Advertisement

அத்தியாயம் 21

இதோ அதோ என்று சரவணகுமரனை கண்டு பிடித்து விட்டாயிற்று. குன்னூரில் இருப்பதாக தகவல் சொன்னது டிடெக்டிவ் ஏஜென்சி. அலைபேசி எண்ணையும் பெற்றுக் கொண்டு பேசியாச்சு. அவரே வராராம்.

திலகா கண்டிப்பாக சரவணகுமரனிடம் இருந்து தான் காணாமல் போய் இருக்கணும். ஒருவேளை மனநலம் பாதிக்கப் பட்ட திலகாவுக்கு மருத்துவம் செய்ய சென்னை அழைத்து வந்த போது கீதாராணி கடத்தியிருக்கலாம்.

அப்படி காணாமல் போன திலகாவை கண்டு பிடித்துத் தருமாறு சரவணகுமரன் போலீஸில் கம்ப்லைன் பண்ணி இருக்கக் கூடும் என்ற பார்வையில் விசாரிக்கும் படி பிரதீபன் சொல்லி இருக்க, அது போலவே தான் நடந்திருந்தது.

சென்னைக்கு டிரீட்மெண்ட்டுக்கு வந்த இடத்தில் திலகா காணாமல் போக சரவணகுமரன் போலீஸ் புகார் செய்திருந்தார். திலகாவை கடத்தப் பார்த்தது அவருக்குத் தெரியாது.

சரவணகுமரன் வருவதை அமுதனிடமிருந்து மறைத்த ப்ரதீபனும், கயலும் எந்நாளும் போலவே வேலைகளை கவனிக்க அமுதனும் நகைக் கடை வேலைகளை ஈடுபாடோடு கற்றுக் கொள்ளலானான்.

அன்று ஒரு ஞாயிறு என்பதால் அனைவரும் வீட்டிலையே இருக்க ஸ்ரீராமோடு விளையாடிக் கொண்டிருந்தான் அமுதன். ரிஷியின் புகைப்படத்தை காட்டி தந்தையென்று கயல்விழி அறிமுகப் படுத்த அமுதனை “தாதி” {டாடி} என்று அழைக்க ஆரம்பித்திருந்தான்.

அமுதனும்  அதை ஏற்றுக் கொண்டானே ஒழிய மறுக்கவில்லை. கயலிடம் அதிகம் நெருங்க முயற்சிக்க வில்லை ஆனால் திலகாவிடம் செல்லம் கொஞ்சலானான். திலகாவின் மடியில் யார் படுப்பதென்று சண்டைதான் நடந்து கொண்டிருந்தது.

“டேய் இது என் அத்த டா.. நான் தான் தூங்குவேன். நீ உன் அம்மா மடியில போய் தூங்கு” அமுதன் ஸ்ரீராமை தள்ள

“இது என் பாத்தி நீ போ தாதி, அம்மா மதில நீ தூங்கு” அமுதனை விரட்ட அங்கே வந்த பிரதீபன் திலகாவின் மடியில் படுத்துக் கொண்டான்.

“பாத்தியாடா நாம சண்டை போடுற காப்புல புகுந்துட்டான் இனிமே சண்டை போடுவ?” அமுதன் சிரிக்க ப்ரதீபனின் மேல் பாய்ந்திருந்தான் குட்டி ரிஷி.

வாசலில் நிழலாட நிமிர்ந்து பார்த்த அமுதன் அங்கே சரவணகுமரன் இருப்பதைக் கண்டு “அப்பா” என்ற அழைப்போடு அவரை கட்டித் தழுவி இருந்தான்.

“அமுதா நீ என்னடா இங்க பண்ணுற?” என்றவர் திலகாவை கண்டு அவளிடம் ஓடி இருந்தார்.

அங்கே வந்த கயல்விழியும் ப்ரதீபனும் ஒருவரையொருவர் பாத்திருக்க, திலகாவிடம் சென்ற சரவணகுமரன் திலகாவை கட்டியணைத்து கண்ணீர் வடிக்கலானார்.

“ஏன் டா அமுதா திலகா உன் கூட இருக்குறத ஏன் டா சொல்லல. உனக்கென்ன அவ்வளவு கோபம் என் மேல” அவனோ மௌனம் காக்க அங்கே ஒரு பாசமலர் படம் ஓடியது.

