அத்தியாயம் 7

“ஹேய் செல்ல குட்டி ஸ்கூல்ல இருந்து வந்துட்டீங்களா?”

“தியா… நீ இன்னைக்கி லெந்து நிமிசம் லேத்” இடுப்பில் கைவைத்து தியாவை முறைத்தான் ஸ்ரீராம்.

வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் சீக்கிரம் முடித்துக் கொண்டு ஸ்ரீராம் ஸ்கூல் செல்லும் முன் அவனை பார்த்து செல்லம் கொஞ்சாவிடில் தியாவுக்கு அன்று நாளே நல்ல இருக்காது. ஸ்ரீராமின் மாலை பொழுது ரிஷியுடன் கழிவதால் அவன் பாடசாலை விட்டு வந்த உடன் அவனோடு பகல் பொழுதை கழிப்பவள் மாலையானதும் தான் வீடு வருகிறாள். 

இன்றும் அதே போல் வந்தவளைத் தான் முறைத்துக் கொண்டிருந்தான் குட்டி ரிஷி.

“அச்சோ என் செல்லத்துக்கு கோபத்தை பாரேன்” என்றவாறே அவனை தூக்கி முத்தமிட்டவள். கையேடு கொண்டு வந்த இனிப்பை வழங்க அவளின் கன்னத்தில் முத்தமிட்டவாறே அதை பெற்றுக் கொண்டான் ஸ்ரீ.

தியாவோடு பேச வேண்டும் என்ற முடிவோடு இருந்த கயல்விழியும் தியா ஸ்ரீராமோடு பேசும் சத்தம் கேட்டு வெளியே வர தியாவும் ஸ்ரீராமிடம் கயல்விழியை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள்.

“ஸ்ரீ.. தியாகு அப்பா நேத்து கொண்டு வந்த  ரிமோர்ட் கார காட்டு”

தியாவோடு பேச வேண்டும் என்பதால் ஸ்ரீராமை அனுப்பினாலும் அவன் சென்ற வேகத்தை விட வந்து விடுவான் என்பதால் தியாவிடம் எவ்வாறு பேச வேண்டும் என்பதை ஏற்கனவே ஒத்திகை பார்த்து வைத்திருந்ததை எடுத்து விட்டாள் கயல்விழி.

“தியா எத்துனை நாளைக்கு ஸ்ரீராம கொஞ்சிக் கிட்டே இருக்க போற? சீக்கிரம் அவனுக்கு ஒரு பொண்ண பெத்துக்க கொடு நீயும் உன் குழந்தையை கொஞ்சின மாதிரி இருக்கும். அவனுக்கும் பொண்ணு கிடைச்சா மாதிரி இருக்கும்” சட்டுன்னு சொல்லி விட தியாவின் முகத்தில் வந்த பாவனைகளை யோசனையாக பார்த்தாள் கயல்விழி.

“பிரசவ வழிய நினைச்சி பயப்படுறியா? இல்ல இப்போதைக்கு குழைந்தை வேணாம் னு தள்ளி போட்டியா?” தியாவின் பிரச்சினை தான் என்ன என்று அறிய முற்பட்டாள் கயல்.

“அப்படி எதுவும் இல்ல” உடனே தியா மறுக்க, உள்ளே இருந்து ஸ்ரீ ராம் குரல் கொடுக்கலானான்.

“அம்மா.. கால் மேல இலுக்கு… எதுக்க முதியள”

“வரேன்” என்றவள் வீட்டில் வேலை செய்யும் ஒருவரை அழைத்து ஸ்ரீராமுக்கு உதவும் படி உத்தரவிட்டவள் “நீயும் அண்ணாவும் சந்தோசமா தானே!  இருக்கீங்க?” அடுத்த கேள்வியை உடனே முன் வைத்தாள்.

அந்த கேள்வியில் கயல்விழியின் முகத்தை கூர்ந்து பார்த்தவள் “உங்க அண்ணன் சரியான முரடனா இருக்கான், பார்த்தாவே பயமா இருக்கு” என்று பட்டென்று சொல்லி விட

“அடிப் பாவி ஹீரோ மாதிரி இருக்குற எங்கண்ணன் இப்படி வில்லன் ஆக்கிட்டியே! மொரடான்னு சொல்லுற? அடிச்சாரா? திட்டினாரா?” சிரித்தவாறே கேட்டாலும் தியாவின் பதில் என்னவாக இருக்கும் என்று கயல்விழிக்கு கொஞ்சம் பயத்தையும் ஏற்படுத்தியது.

