Advertisement

அத்தியாயம் 6
வழக்கம் போல் காலையில் எழுந்த உடன் தலையாய கடமையாக சீசீடிவியை ஆராந்துக் கொண்டிருந்தான் அக்ஷய். கொஞ்சம் நாட்களாகவே அவன் பார்வை மதியின் வீட்டின் முன்னால் உள்ள சீசீடிவியில் தான் அதிகமாக படியும். காரணம் யோகா செய்யும் மதியும், லட்சுமியும் செய்யும் வாக்குவாதம் தான். 
அவர்கள் கொடுக்கும் முகபாவனையே அவர்கள் என்ன பேசுவார்கள் என்ற ஆவலை தூண்டியிருக்க, அதற்கும் ஏற்பாடு செய்து அவர்களின் பேச்சை ஒட்டுக் கேக்கலானான். அதில் அவன் அறிந்துக் கொண்ட முக்கியமான விஷயம் லட்சுமிக்கு ராஜவேல் ஆவியாக அலைவது தெரியாது என்பதே! 
அவர்கள் சண்டை போடுவது போல் பேசிக் கொண்டாலும் ஒருத்தர் மீது ஒருத்தர் வைத்திருக்கும் அன்பை காணும் போது தன் அன்னையும் தன் அருகில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. 
அன்னையுடனான நியாபகங்கள் ஏழு வயது வரை மாத்திரமே! அன்னை இறந்த பின் தான் தந்தையோடு வந்து வாழ ஆரம்பித்தான். சகோதர்களின் கொடுமைகளை தாங்காது மூன்றே மாதத்தில் தந்தையே அவனை அமேரிக்கா அனுப்பி வைத்தார்.
தந்தையின் முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. அதனாலயே அவரை விவாகரத்து செய்து தன்னுடைய பி.ஏ. வாக இருந்த சமேலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில் தன்னுடைய அன்னையை ஏன் திருமணம் செய்தார் என்று இதுவரை அவனுக்கு புரியவில்லை. 
திருமணம் செய்து ஏன் பிரிந்து வாழந்தார்கள் என்றும் தெரியவில்லை. அன்னை இறந்ததற்கும் என்ன காரணம் என்றும் தெரியவில்லை. எல்லாரும் கூறுவது போல் தன் அன்னை தந்தையோடு முறையில்லாத வாழ்க்கை வாழ்ந்தவரா? இல்லையே! மங்கலசூத்ரா அணிந்திருந்தாரே! ஒவ்வொரு விஷேசத்திலும் தந்தை என் கூடவே தான் இருப்பர். என் ஒரு பிறந்த நாளைக்கு கூட மறக்காம வந்துடுவாரே! அந்த குடும்பத்தை எவ்வாறு வைத்திருந்தாரோ அவ்வாறே எந்த ஒரு குறையும் இல்லாது வைத்திருந்தார். பின் ஏன் இந்த நிலை என் அன்னைக்கு வந்தது. இன்றும் அசோக் சாம்ராட்டின் மூன்றாவது மகன் என்ற பெயரோடு சட்டவிரோதமாக பிறந்தவன் என்ற அவப்பெயர் ஏன் என்னை சேர்ந்தது? 
இரண்டாவது மனைவியை முறை படி திருமணம் செய்தாலும் சமூகத்தில் அத்திருமணம் ஏற்றுக் கொள்ளப் படாமல் அப்பெண்ணுக்கு வேறு பெயர் தான் வைப்பார்கள். அக்ஷையின் அன்னையோ மூன்றாவது மனைவி. அமெரிக்காவில் வளர்ந்த அக்ஷய்க்கு இங்குள்ள கலாச்சாரமும், சூழ்நிலையும்  புரியவில்லை.  
சிந்தனையில் இருந்து விடுபட்டவனோ மதி ஒருவனோடு தோள் மேல் கை போட்டுக் கொண்டு வந்து கொண்டிருப்பதைக் கண்டான். 
