Advertisement

அத்தியாயம் 27

யாழிசையின் திருமணம் அவசரமாக நடந்ததால் முறைப்படி எதுவும் செய்ய முடியவில்லை என்ற மனக்குறை மங்கம்மாவின் மனதில் இருந்து கொண்டே இருக்க, ரிஷியின் குடும்பத்தாரை முறைப்படி கல்யாணத்துக்கு அழைக்க பாக்கு, வெத்திலை பழங்கள் என்று கொண்டு சென்று பத்திரிகை வைத்து அமர்க்கள படுத்தி விட்டாள்.

“என்ன சம்மந்தி நாம ஒண்ணுக்குள்ள ஒன்னாகிட்டோம் எதுக்கு இதெல்லாம்” சரவணகுமரன் மறுக்க,

“இல்ல சம்மந்தி யாழ் கல்யாணத்த சிறப்பா செய்யணும் னு நினச்சேன். அன்னைக்கி இருந்த சூழலால் அவசரகதியில் கல்யாணம் நடந்தது. நீங்க யாருமே இல்லை. என்ன இருந்தாலும் யாழ் உங்க வீட்டு பொண்ணு. அதான் கடவுள் அவ கல்யாணத்த உங்க பையன் கூட முடிச்சு போட்டுட்டான். என்னால முடிஞ்ச எல்லாத்தையும் அவளுக்காக செஞ்சேன். அவளுக்கு நா அதிகம் செல்லம் கொடுக்காம, ரொம்ப கண்டிப்போடு தான் வளர்த்தேன். எல்லா வேலையும் அவ கத்துக்கணும் னு எனக்கு தெரிஞ்ச எல்லாமே சொல்லிக் கொடுத்தேன்.

இயல் உண்டான போ ஆண் குழந்தையா இருக்கணும் னு வேண்டுதல் கூட வச்சேன்.  பொண்ணு பொறந்தா யாழ நா  ஒழுங்கா பாத்துக்க மாட்டேன்னு என் புருஷனே ஒரு தடவ சொல்லிட்டாரு. அது என் மனசுல நெருஞ்சி முள்ளா குத்திக் கிட்டே இருந்தது.  நாளை பின்ன அவளை கல்யாணம் பண்ணி கொடுக்கும் போது யாரோ பெத்த பிள்ளை அதான் கண்ட படி வளத்துட்டாங்க னு என் அண்ணி சொல்லிட கூடாது. ஏனென்றா அவளை வளக்குறதுல அவங்களுக்கும் எனக்கும் பெரிய சண்டையே வந்தது. 

 என் புருசனுக்கு இருக்குற ஒரே கெட்ட பழக்கம் சூதாட்டம். ரெண்டு  பொண்ணுகளை எப்படி கரைசேர்க்க போறேனோ என்கிற பயத்துலையே!  காச எப்படி சேமிக்கணும் னு தான் யோசிச்சேன் ஒழிய ஆடம்பர செலவு செய்யல. அவ தைச்சு சேர்த்த காசையும், இந்த வீட்டை வாடகைக்கு  விட்ட காசையும் அவ பேர்ல தான் போட்டு வச்சிருக்கேன்” கலங்கிய கண்களை துடைத்தவாறே மங்கம்மா சொல்ல அவளை கட்டிக் கொண்டாள் கயல்விழி.

மங்கம்மா கண்டிப்பானவள். இயலை வேலை வாங்காது தன்னை மட்டும் வேலை வாங்குவாள். உடை கூட தனக்கு பிடித்தது இல்லாமல் அம்மா சொல்வதையே உடுத்த வேண்டும் என்ற மனக்குறை யாழிசைக்கு இருந்து கொண்டே தான் இருந்தது. அந்த உடையெல்லாம் உடம்பை நன்றாக மறைத்து யார் கண்ணையும் அதிகம் கவரும் வண்ணத்தில் இருந்ததில்லை. அதற்க்கு பின்னால் எவ்வளவு காரணங்கள் இருக்கும் என்று யாழ்  யோசிக்கவில்லை. பாசம் வைப்பதை வார்த்தை கொண்டு வடிவம் கொடுப்பது ஒரு விதம் என்றால், செயலால் காட்டுவதும் ஒரு விதம். மங்கம்மா இரண்டாம் ரகம்.

