Advertisement

                                         அத்தியாயம் 18

சத்யதேவ் அக்கா தங்கைகளுடன் பிறந்தவன். பெண்களை புரிந்து கொள்பவன். அன்னையின் மேல் அளவு கடந்த பாசம் வைத்தருப்பவன். மொத்தத்தில் பாசத்துக்கு கட்டுப் பட்டவன்.

செல்வியை பார்த்த போதும் சரி, தாலி கட்டிய போதும் சரி வேற யாரோ என்ற எண்ணம் கொஞ்சமேனும் தோன்றவில்லை. தங்களுக்கு நடந்தது திடீர் திருமணம் என்பதையே செல்வியின் அருகாமையில் மறந்து தான் போனான்.   

எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தாலும், சிரித்தவாறே கடந்து செல்பவனுக்கு செல்வியின் மேல் வைத்த காதலும், அருகாமையும் இன்னும் பலம் சேர்க்க தனது எல்லா பிரச்சினைகளும் அவள் அருகில் ஒரு புள்ளியாய் கூட மனதில் இல்லாது மனசு முழுவதும் செல்வியே நிறைந்திருக்க இனி எல்லாம் அவளே என்ற எண்ணத்தோடு இருந்தவனுக்கு எங்கே தவறு நேர்ந்தது என்று கொஞ்சமேனும் புரியவில்லை.

செல்வியின் தம்பிகளும்  தன்னுடைய பொறுப்பு என்று நினைத்தவனை, “என் தம்பிகளுக்கு பிறகு தான் நீ” என்பது போல் செல்வி கருத்தடை மாத்திரைகளை உபயோகித்தாள் என்றால்?

அவள் தன்னை நம்பவில்லையா? அவள் என்னிடம் காட்டிய அன்பு பொய்யா? அவள் மனசில் கொஞ்சமேனும் என் மீது காதல் இல்லையா? அவளை நான் கொஞ்சமாலும் பாதிக்கவில்லையா? ஊரிலிருந்து வரும் போதே இதை கொண்டு வந்தாளா? என்று சத்யாவின் எண்ணம் போக மாத்திரை பாட்டிலை வெறித்தவன்

மொழி தெரியா குழைந்தை போல் முழிக்கும் செல்வியிடம் என்ன கேட்பது? ஏன் இதை பாவிக்கிறாய்?  என்றா? அல்லது கடந்த மாதங்களாகாக நமக்குள்  எந்த உறவும் இல்லையே! வாங்கியது வீண் என்று அந்த பெண்மணியிடம் கொடுத்து விட்டாயா? என்றா?   

தங்களது அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டு மற்றவர்களுக்கு காட்ட பிடிக்காமல் சத்யா செல்வியிடம் எந்த கேள்வியும் கேக்காது மௌனம் காக்க

கோமளவள்ளி ஒப்பாரிவைக்காத குறையாக அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்க கனகாம்பாளுக்கு தலை சுற்றுவது போல் வர அருகில் இருந்த கதிரையில் அமர்ந்துக் கொண்டார்.

கோமளவள்ளியின் எண்ணமெல்லாம் இந்த விஷயத்தை பெருசாக்கி இப்படியே செல்வியை வீட்டை விட்டு துரத்தி விட வேண்டும் என்பதிலேயே இருக்க அழகம்மாவோ “என்னடா நடக்குது இங்க?” என்ற பார்வையில் இருந்தார்.

“என்னடா பாத்துக்க கிட்டு இருக்க இப்படி ஒருத்தி தேவையா?  நம்மளுக்கு?  விரட்டி விடுடா. மானம் ரோசம் உள்ள ஆம்பிள மாதிரியா நடத்துகிற? அவ கன்னம் பழுக்க ஒரு அடியாச்சும் கொடுத்திருக்கணுமா இல்லையா? நாக்கை புடுங்குறமாதிரி நல்லா கேளுடா?  வள்ளி அழுகையினூடாகவே சத்யாவை ஏற்றிவிட

மாலை ரெஜிஸ்டர் மேரேஜுக்கு எல்லாம் தயார் பன்னவென ரோஜாவுடன் மரகதமும் உள்ளே நுழைய

“சே சனியன் கரெக்ட் டைம்ல என்ட்ரி கொடுக்குதே” என்று நினைத்தவாறே வள்ளி மரகதத்திடம் வந்து

