Advertisement

அத்தியாயம் 1

“அம்மா…. என் அப்பா..  எங்கம்மா?”

செல்லமகன் கேட்ட கேள்வியில் ஸ்தம்பித்து நின்று விட்டாள் கயல்விழி. இன்று அப்பா எங்கே என்று கேற்கும் மகன்  “என் அப்பா யார்” என்று கேற்கும் நாளும் மிக விரைவில் வந்து விடும். கண்களில் வழியும் கண்ணீரை துடைக்கத் தோன்றாமல் மடியில் உறங்கும் மகனின் தலை கோதியவளின் எண்ணமெல்லாம் பின்னோக்கி சென்றது.

வருடம் 2013

இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படும் இலங்கை. பச்சை பசேல் என கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இருக்கும் சபரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் தலைநகரம் மற்றும்  இலங்கையில் இரத்தினக்கற்கள் கிடைக்கும் நகரம் இரத்தினபுரி.

பண்டையகாலம் தொட்டே ஆங்கிலேயர் தொடக்கம் அராபியர் வரை வந்து இரத்தினக்கற்களை வாங்கிச் சென்ற குட்டி நகரம். சுற்றி எங்கு பார்த்தாலும் உயர்ந்து நிற்கும் மலைகளும், சின்ன சின்ன நீர்வீழ்ச்சிகளும் பெருக்கெடுத்து ஓட மழைவீழ்ச்சியை அதிகம் கொண்ட ஊர். இலங்கையின் மூன்றாவது மிக நீண்ட நதி களுகங்கை இரத்தினபுரி நகரத்தினூடாகவே செல்கின்றது. அதிக மழையின் காரணமாக அடிக்கடி வெள்ளத்தால் பாதிப்படையும் நகரமும் கூட, சிங்களவர்கள் அதிகமாக வாழ்ந்து வந்தாலும், தமிழர்களும், முஸ்லீம்களும் சேர்ந்து வாழும் ஊர்.

நகரத்திலிருந்து இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டரில் இருக்கும் மலையடிவாரத்தில் உள்ள ஒரு குட்டி ஊரில் தான் யாழிசை வசிக்கிறாள். பத்தொன்பது வயதே ஆன யாழிசை வார்குழலி நீண்ட அடர்த்தியான முடியை கொண்ட மங்கை. கோலம் போட குனிந்தால் பாதம் தொடும். பெயரை போலவே! சிரிக்கும் போது சங்கீதமாக ஒலிக்கும் அவள் குரல். அதிகம் பேச வீட்டில் அனுமதி இல்லை. அன்னை எது சொன்னாலும் மனதில் பேசிக்கொள்ளுவாளே ஒழிய, வெளியே வாய் திறந்து பேச முடியாது. பேசினால் அடி எவ்வாறு இருக்கும் என்று இயலிசைக்குத்தான் நன்றாக தெரியும். நர்த்தனம் ஆடும் அவளுடைய பெரிய கண்களுக்கு மையிட்டு இன்னும் மெருகேற்றி இருக்க பார்ப்பவர்களை திரும்பி இன்னொருதடவை பார்க்க வைத்தாள். புன்னகைத்துக் கொண்டே இருக்கும் உதடுகள். அவளின் சிரிப்பு சத்தம் வீட்டில் அடங்கி இருக்கும் காரணம் அன்னை மங்கம்மாவின் அடக்கு முறைதான். எல்லா சத்தமும் தங்கை இயலிசை மற்றும் ஒரே தோழி கமருன்நிஷா விடம் மாத்திரமே!

 கடந்த ஆகஸ்டில் உயர்தர பரீட்ச்சை எழுதி முடித்தவள் பெறுபேர் வரும் வரை வீட்டில். வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. காரணம் மேல் படிப்பு படிக்க வீட்டில் அனுமதி இல்லை. அதற்காக யாழிசை வருத்தப்படவுமில்லை.

அவளுடைய ஆர்வம், விருப்பம் எல்லாம் தையலிலே இருக்க, எட்டாம் ஆண்டு படிக்கும் போதே தையல் வகுப்பில் சேர்ந்து முறையாக கற்றுக் கொண்டவள். அவளுடைய பொழுது போக்குக்காக ஆரம்பித்த வேலை இன்று கைத்தொழிலாக மாறி குடும்பத்துக்கு கொஞ்சம் பணம் வசூலாகிறது.