வைகாசியில் முதல் வாரத்தில் இயல், தனா கல்யாணம் என்று முடிவு செய்யப்பட சித்திரை புத்தாண்டு முடிந்து மூன்றாம் நாள் ரிஷி மும்பாய் கிளம்ப வேண்டி இருந்தது. யாழிசையோடு மனம் திறந்து பேசாமல் செல்வது ரிஷிக்கு ஏதோ போல் இருந்தாலும் அவளின் ஒதுக்கத்துக்கான காரணம் புரியாமல் தடுமாறியவன் அவசர வேலையாக செல்ல வேண்டியதால் வந்து பேசிக்கலாம் என்று நினைத்தான்.

பிரதீபன் உடனே வருமாறு கூறவும் அமுதனை அனுப்பவா என்றும் ரிஷி கேட்டுப் பார்க்க, “அமுதனுக்கு சரியான விவரம் தெரியாது நீயே வா” என்று பிரதீபன் சொல்ல

“நா செத்து போய் இருந்தா என்ன பண்ணி இருப்ப” ரிஷி கடுப்பாக போனை அமர்த்தியிருந்தான் பிரதீபன்.

ரிஷிக்குமே புரிந்தது தான் கொஞ்சம் கடுமையாக பேசிவிட்டோம். காரணமில்லாமல் பிரதீபன் வர சொல்ல மாட்டான் என்று. அதனாலயே அவசரமாக கிளம்பினான். அவன் செல்வது குடும்பத்தார் அனைவருக்கும் கவலையை கொடுக்க,

“அப்படி என்ன அவசர வேலையா இருக்கும். பிரதீபன் அண்ணாவால் சமாளிக்க முடியாமல் போக” யாழிசையின் சிந்தனை அவ்வாறிருக்க ப்ரதீபனை அழைத்து பேசியவள் ரிஷி சென்று ப்ரதீபனோடு வரட்டும் என்று வீட்டாரை சமாதானப் படுத்த

“இப்போ தான் உடம்பு தேறி இருக்கான். அதுக்குள்ள வேல, வேல னு அலையணுமா?” சரவணகுமரன் வினவ

“என்ன மாப்புள கல்யாணம் கிட்டாளா இருக்கும் போது இப்படி திடுதிடுப்புன்னு போறீங்க?” யோகராஜ் வருத்தமாக சொல்ல

“ஒரு அவசர வேல மாமா நான் போயே ஆகணும். வேல முடிஞ்ச உடன் ப்ரதீபனையும் கூட்டிக் கிட்டு வந்துடுறேன்” ரிஷி புன்னகைக்க

“குடும்பத்து மூத்த மாப்புள நீங்க இருந்துதான் எல்லா வேலையும் பார்க்கணும்” மங்கம்மாவும் தன் கவலையை சொல்ல

“அதான் அமுதன் இருக்கானே! என் சார்பா அவனே எல்லா வேலையையும் பார்த்துப்பான்” இன்முகமாக சொன்னவன் கயல்விழியின் முகம் பார்க்க அவளோ அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

மனைவியின் நடவடிக்கையை புரியாது பாத்திருந்தான் ரிஷி. சற்று நேரத்துக்கு முன்னாள் வீட்டாரை சமாதானப்படுத்தியவள் முறைத்துக் கொண்டிருக்க,  அவள் அருகில் சென்று சமாதானமாக பேசப் போக ஸ்ரீராமை தூக்கிக் கொண்டு அறையினுள் புகுந்து கதைவடைத்துக் கொண்டாள்.

விமானத்துக்கு நேரமாகவே அனைவரிடமும் விடைபெற்று சென்ற ரிஷி வேலைகளினூடே அலைபேசியில் யாழிசையை தொடர்ப்பு கொள்ள அவளோ ஸ்ரீராமிடம் அலைபேசியை கொடுத்து விடுவாள். மனையாளின் கோபம் புரியாமல் ஒரு பெருமூச்சுடன் நாட்களை கடத்தினான் ரிஷி.

