Advertisement

அத்தியாயம் 25

அந்த நவீன மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவின் முன் கயல்விழி விம்மி, விம்மி அழுது கொண்டிருக்க,  ப்ரதீபனும், அமுதனும் இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தனர்.  

ரிஷி மயங்கி விழவும் கயல்விழி கத்த என்ன? ஏதோ? என்று அனைவரும் ஓடி வர ரிஷி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டான். அவன் மயங்கி விழுந்ததிலிருந்து இப்போது வரை கயல் அழுது கொண்டு தான் இருக்கின்றாள். அவளை தேற்ற யாரும் நெருங்கவில்லை. என்ன சொல்லி தேற்றுவது? ரிஷி இன்னும் கொஞ்ச நாட்களில் இறந்து விடுவான் என்றா?

ரிஷிக்கு ஏதோ பிரச்சினை என்று கயலுக்கு புரிந்தாலும் அதை பற்றி கேட்கத்தான் அவளுக்கு தைரியம் வரவில்லை. தான் அதிகப்படியாக பேசி விட்டதால் தான் கணவன் மயங்கி விழுந்தான். அவனுக்கு ஏதாவது நடந்தால் தன்னால் தான் என்று அந்த பேதை பெண் நினைத்து நினைத்து அழுது  கரையலானாள். 

“உடனே ஆபரேஷன் பண்ணனும்” தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே வந்த டாக்டர் அஜய் படேலா புருவம் உயர்த்தியவாறே “இரத்த கட்டியிலிருந்து இரத்தம் கசிய ஆரம்பிச்சு இருக்கு, உடனே ஆபரேஷன் செய்யணும். அமெரிக்க டாக்டரான நியூராலஜிஸ்ட் டாக்டர் அன்றோ தாமஸ் டில்லி வந்திருக்கிறார். அவர் கூட டிஸ்கஸ் பண்ணியத்துல அவர் இந்த ஆபரேஷனை பண்ண ஒத்து கிட்டாரு. ப்ரெய் போர் கோட்” என்றவர் மீண்டும் உள்ளே நுழைந்தார்.

ப்ரதீபனின் முகத்தில் சிறு நம்பிக்கை கீற்று தோன்ற, அமுதனும் நிம்மதி பெருமூச்சு விடலானான். கயல்விழி அவர்களை புரியாது பார்க்க,

“குட்டிமா ரிஷிக்கு இனி ஒன்னும் ஆகாது” என்றவாறே அவள் கண்ணீரை துடைத்து விட்டான் பிரதீபன்.

அன்று டாக்டர் அஜய் சொன்னது ஆக்சிடண்ட்டுல தல எதுலயோ பலமா மோதியதால் அந்த இடத்துல இரத்தம் கட்டியாகி இருக்கு. அவர் கோமால இருந்த வரைக்கும் பிரச்சினை இல்லை. எப்போ கண்ணு முழிச்சி நடமாட ஆரம்பிச்சாரோ! மூளைக்கு இரத்த ஓட்டம் போகும் போது, அவர் அதிகம் யோசிக்கும் போது, அதிர்ச்சியடையும் போது மூளை அன்பேலன்ஸ் ஆகி செயல் திறனை இழந்து அவர் மயக்கத்துக்கு போய்டுறாரு. அதனால அவரை அதிக நேரம் தூக்க நிலையில்தான் வைத்திருக்க வேண்டி இருக்கு. ஒரு மனிதன் எவ்வளவு காலம் தூங்கி கிட்டே இருக்க முடியும்? பழசை மறந்ததால் அவரின் மூளையின் தேடல்களும் அதிகம். முழிச்சி கிட்டு இருந்தா அதிகம் மூளைக்கு வேல கொடுக்குறாரு. கொஞ்சம் கொஞ்சமா பழைய நினைவுகள் வேற வர ஆரம்பித்ததால் அதிகமா ஸ்ட்ரெஸ் ஆகுறாரு. இட்ஸ் எ ஹியுஜ் ப்ரோப்லம்.  அதனால மூளைக்கு அதிகம் இரத்த ஓட்டம் செல்லுது. இதனால அந்த இரத்த கட்டி வெடிக்க வாய்ப்பிருக்கு. அப்படி ஆனா மரணம் தான்”

