Advertisement

அத்தியாயம் 1

அந்த காலை சூரியன் தஞ்சையில் தனது ஒளிக் கதிர்களை பரப்பி இருக்க இதமான காலநிலையோடு சுகமான காற்றும் வீசிக் கொண்டிருந்தது.

“எம்.எல்.ஏ வாழ்க, எம்.எல்.ஏ வாழ்க, எம்.எல்.ஏ வாழ்க”

“நிறுத்து நிறுத்து… எதுக்கு நாய் மாதிரி கத்துக்கிட்டு கோஷம் போடுறீங்க? இங்கெல்லாம் கோஷம் போட்டா மச்சான் உங்கள எல்லாம் பக்க மாட்டாரு. அங்க பாரு நாய்ங்கள அதுங்கள வைச்சே உடம்புல இருக்குற கறியெல்லாம் மொத்தமா எடுத்துடுவேன். போடுறது கூன கும்பிடு இதுல சத்தம் வேற” கோஷம் போட்டவர்களை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி கொண்டிருந்தான் ஆதித்ய விஜயேந்திரனின் பி.ஏ யும் அத்த பையனுமான சீனு என்கிற சீனிவாசன்.

அவனை வேற்றுக்  கிரகவாசி போல் பார்த்தவர்கள்  அங்கே இருந்த எட்டு வேட்டை  நாய்களை கண்டு அமைதியாகினர்.   

“ஏன்  டா மகனே வந்தவங்க கிட்ட இப்படியாடா பேசுறது?”

“நீ மூடிக்கிட்டு போய் கொட்டிக்க, யாரு எதுக்கு வாரங்கனு பாத்த உடனே கண்டு பிடிப்பான் இந்த சீனு. கோஷம் போடுறவனையும் எனக்கு தெரியும், கொடி பிடிக்கிறவனையும் எனக்கு தெரியும். வந்துட்டார்.. உருப்படியா ஒரு வேல பாக்க தெரியல. ஜமீன்ல கைப்பிள்ளை மாப்பிள்ளயா கொட்டிக்கிறத மட்டும் செய்ற. போப்பா…. எல்லா வேலையும் நீ பாத்திருந்தா இந்த வயசுல நான் பாக்க வேண்டிய வேலைய பாத்திருப்பேன்ல?” அலுத்துக் கொண்டான் சீனு.

“அதென்னடா இந்த வயசுல பாக்க வேண்டிய வேல”  அவரும் அப்பாவியாக வாயை கொடுக்க,

“லவ் பண்ணுறதுதான் வேறென்ன”  காலரை தூக்கி விட்டவாறு சொன்னாலும் ஆதங்கமே அவன் குரலில்.

“உன் கிட்ட மனிசன் பேசுவானா” சீனுவின் துடுக்கு பேச்சை என்றும் போல் கண்டிக்க

“நீ மனிசன் இல்லனு உனக்கே தெரியுமா? அப்போ அம்மா எப்படி உன் கூட குடும்பம் நடத்தினாங்க” சீனு பொய்யாய் ஆச்சரிய பட அவனை முறைக்க முடியாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் சீனுவின் அப்பா சக்கரவர்த்தி.

பெயர்தான் சக்கரவர்த்தி. எடுப்பார் கைப்பிள்ளை. அக்கா மகன் என்ற ஒரே காரணத்துக்காக இந்த ஜமீனின் ஒரே மகளை  கல்யாணம் பண்ணி வைத்தார் ஆதித்யாவின் தாத்தா கர்ண விஜயேந்திரன்.

“என்ன மாப்பு ஒரே சத்தமா இருக்கு?” என்றவாறே வெள்ளை வேட்டி சட்டையில் படிகளில் இறங்கினான் ஆதித்யா.

முகத்தில் ராஜகலை மின்னும், எந்நேரமும் சிரித்துக் கொண்டே இருக்கும் சாணக்யன். கடந்த இரண்டு வருடங்களாக இதே உடையில் தான் அவனை பார்க்க முடியும். கையில் ஒரு வெள்ளியிலான காப்பு மாத்திரம் அணிந்திருப்பான்.

“அப்பாவை சத்தம் போட்டது தெரிஞ்சா இவன் என்ன லெப்ட் அண்ட் ரைட்டு வாங்குவான்” மனதுக்குள் நினைத்தவன் “அது ஒண்ணுமில்ல வெளிய…” அவன் சொல்லி முடிக்கும் முன் அவனை சந்திக்க வருவோரை சந்திக்கவென அமைத்த அறையினுள் நுழைந்திருந்தான் ஆதித்யா.

