தரவு” என்றவன் இறங்கி ஓடி இருக்க 
“எல்லாரையும் எதுக்கு கூப்பிட்டாரு?” பிங்கி யோசிக்க  
  “அப்பாடா தப்பிச்சேன்”  புருவம் நீவியவன் “போய் பாத்தா தானே தெரியும் வா போகலாம்” என்று முன்னாடி நடக்க அவன் முன் வந்து நின்றாள் பிங்கி.  
“எந்த பொண்ணு வந்து மனமேடைல உக்காந்து இருந்தாலும் தாலி கட்டி இருப்பியே! என்ன மட்டும் எப்படி லவ் பண்ணுவ?” அவனை முறைக்க 
பல்லவனை பிடுக்கவென வீடு தாங்காமல் தீரன் சுற்ற, அவன் அருகாமை இல்லாமல் தவித்தவளின் மனதில் அவன் பேசியவைகள் வந்து விஸ்வரூபம் எடுக்க இன்று நேரங்காலத்தொடு  வீடு வந்தவனை பிடித்துக் கொண்டாள் பிங்கி. அவனிடம் பேசி அதற்கான சரியான விளக்கத்தை பெற்றுக் கொள்ள அவள் முயற்சிக்க   
“கடவுளே! இது நியாயமா? உன்ன வந்து அடிக்கடி பாக்க முடியலன்னு இப்படி ஒரு ராட்சசி கிட்ட என்ன கோர்த்து விட்டியே! நா பேசினதேயே! எனக்கு ஆப்பா சொருகுறாளே! காப்பாத்து……” உடனடியாக கடவுளுக்கு ஒரு கோரிக்கையை வைத்தவன் 
“அது வந்து பிங்கி டார்லிங். உனக்கு நான் தான், எனக்கு நீதான்னு கடவுள் எப்பயோ முடிவு பண்ணிட்டாரு, நீ என்ன லவ் பண்ணலைனாலும் என்னதான் கல்யாணம் பண்ணி இருப்ப. இல்லையா? நா தானே உன் வீட்டுல பாத்தா மாப்புள”
வாயில் விரலை வைத்து கடித்தவாறே பிங்கி மண்டையை ஆட்ட 
  “அப்பாடா” என்று பெருமூச்சு விட்டவன் வாயில் விரலை வைத்திருக்கு கொள்ளையழகு அவனை இழுக்க தலையை உலுக்கிக் கொண்டு “இப்போவாச்சும் வா போலாம் இல்ல தாத்தாவே  நம்மள தேடி வந்துடுவாரு” அவளை இழுக்காத குறையாக கடத்திக் கொண்டு போனான்.  
தனது மனக்குறையை வார்த்தையாக மாற்ற தெரியாமல் பிங்கி கேள்வி என்று கேட்டு சொதப்புவதும், அவளிடமிருந்து தப்பினால் போதும் என்று தீரன் வாயில் வந்ததை சொல்லி சமாளிப்பதுமாக அவர்களின் நாட்கள் நகர்கின்றன.
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…
மொட்டை மாயில்டி ஒரு பக்கம் துணிகளை காயவிடவும், ஒரு பக்கம் அமர்வத்துக்கான சீமெந்து பெஞ்சும் அமைக்கப்பட்டிருக்க, மொட்டைமாடி சுவர்களில் உள்ள விளக்குகள் ஏற்றப்பட்டிருக்க, வானிலாவும் தங்கம் போல் தகதகவென மின்ன,  நடுவில் பாய் விரிக்கப்பட்டு இரவு உணவுகள் எல்லாம் அடுக்கப்பட்டிருந்தன. 
ஆரோஹி விஷ்வதீரனின் கையை இறுக பிடித்தவாறே  வர அவளின் கால்கள் நடுங்க ஆரம்பித்தது. 
“அன்ஈஸியா இருக்கா? தாத்தாட்ட சொல்லி கீழ போலாம்”
“வேணாம் விஷ் இன்னும் எத்தன நாளைக்கு பயந்து கிட்டே இருக்குறது. என்ன மெதுவா கூட்டிட்டு போய் உக்காரவை கொஞ்சம் நேரத்துல சரியாகிடுவேன். நீ பக்கத்துல இருந்தா யான பலம் வரும்” அவள் சொல்லி முடிக்கும் முன் அவளை கைகளில் ஏந்தி இருந்தான் விஷ்வதீரன்.