ப்ரதீபனின் குத்தீட்டி வார்த்தைகளை கேட்டவள் தானே அவள். ஏதோ அவள் கயல் என்று அறிந்த பின் அன்பாக நடந்துக்க கொள்கின்றான். ஒருவருடைய குணம் அவ்வளவு சீக்கிரத்தில் மாறாதே! தியாவிடம் ஏதாவது பேசி வைத்தானோ என்ற பயம் தான் விழியை ஆட்கொண்டது.

“அந்த அளவுக்கெல்லாம் இல்ல, குரலே! பயமுறுத்துற மாதிரி தான் இருக்கு, பேசவே பயமா இருக்கு” என்றவள் எண்ணம் அன்று ஊட்டியில் ப்ரதீபனை சந்தித்த போது அவன் பேசிய தோரணை நியாபகத்தில் வந்தது.

“உனக்கு என் அண்ணனை பிடிக்கலையா?” ப்ரதீபனுக்கு தியாதான் பொருத்தமாக இருப்பாள் என்று தான் தான் இந்த கல்யாணம் நடக்க காரணமாக இருந்ததால், தியாவிடம் தானே விருப்பம் கேட்க்காமல் கல்யாணத்தை நடாத்தியது தவறோ! என்ற எண்ணம் நொடியில் தோன்ற காலம் கடந்து அக் கேள்வியை கேட்டாள் கயல்.

தலை குனிந்திருந்த தியா சொல்லும் பதிலுக்காக கயல் காத்திருக்க ஸ்ரீராம் வந்ததில் அவர்களின் பேச்சும் தடைபட தியா ஸ்ரீராமோடு ஒன்றி விட்டாள்.

“நான் சொன்னதை மறந்துடாத சீக்கிரம் பொண்ண பெத்துக்க கொடு” என்று சொல்லி விட்டே உள்ளே சென்றாள் கயல்.

கயல் எதிர்ப்பார்த்த விதத்தில் பதில் கிடைக்காவிட்டாலும் தியா யோசிக்கும் விதமாய் குழந்தையை பற்றி நியாபப் படுத்தினாள் கயல். 

இங்கே கடையில் அமர்ந்திருந்த ப்ரதீபனை வீடியோ காலில் அழைத்தான் அமுதன்.

“பெண்கள் மூன்று வகைப் படும் னு சொல்லுறாங்களே! கேள்வி பட்டிருக்கியா?” அமுதன் வினவ

“அம்மா, மனைவி, மகள்” பிரதீபன் தான் ஒரு ஜீனியஸ் என்று நிரூபித்தான்.

“அடப் போடா.. வாயில நல்லா வருது. படையப்பா படத்துல சூப்பர் ஸ்டார் சொன்னாரு. காதலன் படத்துல வடிவேல் சொன்னாரு. சினிமா பாக்காத உங்க ரெண்டு பேருக்கும் கிளாஸ் எடுக்க என் உயிர் போகுது” ரிஷியையும் சேர்த்து திட்டினான் அமுதன்.

“இந்த சினிமா பேச்ச விடுடா.. நீயே புரியும் படி சொல்லு”  ரொம்பவும் பொறுமையாக பிரதீபன்.

“நல்லா கேட்டுக்க என் பார்வைலயும் பெண்கள் மூன்று வகைப் படும் எல்.ஈ.டி பல்ப். டியூப் லைட். அடுத்தது பவரே கிடைக்காத பல்ப்”

இந்த பக்கம் மண்டையை சொறிந்தவாறே பிரதீபன் “விட்டா என்ன லூசாகிடுவான் போல இருக்கே! பல்புக்கும் பொண்டாட்டிக்கும் என்ன சம்பந்தம்” என்ற யோசனையில் விழுந்தான்.

வீடியோ காலில் அவன் செய்கையை பாத்திருந்த அமுதன் “டேய் நல்லவனே நான் சொல்லுறதுல கவனம் இல்லனா மூடிட்டு போய் தூங்குவேன்” என்று அவனுடைய லப்டோப்பில் கைவைக்க

ப்ரதீபனுக்கும் அவனை விட்டால் வேறு வழியில்லை என்பதால் “என்ன தான் சொல்லுறான்னு பார்க்கலாம்” யோசனையாக ஏறிட்டவன் “எனக்கு புரியும் படி ஒழுங்கா சொல்லு ஓகே வா”

“ம்.. இப்படி சொன்னா உன் பல்பு எரியும்” என்ற அமுதன் “இப்போ நீ பூ வாங்கிட்டு வந்தல்ல”

“ஆமா” 

“அந்த பூவை அவங்களுக்குத்தான் வாங்கிட்டு வந்தாங்கன்னு டக்குனு புரிஞ்சிக்க கிட்டு,

“அட நம்ம புருஷன் ஆசையா நமக்கு பூ வாங்கிட்டு வந்திருக்கிறாரே!” னு உன் கிட்டயே பூவை வச்சி விட சொல்லி

நல்லா இருக்கா?