“ஆபரேஷன் பண்ணி அகற்ற முடியாதா” தீராத தலைவலி நொடியில் ஏற்பட பிரதீபன் நெற்றியை தடவியவாறே அவரின் முகம் பார்க்க

ஒரு  பெருமூச்சை இழுத்து விட்டவர் “அதை அகற்றுவது  அவ்வளவு சுலபமில்லை. பத்து வீதம் தான் உயிர் பிழைக்கும் வாய்ப்பிருக்கிறது” ப்ரதீபனின் தோளில் தட்டியவர் அகன்று விட தீராத தலைவலியோடு வீடு சென்றான்.

இன்று அவரே ஒரு எதிர்பார்ப்போடு சொல்ல நிம்மதியடைந்தவன், கயல்விழிக்கு ரிஷியின் நிலைமையையும், நடக்க போகும் அறுவை சிகிச்சை பற்றியும் தெளிவாக கூற ஒரு கையால் தாலியை இறுகப் பற்றியவாறே மறு கையால் கண்களை துடைத்துக் கொண்டவள்

“அவருக்கு ஒன்னும் ஆகாது. நான் கும்புடுற கடவுள் என்னை கை விட மாட்டான்” என்றவள் உடனடியாக திருகோணமலை கோணேஸ்வர கோவிலில் வீற்றிருக்கும் சிவனுக்கு நேர்ச்சை வைத்தாள். 

டாக்டர் அன்றோ தாமஸ் டில்லியிலிருந்து உடனடியாக மும்பை வந்து விட ரிஷியின் அறுவை சிகிச்சை ஆரம்பமானது. கொஞ்சம் சிக்கலான அறுவை சிகிச்சையாயினும். டாக்டர் அஜய்க்கு டாக்டர் அன்றோ மீது அபார நம்பிக்கை இருந்தது. ஆறு மணித்தியாலங்களாக நடந்த அறுவை சிகிச்சையில் தனது இன்னொமொரு நோயாளியை காப்பாற்றி விட்ட பூரிப்பில் வெளியே வந்த டாக்டர் அன்றோ ஒரு சிறிய தலையசைப்பில் அனைவரிடமும் விடை பெற டாக்டர் அஜய் பேசினார்.

“அவரோட நல்ல நேரம் டாக்டர் அன்றோ சம்மதிச்சு உடனே வந்தது. உயிருக்கு ஒன்னும் ஆபத்தில்லை. ஆனா அவர் கண்ணு முழிச்சா தான் எதுவானாலும் சொல்ல முடியும். மூளை என்கிறது ரொம்ப சென்சிடிவ் இல்லையா? கோமால வேற இருந்ததால, பக்கவாதம் இதுமாதிரி ஏதாவது ஏற்பட வாய்ப்பிருக்கானு பாக்கணும். உயிரையே காப்பாத்திட்டோம்  இனி என்ன ஆனாலும் பாத்துக்கலாம்” உயிரை காப்பாத்திட்டோம் ஆபத்து நீங்கவில்லை என்பதை அழகாக சொல்லியவர் கண்சிமிட்டி புன்னகைத்தவாறே நகர்ந்தார்.

ப்ரதீபனும் அமுதனும் ஒரே நேரத்தில் இடுப்பில் கைவைத்து வாயால் “உப்…” என்று காற்றை சத்தமாக வெளியே விட இருவரின் முகமும் புன்னகையை பூசிக்க கொண்டது.

ரிஷி இரண்டு நாட்களாக தீவிரசிகிச்சை பிரிவில் தூங்கிய படியே இருந்தவன் மூன்றாவது நாள் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டான். ஆனாலும் இன்பெக்சன் ஏற்படும் என்று அவனிடம் செல்ல யாரையும் அனுமதிக்க மறுத்தார் டாக்டர் அஜய். மருந்தின் வீரியம் தான், தூக்கத்தில் தான் இன்னும் இருக்கின்றார் என்ற தகவல்கள் மாத்திரமே வெளியே இருந்தவர்களுக்கு கிட்டியது.