“யார் இவன்? எப்படி உள்ளே வந்தான்? இவ்வளவு நெருக்கமா மதியோடு…. ” அவர்களின் நெருக்கமோ அக்ஷையின் புருவம் சுருக்க வைக்க அவர்கள் பேசுவதைக் கவனிக்கலானான். 
“டேய் நிர்மல் பீசா, பர்கர் னு சாப்பிட்டு நீ குண்டாகிட்ட” மதி அவனின் தலை முடியை கலைத்தவாறு  சொல்ல 
அவளின் கழுத்தில் கை போட்டு தன்னுள் இறுக்கியவாறே “ஏன் டி என் உயரம் உன் கண்ணுல படாதா? ஆமா வீடு மாறி இருக்கீங்க பழைய வீட்டுக்கு போனா.. வீடு பூட்டி இருக்கு. போன் பண்ணி கேக்க வேண்டி இருக்கு நீயெல்லாம் என்ன பிரெண்டோ?”
“என் அப்பா இறந்தப்ப கூட நீ வரல நீ பேசாத” 
“அங்கிள் மரணம் ரொம்ப அதிர்ச்சிதான் ஆனாலும் நீ இன்னமும் அவர் கூட பேசிக் கிட்டு தானே இருக்க அதான் நான் இங்க வரத பத்தி நினைக்கல” 
“போடா… பயந்தாங்கொல்லி” எகிறி குதித்து அவன் மண்டையில் கொட்டியவள் ஓட ஆரம்பித்தாள்.   
நிர்மலும் மதியை பிடிக்க துரத்த அனைவரின் கண்களும் இவர்களின் மேல் தான் இருந்தது. 
“வாப்பா… நிர்மல். உன்ன கண்டு ரொம்ப நாளாச்சு நல்லா வளர்ந்துட்ட” லட்சுமி அன்பாக விசாரிக்க வளர்ந்துட்ட என்று சொல்லும் போது மதி அகலாத்தால் கையை காட்ட அவளை முறைத்தான் நிர்மல். 
“ஆமாம் ஆன்டி நீங்க எல்லாம் வி.வி.ஐ.பி ஆகிட்டீங்க இந்த மாதிரி ஒரு ஏரியால கூடிவந்து இருக்கிறீங்க? இந்த மதி சொல்லவே இல்ல. லாட்டரி ஏதாவது…” 
“ஐயோ நீ வேற பா” 
“போலீஸ் குவார்ட்டஸ் மாதிரியும் தெரியலையே! இவளவு பாதுகாப்பா..” நிர்மல் யோசிக்க மதி சிரிக்கலானாள். 
அவனுக்கு குடிக்க காபியை கொடுத்தவாறே முத்துலட்சுமி அக்ஷையை பற்றியும், மதியின் வேலையை பற்றியும் சொல்ல மதி கண்சிமிட்டி புன்னகைக்க 
“மதி நீ பெரிய ஆளுதான் போ” என்றவன் கதைக் கேட்டவாறே காபியை அருந்தி முடிக்க
“வா ஒரு ரேஸ் வைக்கலாம் யாரு ஜெயிக்கிறானு பார்க்கலாம்” மதி நிர்மலின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வர நிர்மலும் ஷூ லேசை இறுக்கி கட்டிக் கொண்டு குதித்து கால் கைகளை உதறி தயாரானான். 
எதுவரை என்ற எல்லைக் கோட்டை நிர்ணயித்து விட்டு ஓட்டமெடுக்க மதியின் இன்னொரு பக்கத்தை வியந்து பாத்திருந்தான் அக்ஷய். 
