Advertisement

அத்தியாயம் 29
விஷ்வதீரன் பதட்டமாக உள்ளே நுழைய அந்த மருத்துவமனை நர்ஸ் ஒருத்தி அவனை அழைத்து சென்று ஒரு அறையில் விட்டாள். 
அவ்வறை ஒரு உள்ளறையாக இருக்க பெரியதொரு டிவி சுவரில் மாட்டப்பட்டிருந்தது அதில் ஆரோஹி தெளிவாக தெரியலானாள். அமர்ந்திருந்த கதிரையில் இருந்து சடாரென எழுந்தவன் கதவை திறக்க அது வெளியால் பூட்டி இருந்தது. 
“மிஸிஸ் ஆரோஹி விஷ்வதீரன். அதுதானே உங்க பெயர்” அர்ச்சனாவின் குரல் ஒலிக்க விஷ்வதீரன் திரும்ப அந்த பெரிய திரையில் இப்பொழுது அர்ச்சனாவும் தெரிந்தாள். 
“ஆமாம் டாக்டர். என் பெயர் ஆரோஹி விஷ்வதீரன்” அதை சொல்லும் போது அவளின் கண்ணில் தோன்றிய வெட்கமும், உதட்டில் மலர்ந்த புன்னகையும் சொன்னது அவள் விஷ்வதீரனை காதலிக்கிறாள் என்று.
திரையை நோக்கி நடந்தவன் ஆரோஹியின் கன்னத்தை தடவ அக்கணமே அவளும் கன்னத்தை தடவினாள்.  
“சொல்லுங்க ஆரோஹி. உங்கள நான் ஆரோஹின்னு கூப்பிடலாமா?” அர்ச்சனா மந்தக புன்னகையினூடாகவே ஆரோஹியை ஏறிட ஒரு சிறிய தலையசைப்பில் சரி என்றாள்.  
“ஆரா என்னடி பண்ணிக்கிட்டு இருக்க? எதுக்கு இங்க வந்த?” விஷ்வதீரன் மனதால் அவளிடம் கேக்க அதேமாதிரி ஒரு கேள்வியை அர்ச்சனாவும் முன் வைத்தாள். 
“சொல்லுங்க ஆரோஹி, என்ன பிரச்சினை உங்களுக்கு, என்ன சந்திக்கிற அளவுக்கு” அர்ச்சனா நேராக அமர்ந்து கேமராவை பார்க்க விஷ்வதீரன் ஆரோஹியையே கண்சிமிட்டாமல் பாத்திருந்தான். 
“டாக்டர் நான் விஷ் ஷ ரொம்ப லவ் பண்ணுறேன் அவனும் என்ன லவ் பண்ணுறான். பத்து வருஷமா. பத்து வருஷமா லவ் பண்ணுறான்” கை விரல்களை விரித்துக் காட்டி குழந்தை போல் முக மலர்ச்சியாக கூறியவள். உடனே முகம் வாட 
“சொல்லுங்க உங்க ரெண்டு பேர்கிடையிலும் என்ன பிரச்சினை?” அர்ச்சனா அந்த கேள்வியை கேக்கும் போது விஷ்வதீரன் அவளை பார்க்க அவள் ஒரு டாக்டராகவே கேட்டாள் என்று தோன்ற அமைதியாக கவனிக்கலானான். 
“பிரச்சினை……..  பிரச்சினைனு ஒன்னும் இல்ல, எனக்கு சொல்ல தெரியல” பதட்டமாக கூறியவள் விசும்ப  
“ஆரோஹி இங்க பாருங்க, அழக்கூடாது சரியா? நான் கேக்குற எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லணும், அப்போ தான் உங்க பிரச்சினைக்கு என்னால சரியான ஒரு தீர்வு சொல்ல முடியும்” அவள் நிறுத்தி நிதானமாக கூற ஆரோஹி  தலையை ஆட்டியவாறே கண்களை துடைத்துக் கொண்டு அருகில் இருந்த தண்ணீர் கிளாஸை எடுத்து பருகினாள். 