அப்பா யோகராஜ் கூலித்தொழிலாளி. இரு பெண்கள் மீதும் உயிரையே வைத்திருந்தாலும் மங்கம்மாவின் வாய் சத்தத்துக்கு அடங்குபவர். ஒரு வயதுக்கு மேல் செல்லம் கொஞ்ச முடியவில்லை. அவருக்கு இருக்கும் ஒரே பலவீனம் சீட்டாட்டம்.  அவரின் அக்கா சீதாலட்சுமி பக்கத்து வீட்டில் குடியிருப்பதால் மங்கம்மாவோடு சண்டையிட்டாலும் குழந்தை குடும்பம் என்று வாழ்கிறார்.

மங்கம்மா கணவனிடம் சண்டை போட்டாலும் காரியத்தில் கைகாரி. சொற்ப  சம்பளத்தில் குடும்பத்தை நடாத்தும் வல்லமை வாய்ந்தவள். வீட்டுக்கு பின்னாள் உள்ள சின்ன இடத்தில் செடிகளையும், கீரைகளையும் பயிரிட்டு பக்கத்தில் உள்ள கடைக்கு கொடுப்பதோடு, காலை உணவாக இடியாப்பமும், பாயா மற்றும் தேங்காய் சம்பலும் அவள் கைப்பக்குவம் ஊரே மணக்க நல்ல வருமானம். சீட்டும் போட்டு காசை சேர்த்து வீட்டை கொஞ்சம் கொஞ்சம் கட்டலானாள். மகள் சம்பாதிப்பதை அவள் பெயரில் சேர்ப்பது மகளுக்கே தெரியாது. பாசத்தை வெளிப்படையாக காட்டாதவள். பெண் பிள்ளைகளை வயதுக்கு வந்த பின் வீணாக கடைத்தெருவுக்கு கூட அனுப்பாதவள் மங்கம்மா. அவளின் பலவீனம் யாராவது சிக்கினால் உலகத்தை மறந்து கதையடிக்க ஆரம்பிப்பாள். லொடலொடவென நிக்காமல் பேசுவதால், இயலிசை அவளுக்கு வைத்திருக்கும் செல்லப்பெயர் “கோச்சி” {train}  

இரண்டு அறைகளை கொண்ட மிக சிறிய வீடு. குட்டி வாசல். சாப்பாட்டறை. சமையல் கட்டு வெளிப்புறத்தில். அதுவும் மண் அடுப்பு. எரிவாயு அடுப்பெல்லாம் அவர்களுக்கு கனவுதான். வீட்டையே இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இத்தனை வருடங்களில் கட்டி முடித்தனர். சீமெந்து தரை. ஓட்டாலான கூரை. முகட்டு கூரை கூட இன்னும் பொறுத்தவில்லை. ஒரு பழைய டிவி. நாலு பிளாஸ்டிக் கதிரைகள் வாசலில் இருக்க, யாழிசை மற்றும் இயலிசை உபயோகிக்கும் அறையில் ஒரு பலகையிலான கட்டில் அது அவள் வயதுக்கு வந்த போது சீராக அத்தை சீதா கொடுத்தது. ஒரு இரும்பு பீரோ. சமையல் செய்ய போதுமான பாத்திரங்கள். 

“அம்மா தைக்க கொஞ்சம் நூல் வாங்கணும், அத்தான கடைக்கு போயிட்டு வர சொல்லுறியா?”  கொல்லைப்புறம் இருந்து பார்த்தால் சீதாவின் வீடு தெரியும் ஒரு குரல் கொடுத்தால் எட்டிப் பார்ப்பாள்.