எதற்கெடுத்தாலும் விறைப்பாய்  பேசும் மதி. அக்ஷய் என்ன சொன்னாலும் திருப்பி பதில் கொடுக்கும் மதி. தான் நினைத்ததை செய்வதில் பிடிவாதமாக நிற்கும் மதியை பார்த்திருந்தவனுக்கு ஒரு மணித்தியாளமாக குழந்தையாய் மாறி சுற்றுப் புற சூழலை மறந்து விளையாடிக் கொண்டிருப்பவளை பிடித்துப் போனது. கூடவே கூட இருப்பவன் யார் என்று அறியும் ஆவலும் வந்தது. அவனுடைய இடத்துக்கு அவன் அனுமதியில்லாமல் யாரும் வர முடியாதிருக்க, இவன் எவ்வாறு உள்ளே வந்தான். யார் அனுமதி கொடுத்தது. தன்னை மீறி இங்கே என்ன நடக்கின்றது? ஒரு வேலை ராஜவேலு ஏதாவது செய்து இவனை உள்ளே அழைத்து வந்திருப்பாரோ? அக்ஷையின் சிந்தனை பலவாறு செல்ல மதி இருக்கும் இடத்துக்கு சென்றான். 
ஓட்டத்தை முடித்துக் கொண்டு மூச்சு வாங்கி நின்ற நிர்மலும், மதியும் “நான்தான் நான்தான் ஜெயிச்சேன்” என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். 
அவர்களிடம் வந்த அக்ஷய் “ஹாய்” என்று கையசைக்க முகம் சுளித்தாள் மதி. 
“ஹாய் அக்ஷய் சார். ஹவ் ஆர் யு” நிர்மல் சினேகமாக கை நீட்ட அக்ஷய் அவனின் கையை பற்றிக் குலுக்கலானான். 
அக்ஷய் நிர்மலுக்கு கை கொடுப்பதை அதிசயமாக பாத்திருந்த மதியழகியின் போலீஸ் மூளையோ “நிமிடத்தையே பணமாக்க யோசிக்கும் அக்ஷய் போன்ற ஒருவன் நிர்மல் போல் சாதாரணமான ஒருவனுடன் சினேகமாக உரையாட ஏதோ வலுவான கரணம் இருக்க வேண்டும்” என்று அடித்துக் கூற ஆராய்ச்சியாக அக்ஷையை பாத்திருக்க அவள் புறம் திரும்பி கண்ணடித்தவன் நிர்மலோடு பேசலானான். 
“இன்னைக்கி ஒரு நாள் மட்டும் இவளுக்கு விடுப்பு கொடுங்க சார்” 
துரு துரு னு துடிப்பாக பேசுபவனை அக்ஷய்க்கு ரொம்பவே பிடித்துப் போனது. 
மதியின் மனதுக்குள் பூகம்பமே வெடிக்க ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றவளை உலுக்கிய நிர்மல் 
“அதான் அக்ஷய் சாரே சரினு சொல்லிட்டாங்களே! வா போகலாம்” என்றவாறே அவளை இழுத்துக் கொண்டு போக அக்ஷையை திரும்பித்திரும்பி பார்த்தவாறே சென்றாள் மதி.
நிர்மல் மதியை அழைத்து சென்றது தங்கள் படித்த பாடசாலைக்கு. பாடசாலை நடந்து கொண்டிருக்கும் நேரம் என்பதால் நேராக அதிபரை சந்தித்த இருவரும் பாடசாலையை சுற்றிப் பார்க்க அனுமதி வேண்டி நின்றனர். 
பழைய மாணவர்கள் இவ்வாறு வருவது அபூர்வம் என்பதாலையே மாணவர்களுக்கு தொந்தரவாக இருக்காமல் பார்வையிடுமாறு அனுமதி வழங்கினார் அதிபர்.
இத்தனை வருடங்களாக பிரிந்திருந்த நண்பர்கள் இருவரும் பழைய கதைகளை பேசியவாறே பாடசாலையை சுற்றி வர யாரோ புடவை அணிந்த ஒரு உருவம் பெண்கள் கழிவறை பக்கம் செல்வதைக் கண்ட மதி யோசனையாக பார்த்தாள். 
