Advertisement

அத்தியாயம் 11

அந்த காபி ஷாப்பில் அமர்ந்திருந்தாள் மலர்விழி. அவள் அமர்ந்திருப்பதற்கு காரணம் அவளின் தந்தை அவளுக்காக பாதித்திருக்கும் மாப்பிளையை சந்திப்பதற்க்கே! ஆனால் அந்த காபி ஷாப்போ அமுதனின் சூப்பர்மார்க்கட்டின் முன்னால் இருந்தது.

அமுதனின் அறையில் இருந்து பார்த்தால் காபி ஷாப்பின் உள்ளே இருப்பவர்கள் நன்றாக தெரியும் என்பதால் அவளின் முகம் அவனுக்கு நன்றாக தெரியும் படி அமர்ந்துக் கொண்டாள். 

அவள் சந்திக்க வேண்டிய ராஜேஷும் லம்போகினியில் ஸ்டைலாக வந்திறங்க அவனையே பாத்திருந்த மலர்விழிக்கு சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது. ராஜேஷ் சாதாரண டிஷர்ட் ஜீன்ஸ் அணிந்திருந்தாலும், முடியை ஜெல் செய்து நேராக நிறுத்தி இருந்தான்.

“ஆளும் மண்டையும், சரியான அப்பா கொண்டா இருப்பான் போல, இவன எப்படி கழட்டி விடுறது” என்ற யோசனையிலையே அவனை பாத்திருக்க அவனும் “ஹாய்” என்றவாறே அவளின் எதிர்புறம் வந்தமர்ந்தான்.   

“ஹாய் மலர்விழி. ஐம் ராஜேஷ். நைஸ் டு மீட் யு” என்று கையை நீட்ட எழுந்து நின்று வணக்கம் வைத்தாள் மலர்விழி.  

மலர்விழி அணிந்திருந்த பாண்ட், ஷர்ட்டுக்கும் அவள் வைத்த வணக்கத்துக்கு சம்பந்தமே இல்லாதது போல் முகபாவனை செய்தவன் திருப்பி வணக்கம் வைத்து விட்டே அமர்ந்தான். 

மலர்விழி வந்ததிலிருந்து அவளையே பாத்திருந்த அமுதன் ஒருவன் வந்து அவளோடு அமர்ந்து பேசுவதைக் கண்டு புருவம் சுருக்கி யோசிக்க கால்களோ தானாக அவனை அந்த காபி ஷாப்பை நோக்கி அழைத்து செல்ல அவளுக்கு பின்னால் உள்ள மேசையில் அமர்ந்து கொண்டான். 

“உன்ன பத்தி விசாரித்ததுல நீ ரொம்ப ப்ரீ டைப் னு சொன்னாங்க, ஆனா வணக்கம் வைக்கிற?”

“அட.. உடை, நடை, பாவணைல என்ன இருக்கு நான் பக்கா தமிழ் பொண்ணு” 

“ஒஹ்.. ஐ சீ..” அவளை நம்பாத பார்வை பார்த்தவன் “லெட்ஸ் கெட் மேரிட்” தன்னுடைய முடிவை உடனே சொல்ல 

புன்னகைத்தவாறே “வை நோட் பண்ணலாமே. பட் நம்ம திருமணம் எந்த மாதிரியான திருமணம் னு புரியுதா?” வைட்டரை அழைத்து தனக்கு தேவையானதை ஆடர் கொடுத்து விட்டு ராஜேஷை ஏறிட அவனும் தனக்கானதை சொன்னான். 

மலர் பேசும் போதுதான் அமுதன் மலரின் பின்னால் வந்தமர்ந்தான். மலர் திருமணம் செய்யலாம் எனும் போதே “காதலிக்கிறது என்ன, கல்யாணம் பண்ண இன்னொருத்தனா? ஆளும் மூஞ்சியும்” உள்ளுக்குள் கோபம் கனன்றாலும் பல்லைக் கடித்தவாறே பொறுமை காத்தான் அமுதன். 

“இட்ஸ் ஜஸ்ட்  லைக் எ பிஸ்னஸ் டீல். உன் வழில நான் குறுக்க வரமாட்டேன். என் வழில நீயும் வராத. நமக்கு இருக்குறது ஒரு லைப் தான். ஐ வாண்ட் என்ஜோய் மை லைப்” உதடு வளைத்து புன்னகைத்தான் ராஜேஷ். 

