Advertisement

அத்தியாயம் 13

அந்த மருத்துவமனை இரவின் மடியில் இருக்க, கார்த்திக்கின் அறையில் மட்டும் வெளிச்சம் பரவியிருந்தது. 

“இல்ல ப்ரோ அது பொம்முவ நோக்கி வீசின கத்தியில்ல உன்ன நோக்கி வீசின கத்தி” ஆதி உறுதியாக சொல்ல 

“எப்படி சொல்லுற?” கார்த்திக் தான் ஒரு போலீஸ் என்று கேள்வி கேட்டு வைக்க 

“பொம்முவ இங்க படிக்க அனுப்பும் போதே அவ பாதுகாப்புக்கு ரெண்டு பேர ஏற்பாடு செஞ்சி இருந்தேன். அவ ஹாஸ்டல்ல இருந்து சுவரேறி குதிச்சு பல தடவ ப்ரெண்ட்ஸ் கூட நைட் ஷோ பாக்க போய் இருக்கா, அப்போ வராத ஆபத்து இப்போ கண்டிப்பா இல்ல. அப்படி போகும் போதுதான் உன்ன பார்த்து லவ் பண்ணவே ஆரம்பிச்சா. இது நீ வச்ச மிச்சம் உன்ன சொச்சமா நினைச்சி பின்னாடி துரத்துது” 

ஆரு தன்னை காதலிக்கின்றாள் என்பது கார்த்திக்கு முற்றிலும் புதிய செய்தி. ஆருத்ராவே அவனிடம் அதை பற்றி கூறி இருக்காத நிலையில் அவள் சொல்லி இருப்பா என்று ஆதி நினைத்து சொல்ல கார்த்திக்கின் நெஞ்சம் முழுக்க உல்லாசம் பரவியது. 

ஸ்கூலோ! காலேஜோ “மச்சான் உன்ன ஒரு பொண்ணு பாக்குற?” என்றும், “ஐ லவ் யு கார்த்திக்” என்றும் பலதடவைகள் கேட்டாலும் யாரையும், திரும்பி பார்க்க வேண்டும் என்றோ! காதலிக்க வேண்டும் என்றோ தோன்றியதே! இல்லை. காரணம் கவிலயா. அவள் பாதுகாப்பு, சந்தோசம்  எல்லாவற்றையும் விட அவனுக்கு முக்கியமாக இருந்தது. 

ஆனால் இன்று தன்னை ஒருத்தி காதலித்தும் சொல்லாமல் அவன் மனதை  கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கின்றாள் என்பது கர்வத்தை ஏற்படுத்தி இருக்க, “ஏன் டி என் கிட்ட சொல்லல” என்று அவளோடு சண்டை போடணும் போல் இருந்தது. 

ஆருவின் கொஞ்சல் மொழிகளும், குரலும், அழகிய வதனமும்  அநியாயத்துக்கு இந்நேரத்தில் நியாபகத்தில் வந்து “அவள் இந்நேரம் அருகில் இருந்தால் முத்த மழையில் நனைய வைத்திருப்பேன்” என்று உள்ளம் துள்ள அழைக்கா விருந்தாளியாக புன்னகை கார்த்திக்கின் உதட்டில் மலர்ந்தது. 

“மச்சான் நீ வர வர சரியில்ல. கல்யாணத்த மூணு மாசம் தள்ளி வச்சது தப்போன்னு தோணுது” சீனு வார 

ஆதியும் “பொம்மு உன் கிட்ட சொல்லலையா? சொல்லி இருப்பான்னு நினச்சேன். அன்னைக்கி ரெஸ்டூரண்ட்டுல உன்ன பத்தி சொல்ல தான் வர சொன்னா. விசயத்த சொல்ல முன்பே உன்ன பாத்துட்டேன். கூடவே கவியையும்” தன்னவள் அன்று பேசியவைகள் நியாபகத்தில் வந்து ஆதி புன்னகைக்க, 

“இந்த கமிடட்  பசங்க கூட இருந்தா நம்மள பைத்தியக்காரனாக்கமா விடமாட்டானுங்க” புலம்பியவாறே “டேய் டேய் அடங்குங்கடா… விசயத்துக்கு வாங்க. எக்ஷன் பண்ண வேண்டிய நேரத்துல ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு, ட்ராக் மாறுது” சீனு கத்த அவன் புறம் திரும்பி இருவருமே! முறைக்கலாயினர்.   