அழகா இருக்கா? னு கேட்டா அது எல்.ஈ.டி. பல்ப் ஸ்விட்ச்சை தட்டின உடனே பல்பு பிரகாசமா எரியும்ல அது போல விசயத்த பட்டு னு புடிச்சி உடனே ரொமான்ஸ் மூடுக்கு வந்துடுவாங்க. அப்பொறம் சில, பல முத்தங்களோட ஈவினிங் நகரு. 

“ஒஹ்..ஒஹ்.. அடுத்தது எந்த பல்ப்”

“டியூப்லைட்”

“எதுக்குடா என்ன திட்டுற”

“இவன் ஒருத்தன். உண்மையிலயே உன்ன நார் நாரா கிழிக்க போறேன் சொல்லுறத கேளுடா வெண்ண”

“சும்…மா.. நீ சொல்லு”

“அதே பூவை நீ கொடுத்ததும் கைல வேல இருக்கு, இல்ல வேற ரீசனுக்காக அப்பொறம் வச்சிக்கலாம் னு உன் மனசையோ! ஆசையோ புரிஞ்சிக்காம போயிட்டு, ரொமான்டிக் ஈவினிங்க ஸ்பாயில் பண்ணிட்டு, நைட் நியாபகம் வரும் போது  “அடடா அவர் ஆசையா பூ வாங்கிட்டு வந்தாரே நாம வச்சிக்கலைனா அவர் மனசு கஷ்டப்படுமேனு  பூவை வச்சிக்கிட்டு அறைக்குள்ள வந்து  அன்பா பார்த்து, ஆசையா பேசி உன் மூட மாத்தி அப்படி இப்படி னு ரொமான்ஸ் நடந்திருச்சு னு வை. அது டியூப் லைட்”

“ஒஹ்.. ஓகே. நெக்ஸ்ட்டு”

“இது கொஞ்சம் கஷ்டமான டைப். இவங்க மாதிரி பொண்ணு கிடைச்சா சாமியாரா போக வேண்டியது தான்”

“என்ன டா பய முறுத்துற”

“கிட்டத தட்ட உன் நிலைமை அப்படித்தான் இருக்கு. பூ வாங்கிட்டு வந்த புருஷன் ஆசையா வாங்கிட்டு வந்தானா? தேவையா வாங்கிட்டு வந்தானா? தனக்குத்தான் வாங்கிட்டு வந்தானா? இல்ல யாருக்கு வாங்கிட்டு வந்தான் என்ற அக்கறை கொஞ்சம் கூட இல்லாம தன் பாட்டுக்கு…. இஷ்டத்துக்கு ஏதாவது செய்றது”  பிரதீபன் தியா பூவை சாமிக்கு சாத்தினாள் என்று சொன்னதை இவ்வாறு தெளிவாக அமுதன் சொல்ல

“அப்போ என் பொண்டாட்டி டைப் த்ரீ னு சொல்லுற”

“எஸ்,எஸ், பவரே  சரியா கிடைக்கல. என்ன உனக்கும் முன் அனுபவம் இல்ல, அதான் அவங்கள புரிஞ்சிக்காம நாள கடத்துற. கனெக்சன் பக்காவா கொடு அப்பொறம் எல்.ஈ.டி. பல்பு தான். என்ன உன் பல்பு எரிஞ்சதா?”