“எல்லாருக்கும் வணக்கம்” பொதுவாகவே வணக்கம் வைத்தவன் அவனுடைய கதிரையில் அமர

“வணக்கம் தம்பி”

“வணக்கம் சார்”   என்ற குரல்களோடு அவ்விடமே அமைதியானது.

மக்களின், மனு, கோரிக்கை, ஊருக்காகவென்றால் அனைவரையும் ஒன்றாகவே அமரவைத்து பேசுபவன் சொந்த விஷயம் என்றால் மாத்திரம் தனியாக சந்திப்பான்.

“சொல்லுங்க” அவனின் கம்பீரமான ஒற்றை சொல்லில்  ஒரு பெரியவர் எழுந்து பேச

“உக்காந்து கிட்டே சொல்லுங்க மாமா” இது தான் அவன். தன் ஊர் மக்களை சொந்தமாக பார்த்து அரவணைப்பான். அதனாலயே அவனை அனைவருக்கும் பிடித்திருந்தது. பதவியை வைத்து அதிகாரம் பண்ணாதவன், பாசமாய் தட்டிக் கொடுத்து வேலையையும் வாங்க தெரிந்த சாணக்கியன்.

“தம்பீ  இந்த ரெண்டு வருசத்துல நீங்க வந்த பிறகு நம்ம ஊர்ல இயற்கை விவசாயம் அமோக விளைச்சல். கிணறு, ஓடை எல்லாம் தூர்வாரி  சுத்தமான தண்ணிக்கும் பஞ்சமில்லை. மரம் நடனும் னு சின்ன பசங்களுக்கும் போதித்து வீட்டுலயே இடம் இருக்குறத பொறுத்து தோட்டம் போட்டு வருமானம் வேற வருது. பிளாஸ்டிக், பொலித்தீன் பாவினையை நிறுத்தி மாற்று ஏற்பாடு பண்ணியத்தில் கயிறு திரிகிறது, கூடைகளை பின்னுறது னு கைத்தொழிலும் கை வசம் வந்திருச்சு. இன்னும்…”

“யோவ் பெருசு இது  எல்லாருக்கும் தெரிஞ்ச விஷம் தானே நேரா மேட்டருக்கு வாய்யா அவரு என்ன வெட்டிக் கத பேசவா இங்க உக்காந்து இருக்குறாரு? சட்டுபுட்டுனு சொல்லி முடி மினிஸ்டர் வேற பாக்க போகணும்”  பொறுமையை இழந்த சீனு கடிய

“சீனு….” என்ற ஒற்றை வார்த்தையோடு ஆத்தியா நிறுத்திக் கொள்ள சீனுவின் கடைசி வார்த்தைகள் மெதுவாகவே ஒலித்தது.

“தம்பி பிரச்சினை என்னனா டாஸ்மார்க் கடைங்க தான். குடிச்சி கிட்டு அடிதடில இறங்குறாங்க, ராத்திரி பகல் னு பேதம் இல்லாம கடைய திறந்து வைக்கிறாங்க, சின்ன பசங்க வேற குடிப் பழக்கத்து அடிமையாகுறாங்க”

“தெரியும். அந்த காலத்துல பகல்ல வயல்களிலும், வரப்புகளிலும் உழைச்சி களைச்சவங்க உடம்பு வலி தீர, நல்ல தூக்கம் வேணும் னு தான் இரவுல மருந்து சாப்பிடறது போல கொஞ்சம் குடிச்சாங்க. வெள்ளையர்கள் எங்க நாட்டுல அடி வைச்சதிலிருந்து  குடி ஒரு கலாச்சாரமா மாறிருச்சு. ஆனா இன்னைக்கி…. ஒரு கான்சர் மாதிரி நோயா பரவிரிச்சு. நா வந்த உடனே அந்த ரெண்டு கடையையும் மூடனும் னு தானே வேல பாத்தேன் ஆனா எங்க ஊர் மக்களே கோஷம் போட்டு கடை வேணும் என்று சொன்னதுல ஒன்னும் பண்ண முடியல”

“தப்புதான்” என்று தலை குனிந்தவாறு “நீங்களே ஒரு நல்ல வழிய சொல்லுங்க தம்பி” என்றார்.