“சொல்லுங்க, விஷ்வதீரன எங்க? எப்போ? முதல் முதலாக சந்திச்சீங்க?”
அரோஹி மெல்லலிய புன்னகையினூடாகவே தமிழ்நாட்டுக்கு வந்ததிலிருந்து சித்தியின் குடும்பத்தோடு ஊருக்கு சென்று விஷ்வதீரனை சந்தித்து விடை பெற்றது வரை கூற 
“பயபுள்ள அப்பவே லவ் ல விழுந்துட்டானா? எம்புட்டு ஸ்பீடு. நாம அடுத்தவன் புருஷானத்தான் லவ் பண்ணி இருக்கும்” என்று அர்ச்சனாவின் முகத்திலும் புன்னகை மலர 
“அன்னைக்கி ஆகாஷ் என்ன தேடி திடீரென வருவான்னு நா எதிர் பார்க்கல, அவன் தான் எனக்கு எல்லாமே! நண்பனா, அண்ணனா நிறைய தடவ குருவா கூட இருந்திருக்கான்”
“முதல்ல இருந்தே சொல்லுங்க நா பொறுமையா கேக்குறேன்”
“ஆகாஷோட அப்பா கொஞ்சம் ஜாதி பாக்குறவரு. நானும், ஆகாஷும் சேர்ந்து சுத்துறத பிடிக்காம அவனை போட்டு எத்துனயோ தடவ அடிச்சும் இருக்கிறார். அவருக்கு பயம் எங்க அவன் என்னதான் கல்யாணம் பண்ணிப்பானோன் னு” சொல்லியவாறே சிரித்தவள் 
“ஆனா என் கண்ணையும் மறச்சி ஆகாஷும், நிஷாவும் லவ் பண்ணி இருக்காங்க, என்னையும் கூடவே வச்சி கிட்டு அவங்க காதல் வளர்ந்ததால யாரும் அவங்கள சந்தேகப்படல. ஏன் நா கூட சந்தேகப்படல. நா ஊருக்கு வந்தப்போ கூட டெய்லி அவன் கூட பேசிகிட்டு தான் இருந்தேன். அப்போ கூட சொல்லல. லாஸ்ட் டூ டேசா சரியா பேசவே இல்ல. திடீரென வந்து நின்னு சீக்கிரம் வா போலாம்னு கைய புடிச்சி இழுக்காத குறையா கூட்டிகிட்டு போனான்.
அப்போ ஏதோ ஒரு சின்ன வேல பாத்து கிட்டு தான் இருந்தான். எனக்கு பிளைட் டிக்கட் கூட போட்டு கூட்டிட்டு போனான். என்ன பிரச்சினைனு கேட்டப்போ முகம் இறுகி இருந்தானே தவிர வாய திறக்கவே இல்ல. வீட்டுக்கு கூட போகாம அவன் கூட போனேன். அவன் கூட்டிக் கிட்டு போனது அவனோட பிரெண்டு வீட்டுக்கு அங்க நிஷா மட்டும் தான் இருந்தா. அழுது அழுது முகம் வீங்கிப்போய் பார்க்கவே வேறமாதிரி. ஓடிப்போய் அவளை கட்டிக்கிட்டு என்ன ஆச்சுன்னு கேட்டேன். கதறி அழுதாலே ஒழிய ஒன்னும் சொல்லல. 
“ரெண்டு பேரும் இப்போ என்ன நடந்ததுன்னு சொல்லுறீங்களா, இல்ல நா கிளம்பவா” ஆரோஹி கோபமாக கிளம்ப 
“ஓவர் ஆக்டிங் பண்ணாத” என்று அவளை தடுத்த ஆகாஷ் “நானும் நிஷாவும் லவ் பண்ணுறோம்” 
“இது எப்போ” ஆரோஹி கொஞ்சம் அதிர்ச்சியாகவே கேக்க 
“அது பிரச்சினையில்ல”
“அறிவிருக்கா உனக்கு. உங்கப்பா இதுக்கு சம்மதிப்பாரா? வெட்டி பொழிபோட்டுடுவாரு” 
“விஷயம் கைமீறி போச்சு”
“என்னது அவர் தெரிஞ்சிக்கிட்டு உங்க ரெண்டு பேரையும் கொல்ல தேடுறாரா?”
