அத்தியாயம் 5

நேரம், காலம் பார்த்து விஷயத்தை சொன்னாலும், தடாலடியாக சொன்னாலும், ரியாக்ஸன்  என்னமோ ஒண்ணுதான் என்று அறிந்தவனாக ஒருவாறு ஆதித்யா வீட்டில் விஷயத்தை போட்டுடைத்தான். “இங்க பாரு ஆதி. ஆரு எனக்கு ஒரே பேத்தி. நீ ஆருவைத்தான் கல்யாணம் பண்ணனும். நீ சொல்லுறது போல எவளோ ஒருத்திய இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வர முடியாது” என்று வரளி நாயகி தாம் தூம் என்று குத்திக்கலானார்.

ஆம் ஆதி ஆரு கார்த்தியை காதலிப்பதாக சொல்லாமல் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்லி இருந்தான். அவன் முதலில் கர்ண விஜயேந்திரனிடமே ஆலோசனை கேட்கலானான். அவரும் வரளி நாயகி தனது பிடியில் உறுதியாக இருப்பார் கண்டிப்பாக ஆருவின் காதலுக்கு சம்மதம் சொல்ல மாட்டார் என்றும், “விருப்பமில்லாத வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இருவரும் இரு புறம் இருப்பதை விட மனதுக்கு பிடிச்சவங்களை கல்யாணம் செய்து சந்தோசமாக வாழுங்க. ஆனால் என்னால் உன் பாட்டியிடம் பேச முடியாது நீயே சொல்லு” என்று நழுவிக் கொண்டார்.

 “பொம்முவை அடித்து, உதைத்தாவது உனக்கு கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள். எனக்கு இருக்குறது ஒரே தங்கடா மாப்பு, கார்த்திக்கும் நல்லவன் தானே! நீயே ஏதாவது பண்ணு” என்று சீனுவும் தன் பாட்டுக்கு ஏதேதோ சொல்லி இருக்க, 

பலவாறு சிந்தித்து பார்த்த ஆதிக்குமே சீனு சொல்வதை போல் பொம்முவை அடிக்கா விடினும் தங்களது உயிரை மாய்த்துக் கொள்வதாக மேனகை பயம் காட்டி பொம்முவை மடக்குவார் என்று உறுதியாக புரிந்தது. அதனாலயே தனது தலையில் வந்து விடியட்டும் என்று அவன்  காதலிப்பதாக சொன்னான்.

மேனகை  நெஞ்சில் அடித்துக் கொண்டு “எங்கண்ணன் இல்லாததால எல்லாரும் எப்படி எப்படியோ ஆடுறாங்களே! என்ன அவர் பொண்ணு போல வளர்த்தங்களே! அவர் இருந்தா இப்படி என் பொண்ண அம்போன்னு விட்டுடுவாங்களா? ஐயோ… இதெல்லாம் பாக்குறதுக்கா நா உயிரோடு இருக்கேன். அண்ணியை நான் தானே பாத்துக்கிறேன் அந்த நன்றிக் கடனுக்காவது என் பொண்ண கட்டிக்க கூடாதா?”

“பாத்தியாடா மாப்பு எங்கம்மாவை உங்கப்பா அவளை பொண்ணு மாதிரி பாத்து கிட்டாராம்.  அத்த பொண்ணா இருந்தா என்ன? அக்கா பொண்ணா இருந்தா என்ன? னு உஷாரா பேசுது. உங்கம்மாவை இவ இருபத்தி நான்கு மணித்தியாலமும் உள்ளங்கைல வச்சி தாங்கினா பாரு அதுக்காகவே நீ என் தங்கச்சி கட்டிக்கணும். எங்கம்மா வெகுளி னு சொல்லுவியே சரியான காரியவாதி. உலகம் ஒரு நாடகமேடை னு சொல்லுவாங்க செம்மயா நடிக்கிறாங்க அடுத்த ஆஸ்கார் அவார்டு இவங்களுக்குத்தான்” அந்த ரணகாலத்துலையும் சீனுவின் குசும்பு குறையவில்லை.

கர்ணன் விஜயேந்திரனை போல் சக்கரவர்த்தியும் பார்வையாளராக அமர்ந்திருக்க, ஆதியும் சீனுவும் அவர்களுக்கு எதிர் சோபாவில் அமர்ந்திருக்க வரளி நாயகியும், மேனகையும் நடுவில் அமர்ந்து கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தனர்.

“இங்க பாரு ஆதி நாம ஜாமீன் பரம்பரை. எங்களுக்கென்று மானம் மரியாதை, சொந்த பந்தங்கள் இருக்கு, யாரு? என்ன? குலம்? கோத்திரம் தெரியாம ஒரு பொண்ண இந்த ஜமீனுக்கு மருமகளா கொண்டு வர முடியாது. அவ இந்த ஜமீனோட வாரிசை சுமப்பவ புரியுதா?” வரளி நாயகி எங்கே அடிக்க வேண்டுமோ அங்கே குறி பார்த்து அடிக்க ஆதி அசையவில்லை.