கயல்விழி அவருக்கு குடிக்க பழச்சாறு வழங்க அதை பெற்றுக் கொண்டவர் “திலகா இங்கிருக்குறத சொன்னீங்க, அமுதன் இங்கிருக்குறத ஏன் சொல்லல” ப்ரதீபனை ஏறிட்டு சரவணகுமரன் கேக்க

“திலகாம்மா, மோகனப்பா பொண்ணு கயல்விழி” என்று பிரதீபன் அறிமுகப்படுத்த அவளை கட்டிக் கொண்டு கதறியே விட்டார். ஸ்ரீராமோடும் செல்லம் கொஞ்சியவர் ஒருவாறு தன்னை நிலைப்படுத்தி பேச ஆரம்பித்தார்.

“உன் அப்பா உன் அம்மாவை ஏமாத்திட்டதா சொல்ல போய் மயங்கி விழுந்தவ நீ காணாமல் போனதும் இப்படி ஆகிட்டா எல்லாத்துக்கும் காரணம் அந்த கீதா” கோபமாக பல்லை கடித்தார் சரவணகுமரன்.

“யார் அவங்க?” மோகனசுந்தரத்தின் டயரியில் இருந்த வில்லி என்று அறிந்து யோசனையாக பிரதீபன் கேக்க,

“அம்மாவை கடத்த பாத்தவங்க அவங்களாத்தான் இருக்கும்” என்ற பார்வை கயல்விழியிடம்

“என் மாஜி பொண்டாட்டி” வெறுப்பாக ஒலித்தது அவர் குரல்.

கயலும், ப்ரதீபனும் அதிர்ச்சியாக பார்க்க, அமுதன் வெற்றுப்பார்வை பார்த்தான்.

“முதல்ல இருந்தே சொல்லுறேன். என் தாத்தா தேவராஜும், கீதாவோட தாத்தா வேதநாயகமும் நல்ல நண்பர்கள். ஆனா என் அப்பாவும், அவங்க அப்பாவும் பகைவர்கள்”

அமுதன் அமைதியை கடை பிடிக்க “என்ன டா இது” என்ற பார்வையை தான் மற்ற இருவரிடமும்.

“அதுக்கு காரணம் வேதநாயகம் தாத்தா எல்லாத்துக்கும் எங்கப்பாவை ஒப்பிட்டு பேசுறதுதான். அப்பா படிப்பாகட்டும், குணமாகட்டும், பண்பாகட்டும் புகழ்ந்து பேசி அவர் பையன் மனசுல அது வெறுப்பா மாறி நாளுக்கு நாள் அது வளர்ந்தது. எங்க வீட்டுல நானும், திலகா மாதிரி, அங்க ரத்னவேலும் கீதாராணியும்.

வேதநாயகம் தாத்தா பண்ண அதே தப்ப தான் கீதாவோட அப்பாவும் பண்ணார். என்ன காட்டி பேசி ரத்னவேலின் மனசுல நஞ்ச விதைச்சிட்டாரு. அவன் என்ன எதிரியா தான் பாக்க ஆரம்பிச்சான். வேதநாயகம் தாத்தா இறந்த பின் சுத்தமாக உறவே விட்டுப் போச்சு.

ஸ்கூல் லைப் முடிஞ்சதும் காலேஜுக்கு வேற ஊர் போய்ட்டேன். அங்கதான் கீதாவை சந்திச்சேன். கீதா ரத்னவேலின் தங்கைனு தெரியாது ஏன் நா சின்ன வயசுல பார்த்தது தான். அவ மேல காதல் என்றெல்லாம் வரல வெறும் நட்புதான்.

ஒரு பிரெண்டோட  பர்த்டே பார்ட்டிக்கு போனது தான் நியாபகம் அங்க என்ன குடிச்சேன்னு தெரியல எந்திரிக்கும் போது கீதா என் பக்கத்துல அழுது கிட்டு நின்னா, நா அப்படியொரு தப்ப பண்ணி இருப்பேன்னு என்னால நம்பவே முடியல, ஆனாலும் ஒரு பொண்ணு அழுது கிட்டே சொல்லும் போது வேறென்ன செய்ய? எனக்கு தோணினது ஒண்ணே ஒண்ணுதான் உடனே அவளை கல்யாணம் பண்ணனும் என்பதுதான். அத பத்தி பேசின உடனே அவங்க வீட்டுல தெரிஞ்சா படிக்க முடியாம போய்டும், கொன்னுடுவாங்கனு சொல்லி அழுதா. வேற வழி தெரியாம அவ சொன்ன படி  தேவாலயத்துல போய் மோதிரம் மாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.