“மச்சான் ஆதி கடைசியா என்ன சொன்னான் னு சொல்லு பார்ப்போம்” அவர்களை முறைப்பை தூசி தட்டுவது போல் கையை சட்டையில் தட்டியவாறு சீனு.

“ரெஸ்டாரண்ட்…..” கார்த்திக் இழுத்தவாறே யோசிக்க

“டேய்.. டேய்.. நீ அடங்க மாட்டியா? அவன் சொன்னது நீ வச்ச மிச்ச சொச்சத்தை” சீனு நியாபகப் படுத்த அப்படி ஏதாவது சொன்னியா என்ற கேள்வியோடு ஆதியை ஏறிட்டான் கார்த்திக். 

சீனு யாரிடமும் சகஜமாக ஒட்டிக் கொள்ளும் ரகம். கார்த்திக்கை தங்கை கணவனகாக என்னாது ஆதியை போலவே நண்பன் என்ற இடத்தில் வைத்து பேச ஆதியும் கார்த்திக்கிடம் அவ்வாறே உரிமை கொண்டாட கார்த்திக்கும் எந்த தயக்கமும் இன்றி அவர்களோடு இணைந்துக் கொண்டான்.

“ஆமா டா தம்பி. அவனை என் ஆள விட்டு விசாரிச்சதுல, அவன் அண்ணனோட எக்சிடன் கேச நீ ஒழுங்கா விசாரிக்கல என்றும், காசு வாங்கிட்டதாகவும் சொல்லுறான்” 

லஞ்சம் வாங்கியதாக சொல்லவும் கார்த்திக்கு கோபம் சுர்ரென்று ஏறி கண்கள் சிவப்பேறியது. 

“அவன் பொய் சொல்லுறான் மாப்புள. எதோ ஸ்க்ரிப்ட்டை கைல வச்சி படிக்கிறது போலவே சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லுறான்” சீனு சொல்ல அவன் புறம் திரும்பினான் கார்த்திக்  

“சாதாரண மக்களுக்கு யாரு நல்ல போலீஸ், யாரு லஞ்சம் வாங்குவான்னு வேணா தெரியாமல் இருக்கலாம். ஆனா அரசியல்வாதிக்கும், ரவுடீங்களுக்கும் கண்டிப்பா தெரியும். நான் தானே உன்ன பத்தி விசாரிச்சேன். அக்மார்க் கை சுத்தமான நல்ல பையன்டா நீ” சொல்லியவாறே கார்த்திக்கின் நாடியை பிடித்து ஆட்டினான் சீனு. 

“அது தான் முதல் பாண்ட்.  அப்படியே நீ லஞ்சம் வாங்குறவன்னு நினைச்சாலும், ஆக்சிடன்ட் பண்ணவனை விட்டுட்டு உன்ன எதுக்கு போடணும்” ஆதி சொல்ல 

“அவன் யாருனே தெரியாததால் மொத்த கோபத்தையும் என் மேல காட்டி இருப்பான்” கார்த்திக் போலீசாக. 

“ஓகே.. ஆனா ஒரே மாதிரியாக ரெண்டு விஷயம் நடக்குமா? ஜவுளிக் கடைல ஒருத்தன் உன்ன பலோவ் பண்ணன், அவனை நகைக் கடைலயும் பார்த்தப்போ தூக்கி விசாரிச்சேன். அவனும் இதையே தான் சொன்னான். சோ உனக்கு தெரியாமளையே நீ ஏதோ பண்ணி இருக்க” ஆதி தெளிவாக சொல்ல

ஒவ்வொருநாளும் எத்தனையோ விதமான ஆக்சிடன் கேஸை பார்ப்பவன். இதில் அவன் தவறு எங்கே? என்ன நடந்தது என்று  கார்த்திக்கு சுத்தமாக புரியவும் இல்லை. அவனின் குழம்பிய மனநிலையை முகம் எடுத்துக் காட்ட

“நீ ரெஸ்ட் எடு ப்ரோ நான் பாத்துக்கிறேன்” ஆதி சொல்ல 

“மப்பு நீ சொன்ன மாதிரி சாதாரண பழிவாங்க பண்ணது. கேஸ் கொடுக்கல னு சொல்லி அவனை வெளிய விட சொல்லிட்டேன். கூடவே அவன் போன்னுல ஒரு பக்கையும் பிக்ஸ் பண்ணிட்டேன். அவன் யாருக்கு போன் பண்ணுவான்? என்ன பேசுவான் எங்குறதெல்லாம் உடனுக்குடன் வந்துடும். அந்த வேலைய வாசு பாக்குறான்”  சீனு.

