Advertisement

அத்தியாயம் 20

“உண்மையை இப்போவாச்சும் சொல்லுறீங்களா?” கயல்விழி ப்ரதீபனை ஏறிட

“நீ முதல்ல சொல்லு ஏன் ரிஷிய விட்டுட்டு போயிட்ட” அவளின் முகத்தையே பாத்திருந்தான் பிரதீபன்.

என்னவென்று சொல்ல பிரதீபன் தந்தையின் வளர்ப்பு மகனோ, ரிஷியின் சகோதரனோ! தன் கணவனை பற்றி எந்த குறையையும் கூற விரும்பாமல் முகத்தில் பலபாவங்களை காட்டினாள் கயல்.

“ஆகா ரிஷி உனக்கு பண்ண கொடுமைக்காக நீ அவனை விட்டு போகல, வேறு எதோ காரணம் இருக்கு. அப்படித்தானே!” வேங்கையின் பார்வையை வீசியவாறே கயல்விழியின் மனதை படிக்க முயன்றான் பிரதீபன்.

அவளுக்கு வேர்த்து விறுவிறுக்க, மாலை வேளையில் அந்த தோட்டத்தில் சீமெந்து பெஞ்சில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்த சூடான டீயும் கசந்தது.

“அப்போ இவருக்கு எல்லாம் தெரியுமா? தெரிந்தும் அமைதியாக இருந்தாரா?”

அவள் நினைப்பதை நொடியில் புரிந்துக் கொண்டவன் “ரிஷி உன் கூட சந்தோசமா இருக்குறான்னு தான் நினைச்சி கிட்டு இருந்தேன். உன்ன காயப்படுத்துவான்னு யோசிக்கல. அத அவனே சொல்லும் பொது மனசுக்கு ரொம்ப கஷ்டமாச்சு. எனக்கு பொண்ணுகளை புடிக்காதுதான் அதுக்காக அவங்கள பிசிக்கலா நோவினை செய்ய நினைக்கல, யாரோ ஒரு பெண்ணுக்கே அப்படினா. ரிஷி குற்றம் இழைத்தது என் குட்டிமாக்கு” என்றவன் ரிஷியை அடித்ததை மறைத்து விட்டான்.  

ஒரு பெருமூச்சு விட்டவன். தனது பெற்றோர்களை பற்றியும், அவர்களுடன் இருந்த கொடுமையான நொடிகளை பற்றியும் சொல்லியவன்.

“என் பேர் என்னென்றே எனக்கு தெரியாது. தறுதலை, சோம்பேறி, பன்னாட, தண்டம்.. இப்படி ஏகப்பட்ட பெயர்கள்” சத்தமாக சிரித்தவன்

“பத்து வயசுல வீட்ட விட்டு வந்துட்டேன். ஆனா எங்க போறதுன்னு தெரியல, பசிக்கும் போது குப்பை தொட்டிலை இருந்து பொருக்கி சாப்பிட்டு இருக்கேன், ஏன் நாய் சாப்பிடுறதையும் பிடுங்கி சாப்பிட்டு இருக்கேன். இந்த உலகத்துல உள்ள எல்லா மனிசங்களையும் வெறுத்தேன். விட்டா சைக்கோ கிளரா மாறி இருந்திருப்பேன்”

உடம்புல இருந்த காயம் எரியும் போது வெறியே! வரும்.  எல்லாரையும் கொல்லணும்னு, ஆண், பெண், சிரிச்சிகிட்டு இருக்குறவங்க, அழுறவங்க, மொறச்சி பாக்குறவங்க எல்லாரையும் கொல்லனும் அது மட்டும் தான் என் மனசுல ஓடிகிட்டே இருந்துச்சு, யார் கிட்ட வந்து பேசினாலும் அடிச்சேன். ஏன்னா.. பயம். பயம் மட்டும் தான். எங்க யாராவது அடிப்பாங்களோ! அவங்க அடிக்க முன்னாடி நா முந்திக்கணும்னு தான் அடிச்சேன்.