“டேய் நீ மனிசன் இல்ல டா மகான் டா.. மகான். ஆமா சுமார் எத்தன பொண்ணுங்கள சைட் அடிச்ச, எத்தனை பொண்ணுங்கள கரெக்ட் பண்ணின”

“பாத்தியா ஐடியா கொடுத்தா என் தலைலயே கை வைக்க பாக்குற, நான் ராம பக்தண்டா.. இப்படியெல்லாம் பேசாத சாமி கண்ணா குத்திடும்”

“உன் வண்டவாளம் எல்லாம் அகல் சொன்னா”

“போட்டுக் கொடுத்துட்டாளா? இருக்கு அவளுக்கு”

“டேய் அவளை ஏதாவது சொன்ன அடி விழும், ரிஷியும் உதைப்பான். சரி சரி நான் என் பொண்டாட்டிய கவனிக்கணும் நீ போய் தூங்கு” பிரதீபன் லப்டப்பை அனைக்க

“காரியம் ஆன உடனே! கைகழுவுறான். இவனுங்கள நம்பக கூடாது. காச வசூல் பண்ணிட்டுத் தான் இனிமேல் ஐடியாவே கொடுக்கணும்” ப்ரதீபனை வசைபாடியவன் பெண்கள் மனதை கவருவதெப்படி என்று அறிந்து வைத்திருந்தாலும், தன்னை நெருங்கும் மலர்விழியை துரத்துவதெப்படி என்று பி.எச்.டி. செய்யாததால் முழிபிதுங்கி நின்றான்.

வீடுவந்த தியாவோ நேராக சென்றது அறைக்கு. குழந்தையை பற்றி பேசி கயல் தியாவின் மனதில் ஆசையை ஏற்படுத்தி இருக்க, ஊட்டியிலிருந்து தன் ஒரே சொத்தாக எடுத்து வந்த ஆல்பங்களை எடுத்தவள் கட்டிலில் பரப்பி ஒவ்வொன்றாக பார்வையிடலானாள்.

 புன்னகை முகமாக இருந்த தனது பெற்றோர்களின் கல்யாண புகைப்படங்களை முதலில் பார்த்தவள், தன்னுடைய திருமணத்தின் போது தான் இவ்வாறு மலர்ந்த முகமாக இருக்கவில்லை என்று நியாபகத்தில் வரவே!

“நான் மட்டுமா அவரும் “உர்ர்” னு தான் முகத்தை வச்சிருந்தார், நான் மட்டும் சிரிச்சிக் கிட்டு இருந்தா பைத்தியம் னு சொல்லி இருப்பாரு” அதிலும் ப்ரதீபனின் மேல் தான் தவறு என்றவாறு முணுமுணுத்தவள் அடுத்த ஆல்பத்தை புரட்ட

அது அவளின் அன்னையின் வளைகாப்பு ஆல்பம். குழந்தையை சுமந்திருந்த பூரிப்பில் மேடிட்ட வயிறோடு நிறைய வளையல்கள் அணிந்து ரொம்பவே அழகாக இருந்தார்.

“அம்மா நீ ரொம்ப அழகா இருக்க, உன் வயித்துல நான் குட்டிப் பாபாவா இருக்கும் போது எவ்வளவு சந்தோச பட்டிருப்ப உன் முகத்தை பார்த்தாலே தெரியுது. நான் உன்ன ரொம்ப கஷ்டப் படுத்துனேனு பாட்டி சொன்னாங்க, மூணு மாசம் வரைக்கும் உன்ன சாப்பிடவே விடலையாம், ஒரே வாந்தி எடுத்தியாம்.  ஆனாலும் நீ என்ன திட்டாம எனக்கு என்ன பிடிக்கு னு அத மட்டும் தான் சாப்டியாம். இவ்வளோ பெரிய வயிர வச்சி கிட்டு தூங்க எவ்வளவு கஷ்டப் பட்டிருப்ப? பாவம் இல்ல நீ. ஸ்ரீ விழி வயித்துல உதைக்கும் போது பாத்திருக்கேன். அவளுக்கு வலிக்கவே இல்லையாம். சந்தோசமா சிரிப்பா. நீயும் அப்படித்தானே சிரிச்சு இருப்ப, அப்பாவை பாரேன் உன்ன விட்டு நகராம எல்லா போட்டோவிளையும் இருக்குறாரு. பொண்ணு தான் வேணும் னு சொன்னாராம்! அப்பாக்கு நான்னா ரொம்ப இஷ்டமா? ஏன் மா இவ்வளவு சீக்கிரம் என்ன விட்டு போயிட்டீங்க?”

இறந்து போன தன் பெற்றோரை நினைத்து உருகியவள் கண்களின் ஓரம் எட்டிப் பார்த்த கண்ணீரையும் சுண்டிவிட்டவாறே

“எனக்கும் கொழந்த பொறந்தா உன்ன மாதிரியே பாத்துப்பேன். என்ன மாதிரியே அழகா இருப்பாளா? இல்ல அவரை மாதிரி “உர்” னு இருப்பாளா? யாரை மாதிரி வேணா இருக்கட்டும். நான் நல்லா பாத்துப்பேன்” கண்களில் கனவு மின்ன தந்தை தாய்க்கு வளையல் போட்டு விடும் புகைப்படத்தை பாத்திருந்தாள் தியா.