“இதுக்கு எதுக்குடா கல்யாணம் பண்ணனும். கூறு கெட்ட குப்பை” அமுதனின் மனம் கதறிய போதிலும் மலர்விழியின் பதிலுக்காக காத்திருந்தான்.

அவன் எதை பத்தி சொல்கின்றான் என்று நொடியில் புரிந்துக் கொண்டு “பசங்க என்ன ஆட்டம் வேணாலும் போடலாம் பொண்ணுங்க மட்டும் அடங்கி இருக்கணுமா? உன்ன என்ன பண்ணலாம்?” என்று சிந்தித்தவள்

“ஐம் இன் லவ் வித் சம்வன் சோ என்னால உன் கூட வாழ முடியாது. எனக்கு பொறக்குற குழந்தைகள் கூட அவனுடையதாக இருக்கும். உன் சொத்துக்கு அவன் குழந்தைகள் வாரிசாக இருப்பாங்க. பரவால்லையா?” நான் கை குலுக்க கூட நீ லாயக்கில்லாதவன் டா என்ற பார்வையோடு மூணே வாக்கியத்தில் நச்சென்று புரியும் படி சொன்னவள்  வைட்டர் கொண்டுவந்து கொடுத்த குளிர்பானத்தை அருந்தியவாறு  ராஜேஷை ஏறிட என்ன பதில் சொல்வதென்று புரியாமல் முழிக்கலானான் அவன். 

  “ராட்சசி என்னமா பேசுறா? பொண்ணா இவ?” மலர்விழியை திட்டினாலும் ராஜேஷ் போன்றவர்களுக்கு இவ்வாறுதான் செருப்பால் அடித்தது போல் புரிய வைக்க வேண்டும் என்று எண்ணலானான் அமுதன்.  

அமைச்சரின் பொண்ணு பார், பப், பசங்கனு சுத்திக்கு கிட்டு இருப்பா.. தன்னோட வாழ்க்கைல குறிக்கிடாம அவளை ஹாண்டல் பண்ணலாம் என்று ராஜேஷ் நினைத்திருக்க, அவள் அணிந்திருந்த ஆடைக்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லாமல் வணக்கம் வைத்தது மாத்திரமன்றி யாரையோ காதலிப்பதாகவும் அவன் குழந்தைகளுக்கு தன்னுடைய சொத்தை கொடுக்கும் படி சொல்வாள் என்று சத்தியமாக எதிர்பாத்திருக்கவில்லை. 

ஆண்களை பொறுத்தவரை மனைவி என்பவள் தன்னுடைய உடமையாகவும், தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள். ராஜேஷும் விதி விலக்கல்ல. அவன் என்ன ஆட்டம் போட்டாலும் மலர்விழி கண்டு கொள்ளாமல் இருந்தால் போதும் கல்யாணத்துக்கு பிறகு அவளை ஆட்டிப் படைக்கலாம் என்று தப்புக் கணக்கு போட்டவனுக்கு உன்ன நான் மிஞ்சிடுவேன் என்று மறைமுகமாக அச்சுறுத்த இவள் வேண்டவே வேண்டாம் என்று முடிவெடுத்தவன். 

“ஓகே என் முடிவை நான் உங்க அப்பா கிட்ட அறிவிக்கிறேன்” என்றவன் விடை பெற்று சென்றான். 

“போடா டேய்… அப்பாக்காக வந்ததால பொறுமையா உக்காந்து இருக்கேன். இல்லனா உன்ன அடிக்கிற அடில பொண்ணுங்க பக்கமே திரும்பி பாக்காத மாதிரி மூஞ்ச பேத்துட்டுவேன்” மனதுக்குள் சாடியவாறே அவனை போலவே உதடு வளைத்து புன்னகை சிந்தி அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்துக்க கொள்ளாது அவனை வழியனுப்பி வைத்தாள். 

ராஜேஷ் காரை கிளம்பியதும் “என்ன மாமன் மகனே! பின்னாடி  உக்காந்திருக்க முன்னாடி வா…” அமுதனை திரும்பியும் பாராது மலர்விழி அழைக்க 

கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு அவள் முன் அமர்ந்தவன் “பொண்ணாடி நீ இப்படி பேசுற? கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம. உன்னயெல்லாம்.. சீ…” மலர்விழி பேசியதில் எந்த தவறும் இல்லையென்று அமுதனின் மனசாட்ச்சி இடித்துரைத்தாலும், அவளை மறுக்கும் மனமோ இவ்வாறு அவனை பேச வைக்க 