அவ படிப்பு முடிஞ்ச பிறகு வீட்டுல சொல்லிக்கலாம்னு நானும் விட்டுட்டேன். அடிக்கடி போன் பண்ணி வெளிய சந்திக்கலாமான்னு கேப்பா, படிப்புல கவனம் செலுத்துவோம் னு சொல்லி நா மறுத்துட்டேன். ஹாஸ்டல்ல தங்கி இருந்தவ திடீருனு தனியா வீடெடுத்து தங்கினா. கேட்டா வசதி போதாது, அங்கே ஒரே சத்தமாக இருக்கு படிக்கும் மூட் வர மாட்டேங்குது னு காரணம் சொன்னா. அவ தனியா இருக்குறதால நானும் அடிக்கடி போய் அவளை பாத்துட்டு வந்தேன்.

அப்படி ஒரு சந்தர்ப்பத்துல தான் என் மனைவி எங்குற உரிமையை நா எடுத்துக்கிட்டேன். ஆனா அதையும் அவ திட்டமிட்டுதான் செஞ்சிருக் காணு அப்பொறம் தான் தெரிஞ்சது.

ஒருநாள் போலீஸ் வந்து நா ஒரு பொண்ண காதலிச்சு  ஏமாத்திட்டதாகவும், கர்ப்பமா இருக்குற பொண்ண ரேப் பண்ணிட்டதாகவும் என்ன அரெஸ்ட் பண்ணாங்க, என்ன நடக்குதுன்னு புரியிறதுக்குள்ள  பத்திரிக்கை, டிவி னு நியூஸ் போட்டு என் மானத்தையும், குடும்ப மானத்தையும் வாங்கிட்டாங்க, டிவி ல கீதா அழுது அழுது பேசிகிட்டு இருந்தா. சுத்தமா ஒன்னும் புரியல.

அப்பொறம் தான் தெரிஞ்சது அவ ரத்னவேல் தங்கச்சி, எல்லாம் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பிளான் பண்ணி பண்ணதென்று. ஒரு ஆம்புள இப்படி பண்ணுறதெல்லாம் பாத்திருக்கேன். பலி வாங்கவென்று ஒரு பொண்ணு இவ்வளவு கீழ் தரமா இறங்கி….” சோகமும் வெறுப்பும் கலந்த குரலில்  “நா கீதாவை தான் பாத்தேன்.

அவளுக்கு அம்மா இல்ல ஒரு வேல அவங்க இருந்து வளர்த்திருந்தா இப்படியெல்லாம் ஆகி இருக்காது னு அப்பா எனக்கு எடுத்து சொல்லி புரியவச்சி அவளை ஏத்துக்க சொன்னாரு. எனக்கும் ஒரு தங்க இருக்க அதனால அவளோடு சமாதானமா போகலாம் னு தான் நினச்சேன் ஒழிய எக்கேடும் கேட்டு போனு விட தோணல.

ஆனா அவ மனசுல பலி வாங்கணும் என்ற வெறி  மட்டும்  தான் இருந்திருக்கு. என்ன ஜெயில்ல கழி திங்க வைக்காம விட மாட்டேன்னு சபதம் எடுத்து கிட்டாளாம். என் கிட்டயே சொல்லிட்டு போனா.

தேவாலயத்துல மோதிரம் மாத்தினத்த அங்க வந்த பாரினர்ஸ் வீடியோ எடுத்து இருக்காங்க. என்னோட நல்ல நேரம் கோட் தீர்ப்பண்ணைக்கு அதுல சில போட்டோஸ் பத்திரிக்கைல வரவும், அத வச்சி வாதாடி அவங்க கிட்ட இருந்து வீடியோவை வாங்கி என் வக்கீல் சமர்ப்பிக்க நா நிரபராதின்னு வெளியே வந்துட்டேன்.