அதுக்கு பிறகுக்கு ஓட ஆரம்பிச்சேன், போலீஸ், மக்கள், நாய்லா இருந்து துரத்த ஆரம்பிக்கவும் ஓட ஆரம்பிச்சேன். பசி, பட்டினி னு எல்லாம் படுத்த மயங்கி விழுந்தேன்.

கண்ணு முழிச்சா ஆஸ்பிடல்ல இருந்தேன். கண்ண தொறந்தாலும், எழுந்து உக்காரவும் தெம்பில்லாம இருந்தேன். அன்பா.. அக்கறையா..  உன் அப்பாதான் என்ன பாத்து கிட்டாரு. கொஞ்சம் கொஞ்சமா அவர் கிட்ட நெருங்கினேன். அப்போ தான் ரிஷியையும் கூட்டிட்டு வந்தாரு. அவன் கூடயும் ஒட்டிக் கிட்டேன்.  உங்க அப்பா தான் பிரதீபன் னு எனக்கு பேரே வச்சாங்க.

பிரதீபன் சொல்ல சொல்ல கயலின் மனஉணர்வுகளை அவள் முகமே காட்டிக் கொடுக்க ப்ரதீபனின் கையை ஆறுதலாக தட்டிக் கொடுக்கலானாள். இவர்களை பால்கனியில் இருந்து யோசனையாக பாத்திருந்தான் அமுதன்.

வீட்டுக்கு வந்த பிறகு தான் அப்பா ரூம் ல இருக்குற போட்டோஸ் பாத்தேன். உன்னையும் அம்மாவையும் அறிமுகப்படுத்தி கத கதையா சொன்னாரு. திலகா அம்மாவை எங்க எப்படி சந்திச்சாரு, அவங்களோட பொறுமையான அன்பான குணம். அப்படியே உன்ன மாதிரி. இல்ல இல்ல நீ அவங்கள மாதிரி” தலையை சிலுப்பி புன்னகைத்தவன் “உனக்கு நான் வச்ச பேரு “குட்டிமா”. ரிஷி வச்ச பேரு “அம்மு” கண்கள் மின்ன அன்றைய நாளுக்கு சென்றான் பிரதீபன்.

“என் பொண்ணு மட்டும் இருந்திருந்தா உங்க ரெண்டு பேர்ல ஒருத்தனுக்கு கட்டி வைச்சிருப்பேன் பா” மோகனசுந்தரம் சிரித்தவாறே சொல்ல

“இதோ இவனுக்கே கட்டி வைங்க, அவ எனக்கு குட்டி தங்கச்சி. இவன வேணா மாப்புளையா ஏத்துக்கிறேன்” பிரதீபன் பெருந்தன்மையாக விட்டுக் கொடுக்க,

“நீ என்ன சொல்லுறது. ஆமா நான்தான் கட்டிப்பேன். அவ எனக்கு அத்த பொண்ணு” ரிஷி தெனாவட்டாக சொல்ல

“ஆமாடா கட்டிக்க, அவ கண்ணுல ஒருதுளி கண்ணீரை பாத்தாலும். நீ செத்த” பிரதீபன் மிரட்ட, மோகனசுந்தரம் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.

“என்னப்பா… என்னாச்சு” ப்ரதீபனும் கலங்க, “என்ன மாமா” என்று அவரின் கண்களை துடைத்து விட்டான் ரிஷி.

“இதெல்லாம் பாக்காம என் பொண்ணு அல்பாயுசுல போய்ட்டா…!” அவரை கட்டிக் கொண்டனர் இருவரும்.

“அப்பா எப்படி இறந்தார்” கயல்விழி ப்ரதீபனை ஏறிட

“ஹார்ட் அட்டாக். நீ இங்க வர மூணு வருசத்துக்கு முன்னாடி தான். இருக்குற வர உன்ன பத்தியும், அம்மாவை பத்தியும் தான் பேசுவாங்க, இன்னைக்கி நீங்க ரெண்டு பேரும் கிடைச்சி இருக்கீங்க. அத பார்க்க அவரில்லை” சோகம் இழையோடும் குரலில் பிரதீபன் சொல்ல, கயல்விழியின் கண்களும் கலங்கியது.

சுதாரித்தவன் “சரி நீ சொல்லு ரிஷியை ஏன் விட்டுட்டு போயிட்ட? அம்மா எப்படி கிடைச்சாங்க?”

