Advertisement

                                                                அத்தியாயம் 19
கல்யாணம் சொந்த ஊரில் நடந்ததால்  கல்யாணத்துக்கு வந்த சொந்தபந்தங்கள் அதிகமான பேர் கிளம்பியிருக்க விஷ்வதீரனை விட்டுட்டு போனவ, எப்படி சேர்த்து கிட்டா? உண்மையிலேயே கல்யாணம் பண்ணி குழந்தையை பெத்துக்கிட்டாங்களா? குழந்தையை பெத்துக்கிட்டு கல்யாணம் பண்ணாங்களா? என்ற கேள்வி மண்டையை குடைந்தவர்களில் சிலர் மட்டும் “பொண்ண அலங்காரம் பண்ணனும்” என்று தங்க. அவர்களின் நோக்கமறிந்த விஷ்வதீரன் மண்டபத்திலேயே ஆரோஹியை அண்ட விடாதவன் வீட்டுக்குள் அனுமதிப்பானா?  தாத்தாவிடம் பேசி ஒரு வழியாக அவர்களை கிளப்பி இருக்க இரவு சாப்பாட்டு நேரத்தில் வீட்டார் மாத்திரம் எஞ்சினர்.
இரவு சாப்பாட்டுக்காக அனைவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருக்க,  சலீம் பாய் சமைத்தவைகளை கொண்டு வந்து வைக்க ஆயிஷாபேகம் சாப்பாடு பரிமாற, விஷ்வதீரன் அஜய்க்கு ஊட்ட ஆரோஹி விஜய்க்கு ஊட்ட தாத்தா தீரமணியும், திருமாறனும் வந்தமர பிங்கியும் வந்து சேர்ந்தாள்.  
“விஷ்வா! எங்க டா முகுந்த்” தாத்தா தீரமணி கேள்வியை விஷ்வதீரனிடம் கேட்டாலும் பார்வை பிங்கியிடமே இருந்தது. 
உள்அறையினுள் புகுந்தவன் சிறிது நேரத்திலேயே வெளியே வந்து பிங்கியிடம் எதுவுமே சொல்லாது அறையிலிருந்து வெளியேறி இருந்தான். திருமாறன் அவளிடம் தான் கேக்கிறார் என்று நன்றாகவே புரிந்தாலும், “சொல்லிக்கொள்ளாமல் சென்றவன் எங்கே சென்றான் என்று மை போட்டு பாக்காவா முடியும்” என்று நொடித்துக் கொண்டவள் அவரை பார்க்காமல் தலை தாழ்த்தி “இப்போ நான் உக்காந்து சாப்பிடணுமா? பனமரம் வரும் வரைக்கும் வெயிட் பண்ணனுமா?” என்று யோசிக்க  
விஷ்வதீரன் நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லியும் வெளியே சென்றவன் மீது கோபம் வர உடனே தீரமுகுந்தனுக்கு அழைக்க அவன் உள்ளே நுழைந்தான் 
“எங்கடா போன?” விஷ்வதீரன் குரலை உயர்த்த 
“என் பொண்டாட்டிக்கு இத வாங்க போனேன்” என்று ஒரு பையை தூக்கிக் காட்ட அதில் பழங்கள் இருக்கவே “இவன் பொழச்சிக்குவான்”  என்று அனைவரும் உள்ளுக்குள் சிரித்துக் கொள்ள பிங்கி அவனை விழிவிரித்து காதல் கசிய பார்க்க அவன் அடுத்து கூறியதில் கோவம் கணக்க முறைத்தாள். 
“ரொம்ப குண்டா இருக்கா இன்னைல இருந்து பழம் மட்டும் சாப்பிடட்டும்” தீரன் நக்கலாக சொல்லியவாறே பழப்பையை பிங்கியின் கையில் வைக்க 
“உனக்கு உன் வாய் தான் எமன்” என்று வாசலிருந்து எட்டிப்பார்த்த ஸ்கூபி அவனை பாவமாக பார்த்தது.
