Advertisement

                                            அத்தியாயம் 23

 விடிய விடிய ஒரு பொட்டு தூக்கம் இல்லாது அனைவரும் கடவுளை வேண்டியவாறே அழுத வண்ணம் இருக்க செல்வராஜ் அவர்களை வற்புறுத்தி சாப்பிட வைத்தான்.

சத்யா மறுக்க மறுக்க மரகதம் ஜூஸை புகட்டினாள்.

“நீ இப்படி சாப்பிடாம கொள்ளாம இருந்தா செல்வி எந்திரிச்சு வந்ததும், என்ன தான்  திட்டுவா”

“அவ வந்துடுவாளா?” சிறு குழந்தை போல் அழும் தம்பியை பார்க்கப் பார்க்க மரகதத்துக்கு நெஞ்சம் அடைத்துக் கொண்டது.

ஒருவாறு விடியற் காலையில் ப்ரியா பிரசவ அறையிலிருந்து வெளியே வர சத்யா அவளிடத்தில் ஓடினான். 

“டாக்டர் என் வைப்” சத்யா கலங்கிய கண்களோடு கேக்க

“அவங்க கண்ணுமுழிக்கட்டும் பாக்கலாம், குழந்தைகளுக்கு எந்த பிரச்சினையும் இல்ல போய் பாருங்க” என்று விட்டு அகல சத்யா செல்வி இருந்த அறையின் முன் நின்றான்.

நர்ஸ் வந்து குழந்தைகளை பார்க்கலாம் என்றதும் அனைவரும் குழந்தைகளை பார்க்க செல்ல சத்யா கண்ணாடியூடாக செல்வியை பார்த்துக் கொண்டிருக்க

“சத்யா வா குழந்தைகளை பார்த்து விட்டு வரலாம்” செல்வராஜ் அழைக்க

“இல்ல மாமா நான் செல்வி அறிகில இருக்கேன்” என்று மறுத்து விட செல்வராஜ் வள்ளிக்கு போன் செய்ய சென்றான்.

“இந்த வள்ளி என்ன பண்ணுறா? நேத்து நைட்டுல இருந்து போன் பண்ணுறேன் போன் ஆப் ஆகி இருக்கு. அப்பாவும் அம்மாவும் வேற ஊருக்கு போய் இருக்காங்களே! வீட்டுக்கு போய் வரக்கூடிய சூழ்நிலையும் இல்ல ரோஜாவை போய் பார்க்க சொல்லணும்” என்றவாறே வர

“என்ன மாமா ஒரு மாதிரி இருக்கீங்க?” மரகதம் கேக்க

“வள்ளி போன் வேலைசெய்யல, வீட்டுக்கு ரோஜாவை அனுப்பவா?”

“இன்னும் விடியவே இல்லையே அக்கா தூங்குறாளா இருக்கும், விடிஞ்ச பிறகு பார்க்கலாம்”

இங்கே வள்ளியோ இரவு முழுக்க பைத்தியம் பிடித்ததை போல வீடு முழுக்க நடந்தவாறே “அவள் செத்திருப்பாளா? பொழச்சிக்குவாளா?  அவ அங்க விழுந்து கிடப்பது யாருக்கும் தெரியாதே, ஆமா செத்திடுவா செத்திடுவா, அவ மட்டும் செத்தா போதாது, அவ வயித்துல இருக்குற அவ குழந்தைகளும் சாகனும். அப்போ தான் நான் நினச்சப் படி ரோஜாவ சத்யாவுக்கு கட்டி வைக்கலாம். இல்லனா அவ குழந்தைகளுக்கு ஆயா வேல பார்க்க வேண்டியதுதான்” என்று  தூங்காமல் விடிய விடிய புலம்பியவள் விடியும் போதே தூங்கினாள்.

செல்வி தீவிர சிகிச்சை பிரிவில் குழாய்கள் பொருத்தியவாறு ஆழ்ந்த மயக்க  நிலையில்  இருக்க “செல்வி கண்ண தொறந்து பாருடி, என்ன விட்டு போயிடாத” மனம் கணக்க அவளை கண்ணிமைக்காது பாத்திருந்தான் சத்யதேவ்.