எந்த கலவரமும் பண்ணாமல் கையில் இருந்த குளிர்பானத்தை கடைசி சொட்டுவரை அருந்தி முடித்தவள் “புருஷன் தப்பு பண்ணா பொண்டாட்டி மன்னிச்சு ஏத்துக்கணும், புருஷன் தப்பானவனாகவே இருந்தாலும், அவனை அனுசரிச்சு வாழனும் இல்லையா? ஏன்னா.. பொண்ணுங்க பலகீனமானவங்க, இரக்க சுபாவம் கொண்டவங்க, மன்னிப்போம் மறப்போம் எல்லாம் மனைவிக்கு மட்டும் தான், ஆனா நான் அப்படி இருக்க மாட்டேன். என் புருஷனுக்கு கண்ணாடி மாதிரி இருப்பேன்” 

“குடும்பம் விளங்கிடும்” கேலியான குரலில் அமுதன் 

“ஒரு நல்லவனை கல்யாணம் பண்ணா எந்த பிரச்சினையும் இல்லையே! அக்மார்க் நல்ல பையனா நீ இருக்கும் போது நா எதுக்கு வேறுயாரையாவது கல்யாணம் பண்ண போறேன். உன் ரியாக்சன் என்னவா இருக்கும் னு பாக்கத்தான். இந்த காபி ஷாப்பையே தேர்ந்தெடுத்தேன். பரவால்ல நல்லாவே ரியாக்ட் பண்ணுற.” புருவம் தூக்கி அமுதனை வம்பிழுக்க, 

“நான்…உன்ன… போடி… ” என்று சைகை செய்தவாறே அமுதன் எழுந்துக் கொள்ள 

“நான் எக்கேடு கேட்டு ஒழியட்டும் னு நீ நினைச்சி இருந்தா அன்னைக்கி என் வீட்டுக்குள்ள வந்திருக்கவும் மாட்ட, பிஸ்னஸ் டீலா கூட இருக்கலாம் என்று நினைக்காம ஒரு பையன் கூட என்ன பேச்சு னு பொறாமைல இங்க வந்து உக்காந்திருக்கவும் மாட்ட. அத்த பொண்ணு மேல அக்கறையா… அக்கறையை தாண்டி ஏதாவது இருக்கா…” பதில் சொல்லிட்டு போ எனும் விதமாக அமுதனையே பாத்திருந்தாள் மலர்விழி.

தோட்டத்தில் அமர்ந்திருந்த தியா அங்கே வேலை செய்பவர்களை பாத்திருந்தாள். பூக்கள் என்றால் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும், கயலுக்கு அவள் போன்ற ரசனை என்பதால் இருவரும் சேர்ந்து பின்னாடி உள்ள தோட்டத்தை எவ்வாறு வடிவமைத்தார்கள் என்று எண்ணுகையிலையே ஊட்டியை விட்டு வர மனம் இடம் கொடுக்க வில்லை. மும்பை வந்த பொழுது இங்கே இருந்த தோட்டம் தான் அவளுக்கு எல்லாமாகிப் போக இன்று அவள் வெறும் பார்வையாளராக மாத்திரம் அமர்ந்திருந்தாள். 

இங்கே இருந்த எத்தனையோ செடிகளை அவள் கைகளாலையே நாட்டி உரமிட்டிருக்க இன்று அவள் வேலை செய்ய விடாத படி கணவன் காவல் வைத்திருந்தான். 

அவளின் பிறந்தநாளின் பின் அவளின் வாழ்க்கையே மாறிப்போக தோட்டத்தில் இருந்து உள்ளே வந்தவளுக்கு காணக் கிடைத்தது புதிதாக சமையல் செய்து கொண்டிருக்கும் பெண்ணை,  

“நாம தான் சமச்சீட்டோமே! இவங்க யாருக்கு சமைக்கிறாங்க? ஆமா யார் இவங்க” என்ற சிந்தனையிலையே வாசலுக்கு வர பாட்டி மாத்திரை போட ஒருவன் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தான். வீடு முழுக்க ஐந்தாறு பேர் வேலையில் ஈடுபட்டிருக்க 

“யார் பாட்டி இவங்க” புரியாதவளாக பாட்டியை ஏறிட 

“அதைத்தான் நானும் கேக்குறேன். உன்ன வேல வாங்க பிடிக்காம உன் புருஷன் தான் வேலைக்கு வச்சிருக்கான். அது எப்படி டி ஒரேயடியா முந்தானைய முடிஞ்சி கிட்ட?” அந்த வயதிலும் கறை படாத பற்களை காட்டி சிரித்தார் பார்வதி பாட்டி. 