அமுதனும், ப்ரதீபனும் மாறி மாறி தொழிலை பார்க்க ரிஷியின் அறை வாசலிலையே தவமாய் தவமிருந்தாள் அவனின் வார் பேபி. செல்ல மகனின் நியாபகம் கூட அவளுக்கு வரவில்லை. அவளின் கண்கள் ரிஷியையே பாத்திருக்க சிந்தனையும் அவனின் நலனிலையே இருந்தது.

ஒருவாறு ரிஷி கண்விழித்திருக்க அப்பொழுதும் கூட கண்ணாடியினூடாகவே அவனை பார்க்க முடிந்தது. இரண்டு நாட்கள் எல்லா விதமான பரிசோதனைகளையும் முடித்து “இனி எந்த பிரச்சினையும் இல்லை” என்று டாக்டர் அஜய் அனுமதி வழங்க ரிஷியின் மனையாள் அவனை விட்டு நகராது அவனுக்கு பணிவிடை செய்யலானாள்.

ரிஷி எழுந்தமர்ந்து மெதுவாக தனது வேலைகளை செய்யவும் ஆரம்பித்து, ஒரு நாளைக்கு அரைமணித்தியாலம் மருத்துவமனையை சுற்றி நடக்க வேண்டும் என்றிருக்க அவனோடு சேர்ந்து நடந்தாள் கயல்.

பத்து நாட்களாக கணவனோடு மருத்துவமனையே கதி என்றிருந்தாலும் கயல்விழி அவனோடு சகஜமாக பேசிடவில்லை. இன்னொருவனை திருமணம் செய்ய சொல்ல எப்படி இவருக்கு மனம் வந்தது என்ற ஆதங்கமே மேலோங்கி இருக்க, தான் அவனை விட்டு சென்றது இன்னொருத்தியை மணந்துக் கொள்ளட்டும் என்று என்பதை வசதியாக மறந்தும் போனாள்.  

தான் பிழைக்க மாட்டேன். என் அம்மு என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றுதான் அவளின் கண் பார்வையில் வராமல் இருந்தான் ரிஷி. அவளை பற்றி அறிந்ததால் தான் மிரட்டி இன்னொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சத்தியம் வாங்கினான்.

ஆனால் அவள் மிரட்டினால் அடி பணியும் யாழிசை இல்லை இவள் கயல்விழி. மன்னித்தேன் என்று சொன்னாலும் மனதின் மூலையில் ஒளிந்து கிடந்த வேதனை சாட்டையாக மாறி அவனை விளாசி இருக்க, தான் செய்தது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை உணர்ந்திருந்தவன் அவளின் வேதனையை எண்ணி கவலையடைந்தே மயங்கி விழுந்தான்.

தலைமுடியை முற்றாக சிரைத்து தலையில் பெரிய கட்டோடு  ரிஷி அவளின் முகத்தை பார்த்தவாறே நடக்க, அதை கண்டு காணாதது போல் நடந்தாள் கயல். என்ன பேசுவது? எவ்வாறு ஆரம்பிப்பது? என்ன சொல்லி சமாதானப் படுத்துவது என்ற சிந்தனைதான் ரிஷியின் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

“ஸ்ரீராம் எப்படி இருக்கான்” ஒருவாறு ஆரம்பித்து விட்டான்.

“நல்லா இருக்கான். அம்மா கூட ஒட்டுதல் அதிகம் என்பதால பிரச்சினையில்லை. ஸ்கூல் போறான், வாரான். நேரத்துக்கு சாப்பாடு ஊட்டி தூங்க வைக்கிற வர ஆள் ஏற்பாடு பண்ணியாச்சு” கடகடவென ஒப்பித்தவள் மெளனமாக ரிஷியின் முகத்தில் புன்னகை அரும்பியது.

ஒரு கேள்விக்கு இவ்வளவு நீண்ட பதிலை சொல்லி மேலும் கேள்வி கேட்காதவாறு நிறுத்தி இருந்தாள் கயல்.

“அத்த எப்படி இருக்காங்க” சீண்டவேன்றே கேட்டான் வாரின் கணவன்.