கல்யாணத்துக்கு மூன்று நாள் இருக்கும் பொழுது ப்ரதீபனும், ரிஷியும் வந்து சேர்ந்தார்கள். அவன் இல்லாத நாட்களில் முகம் வாடியிருந்த கயல் அவனை கண்ட பின்னே முகம் மலரலானாள். அமுதன் கூட அவளை ஓட்டி எடுத்து விட்டான். அவளுக்கும் தான் ரிஷியிடம் என்ன எதிர்பார்க்கின்றோம் என்று புரியவில்லை. அவனில்லாத வாழ்க்கையை நினைத்தும் பார்க்க முடியவில்லை. ஆனால் அவனை நெருங்கத்தான் மனம் இடம் தராமல் முரண்டியது.

அமுதன் சொன்னதை கேட்டு மனையாளின் முகம் பார்த்த ரிஷிக்குமே புரிந்து போனது, அவனை பாராது அவளும் தான் தன்னை வருத்திக் கொண்டிருந்திருக்கின்றாள் என்று. மும்பையில் இருக்கும் போது அவளோடு வாழ்ந்த நாட்களையும், அவளின் விருப்பு, வெறுப்பு என்பவற்றை நினைத்து பார்த்தவனுக்கு அவள் எதை மனதில் போட்டு குழம்பிக்  கொண்டிருக்கின்றாள் என்று மூளையில் பொறி தட்ட அவளோடு மனம் விட்டு பேசினாலே எல்லாம் சரியாகிடும் என்ற நம்பிக்கை அவனுள் இருக்க, தனியாக பேசத்தான் சந்தர்ப்பமும், அதற்கான சூழலும் அமையவில்லை.

“சம்மந்தி யாழுக்கு தாலிபெருக்கும் சடங்கையும் பண்ணனும். கல்யாணம் முடிந்த மறுநாளும் நல்ல நாள் தான் அன்னைக்கே வச்சிப்போமா?” சீதா சிவரஞ்சனியை கேக்க

“எனக்கு கல்யாணமாகி ஐஞ்சு வருஷமாகிருச்சு. இப்போ எதுக்கு இதெல்லாம்” யாழிசை உடனே மறுக்க,

“அன்னக்கி கட்டின கயிறுதான் இன்னமும் உன் கழுத்துல தொங்கிட்டு இருக்கு. ஏதோ உன் மாங்கல்ய பாக்கியம் உன் புருஷன் உயிரை காப்பாத்திருச்சு. ஐஞ்சு வருஷமா கயிறும் அறுந்து போகாம இருக்கு. ஸ்ரீராம் பிடிச்சு இளுத்தாவே கையோட வந்துடும். சம்மந்திகளும் உங்க  கல்யாணத்தக பார்த்த மாதிரி இருக்கும் யாழ்மா” என்று சீதா அவளின் கன்னத்தை தடவ சிவரஞ்சனியின் ஏக்க பார்வையை கண்ட பின் கயல் மறுத்து பேச வாய் திறக்கவில்லை.

அனைவரும் கலந்தாலோசித்து இயல், தனா கல்யாணம் முடிந்து இரண்டு நாளில் தாலிபெருக்கும் சடங்கை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட ரிஷியோ அதற்க்கு முன் எப்படியாவது கயலோடு பேசி விடவேண்டும் என்ற முடிவோடிருந்தான்.

சீதாவின் வீட்டின் முன் பந்தல் போட்டு பந்தக்கால் வைபவம் சிறப்பாக நடந்துக்க கொண்டிருந்தது.

“டேய் தனா இனி கல்யாணம் முடியும் வர வீட்டை விட்டு வெளிய போக கூடாது” அமுதன் மிரட்டும் குரலில் சொல்ல

வேட்டியை மடித்துக் கட்டிக்க கொண்டு மீசையை முறிக்கியவாறே “நா ஆம்புள சிங்கம் எங்கவேனாலும் போவேன்” தனா வீர வசனம் பேச அங்கே வந்த ரிஷி மற்றும் ப்ரதீபனை கண்டு நலம் விசாரித்து அவனிடமும் வம்பு வளர்த்தவர்கள்  பேச்சு அடுத்து யாருக்கு கல்யாணம் என்றதில் வந்து நின்றது.