“பாத்தியா இந்த அநியாயத்த, என் பொண்ண கட்டிக்கனு என் தம்பிய கெஞ்சினேன், கேக்காம எவளோ ஒருத்திய கட்டிக்கிட்டு வந்தானே  அவ பண்ணி இருக்கிற அக்கிரமத்தை பாத்தியா?” என்று கண்ணீர் வடித்தவாறே புலம்ப

வள்ளி ஏதோ  சதி பண்ணி இருக்கா என்று நொடியில் புரிந்துக் கொண்டாள்  மரகதம். என்ன நடந்தாலும் தன்னிடம் எதுவுமே சொல்லாத அக்கா, தன்னிடம்  மனக்குறையாக சொல்லும் விஷயம் செல்வி சம்பந்த பட்டது என்றதும்

“என்ன நடந்தது” என்று அமைதியாகவே விசாரிக்க சத்யா கையிலிருந்த பாட்டிலை பிடுங்காத குறையாய் வாங்கிய வள்ளி மரகதத்திடம் கொடுத்து புலம்ப அவளின் திட்டத்தை நொடியில் புரிந்த்துக் கொண்ட ரோஜா

“நான் தான் கொடுத்தேன்” என்று ரோஜா சொல்ல அக்கணமே  மரகதவள்ளியும் “நான் தான் கொடுத்தேன்” என்று சொன்னாள்.  

கிராமத்தில் பிறந்து வளந்த கள்ளம் கபடமற்ற செல்விக்கு கோமளவள்ளியின் நடிப்பு புரிய சில கணங்கள் எடுத்தது. கண்கள் கலங்க சத்யாவை பார்க்க அவனின் வெறித்த பார்வையே தன்னை நம்பவில்லை என்று சொல்ல அழுகை முட்டிக்கு கொண்டு வந்தது.

சத்யதேவ் வள்ளி சொன்னது போல் கன்னம் பழுக்க அடித்திருந்தாலோ? நாக்கை புடுங்குறதை போல நல்லாக நாலு கேள்வி கேட்டிருந்தாலோ? இவ்வளவு வலித்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

ஒரே ஒரு நாள் நடந்த கூடலில் குழந்தை பிறக்கும் என்று தான் கொண்ட ஆவல் என்ன? குழந்தையே வேணாம் என்பது போல் மருந்து சாப்பிடுகிறேன் என்று சொல்லும் குற்றச்சாட்டு தான் என்ன?

வள்ளியின் மேல் கொலை வெறியே வர இப்போது எது பேசினாலும் தன்மேல் வந்து விடியும் என்று தோன்ற, கணவனே தன்னை நம்பாத போது  என்ன செய்வது, என்ன பேசினாலும் எடுபடாது என்று நன்றாகவே செல்விக்கு புரிந்தது. இவ்வளவு நாளும் ஒருத்தரை ஒருத்தர் சரியாக பார்க்க கூட இல்லாமல் பிரிவிலும் சுகமாய் இருந்தது தான் என்ன? ஏன் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி வரை எவ்வளவு சந்தோசமாய் பேசிக் கொண்டிருந்த அழகான தருணம் தான் என்ன?

“மாமாக்கு என் மனசு புரியலையா? ஒரு வேல ரோஜாவை விரும்பி இருப்பாங்களோ? மாமா ரொம்ப நல்லவர், திடீரென நம்ம கல்யாணம் நடந்ததால என்ன ஏத்துக்க கிட்டாங்களோ?” என்று செல்வி தனக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கும் போது தான் ரோஜாவும் மரகதவள்ளியும் உள்ளே வந்தது.

“நான் தான் கொடுத்தேன்” என்று ரோஜாவும், மரகதமும் சொல்ல எல்லோரும் அவர்களை அதிர்ச்சியாக பார்க்க

அழகம்மாவோ “அண்ணி பாரின்ல இருந்து வரவழைச்சு மருந்துனு தான் இந்த புள்ள சொல்லிச்சு” என்று செல்வியை பார்த்தார்.