வீடு வந்த ப்ரதீபனோ மனைவியை காணாது சமையலறை பக்கம் நகர டிவி பார்த்துக் கொண்டிருந்த பார்வதி பாட்டி தியா அறையில் இருப்பதாக கூற இரண்டு இரண்டு படைகளால் தாவி ஏறினான்.

கட்டிலில் மல்லாக்க படுத்து கால்களை மேலே தூக்கி ஆட்டியவாறு ஏதோ அவள் பாத்திருக்க, அந்த கால்களுக்கு கொலுசு போட்டால் நல்லா இருக்கும் என்ற எண்ணம் தோன்றி புன்னகையை பூசிக்க கொண்டது ப்ரதீபனின் முகம்.

“தங்க கொலுசே போட்டுடலாம் பிரதீபா” என்றது அவன் மனம்

கதவில் சாய்ந்து வெகு நேரமாக மனைவியை ரசித்துக் கொண்டிருந்தவனோ அப்படி அவள் என்ன பார்த்து தனக்குள் பேசிக் கொள்கின்றாள் என்ற ஆர்வம் மேலோங்க மெதுவாக அடியெடுத்து அவள் புறம் நகர்ந்து எட்டிப் பார்க்க  அது அவளின் பெற்றோரின் புகைப்படங்கள் என்று கண்டு கொண்டவன் சத்தம் செய்யாது அவளருகில் அமர்ந்து அங்கே இருந்த இன்னொரு ஆல்பத்தை பார்வையிட்டான்.

அது தியாவின் குழந்தை பருவத்தை தாங்கி இருக்க, குண்டுக் கன்னங்களும், சிவப்பேறிய உதடும், பெரிய கண்களோடு ஒரு குட்டி பொம்மை கட்டிலில் மல்லாக்க விழுந்து கால் கைகளை ஆட்டியவாறு புகைப்பட கருவியை ஏறிட்ட நேரம் படம் பிடிக்கப் பட்டிருந்த ஒரு புகைப் படத்தில் கண்களை செலுத்தியவனுக்கு கண்களை அகற்றவே முடியவில்லை.

“பேபி டால்” என்று முணுமுணுத்தவன் தியாவை பார்க்க இன்றும் அவள் அதே போல் மல்லாக்க படுத்திருப்பதைக் கண்டு “பியூட்டி” என்று அவள் காதின் அருகே குனிந்து சொல்ல திடுக்கிட்டு அவன் புறம் திரும்பியவள் புடவையை கீழே நகர்த்தியவாறு எழுந்தமர்ந்து முழிக்கலானாள்.

“ஐயோ இவர் வரும் நேரம் ஆனது கூட தெரியாம இப்படி போட்டோ பாத்து கிட்டு இருந்தோம்! திட்ட போறாரு” என்று அவனை ஏறிட அவனோ கையில் இருந்த மற்ற புகைப்படங்களை பார்க்கலானான்.

“தியா நீ பொம்மை மாதிரியே இருக்க, தூங்கிக் கிட்டு இருக்கும் போது அசல் பொம்மை மாதிரியே இருந்திருப்பியே!. ரொம்ப அழகா, கியூட்டா இருக்க” புகைப்படங்களில் இருந்து கண்களை எடுக்காது பிரதீபன் சொல்ல வெக்கப்பட்டவாறே அவன் கையில் இருந்த புகைப்படங்களை பார்த்தாள் தியா.

“ம்ம் ரொம்பவே அழகா இருக்கேன் இல்ல” அவன் தோள் உரச அவன் புறம் சாய்ந்து புகைப்படத்தை பார்த்து சொல்ல அவளின் நெருக்கம் ப்ரதீபனை ஏதோ செய்ய அவள் புறம் திரும்பியவன் அவளின் கூந்தலின் வாசனையில் தன்னை தொலைக்க

அவனிடமிருந்து பதில் வராமல் போகவே அவனை ஏறிட்டவள் ப்ரதீபனின் முகம் அவளின் முகத்துக்கு அருகில் இருக்கவும் இதயம் தாறு மாறாக துடிக்க ஆரம்பிக்க சட்டென்று அவனிடமிருந்து விலக

அவ்வளவு அருகில் கண்ட மனைவியின் மதி முகம் அவளை முத்தமிட தூண்டி இருக்க  அவள் விலகியதால் தியாவை முறைத்தான் பிரதீபன்.