“என்ன மதி அங்கேயே பாத்திருக்க”
“இல்ல ஒரு டீச்சர் பசங்க யூஸ் பண்ணுற டாய்லட் பக்கம் போறாங்க அதான்” 
“இதுல என்ன இருக்கு?  யாராவது ஒரு பொண்ணுக்கு ஏதாவது உதவி தேவைப் பட்டிருக்கும் அதான் போய் இருப்பாங்க” 
“இல்ல ஏதோ தவறா படுத்து இரு நான் போய் பார்த்துட்டு வரேன்” சொல்லியவாறே சென்ற மதி கழிவறைக்கு  வெளியே இருந்து குரல் கொடுத்தவள் பதில் வராது போகவே உள்ளே செல்ல அங்கு யாரும் இருக்கவில்லை. 
அது இப்பாடசாலையின் பெண்பிள்ளைகளுக்கான கழிவறை மாத்திரமன்றி நீச்சல் குளத்தில் குளித்து விட்டு வரும் பிள்ளைகள் குளிக்க ஏற்றவாறு ஐந்து  ஷவர் பொருத்தப்பட்ட சிறிய அறைகள் வலது புறமும், இடது புறம் ஐந்து கழிவறைகள், கழிவறைகளும், குளியலறைகளும் முடிவடையும் இடத்தில் இரு புறத்திலும் முகம் கழுவ வாஷ் பேசனும் முகம் பார்க்கும் கண்ணாடியும் பொருத்தியிருந்தது. துணி மாற்ற இரண்டு அறைகளையும் கொண்ட நவீன கழிவறையாக காட்ச்சியளித்தது.
உள்ளே வரவும் வெளியே செல்லவும் ஒரே ஒரு கதவு மாத்திரம் இருக்க “உள்ள வந்த டீச்சர் எங்க போனாங்க?” சுற்றும் முற்றும் பார்த்தவள் யோசனையாகவே வெளியே வந்தாள். 
“என்ன மதி. என்னாச்சு?”
“உள்ள யாருமில்ல”
“என்ன சொல்லுற?… ஒருவேளை நீ பார்த்தது?”
“ம்ம்.. ஆனா ஆவி மாதிரி தெரியல. நான் முகத்தையும் பார்க்கல” நிர்மலை பயமுறுத்த விரும்பாமல் ஆவியில்லை  என்று சமாளித்தாள்.
“அப்போ எங்க போனாங்க? உள்ள வேற யாருமே இல்லையா?”
“இல்ல” மீண்டும் சென்று வெளியே செல்ல வேறுவழி இருக்கா என்று பார்த்தவள் இல்லையென்று உறுதி செய்து கொண்டு வெளியே வந்தாள். 
அன்றையநாள் முழுவதும் நிர்மலோடு கழித்தவள் இரவாகும்வரை அவனோடு சுற்றி விட்டு அவனிடமிருந்து விடைப் பெற 
அக்கறையாக நிர்மல் “வா நானே உன்ன ட்ரோப் பண்ணுறேன்”
“இல்ல டா… ரொம்ப லேட் ஆகிருச்சு நீ வீட்டுக்கு போ உன் அம்மாவும், அப்பாவும் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. நானே போறேன்” ஒரு ஆட்டோ பிடித்து ஏறிக்கொண்டவள் நிர்மலுக்கு கையசைத்து விடைபெற நிர்மலும் கையசைத்து விடைப் பெற்றான். 
மதி வந்த ஆட்டோ அவள் படித்த பாடசாலையின் அருகே வர, ஆட்டோவை பாடசாலையின் பின்பக்கம் நிறுத்தியவள் சுவரேறி குதித்து உள்ளே நடக்க அவள் முகத்தில் டார்ச்லைட் அடிக்கப்பட கண்களை சுறுக்கிப் பார்த்த மதி அங்கே அக்ஷய் நிற்பதைக் கண்டு யோசனையாக அவனை ஏறிட்டாள்.