அமுதனை விட பிரதீபன் ஒரு வருடம் பெரியவன் என்றதும் ப்ரதீபனுக்குத்தான் முதலில் கல்யாணம் பண்ணனும் என்று பெரியவர்கள் பேசிக் கொள்ள

“திலகா அத்த ஒரே பொண்ண பெத்தாங்க அவளை எங்கண்ணன் கரெக்ட் பண்ணிட்டான். மங்கா அத்த பொண்ண தனா கல்யாணம் பண்ண போறான் எனக்கே அத்த பொண்ணு இல்லாம நா திண்டாடுறேன். என்ன கவனிக்க யாருமில்ல” அமுதன் சோகமான குரலில் சொல்ல

“பிரதீபன் அண்ணாக்கு நா ஏற்கனவே பொண்ணு பார்த்துட்டேன். அமுதன் அத்தான் உங்களுக்கு பொண்ணு வேணா நா பார்க்கட்டுமா?” என்றவாறு குளிர் பண குவளைகளோடு வந்த யாழிசை அனைவருக்கும் கொடுக்க ரிஷி மனைவியை தான் பாத்திருந்தான்.

“அவன் அப்படித்தான் சைட் அடிப்பான் நாம கேட்டா எடக்கு மடக்கா ஏதாச்சும் சொல்லுவான்” ப்ரதீபனின் காதை கடித்த அமுதன் குளிர்பானத்தை அருந்த,

“யாரு பொண்ணு ஒரு வேல உன் அண்ணனுக்கு சொந்தத்துலையே பொண்ணு பார்த்து இருக்கியா?” இளவேந்தன் யோசனைக்குள்ளாக

“ஒருவேளை அகல்யாவை சொல்கிறாளா? அவளுக்கு இப்போ தானே இருப்பது வயது ஆரம்பிக்குது.   ப்ரதீபனுக்கு முப்பது இது சரிப்பட்டு வருமா?  ” என்று அமுதன் ரிஷியை பார்க்க “உயிர் நண்பன்னு சொல்லுறேன் எனக்கு இது தோணலையே! இவ பேசினா யாரும் மறுக்க மாட்டாங்க” என்றவனின் பார்வை மனைவியின் மீதே இருந்தது.

“இந்த கல்யாணம் எல்லாம் எனக்கு செட் ஆகாது என்ன விடு தாயே” பிரதீபன் கையெடுத்துக் கும்பிட

“செட் ஆகாது எண்றவங்கதான் பொண்டாட்டி பின்னாடியே நூல் பிடிச்சி கிட்டு அலையிறாங்க” அமுதன் ரிஷியை கண்ணால் காட்டி சொல்ல யாழிசையின் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.

“மிங்கிள் ஆகணும் னு நினைக்கிற என்னையெல்லாம் விட்டுட்டு முரட்டு சிங்கள மிங்கிள் ஆக்க இவ்வளவு மெனக்கிடணுமா? என் கிட்ட கேட்டா உடனே சரி னு சொல்வேன். இந்த தனா பய என்ன விட சின்னவன் அவனுக்கெல்லாம் கல்யாணம் ஆகா போகுது எங்க இந்த சிவா… கொஞ்சம் பையன் கல்யாணத்த  பத்தி யோசிக்க வேணாமா?” அமுதன் பெருமூச்சு விட

 அவன் சொல்வதை கேட்டுக் கொண்டே வந்த சிவரஞ்சனி “நா இல்லாத இடத்துல இப்படித்தான் என் பேர ஏலம் போடுவியா” என்றவர் அமுதனின் காதை திருகி விட்டு செல்ல

“கரெக்டா என்ட்ரி கொடுக்குறதுல எங்கம்மாவை மிஞ்சவே முடியாது” என்றவன் காதை தடவிக் கொண்டான்.

“அண்ணா என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கு தானே! நா சொல்லுற பொண்ண கட்டிப்பீங்க தானே” கயல்விழி ப்ரதீபனின் கண் பார்த்து கேக்க அவள் வார்த்தையில் கட்டுண்டவனின் தலை தானாக ஆடியது.

