Advertisement

                                                அத்தியாயம் 7

 

“என்னது என் பையன பஞ்சாயத்துல நிப்பாட்டிடாங்களா?” வண்டியில் கோவிலுக்கு வந்துகொண்டிருந்த கனகாம்பாளின் வண்டியை நிறுத்தி மணி ” நடந்ததை சொல்ல அவனையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு பஞ்சாயத்து நடக்கும் இடத்துக்கு வண்டியை விடச் சொன்ன கனகாம்பாளின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

 

சத்யதேவ் தமிழ்செல்வியை தூக்கிக் கொண்டு வரும் போது முதலில் கண்ட நாட்டாமை சத்யதேவை யாரின் மகன் என்று அறிந்திருந்த படியால்  தமிழுக்கு ஏதோ ஆபத்தென்றும், சத்யா தான் காப்பாத்தி தூக்கிட்டு வருவதாக நினைக்க கூட வந்த பெருசுகள் அவரை குழப்பி விட்டனர்.

“நீ கனகா பையன் தானே! காட்டுக்குள்ள இருந்து பொண்ண தூக்கிட்டு வாராய் என்ன நடந்தது” நாட்டாமை கேள்வி எழுப்ப

“யார் பையன் என்றாலும் என்ன தனியா இந்த புள்ளய காட்டுக்கு குள்ள இருந்து தூக்கிட்டு வாரானே என்ன நடந்திருக்கும்னு புரியாம பேசுறீங்களே நாட்டாம” பெருசு நம்பர் ஒன்னு சொல்ல

 

“அதானே யாருமில்லாத காட்டுப் பக்கம் உங்களுக்கென்ன வேல தம்பி” பெருசு நம்பர் டூ.

 

“பட்டணத்து பசங்கள நம்ப முடியாதுப்பா” பெருசு நம்பர் த்ரீ.

 

“ஆமா ஆமா இந்த தம்பிக்கு வேற இன்னும் கல்யாணம் கூட ஆகல” பெருசு நம்பர் போ.

 

தமிழ்செல்வியை தூக்கிக் கொண்டு வந்த சத்யதேவ் கோவில் படியில் அமர்த்த கேள்விகளை கேட்டு  அவனின் நடத்தையையே கேள்விக்கு குறியாக்கி பேசிக் கொண்டிருந்தனர் ஊரில் நாங்கதான் பெரியவங்க என்று சொல்லிக் கொண்டு திரியும் கடா மீசை வைத்த பெருசுகள்.

 

அவர்களின் பேச்சை பொருட் படுத்தாது செல்வியின் நிலையை ஆராய அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை கண்டு நிம்மதியடைந்தான்.

யார் என்ன பேசியும் பதில் தராது சத்யதேவ் இருக்க சில பெருசுகள் கடுப்பாக சில பெருசுகள் மீசையை முறுக்கியவாறே கோபப்  பட்டனர்.

 

“கோவில்ல பூஜை ஏற்பாடு செய்திருந்தோம் அம்மா வயசானவங்க அவங்க வரும் வர எல்லா ஏற்பாடையும் முடிச்சிடலாம்னு மணி கூட இந்த பொண்ணு வந்தா. நா வந்த போ யாருமில்ல. சத்தம் கேட்டு போய் பாத்தா இந்த பொண்ணு மயங்கி இருந்தா அதான் தூக்கிட்டு வந்தேன். ஏனோ அவளை யாரோ பலவந்த படுத்த பார்த்ததை சொல்ல தோணவில்லை. செல்வியை தூக்கிக் கொண்டு வந்ததுக்கே இவ்வளவு பேசியவர்கள் இதை சொன்னால் இன்னும் ஏதாவது பேசி அவளின் வாழ்க்கையை கேள்விக்கு குறியாக்கி விடுவார்களோ என்று தோன்ற  பாதி உண்மையையும் மீதி உண்மையை மறைத்தும் சத்யதேவ் கூறினான்.

 

மாலையோடு வந்த மணி இங்கே நடப்பதை கண்டு குழம்பி “ஐயோ தமிழு என்னாச்சு புள்ள என்னாச்சு தனியா இருந்துப்பேன். சாமியே துணை இருக்கும்னு சொன்னியே இவங்க என்னனென்னமோ சொல்லுறாங்களே” என கதற

 

“மணி இந்த பொண்ண இங்க தனியா விட்டுட்டு நீ எங்க போன” சத்யதேவின் கோவம் முழுதும் மணியின் பக்கம் திரும்ப

“நா மாலை வாங்கனு போய்ட்டேன். நீங்க மட்டும் வந்து இருக்கீங்க அம்மா எங்க” மணி அவனை திருப்பிக் கேக்க அதை கப்பென்று பிடித்துக் கொண்ட ஒரு பெருசு