“அந்த பக் அவன் போன்ல பேசுறவன் கூட மட்டுமில்ல வேறொரு போன்ல இருந்து பேசினாலும், பக்கத்துல அவன் கூட யாரு பேசினாலும் கேக்கும்” ஆதி

இயல்பு நிலைக்கு வந்த கார்த்திக் “அரசியல்வாதிக்கு மூள நல்ல வேல செய்யுது”

“நான் ஒரு ஐ.ஏ.எஸ் டா… எக்ஸ்ட்ராவே வேலை செய்யும்”   கண்ணடித்து சிரித்தான் ஆதி. 

“மாப்பு வாசுவை நம்பி இந்த வேலைய ஒப்படைச்சது எனக்கென்னமோ சரியா படல. என்ன இருந்தாலும் அவன் அந்த பச்சமுத்து பையன்” சீனு யோசனையாக, 

“ஹாஹாஹா யாரையும் அவ்வளவு சீக்கிரத்தில் நம்ப மாட்டான் இந்த ஆதி. அவன் வேலைக்கு சேர்ந்த அன்னைக்கே அவனுக்கு ஒரு போன் கொடுத்தேன்! எதுக்கு” ஆதி கண்ணடிக்க 

கார்த்திக் ஆதியை மெச்சுதலாக  பார்க்க “அடேய் பாவி” வாயில் கைவைத்தான் சீனு.

“ஆக்சிடன் கேச மூணா பிரிக்கலாம். ஒன்னு டயர் வழுக்கியோ அல்லது தூக்க கலக்கத்துலையோ! தானாகவே வண்டிய கொண்டு போய் மோதுறது. 

ரெண்டாவது வேற வண்டி வந்தது இன்னொரு வண்டி மேல மோதுறது.

மூணாவது கொலை முயற்சி” கார்த்திக் சொல்ல 

“மினிமம் மூணு மாசம் மக்சிமம் ஆறுமாசம். நடந்த எல்லா விதமான ஆக்சிடண்ட்டையும் அலசணும். அதுல கார்த்திக் என்ன மாதிரி வேல பாத்தான் கார்த்திக் வச்ச மிச்சம் என்னாகுறது  நமக்கு தெரிஞ்சிடும். அப்பொறம் அவனை பிடிக்கலாம்” ஆதி பக்காவாக பிளானோடு சொல்ல 

“சின்ன கேஸ்ல இருந்து பெரிய கேஸ் வர ஒரு மாசத்துக்கு குறைஞ்சது நூறு இருக்கு. எங்க இருந்து ஆரம்பிக்கிறது” யோசனையாக கார்த்திக் 

“வெளிய போனவன் போன் பேசினாலே! போதும் கண்டு பிடிச்சிடலாம்” ஆதி.

“மாப்புள, மச்சான் இப்போவாச்சும் தூங்கலாமா?” கேட்டவாறே காதில் ஹெட்ப்போனை மாட்டிக் கொண்டு கீழே ஒரு போர்வையை விரித்து படுத்துக் கொண்டான் சீனு. 

காலை உணவோடு, கவியும், வானதியும் வர ஆருத்ராவும் வந்து சேர்ந்தாள். ஆருத்ராவை பார்க்கும் போது மத்த நாட்களை விட கார்த்திக்கின் இதயத் துடிப்பு இசை மீட்டியது. நேற்று அழுது கொண்டிருந்த ஆருத்ராவா? இது எனும் அளவுக்கு சிரித்த முகமாக இருந்தாள். 

அனைவரோடும் பேசிக் கொண்டிருந்தவள் கார்த்திக்கின் பார்வை மாற்றத்தை புரியாது கூந்தலை காதோரம் ஒதிக்கியவாறே அவனை பார்க்க அவளின் புன்சிரிப்பில் தன்னையே தொலைத்து அவளையே பாத்திருந்தான் கார்த்திக். 

அவன் கைகளை பிடித்துக் கொண்டு வார்த்தைக்கு வார்த்தை கார்த்திக், கார்த்திக் என்று அவன் பெயரை சொல்லி கார்த்திக்கை இம்சித்துக் கொண்டிருக்க, அவளை அணைக்க துடிக்கும் கைகளை சிரமப்பட்டு கட்டுக்குள் வைத்துக் கொண்டான்.  