“ஏன் நீ சொன்னா அவன் போக மாட்டானா?” கடுகடுவென்று எப்போதும் போல் பொரிய

“ஆமா அந்த சிடுமூஞ்சி நா சொன்ன உடனே ஓடி போய் எடுத்துக்கொண்டு வருவான்” உள்ளுக்குள் திட்டினாலும் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு “இல்லமா அத்தானுக்கு ஏதாவது வேல இருக்க போகுது. வேல நேரத்துல சொன்னா அவருக்கு பிடிக்காதே!” மிகவும் பணிவான குரலில் அன்னைக்கு புரியவைக்க

“ஆமா தொர சீமைல உக்காந்து வேல பாக்குறாரு {அரசாங்க உத்தியோகம்} காச கொடு. என்ன இல்லனு நேரங்காலத்தொடு பார்த்து சொன்னா வாங்கி வைக்கலாம்ல உடனே சொன்னா யார்தான் போவா? இதெல்லாம் வாங்க டவ்னுக்கே போகணும்னு தெரியாதா?” சிடுசிடுத்தவாறே அவளை முறைத்தவர் அகன்றார்.

சீதாலட்சுமிக்கு இரண்டு புதல்வர்கள். இளையவன் தனவேந்தன் வயது பதினேழு, யாழிசை இயலிசையோடு சிரித்து பேசினாலும், மூத்தவன் இளவேந்தன் வயது  இருபத்தி இரண்டு முறைப்போடு திரிபவன். எங்கே பார்த்தாலும் இவர்களை அடக்க நேரம் பார்த்துக் கொண்டே  சுற்றும் முரட்டுக் காளை. மகளை அதட்டியவாறே சென்றாலும் மங்கம்மாவுக்கும் அவன் குணம் தெரியும்.

“ஏ புள்ள யாழூ” என்றவாறே உள்ளே நுழைந்தாள் கமர். யாழிசையை தேடிவரும் ஒரே ஜீவன்.

“வாடி நிலா. {கமர் என்ற அரபிச் சொல்லுக்கு நிலா என்று பொருள்} தனியாவா வந்த”

“எங்க வீட்டுல எங்க தனியா விடுறாங்க நாநா {அண்ணண்} வெளிய தான் நிக்குறான். இந்தா நீ கொடுத்த துணிக்கு எம்ப்ரோடேறி வேல போட்டாச்சு. வேற ஏதாவது இருக்கா?”

“ஏன் டி இதுக்கு நீ அலையணுமா? யார் கிட்டயாவது கொடுத்து விட வேண்டியது தானே!”

“வீட்டுல உக்காந்து போர் அடிக்குது உன்ன பாத்து ரெண்டு நிமிஷம் பேசிட்டு போலாம்னு வந்தேண்டி” முகம் கவலைக்குள்ளாக

“சரி சரி வா உக்காரு”

கமருன்நிஷா அங்கே குடிவந்தது யாழிசை எட்டாம் ஆண்டில் படிக்கும் போது. அன்று தொடக்கம் இன்றுவரை இருவரும் நெருங்கிய தோழிகள். எது செய்தாலும் ஒன்றாகவே செய்பவர்கள். பாடசாலை வாழ்க்கையின் பின் அடிக்கடி சந்திக்க முடியாவிட்டாலும், வாரத்துக்கு ஒருநாள் அவள் இங்கே வந்து விட யாழிசையும் சென்று வருவாள். 

“என்னடி யோசிக்கிற” யாழிசை கேக்க

“வீட்டுல வரன் பாக்க ஆரம்பிச்சிட்டாங்க”

“இப்போவேவா?”

“A / L  வரை படிக்க விட்டதே பெரிய விஷயம்” பெருமூச்சு விட்டவள். உன் வீட்டுல என்ன சொல்லுறாங்க”

“அந்த சிடுமூஞ்சுக்கு என்ன கல்யாணம் பண்ணி வைக்க பேச்சு வார்த்த நடக்குது அவன் மட்டும் தாலியோட வரட்டும் ஓடவிடுறேன்” என கலகலவென்று சிரித்தவள் அறியவில்லை அவளை ஆளப்போகும் மணாளன் அவளை தேடித்தான் வந்து கொண்டு இருக்கிறான் என்று.

வாசலில் கமரின் அண்ணண் ஹார்ன் அடிக்க “ஐஞ்சு நிமிஷம்னு சொன்னா சரியா அடிக்கிறான் பாரு காது சவ்வு கிழியுது. திட்டிக்கிட்டே தான் போகப்போறான்” என்றவள் விடைபெற்று செல்ல அவள் சொன்னது போல் முகத்தை உர்ர் என்று வைத்துக் கொண்டு அவளுடைய அண்ணண் ராஷீத் அவளை திட்டிக் கொண்டு வண்டியை கிளப்புவது ஜன்னலினூடாக தெரிந்தது. ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டவள் நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்களாகியும் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றே தோன்றியது அவளுக்கு.