 

“அதானே இவங்க தனியா வந்தத தெரிஞ்சிக்கிட்டு நீங்க எதுக்கு தம்பி பின்னாடி வந்தீங்க? ஒன்னு இவங்க கூட வந்திருக்கணும், இல்ல உங்கம்மா கூட வந்திருக்கணும்” என மீண்டும் சந்தேகத்தை கிளப்ப

 

புதர் மறைவில் இங்கே நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருந்த குமரேசன் ஒன்றும் அறியாதவன் போல் வேப்பங் குச்சியால் பல் துலக்கியவாறே வந்து “என்ன கலாட்டா இங்க? என்ன தம்பி பொண்ணு மயக்கம் போட்டு விழுந்துட்டாளா? சின்ன பொண்ணு உங்க வேகம் தாங்க முடியாம மயக்கம் போட்டிருப்பா” என்று கொழுத்திப் போட அவன் மேல் பாய்ந்திருந்தான் மணி.

சத்யதேவ் எந்த விஷயத்தையும் பொறுமையாய் கையாளுபவன். அவனுக்கு கோபப்படத் தெரியாமல் பொறுமையாக இருக்கவுமில்லை. தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகி விடக் கூடாதென்று பொறுமை காக்க குமரேசன் பேசியது அவனின் கண்களை சிவக்க வைத்தது. எங்கே அவனை அடித்து விஷயத்தை பெருசு படுத்தி விடுமோ என கையை மடக்கி கோவத்தை அடக்க முயற்சி செய்து கொண்டிருக்க  

“யாரப் பார்த்து என்னடா சொன்ன நாயே! பொம்பள பொருக்கி உன்ன மாதிரி எங்க ஐயாவ நினைச்சிட்டியாடா” என்றவாறே மணி அவனின் மேல் பாய்ந்து இருவரும் நிலத்தில் உருண்டு புரண்டு சண்டை போட அவர்களை விளக்குவது பெரும் பாடாகிப் போனது.

ஒருவாறு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர செல்வியும் மயக்கம் தெளிந்து அமர அவளிடம் திரும்பினார் நாட்டாமை.

“புள்ள தமிழு என்ன நடந்திருச்சுனு சொல்லுறியா?”

அவர் என்ன கேக்குறார் என்று புரியாமல் செல்வி முழிக்க

“அவ எப்படி சொல்லுவா அவ தான் இவன் தூக்கிட்டு போகும் போது இவன கட்டிக்க கிட்டு கழுத்தில் கைய கோர்த்துக் கொண்டு போனாளே” குமரேசன் கூறி முடிக்க முன் அவனின் மூக்குடைப் பட்டு இரத்தம் வழிய ஆரம்பித்தது.

ஆம் இந்த தடவ அவனை அடித்தது சத்யதேவ்.

பொறுமையை இழந்த நாட்டாமை “கூட்டுங்கடா பஞ்சாயத்த” உத்தரவிட்டவர் துண்டை உதறி தோளில் மாட்டியவாறே செல்ல பெருசுகளும் பின் தொடர்ந்தனர்.    

 

கோவிலுக்கு வெளியே உள்ள ஆலமர நிழலில் பஞ்சாயத்து கூட்டப் பட்டிருக்க ரோஜாவையும் தாமரையையும் அழைத்துக் கொண்டு  பஞ்சாயத்து நடைபெரும் இடத்துக்கு வந்து சேர்ந்தார் கனகாம்பாள் கூட மணியும் இருக்க

“வா கனகா உன் பையன் பண்ணி இருக்குற காரியத்த பாரு” பெருசு நம்பர் டூ சொல்ல அவரை முறைத்த கனகாம்பாள்.

 

“என்ன நடந்தது” கனகாம்பாள் கேட்டது தமிழ்செல்வியிடம்.

 

“தன்னிடம் அன்னை எதுவும் கேட்கவில்லை தன்னை சந்தேகப் படுகிறாரோ” என்ற எண்ணம் சத்யதேவினுள் தோன்றி முகம் அதை தெளிவாய்  எடுத்துக் காட்ட

 

தன்மகனின் முகமாறுதலை அவன் முகம் பாராமலே உணர்ந்த கனகாம்பாள் அவனை திரும்பியும் பாராது தமிழ்செல்வியின் பதிலுக்காக காத்திருந்தார்.