அவளை கையில் ஏந்திக் கொண்டு வருவதை கண்ட பிங்க் தீரனை முறைக்க
“உன்னத்தான் உப்பு மூட்ட சுமக்கிறேனே!” பாவமாய் சொல்ல 
“சரி பொழச்சி போ” என்று முணுமுணுத்தவள் நாக்கை துருத்தி பழிப்பு காட்டலானாள். 
ஆரோஹியை பிங்கியின் அருகில் அமர்த்தி தானும் அவள் அருகில் அமர குழந்தைகளும் வந்தமர்தனர்.  
இளசுகள் ஒரு பக்கமாகவும் பெருசுகள் ஒரு பக்கமாகவும் அமர இரவு உணவும் பரிமாறப்பட்டது. 
“என்ன தாத்தா எப்பயுமில்லாம இன்னைக்கி பாத்து மொட்டைமாடிக்கு பிகினிக் கூட்டிட்டு வந்திருக்கீங்க?’ தீரமுகுந்தன் வாய் திறக்க 
“பௌர்ணமி இரவு, ரொம்ப நாளைக்கு அப்பொறம் எல்லாரும் வீட்டுல இருக்கோம், இந்த கிழவனுக்கு ஒரு குட்டி ஆச டா பேராண்டி” புன்னகைக்க 
“அப்போ சாப்பிட்ட உடனே கீழ போகாம கேம் விளையாடலாம்” 
“என்ன கேம் பிங்கிமா” தீரன் அவளின் மூக்கை பிடித்து ஆட்ட 
“முதல்ல சாப்பிடு, அப்பொறம் சொல்லுறேன்” என்றவள் பார்வை முழுக்க சலீம்பாயின் மேல் இருந்தது. 
யோசனையாக அவளை பார்த்தவன் “ஏதோ பிளான் பண்ணிட்டா” என்று உள்ளுக்குள் நினைத்தவன் அமைதியாக சாப்பிட அங்கே அஜய், விஜய்யை தவிர யாரும் பேசவில்லை. குழந்தைகள் இருவரும் கேள்விமேல் கேள்வி கேட்டவாறே சாப்பிட விஷ்வதீரன் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான். 
“இவனுங்களுக்கு இம்புட்டு அறிவு அம்மாவும், அப்பாவும் பதில் சொல்லுரதிலிருந்தே கிடைச்சிருக்கும்” தீரனின் காதில் கிசுகிசுக்க பிங்கி அவனுக்கு ஊட்டி விட, அவனும் ஊட்டலானான். 
ஆயிஷா எவ்வளவோ சொல்லியும் “இன்னைக்கி ஒருநாள்” என்று கறாராக  சொல்லிய தீரன்ஸ் சாப்பிட்டு முடிந்ததும் எல்லாவற்றையும் அங்கே இருந்த குழாயில் அலசி அடுக்கினர். 
மீண்டும் அனைவரும் வந்து உக்காரவும் பிங்கி விளையாட்டை ஆரம்பித்தாள். 
“எல்லாரும் இங்க பாருங்க இந்த கிளாஸ் போத்தல் நடுவுல சுத்தி விடப்படும் வாய்ப்பகுதி யார் பக்கம் போய் நிக்குதோ! அவங்க கிட்ட எல்லாரும் ஒரு கேள்வி கேக்கலாம். கேக்காமலும் இருக்கலாம். ஒரு கேள்விக்கு மேல கேக்க கூடாது. அவர் அந்த கேள்விக்கு பதில் சொல்லலைனா, பனிஷமன்ட் உண்டு. அது இந்த பெட்டில இருக்கிற ஏதாவது சீட்டை எடுத்து அதில் சொல்லி இருக்கிறத செய்யணும். ஓகே வா?”