அவர் திடிரென்று சென்னை கூட்டிட்டு போய்ட்டாரு. ரெண்டு நாள் ஹோட்டல் ரூம்ல இருந்தோம். அப்பொறம் ஒரு பிளாட்டுக்கு குடி போனோம். ரிஷி கேட்ட பத்திரத்தில் கையொப்பமிட்டு கொடுத்ததை சொன்னவள்

 “அது விவாகரத்து பாத்திரம் என்றுதான் நினச்சேன். அவர் மும்பாய் கிளம்பிக் கொண்டிருக்கும் போது அவருக்கு போன் வந்தது. அப்பொறம் தான் விவாகரத்து மட்டுமில்ல சொத்து பத்திரமும் அதுல இருந்தது னு தெரிஞ்சது. யார் கிட்ட பேசினாங்கனு தெரியல என்ன கல்யாணம் பண்ணது அப்பா சொத்தை…” மேலும் பேச முடியாமல் தடுமாறியவள் அன்று தான் கேட்டது தவறோ என்றெண்ணலானாள்.

“சொத்து அவர் பேர்ல தானே இருக்கு, சொத்துக்காக என்ன கல்யாணம் பண்ணி இருக்க முடியாதுல்ல. நா கயல்விழினு தெரிஞ்சா நல்ல விதமா நடந்து கொண்டிருப்பாரில்லை. அப்போ நா தான் அவரை தப்பா புரிஞ்சி கிட்டு விட்டுட்டு போய்ட்டேனா? ரிஷி அவளுக்கு இழைத்த கொடுமைகள் போய் அவனின் இறப்புக்கு தான் தான் காரணம் என்பது போல் தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள் கயல்விழி.

“அவன் பண்ணதுக்கு நீ தப்பாதான் புரிஞ்சிருப்ப” பிரதீபன் அவளை சமாதானப் படுத்த

“ஆனா அவர் தான் செத்து போய்ட்டாரே. இங்க இருக்குறது அமுதன்னு…” ப்ரதீபனை கேள்வியாக ஏறிட்டாள் கயல்

“நீ காணாம போன பிறகு ஒருமாசம் சென்னைல இருந்து நா ரிஷி கூட உன்ன தேடினேன். அப்பொறம் இங்க சில பிரச்சினைகள் தலைத்தூக்க மும்பாய் வந்துட்டேன். கோபத்துல ஒரு வாரமா நா அவன் கிட்ட பேசல. அவனே போன் பண்ணும் போது நீ கிடைச்ச செய்தியை சொல்லத்தான் போன் செய்றான்னு நினச்சேன். ஆனா அவன் குழறிக்கிட்டே உன்ன நல்லா பாத்துக்க சொன்னான் போனும் கட் ஆச்சு. அவன் வண்டி மலைல இருந்து விழுந்து வெடிச்சு சிதறி அவன் இறந்துட்டான் என்ற செய்தி தான் கிட்டியது. பாடி கூட முழுசா கிடைக்கல. சென்னைல இருந்து அவ்வளவு தூரம் எதுக்கு போனானும் தெரியல. எல்லாம் முடிஞ்சது  என்று இருக்கும் போது நாலு வருஷம் கழிச்சு ரிஷியை மும்பாயில பாத்தப்போ எவ்வளவு சந்தோசப் பட்டேன். ஆனா அவன் கனி அமுதன் என்று சொன்னதும் ஒன்னும் புரியல, திலகா அத்த, மோகன் மாமா னு சொன்னான் அதான் ரிஷியோட ட்வின் னு கூட்டிட்டு வந்தேன். சில நேரம் ரிஷியா தெரியிறான். பலநேரம் வேற மாதிரி இருக்கான். உண்மையிலயே! ரிஷிக்கு கூட பொறந்தவங்க இருக்கிறதா அப்பாவோ, ரிஷியோ சொன்னதே இல்ல. அதான் சந்தேகமா இருக்கு.  ஒன்னும் புரியல”  பிரதீபன் பெருமூச்சு விட

“அவர் நடிக்கிறார்னு சொல்லுறீங்களா?”

