Advertisement

                                            அத்தியாயம் 15

சமையல் மேடையிலிருந்து தாமரை கத்த சத்யாவும் கனகாம்பாளும் ஓடி வந்தனர். அங்கே செல்வி சேலை முந்தியை இடுப்பில் சொருகியவாறே கட்டையோடு அங்கும்  இங்கும் ஓடிக் கொண்டிருந்தாள். இவர்கள் வந்ததை கண்டு தாமரை செல்வியின் புறம் கையை காட்டியவாறே இன்னும் கத்தலானாள்.

அங்கே ஒரு குட்டி எலி செல்வியின் கையில் சிக்காது ஓடிக்கொண்டிருக்க தாமரையை பார்த்து முறைத்த கனகாம்பாள்

“இந்த கத்து கத்துற பக்கத்து வீட்டுல உள்ளவங்க ஓடி வர போறாங்க வாய மூடு” என அதட்ட  தாமரை துள்ளிக் குதித்து வாசலுக்கு ஓடி விட்டாள்.

எலி சமயலறையையே வட்டமடிக்க செல்வியை பின்னால் இருந்து அணைத்த சத்தயா பின் வாசல் கதவை திறந்த விட “விடு ஜூட்” என்று எலி வெளியே ஓடி விட சத்யா அணைத்திருப்பதையும் மறந்து செல்வி

“எதுக்கு இப்போ கதவை திறந்து விட்டிங்க” என்று அவன் புறம் திரும்பி முறைக்க

அவள் திரும்பும் போது மாத்திரம் கையை சற்று தளர்த்தியவன் அவள் திரும்பியதும் மீண்டும் கையை இறுக்க ‘எலியை அடிக்க முடிய வில்லையே’ என்பதிலேயே  இருந்தவள் சத்யாவின் நெருக்கத்தை உணரவில்லை.

“ஏன் டி ஊருல அம்புட்டு பிராணிகளை வளர்க்குற நீயா எலிய கொள்ள இந்த ஓட்டம் ஓடுற”

“அப்போ பாரின்ல மாதிரி நீங்க அந்த எலிய வளக்குறீங்களா?” கண்ணை விரித்து ஆச்சரியமாக கேக்க

குளித்து விட்டு வந்திருந்தவளின் சோப்பின் வாசனையும்  எலியை துரத்தியதால் வேர்வையும் பூக்க இரண்டும் கலவையாய் கலந்து சத்யாவை இம்சித்துக் கொண்டிருக்க செல்வி கண்ணை விரித்துக் கேட்டதில் இன்னும் அவளை இறுக்கிக் கொண்டவன் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது அவளின் இதழில் கவிபாட ஆரம்பித்தான்.

நேற்றிரவு சத்யா வீட்டுக்கு வரும் போது கண்டது சோபாவில் சுருண்டு படுத்திருந்த செல்வியை தான்.

வேலை அதிகமாக இருந்தால் அவன் எப்போ வீடு வருவான் என்று அவனுக்கே தெரியாது. அதனாலேயே மாற்று சாவியை கையில் வைத்திருப்பவன், கனகாம்பாளை தனியாக விடாது  ரோஜா அல்லது தாமரை எந்த நேரமும் வீட்டில் இருக்கும் படி பார்த்துக் கொள்வான்.

செல்வியை மறந்து வேலையில் மூழ்கியவனை செல்வராஜ் வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்திருந்தபடியால் வீடு வந்த உடனே தூங்கலாம் என்று வந்தவனை அவனுக்காக காத்திருந்து காத்திருந்து தூங்கிப்போன மனையாள் வரவேற்றாள்.

அவனுக்காகவும் காத்திருக்க ஒருத்தி வந்து விட்டாள் என்று எண்ணும் போதே மனம் முழுக்க நிம்மதியும், சந்தோஷமும் பரவ செல்வியின் அருகில் சென்று அவள் முகத்தை பாத்திருந்தவன் குழந்தை போல் உறங்கும் அவளின் அழகில் மெய்மறந்து  கன்னத்தில் முத்தமிட்டவன் அவளை தூக்கிக் கொண்டு அறைக்குச் சென்றான்.