“முன்னைய விட நல்ல முன்னேற்றம். இன்னும் ரெண்டு மூணு மாசத்துல சரியாகிடும் னு  டாக்டர் சொல்லுறாரு” 

“நீ எப்படி இருக்க?”  நடையை நிறுத்தி அவள் முகம் பார்க்க அப்படியொரு கேள்வியை அவள் எதிர்பார்க்காத முகபாவத்துடன் கணவனை ஏறிட்டவளின் கண்கள் கலங்கி இருந்தது.

துக்கம் தொண்டையடைக்க, கீழுதடை அழுத்திக் கடித்தவள் “எனக்கென்ன ஓஹோ… னு இருக்கேன்” கைகளை அகல விரித்து சொல்ல

“பார்த்தா அப்படி தெரியல புருஷன் கூட சண்டை போட்டு கோவிச்சு கிட்டு இருக்கிற மாதிரி தெரியுது” யாரோ போல் பேச

“இவருக்கு இப்படியெல்லாம் பேச வருமா?” என்று ஆச்சரியப்பட்டவள் விழிகளை கூர்மையாக்கி அவனை பார்த்தவளின் முகத்தில் மெல்லியதாக புன்னகை  மலர்ந்தது.  

மனையாளின் முகத்தை பாத்திருந்த ரிஷிக்கும் அவளின் புன்னகை முகம் நிம்மதியை கொடுக்க அவன் முகத்திலும் புன்னகை.  

ரிஷி வீடு வந்து பத்து நாட்கள் கடந்திருக்க, சரவணகுமரன் மனைவி சிவரஞ்சனி,  மகள் அகல்யாவுடன் ரிஷியை பார்க்கவென்றும் அவனோடு கொஞ்சம் நாட்கள் இருக்க வேண்டும் என்றும் வருகை தந்திருந்தனர். ரிஷி கிடைத்த சந்தோசம், நிம்மதி என்ற முகபாவங்களோடு பேசியவர் மோகனசுந்தரத்தின் படத்தின் முன் நின்று மன்னிப்பும் கேட்டு, நன்றியும் கூற திலகாவும் மோகனசுந்தரத்தை அடையாளம் கண்டு விசாரிக்க ஆரம்பித்திருந்தார்.

அகல்யா அமுதனோடு செல்லம் கொஞ்ச ரிஷி அவர்களை ஏக்கமாக பாத்திருக்க,

“ரிஷிணா…இந்த சின்னண்ணா என் தலைல அடிக்கடி கொட்டுவாரு இனி மேல் நீங்கதான் இவன என்ன? ஏதுன்னு கேட்டு அதட்டி, அடிச்சி, அடக்கி வைக்கணும் ஓகே வா” இயல்பாக அகல்யா பேச ரிஷி புன்னகை மட்டும் செய்தான்.

சட்டென்று கிடைத்த தங்கையிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதே அவனுக்கு புரியவில்லை. இயலோடு  இயல்பாக பேசிப் பழகி இருக்கலாம் என்ற எண்ணம் தோன்ற அவனின் முகம் விழுந்து விட்டது. அதை புரிந்து கொண்டு கயல்விழி அவனின் கையை ஆறுதலாக தட்டிக் கொடுக்க, ஸ்ரீராமும் புதிய அத்தையோடு சேர்த்துக் கொண்டு சித்தப்பனை அடிக்க விரட்டிக் கொண்டிருந்தான்.

ரிஷியோடு ரொம்பவும் இயல்பாக பழகிய மற்றுமொருவர் சரவணகுமரனின் மனைவி சிவரஞ்சனி. முதலில் அமுதன்  என்று நினைத்து தன்னோடு பேசுவதாக நினைத்த ரிஷி  அமுதன் வெளியே இருப்பான் என்று சொல்ல

“ஏன் பா… அவன் மட்டுமா எனக்கு பையன் நீயும் தான் என் பையன்” என்றவர் கையேடு கொண்டு வந்த இட்லீயை ஊட்டலானார். அவரை அதிசயமாக பார்த்தாலும் அதை பெற்றுக் கொண்டவன் கண்கள் கலங்கியவாறே சாப்பிட