எல்லோரின் மனதிலேயும் ஆயிரம் கேள்விகள் எழுந்தன.

ரோஜா மற்றும் மரகதத்திற்கு இது வள்ளியின் வேலை என புரிந்தது.

“எதுக்கு இப்படி பண்ண” என்று கனகாம்பாள் வாய் விட்டே கேக்க

“ரோஜா எதுக்கு அப்படி சொன்னாள். ஒருவேளை அவ என் மேல ஆசப் பட்டு இப்படி பண்ணப் போய் அக்கா அவளை காப்பாத்த பாக்குறாங்களோ” என்று சத்யதேவின் எண்ணம் போக.

“பெரியண்ணி பண்ணத இவங்க பண்ணதா எதுக்கு சொல்லுறாங்க என்ற குழம்பிய பார்வையிலேயே செல்வி இருக்க

“இவ எதுக்கு சிலுவையை சுமக்குறா?” என்ற ஆராய்ச்சி பார்வையே வள்ளியிடம்.

அழகம்மாவின் பக்கம் திரும்பிய மரகதவள்ளி “உங்க பொண்ணுக்கு நடந்ததற்கு தமிழ் மேல எந்த தப்பும் இல்ல. நீங்க திட்டுறதா இருந்தா அவ அண்ணிய தான் திட்டனும்” என்று வள்ளியை ஓர பார்வை பார்த்தவள் “உங்க பொண்ணுக்கு ஏதாச்சும்” என்று கவலையாகவே கேக்க

“அட நீ வேறம்மா, அவளுக்கு ஏற்கனவே ரெண்டு பொண்ணுங்க மூனாவதா பொண்ணு பொறந்தா? அத்து விட்டுடுன்னு மாப்பிளையை மாமியார் மிரட்டிக் கிட்டு இருக்காப்ல, அந்த மனிசன் ஒரு அம்மா கொண்டு, இந்த புள்ள தெரியாத்தனமா விட்டமின் மாத்திரைன்னு கொடுக்கப் போய் அத சாப்பிட்டு இன்னும் உண்டாகலானு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனப்போ தான், எங்களுக்கே விஷயம் தெரிஞ்சது. என்  பொண்ணுக்கு  கருப்பைலை ஏதோ பிரச்சினையாம் உண்டாகி இருந்தா சிக்கலாகி  இருக்கும்னு ஸ்கேன் எடுத்து பாத்துட்டு சொல்லிட்டாங்க. நாங்க படிக்காதவங்க இங்கீலீசும் தெரியாது. இந்த புள்ள வெகுளியா அதுல என்ன இருக்குனு கூட பாக்கமா கொடுத்திருச்சி போல. தெரியாத்தனமா கொடுத்ததுலயும் ஒரு நல்லது நடந்திருக்கு. அத சொல்லத்தான் ஓடி வந்தேன். வந்த இடத்துல இந்தம்மா ஏதோ பேசப்போய் நானும் பேசி புட்டேன். நான் வரேங்க” என்றவர் வள்ளியை முறைத்தவாறே சென்றார்.

” தாமரையை சத்யாவுக்கு கட்டிக்க கொடுக்க முடியாம தான் மரகதம் பண்ணி இருப்பா” வள்ளி பட்டென்று சொல்ல ரோஜா அன்னையை நன்றாக முறைத்தாள்.

ரோஜா? தாமரை? மாமா யாரை விரும்பினாங்க என்ற எண்ணம் செல்வியின் மனதில்.

நேராக கனகாம்பாளிடம் வந்து நின்ற மரகதவள்ளி “என்ன மன்னிச்சிடுமா, என் பிரெண்டு ஒருத்தி கொடுத்த மாத்திரை செல்விக்கு பாக்காம கொடுத்துட்டேன். அவ கூட பாரின் போற அவசரத்துல பாக்காம கொடுத்து விட்டிருக்கா” என்று கண்கள் கலங்க

“என் பொண்ண என் தம்பி ஆசப் பட்டிருந்தா நானே கட்டி வச்சிருப்பேன், அவன் ரோஜாவையோ தாமரையையோ கட்ட மாட்டேன்னு சொல்லிட்டானே. நான் வேணுமென்றே இந்த மாதிரி கீழ் தரமான காரியத்தை பண்ணுவேனா?” என்று மரகதவள்ளி உண்மையை சொல்ல முடியாத வேதனையில் குலுங்கி அழ, செல்வியின் மனதில் மழைச்சாரல்.