“பாட்டி ஜாதி, குலம், கோத்திரம் மட்டும் பார்த்து எங்க ஜமீன்ல மக்களுக்கு உதவி செய்யவுமில்லை. அப்படி பார்த்திருந்தா நா இன்னைக்கு எம்.எல்.ஏ வாக இருந்திருக்கவும் முடியாது. என் குழந்தையை  சுமக்க அவ ஒரு பொண்ணா இருந்தா போதும்”

“சபாஷ் டா மாப்பு” சீனு சத்தமாக சொல்ல மேனகை முறைக்கலானாள். “என்ன முறைப்பு? டேய் அப்பா நீ மட்டும்  எதுக்கு அமைதியா இருக்க நீயும் உன் பாட்டுக்கு கத்து” சீனு கடுப்பாய் சொல்ல   அனைவருமே அவனை முறைத்தனர். ஏன் என்று அவன் அனைவரையும் பார்க்க அவனின்  “டேய் அப்பா” தான் அந்த முறைப்புக்கான காரணம் என்று புரிந்துக் கொண்டவன் அசடு வழிய நின்றான்.

“இங்க பாருங்க பாட்டி என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை. என் மனசுக்கு பிடிச்சவளைத்தான் நான் கல்யாணம் பண்ணுவேன். இல்லனா கடைசி வரைக்கும் இப்படியே இருந்துட்டு போறேன். நான் ஒன்னும் என் வாழ்க்கையை மட்டும் தீர்மானம் பண்ணி, என் வழிய பாத்துகிட்டு போவேன்னு சொல்லலையே! பொம்முக்கும் மாப்புள பாத்திருக்கேன்னு தானே சொல்லுறேன்” குரலை தாழ்த்தி ஆதி வரளி நாயகிக்கு புரிய வைக்க,

பேரனை ஒரு மெச்சுதலான பார்வை பார்த்திருந்த கர்ணன் விஜயேந்திரன் “இங்க பாரு ஆதி உனக்கு அந்த பொண்ணுதான் வேணும் நா தாராளமா கல்யாணம் பண்ணிக்க. ஆனா இந்த குடும்பத்துக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இருக்க கூடாது” ஒரே போடாக போட வரளி நாயகி ஆடிப் போனார்.

“என்னது ஒரே பேரனை. ஜமீனின் ஒரே வாரிசை குடும்பத்தை விட்டு ஒதுக்குவதா? புரிஞ்சிதான் பேசுறீங்களா?” கணவரை முறைத்தவாறே கேக்க,

“வேறென்ன பண்ண சொல்லுற? அவன் முடிவுல அவன் உறுதியா? இருக்கான். உன் பிடியை நீ விட மாட்ட, இப்படியே பேசிகிட்டு இருந்தா சண்டைதான் வரும். ஒரு முடிவுக்கு வர வேணாமா? நாளைக்கு அவன் சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணி கிட்டு வந்தா யாருக்கு அசிங்கம்? சொந்த பந்தத்துக்கு யார் பதில் சொல்வது. இப்போவே குடும்பத்தை விட்டு ஒதுக்கிட்டா? யாரும் எந்த கேள்வியும் கேக்க மாட்டாங்க இல்லையா?” மனைவியை சமாதானப் படுத்துவது போல் பேச 

“என்ன உளறுறீங்க? சொந்த பந்தம் கேள்வி கேப்பாங்கனு பேரனை ஒதுக்கி வைக்கவா?” லூசா நீ என்ற பார்வையை வீச

“அப்போ நா லவ் பண்ணுற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு சம்மதம் தானே பாட்டி என்றவன் சடாரென  வரளி நாயகியின் காலில் விழ

அவரும்  என்றும் போல்  “உன் மனசு படி எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்”  ஆசிர்வாதம் செய்து விட்டு முழிக்கலானார்.

சீனுவுக்கு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட அன்னையை மீறி எதுவும் செய்ய முடியாது என்ற மேனகை ஆருவிடம் பேசலாம் என்று முடிவு செய்ய உதவி செய்ய மாட்டேன் என்ற தாத்தா செய்த உதவிக்காக நன்றியோடு அவரை பார்த்தான் ஆதித்யா.

“போடா, போடா என் பொண்டாட்டிய பத்தி எனக்கு தெரியாதா?” என்றவர் மீசையை நீவிக்கொண்டார்.

“என்னது நீங்க மாப்புள பாத்திட்டீங்களா? அதிர்ச்சியானாள் கவி.