“நீங்க என்ன இங்க பண்ணுறீங்க?”
“அத நான் கேக்கணும்? வீட்டுக்கு வராம? சுவரேறி குதிச்சு உள்ள வரியே அப்படி என்ன வேல உனக்கு?”
மதி எவ்வளவுதான் அவனை மரியாதை பன்மையில் விழித்து ஒதுக்கி வைத்து தன்னையும் அவ்வாறே அழைக்க சொன்னாலும் அவளை பொருட்படுத்தாது ஒருமையிலையே அழைக்கலானான் அக்ஷய். 
“முக்கியமான வேல என்பதால தான் வீட்டுக்கு வரல. ஆமா நான் இங்க இருக்கேனு உங்களுக்கு எப்படி தெரியும்?”
“உன் போன்ல ஜி.பி.எஸ் ட்ராக்கர் செட் பண்ணிட்டேன். உன்ன பலோவ் பண்ணி வந்ததுல நீ இங்க வரவும் நானும் உள்ள வந்துட்டேன்” 
அவனை நம்பாத பார்வை பார்த்தவள் “எனக்கு முன்னதாகவே வந்திருக்கிருக்கிறீங்க, அதுவும் டார்ச்லைட்டோடு” 
“இதுல என்ன இருக்கு? நைட்டூனாவே டார்ச்லைட் தேவைப்படும் னு எடுத்து வந்தேன். உன்ன தேடி வந்ததுல உன் பிரெண்டு கிட்ட இருந்து விடைபெற்றியே!” அந்த பிரெண்டில் சிறிது அழுத்தத்தைக் கூட்டி  “நீ வேறு வழில போனதும் ஸ்கூல் பக்கம் போறியோனு சந்தேகம் வந்திருச்சு, நான் நினைச்ச மாதிரியே உள்ள வந்த. ஆமா அப்படி என்ன வேல” கேட்டவாறே மதியோடு சேர்ந்து நடந்தான் அக்ஷய் 
பாடசாலையோ முற்றிலும் இருளில் மூழ்கி இருந்தாலும், பிரதான கட்டிடத்தின் வாயிலிலும், நீச்சல் குளத்தின் அருகிலும், இன்னும் ஒரு சில இடங்களிலும் குறைவான வால்டேஜ் மின்குமிழ் எரிந்துக் கொண்டிருந்தது. மின்குமிழை சுற்றி சிறிய பூச்சிகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க, பெரிய வெளிச்சம் எதுவும் இல்லை. பத்தடியில் இருக்கும் ஒருவனின் முகம் தெளிவில்லாமல் நிழலுருவம் போல்தான் தெரியும்.
“நான் சுவரேறி குதிச்சு வந்தேன். நீங்க” மதி அவன் புறம் திரும்பிக் கேக்க 
“வாட்ச்மேனுக்கு காசு கொடுத்தேன். உன்ன மாதிரி சுவரேறி குதிச்சு, கையையோ காலையையோ உடைத்துக் கொள்ளும் ஆசை இல்ல. சின்ன சிராய்ப்பு கூட இல்லாம புத்திய பாவிச்சு உள்ள வந்தேன்” மதியை மட்டம் தட்டினான் அக்ஷய். 
“நான் போலீஸ் னு சொன்னாலே உள்ள விட்டிருப்பான். காலைல என்ன பார்த்ததால் கண்டிப்பா பிரின்சிபால் கிட்ட விசயத்த சொல்லுவான். இங்க எந்த தப்பும் நடக்கலைனா வீண் ப்ரோப்ளம் க்ரியேட் பண்ணாமாதிரி ஆகிடும்” நானும் மூளையை பாவிச்சு தான் உள்ளவந்தேன் என்று சொல்லாமல் சொன்னாள் மதி. 