“அவன் கெடக்குரான்மா. நீ உக்காந்து சாப்பிடு” என்று தாத்தா சொல்ல பிங்கி அவனை கண்டுக்காது அமர்ந்து சாப்பிடலானாள். 
“ரூஹிமா பசங்க இன்னைக்கு மட்டும் என் கூட படுக்கட்டும்” என்று ஆயிஷா சொல்ல ஆரோஹி என்ன பதில் சொல்வதென்று முழிக்க 
“இல்ல ஆயிஷாம்மா எங்க கூடயே இருக்கட்டும். இன்னைக்கி மட்டும் உங்க கூட இருந்தா கேள்வி கேட்டே உங்கள ஒரு வழி பண்ணிடுவாங்க. ஆரா நீ ரெண்டு பேரையும் கூட்டிட்டு போய் படுக்க வை” என்று சொன்னவன் அலைபேசியோடு வெளியேறி இருக்க, ஆரோஹி குழந்தைகளோடு மாடியேறலானாள். 
“வதனிமா விஷ்வா அவங்க அறைய அலங்காரம் செய்ய வேணாம்னு சொல்லிட்டான். நீ ஏன்மா அப்படி சொன்ன” திருமாறன் அன்பாக கேக்க  
“நான் எப்படா சொன்ன?” என்று அவள் தீரமுகுந்தனை பார்க்க 
அண்ணன் அலங்காரம் எதுவும் வேண்டாம் என்று சொல்லவும் தம்பியும் சொல்ல 
“ஏண்டா……’ என்று திருமாறன் கடிய 
“உங்க மருமக தான் சொன்னா” என்று பிங்கியை மாட்டிவைக்க, இப்பொழுது அவளிடம் தந்தை நேரடியாகவே கேக்க அவள் முழிக்க 
“பூ..னா அவளுக்கு அலர்ஜியாம்” வாய்க்கு வந்ததை சொன்னவன் மாடியேற புஷ்பாவும், தங்கதுரையும் உள்ளே நுழைந்தனர்.
“என்ன இவன் புதுசு புதுசா சொல்லிட்டு போறான். ஏதோ சரியில்ல” என்று யோசிக்க, புஷ்பாவை கண்டு அங்கே தீரமுகுந்தனை விட்டு விட்டு நெடுநாள் தாய், தந்தையை கானதவள் போல் தாவி ஓட 
சதா ஜீன்ஸில் அழையும் மகள் இன்று புடவையில் ஜொலிக்க “பாத்து வாம்மா” என்று தங்கதுரை ஆசையாக மகளை பார்க்க 
“உக்காருங்க சம்பந்தி, சாப்டீங்களா?” என்று திருமாறன் விசாரிக்க தங்கதுரை அவரோடு கதையளக்க ஆரம்பித்தார். 
“வதனி அக்கா எங்க?” புஷ்பா கேக்க
 
“குழந்தைகளை தூங்க வைக்கிறா” 
“நீ போய் குளிச்சிட்டு வாம்மா” அங்கே வந்த ஆயிஷா பிங்கியை அவருடைய அறைக்கு அனுப்பி வைக்க 
ஆயிஷா ஆரோஹியின் கல்யாணம் முடிந்த பிறகு ஊருக்கு செல்வதாக சொல்ல “உங்க பையன் ராணுவத்துல இறந்துட்டான். பொண்ணு கல்யாணம் பண்ணி அமெரிக்கால இருக்கா, உங்க கணவர் இறந்ததும் அவரோட சொந்த காரங்க தொல்லை தாங்க முடியாம குழந்தைகளோட வெளியேறி மும்பாய் போயிட்டீங்க, சொந்த நாட்டை விட்டு அமேரிக்கா போக பிடிக்காம, பையன் சாவையும் தாங்க முடியாம கால் போன போக்குல போனவங்க ஆரோஹி கூட எப்படி சேர்ந்தீங்கனு மட்டும் தானே என் கிட்ட சொன்னீங்க. உங்க சொந்த ஊர் திருச்சி. அம்மா அப்பாக்கு ஒரே பெண்ணான நீங்க எங்க போவீங்க? விஷ்வதீரனின் கேள்வியில் திகைத்து ஆயிஷா அவனை பார்க்க 
“ஆராக்கு நீங்க அத்தனா? எனக்கு அம்மா. எங்க கூட என் வீட்டுல இருங்க, இது கோரிக்கை இல்ல கட்டளை” என்றவன் அவருக்கு ஒரு அறையையும் ஒதுக்கி கொடுத்தான். அவ்வறைக்கு தான் பிங்கியை அனுப்பினார். 