தியாவால் ஒன்றும் புரிந்துக் கொள்ள முடியவில்லை. இப்போ எதற்கு வேலையாட்கள்? நான் கோபத்தில் ஊட்டிக்கு செல்வேன் என்று சொன்னதினாலயா? அல்லது கணவன் புதிதாக திட்டமிடுகின்றானா? வேலைக்கு ஆட்களை எப்பொழுது நியமித்திருப்பான்? வீட்டுக்கு வந்துட்டான்னா? மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் தெரியாது அறைக்கு செல்ல  அறையில் பிரதீபன் வந்து போன அடையாளம் எதுவும் இல்லை. 

இன்னும் வீடு வரவில்லையா? எங்கே சென்றிருப்பான்? குடித்து விட்டு எங்கயாவது விழுந்து கிடப்பானோ!

 “என்னைக்காவது குடித்து விட்டு வந்ததை நீ பாத்திருக்கிறாயா?” கணவன் கேட்டது காதில் மீண்டும் ஒலிக்க 

“குடிச்சிட்டு மட்டையானா? எப்படி வேலைக்கு ஆள் எடுத்திருப்பார்” மனசாட்ச்சி கடிய 

“அப்போ எங்க போனான், இவ்வளவு நாட்கள்ல வீட்டுக்கு வராம இருந்ததில்லையே! 

“இத்தனை நாட்களில் வெளியே தங்கினேனா? வெளியூர் தான் போனேனா?” மீண்டும் கணவன் சொன்னது காதில் ரீங்காரமிட

“அவரே தான் சொன்னாரே பொண்ணுங்க கூட கூத்தடிச்சோம் னு, இதற்க்கு மேலையும் யோசிக்க என்ன இருக்கு?” மனம் விட்டுப் போக கட்டிலில் விழுந்து அழுது கரையலானாள். தான் எதற்காக, யாருக்காக அழுகிறோம் என்று தியாவுக்கு புரியவே இல்லை. கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வந்து கொண்டே இருந்தது.  

பிரதீபன் எப்பொழுது வீடு வருகிறான், எப்பொழுது வீட்டில் இருந்து வெளியே செல்கிறான் என்பதையே தியாவால் யூகிக்க முடியவில்லை. அறையில் இருந்த அவனுடைய பொருட்க, துணிமணி, எல்லாம் அறையோடு ஒட்டியிருந்த காரியாலய அறையில் தஞ்சமடைந்திருக்க, அவ்வறையில் இருந்த சோபா தான் அவனுடைய கட்டிலாக உருமாறி இருந்தது. 

கீழே இருக்கும் காரியாலய அறையில் வந்தவர்களை சந்திப்பவன் மேலே உள்ள அறையில் தான் அதி முக்கியமான கோப்புக்களை வைத்திருப்பதும், இரவில் வேலை பார்ப்பதும் படுக்கையறையோடு ஒட்டி இருந்தாலும் இன்றோ உட்புறம் தாப்பாள் இடப் பட்டிருக்க பிரதீபன் உள்ளே இருக்கின்றானா? இல்லையா என்பதே தியாவுக்கு தெரியவில்லை. 

தினமும் அவன் வாங்கி வரும் மல்லிகை பூவும் காணாமல் போய், அவள் அவனுக்காகவென்றே செய்து கொண்டிருந்த வேலைகளும் நிறுத்தப் பட்டு சொந்த வீட்டிலையே விருந்தாளியானாள். 

“எல்லாம் வேஷம், நடிப்பு, காரியம் கைகூடவில்லை என்றதும் காணாமல் போய் விட்டான். ஊட்டி விடுறதும், தூக்கிக் கொண்டு மாடியேறுறதும், கொஞ்சிப் பேசுறதும். ஒருத்தரால இப்படி நடிக்க முடியுமா? இவனால் முடியும் அதான் ஒரேயடியாக போய்ட்டான். அவளின் மனம் அவனின் பிரிவை ஏற்றுக் கொள்ளாது ஏதேதோ நினைக்க ப்ரதீபனை தூற்றினாள் தியா. 