வானதி தான் வரன் பார்ப்பதாக சொன்னதும் எப்படியும் இன்னும் ஆறு மாதங்கள், குறைந்தது மூன்று மாதங்கள் செல்லும் என்று கார்த்தியும், கவியும் கணக்கு போட  அடுத்த வாரமே அவர்களின் தேவிமா… கையில் மாப்பிளை, பெண்ணோடு வந்து தங்கள் முன்னால் நிற்பார் என்று இருவருமே அறியவில்லை.

கார்த்தி வீட்டில் இல்லாத சமயம் பார்த்து வானதி கவியிடம் சொல்ல அவளும் அதிர்ச்சி விலகாமல் கேட்டாள்.

“நா எங்க பார்த்தேன் கார்த்தி தான் அந்த பொண்ண எங்கயோ பாத்திருக்கிறான். பிடிச்சிருக்கு னு சொன்னான் விசாரிச்சேன் நல்ல குடும்பம் சரினு அந்த குடும்பத்துல பையனும் இருக்க, அவனை உனக்கு பார்த்தேன்” வாய் கூசாமல் வானதி பொய் சொல்ல அதை திகைத்த வாறு கேட்டிருந்த கவி

“என்னது கார்த்திக்கு ஒரு பொண்ண புடிச்சிருக்காமா? ஏன் என் கிட்ட சொல்லல” குரல் இறுகி வர

“அவன் உனக்கு அண்ணனா, அப்பாவா, இருக்கான்னு நீதானே சொல்லுவ?  அவன் லவ் பண்ணுறது உன் கிட்ட எப்படி சொல்வான்? நீ சின்ன பொண்ணு உனக்கு இதெல்லாம் புரியாது னு அவன் நினைக்கிறான்” அவள் பாய்ண்டையே வைத்து அவளை லாக் செய்ய

வானதி பொய் சொல்வதாக நினைத்தும் பார்க்காத கவியின் மனதில் “அவனே சொல்லும் வர நா இதை பத்தி கேக்க மாட்டேன்” என்று ஈகோ தலைத் தூக்கியது.

அடுத்த பிரச்சினையாக மாப்பிள்ளை ஒரு எம்.எல்.ஏ என்றதும் கவி கண்மண் தெரியாமல் கத்தலானாள்.

“என்னது அரசியல்வாதியா? அப்போ தினமும் சாக்கடையில் தான் குளிப்பான் போல. வெள்ள, வேட்டி சட்ட அணிந்திருந்தாலும், கண்ணுக்கு தெரியாத ரேத்த கரையோடு தான் இருப்பான். நெத்தில பட்ட, பெரிய மீசை, கூலர் னு மைனர் மாப்புளயாட்டம்” வாந்தி எடுப்பது போல் செய்கை செய்தவள் ஏகத்துக்கும் நக்கலாக பேசி வானதியை முறைக்க,

ஆதியை பற்றி நன்கு அறிந்திருந்த வானத்திற்கும் கவி ஓவர் ரியாக்ட் பண்ணுவதாக தோன்றின்பாலும். என்ன செய்வது சினிமாலையும் அரசியல்வாதியென்றால் வில்லனாகவே சித்தரிக்க, நல்லவர்களை கூட அடையாளம் காண முடியாமல் இருப்பது மக்களின் தலை விதி. ஆதியை சந்தித்தால் கவியின் எண்ணம் மாறலாம் என்று வானதி நினைத்து அமைதியாக அவளை பார்த்தவர்.

“கார்த்திக் ஆசப் பட்ட பொண்ணு. உனக்கு விருப்பம் இல்லனா விட்டுடலாம். பிரச்சினை இல்ல. அவன் அம்மா இருந்திருந்தா அவன் ஆச படி நடந்திருக்கும். வளர்த்தவங்க பேச்சு தட்ட முடியாமல் வேறு கல்யாணம் பண்ணி சந்தோசமாக இருப்பானோ!” சொல்லியவாறே வானதி மூக்கை சிந்த அது கவியை அசைக்கவே

“ஏதோ பண்ணுங்க” என்றவள் கோபமாக தனதறைக்கு சென்று கதைவடைத்துக் கொண்டாள். 

வானதி கார்த்தியிடம் இதையே கொஞ்சம் மாற்றி கூறியிருந்தார்.