“பூ… இவ்வளவுதானா” என்ற பார்வையோடு பெருசுகள் ஓகே என்று கோஷமிட 
“இதுல எந்த ஆப்ப சொருகி இருக்கிறாளோ” என்றிருந்தது தீரன்சின் பார்வை.
போத்தலை தீரமுகுந்தன் சுத்தி விட அது திருமாறனை நோக்கி திரும்பி நின்றது. “ஹே” என்று அனைவரும் ஆர்ப்பரிக்க “நான் தான் முதல்ல கேள்வி கேப்பேன்” என்று பிங்கி கத்தலானாள். 
“சரி நீயே கேளு” என்று திருமாறன் சொல்ல 
“அத்தைய பத்தி சொல்லுங்க? லவ் மேரேஜா, அரேஞ்சு மேரேஜா?” பிங்கி கண்களை விரிக்க 
“கேட்டாளே ஒரு கேள்வி  அவரு பிளேடு போட ஆரம்பிப்பார்” தீரமுகுந்தன் முணுமுணுக்க திருமாறன் மனசை திறக்கலானார். 
” அம்மா ஒருநாள் வற்புறுத்தி கோவிலுக்கு கூட்டிட்டு போனாங்க, கோவில்ல வச்சுதான் மொதமொத அவள பாத்தேன். பாத்தவுடனே முடிவு பண்ணிட்டேன் அவளதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு.  நிலவொளி அழகி. பேருக்கு ஏத்தமாதிரியே நிலா முகம்”
“எந்த சினிமால இருந்து காபி அடிச்சார்னு தெரியலையே!” விஷ்வதீரன் முணுமுணுக்க 
“கண்டிப்பா தெலுங்கு படமாத்தான் இருக்கும்” தம்பி ஒத்தூதலானான்.
“சூ.. அமைதியாக இருங்க” ஆரோஹி அதட்ட அண்ணனும் தம்பியும் கப்சிப் என்றாகினர். 
 “அப்போ.. அப்பானா ரொம்ப பயம், மிலிட்டரி ஆபிசர் வேற, அவரு வேற அவரோட சொந்தத்துல தான் பொண்ணெடுக்கணும்னு சொல்லிட்டாரு. அம்மா கிட்ட போய் சொன்னா அப்பா சொல்லுறதுதான் முடிவுன்னு சொல்லிட்டாங்க. என்ன பண்ணுறதுனே தெரியல”
“என்ன பண்ணீங்க?” ஆரோஹி ஆவலாக கேக்க 
“நேரா போய் அப்பத்தா முன்னாடி நின்னேன். கோவில்ல வச்சி ஒரு பொண்ண பாத்தேன். அவளத்தான் கட்டணும்னு சொன்னேன். ஒண்ணுமே சொல்லாம என்ன பாத்து ஒரு சிரிப்பு சிரிச்சாங்க” 
“தாத்தா நிஜமாவே இவரு போய் பேசினாரா?” தீரமுகுந்தன் தீரமணியின் காதை கடிக்க அவர் “ஆமாம்” என தலையசைக்க “அப்போ அண்ணனுக்கு இவர் குணம் தான் போல, நாம அம்மா மாதிரி” 
“அப்பொறம் என்ன பலவந்தமான இழுத்துகிட்டு பொண்ணு பாக்க போனாங்க, பொண்ண நா தல உயர்த்தி கூட பாக்கல. பொண்ணுக்கு மாப்பிளையை புடிச்சிருக்காம் மாப்பிளைக்கு பொண்ண புடிச்சிருக்கானு கேட்டப்போ இல்லனு சொல்லிட்டேன்”
“ஐயையோ”  கோரஸாக ஒலிக்க
“பேராண்டி பொண்ண பாத்துட்டு சொல்லு அப்பொறம் வறுத்த படக் கூடாது” னு அப்பத்தா சொல்லிச்சு.