“மச்சான் பேசாம தண்ணி லைன் மாதிரி சரக்கையும் பைப்பு வழியா வீட்டுக்கே சப்லை பண்ணிடலாம், குடிக்கிறவன் பூரா வீட்டுலையே குடிச்சி மட்டையாகி படுத்துடுவாங்க”

“ஏன் டா” என்று சீனுவை கடிந்தாலும் அவன் பேச்சில் முகம் புன்னகையை பூசிக்க கொள்ள “ஒன்னு பண்ணுங்க கடைய மூட சொல்லி ஊர்ல இருக்குற எல்லார் கிட்டயும் கையொப்பம் வாங்குங்க”

“அதெப்படி தம்பி பாதி பேர் குடிச்சிட்டு திரியுறானுங்களே! சைன் எல்லாம் பண்ண மாட்டானுங்க” ஒருவர் எதிர்த்து பேச

“யோவ் முதல்ல நீயே சைன் பண்ண மாட்ட கொஞ்சம் மூடி கிட்டு இரு அவர் சொல்வாரு” சீனு எகிற

“வீட்டு பொம்பளைங்க கிட்ட முதல்ல வாங்குங்க, புருஷன் குடிச்சிட்டு வந்து அடிக்கும் பொழுது அழுதுகிட்டே சைன் பண்ணுவாங்க” கிண்டலாக ஆதித்யாவின் குரல் ஒலித்தாலும் அதுதான் உண்மையும் கூட.

குடி, போதை பொருள்  பற்றி பாடசாலை ரீதியாக விழிர்ப்புணர்வு செய்து கொண்டுதான் இருக்கின்றான். தீராத தலைவலி பிரச்சினையாக இருக்கும் அந்த இரு கடைகளையும் மூடும் படி மக்களே சொல்லும் பொழுது இறங்கி விட்டான்.

அனைவரும் விடைபெற்று செல்ல முன்னாள் எம்,எல்,ஏ யின் மகன் வாசு நின்று கொண்டிருக்க “வா வாசு நா என்ன பண்ணனும்” ஆதித்யாவின் ஒற்றை வார்த்தையில் அவன் காலிலையே விழுந்தான் வாசு.

“டேய் என்னடா பண்ணுற” கடிந்தவாறே தூக்கி அவனை கதிரையில் இருத்தினான் ஆதித்யா.

“அண்ணே! எனக்கென்னமோ உங்கப்பாக்கு நடந்தது ஆக்சிடண்ட்னு  தோணல. பிளான் பண்ணி பண்ண மாதிரி தெரியுது. எங்கப்பாக்கும் இதுல சம்பந்தம் இருக்குனு தோணுது” ஆத்திரமாக வாசு பேச

“இருக்காதுடா… உங்கப்பா பேராசை புடிச்சவர் தான் ஆனா கொலை எல்லாம் செய்ய மாட்டாரு” ஆதித்யா உடனே மறுத்தான்.

“இல்ல அண்ணே இன்னைக்கி என்ன கூப்பிட்டு உங்க கிட்ட டைவரா சேர்ந்துக்க சொல்லுறாரு அப்படியே! நீங்க எங்க போறீங்க, என்ன பண்ணுறீங்கன்னு அவருக்கு தகவல் வேற கொடுக்கணுமாம். இதெல்லாம்  எதுக்கு நீங்க தனியா போகும் போது ஸ்கெட்ச்சு போட்டு தூக்கத்தாண்ணே! உங்கப்பா சாவுல அவருக்கு மட்டும் பங்கிருக்கட்டும் என் கையாலேயே கொன்னுடுறேன்” வாசு கைகளை பிழிந்தவாறே பல்லை கடித்தான்.

கர்ண விஜயேந்திரனுக்கு ஒரு மகன் தேவசகாயம். மகள் மேனகை. மேனகை  ஒரு வெகுளி அதனாலயே வெளியே திருமணம் செய்து கொடுக்காமல் சொந்த அக்கா பையனுக்கே கட்டிக் கொடுத்து தன் கண் பார்வையிலையே வைத்துக் கொண்டார் கர்ண விஜயேந்திரன்.

அவர்களுக்கு இரு செல்வங்கள் மூத்தவன் சீனு, இளையவள் ஆருத்ரா. சீனுக்கு படிப்பு சரியாக ஏறவில்லை. அரையும் குறையுமாக படிப்பை முடித்து  ஆதித்யாவின் பி.ஏ வாக இருக்க, ஆருத்ரா டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு சென்னையில் ஒரு மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கின்றாள்.