ரிஷி இருக்கும் நேரத்தில் அந்த வீட்டுக்கு செல்வதையே தவிர்த்தாள். தான் கயலிடம் கேட்க நினைத்ததை கேட்க முனையும் பொழுதெல்லாம், கேட்ட பின் அவள் மனம் வருந்துவாளோ! என்றஞ்சி கேட்காமல் விட்டு விட்டாள். கேட்டிருந்தாலாவது தியாவின் குழப்பம் தீர்ந்திருக்கும். 

ப்ரதீபனை பற்றி நினைக்க கூடாதென்று முடிவெடுத்தாலும், அவனை திட்டவாவது நியாபகப் படுத்திக்க கொண்டே இருந்தாள் அவனின் மனையாள்.

ப்ரதீபனோ வீடு வராது சுற்றிக் கொண்டிருக்க, அவன் நினைவுகளில் ஆட்டிப் படைக்கும் மனைவியை துரத்த வழி தெரியாது தன்னை ஓய்வில்லாத படி பார்த்துக் கொண்டான். சென்னையில் உள்ள நகை கடை தன் பொறுப்பில் இருந்தாலும் கல்யாணத்துக்கு பிறகு மும்பையை விட்டு செல்ல பிடிக்காமல் இருந்தவன் வாரத்துக்கு இரண்டுநாள் சென்னையில் அமுதனோடு தங்கி அங்கே உள்ள வேலைகளை பார்க்கலானான். 

ரிஷியும் “இங்கே இருந்தே பார்க்கலாமே எதற்கு வீணா அலையுற” என்று பலதடவை சொல்லி விட்டான் 

“நான் நினைச்சதை விட லாபம் வரல, என்ன குறைன்னு கிட்ட இருந்து பார்த்தா தானே தெரியும். ப்ரீயா விடு மச்சான். உன் பயம் என்னாகுறது புரியுது. கண்துடைப்புக்காக அந்த நகைக்கடை வேற ஒருத்தருக்கு வித்துட்டதாக காட்டினாலும், அது எங்களுடையது னு உன் அம்மாவோ, மினிஸ்டர் மாமாவோ நினச்சியும் பார்க்க மாட்டாங்க, எல்லா வேலையும் நான் திட்டம் போட்டு தான் செய்றேன். அமுதனை பத்தியும் கவலை படாத நான் பாத்துக்கிறேன். நீ என் அம்முவை மட்டும் சந்தோஷமா பாத்துக்க” 

“இப்படி லென்த்தா பேசியே என் வாய மூடு” நண்பனை தோளோடு அணைத்துக் கொண்டான் ரிஷி. 

உண்மையில் ஐந்து வருடங்களாக சென்னை கிளையில் எந்த மாற்றத்தையும் செய்திருக்கவும் இல்லையென்பதால், மனைவியை தவிர்க்கவென வந்தவன் கடையில் சில மாற்றங்களை செய்ய விளைய அந்த வேலைகளில் மூழ்கியும் போனான். 

ஆனால் அவன் மனமோ மனைவியின் அணைப்புக்கு ஏங்கித் தவிக்க, தன்னை பிடிக்காத அவளை பற்றி நினைக்கும் அவனை அவனுக்கே பிடிக்காமல் போனது. மனைவி தன்னை புரிந்துக் கொள்ளவுமில்லை, நம்பவும் இல்லையென்று அவள் மீது கோபத்தில் இருந்தவன் எங்கே அவளை மீண்டும் பார்த்தால் தன்னால் தன் மனதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாமல் அவளிடம் அத்து மீறி நடந்து கொள்வானோ என்றஞ்சி அவளிடமிருந்து ஓடி ஒளியலானான். 

ஒரு மாதம் கண்ணா மூச்சிக் காட்டிக் கொண்டிருந்தவன் கோபம் கொஞ்சம் தனிய “கயல் அவளிடம் சொல்லவில்லையானால்? யார் அவளிடம் சொன்னது? அதுவும் அந்த ஹோட்டலில் வைத்து? அவளுக்கு இங்கு யாரையும் தெரியாதே! அப்படியே சொல்லிய நபர் கண்டிப்பாக எங்களுக்கு வேண்டாதவறாகத் தான் இருக்க வேண்டும்” என்று ப்ரதீபனின் மூளை அவன் நிதானத்துக்கு வந்த பின் நியாபகமூட்ட 

அவன் முதலில் சென்றது அந்த ஹோட்டலுக்கு. தன்னுடைய விலையுயர்ந்த வாட்ச் காணாமல் போய் விட்டதாக சொல்லி சீசீடிவியை  பார்வையிட அனுமதி கேட்க, ஊழியர்கள் மீது வழக்கு தொடராமல் அவன் தன்மையாக கேட்டதே பெரிய விஷயம் என்று மேனேஜரும் ஒத்துக் கொண்டு அவனுக்கு சீசீடிவியை பார்வையிட அனுமதித்தார். 