கட்டிலில் அவளை கிடத்தியவன், குளித்து விட்டு வர வாசலில் எரிந்த்துக் கொண்டிருக்கும் ஒளி விளக்கை அணைக்கச் செல்ல சாப்பாட்டு மேசையின் மேல் மூடியிருந்த பாத்திரங்களை கண்டு திறந்தது பார்க்கவே! செல்வி சாப்பிடாமல் தனக்காக காத்திருந்தது புரிந்தது.

“மாலையில் போகும் போது அவளிடம் சொல்லி இருக்கணும் வர லேட் ஆகும்னு, ஒரு போனாவது பண்ணி இருக்கணும்” என்று தன்னையே திட்டிக் கொண்டவன் பாலை சூடு பண்ணி செல்விக்கு வலுக்கட்டாயமாக புகட்ட தூக்கத்திலேயே அதை பருகியவள் கண்ணயர்ந்தாள்.

அவளின் வாயை துடைத்து விட்டு அவளை அணைத்தவன்  கூடிய சீக்கிரம் அவளுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணியவாறே தூங்கினான்.

காலையில் கண்விழித்த செல்விக்கு  தன்னை அணைத்தவாறு தூங்கும் சத்யதேவின் முகமே காணக் கிடைத்தது.

“மாமா எப்போ வந்தாங்க?” என்று யோசித்தவள், அவனின் கையை விலக்க

“இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கு” என்று அவளை இழுத்து கை வளைவுக்குள் கொண்டுவர  செல்வியின் தூக்கம் முற்றாக பறந்து போனது. அவனை நன்றாக பார்க்க அவன் தூங்கிக்கொண்டிருந்தான். “தூக்கத்துல பேசினங்களா” என்று தனக்குள் பேசியவள்

“ஐயோ நான் எப்போ ரூமுக்கு வந்தேன்” என்று யோசித்தவள் கனவுபோல் பால் அருந்தியது நியாபகத்தில் வரவே தலையை திருப்பி பார்க்க அங்கே டம்ளர் இருக்க அது கனவு இல்லை என்று புரிய  சத்யதேவின் மேல் அன்பு பெறுக அவனின் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

“அப்போ நான் தூங்கினா நீ இந்த வேல தான் பார்பியா?” என்று சத்யதேவ் கண்ணை திறந்து செல்வியை நன்றாக பார்க்க அவ்வளவு அருகில்  அவன் முகம் கண்டு இதயம் பலமாக துடிக்க என்ன சொல்வதென்று முழித்தவள் அவனிடமிருந்து விடு பட முயல

“ஒரு கன்னத்துல தந்தா மட்டும் போதாது மறு கன்னத்திலையும் தரணும்” என்று  அவளை இன்னும் தன்னருகில் இழுக்க மெதுவாக அவனின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“இந்த கன்னத்துல தந்தது போல இல்லையே!” என மீண்டும் முத்தம் கேக்க கொஞ்சம் அழுத்திக் கொடுத்தவளை இந்த கன்னத்துலயும் இந்த மாதிரி அழுத்தி தரணும்” என்று அவளை வம்பிழுத்தவன் மாறி மாறி முத்தம் வைக்க சொல்ல… கடுப்பானாவள்

ஒரு கன்னத்தை நன்றாக கடித்து விட அவன் “ஆ” என்று அலறிய போது கையை தளர்த்த சிட்டாய் பறந்து குளியலறை கதவருகில் சென்று அவனுக்கு பழிப்பு காட்டி விட்டே உள்ளே சென்றாள்.

“ராட்சஷி” என்று கன்னத்தை தடவியவன் மணியை பார்த்தவாறே இன்னும் கொஞ்சம் தூங்கலாம் என தலையணையை அணைத்துக் கொண்டு கண்ணயர்ந்தவன்.  தாமரையின் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்து சமயலறைக்கு ஓடினான்.