“அன்னைக்கி ரெஸ்டூரண்ட்டுல ஒரு பையன பாத்திருக்கா. ஏற்கனவே தெரிஞ்ச பையன்தான். அவளுக்கும்  ரொம்ப பிடிச்சிருக்காம். அவன் கூட இருந்த பொண்ணு கூட ஏதோ  சண்டை  போல அவங்க  வீட்டுல  இருந்து வரன் வந்ததும் வேணாம் னு சொல்லுறா. மனசுக்கு பிடிச்சவனையே வேணாம் னு சொல்லுறா இனி கல்யாணம் பண்ணுவாளோ மாட்டாளோ!” விரக்தியான குரலில் வானதி சொல்ல

கார்த்தியின் கண்ணில் ஆதியின் முக வந்து செல்ல கூடவே ஆருவின் முகம். கவிக்கு ஆதியை பிடித்திருந்தால் தான் ஆருவை கல்யாணம் செய்து கொள்வதாக முடிவு செய்தவன்

“மாப்பிளையை பத்தி நல்லா விசாரிச்சீங்களா? என் சைடுல நா விசாரிக்கவா?” தேவிமாவின் நல்ல மகனாய், கவிக்கு அண்ணனாகி கார்த்தி விசாரிக்க,

“எனக்கு தெரிஞ்ச பையன் தான் பா….. சொக்கத்தங்கம். குறையென்று சொல்ல ஒன்னும் இல்ல. உனக்கு திருப்த்தி இல்லனா நீயும் விசாரி” வானதி அனுமதி வழங்க,

வானதி அவ்வளவு உறுதியாக சொல்வதால் “நீங்க சரி னு சொல்லுங்க நா கவி கிட்ட பேசுறேன்”

“பாத்துப்பா அவ ஈகோவை சீண்டிடாத” வானதி சிரித்து விட்டு ஆதியை தொடர்ப்பு கொள்ள  தனதறைக்குள் புகுந்துக் கொண்டார்.

ஆதி பேசி விட்டு சென்றதும் பலத்த யோசனையில்  விழுந்த  வானதி இருவரிடமும் தான் வரன் பார்ப்பதாக சொல்ல இருவருமே மறுக்காமல்  சம்மதித்தது இதயத்தின் ஓரத்தில் கொஞ்சம் வலித்தாலும், வாழப் போன்றவர்கள் அவர்கள் அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் ஆதியை ஏற்கனவே தெரியும், அவன் குடும்பமும் ஜமீன் குடும்பம் இப்படி ஒரு சம்பந்தம் கிடைக்காது என்று நன்கு புரிய முதலில் பேசியது கணவனிடம்.

 “இவங்க ரெண்டு பேரும் பிரெண்ட்ஷிப்ல சின்சியர் சிகாமனையையே மிஞ்சிடுவாங்க போல இருக்கு, வேற சம்பந்தம் பேசவானு கேட்டா சரி னு சொல்லிட்டாங்க. அதற்கேத்தா போல வரனும் வந்திருக்கு. ரெண்டு பேரும் சரி னு தான் சொல்வாங்க ஏற்கனவே தெரிஞ்ச பையன் குடும்பம் தான். சித்து அண்ணா என்ன சொல்வாரோ தெரியல” வானதி படபடவென பேசி முடிக்க மறு பக்கம் மௌனம் மட்டுமே!

 “ஏன் வானதி நம்ம பசங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்களா?” பித்யுத்தின் குரல் கர கரப்பாக ஒலிக்க வானத்திற்கு எரிச்சல் எட்டிப் பார்த்தது.

“நாம ஆச படலாம். ஆனா மனசுக்கு பிடிச்சவங்கள கல்யாணம் பண்ணா தானே வாழ்க்கை சந்தோசமாக இருக்கும். லவ் மேரேஜ் பண்ண நீங்களே இப்படி பேசலாமா? சித்து அண்ணா கூட சகு அக்கா பொண்ணு என்றாலும்  மனசார விரும்பித்தான் தான் கல்யாணம் பண்ணி கிட்டாரு. இதுங்க ரெண்டு அப்படி ஒரு எண்ணமே இல்லாம இருக்குதுங்க, நமக்காக கல்யாணம் பண்ணி அதுக்கு பிறகு வாழாம, பிரிஞ்சிட்டாங்கன்னா?” ஒரு பெருமூச்சு விட்டவாறே விளக்க, பித்யூத்தும் ஒரு பெருமூச்சு விட்டார்.

பித்யுத் சித்தார்த்திடம் பேசும் முன் வானதியே பேசினார். உண்மை நிலைமையை விளக்கி, வந்திருக்கும் வரனை பற்றியும் சொல்ல பித்யுத் போல் இல்லாமல் போல்டாக  “பசங்க விருப்பம் போலவே செய் மா” என்று விட ஆதித்யாவை அழைத்து “வீட்டில் பேசி விட்டேன் எங்களுக்கு சம்மதம். பொண்ணு பார்க்க வாங்க” என்று விட ஆதித்யாவும் அவன் வீட்டில் விஷயத்தை பகிர அமளி துமளிக்கு பின் பெண் பார்க்கும் படலம் ஆரம்பமானது.