“இன்னைக்கி வெள்ளிக்கிழமை டி கோவிலுக்கு போய் விளக்கேத்திட்டு வா” மங்கம்மா வாசல் படியிலிருந்து கத்த

“இயல் நீயும் வாடி” தங்கையிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் யாழிசை

இயலிசை யாழிசையை விட ஐந்து வயது சிறியவள்.  அவளோ பாடசாலை விட்டு மாலை வகுப்புகளுக்கும் சமூகமளித்து விட்டு ஐந்து மணிக்கு தான் வீடு வந்தாள். துணி கூட மாற்றாமல் சோர்வாக படுத்திருந்தாள்

 “இன்னைக்கி மாட்டு போ… கா”

“தனியாவா” யாழிசை முழிக்க

“பத்து வீடு தள்ளி தானே கோவில் இருக்கு எதுக்கு இப்படி பயந்து சாகுற” இயல் திரும்பி படுத்துக்க கொண்டாள்.

தங்கை சொல்வதும் சரிதான். பிறந்து, வளர்ந்த ஊர். எல்லாம் தெரிந்தவர்கள் யார் என்ன செய்து விட போவார்கள். இருந்தாலும் ஒரு தயக்கம், பயம். ஏனோ இன்று நடக்கக் கூடாதது நடக்கப் போவதைபோல் ஒரு உணர்வு.

மங்கம்மா கத்துவது ஒயாததால் அர்ச்சனை தட்டை கையில் எடுத்தவள் விறுவிறுவென வாசலுக்கு வந்து செருப்பை காலில் மாட்ட

“எங்கடி அவ” மங்கம்மாவின் அதட்டலான குரலில் யாழ் நடுங்கினாலும்

“தூங்குறாம்மா. பாவம் ரொம்ப சோர்வா இருக்கு போல”

“சரி நீ வா” என்றவள் செடிகளுக்கு நீர் ஊற்ரிக் கொண்டிருந்த வாளியை கீழே வைத்து விட்டு “ரெண்டு பொம்பள புள்ளைங்க இருக்குற வீடுன்னு பேரு எல்லா வேலையும் நானே பாக்க வேண்டி இருக்கு”  முணுமுணுத்தவாறே முன்னாடி நடக்க

அன்னை சொன்னதை கேட்டு திகைத்து நின்றாள் யாழிசை. பாடசாலை செல்லும் போதும் வீட்டில் எல்லா வேலைகளிலும் பங்கெடுப்பவள் அவள்.  பாடசாலை வாழ்க்கை முற்றுப்பெற்றதிலிருந்து, சமையல் வேலையும், சட்டிபானைகளை கழுவுவதும் அவள் வசம். துணிகளை மட்டும் மங்கம்மா பக்கத்தில் இருக்கும் ஓடைக்கு போய் கழுவுவாள். இல்லாவிடில் அதையும் யாழிசைதான் செய்திருப்பாள். தையல் வேலைகளை கூட நேரங் கிடைக்கும் போதுதான் செய்வாள். அவசரம் என்றால் வாங்கவும் மாட்டாள், முக்கியமானவர்கள் என்றால் இரவில் கண்முழித்து தைத்துக் கொடுப்பாள். இயலிசை சின்ன  பிள்ளை என்று மங்கம்மா வேலை வாங்கவும் மாட்டாள். யாழிசையும் அவளை செய்ய விடமாட்டாள்.

சின்ன மகள் என்றால் மங்கம்மா சில நேரம் கொஞ்சம் மனசு இறங்குவாள். யாழிசை அதிகம் பேசாதவள். சாப்பாடோ! துணிமணியோ! எல்லாம் மங்கம்மாவின் விருப்பம் தான். யாழிடம் உனக்கு ஏதாவது வேணுமா என்று கேட்டதும் இல்லை. அவள் சொன்னதுமில்லை. சின்னவள் கேட்டது சிலநேரம் கிடைக்கும். அது என் என்று யாழிசைக்கு இன்று வரை புரியவில்லை. அதை அறியும் போது எல்லாமே வேறுமாதிரி அவளுக்கு தெரிவதில் வியப்பில்லை.