தாமரையின் குரல் வாசலில் கேக்க செல்வியை விட்டவன். அவள் இருக்கும் மோன நிலையை ரசித்தவாறே அவளின் இடுப்பில் சொருகி இருந்த புடவை முந்தியை இழுத்தவன் அவளின் நெற்றியிலும், கழுத்திலும் பூத்திருந்த வியர்வையை துடைக்க கண்ணை திறந்தவள் புடவையை இழுத்தவாறே அவனை முறைக்க ஆரம்பித்தாள்.

“என் கன்னத்தை கடிச்சிட்டு ஓடி வந்தள்ள அதுக்கு தான் இந்த தண்டனை” சத்யா குறும்புப் புன்னகையில் சொல்ல

“அத்த பாத்திருந்தா” என்று மீண்டும் செல்வி முறைக்க

“அம்மாவும் வரமாட்டாங்க, அம்மா தாமரையை இந்த பக்கம் வரவிடாம பாத்துப்பாங்க நீ வா” என்று அவளை மீண்டும் இழுக்க

” பல்லு கூட விளக்காம என் கிட்ட வராதீங்க” செல்வி இரண்டை பின்னாடி போக

“அப்போ நா கொடுத்த முத்தத்தை திருப்பி கொடு” என்று சத்யா வழியை மறைத்து நிக்க

“அத்த.. அத்த இங்க வாங்க” என்று செல்வி கத்த அவளின் வாயை சத்யா பொத்த

“உன் கிட்ட காபி கேட்டது என் தப்பு தான் மா. நீ போய் என் பையன பாத்துக்க நானே காபி போட்டுக்கிறேன்” என்று கனகாம்பாள் இருந்த இடத்திலிருந்தே சிரித்தவாறே குரல் கொடுக்க

“அதான் அம்மாவே சொல்லிட்டாங்கல்ல நீ வா” என்று செல்வியை இழுக்காத குறையாய் அறைக்கு  இழுத்து செல்ல தாமரை அவர்களை குறுவென பார்க்க

“அங்க என்ன பார்வ போய் நல்ல ஸ்டோங்கா காபி போட்டு எடுத்துட்டு வா” கனகாம்பாள் அவளை துரத்தி விட முணுமுணுத்தவாறே  போன எலி மீண்டும் வந்துடுமோ என்று சமையல் அறையை எட்டிப் பார்த்தாள் தாமரை.

அறைக்குள் வந்த சத்யா செல்வியை கட்டிலில் அமர்த்தி கையை மார்புக்கு குறுக்காக கட்டியவன் “எதுக்கு நைட் சாப்பிடல” அவளை நேர் பார்வை பார்த்து கேக்க

தயங்காமல் “என் புருஷனுக்காக காத்துகிட்டு இருந்தேன்”

அவளின் பதிலில் புன்னகை வர மனதுக்குள் சபாஷ் போட்டவன் “அது சரி வந்தானா அவன்? வந்து உனக்கு ஊட்டி  விட்டானா?” குரலில்  கோபத்தை கொண்டு வர

சலிக்காமல் அவனை பார்த்தவள் “ம்ம் எனக்கு பசிக்கல என்றதும் பால் தந்தாங்க”

“நல்லா தூங்கி கிட்டு தானே இருந்தா” என்று யோசித்தவன்

“நா சொல்லுறத நல்லா கேட்டுக்க செல்வி, என்ன வேல இருந்தாலும் மத்தியானத்துக்கு  வீட்டுல தான் சாப்பிடுறேன். காரணம் அம்மா எனக்காக காத்து கிட்டு இருக்காங்க.  கொஞ்சம் நாளைக்கு நிறைய வேல இருக்கு சாப்பிட வரமுடியாது. சில வேல வர விடிஞ்சிடும். இல்ல, வராமலேயே போய்டுவேன். அம்மாக்கு அதிகநேரம் விழிச்சிருக்க முடியாததால் தூங்கிடுறாங்க. நீயும் எனக்காக சாப்பிடாம காத்திருந்தா நா வேலைய பார்ப்பேனா? உன்ன பார்ப்பேனா?”