“சிக்கிட்டாண்டா. எவ வந்து இவன் லைஃப்புல கும்மி அடிக்க போறாளோ” அமுதன் சிரிக்க

“அம்மு இவ்வளவு உறுதியா சொல்லுறான்னா கண்டிப்பா அவ எண்ணத்துல ஒரு பொண்ணு இருக்கா. யாரா இருக்கும் யோசனையில் விழுந்தான் பிரதீபன்.

விடிவெள்ளியும் விடை கொடுக்க, இதமான தென்றல் இரத்தினபுரியில் வீச, காலநிலை இன்று கதிரவனோடுதான் என்று  அழகாக விடிந்தது இயல், தனா கல்யாண நாள்.

வாசலில் கட்டியிருந்த வாழைமரமும், மாவிலைத் தோரணங்களும், இங்குமங்குமாக ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்த கல்யாணத்துக்கு வருகைதந்திருந்த சொந்தக்கார குழந்தைகள் ஒருபக்கம். சாவதானமாக அமர்ந்து காபி, டி என்று தங்களுக்கு பிடித்ததை அருந்தியவாறு,  பழங்கதைகளையும், அரசியல், வியாபாரம் எனக் கலவையான விஷயங்களையும் சேர்த்து அசைபோட்டபடி கதை பேசிக் கொண்டிருந்த வயதான ஆண்கள். கனமான பட்டுப்புடவை சரசரக்க சிரிப்பும், கிண்டலுமாக வளவளத்தபடி, காலை ஒன்பது மணிக்கு முகூர்த்தம் என்பதால் வேலைகளை பிரித்து பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டு சுற்றுப்புறத்தை இனிமையாக்கிக் கொண்டு ஆளுக்கொரு வேலையை செய்து கொண்டிருந்த உறவுக்கார பெண்கள், கைகளில் மருதாணி இட்டு, தாவணி, சுடிதார், டிசைனர் சாரி என்று  வளம் வந்து கொண்டிருந்தனர் யுவதிகள். யுவதிகளை, வம்பிழுத்துக்கொண்டும், சைட் அடித்துக் கொண்டும் வேட்டி சட்டியில்  மணமகனை   போன்று இளைனர்கள்   என்று அந்தக் கல்யாண வீடே கலகலத்துக் கொண்டிருந்தது.

கல்யாணம் கோவிலில் நடைபெறுவதால் பாதி பேர் கோவிலுக்கு சென்றிருக்க, இயலோடு செல்ல யாழிசையும், அகல்யாவும் தயாராகிக் கொண்டிருக்க, அவர்களை நான் அழைத்து வருகிறேன் என்று ரிஷி வாசல் சோபாவில் சட்டமாக அமர்ந்திருந்தான்.

இளநீல நிற பட்டில் கொண்டையிட்டு, தங்கமும் வைரமும் ஜொலிக்க யாழிசை தயாராகி வர அவளை கதவருகிலையே வழி மரித்திருந்தான் ரிஷி. 

“ஹாய் பொண்டாட்டி என்னைக்கியும்  இல்லாம இன்னைக்கி செம்ம அழகா இருக்க, உன்ன மீண்டும் கல்யாணம் பண்ணிக்க சொல்லி என் மனசு அடிக்குது” என்றவன் உள்ளங்கையை மடக்கி நெஞ்சின் மீதே அடித்துக் கொள்ள

அவனை திகைத்து விழித்த கயல்விழி “என்னாச்சு உங்களுக்கு” என்றவாறே இது ரிஷியா? அமுதனா? என்று சந்தேகமாக பார்த்திருக்க

“ஐயோ இப்படி பாத்தா நா உன்ன கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணிடுவேண்டி” என்றவாறே அவள் கன்னத்தில் முத்தம் வைக்க மேலும் அதிர்ந்தாள் கயல்விழி.