“ரிஷி நடிக்க வேண்டிய அவசியம் இல்லையே! ஒருவேளை பழசெல்லாம் மறந்து போய்ட்டானோன்னு” இழுத்து சொன்ன பிரதீபன் “ஒருவேளைதான். அமுதனா கூட இருக்கலாம்” கயல்விழியை பார்த்தவாறே சொல்ல

“அண்ணா நீங்க தெளிவா குழப்புறீங்க” என்று கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தவாறே சிரிக்கலானாள் கயல்விழி.

அவள் அண்ணன் என்று அழைத்ததில் மனம் நிறைந்தவன் “தேங்க்ஸ் குட்டிமா” என்று அணைத்துக் கொண்டான்.

சில நிமிடங்கள் அப்படியே இருக்க “அம்மா.. அம்மா எப்படி கிடைச்சாங்க?” பிரதீபன் ஆர்வமாக கேக்க,

“அவர் மும்பாய் கிளம்பிப் போனதும் கோவிலுக்கு போகணும்னு மனம் துடிச்சிருச்சு. ஆட்டோல போகும் போது ஒரு சிக்னல்ல அம்மா காருல உக்காந்து ஜன்னல் புறம் வேடிக்க பாத்துகிட்டு இருந்தாங்க, இறங்கி போனா முன்னாடி ஒரு அம்மா உக்காந்து கிட்டு அங்க வந்த ட்ராபிக் போலீசை காய்ச்சி எடுத்திருச்சு. நா பேசும் முன் போன் வந்து யார் கிட்டயோ பேசினாங்க. அவங்க அம்மாவை கடத்திக் கொண்டு போறது போல தோணிருச்சு. அவங்கள பலோவ் பண்ணி போய் பாத்தா ஊருக்கு ஒதுக்கு புறமா உள்ள வீடொன்றுல அம்மாவ அடச்சீ வச்சிட்டாங்க. அவங்க இருக்குற நிலமைல அவங்கள அங்க இருந்து கூட்டிட்டு வர ரொம்ப பாடு பட்டுட்டேன். அம்மாவ அடிச்சிருக்காங்க கன்னத்துல கை தடம் கூட இருந்தது. ரொம்பவே பயந்து போய் என் கூட வர மாட்டேன்னு ஒரே அடம். ரொம்ப நேரம் பேசி சமாதானப் படுத்தி தான் காப்பாத்தி கூட்டிட்டு வந்தேன். அவங்களுக்கு தேவ சொத்து தானே நா இல்லையே னு மனம் சொல்ல அம்மாவை கூட்டிகிட்டு ஊட்டி போய்ட்டேன்.

திலகாவை அடித்திருக்கிறார்கள் என்றதும் கண்கள் சிவந்தவன் கோபத்தை அடக்கியவாறே “அம்மாவே மனநலம் பாதிக்க பட்டு இருக்காங்க? எவ்வளவு நாள் இப்படி இருக்காங்களோ னு தெரியல? யார் அவங்கள கடத்த பாத்தாங்க? அப்பா டயரில் சொன்ன லேடி கீதாராணியாக இருக்குமோ?” ப்ரதீபனின் மனம் சிந்தித்துக் கொண்டிருக்க வாயோ 

“சென்னைல உள்ள நகைக்கடை உன் பேர்ல ரெஜிஸ்டர் ஆகி இருக்கு. அநேகமா ரிஷி அன்னைக்கு சைன் கேட்டது அதுக்குன்னு நினைக்கிறேன்” பிரதீபன் சொல்ல

“என்ன சொத்து இருந்து என்ன பண்ண என் புருஷன் என் கூட இல்லையே!” வெறுமையான குரலில் கயல் சொல்ல அங்கே வந்து சேர்ந்தான் அமுதன்.

“என்ன ரெண்டு பேரும் ரொம்ப நேரமா டிஸ்கஸ் பண்ணுறீங்க? ரெண்டு பேரும் கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டீங்களா? நல்ல முடிவுதான்” சந்தோசமாக புன்னகைக்க கயல்விழி அவனை அதிர்ச்சியாக பார்க்க, பிரதீபன் முறைக்கலானான்.