“ஓவரா சினிமா பாக்காதேன்னு சொன்னா கேக்குறியா” அவளின் தலையில் அடித்தவன் “அது வந்து நானும் நிஷாவும் தப்பு பண்ணிட்டோம்” 
“லவ் பண்ணாதே தப்பு தாண்டா” என்றவள் அவன் சொன்னதை கிரகித்து “என்ன?” பெரியதொரு அதிர்ச்சியை முகத்தில் கொண்டு வந்தவள் “என்ன பஞ்சாயத்து பண்ண தான் மெனக்கெட்டு பிளைட்டுல கூட்டிட்டு வந்தியா? ஆள விடு டா. நா வீட்டுக்கு போறேன்”  அவள் சொல்லி முடிக்கவும் நிஷா ஒப்பாரிவைக்காத குறையாக அழத்தொடங்க 
“யம்மா நிஷாக்கா இவன நம்பி வந்ததுக்கு வச்சானே ஒரு ஆப்பு. இப்போ என்ன செய்ய போற” கிண்டலாகவே ஒலித்தது ஆரோஹியின் குரல். 
“கல்யாணம் பண்ணிக்கலாம்னு நா சொல்லுறேன் மாட்டேங்குறா” ஆகாஷ் விரக்தியாக சொல்ல 
“பண்ணுறதையும் பண்ணிட்டு கல்யாணம் பண்ணா எல்லாம் சரியா? சரி எப்போ எங்க வச்சி இதெல்லாம் நடந்தது” ஆரோஹி யோசனையாக கேக்க 
“இங்கதான் ரெண்டு நாளைக்கி முன்னாடி” 
“ஓஹ் அதான் ஐயா என்கிட்டே சரியா பேசலையா? முகம் கொடுத்து பேச கூச்சமாக இருந்திருக்கும்” 
“ரூஹி விளையாடாம பேசு”
“என்னத்த பேச சொல்லுற? ரெண்டு பேருமே என்ன விட பெரியவங்க மேஜர் வேற, உங்க ரெண்டு பேர் வீட்டுலையும் சம்மதிக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சே காதலிச்சது தப்பு. அவசரப்பட்டு இப்படி நடந்து கிட்டது மகா பெரிய தப்பு. அதெப்பெடி என் கண்ணையும் மறச்சி லவ் பண்ணீங்க? நா ஊருக்கு போனதும் பிளான் பண்ணி. தப்பு பண்ணவே இப்படி ஒரு வீட்டை ஏற்பாடு பண்ணி, தப்பையும் பண்ணிட்டு அதுக்கு முடிவ நா சொல்லனுமா?”
“இல்ல நீ எங்க கூடவே இருக்குறப்போ மனச தொறந்து பேச முடியல” அதான் நிஷா காலேஜ் ட்ரிப் போறதா சொல்லி இங்க வந்துட்டா. நானும் வேல விஷயமா வெளியூர் போறதா சொல்லி”
“ஹனிமூன் கொண்டாட வந்தீங்களாக்கும்” கடுப்பாகவே கேக்க 
“இல்ல அப்படியில்ல”
“சரி விடு நடந்தது நடந்து போச்சு, மேல பேசி உங்கள வெறுப்பேத்தி குளிர்காஞ்சு நா என்ன செய்ய. இந்தம்மா ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குறாங்க?”