‘எப்படியும் நீ ஒரு ஆவியை பார்த்துட்டு தான் இங்க வந்திருப்ப னு புரியுது, நான் என்ன செய்யணும்” அக்ஷய் தன்னாலான உதவியை செய்ய முன் வர 
“அது ஆவியில்ல ஆத்மா அதுவும் துர்ராத்மா”
“புரியல”
“இறந்தவர்களை நாம ஆவி, பேய், பிசாசுன்னு சொல்லுறோம். ஆனா ஆவி எங்குறது பவித்ரமான  ஆத்மா. அது நம்மள ஒன்னும் செய்யாது. ஆசைகள் நிறைவேறாமல் செத்தவங்க பேய். மனித உடம்புக்குள்ள புகுந்து ஆட்டிப் படைக்கும். பிசாசு, துர்ராத்மா என்பது கெட்டவங்களோடு ஆவி. அது ரொம்ப கொடூரமானது. எதிர்பாராத நேரத்துல மரணம் அடஞ்சி. தன்னோட இச்சைகளை தீர்த்துக்க அலஞ்சிக் கிட்டு இருக்கும். அப்படி இறந்த ஒருவர் தான் இங்க இருக்குறாரு” 
“யாரது” அக்ஷய் கேள்வியை கேட்கவும் மதி கழிவறையின் அருகில் வரவும் சரியாக இருந்தது.
வெளியே ஏதாவது  மின்விசைமாற்றுக்குமிழ் இருக்கிறதா என்று நோட்டமிட்டவள், உள்ளேதான் இருக்கும் என்று எண்ணினாள். 
மதி உள்ளே செல்ல அக்ஷையும் அவள் கூடவே உள்ளே நுழைந்தான். உள்ளே சென்ற மதி முதலில் செய்தது மின்குமிழ்களை உயிர்பெற செய்வதையே. மின் குமிழ்கள் எல்லாம் எரியவில்லை. சிலது எரிந்தாலும், சிலது கண்சிமிட்டிக் கொண்டிருந்தது. பகலில் நன்றாக எரிந்த மின்குமிழ்கள் இரவில் ஏரியாததற்கு காரணம் மதிக்கு புரிய தலையை உலுக்கிக் கொண்டவள் வேட்டைக்கு தயாரானாள். 
அவ்விடமே அமானுஷ்யம் நிறைந்த இடம்போல் அக்ஷய்க்கு தோன்றவே! 
“மதி கென் யு ஹாண்டில் திஸ் திங்” அவனால் பார்க்க முடியாததால் சொல்வதாக நினைத்த மதி 
“டோன்ட் டோக்” என்று மாத்திரம் சொன்னவள் மெதுவாக அடியெடுத்து ஒரு  கழிவறைக்கு கதவையும் திறந்து உள்ளே பார்வையிடலானாள். 
 கதவும் திறக்கும் போதும் “க்ரீச்” என்ற சத்தம் மனதை திகிலடையச் செய்தாலும், ஆழமான மூச்சை இழுத்து விட்ட மதி அடுத்து அக்கழிவறைக்கு நேராக இருக்கும் குளியலறைக் கதவை திறந்தாள். அக்கதவும் பெரிதாக சத்தம் எழுப்பியது. 
இவ்வாறாக மாறி மாறி ஒவ்வொரு கதவையும் திறந்து, பார்த்தவள் கடைசியாக இருக்கும் குளியலறைக் கதவைத் திறக்க அங்கேயும் ஏதும் இல்லையென்று நிம்மதி பெருமூச்சு விட அவள் தலையை தடவியது ஒரு கை.
தலையை தூக்கி பார்த்தவள் அங்கே கோரமாக இளித்துக் கொண்டிருந்த உருவத்தைக் கண்டு கத்தியவாறே அக்ஷியின் மேல் மோதி நின்றாள்.
.  
 

Advertisement