“கடைல காசு வாங்கிட்டு வரேன் நீ போ” கோவில் வாசல்வரை வந்த மங்கம்மா முன்னே நடந்தாள்.

 ஊர் கோவில் ரொம்ப பெரியது. மதில் சுவரே அரை கிலோமீட்டருக்கு இருக்க,மனம் படபடக்க  உள்ளே சென்ற யாழிசை விளக்கேற்றி கடவுளை வணங்கியவள் வெளியே வர பாதையும் வெறிச்சோடி இருந்தது. ஒரு ஈ, காக்காய் கூட அந்நேரத்தில் இல்லை. கோவிலை தாண்டி வலது புறத்தில் விளையாட்டு மைதானம். மைதானத்துக்கு முன்னால் கோவிலை தாண்டி ஓடும் ஓடை. மைதானம் முடிவுறும் வளைவோடு கடை. கடையிலிருந்து எட்டிப்பார்த்தால் இவள் நிற்பது தெரியும். மழை வருவது போல் இருக்க மைதானத்தை விளையாடும் சிறுவர்களை காணவில்லை. இல்லையெனில் பள்ளிவாசலில் அதான் ஒலிக்கும் நேரம் தான் வீடு செல்வார்கள். கடைக்கு சென்ற மங்கம்மாவை இன்னும் காணவில்லை. யாருடன் கதையடித்துக் கொண்டு இருக்கிறாளோ! ஒருவேளை காசை எடுத்துக் கொண்டு வீடு சென்றாளோ! யாழிசையின் எண்ணம் இவ்வாறு இருக்க, அவளின் இடது புறத்தில் பத்தடி தள்ளி கருப்புற நிற ஜீப் வண்டியிலி அமர்ந்து இவளின் முகபாவங்களை ரசித்துக் கொண்டிருந்தான் ரிஷி என்கிற ரிஷி வரதன்.

இரண்டு வருடங்களில் எவ்வளவு மாற்றம். அன்று கொஞ்சம் முகத்தில் குழந்தை தனமாய் இருந்தவள், இன்று குமரியாய். பச்சை நிற தாவணி, பூக்கள் கொண்ட பாவாடை, ரவிக்கை சிவப்பு நிறத்தில். சின்னதா கருப்பு வட்டப் பொட்டு. கையில் சிவப்புநிற பிளாஸ்டிக் வளையல்கள். காதில் சின்னதா தங்கத்தோடு. கழுத்தில் எந்த அணிகலனும் இல்லை. அன்று போலவே கனகாம்பரம் தான் சூடியிருந்தாள். அதுவே அவளை தேவதையாக காட்ட, ரிஷியின் பார்வையோ அவளின் செழுமைகளிலேயே இருந்தது.

அன்னை எங்கே! என்று திருவிழாவில் காணாமல் போன குழந்தைபோல் முழித்துக் கொண்டிருந்தவளின் கண்களும் லேசாக கலங்க அவள் அருகில் சைக்களில் வந்து நின்றான் ஜகத்.

ஜகத் ஒரு பௌத்தன். பக்கத்து வீடு. யாழின் அத்தான் சிடுமூஞ்சி இளவேந்தனின் நண்பன். ஏன் கமரின் அண்ணன் ராஷீதின் நண்பனும் கூட. அறிந்தவன் என்பதால் யாழ் சினேகமாக புன்னகைக்க ரிஷியின் கண்கள் சிவந்தது.

“ஆ.. நங்கி கோவிலட ஆவாத?  {தங்கச்சி கோவிலுக்கு வந்தீயா?}

“இல்லடா கடைக்கு வந்தேன்” மனதில் குமுறினாலும் “ஆமாம்” எனும் விதமாக தலையசைக்க

“நங்கி பொடி உதவ்வக்  கரணவாத?” {ஒரு சின்ன உதவி செய்ரியா?}

“என்னடா இது வம்பா போச்சு. தெரிஞ்சவன்னு சிரிச்சது ஒரு குத்தமா? என்ன கேக்க போறானோ” என்று நினைத்தவள் கலவரமாக முகபாவத்தோடு சுற்றும் முற்றும் பார்க்கலானாள். ஏனெனில் யாராவது பார்த்து விட்டு “அன்னையிடம் சொன்னால்? ஐயோ கடைக்கு போய் இருக்கும் அன்னை வந்தால்? எதனால் அடிப்பாளோ!” என்ற எண்ணமே மனதில் ஓட ஜகத் நீட்டிக்க கொண்டிருந்த காகிதத்தை கவனிக்கவில்லை.