“உன் அப்பா உன்ன பத்தி பேசாத நாளே இல்ல. நீ உயிரோட இருக்குறது தெரிஞ்சிருந்தா கண்டிப்பா உன்ன தேடி இருப்பாரு. பிரிஞ்சு குடும்பம் இப்போ தான் ஒன்னு சேரனும் னு எழுதி இருக்கு போல. பெரிய கண்டத்துல இருந்து தப்பி வந்திருக்க, உடம்பு சரியானதும் குலதெய்வத்துக்கு ஒரு பூஜை செய்யலாம். கயல் வேற சிலோன் போகணும் னு சொல்லி கிட்டு இருந்தா” பேசியவாறே ஊட்டி விட ரிஷி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

அங்கே வந்த அமுதனும், அகல்யாவும் ஆனந்தக் கண்ணீரோடு பாத்திருந்தவர்கள் ரிஷி அவர்கள் புறம் திரும்பவே சிவரஞ்சனியோடு சண்டைக்கு தயாரானார்கள்.

“மூத்த மகன் வந்ததும் என்ன மறந்துட்டீங்களே! இது நல்லா இல்ல ஆமா சொல்லிட்டேன். அம்மா இப்போ நீங்க எனக்கும் ஊட்டி விடணும்” அமுதன் கொஞ்ச

“டேய் நீ தானே என் கையாள தினமும் சாப்பிடுற, என் மூத்த பையன நா கொஞ்சம் கொஞ்சிக்கிறேன்” அவரும் அமுதனின் தாடையை பிடித்து கொஞ்ச

அகல்யாவோ இருவரையும் பிரித்து விட்டு “அப்போ நா” என்று புதிதாய் சண்டை போட அவர்களின் அழகான உறவு கண்ணை நிறைக்க, ரிஷி  தன்  வாழ்க்கையில் எவ்வளவு விஷயங்களை இழந்து விட்டோம் என்று உணர்ந்துக் கொண்டான்.

ஸ்ரீராமுக்கு அனைத்து  சொந்தங்களின் நேசமு, பாசமும் எல்லா சந்தோஷத்தையும் கொடுக்க வேண்டும் வாரை இனி எந்த ஒரு விஷயத்துக்காகவும் கண்கலங்க விடக் கூடாதென்ற உறுதி மொழி எடுத்துக் கொண்டான்.    

சீதா யாழிசையை அழைத்து வைகாசியில் நல்ல முகூர்த்தம் இருப்பதாகவும் அந்த மாதத்தில் தனா, இயல் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் சித்திரை புத்தாண்டை சேர்ந்து கொண்டாடலாம் என்று  அனைவரையும் ஊருக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்க, பிரதீபன் இயலின் கல்யாணத்துக்கு வருவதாக கூற மற்றவர்கள் இலங்கையை நோக்கி பயணித்தனர்.

அவர்கள் வருவதையறிந்து வாடகைக்கு விட்டிருந்த வீட்டை மீளப்பெற்று வருபவர்களுக்காக தயார் செய்து வைத்திருக்க, வாசலிலையே காத்திருந்தாள் இயல். முதலில் வண்டியிலிருந்து இறங்கியது அமுதன் தான்.

“என்ன இயல் புள்ள நல்ல இருக்கியா? சும்மா கொழு கொழுன்னு இருக்க” அமுதன் வந்த உடன் அவன் சேட்டையை ஆரம்பிக்க,

“மாமாக்கு ஆக்சிடண்ட்டுல தல பட்டதுனு சொன்னாங்க? இப்படி மாறிட்டாங்க” இயல் கண்களை விரித்து பார்த்திருக்க,

“வாய மூடு பிரேக் இல்லாத கொசு நுழைஞ்சிட போகுது” என்றவன் அவளில் தலையில் கொட்ட கத்தவும் முடியாமல் அவனை முறைக்கவும் முடியாமல் இயல் இருக்க

“சித்தீ……” என்று துள்ளிக் குதித்தவாறே வண்டியில் இருந்து இறங்கினான் ஸ்ரீராம். இயல் ஓடிச்சென்று அவனை தூக்கிக் கொள்ள கயலோடு ரிஷி இறங்கவே முழிக்கலானாள் இயல்.

உள்ளே இருந்து சீதா, மங்கம்மா, இளா, தனா, யோகராஜ், சாந்தி என்று எல்லாருமே வர அந்த இடமே கலை கட்டியது.