இவர்களின் அந்நியோன்யத்தை பார்த்து கவி தன்னால் ஆதியோடு இப்படி பொருந்திப் போக முடியுமா? முடியாத படி தன்னை எது தடுக்கின்றது என்ற சிந்தனையில் அவர்களையே  பாத்திருக்க, தன் கையேடு கவியின் கைகளை ஆதி கோர்த்துக் கொள்ள சொல்ல முடியாத பரவச அலைகள் கவியின் மனதில் எழ ஆதியின் முகம் பார்த்து புன்னகைக்க அவனும் கண்சிமிட்டி புன்னகைத்தான்.

“ஐயோ, ஐயோ, ஐயோ” சீனு தலையில் அடித்துக் கொள்ள பொருட்களை பையில் அடுக்கிக் கொண்டிருந்த வானதியும், ராணியும் திரும்பிப் பார்க்க, தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த இரு ஜோடியும் என்ன ஏதோவென்று சீனுவை ஏறிட 

“இல்லடா மச்சான் எதெல்லாம் பார்க்க கூடாதோ அதெல்லாம் என் கண்ணு பாத்து வைக்குது அதான் அடிக்கடி நான் இப்படி கத்தி என் கண்ண கண்ட்ரோல் பண்ணுறேன். புரியுறவங்களுக்கு புரியும்” தெனாவட்டாகவே சொல்ல சத்தமாக சிரித்தான் ஆதி. 

கவி ஆதியை மெய்மறந்து  பார்க்க ஆதியும் சிரித்தவாறே அவள்  புறம் திரும்பி புருவம் உயர்த்தி என்னவெனக் கேக்க அவனின் புன்னகை முகத்தை அவளின் கண்கள் படம் பிடித்து மனதில் பத்திர படுத்திக்க கொண்டது. ஆருத்ராவும், கார்த்திக்கும் ஒருவரை ஒருவர் பார்த்து வெக்கப் புன்னகை சிந்த வானதியும், ராணியும் புன்னகைத்துக் கொண்டனர். 

ஆருவை தவிர ஆதியின் குடும்பத்தார் கார்த்திக்கை மருத்துவமனையில் வந்து சந்தித்து விடைபெற்று ஊர் நோக்கி பயணிக்க  கார்த்திக்கு ஆழமான காயம் எதுவும் இல்லாததால் வீடு வந்தவன் ஒரு வாரம் விடுப்பு எடுத்து தான் சென்னை வந்து டியூட்டியில் சேர்ந்த நாள் முதல் நடந்த அத்தனை ஆக்சிடன்ட் கேசுகளையும் அலசி ஆராய்ந்தான். 

சொல்லும் படியான எந்த தகவலும் அவன் கண்ணில் சிக்கவில்லை. கொலை முயற்சி என்று ஒரு சில வழக்குகள் பதிவாகி இருந்தாலும் அதில் குற்றவாளியை கண்டு பிடித்த வழக்குகளே அதிகம், கத்தியால் குத்தியவன் சொன்னது போல் எந்த வழக்கும் இல்லை. சீனு சொன்னதை போல் அவன் பொய் சொல்கின்றான் என்றாலும் அவன் யாருக்காக வேலை செய்கின்றான் என்று இன்னும் சரியாக கண்டு பிடிக்க முடியவில்லை. பக் பிக்ஸ் செய்திருந்த அவனுடைய அலைபேசியை அவன் தூக்கிக் போட்டிருப்பான் போலும், ஜவுளிக் கடையில் இருந்தவனின் அலைபேசியும் அதே நிலைமையில் தான் இருந்தது. 

என்ன செய்வது? எப்படி கண்டு? பிடிப்பது என்ற குழப்பத்திலையே! கார்த்திக் ஆதியை அழைத்து பேச அமைச்சர் நல்லதம்பி கொலையானதில் அவனும் திடீரென அறிவிக்கப் பட்ட இடைத்தேர்தல் வேலைகளில் மூழ்கி இருந்தான். 

இதற்க்கு கிடையில் வரளி நாயகியும் வானதியை அழைத்து கெட்டதாகவே நடக்குது, முடிவு செய்த நாளில் கல்யாணத்தை நடத்த முடியாமல் போய் விடுமோ என்று மனசு கெடந்து தவிக்குது, ஜோசியத்தை நம்பாமல் நாள் குறித்ததால் தான் இவ்வாறு நடக்கிறதோ என்று பயமாக இருப்பதாகவும் சொல்ல வீட்டாரிடம் சொல்லிக் கொள்ளாமல் வரளி நாயகியோடு சென்று இரு ஜோடிக்கும் ஜாதகப் பொருத்தம் பார்க்க, அதில் எந்த சிக்கலும் இல்லை. குறித்த திகதியிலையே கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம், ஆதிக்கும், கார்த்திக்கும் தான் கொஞ்சம் நேரம் சரியில்லை என்று சொல்லி பரிகார பூஜை செய்யும் படி சொல்ல அதை செய்ய தயாரானார்கள் இருவரும். 