“அப்போ அம்மாக்காக மட்டும் தான் வந்தானா என்று மனம் சுணங்கியவள்”  என்ன பதில் சொல்வதென்று முழிக்க

அவளின் முகபாவனையை புரிந்துக் கொண்டவன் “காலையும், மத்தியானமும் மாமா உன் கூடவே சாப்பிடுறேன். நைட் மட்டும் நீ நல்லா சாப்டுட்டு சமத்து பாபாவா தூங்கிடு”  என்று அவள் அருகில் அமர்ந்து கையை பிடித்து சொல்ல சம்மதமாக தலையசைத்தவள்.

“அப்போ நைட்க்கு சாப்பாடு வீட்டுல இருந்து எடுத்து வரட்டுமா? அங்க வந்து உங்க கூட சாப்பிட்டு உங்க கூடவே வீட்டுக்கு வரேன்”

“டீல் நல்லா தான் இருக்கு நீ வந்தா நான் வேல பார்ப்பேனா என்று என்மேலேயே எனக்கு சந்தேகம் வருது”

“ஐயோ நா உங்கள ஒன்னும் பண்ண மாட்டேன். சாமி சத்தியம்” என்று செல்வி தலையில் கையை வைக்க

“எந்த தொந்தரவும் பண்ணமாட்டேன்” என்பதை செல்வி இப்படிச் சொல்ல

“நான் தான் உன்ன ஏதாவது பண்ணிடுவேனோ என்று பயமா இருக்கு” என்று பயந்தவன் போல் சத்யா நடிக்க வெக்கத்தில் முகம் சிவந்தாள் செல்வி.

தன்னால் முகம் சிவக்கும் மனையாளின் பக்கம் மனம் சாய அவளை இழுத்து அணைத்தவன் முத்தத்தில் ஆரம்பிக்க அடுத்த கட்டத்துக்கு போக முன் அவனின் அலைபேசி குறுக்கிட்டது.

அலைபேசியில் செல்வராஜின் எண்ணும், பெயரும் வர  செல்வியின் கன்னத்தில் முத்தமிட்டே விலகியவன் அலைபேசியை காதில் வைக்க

“என்ன மாப்புள என்ன வரச் சொல்லிட்டு ஆள காணோம். சீக்கிரம் வா” என்று சத்யாவின் பதிலை எதிர் பாக்காமலேயே! போனை அணைத்துவிட

“செல்வி நீ ஒரு டேன்ஜெரஸ் பியூட்டிதான். நீ அருகில் இருந்தாலே நான் என்ன மறந்துடுறேன்” என்று முணுமுணுத்தவாறே குளியல் அறைக்குள் புகுந்துக் கொண்டான்.

அவனால் எழுப்பப் பட்ட தாபத் தீயிலிருந்து  வெளி வர வழி தெரியாது செல்வி தடுமாற சத்யதேவின் போன் மீண்டும் அடித்தது.

ஒரு வழியாக தன்னை கட்டுக்குள் கொண்டுவந்து அலைபேசியை உயிப்பிக்க கோமளவள்ளியே பேசினாள்.

செல்வி “ஹலோ” என்றதும்   

“அட ஆடு தானா சிக்குதே” என்று நினைத்த வள்ளி எடுத்த எடுப்பிலேயே ” மாத்திர போட்டியா” என்று கேக்க

“இன்னும் சாப்பிடல சாப்பிட உடனே போடுறேன்” என்று செல்வி சொன்னதும்

” நல்லா மூக்கு முட்ட கொட்டிக்க வேண்டியது” என்று மனதுக்குள் பொறுமியவள் “சாப்பிட உடனே போடு தமிழ் மறந்துடாத”

“சரி அண்ணி” என்றவள் சமையல் அறையை நோக்கி சென்றாள்.

*******************************************************************

கல்யாணமாகி மூன்று மாதம் சென்றிருக்க செல்வியின் வாழ்க்கையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. சத்யதேவ் வேலை என்று ஆடை தொழிற்சாலையிலேயே இரண்டு,மூன்று நாட்கள் தங்கி விடுவான். மதியச் சாப்பாட்டுக்கு கூட வீடு வரவில்லை.