“ஆயிஷாக்கா, ஆரோஹிய அலங்காரம் பண்ண வேணாமா? புரிஞ்சிக்காம இருக்கிறாளே!” நீங்க கொஞ்சம் சொல்லுங்க என்று புஷ்பா கெஞ்சலாக பார்க்க 
“ரெண்டு குழந்தைய பெத்து இருக்கோம், அவசியமில்லன்னு மாப்புள சொல்லிட்டாரேமா. அவளும் அவர் சொல்லுறத கேக்குறா. நாம என்ன செய்ய?  ஆயிஷாவின் குரல் விரக்தியாக வர 
“சரி வாங்க வதனியவாச்சும் அலங்காரம் பண்ணலாம்” என்று உள்ளே நுழைய அவளும் குளித்து விட்டு வர, அலங்காரம் செய்தவாறே புஷ்பா அறிவுரை என்ற பெயரில் பிங்கியை வாட்டி வதைக்க 
“ஒன்னு பண்ணுமா என் கூடயே நீயும் வந்து எங்க அறைல தங்கிக்கோ” கடுப்பில் சொல்ல 
பிங்கியின் தலையில் கொட்டிய புஷ்பா “பாத்தீங்களாக்கா இவ பேசுறத இப்படித்தான் ஏடாகூடமா பேசி வம்ப வளக்குறா” புஷ்பா கடிய
ஆயிஷா சிரித்தவாறே “பிங்கி சின்ன பொண்ணில்லயே பாத்து சூதானமா நடந்துக்குவா” என்று பால் செம்போடு அவளை தீரமுகுந்தனின் அறைக்கு அனுப்பி வைத்தனர்.
விஷ்வதீரன் அறைக்குள் வர ஆரோஹி குழந்தைகளுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தாள்.
“இன்னும் தூங்கலயா?” என்றவன் கட்டிலில் அமர ஆரோஹி எழுந்துக் கொண்டாள்.     
“இவ ஒருத்தி” என்று முணுமுணுத்தவன் அவளை கண்டுக்காது “என்ன கத பிடிக்கலயா?” என்று கேக்க இரண்டு குழந்தைகளும் அவன் மேல் ஏறி இருக்க அவர்கள் இருவரையும் தூக்கி சுமந்தவன் கதை சொல்ல ஆரம்பிக்க ஆரோஹி அவனை அதிசயமாக பாத்திருந்தாள். 