 நர்ஸ் ஒருவர் வெளியே வர “நா உள்ள போய் செல்வியை பார்க்கலாமா” அவனின் சோர்ந்த முகம் கண்டே சரியென தலையாட்டியவர் “டாக்டர் ரவுண்ட்ஸ் வார டைம் சீக்கிரம் பார்த்துட்டு வாங்க” என்று சொல்ல உள்ளே ஓடியிருந்தான் சத்யதேவ்.

அவளின் கையை இறுக்கப் பற்றிப் பிடித்தவன்  “கல்யாணமே வேணாம் என்றிருந்த என் வாழ்க்கைல காதலோடு வந்தியே! கண்ண தொறந்து பாருடி. செல்வி என் கிட்ட பேசுடி, என்ன விட்டு போயிடாத டி. எனக்கு நீ வேணும் டி. இந்த ஜென்மத்துல மட்டுமல்ல இன்னும் எத்துணை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் டி வேணும், நீ மட்டும் தான் வேணும்” செல்வியின் கையில்  முகம் புதைத்தவன் புலம்பியவாறே மெளனமாக கண்ணீர் வடிக்க அவனின் நிலையறியாத செல்வி ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள்.

செல்வியின் நிலையை ப்ரியா சொல்லாததால் செல்வியின் இன்றைய நிலைக்கு தான் மாத்திரமே காரணம் என்று எண்ணி வருந்தினான் சத்யதேவ். இதற்க்கு  முழுக்க முழுக்க காரணம் தன் மேல் உயிரையே வைத்திருக்கும் அன்பு அக்கா என்றால்   சத்யதேவ் எந்த மாதிரி முடிவுகளை எடுப்பானோ!

குழந்தைகளை பார்க்கச் சென்றவர்கள் கண்ணாடியிலான பெட்டியில் கண்ணை திறந்து திறந்து பார்க்கும் இரண்டு பூக்குவியல்களை  கண்டு டாக்டர் ப்ரியா சொன்னது போல் அதிர்ச்சியால் குறையாக பிறக்கவில்லை என்ற சந்தோசத்தில் ஆனந்த கண்ணீர் வடிக்க

“கனகா நாம வேண்டியது வீண் போகல குழந்தைகளுக்கு ஒன்னும் அகல அதே மாதிரி என் பேத்தியும் எந்திருச்சு வந்துடுவா” என்று பார்வதி பாட்டி சொல்ல

“ஆமா” என்று தலையசைத்தவாறே புடவை முந்தியால் கண்ணீரை துடைத்தார் கனகாம்பாள்..

ஒவ்வொருத்தரையும் துக்கத்தில் ஆழ்த்திய செல்வி கண்விழிக்க சத்யா அவள் அருகிலேயே கண்கலங்கியவாறு இருப்பதைக் கண்டு அவனை பார்த்து  புன்னகைக்க முயற்சி செய்து தோற்க சத்யாவும் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தவாறே புன்னகைத்தான்.

ப்ரியா வந்து பார்த்து விட்டு ” ஹாய் செல்வி ஹவ் ஆர் யு பீலிங் நவ்?” என்று செலவியிடம் கேக்க கண்களில் கண்ணீர் நிறைத்தவாறே வலியுடன் முறுவலிக்க

“உங்களுக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருக்கு, குறைந்தபட்சம் மூன்று மாதங்கள்  முழு ஓய்வு தேவை. பெட்ட விட்டு நகர கூடாது சொல்லிட்டேன். ஒன் வீக் ஹாஸ்பிடல்ல இருக்கணும். இடுப்பெலும்பு சம்பந்தமா இன்னும் சில டெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கு அது சம்பந்தமான டாக்டர் வருவாரு  அவர் என்ன சொல்லுறாரு அதன் படி செய்ங்க” என்றவாறே ப்ரியா விடை பெற