 நானும் மொறச்சி கிட்டே தலையை தூக்கினா, என் தேவதை. நாம தான் பிடிக்கலைனு சொல்லிட்டோமே இப்போ என்ன பண்ணுறது? மான ரோசம் பாத்தா வேலைக்காகாதுன்னு, எழுந்து நின்னு சபைல உள்ள எல்லாரும் என்ன மன்னிக்கணும், பாக்காம வேணான்னு சொல்லிட்டேன், எனக்கு இந்த பொண்ணைதான் புடிச்சிருக்கு னு  வெக்கமே இல்லாம சொல்லிட்டேன்” அங்கே அனைவரும் சிரிக்க 
“வாரத்துக்கு மூனு நாள் உங்கம்மாவ பாக்க ஓடிடுவேன். அப்பொறம் கல்யாணத்த பண்ணி வச்சிட்டாங்க, இல்லனா கல்யாணம் அன்னைக்கி நீங்க ரெண்டு பேரும் மாப்புள தோழனா இருந்திருப்பீங்கடா.  உங்கம்மா ரொம்ப அபூர்வமானவ, என்ன கஷ்டம் இருந்தாலும் வெளிய சொல்லவேமாட்டா. ஒரு வருஷம் தான் அவ கூட வாழ்ந்தேன். ரெண்டு சிங்க குட்டிய பெத்து குடுத்துட்டு போய் சேர்ந்துட்டா”  திருமாறன் வலி நிறைந்த முகமாகவே சிரிக்க 
அம்மா பிரசவத்தில் இறந்தாங்கனு தெரியும், அம்மாக்கு அம்மாவாய் அப்பாக்கு அப்பாவாய் தனியா இருவரையும் வளத்தாங்க, எந்த நேரமும் சிரித்துக் கொண்டு கிண்டல் பண்ணியவாறே இருக்கும் தந்தையின் வலியை இன்று தான் நன்றாக உணர்ந்தனர் மகன்கள். அது தங்களது இணையோடு இருப்பதனாலையே!  
“அம்மா இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டாரோ” என்று அண்ணன் தம்பி இருவரும் தந்தையை அணைத்துக்கொள்ள கொஞ்ச நேரம் மௌனமே நிலவியது.
“அப்பா செண்டிமெண்ட் ஸீன் முடிஞ்சிருச்சுனா? அடுத்த ரவுண்ட் போலாமா” பிங்கி சொல்லியவாறே பாட்டிலை சுழற்ற இந்த முறை ஆரோஹியிடம் வந்து நின்றது. 
விஷ்வதீரனுக்கு கேக்க ஆயிரம் விஷயங்கள் இருந்தும் அவை தனிமையில் கேக்க வேண்டியவை என்று மௌனம் காக்க.
“அக்கா நீ சூப்பரா டான்ஸ் ஆடுவியே! இன்னைக்கி எனக்காக ஆடு” பிங்கி கெஞ்ச அஜய் மற்றும் விஜய்யும் கத்தியவாறே துள்ள 
“சரி” என்றவள் தேவதாஸ் படத்திலிருந்து “silsila hai chahath thuka” என்ற பாடலுக்கு ஆட தொடங்க விஷ்வதீரன் மெய்மறந்து கண்சிமிட்டாமல் அவளையே பாத்திருந்தான்.  கையில் விளக்கு மாத்திரம் தான் இல்லை. அவளும் விஷ்வதீரனை பார்த்தவாறே தான் ஆடிக்கொண்டிருந்தாள். அவள் கால்களில் நடுக்கம் சிறிதும் இருக்கவில்லை.