இடையிடையே அவளிடமும் “அதன் பின் என்ன ஆச்சு? அப்படித்தானே?” என்று கேள்விகளை கேட்டு உள்ளே இழுத்தவன் கட்டில் குழந்தைகளை கிடத்தி தட்டிக் கொடுக்க அவளும் சகஜமாக அந்த அழகான கூட்டுக்குள் இணைந்துக் கொண்டாள். சமத்தாக இருவரும் தூங்க ஆரோஹி தீரனை கண்ணிமைக்காது பாத்திருக்க, 
அவளது பார்வையை கண்டு உள்ளுக்குள் நகைத்தவன் “இப்படி பச்சயா சைட் அடிக்கிறா. நான் கேட்டா மட்டும் ஆயிரம் கத சொல்லுவா, நான் கட்டில்ல  உக்காந்ததுக்கே மேடம் எழுந்து நின்னு கிட்டாங்க இதுல பெட்ல படுத்தா கத்தி ஊரையே கூப்பிடுவா.  எதுக்கு வம்பு ” என்று நினைத்தவன் அலுமாரியை திறந்து ஒரு போர்வையை எடுத்துக் கொண்டு சோபாவை நோக்கி நடக்க 
அவனோடு ஒரே அறையில் ஒரே கட்டிலில் என்று அஞ்சியவள் அவனை கண்டு எழுந்து கொண்டாலும் இப்படி இருந்தா குழந்தைகள் கேள்வி மேல் கேள்வி கேப்பார்கள் என்று தோன்ற
“விஷ் எங்க போற?” 
“தூங்க போறேன். காலைல நிறைய வேல இருக்கு” என்றவன் நிக்காது சோபாவில் படுத்து போர்வையை போத்த, அதை இழுத்திருந்தாள் ஆரோஹி. 
“என்ன பண்ணுற?” விஷ்வதீரன் எழுந்தமர்ந்தவாறே போர்வையை இழுக்க அதை எதிர்பார்க்காத ஆரோஹி அவன் மடியில் விழுந்திருந்தாள். 
அவள் விழுவாள் என்று எதிர் பார்க்காத விஷ்வதீரன் அவளை பிடித்திருக்க போர்வையோடு அவன் மேல் விழுத்தவள் எதையும் பிடித்திருக்க வில்லை என்றாலும் அவளின் உதடுகளோ அவனின் கழுத்து வளைவில் அச்சாரத்தை பதித்திருக்க விஷ்வதீரனின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. 
ஆரோஹியும் எதிர்பாராமல் நடந்த சம்பவத்தால் நிலைகுலைந்தவள் அவனிடமிருந்து விலகத்தோன்றாமல் இருக்க அவளை இறுக அணைத்துக் கொண்டான் விஷ்வதீரன். 
உலகத்தில் பாதுகாப்பான இடம் என்றால் அது விஷ்வதீரனின் அணைப்புதான் என்று ஆரோஹி உணர்ந்து “எங்க போய் இருந்த விஷ்? ஏன் என்ன தேடி வரவே இல்ல நீ?” என்று அவனை இறுக அணைத்துக் கொண்டு விசும்ப 
“சாரிடி சாரி என்னால தான் எல்லாம்” என்று மனதால் அவளிடம் மன்னிப்பு வேண்டியவாறே முதுகை நீவிவிட 
நீ என்பதே நான் தாண்டி
நான் என்பதே நாம் தாண்டி… 
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்
எவ்வளவு நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டிருந்தார்களோ விஷ்வதீரனின் சூடான உடல் ஆரோஹியை கொஞ்சம் கொஞ்சமாக தாக்க, நொடியில் சுதாரித்தவள் அவனை விட்டு விலக்கி
“வந்து கட்டிலில் படு விஷ், பசங்க கண்முழிச்சா வீனா கேள்வி கேப்பாங்க. மத்தவங்க முன்னாடி தெரியாம சொல்லியும் விடுவாங்க” என்றவள் அவன் மீது போர்வையை போட்டு விட்டு கட்டிலில் வந்து படுக்க விஷ்வதீரேனோ அவளின் மனமாற்றத்தால் குதூகலித்தவன் கட்டிலுக்கு வர 
அவனின் சந்தோஷமான முகத்தை கண்டு நெற்றி சுருக்கியவள் “விஷ் என்னைக்கும் நீ ஏன் நண்பன் தான் அதில் எந்த மாற்றமும் கிடையாது, கணவனா ஒருநாளும் உன்ன நான் ஏத்துக்க மாட்டேன். வீனா கற்பனை பண்ணாம படுத்து தூங்கு” என்றவள் திரும்பிப் படுக்க 
அவள் அழைத்ததில் விசிலடித்த படியே அவள் புறம் திரும்ப அவள் சொன்னதை கேட்டவன் “நா கொஞ்ச நேரம் சந்தோஷப்பட்டா பொறுக்காதே!” என்று முணுமுணுத்தவன் அவளை வெறித்து பார்த்திருந்து மறுபக்கம் வந்து படுக்க ஒரு முனையில் ஆரோஹி மறுமுனையில் விஷ்வதீரன் நடுவில் குழந்தைகள் என்று தூங்க அந்த கால பெரிய கட்டிலில் இன்னும் இருவர் தூங்கும் அளவுக்கு இடமிருந்தது. 