சத்யதேவ் தான் அவளை ஆறுதல் படுத்த வேண்டிய இருந்தது.

” ஆமா எதுக்கு நீ தான் கொடுத்தனு சொன்ன” என்று சத்யதேவ் ரோஜாவை முறைக்க

தன் மகள் என்றதும் வள்ளி ஒரு நொடி திகைக்க  

“அது நான் போற அவசரத்துல ரோஜா கையில தான் கொடுத்து விட்டேன்” என்று மரகதம் சொல்ல வள்ளியும் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டாள்.

கண்கள் கலங்க செல்வி சத்யதேவை பாத்திருக்க தலையசைத்து அவளை அழைக்க குழைந்தை போல் ஓடி வந்தவள் சத்யாவை கட்டிக்க கொண்டு ஓவென அழ ஆரம்பித்தாள்.

“எனக்கு சத்தியமா தெரியல மாமா. இத சாப்பிட்டா சீக்கிரம் கொழந்த பொறக்கும், அழகா பொறக்கும், குறை இல்லாம பொறக்கும்னு அண்ணி சொன்னதால தான் சாப்பிட்டேன்” என்று குலுங்கி குலுங்கி அழ ரோஜாவும், மரகதமும் வள்ளியை தான் முறைத்தனர்.

“சத்யா… தமிழ உள்ள கூட்டிட்டு போ” என்று கனகாம்பாள்  சொல்ல சத்யதேவுக்கும் அவளிடம் நிறைய பேச வேண்டியிருந்தது.  

“ரோஜா ஒரு தலைவலி மாத்திரை எடுத்து தாம்மா” என்று கனகாம்பாள் உள்ளே செல்ல

“நீ பண்ணுற அக்கிரமத்துக்கு கடவுள் உனக்கு என்ன தண்டனை கொடுப்பாரோ?” என்று மரகதவள்ளி கோபத்தை அடக்கிய குரலில்

“அதான் நான் பண்ணத நீ பண்ணதா சொல்லிட்டியே! தண்டனையையும் நீயே பெற்றுக்க” வள்ளி நக்கலாக

“நான் தான் கொடுத்தேன்னு  சொன்னது உன்ன காப்பாத்த இல்ல. உன் திட்டத்தை முறியடிக்க. உன் திட்டமே தமிழ குற்றவாளியாக்கி இந்த வீட்டுல இருந்து துரத்தி விடுறது. பலிய நான் சிலுவையா சுமந்ததால சத்யா, செல்விக்குள்ள எந்த பிரச்சினையும் வரல. நீ இந்த அளவுக்கு கீழ்த்தரமான வேல பாப்பேன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல்ல. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான். அப்போ இருக்கு உனக்கு” என்று அடிக்குரலில் சீரியவள் கனகாம்பாளின் அறைக்கு செல்ல

தான் என்ன செய்தோம் என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல் தனது திட்டம் தோல்வியுற்றதில் அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் இறங்கினாள் வள்ளி.

அறைக்கு வந்த சத்யா செல்வியை அணைத்தவாறே இருக்க அவளின் அழுகைதான் ஓயவில்லை.

“போதும் டி அழுதது” சத்யா சொல்லும் போதெல்லாம் தேம்பித் தேம்பி அழுத்தவள் “நீங்க என்ன நம்பள இல்ல, நம்பள இல்ல ” என்று மாத்திரமே சொன்னாள்.

“நம்பாம இல்லடி அதிர்ச்சிதான். நீ பட்டிக்காடுன்னு அந்த நிமிஷம் மறந்து போச்சு” என்று சொல்லி சிரிக்க அவனை மொத்த ஆரம்பித்தாள் செல்வி.