“என்ன முறைப்பு கயல் நீ இப்படியேவா? இருக்கப் போற?. பிரதீப் உனக்கும் கயலை நல்லாவே தெரியும்” அவன் பேச்சு ரசிக்காமல் இருவரும் எழுந்துக் கொள்ள “நா சொன்னதை யோசிங்க” திரும்பி இருவருமே அவனை நன்றாக முறைத்து விட்டு அகல

“நா அப்படியென்ன தப்பா சொல்லிட்டேன்” அமுதன் யோசிக்க,

“மவனே நீ மட்டும் ரிஷியா இருக்கட்டும் என் கைல தான் உன் சாவு” பொறுமியவாறே பிரதீபன் முன்னாடி நடக்க,

“சம்பந்த படுத்தி பேசியதும் இல்லாம சம்பந்தமா பேசுறீங்க, உண்மை தெரியட்டும் வச்சிக்கிறேன் உங்கள” அவனை மிரட்டி விட்டே அகன்றாள் கயல்விழி.

அவள் சொல்வது புரியாமல் முழித்தான் அமுதன். 

அடுத்து வந்த நாட்களில் அமுதன், பிரதீபன் இருவரும் குழந்தைகளாக மாறி ஸ்ரீராமோடு ஆட்டம் ஆடிக் கொண்டிருக்க, அவர்களை அதட்டுவது கயல்விழியின் வேலையாகிப் போனது.

ராமு தாத்தா கோவில் குளம் என்று சென்று விட்டிருக்க, சமையலுக்கு பெண் ஒருவர் நியமிக்கப் பட்டிருந்தார்.

யாழிசைக்கு பிடித்த பின்னாடி இருந்த தோட்டத்தில் அவளுக்கு மிகவும் பிடித்த மஞ்சள் ரோஜாவும் பூத்துக் குலுங்க அதை கொண்டு வந்து நட்டது அமுதன் என்று அறிந்துக் கொண்டவள் அவன் தன் கணவன் தான் என்று முடிவு செய்து பேச அவனுக்கு மஞ்சள் ரோஜா மாத்திரமல்ல எல்லா பூவும் பிடிப்பதாகவும் அங்கே இல்லாத எல்லா பூவகைகளையும் தேடிவந்து தன் கையாலையே நாட்டுவித்ததாக சொல்ல அங்கே யாழிசை கண்டே இல்லாத பூக்களும் இருக்க மீண்டும் குழம்பினாள்.   

ப்ரதீபனின் உதவியோடு இலங்கைக்கு அழைத்து வீட்டாரோடு பேசி இருந்தாள் கயல்விழி. ஐந்து வருடங்களாக தொடர்ப்பில் இல்லாமல் இருந்த மகள் திடீரென போன் பண்ணவும் சந்தோசத்தில் துள்ளிக் குதித்தவர்கள் வசைபாடவும் மறக்கவில்லை.

எல்லா உண்மையையும் சொல்லாது பிரதீபன் சொன்னது போல் ரிஷிக்கு ஆக்சிடன்ட் ஆனதாகவும், திலகாவை பற்றியும், அவளின் நிலையை பற்றியும் எடுத்துக் கூற மங்கம்மா அழுது கரைய அவளை புரிந்துக் கொண்டு சீதாதான் பேசினாள்.

 தனவேந்தனின் அலைபேசிக்கு வீடியோ கால் செய்து அனைவரையும் கண்டுமகிழ்ந்தவள் ஸ்ரீராமை அறிமுகப்படுத்தி வைக்க எந்தநாளும் ஸ்ரீராமுக்கு வீடியோ அழைப்பு இயலிடமிருந்து வந்தது. “சித்தி சித்தி” என்று செல்லம் கொஞ்சி ஸ்ரீராம் பேச அங்கே தனவேந்தன் தான் முறைத்துக் கொண்டு நின்றான்.

இருவருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும் வயதும் சரி ஆனால் யாழிசை என்னவானாள் என்று அறியாமல் யாரும் அதை பற்றி பேசாதிருக்க, யாழிசையை பற்றியாவது தன்னோடு பேசிக் கொண்டிருந்தவள் இப்பொழுதெல்லாம் ஸ்ரீராமோடு ஒன்றிவிட கடுப்பில் கரைந்தான் அவன். அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இயல் இல்லை.