நா பண்ண ஒரே தப்பு அவ வயித்துல என் குழந்தை வளருதுனு தெரிஞ்சதும் கோட்டுல அந்த குழந்தையை எனக்கு கொடுக்க சொல்லி கேட்டது. ஒரு குழந்தைனா பத்து வயசுக்கு பிறகு தான் என் கிட்ட சேரனும் னு கோட் தீர்ப்பு சொல்லுச்சு. பிறந்த ரெட்டை ஆண் குழந்தைல ஒன்னு என் கிட்டையும், மத்தது அவகிட்டயும் போச்சு. வாரத்துக்கு ஒரு நாள் குழந்தைகள் இருவரும் சந்தித்துக் கொள்ளலாம், பெத்தவங்களும் குழந்தையை பார்க்கலாம். கீதா ஒருநாளும் அமுதனை பார்க்க வரவே இல்ல.

“அப்போ நிஜமாலுமே இங்க இருக்குறது அமுதனா?” பிரதீபன் அவனை திருபிப் பார்க்க அமுதன் தலையை தொங்க போட்டவாறு அமர்ந்திருந்தான்.

“என் ரெத்தம் எங்குறதாலையே அந்த குழந்தையை ரொம்ப கொடும படுத்தி இருக்கா, அவன் வந்து அழுது கிட்டே சொல்வான். தாங்க முடியல. குழந்தையை அவ கிட்ட இருந்து வாங்கணும்னு திரும்ப கோட்டுக்கு போனேன். அப்படி அலஞ்சி கிட்டு இருக்கும் போது தான்  அந்த குழந்தை காணாம போச்சுன்னு  கேள்விப்பட்டேன். எங்க தேடியும் கிடைக்கல, அவ கொடும தாங்க முடியாம செத்திருச்சோ!  கொடும படுத்தி கொன்னுட்டாளோனு கூட தோணிருச்சு. அதன் பின் சென்னைல இருக்க பிடிக்காம குன்னூர் போய்ட்டேன். அப்பாவும் ரொம்ப மனசோடஞ்சி போட்டாரு. அவர் ஆசப் படி வேற கல்யாணமும் பண்ணிக்க கிட்டேன்” ஒரு பெருமூச்சோடு சொல்லி முடித்தார் சரவணகுமரன்.

“அப்போ என் அப்பா? அம்மா” கயல்விழி டயரியில் சரவணகுமரன் அப்பாவை விரட்டி அடித்ததாக எழுதி இருக்க அதை பற்றி கேக்க

ரத்னவேலும் மோகனசுந்தரம் நண்பர்கள் திலகாவை எங்க எப்போ பாத்தான்னு தெரியல, திடீருனு கல்யாணம் பண்ணி கிட்டு வந்தாங்க, மோகன் நல்லவன்தான் நான் தான் அப்பாகிட்ட பேசி வீட்டுல சேர்த்தேன்.

திலகா எங்க கூடத்தான் இருந்தா, மோகன் அவங்க வீட்டுல பேசிட்டு வரேன்னு போனவன் மூணு மாசம் கழிச்சு தான் வந்தான் அப்போ திலகா உண்டாகி இருந்தா. அவன் வீட்டுல ஏத்துக்கள னு சொல்லி எங்க கூடவே இருந்தான். தொழில்ல எனக்கு நஷ்டம் வர ஆரம்பிச்சிருச்சு காரணம் புரியல, மோகன் தான் ரத்னவேலுக்கு என் தொழில் ரகசியங்களை சொல்லுறானோன்னு சந்தேகம் வந்து அவனை கண்ட படி பேசிட்டேன்.

திலகா இருக்குற நிலமைல அவளை கூட்டிட்டு போக முடியாதுன்னு அவளை எங்க வீட்டுலையே விட்டுட்டு அவன் வேல தேடி மும்பாய் போனான். போனவன் கிட்ட இருந்து எந்த தகவலும் தெரியல.

திலகா எதிர் பாத்து கிட்டே இருந்தா, அந்த நேரத்துல கீதா போன் பண்ணி அவங்க சொல்லி தான் மோகன் திலகாவை கல்யாணம் பண்ணதாகவும், விட்டுட்டு போய்ட்டான்னும் சொன்னா அத கேட்டு என் ரெத்தமெல்லாம் கொதிச்சு போச்சு, என் இயலாமையை திலகாமேல காட்டிட்டேன். திலகாவை சத்தம் போட்டதுல அவ மயங்கி விழுந்து பிரசவம் ஆகிருச்சு.