தேவசகாயம் கல்யாணம் செய்தது கர்ண விஜயேந்திரனின் நண்பனின் மகளை. பெயர் இளவரசி. பெயருக்கு ஏற்றது போல் அழகும், குணமும் கொண்ட மருமகள். அவர்களுக்கு ஆதித்யா மாத்திரமே வாரிசு.

ஐ.ஏ.ஸ் கனவோடு படித்து பட்டம் பெற்ற ஆதித்ய விஜயேந்திரனுக்கு முதல் போஸ்டிங் பஞ்சாபில் கிடைத்தது. ஆனால் வேலைக்கு சேரும் முன் தந்தை ஆக்சிடண்டில் இறந்து விட்ட செய்தி அவனை அடைய ஊர் வந்தவனுக்கு ஊர் பிரச்சினைகள் பெரிதாக தெரிய அரச பணியை விடுத்து ஊர் மக்களுக்காக வேலை செய்தான்.

தாத்தாவின் ஆலோசனை படி தேர்தலில் போட்டியும் இட்டு வாசுவின் தந்தையை தோற்கடித்து எம்.எல்.ஏ வாக பதவியேற்று அவன் நினைத்ததற்கு மேல் செய்து கொண்டிருக்கின்றான்.

தந்தையின் மரணத்தில் அவனுக்கும் நிறைய சந்தேகம் இருந்து கொண்டு தான் இருக்கிறது அதற்காக வாசுவின் தந்தை பச்சமுத்து இதை செய்திருப்பான் என்று அவனுக்கு தோன்றவில்லை. அவன் சந்தேகமெல்லாம் மினிஸ்டர் நல்லதம்பியின் மீதுதான் இருந்தது.

ஊருக்குள் இரண்டு டாஸ்மார்க் கடைகளை திறந்து வைத்திருப்பதும் அவரே. வித விதமான வெளி நாட்டு சரக்குகள், விலைக் கேத்தவாறு சின்ன சின்ன கேன்கள். போதாததுக்கு இது ஹெர்ட்டுக்கு நல்லதுன்னு விளம்பரம் வேறு.

“எல்லாம் அந்த மினிஸ்டர் சொல்லணும். விளம்பரங்களை பாத்து தானே நம்ம மக்கள் ஏமாந்து பூராத்தையும் வாங்குறாங்க”  சீனு எதோ யோசனையில் சொல்ல

“ஆமா அண்ணே முதல்ல இந்த டாஸ்மார்க் கடைகளை மூடனும் அப்போ தான் ஊர் உருப்படும்” தந்தையை தூற்றிக் கொண்டிருந்த வாசுவும் பேசிக் கொண்டிருந்த விஷயத்தை மறந்து ஊர் நலனுக்காக பேச

“ஊர் மக்களே கிளம்பிட்டாங்க இனி மூடு விழா தான். வாசு நீ என்ன பண்ண போற” ஆதித்யா அவனையே ஏறிட

நம்ம ஊர் மில்லுல கை நிறைய சம்பளம் கிடைக்குது ஆனா மனசுக்கு திருப்தியா இல்ல உங்க கூட இருந்து வேல பார்த்தா ஊருக்கு  நல்லது  செய்யிறோம் என்கிற மனத்திருப்தி இருக்கும்” சந்தோசமாக சொல்ல ஆதித்யா ஒரு தலையசைப்பில் சரி என்று விட

“யு ஆர் அப்பொய்ன்டெட்” சொல்லியவாறே சீனு கார் சாவியை வாசுவின் கையில் கொடுத்தான்.

சீனுவின் புறம் திரும்பிய ஆதித்யா “பொம்மு போன் பண்ணாளா? டைம் ஆச்சு”

பொம்மு என்று ஆதித்யாவால் செல்லமாக அழைக்கப்படும் ஆருத்ரா எந்தநாளும் காலையில் வீட்டாரோடு அலைபேசியில் பேசிவிடுவாள். அவளின் குரல் கேட்ட பின் தான் அவனால் தனது வேலைகளையே சரியாக பார்க்க முடிகிறது.