அவளின் அடிகளை வாங்கி கொண்டவன் ” இப்படி தான் யாரு எதத்தந்தாலும்  சாப்பிடுறியா?” என்று வம்பிழுக்க

“அண்ணி தந்ததால  தான் சாப்பிட்டேன். நம்மவங்க தந்ததால  நம்பிக்கையா சாப்பிட்டேன்” என்று கோமளவள்ளியை நினைத்து கூறியவள். மரகதவள்ளி “நான் தான் கொடுத்தேன்” என்று கூறும் போது மறுத்துக் கூற வாய் திறக்கும் போது ரோஜாவும், மரகதவள்ளியும் “வேண்டாம்” என்று தலையசைத்தது நியாபகத்தில் வந்து. “பெரியண்ணி மேல ஏதோ தப்பிருக்கு, தேன் ஒழுக, பேசாம அதட்டலாகவே பேசுறதால என்னால கண்டு பிடிக்க முடியல. செல்வி உன்னையும் ஒருத்தி ஏமாத்தி இருக்கா அவள அப்படியே விட்டுடுவியா?” என்று மனம் கேள்வி கேக்க

“அம்மணிக்கு  என்ன யோசனை” என்று செல்வியின் உதட்டை பிடித்து தன் பக்கம் இழுத்தவன் “எதுனாலும் என் கிட்ட மறைக்காத, என்னால அதிர்ச்சியெல்லாம் தாங்க முடியாது” என்றவாறே அவளின் இதழை சிறை பிடிக்க

மேனி நடுங்க ரோஜா சொன்னது தருணத்தில் நியாபகம் வந்தது.

“என்னது பதினெட்டு வயசா?  உனக்கு எங்க மாமாவ ரொம்ப பிடிக்குமா?” ரோஜா பதட்டமாகவே கேக்க

செல்வி வெக்கப்பட்டவாறே “ஆமாம்” என்று தலையசைக்க

“நா சொல்லுறத நல்லா கேட்டுக்க தமிழ். உனக்கு பதினெட்டு வயசுன்னு சொன்னா ஒரு வேல மாமா உன்ன தள்ளி வைப்பாறு. எந்த காரணுத்துக்காவது உன் வயச அவர் கிட்ட சொல்லிடாத. கேட்டா இருபத்தி மூனோ, நாளோனு சொல்லிடு”

ரோஜாவை புரியாத பார்வை பார்த்தவள் “சரி” என்று தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

செல்வியின் கவனம் இங்கில்லை என்றதும் அவளை விட்டவன். “இந்த குட்டி மூளைக்குள்ள அப்படி என்ன கொடையுது” என்றவாறே செல்வியின் மடியில் தலை சாய்த்தவன் அவளின் கன்னங்களை பிடித்து இழுத்தவாறே  கேக்க

“நீங்க ஏன் ரோஜா, தாமரைய கட்டிக்க மாட்டேன்னு சொன்னிங்க” தயங்கியவாறே கேட்டு விட

“அவங்க என்ன விட ரொம்ப வயசு கம்மி, நான் சீக்கிரம் வயசாகிடுவேன். அப்போ அவங்களுக்கு என்ன பிடிக்காம போயிட்டா” என்று கண்சிமிட்டி சிரித்தவன். “யாருக்கு யாருன்னு கடவுள் எப்பவோ முடிவு பண்ணிட்டான். எனக்கு நீ தான், உனக்கு நான் தான்” என்று சொல்ல   

முற்பாதியை குறும்பாகவும் பிற்பாதியை தீவிரமாகவும் சொன்னது செல்வியின் கவனத்தில் இல்லை.

உண்மையா சொல்லலாமா? வேணாமா? என்று செல்வி யோசனையில் விழ

“விட்டா நாள் பூரா யோசனையில் இருப்ப போல் இருக்கே” என்றவன் தன்னை நோக்கி அவளை இழுத்தான்.

செல்வி உண்மையை சொல்லி இருக்கணுமோ?

*******************************************************************

“இந்த டெண்டர் எப்படி அவன் கைக்கு போச்சு அவன் கோட் பண்ண அமௌன்ட் அங்க இருக்குற நம்மாளு சொல்லி அத வச்சி தானே நா அமௌன்ட் கோட் பண்ணேன். அவன விட மாட்டேன் அவன் பாக்டரிய எனக்கு விக்கச்சொன்னா! எனக்கே அட்வைஸ் பண்ணுறானா” கர்ஜித்தவாரே அறையில் நடை பயின்றான் அபிநந்தன். அவன் சொல்வதை அமைதியாக பாத்திருந்தான் அவனுடைய பி.ஏ மித்ரன்.