இரு ஜோடிகளுக்கிடையிலும் பேச்சுவார்த்தை குறுந்செய்தியினூடாகவே தொடர்ந்தது, கவியும், ஆருவும் எதிர் வரும் பரீட்சையின் காரணமாக படிப்பில் கவனம் செலுத்த, ஆதி தேர்தல் வேலைகள் என்று இருக்க, கார்த்திக் வேலைக்கு சென்றாலும், இரவில் இரட்டிப்பு வேலையாக தன்னை கொலை செய்ய முயற்சிப்பவனை தேடும் வேட்டையில் இறங்கினான்.  

ஆருத்ராவின் உறவு கார்த்திக்கோடு மட்டும் என்றிருக்க, கவியோ ஆதியின் வீட்டில் உள்ள அனைவரிடமும் செல்லம் கொஞ்சுக் கொண்டிருந்தாள். ஆதியுடனான உறவும் சுமூகமாகவே தொடர இரு ஜோடிகளுக்கிடையில் எந்த பிரச்சினையும் இருக்க வில்லை. 

தன் தந்தையை விபத்தில் காலமானாரா? அல்லது அவரின் இறப்புக்கு பின்னால் அமைச்சர் நல்லதம்பியின் சூழ்சசியா? இரண்டு வருடங்களாக விடை தெரியாத கேள்வியில் அமைச்சர் நல்லதம்பியும் கொலையானதில் தந்தைக்கு நடந்தது விபத்துதான் என்று இறுதியாக முடிவெடுத்த ஆதி பத்து நாளில் நடை பெற இருக்கும் தேர்தலில் போட்டியிடும் வேர்ப்பாளரோடு மும்முரமாக ஈடுபடலானார்.

“டேய் டேய் அந்த போலீஸ்காரன் போட சொன்னா இப்படி வேல தெரியாத பசங்கள அனுப்பி இருக்க” அலைபேசியில் ஒருவனை காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தான் கோட் சூட்டில் இருந்த ஒருவன் 

“இல்ல சார் ஸ்கெட்ச்சு போட்டு தூக்கலாம் னு பார்த்தா இப்படி அவன் உசாராவான்னு நினைக்கல” 

“நீ அனுப்பின பசங்களுக்கு உன்ன அடையாளம் தெரியுமா?” 

“இல்ல சார் லோக்கல் பசங்கள தான் அனுப்பினேன். பக்காவா செய்யுற பசங்க தான். பிரச்சினை என்னனா அந்த போலீஸ்காரன் தஞ்சை எம்.எல்.ஏ கி சொந்தமாக போறான். அவன் இதுல உள்ள வந்ததுல நம்ம பசங்க மாட்டிக் கிட்டாங்க” 

“யாரு ஆதித்யா விஜயேந்திரனா?”

“ஆமா சார்” 

“அவன் சரியான வில்லங்கம் புடிச்சவன் டா நுனி கிடைச்சாலும் போதும் அடி வரை நொண்டி எடுத்துடுவான். எதுக்கும் கொஞ்சம் நாள் அடக்கி வாசி. அந்த போலீஸ்காரனின் மேல் ஒரு கண் வை அவன் ஏதாவது மூவ் பண்ணினா அவன போட்டுட்டு” 

“சரி சார்” 

“என்ன சரி னு சொல்லுற? சொல்லுற வேலைய அரைகுறையா செய்ய வேண்டியது, அத கவர் பண்ண மேலும் க்ரைம் பண்ண வேண்டியது” 

“இல்ல சார் எல்லாம் பக்காவா தான் பண்ணேன். போலீஸ்காரன் எப்படி மோப்பம் புடிச்சான்னே தெரியல” 

“போலிஸ்காரனுக்கு வேட்டை நாய் மூக்கு அத நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை, நாம தான் பண்ணுறது பாத்து செய்யணும். கொஞ்சம் நாளைக்கு ஆரப்போடு அவனுக அசந்த நேரம் பாத்து தூக்கிடு” 

“சார் அந்த போலிஸ்காரனை போட்டே ஆகணுமா?”