சாந்தியும் நல்ல மருமகளாக சீதாவோடு பொருந்திப் போக அவர்களுக்கு எந்த பிரச்சினையும் வரவில்லை. சாந்தியின் அம்மா தான் இன்னும் ஒட்டுதல் இல்லாமல் இருந்தார்.

ரிஷி தாய், தந்தை, தங்கை சகோதரன் என்று அனைவரையும் அறிமுகப்படுத்த அவன் அனாதையென்று ஏன் சொன்னான் என்ற கேள்வி வரவே!

“அது ஒண்ணுமில்ல நா அடிக்கடி அவன வம்பு இழுப்பேன். நா பண்ணுறதுக்கு அவனுக்கு அடி விழும் அதுக்கு கோவிச்சு கிட்டு வீட்டை விட்டு போவான். அப்பா தேடி கூட்டிட்டு வருவாரு பெரியவனானாலும் அந்த பழக்கம் மட்டும் விடவே இல்ல” பரிகாசம் போல் சொல்லி அமுதன் சிரிக்க யாழிசையின் குடும்பத்தினர் அதற்க்கு மேல் எந்த கேள்வியும் கேட்கவில்லை.

திலகாவுக்கும் புதிய சூழல் புதிய மனிதர்கள் என்று ஒன்றி விட கொஞ்சம் தெளிவாக பேசினார். மங்கம்மா தான் கண்களின் கண்ணீரை நிறைத்துக் கொண்டு யாழிசையின் முகத்தை பாத்திருக்க, அவளை கட்டிக்க கொண்டு யாழிசை

“என்னம்மா என்ன பெத்த அம்மா வந்ததும் நீ அம்மா இல்லனு ஆகிடுமா? நீ தான் என் முதல் அம்மா அப்பொறம் தான் அவங்க” என்று திலகாவை கை காட்ட மனநிறைவோடு  அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் மங்கம்மா.

ரம்யமான காலநிலையும், நீரூற்று, ஆறு, நீர்வீழ்ச்சியில் குளியல் என்று ஒவ்வொரு நாளும் இனிமையாக செல்ல சித்திரை புத்தாண்டுக்கு, வைகாசியில் வைக்கும் கல்யாணத்துக்கும் குடும்பம் மொத்தமும் தயாராக,

அதற்க்கு முன் திருகோணமலைக்கு சென்று சிவனை தரிசித்து விட்டு வரலாம் என குடும்பம் மொத்தமும் ஒரு  வண்டியை ஏற்பாடு செய்து திருகோணமலையை நோக்கி பயணித்தனர்.

திருகோணமலை இலங்கையின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு துறைமுக நகரமாகும். திருகோணமலை நகரம் புகழ்பெற்ற கோணேஸ்வரம் கோயிலின் தாயகமாக உள்ளது, இது அதன் வரலாற்றுத் தமிழ் பெயரான திருகோணமலை உருவாக்கியது. கோணேஸ்வரம் அமைந்துள்ள கடலோர தீபகற்ப நகரமான திருகோணமலை என்பது “திரு-கோனா-மலாய்” (தமிழ்: த்ரெஹ் சேம் தர்மன்) என்ற பழைய தமிழ் வார்த்தையின் ஆங்கில வடிவமாகும், இதன் பொருள் “புனித மலையின் இறைவன்”

சுள்ளென்று அனல் அடிக்கும் காலநிலையோடு திருகோணமலையை வந்தடைந்தவர்கள் முதலில் சென்றது நேர்ச்சையை நிறைவேற்றவே! அந்த அழகிய கடலோடு அமைந்த குன்றில் வீற்றிருந்த சிவனை வணங்கி நேர்ச்சையையும் நிறைவேற்றியவர்கள் அடுத்து சென்றது இந்த நகரம் தீவின் மிகப்பெரிய டச்சு கோட்டையை பார்வையிடவே!

அதன் பின் உலகின் ஐந்தாவது இயற்கை துறை முகத்தையும், மாலையில் மார்பல் பீச் என்று அழைக்கப்படும் ஒப்பீட்டளவில் பழுதடையாத மற்றும் சுத்தமான மிக அழகிய கடற்கரைக்கும் சென்று குளித்தவர்கள் இரண்டு நாட்கள் அங்கே தங்கி விட்டே ஊர் திரும்பினார்.

Advertisement