தனது வயிற்றை தடவிப் பார்த்தவள் கண்ணில் நீர் கோர்க்க “மாமா குழந்தைங்க? குழந்தைகளை பாத்தீங்களா? எப்படி இருக்காங்க? உங்கள மாதிரியா? என்ன மாதிரியா?” செல்வியின் ஆர்வம் சிறிது எட்டிப் பார்க்க

சத்யதேவோ என்ன சொல்வதென்று அவள் முகத்தை பார்த்தவன் “இல்லை என்று தலையசைக்க”

“என்ன மாதிரி இல்லையா? உங்கள மாதிரியா?” என்று புன்னகைக்க

அதற்கும் சத்யதேவ் “இல்லை” என்றே தலையசைக்க

“தம்பீங்களா மாதிரியா?” அவனின் பதிலுக்காக விழி விரிய

அதற்கும் சத்யதேவ் “இல்லை” என்றே தலையசைக்க

“இப்போ என்ன சொல்ல வரீங்க” என்ற பார்வையை செல்வி செலுத்த  

“நான்…. நான் இன்னும் பாப்பாங்களா பார்க்கவே இல்ல. நீ கண்ணு முழிக்கும் வர உன் கூடவே தான் இருந்தேன்” என்று வலி நிறைந்த புன்னகையை வீச

செல்வி கண்கள் விரித்து பார்க்கலானாள். என்ன மாதிரியான அன்பு. குழந்தை உண்டானதிலிருந்து கணவன் காட்டும் அன்பு பிள்ளைகளுக்கும் சேர்த்து என்றாலும் செல்வியை வம்பிழுக்கவே “ரெண்டையும் பொண்ணாவே பெத்துக்க கொடு அப்போ தான் நாங்க கூட்டு சேர்ந்து உன்ன உண்டு இல்லனு ஆக்க முடியும்” சத்யதேவ் சொல்லும் போதெல்லாம் முகம் சுருக்குபவள் கடவுளிடம் பிராத்திப்பதும், கணவனின் ஆசை போல் பெண் குழந்தைகளையே!

‘மாமா பொண்ணு பொறந்தா யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பீங்க? எனக்கா உங்க பொண்ணுங்களுக்கா?” சற்று நேரம் யோசிப்பதை போல் பாவனை செய்பவன்

 “கண்டிப்பா பொண்ணுங்களுக்கு தான்” என்று சொல்லும் போதெல்லாம் செல்வியின் இதயத்தில் சிறு கீறல் விழும்.

வம்பிழுக்க சொல்கிறானா? உண்மையை சொல்கிறானா என்று ஆராய்ச்சி செய்ய ஒரு போதும் செல்வி முனைய வில்லை. ஆனால் இன்று இந்த உலகத்திலேயே என்னை தந்தை என்ற ஸ்தானத்துக்கு கொண்டு சென்ற மகள்களை விட எண் உயிரின் சரி பாதி நீதான் எனக்கு வேண்டும் என்று கணவன் சொன்னது மனதில் உள்ள பாரமெல்லாம் நீங்கியது போல் உணர்ந்தாள் செல்வி. ஒரு மனைவிக்கு கணவனிடத்தில் வேற என்ன வேண்டும்? இந்த அன்பு என்றும் நிலைக்க வேண்டும் என்று மனத்தால் வேண்டியவளுக்கு அக்கணம் வரை வள்ளியின் நியாபகம் மனதில் வரவில்லை.

“என்னடியாச்சு? எதுக்கு அந்த டைம்ல அங்க தனியா போன? நான் வரும் வரை வெயிட் பண்ணி இருந்திருக்கலாமே!” சத்யதேவ் செல்வியை திட்டமுடியாமல் பொறுமையாக சொல்ல வள்ளி அவளை தள்ளி விட்டது நியாபகத்தில் வந்து சத்யாவின் கையை இறுக்கப் பற்றினாள்.

ஒருவாறு வீட்டில் தூங்கி எழுந்த வள்ளி போனை பார்க்க அதில் பத்துக்க மேலான கால் அலர்ட் இருக்க அதுவும் செல்வராஜின் எண் என்றதும் உடனடியாக அழைப்பை ஏற்படுத்தினாள்.