“வீட்டாரோட சம்மதமில்லாம கல்யாணம் பண்ண முடியாதாம்”
“ஓஹ், ஒரு வேல இந்த விஷயத்தால் ப்ரெக்னன்ட் ஆனா” ஆரோஹி சந்தேகமாக ஏறிட 
“அதுக்கு பயந்துதான் அழுது கிட்டு இருக்கா” 
“அப்போ தப்பு பண்ணத நினைச்சி குற்ற உணர்ச்சியால் அழுகலயா?” என்ன ஜென்மங்களோ! என்ற பார்வைதான் ஆரோஹியிடமிருந்து நிஷாவுக்கு கிடைத்தது.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த நிஷா “அப்படி பார்க்காத ரூஹி. ஆகாஷ் மேல நா உசுரையே வச்சிருக்கேன். எல்லார் மாதிரியும், அப்பா கன்யாதான் பண்ண ஆகாஷின் கைபிடிக்கணும்னு தான் எனக்கு ஆச. குழந்தை உருவாச்சுனா, தப்பா உருவான குழந்தைனு ஊரு உலகம் பேசும். அது குழந்தைக்கும் நல்லதில்லை. குழந்தையால் நம்ம கல்யாணம் நடந்ததா இருக்க கூடாது” இன்னும் ஏதேதோ புலம்ப பதின் வயதில் இருந்த ஆரோஹிக்கு அவள் சொல்லும் காரணங்கள் ஓரளவே புரிந்தது. 
“சரி விடு என்ன செய்யலாம் நீயே சொல்லு” தலையை பிடித்து ஆரோஹி அமர்ந்து விட்டாள்.  நிமிடங்கள் கரைய அங்கே அமைதி நிலவியதே ஒழிய யாரும் பேசவில்லை. 
“ஒரே ஒரு வழி இருக்கு” ஆரோஹி வாயை திறக்க ஆகாஷும், நிஷாவும் அவளை ஏறிட்டனர். 
“பேசாம இப்போவே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கோங்க, நிஷா உன் படிப்பு முடிஞ்சதும் வீட்டுல பேசலாம் ஓகே வா?” ஆகாஷுக்கு அதுதான் சரி என்று பட்டது. நிஷாவும் ஒரு வாறு சம்மதிக்க நிஷாவும், ஆரோஹியும் வீட்டுக்கு கிளம்பினர். அடுத்தநாளே ரெஜிஸ்டர் மேரேஜுக்கான ஏற்பாடுகளை செய்யலானான் ஆகாஷ். 
அடுத்துவந்த வாரத்தில் பூவரசி இறந்து விட ஆகாஷ் ஆரோஹியோடு வந்திருக்க நிஷா அவனோடு சண்டையிடலானாள். ஆகாஷ் அவளையும் சமாளித்து ஆரோஹியையும் பார்த்துக் கொள்ள நாட்கள் சென்று ரெஜிஸ்டர் மேரேஜுக்கான நாளும் வந்தது. 
ஆரோஹி ஹிமேஷையும் அழைத்துக் கொண்டு சென்று அவர்களின் கல்யாணத்தை நடத்தி வைத்தாள். 
நிஷாவின் மனநிலை ஆரோஹியின் மேல் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது. அது ஆகாஷ் எந்த சந்தர்ப்பத்திலும் ஆரோஹிக்கே முதலிடம் கொடுப்பதாக நினைத்து அவர்களுக்கிடையில் ஆரோஹி வராமல் பார்த்துக் கொள்ளலானாள். 
ஹிமேசும் அமேரிக்கா செல்ல ஆரோஹி ஹாஸ்டலில் தஞ்சமடைந்தாள். ஆகாஷும் நிஷாவும் வெளியே சந்தித்து கொள்ளலாம் ஆரோஹியையும்  வர சொல்லு என்று நிஷாவிடம் ஆகாஷ் கூற அலைபேசியை எடுத்து அழைத்து விட்டு வேறு பேசுவாள். அல்லது அழைக்காமலே வர முடியாது படிக்கணும் என்றாள்” ஏதாவது காரணம் சொல்லலானாள். 
ஆகாஷும் அதை பெரிதாக எடுக்கவில்லை. ஆரோஹி தனிமை படுத்தப்பட்டாள். காலேஜ் சேர்ந்த பிறகு ஆகாஷே அழைத்து செல்வதும், அழைத்து வருவதுமாக இருக்க, நிஷா அவளை கண்ட படி பேச ஆகாஷிடமிருந்து விலக ஆரம்பித்தாள். 