“ஆ அம்மா கூடயும் அத்த கூடயும் கொஞ்சிட்டு தாத்தா கூட பேசிகிட்டு இருக்கா” இங்கிருந்தவாறே வீட்டினுள் எட்டிப்பார்த்து சீனு சொல்ல ஆதித்யாவின் முகம் மலர்ந்தது.

“வாசு நீ வண்டிய ஸ்டார்ட் பண்ணு இப்போ வந்துடுறேன்’ என்று வீட்டின் உள்ளே சென்ற ஆதித்யா தாத்தாவிடம் இருந்து அலைபேசியை பெற்றுக் கொண்டு

“என்ன பொம்மு என்ன பண்ணுற? சாப்டியா? காலேஜ் போக ரெடியாகிட்டியா? படிப்பெல்லாம் எப்படி போகுது”

“போங்க மாமா எந்தநாளும் ஒரே கேள்வி கேக்கிக்குறீங்க, போரடிக்காதா உங்களுக்கு?” அந்த பக்கம் அவள் முகத்தை சுருக்குவது ஆதித்யாவின் கண்ணுக்குள் வந்து போக

“ரெட்டை ஜடையில் ஸ்கூல் போய் கிட்டு இருந்த இப்போ காலேஜ் போற, ஆனாலும் சாப்பிடுறது, தூங்குறத தவிர மத்ததெல்லாம் நியாபகப் படுத்த வேண்டி இருக்கு, உனக்கு ஒரு ஸ்ரிக்ட் மிலிட்டரி ஆபிசரத்தான் கட்டி வைக்கணும்” 

“அந்த ஆபிசரையே சாப்பாட்டுராமன் ஆக்கிடுவா” சீனு கவுண்டர் கொடுக்க

“படிப்பெல்லாம் நல்லா போகுது மாமா ஒன்னும் பிரச்சினையில்ல” அதன் பின் அரை மணித்தியாளமாக அவர்களின் பேச்சு நீண்டது.

ஆதித்யாவின் தந்தையின் திடீர் மரணத்தால் மயங்கி விழுந்த இளவரசி பக்கவாதத்த்தில் விழுந்தார். ஒரே மகனின் இறப்பு கர்ண விஜயேந்திரனையும் நிலைகுலையச்  செய்ய மேனகையும் அழுது கொண்டே இருக்க, வீட்டாரை தங்கியது ஆதித்யாவின் பாட்டியும் கர்ண விஜயேந்திரனின் மனைவியும் ஆன வரளி நாயகி.

பெயருக்கு ஏற்றது போல் மதி முகம் தான் ஆனால் உள்ளமோ எதையும் தாங்கும் இதயம். அந்த ஜமீன் பொறுப்பு முழுக்க இவர் கை வசம் இருக்க, எல்லா முடிவுகளையும் அவரே எடுப்பார்.

“என்ன சொல்லுறா என் பேத்தி” என்றவாறே சாப்பாட்டு மேசையில் அமர்ந்தவர் கணவனுக்கு பரிமாற

“பரீட்ச்சை முடிஞ்சி லீவு விட்டா ஊருக்கு வருவாளாம்” சொல்லியவாறே மேனகை சக்கரவர்த்திக்கு பரிமாற  

” ஆதியோட ஜாதகம் படி இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள கல்யாணம் பண்ணனும். ஆதிக்கும் ஆருக்கும் சீக்கிரம் கல்யாணத்த பண்ணனும். நடக்க வேண்டியதெல்லாம் காலா காலத்துல நடக்கணும்ல. ஆதி கிட்ட கேட்டா ஆரு படிப்பு முடியட்டும் னு சொல்லுறான்” வரளி நாயகி கணவனை பார்த்து கண்களாளேயே “நீங்க தான் அவன் கிட்ட பேசணும்” என்று உத்தரவு விட

“பாட்டி அப்படியே எனக்கும் ஒரு நல்ல பொண்ணா பாத்து…” சீனு இழுக்க

“முதல்ல உன் தங்கச்சி கல்யாணம் முடியட்டும்” கறாராக ஒலித்தது அவரின் குரல்

“சரி” பாட்டி என்று சீனுவின் குரல் சொன்னாலும் மனமோ “நா னா போய் பொண்ணு தேட வழி இல்லனு நீங்க பாருங்கன்னு சொன்னா.. சரிடா பேராண்டி னு இன்முகமா சொல்லாம,  அதென்னனு அது தங்கச்சி கல்யாணம் முடியட்டும் னு சொல்லுறாங்க, வரிசையா தங்கச்சிங்க இருக்குற அண்ணன்க பாவம் பா. நல்ல வேல எங்கப்பன் ரெண்டொடு நிறுத்தி கிட்டான்”