அவனுக்காக காத்திருக்காமல் கனகாம்பாளோடு ஒட்டியவள் கிராமத்தில் போல் எங்கும் செல்ல முடியாததால் வீட்டுக்கு வரும், காய்கறி விற்பவர், கீரை விற்கும் அக்கா, மீன் விற்பவர் பக்கத்து வீட்டில் உள்ளோர் என்றெல்லாம் பேச்சை வளர்த்து தனிமையை போக்கினாள்.

தம்பிகளை பிரிந்து வாழப் பழகி இருந்தாள் செல்வி. சத்யதேவ் செல்விக்கென்றே ஒரு கையடக்க தொலை பேசியை வாங்கி கொடுக்க முதல் அழைப்பே தம்பிகளிடமிருந்து வந்தது.

“அக்கா… மாமா உன் கூட பேசவென்றே போன் வாங்கி தந்தாங்க, இப்போ நெனச்ச உடனே உன் கூட பேசலாம், மணி அண்ணா வரும் வர காத்திருக்க வேண்டியதில்லை” இருவரும் மாறி மாறி போனை பிடிங்கி பேச அழுகையை கட்டு படுத்த வழி தெரியாது அதிக நேரம் அவர்கள் பேசுவதையே!  “ம்ம்” என்று கேட்டுக் கொண்டிருப்பாள்.

பாடசாலையில் அன்று நடந்தவைகளிலிருந்து ஊரில் நடந்தவை வரை சொல்பவர்கள். அவள் கேக்காமலேயே பிராணிகளை பற்றியும் சொல்வார்கள்.

மாதம் தோறும் கருத்தடை மாத்திரைகளை செல்விக்கு வழங்கிய கோமளவள்ளியும் செல்விக்கே அழைத்தது “மாத்திரை சாப்பிட்டாயா” என்று நாள் தவறாமல் கேக்கலானாள்.

“மறந்துட்டேன், இன்னும் இல்ல, சாப்பிடணும்” என்று பதில்களை சொல்லிக் கொண்டிருந்தவள்

“சாப்பிட்டேன், இப்போதான் போட்டேன். என்ற பதில்களை சொல்லலானாள்.

ரோஜா, தாமரை சினிமாவுக்கு போக அழைத்தாலும் கனகாம்பாளை விட்டுச் செல்ல மனமில்லாது செல்ல மாட்டாள். அவரோடு கோவிலுக்கு மாத்திரம் செல்லுபவள் சத்யாவின் ஒரு அணைப்புக்காக வெகுவாக ஏங்கினாள்.

இங்கு சத்யாவோ ஆடைகளை சரியான முறையில் தைத்து, ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதில் மும்முரமாக வேலை பார்த்தாலும் எண்ணமெல்லாம் செல்வியின் மேலேயே  இருந்தது.

வட்டியை கட்டலாம் அசலை பிறகு பார்த்துக் கொள்ளலாம் முதலில் காசு கையில் கிடைத்த உடனே வேறு வீடு பார்க்கணும், செல்வியின் தம்பிகளை இங்கே நல்ல பாடசாலையில் சேர்க்கணும், அப்பொறம் செல்வியோடு ஹனி மூன் போகணும்” என்று திட்டமிட்டு வேலை பார்த்தவன் நடுஜாமத்தில் வந்தது செல்வியை அணைத்தவாறே தூங்கி அவள் எழும் முன்னே சென்று விடுவான். அவனின் நிம்மதியே அவளின் முகம் பார்ப்பது என்றிருக்க இதை அறியாத செல்வி அவனுக்காக ஏங்கினாள்.

*************************************************************

செய்ய எந்த வேலையும் இல்லாமல் போரடிக்கவே கனகாம்பாளின் பீரோவை சுத்தம் செய்தவளுக்கு ஒரு பழைய ஆல்பம் கிடைக்கவே அதில் மூழ்கினாள். சத்யா, மரகதம், வள்ளியை அடையாளம் கண்டு கொண்டவளுக்கு இரட்டையர்களை தெரியவில்லை.