“அப்பா.. என்ன முறைப்பு, தெரியாம போய் உரசிட்டேன். என்னமோ மடிலேயே போய் உக்காந்து போல முறைக்குறாரு, இவரை வச்சி கிட்டு ஸ்ரீராமுக்கு எப்படி பொண்ணு பெத்து கொடுக்க போறேனோ!” மனம் கூவினாலும் கண்களோ! ப்ரதீபனை அச்சத்தோடு பார்த்து வைக்க

“நான் என்ன இவளை கடிச்சு தின்ன போறது போல நகருறா? பக்கத்துல கூட உக்கார மாட்டாளா? என்ன தான் நினைக்கிறானு ஒரு எழவும் புரியல” தியா அவனை பயப் பார்வை பார்த்துக் கொண்டிருப்பது பிடிக்காமல் அவளின் பார்வையை மாற்றும் பொருட்டு

“தியா இது பாரேன் நீ பூ போட்ட கவுன்ல அப்படியே தேவதை மாதிரி இருக்க ஆல்பத்தை கையில் வைத்துக் கொண்டு சொல்ல

“அதை பார்க்கும் ஆசை இருந்தாலும் அவனிடம் நெருங்கி அமர்ந்து பார்க்க வேண்டியதால் அவன் திட்டுவானோ என்றஞ்சி நெருங்காமல் எட்டி நின்றே பார்த்தவள் புன்னகைக்க

கட்டிலின் மேல் அவள் பார்த்துக் கொண்டிருந்த தியாவின் பெற்றோர்களின் வளைகாப்பு புகைப்படம் கண்ணில் பட அதை எடுத்துக் கொண்டு அவள் புறம் நகர்ந்தவன்

“உன் அப்பாவும் அம்மாவும் ரொம்ப சந்தோசமாக இருக்காங்கல்ல, நாமளும் அப்படி சந்தோசமா வாழனும் தியா” ஆர்த்மார்த்தமாக சொல்ல  புகைப்படத்தையே பார்த்திருந்தவள் அவனின் குரலையேயோ! பார்வையோ கவனிக்க வில்லை.

“ம்ம்.. அம்மாவும் அப்பாவும் போட்டோல ரொம்ப அழகா, சந்தோசமா இருக்காங்க, ஆமா உங்க அம்மாவும் அப்பாவும் நீங்க வயித்துல இருக்கும் போது ரொம்ப சந்தோசமா இருந்திருப்பங்கள்ல, நா அவங்கள பார்த்ததே இல்ல போட்டோவெல்லாம் எங்க வச்சு இருக்கீங்க உங்க சின்ன வயசு போட்டு கூட வீட்டுல இல்ல. எல்லாம் கயல் வீட்டுல இருக்கா?”

ப்ரதீபனின் குழந்தைப் பருவம் எவ்வாறிருந்தது என்று அறியாத தியா சாதாரணமா கேக்க ப்ரதீபனின் முகம் இருண்டது.

தனது குழந்தை பருவத்தை கயலை கண்டு பிடித்த பின் மறந்திருக்க, இன்று தன் மனைவியே ஆரிய புண்ணில் கீறி விட, பதிலை எதிர்பார்த்து குழந்தை முகமாக அவனையே பாத்திருப்பவளை கடிய முடியாமல் கையில் இருந்த ஆல்பத்தை கீழே வைத்தவன் டவலை கையில் எடுத்துக் கொண்டு குளியலறை புறம் நகர்ந்தவாறே

“தியா குளிச்சிட்டு வரேன் ஒரு கப் காபி கொடு” என்றவன் மீண்டும் அவளருகில் வந்து அவன் கொண்டு வந்திருந்த பூவை அவள் கையில் கொடுத்து “உனக்கும் சேர்த்துத்தான் கொண்டுவந்தேன். எல்லாத்தையும் சாமிக்கு சாத்திடாத” என்றவாறே குளியலறையில் புகுந்திருந்தான்.

செல்லும் கணவனை புரியாது பாத்திருந்தவள் “நான் அப்படி என்ன தவறா கேட்டுட்டேன்? பதில் சொல்லாம போறாரு. சரியான சிடுமூஞ்சி” அவனை வசை பாடியவாறே கடமை தவறாத மனைவியாக கணவனுக்கு காப்பி கலக்க கீழே சென்றாள் தியா.