கட்டிலில் உள்ள இடைவெளிபோல் இவர்களின் வாழ்க்கையும் இருக்குமோ?
அறைக்குள் வந்த பிங்கி கதவை சாத்திவிட்டு வெக்கப்பட்டவாறே தலையை நிமிர்த்த தீரனை அறைக்குள்ளே காணவில்லை. அவ்வறையோடு இருந்த இன்னொரு அறையின் கதவை வெறித்து பாத்திருந்தவள், அவனின் வரவுக்காக காத்திருக்க அரைமணித்தியாலம் சென்றும் அவன் வரும் பாடு இல்லாமல் போகவே கதவை தட்டலானாள். 
கதவை திறந்தவனின் கண்களில் பிங்கியின் அலங்காரம் பட 
“ஹே குட்டச்சி தூங்க எதுக்கு டி இவ்வளவு அலங்காரம்? இவ்வளவு நக வேற போட்டு இருக்க, இன்கம் டெக்ஸ்சு ரைடு வரும் டி” என்று கிண்டலடிக்க 
“இருபத்தி நாலு மணித்தியாலமும் போலிஸாகவே இரு” மனதுக்குள் திட்டியவாறே அவனை முறைத்தவள் “இங்க என்ன பண்ணுற” கொஞ்சம் கோபமாகவே கேக்க 
“ஒரு முக்கியமான கேச கண்டு பிடிக்கணும். நீ தூங்கு” என்று சொல்ல 
அப்பொழுதுதான் அவனை கவனித்தாள் ஒரு ஷோர்ட்டும், கை இல்லா சட்டையும் அணிந்திருந்தவனின் கையில் ஏதோ வயர்கள் இருந்தன. 
“இன்னைக்கு முதலிரவு. ஆயிரம் கனவுகளோடு நா வந்தா இந்த லூசு வயர் புடிச்சி கிட்டு நிக்குது” என்று மனதுக்குள் திட்டியவள் “தள்ளு” என்றவாறே அவனை தள்ளிக் கொண்டு உள்ளே வர அவ்வறை ஒரு பழைய குடோன்  போல் இருக்க. “என்ன இதெல்லாம்? ஒரே வயரும், பழைய சாமான் போல இருக்கு” என்று அவனை முறைக்க 
“திஸ் இஸ் மை லேப்” என்றவன்  “மகாராணி சுத்தி பாத்திட்டிங்கனா நா என் வேலைய தொடரலாமா?” 
பெரிய ஐன்ஸ்டைன் லாப்பு வச்சிருக்காரு, மூஞ்ச பாரு” உதட்டை சுளித்தவள்  “நீ எப்பவும் இப்படியா? இல்ல பொறந்ததுல இருந்தே இப்படியா?” பிங்கி வெறுப்பாக கேக்க 
புருவம் நீவியவன் அவள் கோபம் புரியாமல் அவளின் கையை பிடித்து இழுத்து வந்து கட்டிலில் அமர்த்தி “நீ அடிக்கடி என் மேல காரணமே இல்லாம கோபப்படுற. சீக்கிரம் வயசாகிடும்” என்று  கிண்டலடித்தவன்.