“அங்க பாரு உங்கண்ணன இந்த உலகத்திலேயே இல்ல பொண்டாட்டிய பாத்து எப்படி ஜொள்ளு வடிக்கிறார். நீயும் இருக்கியே!” பிங்கி தீரமுகுந்தனின் காதில் கிசுகிசுக்க 
“நீ இப்படி ஹஸ்கி வாய்ஸ்ல பேசினா நானும் தான் டி வேற உலகத்துக்கு போய்டுவேன்” 
ஆடல் முடிந்து அனைவரும் கைதட்ட ஆரோஹி விஷ்வதீரனின் அருகில் வந்தமர “சூப்பர் டி” என்று சிலாகித்தவனின் பார்வையோ அவளை விழுங்கி விடுவதை போல் இருக்க 
“மம்மி டான்ஸ் டீச்சர் டாடி” அஜய் சொல்ல  
“இங்லிஷ் டீச்சர் இல்லையா” விஷ்வதீரன் குழம்பிப் போய் கேக்க 
“ரெண்டும் தான்” என்று ஆரோஹி புன்னகைக்க 
“மாமா  ரொமான்ஸ் அப்பொறமா பண்ணலாம்” பழிப்பு காட்டியவாறே பாட்டிலை உருட்ட இந்த முறை தீரமுகுந்தனின் பக்கம் நின்றது. பிங்கி குத்தாட்டம் போட 
விஷ்வதீரன் “கேள்வி நான் தான் கேப்பேன்” 
“என் புருஷன் கிட்ட நா தான் கேப்பேன்” பிங்கி சண்டை போட 
“தீரா நீ எல்லோரா முன்னாடியும் என் தங்கச்சிகு ப்ரொபோஸ் பண்ணுற” ஆரோஹி கத்தி சொல்ல அனைவரும் கை தட்டி ஆர்ப்பரிக்க விஷ்வதீரன் விசில் அடித்தான்.
“இது என்னடா சோதனை” என்று தீரமுகுந்தன் முழிக்க அவன் கையில் ஒரு பூங்கொத்தும் கொடுக்கப்பட “எவ்வளவோ பண்ணுறோம் இத பண்ண மாட்டோமா” என்றவன் பிங்கியின் கையை பிடித்தவாறே நடந்து வந்து அனைவரினதும் முன் நிக்க அனைவரும் கரகோஷமெழுப்பினர். 
பிங்கி வெட்கப்பட “அங்க பாரு உன் தங்கச்சிக்கு வெட்கப்பட கூட தெரியுது” விஷ்வதீரன் ஆரோஹியின் மடியில் படுத்தவாறே சொல்ல அஜய்யும் விஜய்யும் அவன் மேல் பாய்ந்திருந்தனர். 
“ஹாய் பிரியா நா முகுந்த். நா இத சொல்லியே ஆகணும். நீ அவ்வளவு அழகு. இங்க அவ்வளவு அழகா ஒரு…இவ்வளவு அழக பாத்திருக்க மாட்டாங்க. ஐம் இன் லவ் வித் யு” சொல்லி விட்டு பூங்கொத்தை நீட்ட 
“யார் டா அந்த ப்ரியா” அதனாலயே அவனை அடிக்க ஆரம்பிக்க “ராட்சசி” என்று கத்தியவாறே அவளிடமிருந்து தப்பியோட அவனை துரத்தலானாள் பிங்கி.  
அனைவரும் சிரிக்க ஒருவாறு மூச்சு வாங்கியவாறே வந்தமர்ந்தவள் “ப்ரொபோஸ் பண்ண சொன்ன சினிமா டயலொக் பேசிகிட்டு லூசு போலீஸ். மாமா சொல்லிவைங்க உங்க பையன்கிட்ட”
“என்ன எதுக்குமா உங்க சண்டைக்குள்ள இழுக்கிறீங்க” திருமாறன் கேக்க தீரமுகுந்தனும் வந்தமர்ந்தான். 
“ஏன் டி இப்படி வெறி பிடிச்ச நாய் மாதிரி தொரத்துர, எல்லாரும் வதனினு கூப்பிடறதால ஸ்பெஷலா ப்ரியான்னு கூப்பிட்டேன்” பாவமாய் சொல்ல
“வரவர என் பேரே எனக்கு நியாபத்துல வர மாட்டேங்குது” அசடு வழிந்தாள் பிங்கி.   
“சரி சரி விடு பொண்டாட்டி கையால அடிவாங்கினா நல்லதுதான் டா நடக்கும்” தாத்தா கிண்டலடிக்க மற்றவர்கள் சிரிக்க 
“சரி சரி கேமுக்குள்ள போகலாம்” பிங்கி பாட்டிலை உருட்டினாள்.
இந்தமுறை பிங்கி எதிர்பார்த்தது போல் சலீம்பாயின் முன் வந்து நின்றது. தீரனை ஒரு வெற்றிப்பார்வை பார்த்தவள், சலீம் பாயிடம் கேள்வியை கேக்க தயாரானாள்.

Advertisement