“நாம எக்சிடண்டா காட்ட முயற்சி செய்ததை அவன் கொலை முயற்சி னு கண்டு பிடிச்சானோ! அப்போவே அவனை போடணும் னு இருந்தேன். அப்போ செஞ்சா மாட்டிப்போம் னு மூணு மாசம் கழிச்சு போட சொன்னேன். இப்போ அந்த ஆதித்யா வேற உள்ள வந்துட்டான். அவங்கப்பன போட்டது நாம தான்னு தெரிஞ்சா ஏதாவது பண்ணுவான். கொஞ்சம் நாள் பொறுமையா இரு. நா எப்போ சொல்லுறேனோ அப்போ ரெண்டு பேரையையுமே தூக்கிடு” 

“சரி சார்”

நல்லதம்பியின் இறப்பு பல பேருக்கு நன்மையில் தான் முடிந்திருந்தது. அவரின் இரண்டு டாஸ்மார்க் கடைகளும் உடனே மூடப்பட்டு, ஆதிக்கு வேண்டிய ஒரு நல்ல தலைவரை அமைச்சர் பதவியிலும் அமர்த்தி விட்டான். 

கல்யாண நாளும் நெருங்க நெருங்க இரு வீட்டாருக்கும் தலைக்கு மேல் வேலைகள் குவிந்து கிடக்க முதல் வேலையாக தஞ்சையில் ஆதியின் ஜமீன் இருக்கும் தெருவிலையே ஒரு வீடு பார்த்து குடிவந்தனர் வானதியின் குடும்பம். கல்யாணத்துக்கு வரும் இரு வீட்டார்களையும் தங்க வைக்க ஆதி ஏற்பாடு செய்திருந்ததால் பெரியதொரு பாரம் வானதியை விட்டு நீங்கி இருந்தது. 

பரீட்ச்சை முடிந்த கையேடு கவியும், ஆருவும் தங்கள் படிப்பை தஞ்சையில் உள்ள காலேஜில் படிக்க விண்ணப்பம் செய்திருக்க, அதற்கான அனுமதியும் வர, கார்த்திக்கின் மாறுதலும் கிடைத்து விட்டதால் கல்யாணத்துக்கு ஒரு வாரம் இருக்க இரு தந்தைகளும் வீடு வந்தனர். 

கல்யாணத்தை ஆடம்பரமாக செய்வதில் ஆதிக்கு உடன் பாடில்லை. ஆனாலும் ஊரில் உள்ள அனைவரையும் கல்யாண விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தான். கல்யாணத்துக்கு முதல் நாள் நிச்சயதார்த்தம், அடுத்த நாள் கல்யாணம், அதற்கும் அடுத்த நாள் பெண் வீட்டில் விருந்து என மூன்று நாட்கள் இருப்பதால் அந்நாளில் ஊரில் எந்த வீட்டிலும் அடுப்பு எரியமாட்டாது என்பது உறுதி. 

வீட்டில் விஷேஷம் என்றாலே! அநாதை ஆசிரமத்துக்கும், முதியோர் இல்லத்துக்கு உணவை கொடுத்து விடும் கர்ணன் விஜயேந்திரன் அவர்கள் அனைவரையும் கல்யாணத்துக்கு அழைப்பு விடுத்திருக்க, இரு ஜோடிகளின் கல்யாணமோ! திருவிழாபோல் கூட்டம் கூடும் என்பதில் ஐயமில்லை. 

ஆதி ஒரு எம்.எல்.ஏ அவனின் பாதுகாப்பை பலப் படுத்தும் வேலை போலீஸிடம் என்பதால் கூட்டத்தை கட்டுப் படுத்த கல்யாணம் கோவிலில் நடந்தாலும், மண்டபத்தில் மொத்த பேருக்கும் உணவு பரிமாற முடியாமல் போகும் என்பதாலும் மாற்று ஏற்பாடாக ஊரிலுள்ள விளையாட்டு மைதானத்தில் டென்ட் கட்டப்பட்டு மூன்று வேலை உணவும் பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டது. 

கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னதாகவே ஊருக்குள் வரும் அனைவரையும் சோதனையிட்ட உள்ளே செல்ல அனுமதித்தனர் ஆதியின் தொண்டர்கள். எந்த விதத்திலும், எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக் கொள்ள நிச்சய தார்த்த நாளும் அழகாக விடிந்தது.

Advertisement