 எனக்கு என் வேலைதான் முக்கியம். இந்த காதல், கல்யாணம் இதெல்லாம் நினைச்சி பாக்க கூட இல்ல, அண்ணா கல்யாணம் நடக்கணும்னு, எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. பொண்ணுங்கனாவே அலர்ஜி. இதுவே வேறொரு பொண்ணா இருந்தா சொல்லி புரிய வச்சிருப்பேன். தாலி கட்டும் போது தான் உன்ன பாத்ததே. நான் சொல்லாமலேயே புரிஞ்சிப்பா..னு தோணினதால உன் கிட்ட ஒன்னும் சொல்லல. ஐ நீட் சம்  டைம். போய் ட்ரெஸ்ஸ மாத்திட்டு தூங்கு” என்றவன் பிங்கியின் கன்னத்தை தட்டி விட்டு அவனுடைய குடோனுக்குள் புகுந்து கதைவடைத்துக் கொண்டான். 
அவன் பேச பேச பிங்கி அதிர்ச்சியிலேயே பேச்சற்று நின்று விட்டாள். “என்னது? எந்த பொண்ணு வந்து மனமேடைல உக்காந்திருந்தாலும் தாலி கட்டி இருப்பானா? இவன் என்ன ரோபோவா? இவனும் என்ன விரும்பி இருப்பான்னு நினச்சா, கல்யாண மேடைலதான் என்ன பார்த்தானாமா?”  தானும் மாப்பிள்ளையின் புகைப்படத்தை பார்க்க விரும்பாததை மறந்தவளாக அவனுடைய மூடிய அறையை வெறித்து பார்த்தவள் 
“இருடா உன்ன என் பின்னாடி நாய் குட்டி மாதிரி சுத்த வைக்கிறேன்” என்று கருவிக்கு கொண்டவள் அலங்காரங்களை கலைத்து விட்டு தூங்கலானாள். 
நடுஇரவில் கதவு திறக்கும் சத்தம் கேட்டு கண்விழித்தவள் தீரமுகுந்தன் கதவை சாத்தி விட்டு வெளியே செல்வதை கண்டு “இந்த நேரத்துல எங்க போறான்” என்று அவளின் குறும்பு தலை தூக்க பூன நடைபோட்டவள் அவன் படிகளில் இறங்காது கைப்பிடியில் சறுக்குவதை கண்டு விழி விரிக்க, மெதுவாக படிகளில் இறங்க அவன் சலீம் பாயின் அறையினுள் புகுவதை கண்டு அதிர்ச்சியடைந்தவள் “எந்த பீலிங்கும் இல்லாம ரோபோ மாதிரி இருக்கும் போதே நான் சந்தேகப்பட்டு இருக்கணும். அவனா நீ. பொண்ணுங்கனா அலர்ஜியா? இருடா கையும் களவுமா பிடிக்கிறேன்” என்று சத்தம் செய்யாது நடந்து சலீம் பாயின் அறையின் முன் நின்றாள்.
பிங்கி கதவை மெதுவாக திறக்க அது பூட்டி இருந்தது. “கன்போர்ம் உள்ள ரெண்டு பேரும். கருமம் கருமம்” தறிகெட்டு ஓடிய கற்பனை குதிரையை இழுத்து கடிவாளமிட்டு கட்டியவள் கதவை பார்க்க அது வெளியில் பூட்டி இருக்க “என்னடா இது பிங்கிக்கு வந்த சோதனை. உள்ள போறத என் ரெண்டு கண்ணால பார்த்தேன். வெளிய பூட்டி இருக்கு” என்று முணுமுணுத்தவள் “எங்க மாயமா மறைஞ்சாங்க” என்று தலையை தட்டி யோசிக்க யாரோ வரும் சத்தம் கேட்டு பதுங்க அங்கே ஆயிஷாபேகமும், சலீம்பாயும் வருவதை கண்டு புருவம் சுருக்கியவள் ஆயிஷா அத்த ரூம்ல சலீம் பாய்க்கு என்ன வேல?  அவர்கள் பேசுவதை கவனிக்கலானாள். 