“மேனகா அண்ணிக்கு சாப்பாடு கொடுத்தியா?” அவரின் குரலில் திரு திருவென மேனகை முழிக்க

“ஆதி ஊட்டுறான் பாட்டி” மனதை அடக்கிய சீனு அன்னையை காப்பாற்ற

“ஒருவேல பொறுப்பா பாக்குறியா?” மகளை கடிந்தவர் கணவர்  சாப்பிட்டு எழுந்த உடனே அதே தட்டில் பரிமாறிக் கொள்ள ஆதித்யாயும் வந்து சேர்ந்தான்.

ஆதித்யாவுக்கும் பரிமாறியவர் “குலதெய்வத்துக்கு ஒரு பூஜை செய்யணும் ஏற்பாடு பண்ணிடு ராசா”

“என்ன பூஜா பாட்டி” ஆதித்யாவும் தெரியாமல் கேட்டு விட

“எல்லாம் உன் கல்யாணம் சீக்கிரம் நல்ல படியா நடக்கணும் தான் ராசா”

அவரின் முகம் கொள்ளா புன்னகையில் அவரின் மனதை கஷ்டப்படுத்த விரும்பாமல்

“பூஜைக்கு ஏற்பாடு செய்யிறேன் பாட்டி”

அவர் கல்யாணத்தை பற்றி வேறேதாவது பேசி விடுவாரோ என்று அஞ்சி

 “சீனு வெளிய வாசு நிக்கிறான் சாப்பிட்டானான்னு தெரியல கொஞ்சம் பாரேன்” ஆதித்யா சீனுவுக்கு உத்தர விட

“யாரு அந்த பச்சை முத்து மவன் தானே! சாப்பிட சொல்லிட்டேன்” வரளி பாட்டி தான் பதில் சொன்னார்.

வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பிட கொடுக்காமல் அனுப்ப மாட்டார் அவர். வீட்டு வேலை செய்பவர்களை கூட நேரத்துக்கு சாப்பிட சொல்லி உத்தரவாக  சொல்லி இருக்கிறார். எந்த வேல பாத்தாவது சம்பாதிக்கிறது ஒரு சாண் வயிற்ருக்குத்தானே! பாக்குற வேலையை சாப்பிட்டுட்டு பாருங்க. இதுதான் அவர் கொள்கை.

அவர் பெயரில் ஒரு மாங்காய் தோட்டமே இருக்க, அதில் வரும் வருமானம் முழுக்க ஊரில் உள்ள ஏழை பெண்களின் கல்யாண செலவுக்கென்று ஒதுக்கி விடுவார். எந்த வீட்டில் வயதுக்கு வந்த பெண் கல்யாணத்துக்கு தயாராகி நிக்கிறாள். யாருக்கு எவ்வளவு கொடுத்தா போதும் என்ற அளவுக்கு அவர்களின் வீட்டு நிலைமைகளை தனது விரல் நுனியில் வைத்திருப்பவர் வரளி நாயகி.

ஊரும், மக்களும் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இருந்தா போதும் என்று நினைக்கும் ஜமீன் பரம்பரையாயிர்றே!

வண்டியில் அமர்ந்த ஆதித்யாவின் சிந்தனையெல்லாம் ஆருத்ராவிடம் பேச வேண்டும் என்றிருக்க அவளும் “மாமா உங்க கிட்ட ஒன்னு சொல்லணும். போன் ல எல்லாம் சொல்ல முடியாது. ஊருக்கு வந்தா பாட்டி உங்க கிட்ட தனியா பேசவே விட மாட்டாங்க. நீங்க சென்னை கிளம்பி வாரீங்களா?” என்று கோரிக்கை விடுத்திருக்க, அவனுக்கும் சென்னையில் கட்ச்சி மீட்டிங் இருப்பதால் அவளை அடுத்த வாரம் வந்து சந்திப்பதாக சொல்லி இருந்தான்.

ஆதித்யா வரளி பாட்டி சொல்வதை கேட்டு ஆருத்ராவை கல்யாணம் செய்ய சம்மதிப்பானா? ஆருத்ரா தனியாக சந்தித்து ஆதித்யாவிடம் என்ன சொல்ல காத்திருக்கின்றாளோ!

Advertisement