 

கோவிலில் தான் இருந்த போது யாரோ பின்னாடி வந்து மயக்க மருந்தை தெளித்ததும் கண்விழித்து பார்க்கும் போது அனைவரும் இருந்ததை கூற யாரோ அவள் தனியாக இருந்ததை கண்டு செய்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்ட கனகாம்பாள் அடுத்து பேசும்முன்  

 

“என்ன கனகா நீ பாட்டுக்கு வந்து கேள்வி கேட்டு கிட்டு இருக்க நாட்டாம எதுக்கு இருக்காரு வெட்டியா உக்காந்து இருக்கவா?” பெருசு நம்ப போ சொல்ல

 

“யாரடா அந்த நாட்டாம” என்று எட்டிப் பார்த்த தாமரை அவரை கை காட்டியவாறே சிரிக்க அனைவரும் அவளை வினோதமாக பார்க்க ரோஜா தாமரையை கிள்ளினாள்.

 

“ஏண்டி ரோஜா பெரியமீசவச்சி நாட்டாம படத்துல வார சரத்குமார் மாதிரி இருப்பாருனு பார்த்தா குள்ள கத்திரிக்காக்கு கை கால் முளைச்சு மாதிரி இருக்காரே இவரா நாட்டாம? ஐயோ எனக்கு சிரிப்பு சிரிப்பா வருதே! தாமரை சத்தமாக சொல்ல அங்கே ஒரு சிரிப்பலை கனகாம்பாள் அவளை முறைக்க சிரிப்பை அடக்க முடியாமல் திணறினாள் தாமரை.

 

விஷயம் கேள்விப் பட்டு பார்வதி பாட்டி வந்து ஒப்பாரி வைக்க அவரை இழுத்து ஒரு இடத்தில் அமரவைத்தனர் ஊர் பெண்கள்.

“ஊர் சட்டப் படி ஒரு பொண்ண பலவந்தப் படுத்தினால் நூறு கசையடி வழங்கப் படும். அதுவே பெண்ணும் ஆணும் சேர்ந்து தப்பு பண்ணி இருந்தா ஐம்பது ஐம்பது கசையடிகள் வழங்கப் படும். நாட்டாம பஞ்சாயத்துத் தீர்ப்பை முன்கூட்டியே சொல்ல குரூரமாக புன்னகைத்தான் குமரேசன்.

 

கண்ணால் கண்ட சாட்சியென குமரேசனை விசாரிக்க பஞ்சாயத்தில் செல்வியும் தப்பு பண்ணி இருக்கிறாள். என தீர்ப்பு வந்தால் பின்னாளில்  அதை சொல்லியே செல்வியை அடையலாம் என குமரேசன் திட்டம் போட்டு சொல்லியத்தையே அச்சுப் பிசகாமல் சொல்ல அவனை கொலை வெறியில் முறைத்தனர் கனகாம்பாள் வீட்டில் உள்ளோர்.

 

“செல்வி புள்ள ஒன்ன சொல்லுது இந்த தம்பி சத்தம் கேட்டு போய் பாத்தேன்னு சொல்றாரு, குமரேசன் ஒன்ன சொல்றானே! சிவா வேற ஊர்ல இல்லையே! அவன் இருந்தா சரியான நாடிய புடிச்சிருப்பானே” என நாட்டாமை புலம்ப

 

“குமரேசன் சொல்றது பொய்யுங்க தம்பி தமிழ தூக்கிட்டு வரும் போது நீங்க எல்லாரும் இருந்தீங்களே அவ மயக்கமா தானே இருந்தா?” மணி  எடுத்துக் கொடுக்க

 

“அவ இவங்கள பார்த்ததும் கண்ண மூடிக்கிட்டு மயக்கம் போட்ட மாதிரி நடிச்சிருப்பா” குமரேசன் பட்டென சொல்லவும் பெருசுகளும் குழம்பினர்.

 

“ஐயோ நா நாட்டாம பதவிக்கு வந்து ரெண்டு நாள் கூட ஆகலேயே! என் பொண்டாட்டி சொன்னாலே “மாமா உங்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது நா சொல்றத கேளுங்க வீட்டுக்கு அடங்கி இருங்க” சொன்னாலே சொன்னாலே இப்போ என்ன பண்ணுவேன்” நாட்டம வழுக்கத் தலையை சொரிய

 

குமரேசனின் சாட்சியை ஒரு சாட்சியாக எடுத்துக்க முடியாதென ஒரு சிலரும், சத்தம் கேட்டு சென்றதாக சத்யதேவ் சொன்னாலும் என்ன சத்தம் என்று தெளிவாக சொல்லவில்லை, அதனால் சத்யதேவின் மேல் தான் குற்றம் என்று ஒரு சிலரும் வாக்கு வாதத்தில் ஈடு பட  பார்வதி பாட்டி தமிழ்செல்வியை அடிக்க ஆரம்பித்தார்.