ஜீப்பில் இருந்த ரிஷிக்கோ அவன் இவளிடம் காதல் கடிதம் நீட்டுவது போலவே! தெரிந்தது. அவன் பேசும் பாஷையும் புரியவில்லை. என்னதான் நடக்குது வாங்குவாளா? அவ மட்டும் வாங்கட்டும் அவனை கொன்னுடுறேன்” கைமுஷ்டி இறுக யாழிசையை தான் பாத்திருந்தான்.

அவளை பார்த்து இரண்டு வருடங்கள் இருக்குமா? இன்றுவரை மறக்க முடியாத முகம். இனிமேல் பொறுக்க முடியாது என்றுதான் கிளம்பி வந்திருந்தான். அவளை முதலில் சந்தித்த இடத்துக்கே வந்து அவள் வருவாளா? மாட்டாளா என்று தவமிருக்க, எவன் கூடயோ!” அதற்க்கு மேல் அவனால் யோசிக்க முடியவில்லை.

“நங்கி ப்ளீஸ் மேக நிஷா நங்கிட தெண்ட” {இதை நிஷாக்கு கொடு} என்றவன் பலவந்தமாக கையில் திணித்து விட்டு சைக்கிளில் பறந்து விட்டான். அவன் செய்த இச்செயலால் யாழிசை காலம் முழுவது ரிஷியிடம் பேச்சு கேக்க வேண்டியிருக்கும் என்று அவன் அறிந்திருப்பானா?

ஒருநொடியில் கையை பிடித்து காகிதத்தை திணித்து விட்டு ஜகத் சென்று விட யாழிசை அதிர்ச்சியில் உறைந்தாள். அவன் நிஷா என்று சொன்னது கமரை என்றது புத்தியில் உரைக்கவே!

“நண்பன்னு வீட்டுக்குள்ள விட்டா என்ன வேல பாக்குறான்? அடேய் அவ அண்ணன் கிட்ட கொடுக்க வேண்டியது தானே! உன்ன உரிச்சு உப்பு கண்டம் போட்டுடுவான்” ராஷீதின் “உர்ர்” முகம் நியாபத்தில் வரவே,  முகத்தில் புன்னகை மலர அதை கண்டு ரிஷியின் இரத்தம் சூடாகியது.

“நீ எனக்கு மட்டும் தாண்டி சொந்தம். உன் மனசுல நா மட்டும் தான் இருக்கணும்” யாழிசையை பார்த்தவாறே கருவியவன் கதவை திறந்துக் கொண்டு இறங்கி சோம்பல் முறிக்க

திடீரென கேட்ட சத்தத்தில் ஜீப்பில் இருந்து வாட்ட சாட்டமாக ஒருவன் இறங்குவதை கண்டவள் அவனை பார்க்க, தாடி வைத்த முகம். கண்ணில் கூலரோடு

 “புள்ள புடிக்கிறவன் மாதிரி இருக்கான்” என்று கண்கள் ஆராய மனமோ

“ஐயோ யாரிவன் எல்லாத்தையும் பாத்துட்டானோ! சோம்பல் முறிக்கிறத பாத்தா? தூங்கி கிட்டு இருந்திருப்பான் போல” தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு யாழிசை மீண்டும் அன்னை வருகிறாளா என்று பார்க்க அவள் வரும் அறிகுறியில்லை. சூரியனும் மங்கிக் கொண்டு வர இதற்க்கு மேல் இங்கிருப்பது நல்லதல்ல என்ற எண்ணம் மேலோங்க மெதுவாக வீடு நோக்கி நடக்கலானாள்.