“நீ உள்ள போய் படுத்துக்க ஆயிஷா. முகுந்த் எங்கள ஒன்னா பாத்தா கேள்வி கேட்டு குடைவான்” என்று சொல்ல ஆயிஷாவும் அவருடைய அறைக்குள்ளே சென்றார்.   
சலீம் பாய் தனதறைக்கு வந்து கதவில் கைவைத்து விட்டு வாசல் கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல 
“என்னமா இந்த பெருசுங்க ரெண்டும் ரொமான்ஸ் பண்ணுது. எதுக்கு திருட்டுத்தனமா பண்ணுது?’ என்று பிங்கி மண்டையை குடைய மீண்டும் யாரோ வரும் அரவம் கேக்க பதுங்கிய இடத்தில் இருந்து எட்டிப்பார்க்க அங்கே தீரமுகுந்தன் சலீம்பாயின் கதவை பாத்திருக்க “என்னடா நடக்குது இங்க லவ் ட்ராங்களா?” என்று தலையை தட்ட அவளின் கையை பிடித்து இழுத்திருந்தான் தீரன். 
“நீ என்ன இங்க பண்ணுற?” புருவம் நீவியவன் 
“நீ எதுக்கு கீழவந்த?” அவனை முறைக்க 
“தண்ணி குடிக்க” 
“அதுக்கு எதுக்கு சலீம்பாய் ரூமுக்குள்ள போற?” 
“அவர் தானே இந்த வீட்டு குக் அவர்கிட்ட தானே தண்ணி கேக்கணும்” என்றவன் மேலும் அவளை யோசிக்க விடாது வா எனக்கு தூக்கம் வருது தூங்கலாம் என்று இழுத்து செல்ல சலீம் பாய் வாசற்கதவை சாத்திக் கொண்டு உள்ளே வர 
“எங்க போனீங்க இந்த நேரத்துல” 
“வெளிய ஏதோ சத்தம் கேட்டது. அதான் பாக்க போனேன்” என்றவர் அவருடைய அறைக்குள் புக 
அவர் போனதும் “பொய் சொல்லுறாரு” என்று கிசுகிசுக்க 
அவளின் அருகாமையும், மல்லிகை பூவின் வாசமும் அவனை அவள் பக்கம் சாய்க்க தலையை உலுக்கியவன் படிகளில் தாவியேறலானான். 
அவனின் பின்னால் ஓடி வந்தவள் “ஆமா நான் பதுங்கி இருந்தத எப்படி கண்டு பிடிச்ச” மூச்சுவாங்கியவாறே கேக்க 
அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் “ஒரு கூட மல்லிகைப்பூவ தலேல வச்சிக்கிட்டு கேக்குற கேள்வியை பாரு” காதுக்குள் கிசுகிசுத்தவன் அவளின் மூக்கை சுண்டி விட அவனை அடிக்க துரத்தினாள் பிங்கி.
ஏய் கிட்ட வந்து நின்னா அது குற்றம் என்று சொன்னா
ஏனடி நீ ஒரு தீயில் செய்த பெண்ணா
கொக்கு வந்து போனா அட நெஞ்சம் சொல்லும் தானா
சிக்கிட நான் ஒரு புத்தி கெட்ட மீனா
முறுக்குப் போலவே இருக்கும் காதுகள்
கடிக்கத் தூண்டுதே அன்பே
 துடுப்புப் போலவே இருக்கும் கைகளால்
அடிக்கத் தோன்றுதே அன்பே
நடையோ உடையோ ஜடையோ இடையோ
எதுவோ என்னைத் தாக்குதே
மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் தீண்டும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது

Advertisement