திலகா சீரியசா இருந்தா அந்த நேரத்துல மோகன் வரவும் அடிச்சி துரத்திட்டேன். அந்நேரம் பாத்து அப்பா போன் பண்ணவும் கோபத்துல அவர வேற சத்தம் போட்டுட்டேன். தன்னோட பசங்க வாழ்க்கை இப்படியாகிருச்சுனு அவரும் பக்கவாதத்துல விழுந்துட்டாரு.

நீயும் காணாம போயிட்ட. அதன் பின் திலகா, அப்பான்னு இருந்துட்டேன். தொழிலையும் கவனிக்க முடியாம போக எல்லாத்தையும் வித்துட்டு குன்னூர் போய் செட்டில் ஆனோம். திலகாவை குணப்படுத்த ட்ரீட்மெண்ட்டுக்காக  சென்னைக்கு கூட்டிக் கிட்டு வந்த பிறகு தான் காணாம போய்ட்டா.

கயல்விழி அன்னையை காப்பாறியதை சொல்ல

“கண்டிப்பா அந்த கீதாவா தான் இருக்கும், இப்போ ரத்னவேல் அமைச்சர் ஆகிட்டான்”

அமைச்சர் என்ற உடன் யோசனைக்குள்ளான பிரதீபன் சென்னை நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த வர்த்தக அமைச்சர் ரிஷியின் மாமாவா? அப்போ அவங்களால தான் ரிஷி… மேலும் யோசிக்க முடியாமல் தலையில் கைவைத்தவன்

“ஏன் டா சொல்லல சொல்லி இருந்தா அங்கேயே அவனை வெட்டி பொலி போட்டிருப்பேனில்ல” மானசீகமாக நம்பனிடம் சண்டையிடலானான்.

அவனின் மனதில் ஓடுவதை அவனின் முகம் காட்டிக் கொடுத்ததோ ஆறுதலாக அமுதனின் கை ப்ரதீபனின் தோளில் விழுந்தது.

வர்த்தக அமைச்சர் ரத்னவேலை கண்ட பின் ரிஷியின் முகம் இறுகி இருந்தது நியாபகத்தில் வரவே “அப்போ அவனுக்கு அவரை நியாபகம் இருந்திருக்கு. அதான் ஒரு மாதிரி இருந்தான். குட்டிமாவ பத்தி கேட்டப்ப கூட முறைத்தான். கூடவே இருந்தும் அவன் மனச படிக்க முடியல. அவன் சாவுக்கு யார் காரணமாக இருந்தாலும் என் கையாலதான் சாவு” பிரதீபன் சபதம் எடுத்துக் கொள்ள.

“கடவுளே உனக்கு நான் என்ன பிழை செய்தேன். வாழ்க்கையில் ஒவ்வொரு அடியிலும், சோதனையை மட்டுமே வைத்திருக்கிறதையே! கண் முன்னே அவரை போல ஒருவனை வைத்து என்னை எத்தனை நாட்களுக்கு இம்சிக்க போகிறாய்” தொண்டையடைக்க வரும் கண்ணீரை இமை சிமிட்டி உள்ளிழுத்த கயல்விழி மதிய உணவை மேற்பார்வை பார்ப்பதற்கு செல்வதாக சொல்லி விட்டு தனிமையை நாடி அகன்றாள்.

திலகாவோடு அன்று நாள் முழுவதையும் கழித்த சரவணகுமரன்  மாலை விமானத்தில் பெங்களுர் நோக்கி பயணித்தார். அங்கிருந்து குன்னூர் செல்வதாக சொன்னவர்  குன்னூருக்கு வரும் படி அழைப்பும் விடுத்து விடைபெற்றார்.

கனி அமுதன் அவசரமாக மாடிப்படிகளில் தாவியேறுவதைக் கண்டு சமயலறையில் இருந்து வந்த கயல்விழி என்ன ஏதோ என்று பயந்தவள் அவன் பின்னாலையே செல்ல, அவனோ ரிஷியின் அலுமாரியில் ஏதோ தேடிக் குடைந்துக் கொண்டிருந்தான்.