ஒருநாளும் இல்லாமல் ரிஷி நடந்துக்க கொள்ளும் விதம் அவள் இதயத்துடிப்பை எகிற வைத்துக் கொண்டிருக்க, முத்தமிட்டதில் மேனி நடுங்கியவாறே சுற்றும் முற்றும் பார்க்க அங்கே யாருமில்லை என்றதும் ஆசுவாசமடைந்தவள் “உங்களுக்கு என்னமோ ஆச்சு” என்றவள் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டு முன்னாள் நடக்க,

“ஆமாண்டி காத்து கறுப்புக்கு பதிலா காதல் காத்து அடிச்சிருச்சு” என்றவன் கண்ணடித்து சிரிக்க அவனை திரும்பி ஒரு புரியாத பார்வை பார்த்தவாறே தலையை உலுக்கியவள் முன்னேற “வார் பேபி பொறுமையா போனா நீ ஓவரா பண்ணுற உனக்கெல்லாம் அதிரடிதான் ஒர்கோட் ஆகும்” முணுமுணுத்தவன் அவளை பின் தொடர்ந்தான்.

இவர்கள் மண்டபத்தையடைய தானா மணவறையில் அமர்ந்து மந்திரம் ஓதிக் கொண்டிருந்தான். அவன் கண்களோ இயல் வரும் திசையில் இருக்க அமுதனோடு சேர்ந்து இளசுகள் அவனை ஓட்டிக் கொண்டிருந்தனர்.

முகூர்த்த நேரம் நெருங்க அய்யர் பெண்ணை அழைத்து வரும் படி சொல்ல தலை குனிந்தவாறே வந்த இயலும் தானாவின் அருகில் அமர சொந்த பந்தங்கள் அர்ச்சத்தை தூவி வாழ்த்த மூன்று முடிச்சிட்டு இயலை தனது சரிபாதியாக்கிக் கொண்டான் தனவேந்தன்.

ரிஷியோ தனது கையில் இருந்த பூவை மனைவியின் மேல் தூவ அதே நேரம் அவளும் அவன் புறம் திரும்ப கண்ணடித்தவன் “நாளைக்கு நமக்கு” என்று கையால் செய்கை செய்ய இவர்களை எதேர்ச்சையாக திரும்பிப் பார்த்த அமுதன் தலையில் அடித்துக் கொண்டு ப்ரதீபனுக்கு காட்ட ரிஷியின் மாற்றம் அவனுக்கும் சிரிப்பை மூட்டியது. 

அதன் பின் சடங்கு, சம்ரதாயம் என்று நேரம் செல்ல நேரம் இறக்கை கட்டி பறக்க தானா இயலுக்கான முதலிரவு அறையை தயார் செய்தனர் அமுதன்,ரிஷி, இளா மற்றும் பிரதீபன்.

“நமக்கு இன்னும் கல்யாணம் ஆகல அடுத்து உனக்குத்தான் பிரதீபா ரிஷி கிட்ட டிப்ஸ் கேட்டுக்க, இளா வேற இருக்கான்” அமுதன் அவன் ஆட்டத்தை ஆரம்பிக்க

“மறந்தும் தண்ணி மட்டும் குடிச்சிடாத” என்று ஆரம்பித்த ரிஷி தனக்கு நடந்ததை சொல்ல விழுந்து விழுந்து சிரித்தனர் மற்றவர்கள். 

“தனாக்கு என்ன செஞ்சி வச்சிருக்காங்களோ” என்றவாறே அனைவரும் அறையிலிருந்து வெளியே வர

“பத்து மணியாச்சு பா.. முதல்ல போய் சாப்பிடுங்க, நீங்க மூணு பெரும் கீழ உள்ள அறைல தங்கிக்கோங்க கல்யாணத்துக்கு வந்த கொஞ்சம் பேர் மத்த அறைகளுள  தூங்குறாங்க” சொல்லியவாறே சிவரஞ்சனி நகர

“அம்மா கயல் எங்க?” ரிஷி தன்னை அன்னை என்று அழைத்ததும் ஆனந்தக்  கண்ணீரோடு அவன் புறம் திரும்பியவர் வாஞ்சையாக கன்னம் தடவியவாறே

“ஸ்ரீராம் அலட்டிக்கிட்டே இருந்தான் அவனை தூக்கிக்கி கிட்டு அந்த வீட்டுக்கு போனா பா” அவர் சொல்லி முடிக்கும் முன் மனைவியை தேடி ஓடாத குறையாக நடக்கலானான் ரிஷி. 

Advertisement