அதை புரிந்து கொண்டு காரணம் கேக்க ஆரோஹி வாயை திறக்கவில்லை என்றதும் நிஷாவிடம் புலம்பலானான். முதலில் நிஷாவுக்கு எரிச்சலாக இருந்தாலும், தாயும் தந்தையும் இல்லாமல் இருப்பவள், நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க ஆரோஹியை சந்தித்து மன்னிப்பு கேக்க 
“விடு நிஷா எல்லாம் லவ் பண்ணுற பாடு” என்று சாதாரணமாக சொன்னவள் முடிந்த அளவு அவர்களிடமிருந்து விலகி இருக்க முயற்சி செய்ய நிஷாவோ, ஆகாஷோ அவளை தனியாக விடவில்லை. 
அவள் கடைசி வருடம் படித்துக் கொண்டு இருக்கும் பொழுதுதான் நிஷாவுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க ஆகாஷ் போய் பொண்ணு கேக்கலானான். “உங்க அப்பா சம்மதிச்சா வாங்க” என்று நிஷாவின் வீட்டார் சொல்ல ஆகாஷும் போய் பேச அவர் இறங்கி வரவே இல்லை.  
நிஷாவின் வீட்டார் வேறு மாப்பிள்ளை பார்க்க கல்யாணமன்று ரெஜிஸ்டர் மேரேஜ் ஆவணங்களோடு உள்ளே சென்று அவளை முறைப்படி கல்யாணம் செய்து கொண்டான். 
இரண்டு வீட்டாரும் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் தனியாக ஒரு பிளாட்டில் வீடு வாங்கி குடியேறினர் மணமக்கள். 
ஹாஸ்டலில் தங்கி இருந்த ஆரோஹியை அங்கு வந்து தங்குமாறு எவ்வளவோ வற்புறுத்தியும் வர மறுத்தாள். அப்படி இருக்கும் பொழுதுதான் காலேஜ் ப்யாவேல் பார்ட்டி டில்லியிலுள்ள பிரசித்தி பெற்ற ஹோட்டலில் நடந்தது. அன்று நடந்தது தெளிவில்லாமல் இருக்க, அதை சொன்னவள் 
“அன்னைக்கு பிறகுதான் ஆகாஷ் ரொம்பவே மாறி போய்ட்டான். அதிகமா பேசுறதில்ல. ஆளே மாறிட்டான். அதுக்கு பிறகு ஒருமாசத்துல நிஷா ப்ரெக்னன்ட்டா இருக்கிறதா சொன்னா, நா ரொம்ப சந்தோஷமா அவங்க ரெண்டு போரையும் பாக்க போனா, ஆகாஷ் அவ கூட சண்டை போட்டு கிட்டு இருந்தான். இந்த பேபி வேணா அழிச்சிடுனு, சொன்னான். எனக்கு ஷாக்காக இருந்துச்சு. கல்யாணம் பண்ண அன்னைல இருந்தது சீக்கிரம் ஒரு பேபி பெத்துக்கணும்னு சொன்னவன் ஏன் இப்படி இருக்கானு சத்தியமா புரியல. நிஷாவும் மனசலவுள ரொம்ப பாதிப்புக்குள்ளாகி இருந்தா, ஆகாஷ் முகம் கொடுத்தே பேசுறதில்லன்னு புலம்பினா, அவன் கூட போய் பேசினா, என்ன இக்னோர் பண்ணிட்டு போய் கிட்டே இருந்தான். அவங்கப்பா ஏதாவது ப்ரெஷர் கொடுக்குறாரோன்னு நினைச்சி அவரையும் போய் பாத்தேன், ஆகாஷ் செத்துட்டான், அப்படி ஒரு பையன் இல்லனு சொல்லிட்டாரு. ஆகாஷோட மாற்றத்துக்கு என்ன காரணம்னு தெரியல. தெரிஞ்சப்போ” ஆரோஹி குலுங்கி குலுங்கி அழ
“ஆரோஹி ப்ளீஸ் அழாம சொல்லுங்க” அர்ச்சனா அமைதியாக சொல்ல ஒருவாறு தன்னை கட்டுக்குள் கொண்டுவந்தவள் மீண்டும் தொடர்ந்தாள்.  