சத்யதேவுக்கு அவுஸ்ரேலியா காண்ட்ரெக் கிடைத்ததை பாரின் போய் இருந்தவனுக்கு மித்திரன் சொல்லவில்லை. அதை அறிந்தவன்  எகிறிக் கொண்டிருந்தான்.

“ஊரு முழுக்க கடன்ல இருக்குறதால அதிகமா பணம் தாரேன் வித்துட்டு போடானா, கேக்க மாட்டேங்குறானே” என்று புலம்பி விட்டு அவனை வீழ்த்த அவன் குடும்பத்துல தான் கை வைக்கணும்” என்றவன்   

“இதோ இந்த போட்டோல இருக்குறது. அவனோட அக்கா பொண்ணு, பேர் கூட ரோஜா நான் சொன்ன படி அவள லவ் பண்ண வச்சிட்டியா? அவள லவ் பண்ணுற மாதிரி நடிச்சிக்கிட்டு தானே இருக்க, நா எப்போ சொல்லுறேனோ அவள தூக்கிடு.

சத்யதேவை முடக்க ரோஜாவை பகடை காயாய் பிடிக்க எண்ணி நந்தன் சொல்ல மித்திரன் அமைதியாக ரோஜாவின் புகைப் படத்தை பார்த்தவாறே தலையாட்டினான்.

*******************************************************************

ஒருவாறு ரெஜிஸ்டர் மேரேஜுக்கு செல்ல அனைவரும் ஆயத்தமாகி வர செல்வி பட்டு சாரியில் கனகாம்பாளின் அறையிலிருந்து வர, சத்யதேவ்  பட்டு வேட்டி சட்டையிலும் தனது அறையிலிருந்து வர  ஒருவரை ஒருவர் ரசித்து பார்த்தவண்ணம் இருக்க

பலமாக தொண்டையை கனைத்தனர் செல்வராஜும், முருகவேலும்

“நா சொல்லல மாப்புள கல்யாணத்துக்கு அப்பொறம் பொண்டாட்டி முந்தானைய பிடிச்சிக்கிட்டு சுத்திக்கிட்டே இருக்கப் போறான்னு” முருகவேல் சிரிக்க

“அட நீங்க வேற சகல இருக்குற வேலைல மாப்பிள்ளைக்கு தமிழ் முகமே மறந்து போச்சு” செல்வராஜ் சிரிக்க

செல்வி “என் முகம் மறந்து போச்சா” என்ற பாவனையில் முறைத்தாள்.  

“தன்னால் நடக்கும் எதையும் நிறுத்த முடியவில்லை. ஒவ்வொருதடவையும் தோல்வியையே தழுவிக் கொண்டிருக்கின்றோம்” என்ற எண்ணத்தில்  வள்ளி கடுப்பாக தலை வலின்னு சொல்லி வர மறுக்க மற்றவர்களை சமாதானப் படுத்தி அனுப்பி வைத்த ரோஜா அன்னையிடம் வந்து

“நீ பண்ணுற ஒவ்வொண்ணையும் பொறுமையா மத்தவங்க கடந்து போறதால அவங்க கோழையும் இல்ல, மாட்டிக்காம தப்பிச்சு  கிட்டு இருக்குற நீ நல்லவலும் இல்ல. தமிழுக்கு நீ பண்ண இருந்த அநியாயத்த கடவுள் அந்த கீரை விக்கிற அம்மா மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துட்டாரு. உன் தில்லாலங்கடி  வேலையெல்லாம் கூடிய சீக்கிரத்தில் வெளிய வரும். பெத்தவங்க செய்யுற பாவம் புள்ளைங்கள தான் போய் சேரும்னு சொல்லுவாங்க,  நீ பண்ணுற பாவம் மொத்தமும் என் தலையில வந்து விடியப்போகுது”  

எந்த நேரத்தில் சொன்னாலோ ஆபத்து அவளை நெருங்கி கொண்டிருந்தது.

Advertisement