“அக்கா உன் பேரு கயல். என் பேரு இயல் நல்லா இருக்கில்ல” சந்தோசமாக பேசிக்கொண்டிருந்தவள் “ஊருக்கு வரமாட்டியா?” சோகமான குரலில் கேக்க

“கண்டிப்பா உன் கல்யாணத்துக்கு வரேன்” கயல்விழி சத்தியம் செய்யாத குறையாக சொல்ல அதன் பின் தான் அவளை விட்டாள்.

கமரை பற்றி விசாரிக்க அவளுக்கு கல்யாணம் ஆகி ஆண், ஒன்று பெண் ஒன்று என்று இரு குழந்தைகள் இருப்பதாகவும் நல்லா இருப்பதாகவும். கூடவே ஜகத் இராணுவத்தில் சேர்ந்து விட்டான் என்று இயல் தகவல் கொடுத்தாள்.

அன்று நடந்த சம்பவத்தை மறக்காமல் தங்கை இன்றும் இரகசியமாக ஜகத் பற்றி சொன்னதை நினைக்கையில் கயல்விழிக்கு சிரிப்பாகவும் இருந்தது.

வாரத்துக்கு ஒரு தடவை திவ்யாவுக்கு அழைத்து பேசிவிடுபவள் அங்கு நடப்பவற்றையும், போடிக்கை பற்றியும், தோட்டத்தை பற்றியும் விசாரித்து என்னென்ன செய்யவேண்டும் என்று சொல்வாள். இடையில் திவ்யாவுக்கு ஏற்படும் எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைக்க சொல்லி கயலுக்கு அழைத்தும் விடுவாள்.

அமுதனை அடையாளம் கண்டு கொண்டதால் திலகாவிடம் சிறு முன்னேற்றம் இருப்பதாக டாக்டர் சொல்ல திலகவதி குணப்படுத்தும் முயற்சியிலும் இறங்கினர் மூவரும்.

திலகாவை உனக்கு எப்படித்தெரியும், கயல் தான் அவங்க பொண்ணுனு உனக்கு எப்படித்தெரியும் என்று பிரதீபன் அமுதனை கேள்வி கேக்க

“அத்தையையே! உரிச்சு வச்சிருக்கா அதான் அத்த பொண்ணு கயல்னு சொன்னேன். திலகா அத்தனா.. எனக்கு உயிர். அத்த தான் என்ன பாத்துப்பாங்க, சாப்பாடெல்லாம் ஊட்டி விடுவாங்க” அமுதன் பழைய நியாபகங்களில் கண்கள் மின்ன சொல்ல

“அப்போ இவன் அம்மா எங்க? என்ன ஆனா?” என்ற கேள்வி கயல், பிரதீபன் இருவரின் மனதிலும் எழுந்தாலும் அமுதனின் முகத்திலிருந்த சந்தோசத்தில் அவனின் அம்மாவை பற்றி கேட்கவில்லை.

ஆனால் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறக்க அவசியமும் இருக்க அமுதனின் தந்தையை தேடலானான் பிரதீபன். மோகனசுந்தரத்தின் டயரிகள் அனைத்தும் மும்பாய்க்கு வந்த பின் எழுதப் பட்டவைகள் என்பதால் அதற்க்கு முன் நடந்த எதுவும் அதில் இருக்கவில்லை. நம்பத்தகுந்த டிடெக்டிவ் ஏஜென்சியை அணுகிய பிரதீபன் அமுதன் மற்றும் அவனின் பெற்றோர் பற்றி தகவல்களை வேண்டி நின்றான்.

ஸ்ரீராமும் மும்பையில் தனியார் ஆங்கிலக்கல்வி பாடசாலை ஒன்றில் சேர்க்கப்  பட, திலகாவையும் கவனிக்க தாதி ஒருவர் நியமிக்கப் பட கயல்விழி அவர்களின் வியாபாரத்தை கற்றுக்கொள்ள பிரதீபன், மற்றும் அமுதனோடு நகைக்கடைக்கு சென்று கொண்டிருந்தாள்.

Advertisement