மறுமுனையில் சொல்லப்பட்டது செல்வி கீழே விழுந்ததால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் குழந்தைகள்  குறையில்லாமல் பிறந்தன செல்வி இன்னும் கண்விழிக்க வில்லை என்பதே.

“சே இன்னும் சாகலையா? ஆயுசு ரொம்ப கெட்டியோ?” என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டவள் “இப்போ மருத்துவமனைக்கு போறதா? வேணாமா? போகலானா கேள்விமேல கேள்வி கேப்பாங்க, போய் தான் பார்ப்போம்” என்று முடிவெடுத்தவள் கிளம்பிச்சென்றாள்.

ப்ரியா செல்வியை பரிசோதனை செய்த பின் செல்வியை தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து தனியறைக்கு மாற்றப் பட செல்வியோடு அவளின் கையை பிடித்தவாறே சத்யதேவும் நடந்து வர அனைவரும் அவளருகில் வந்தனர்.

அவர்கள் அனைவரும் குழந்தையை பற்றி பேச செல்விக்கும் குழந்தைகளை பார்க்கும் ஆவல் வந்தது. அங்கே நர்ஸ் இருவர் குழந்தைகளை தூக்கிக் கொண்டு வர சத்யா ஒரு குழந்தையை கையில் வாங்க செல்வியால் அமர முடியாததால் அவள் அருகில் ஒரு குழந்தையை கிடத்த சத்யாவும் அவன் கையில் இருந்த குழந்தையை மற்றைய குழந்தையின் அருகில் வைத்து அவனும் அருகிலேயே அமர அழகான குடும்பமாக அனைவரினதும் கண்களுக்கு தெரிய அகமகிழ்ந்தனர்.

“குழந்தைகளுக்கு பால் கொடுக்கணும் ரொம்ப நேரமா பசில இருக்காங்க” என்று நர்ஸ் ஒருவர்  சொல்ல ஒருவர் பின் ஒருவர் வெளியேறி அறைக்கு வெளியே உள்ள பெஞ்சில் அமர்ந்திருக்க வள்ளியும் வந்து சேர்ந்தாள்.

அங்கே இருந்த யாரையும் கண்டுக்காது சத்யாவிடம் ஓடி வந்தவள் அவனைக் கட்டிக்க கொண்டு நடந்தவைகளை விசாரித்தவாறே அழ, அவளை தேற்றியவாறே  நடந்தவைகளை சத்யா சொல்ல, “போன்  சார்ஜ் இல்லாம இருந்துருக்கு டா, அக்கா காலைலதான் கவனிச்சேன். மன்னிச்சுக்கடா, தெரியாது என்பதாலதான் வரலடா” என்று வள்ளி அழுது ஆர்ப்பாட்டம் செய்ய அவளை செல்வராஜும், ரோஜாவும் சமாதானப் படுத்தி அமர வைத்தனர்.

மரகதம் செல்விக்கு, மற்றவர்களுக்கும் பகல் உணவை சமைத்து வருவதாக சொல்ல செல்வியின் தம்பிகளும் முருகவேள், மரகதத்துடன் கிளம்பிச் சென்றனர்.

குழந்தைகளுக்கு பாலூட்டி விட்டு தாதிகள் வெளியே வர பார்வதி பாட்டி முதலில் உள்ளே நுழைய வள்ளி கடைசியாக உள்ளே நுழைந்தாள். வள்ளியை கண்டவுடன் நடந்தவைகள் கண்ணில் தோன்ற வலி என்றும் பாராது எழ முயற்சி செய்ய சத்யதேவ்  அவள் அருகில் ஓடினான்.

“மாமா அவங்கள போக சொல்லுங்க அவங்க என் குழந்தைகளை பாக்குறத நான் விரும்பல, என் குழந்தைகளை கொல்லப் பார்த்தவங்கள போக சொல்லுங்க” என்று அவனின் கையை பிடித்துக் கொண்டு கண்ணீர் விட

செல்வி என்ன சொல்கிறாள்? யாரை சொல்கிறாள் என்று குழம்பியவன் “என்ன  செல்வி? என்ன சொல்லுற?” சத்யதேவ் அங்கே உள்ளவராகளை யோசனையாக பார்க்க பார்வதி பாட்டி வள்ளியின் மேல் பாய்ந்திருந்தார்.