“நிஷாவோட டிலிவரி தேதி நெருங்கி வர ஷாப்பிங் பண்ணலாம்னு மால் போனோம், அவளால அந்த பெரிய வயிறோடு நடக்க கூட முடியல ரொம்ப சிரம பட்டா. எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்துச்சு, அவ காண்டாகி உனக்கும் இந்த நிலமை வந்தா தான் புரியும்னு சொன்னா, செலெஞ் அக்சப்ட்டட்னு சொல்லி நானும் வயித்துல ஒரு குட்டி தலகாணிய வச்சி  ப்ரெக்னன்ட் லேடீஸ் போடுற ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டு அவ கூட அலைஞ்சேன். என் கூட காலேஜ் படிக்கிற ஒரு பையன் பாத்து நலம் விசாரிச்சு, ஹஸ்பண்ட் என்ன பண்ணுறார் எங்குறவர் தோண்டி துருவிட்டான், வயசானவங்க பாத்து போமாங்குறதும், இளசுகள் வழிவிடுறதும் பொடிசுகள் மேல மோதாம பாத்து பாத்து ஓடுறதும் செம்மயா இருந்துச்சு அந்த நாள். கண்கள் மின்ன பேசிக்கொண்டிருந்தவளை விஷ்வதீரன் கனிவாக பார்த்துக் கொண்டிருந்தான். 
அடுத்த வாரத்துலயே நிஷாகு ஆண்குழந்தை பிறந்தது, ஆகாஷ் வந்து பாக்க கூட இல்ல, அவன் வேற உலகத்துலயே இருந்தான். குழந்தையை வீட்டுக்கு கூட்டிட்டு வந்த அவனுக்கு நா தான் குழந்தையை கொண்டு போய் காட்டினேன், பாத்துட்டு  வெளிய போனவன் குடிச்சுட்டு தான் வீட்டுக்கு வந்திருக்கான். எந்த நேரமும் குடிக்க ஆரம்பிச்சான் நிஷா போன்ல சொல்லி அழவும் அவனை திட்டணும்னே போனேன். 
“நா, நா போய் இருக்க கூடாது” ஆரோஹி தொண்டையை அடைக்க குரல் கம்மா சொல்ல அவள் புறம் தண்ணீர் கிளாஸை நீட்டிய அர்ச்சனா அவள் சமநிலையை அடையும் வரை காத்திருந்தாள். 
“ஆகாஷ் என்ன நீ இப்படி மாறிட்ட, நல்லாவா இருக்கு? வேளைக்கு கூட போறதில்லன்னு நிஷா சொன்னா, என்னாச்சு உனக்கு குழந்தை பொறந்து நாலு நாள் கூட இல்ல இப்படி குடிச்சி கிட்டு இருக்கியே உன்ன நம்பி வந்தவளை இப்படி தான் பாத்துகிறதா? உன் குழந்தைக்கு பேர் வைக்கணும்னு எந்த எண்ணமும் இல்லையா?” ஆரோஹி பொரிந்து தள்ள 
“இல்ல என் புள்ள இல்ல, அது என் புள்ள இல்ல யாருக்கு பொறந்தானேனு தெரியல” ஆகாஷ் தலையை பிடித்தவாறே சொல்ல 
“என்ன பேசுற? அறிவிருக்கா? புரிஞ்சிதான் பேசுறியா? இது நிஷா காதுல விழுந்தா என்னமா பீல் பண்ணுவா? எங்க அவ?”