“அது என் பொண்ணுங்க மல்லிகையும் முல்லையும் தான் மா” கனகாம்பாள் கவலைக்கு குரலில் சொல்ல

அவரின் கையை பற்றி ஆறுதலாக செல்வி தடவ

“மரகதத்துக்கும், வள்ளிக்கும் சத்யாவோட அப்பத்தா தான் பேரு வச்சாங்க, சத்யா பொறக்கும் போது அவங்க உயிரோட இல்ல.  சத்யதேவ் னு உன் மாமாதான் பேரு வச்சாரு. மல்லிகையும், முல்லையும் பொறந்தப்போ நான் தான் ஆசையாசையா பேர் வச்சேன்.

வள்ளி, மரகதம் சத்யா மூனு பேருமே நம்ம வசதியா வாழ்ந்தப்போ அனுபவிச்சாங்க. மாமா இறக்கும் போது இதுங்க ரெண்டுக்கும் இரண்டு வயசு கூட பூர்த்தியாகல. கஷ்டத்த மட்டும் அனுபவிச்சவங்க.

சத்யா அடிக்ககடி சொல்லிக் கிட்டே இருப்பான். ஒரு கார்மண்ட் பேக்டரி ஆரம்பிக்கணும், அதுக்கு அப்போரமா டெஸ்ட்டைல் ல கால் படிக்கணும் னு.

அப்போ மல்லி சொல்லுவா

“அண்ணா உனக்கு உறுதுணையா நான் இருப்பேன்னு”

முல்லையும் முந்திக்கிட்டு “என் புல் சப்போர்ட்டும் உனக்குத்தான்னு”

ஏதோ சின்ன பசங்க விளையாட்டா சொல்லுதுங்கனு நானும் சிரிப்பேன்.

சொன்ன மாதிரியே அது சம்பந்தமான படிப்பை படிக்கவென்றே காலேஜ்ல சேர்ந்தாங்க.

ரெண்டு பேரும் வேற வேற டிபாட்மெண்ட்ல இருந்ததால மல்லி பின்னால ஒரு பையன் சுத்துறத பத்தி முல்லைக்கு தெரியல. எங்க…. வீட்டுல இத பத்தி சொன்னா படிப்பை பாதில விட்டுட சொல்லி விடுவேனோனு சொல்ல பயந்து புள்ள சொல்லவே இல்ல.

அந்த பையனும் மல்லி கிட்ட சொல்லி சொல்லி பாத்திருக்கான். இவளும் பேசாம  போய்ட்டா விட்டுடுவான்னு நெனச்சி,அவன் என்ன சொன்னாலும் அமைதியாகவே போய் இருக்கா,

காலேஜ்ல    கலைநிகழ்ச்சின்னு  நாங்க எல்லாரும் போய் இருந்தோம். மேடைல மல்லி கலைநிகழ்ச்சிய நடத்திக் கிட்டு இருந்தா, அந்த பையன் ஏதோ பாட்டு பாடவென்று வந்தவன் மல்லிய பார்த்துக் கொண்டே பாடினான்.   

அவங்கம்மாவும் அங்க தான் இருந்தாங்க, பாட்டு முடியும் வர மல்லி அவனை பார்க்கவே இல்ல, முடிஞ்ச உடனே மல்லி கிட்ட போய் தாலிய கட்டிட்டான். கட்டும் போது மல்லி அவன தடுக்க பார்த்தா, அவளால முடியாதபடி அவளை இறுக்கி அணைச்சு கிட்டே கட்டிட்டான்.

மல்லி அவன தள்ளி விட்டுட்டு அழுது கிட்டே வெளிய ஓடிட்டா. எங்க கண்ணாலேயே கண்டதால மல்லி மேல எந்த தப்பும் இல்லனு நல்லாவே புரிஞ்சது. இல்லனா நானே அவள அடிச்சு பாதி உசுர எடுத்திருப்பேன்.

என்றவாறு கனகாம்பாள் அழ அவரை அணைத்தவாறு செல்வி ஆறுதல் சொல்ல அவளை விட்டு விலகியவர் .

“ஆனா எதுவுமே நடக்காத மாதிரி அந்த பையனோட அம்மா பேசுச்சே அதைத்தான் என்னால தாங்க முடியல” என்றவாறே சாருலதாவை பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

Advertisement