ரிஷியை கடக்கும் போது யாழிசையின் ஜடையை பிடித்து இழுத்திருந்தான் அவன். அவன் இழுத்த வேகத்தில் அவன் மேலே அவள் சாய அவளை பின்னாள் அணைத்தவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து “யார் டி அவன்” என்று கேட்டவாறே அவள் கையிலிருந்த கடிதத்தை பிடுங்கி இருந்தான்.

அவனின் தடித்த உதடுகள் நச்சென்று கழுத்து வளைவில் முத்தம் பதிக்க,  ஒரு ஆணின் முதல் ஸ்பரிசம். மேனி சிலிர்க்க, இதயம் படபடக்க, உடல் பயத்தால் உதற, அதிர்ச்சியில் உறைந்தாள்.  

ஒருசில  நிமிடங்களில் நடந்தேறியதில் அதிர்ச்சியடைந்தவள் அவனை விட்டு விலகத்தோன்றாமல் ஸ்தம்பித்திருக்க, அதற்கும் அவளையே குற்றம் சாட்டினான் ரிஷி.

“என்ன டி அப்படி சொக்கி நிக்குற? ஆம்பள சுகம் கேக்குதோ?”

அவன் கேட்ட கேள்வியில் விதிர்விதித்து போனவள் மேனி நடுங்க அவனை விட்டு விலக முயற்சிக்க அந்தோ பரிதாபம் அவனின் இரும்புப் பிடிக்குள் சிக்குண்டு இருந்தவளுக்கு அவனை அசைக்க முடியவில்லை.

அவன் கண்களில் அவள் விம்பம் சதா இம்சிக்க, யாழிசையை  பார்க்க மாட்டோமா? என்று மனம் ஏங்கி கிடக்க அவளே அவன் கைகளில் இருக்கும் போது சுற்றுச்சூழலை மறந்தான். இரண்டு வருடங்களாக அவனின் தூக்கத்தை கெடுத்த ஒரே பெண் யாழிசை. கையில் கிட்டிய சொர்க்கத்தை விட அவன் என்ன முட்டாளா? அவளின் வாசம் அவன் நெஞ்சை நிரப்ப. கண்களை மூடிக்கொண்டவனின் சிந்தனையில் அவள் ஒருத்தியே! இப்பொழுதே அவள் வேண்டும் என்று நாடி, நரம்பெல்லாம் துள்ளிக் குதிக்க அவள் அனுமதியோ அவனுக்கு அவசியமற்று போனது.  

அவளின் மேனியெங்கும் அவன் கைகள் ஊர்வலம் போக பெண்ணவளுக்கு எங்கிருந்துதான் வீரம் வந்ததோ அர்ச்சனை தட்டாலையே அவனின் தலையில் அடித்தாள். கனமான பித்தளை தட்டு அவன் நெற்றியை நன்றாக பதம் பார்க்க, அவன் “அப்பா…” என்ற கத்தலோடு அவளை விடுவிக்க யாரவன் என்று பாக்கவும் தோன்றாமல் சிட்டாக வீடு நோக்கி பறந்திருந்தாள் யாழிசை.  

சுகம் என்ற ஒளிப்பாதையில்  பயணித்தவனை வேதனையென்ற ஒன்றால் நிறுத்தியிருக்க அவனின் தாப அலைகள் தடம் மாறின.

அர்ச்சனை தட்டிலிருந்து பொருட்கள் அவன் காலடியில் கிடக்க, அவள் அடித்ததில் நெற்றி சிவந்து வீங்கி அந்த இடத்தில் இரத்தம் கட்டி எரிய, தலையும் இரும்பாக கனத்து வலிக்க, சுள்ளென்ற வலி உடல் முழுவதும் அது அவளை அணைத்தால் தான் அடங்கும் என்றிருக்க,  தன்னை அடித்து விட்டு செல்லும் அவளை வெறி கொண்ட வேங்கையாய் பார்த்திருந்தான் ரிஷி வரதன்.

    பெண்ணின் பூ மனம் தொட்டு மடிசாய அவனுக்கு தெரியவில்லையா? அல்லது பெண் என்பவள் உடல் சுகத்தை வாரி வழங்குபவள் என்ற எண்ணமா?   அவன் நினைப்பது அவன் மட்டுமே! அறிவான்.

Advertisement