“என்ன அமுதா? என்ன தேடுற?” கயல்விழியின் குரல் கேட்டு திகைத்தவன் மெதுவாக அலுமாரியை முடி விட்டு அவள் புறம் திரும்பினான்.

ஐந்து வருடங்களுக்கு முன் எப்படி இருந்தாளோ அதே குழந்தை முகம். கண்கள் தான் ஒளியிழந்து, ஈரத்தால் நனைந்திருந்தது. கண்ணை சுற்றி கருவளையம் கூட. அன்று விட சற்று மெலிந்து இருக்கிறாள். சரியாக சாப்பிடவில்லையா? அந்த அரையிருட்டில் அவளின் மூக்கின் மேல் வீற்றிருந்த மூக்குத்தி ஜொலித்து அவள் முகத்துக்கே ஒரு பிரகாசம் கொடுத்தது. அவளின் மேனியை விட்டு ரிஷியின் கண்கள் வேறெங்குமே செல்லவில்லை. அவளை கண்களால் பருகியவனின் சிந்தனையில் இக்கணம்  இப்படியே உறைந்து விடக் கூடாதா என்றிருந்தது.

அது அவன் தான் அவள் கணவன் தான். அதே பார்வை கண்களில் வழியும் காதலை முகத்தில் காட்டாது பிடிவாதமாய் இருக்கும் முகம். ரிஷி மெதுவாக ஒவ்வொரு அடியையும் அவள் புறம் எடுத்து வைக்க, கயல்விழியின் இதயம் தொண்டையில் வந்து துடிக்க ஆரம்பித்தது. சத்தம் கூட அவனுக்கு கேட்டிருக்கும். அவனை விழிகளில் நிரப்பி பாத்திருந்தவளின் இதயமும் நிறைந்து வழிந்தது.

அவள் அருகில் வந்த ரிஷி “வார் மை பேபி” என்றவன் அவளை இறுக அணைத்திருக்க, அதே அணைப்பு அவள் ஏங்கித் தவித்த அதே அணைப்பு. தனக்கு என்றுமே இல்லாமல் போய் விட்டதென்று நினைத்த அதே நெருக்கம். கணவனின் மார்போடு கன்னம் பதித்தவள் மெளனமாக கண்ணீர் வடிக்க, அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்த ரிஷியின் உதடுகள் “வார், வார்” என்றவாறே முத்தம் பதிக்க, அவளின் தேகம் சிலிர்த்தது.

தனது நிலையால் அவளை விட்டு விலகி இருந்தவன், அவளை கண்ட நொடி தன்னிலை மறந்து, இவள் என்னவள், எனக்கானவள், என்ற எண்ணம் மட்டுமே அவன் சிந்தையில். அவளின் பிரத்தியேகமான வாசம் அவனின் நெஞ்சம் நிரப்ப  இழுத்து அணைத்து உரிமையை நிலைநாட்டி அதை செயலில் காட்டிக் கொண்டிருந்தான் ரிஷி.

அவன் கைகளோ அவளை உணர்ந்து கொள்ளும் முயற்சியில் இறங்க, “என்ன விட்டுட்டு எங்க போனீங்க? எங்க போனீங்க” அவன் மார்பிலும், தோளிலும் சில அடிகளை கொடுத்தவாறே விட்டுட்டு போனவளே அவனை குற்றம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

சுகமாய் வாங்கி கொண்டவன் அவளின் முகம் நிமிர்த்தி இத்தனை வருட பிரிவின் வேதனையை கொடுத்ததற்காக அவளின் இதழ்களுக்கு தண்டனை வழங்க ஆரம்பித்தான்.

அவனின் மனநிலை நொடிக்கொருதரம் மாற, மாற வன்மையாகவும், மென்மையாகவும், அவனின் இதழ்கள் முத்த யுத்தம் செய்ய மங்கையவளின் உதடுகள் தான் மூச்சுக் காற்றுக்காக ஏங்க கணவனை தடுக்கக் கூட பிடிக்காமல் அவனோடு இழைந்தவள், நெஞ்சம் முழுக்க இருந்த பாரம் விலக அவன் கைகளிலேயே! மயங்கிச் சரிந்தாள்.

Advertisement