பொறுமையாக தான் உள்ளே வந்ததிலிருந்து வீடியோவை பார்வையிட்டவனுக்கு சந்தேகம் வரும் படி யாரையும் அடையாளம் தெரியவில்லை. தியா வாஷ்ரூம் போன பின் தான் ஏதோ நடந்திருக்கும் என்று ஊகித்து அப்பக்கமுள்ள சீசீடிவியை பார்வையிட முகத்தை மறைத்துக் கொண்டு ஒரு பெண் செல்வதைக் கண்டவன் அப்பெண்ணை ஆராய அவளோ வாஷ்ரூம் வாசலில் யார்கூடவோ அலைபேசியில் பேசி விட்டு நகர்ந்தாள். 

அப்போ தியாவோடு வாஷ்ரூமில் வைத்துதான் யாராவது பேசி இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தவன் தியா வாஷ்ரூம் உள்ளே சென்ற பின் உள்ளே சென்ற பெண்களை பார்க்க மூவர் உள்ளே சென்றதில் ஒருவர் வயதானவராகவும், இரு இளம் பெண்ணும் இருக்க தியா வெளியே வரும் முன் ஒரு இளம்பெண் வெளியே வர அவளாக தான் இருக்கும் என்று முடிவெடுத்தவன் அவளின் போட்டோவை பெற்றுக் கொண்டு உடனே டிடெக்டிவ் ஏஜென்சிக்கு அனுப்பியும் வைத்தான். 

இருந்தாலும் மனம் கேட்க்காமல் அந்த பெண் ஹோட்டலுக்கு வந்த நேரம் முதல் சென்ற நேரம் வரை ஆராய அப்பெண் சந்தேகப்படும் படியாக நடந்து கொள்ளவில்லை. அந்த பெண்ணும் பிரபல சினிமா டைரக்டருடைய மகள். அவளுடைய கணவனோடு வந்திருக்கின்றாள். 

பிரதீப்பின் எண்ணமெல்லாம் அவனை பிடிக்காத, அவனை எதிரியாக என்னும் யாராவது அவன் தியாவோடு வருவதையறிந்து அவள் காது பட ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து  பேச வைத்திருக்கலாம் என்றிருக்க, மீண்டும் மீண்டும் சீசீடிவியை ஆராய்ந்தான். 

அவன் நினைத்தது போல் எந்த தகவலும் இல்லை. “தியாவின் மேல் வேண்டு மென்று கரண்டியை யாரும் விழ வைக்க வில்லை. அப்படியாயின் யாரும் திட்டமிடவில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் எங்களை பின் தொடர்ந்து யாரும் வரவில்லை. நாம் வரும் பொழுதே இங்கே தான் இருந்திருக்கணும்” அவன் மனம் அடித்துச் சொல்ல அவர்கள் ஹோட்டலுக்கு வரும் முன் யார் யாரெல்லாம் இந்த தளத்துக்குள் வந்தார்கள் என்று பார்வையிட அங்கே மதுரிகா ஒருவனின் அணைப்பில் உள்ளே வந்து கொண்டிருந்தாள். 

மீண்டும் வெளியே செல்லும் காட்ச்சிகளை ஓடவிட்டவன் முகத்தை மறைத்துக் கொண்டு வெளியே செல்பவள் அவள் தான், வாஷ்ரூம் வெளியே இருந்தவளும் அவள் தான்  என்று அவள் அணிந்திருந்த ஆடையை வைத்து அடையாளம் கண்டு கொண்டான். 

மீண்டும் அவள் உள்ளே வந்த காட்ச்சியையும், வெளியே சென்ற காட்ச்சியையும் பார்க்க உள்ளே வரும் போது நன்றாக முகம் தெரிய வந்தவள் போகும் போது முகத்தை மறைத்திருந்தாள். எந்த வித சந்தேகமும் இல்லாது தியாவிடம் பேசக் கூடாதை பேசி அவனின் சந்தோஷத்தை உருகுலைத்தவள் மதுரிகா என்று அடையாளம் கண்டு கொண்டதில் அடுத்த அடி அவள் எழாதவாறு கொடுக்க வேண்டும் என்ற முடிவோடு ஹோட்டலை விட்டு வெளியேறினான்.

Advertisement