வள்ளியின்  முடியை கொத்தாக பிடித்து  அவளின் கன்னத்தில் அறைந்தவர்,  “அடிப்பாவி என் பேத்தியை கொல்லவே பார்த்தியா” என்று நெஞ்சில் அடித்துக்  கொண்டு அழ  ரோஜாவும், செல்வராஜும் திகைத்து நின்று விட்டனர். கனகாம்பாள் கத்த சத்யாதான் பாய்ந்து பார்வதி பாட்டியிடம் வள்ளியை பிரித்தெடுத்தான். 

“என்ன பாட்டி செல்வி ஏதோ புரியாம பேசுறானா நீங்களும் புரிஞ்சிக்காம நடந்துக்கிறீங்க”  சத்யா சொல்லி முடிக்க வில்லை வள்ளி ஓவென அழுதவாறே சத்யாவின் மேல் சாய்ந்து

“பாத்தியா சத்யா உன் பொண்டாட்டியும், இந்த பாட்டியும் சொல்லுறத? இவங்களுக்கு என்ன கண்டாலே பிடிக்கிறதில்ல. நான் எப்போ வந்தாலும் என்ன ஏதாவது சொல்லிக் கிட்டே இருக்காங்க, அதனால தான் நான் வீட்டுப் பக்கமே வாறதில்ல” என்று  சொல்ல

‘பொய் சொல்லுறாங்க” என்று செல்வி கண்ணீர் மல்க சொல்ல

“செல்வி நீ கொஞ்சம் அமைதியாக இரு” சத்யா அதட்ட

“நான் ஏன் அமைதியாகணும்? இவங்க தான் எனக்கு குழந்தையே பிறக்கக் கூடாதென்று கருத்தடை மாத்திரை தந்ததே” சத்யா தன்னை நம்ப வில்லை என்ற ஆதங்கத்தில் செல்வி உண்மையை சொல்ல

“ஐயோ ஐயோ. ஏன் இப்படி என் மேல பலி போடுறானு தெரியலையே, மரகதம் தான் கொடுத்ததாக அவளே சொன்னாலே, அவ இல்லாததால இப்படி எதுக்கு சொல்லுறான்னு தெரியலையே! எங்கோ இருந்து வந்தவ என் தம்பிய என் கிட்ட இருந்து பிரிக்கப் பாக்குறாளே!” என்று செல்வராஜின் மேல் சாய்ந்தவள் கண்ணீர் குளியலில் அந்த அறையை நனைக்க அக்காளின் கண்ணீரை கண்டு சத்யதேவின் மனம் கனத்தது. 

செல்வி கதறலோடு வள்ளி தன்னை தள்ளி விட்டதை சொல்ல

“என்னங்க உங்க கிட்ட சொல்லிட்டு தானே நான் வீட்டுக்கு போனேன்” என்று வள்ளி சொல்ல செல்வராஜ் “ஆமாம்” என்று தலையசைக்க கனகாம்பாள் மெளனமாக கண்ணீர் வடித்தார்.

“ஐயோ ஐயோ என் பேர்த்திய கொல்லவும் பார்த்துட்டு இப்படி நாடகம் ஆடுறாளே, நான் என்ன பண்ணுவேன்” என்று பார்வதி பாட்டி பெருங் குரல் எடுத்து கதற பல்லை கடித்தான் சத்யா.

“ரோஜா, ரோஜா நீ சொல்லு, உண்மை உனக்கு தெரியுமே!” என்று செல்வி ரோஜாவை துணைக்கு அழைக்க தந்தையின் முகம் பார்த்தவள் அமைதியானாள்.

ரோஜாவின் அமைதி செல்வியை காயப்படுத்த உதடு கடித்து மனதில் பொங்கிய வலியை கட்டுப் படுத்தியவளின் கண்ணீரை கட்டுப் படுத்த முடியவில்லை.