 

“ஐயோ ஐயோ நா என்ன செய்வேன். இப்படி பேர கெடுத்து கிட்டு இருக்காளே! நாளைப்பின்ன யாருக்கு இவள கல்யாணம் பண்ணி கொடுக்கப் போறேன். ஐயோ கடவுளே! உனக்கு கண்ணில்லையா? ஆத்தா அப்பன் இல்லாதவள நா எப்படி கரையேத்த போறேன்னு தெரியலையே! இப்படி ஒரு பேரோட நீ உசுரோட இருந்து என்ன செய்ய செத்துப்போ செத்துப்போ” சொல்லி சொல்லியே தமிழ்செல்வியை பார்வதி பாட்டி அடிக்க கண்ணீர் வடித்தவாறே அவரின் அடிகளை பெற்றுக் கொண்டவள்.

 

“பாட்டி நா செத்து பொய்ட்டா தம்பீங்கள யாரு பாத்துப்பாங்க? இன்னும் மத்யானத்துக்கு சமைக்கவுமில்லை ஸ்கூல் விட்டு பசியோட வருவாங்க” அழுதவாறே அவள் சொல்ல தலையில் அடித்துக் கொண்டு தரையில் அமர்ந்தார் பார்வதி பாட்டி.

 

பார்வதி பாட்டியும் தாமரையும் அழுதவாறு  இருக்க, பெருசுகளும் ஊர் மக்களும்  வாக்கு வாதத்தில் ஈடுபட்டு இருக்க, நாட்டாம என்ன தீர்ப்பு சொல்வதென்று குழம்பிப் போய்  இருக்க, கனகாம்பாள் ஒரு கையால் சத்யதேவையும் மறுகையால் செல்வியையும் பிடித்துக் கொண்டவர் யாரையும் எதிர் பார்க்காமல் அவர்களை இழுக்காத குறையாய் கோவிலை நோக்கி நடந்தார்.

அவர்களை பின் தொடர்ந்தனர் ரோஜா, தாமரை மற்றும் மணி. பார்வதி பாட்டி தரையில் அமர்ந்து அழுதவாறு தமிழ்செல்வியை கனகாம்பாள் இழுத்துச் செல்வதை கண்டு கனகாம்பாள் செய்ய போகும் காரியத்தை புரிந்து கொண்டவராக கடவுளை மனத்தால் நினைத்து  வணங்கினார்.

 

அவரும் அவர்களை நோக்கி போக அப்பொழுது தான் அவர்கள் இல்லையென கண்ட நாட்டாம சத்தமாக குரல் எழுப்பி மக்களை அடக்கியவர் கோவிலை நோக்கி நடக்க மற்றவர்களும் பின் தொடர்ந்தனர்.

 

கனகாம்பாள் இருவரையும் நிறுத்தியது கடவுளின் முன் தனது கையிலிருந்த பையிலிருந்து தாலியை வெளியே எடுத்தவர் கடவுளை வணங்கி சத்யதேவின் கையில் கொடுத்தவர். “சத்யா என் மருமக கழுத்துல  இந்த தாலிய கட்டு” அதிகாரமாக ஒலித்தது கனகாம்பாளின் குரல்.

சத்யதேவ் செல்வியை தயங்கியவாறு பார்க்க அவளின் கண்களில் என்ன கண்டானோ!

தாயின் கையிலிருந்த தாலியை வாங்கியவன் நொடிநேரம் தாமதிக்காமல் மூன்று முடிச்சையும் போட தாமரை விசில் அடிக்க கனகாம்பாள் அவளின் தலையில் கொட்டி “கோவில்” என்று சைகை செய்தார்.

 

பார்வதி பாட்டி ஆனந்தக் கண்ணீர் வடிக்க அங்கே வந்த ஊர் மக்களும் நாட்டாமையும்

“என்ன கனகா பஞ்சாயத்து நடந்துக்க கிட்டு இருக்கும் போது இப்படி பண்ணிட்ட நாட்டாம என்று எனக்கு ஒரு மரியாத இல்ல, பஞ்சாயத்தையும் மதிக்கல” என்று கடுப்பாக

“அதான் கல்யாணம் ஆகிரிச்சில்ல திரும்ப என்ன தீர்ப்பை மாத்தியா சொல்லிட பொறிக?” ரோஜா சந்தோசத்தில் எகிற {புள்ள ஓவரா சந்தோசப் படுதே ஏதாச்சும் உள்குத்து இருக்குமோ?}

“ரோஜா” கனகாம்பாள் ரோஜாவை அடக்க

 

“இது எங்க குடும்ப விஷயம். இப்போ அத நாங்களே பாத்துகிறோம்” இவ்வளவு நேரமும் பஞ்சாயத்தில் அமைதியாக இருந்த சத்யதேவ் நாட்டாமையை பார்த்து கூறியவன் செல்வியின் கையை உரிமையாக பிடித்தவாறே காரை நோக்கி சென்றான்.

 

Advertisement