“தூங்குறா, முடியல ஆரோஹி. என்னால முடியல மனசுல போட்டு அழுத்தி கிட்டு தினம், தினம் செத்துக்கிட்டு இருக்கேன். யார் கிட்ட சொல்லுறதென்னு புரியல, இந்த பேபி என் பேபியே இல்ல, அன்னைக்கி உன் காலேஜ் பார்ட்டிக்கு போனப்போ யாரோ நிஷாவ, நிஷாவ என் நிஷாவ ரேப் பண்ணிட்டான்” நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதவன். அன்னைக்கி பிறகு நா நிஷாகூட சேர்ந்து வாழவே இல்ல. என்னால முடியல, அவகிட்ட சொல்லவும் முடியல, இந்த குழந்தை வேணான்னு எவ்வளவோ சொன்னேன் அவ கேக்கல” ஆகாஷ் மனதிலுள்ள பாரமெல்லாம் இறக்கி வைக்க ஆரோஹி அதிர்ச்சியில் அமர்ந்து விட்டாள். 
அப்போ தன்னையும் யாரோ ஒருவன் நினைக்கும் போதே உடல் கூசியது. 
“எப்படி நிஷாக்கு  தெரியாம” ஆரோஹி தனக்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்று கேக்க 
“அவளுக்கு தெரியல என் தலைல அடிச்சி மயக்க மாக்கிட்டான், நா கண்ணுமுழிச்சி பாத்தப்போ” கதறி அழுதவன்  முடிஞ்ச மட்டும் அவளை டிரஸ் பண்ணி அங்க இருந்து தூக்கிட்டு வந்துட்டேன். அவளுக்கு என்ன நடந்ததுனு தெரியல. என் கூடத்தான் இருந்ததா நினைச்சி கிட்டு இருக்கா. 
ஆரோஹிக்கு இது பெரிய அதிர்ச்சி. யாரிடம் போய் கேப்பது, பார்ட்டி நடந்து பத்து மாதங்களுக்கு மேலாகி இருக்க, நிஷாவையும், தன்னையும் நாசம் செய்தது யார்? தலை வலிப்பது போல் இருக்க சாய்ந்து கண்களை மூடியவளுக்கு தோள் பட்டையில் மச்சம் மாத்திரம் கண்ணுக்குள் வர முகம் நியாபகத்தில் இல்லை. நிஷா நிஷா அவளுக்கு இது தெரிய கூடாது
“ஆகாஷ் நிஷாகு இது தெரிய கூடாது, இதுவே எனக்கும் நடந்திருந்தா என்னையும் ஒதுக்குவியா?” கண்களில் கண்ணீர்மல்க கேக்க 
“இல்ல”
“தப்பு பண்ணிட்டியே ஆகாஷ் இட்ஸ் ஜஸ்ட் அண்ட் ஆக்சிடென்ட். யாரோ வெறிபிடிச்ச மிருகம் பண்ணதுக்கு அவ என்ன செய்வா? நீ அவ கூட பேசாம அவளை ஒதுக்குறதால, உங்க ரெண்டு பேரோட நிம்மதியும், சந்தோஷமும் தான் இல்லாமல் போகும். நா சொல்லுறது புரிஞ்சுதா?” அவனுக்கு ஒரு அன்னையாக மாறி பேசிக்கொண்டிருந்தாள் ஆரோஹி.  
“அவ நிலைமையை யோசிச்சு பாத்தியா? உன்ன எவ்வளவு லவ் பண்ணுறா? வீட்டை விட்டு எல்லா உறவையும் விட்டுட்டு உன்ன மட்டுமே நம்பி வந்தவ, அவள நீ கஷ்டப்படுத்தலாமா? குழந்தையை ஏன் யாரோன்னு பாக்குற நிஷாதானே சுமந்து பெத்தா அப்போ அது அவ குழந்தை இல்லையா? அவ குழந்தை உன் குழந்தை இல்லையா?” அவள் பேச பேச சற்று தெளிவானவன் ரேப்பிஸ்ட் புகைப்படங்களை அனுப்பி மிரட்டுவதாக சொல்ல வாய் திறக்க நிஷா “ஆகாஷ்” என்று கத்தும் சத்தம் கேட்டது  
ஆரோஹி வந்து ஆகாஷை சத்தம் போடும் போதே விழித்திருந்தாள் நிஷா.

Advertisement