நர்ஸ் வந்து “என்ன சத்தம், அமைதியாக இருங்க, பெர்சன்ட்ட பத்தி கொஞ்சம் யோசீன்க, கும்பல் கூடாம யாராவது ஒருத்தர் மாத்திரம் இருங்க, மத்தவங்க வீட்டுக்கு போய் ஓய்வெடுங்க” என்று தன்மையாக சொல்ல பார்வதி பாட்டி சட்டமாக செல்வியின் அருகில் அமர்ந்துக் கொண்டார். 

செல்வராஜ், ரோஜா, வள்ளியை அணைத்தவாறே வெளியே அழைத்து செல்ல ஓடி வந்து சத்யாவை அணைத்து கொண்டு ஒரு மூச்சு அழுத்தவள் கிளம்பிச் சென்றாள்.

சத்யதேவ் செல்வியின் புறம் திரும்பி “என்ன இது” என்ற பார்வையை வீச

செல்வி “மாமா” என்று வலியோடு முனக

” கூடப் பொறந்தவள பத்தி எனக்கு தெரியாதா? நேத்து வந்த வ நீ, கொஞ்சம் யோசிச்சு, பொறுமையா பேசி இருக்கணும், உன் புத்தி உன் வயச வச்சி தானே யோசிக்கும், பாரு உன்னால அம்மா அழுறாங்க, குடும்பத்துல உன்னால குழப்பம் வார மாதிரி நடந்து கிட்டியே! அக்கா வந்ததுல  இருந்தே உன்ன பத்தித்தான் விசாரிச்சாங்க எவ்வளவு அழுதாங்க தெரியுமா? ” சத்யதேவ் வெறுமையான குரலில் செல்வியின் மேல் குற்றச்சாட்டை சுமத்த கனகாம்பாள் தேம்பித் தேம்பி அழுத்தவாறே இருக்க

“மாமா நான் பொய் சொல்லல”

“அப்போ என் அக்கா பொய் சோறானு சொல்லுறியா?” என்று கோபமாக சொன்னவன் “அம்மா நீங்க இங்க இருக்கீங்களா? வீட்டுக்கு வாரீங்களா?” என்று கேக்க

செல்வியின் நிலைமையை உணர்ந்தவர் அவளோடு “இரு” என்று மனம் சொன்னாலும், நடந்ததை கண்டு அதிர்ச்சியில் இருந்தவரின் உடலோ நிலையில்லாதது போல் இருக்க அந்த அறையினுள் மூச்சு முட்டுவது போல் இருக்கவே சத்யாவின் உதவியோடு வெளியேறியவர் பெஞ்சில் அமர்ந்துக் கொள்ள, சத்யாவும் அமர்ந்து   அவரின் கையை ஆதரவாக பற்றிக்கொண்டான்.

“ஏண்டா சத்யா….. செல்வி சொல்லுறது உண்மையா?” என்று கனகாம்பாள் கேக்க

“செல்வி சின்ன பொண்ணுமா, ஏதோ தப்பா புரிஞ்சிக்க கிட்டு பேசுறா, சொல்லி புரிய வைக்கலாம், புரிஞ்சிப்பா” என்று சொல்லிக் கொண்டவன் சுவரில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான். 

“வள்ளியின் ஆட்டத்துக்கு முடிவே இல்லையா? கடவுளே! ” என்று பார்வதி பாட்டி புலம்ப

“மாமா உங்களுக்கு என்ன விட உங்க அக்கா தான் முக்கியமா?” மனதுக்குள் பொறுமியவள். சத்யா தன்னை நம்ப வில்லை என்பதை நினைத்து மனம் வருந்தியவள் சில மணித்தியாலங்களுக்கு முன் தனக்காக குழந்தைகளையும் பார்க்காமல் இருந்தான் என்பதை மறந்தாள்.

செல்வி தேம்பித்தேம்பி அழுத்து கொண்டிருக்க பார்வதி பாட்டி ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.

Advertisement