Advertisement

                                                    அத்தியாயம் 6

“ஆத்தி என்ன குளத்தை கொண்டுவந்து வீட்டுக்கு பின்னாடி வச்சிருக்காங்க குளம் வட்டமால்ல இருக்கும் இது என்ன சதுரமா இருக்கு தண்ணி வேற கடல் தண்ணி மாதிரி நீலமா இருக்கு. உப்பு தண்ணியா? உப்பு தண்ணிய புடிச்சி இந்த சதுர குளத்துல எதுக்கு நெறச்சி வைச்சிருக்காக? கடல் தானே பக்கத்திலேயே இருக்கு? ஆமா எப்படி நெறச்சிருப்பாக வாளில புடிச்சு இருப்பாகலோ?

தமிழ்செல்வி மனதுக்குள் நினைப்பதாய் சத்தமாக சொல்லிவிட அவள் பின்னாடி பூன நடை போட்டு  வந்த சத்யதேவ் சத்தமாக சிரித்தான். “பட்டிக்காடு பட்டிக்காடு அது பூல் டி”

பூல் நா முட்டாள் தானே மாமா என்ன திட்டுறீங்களா? எனக்கும் இங்கிலீசு தெரியும் மாமா.

அது பூல்[pool ]   நீ பூல்[fool ] என இவர்கள் பேசியதை கேட்ட  ரோஜா கோவமாக முணுமுணுத்தாள்.

 

“ஐயோ அம்மா” தாமரை கத்த அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தாள் ரோஜா.

 

“எதுக்குடி இப்படி கத்தின? பாட்டி வேற டேப்லெட் போட்டுட்டு தூங்குறாங்க, மாமா வேற இருக்காங்க, நடு ராத்திரியில் இப்படி பேய் மாதிரி கத்துறியே!  தூங்க விடுடி பிசாசு” தனது தூக்கத்தை கெடுத்த தாமரையை லெப்ட் அண்ட்  ரைட் வாங்கினாள் ரோஜா.

 

கனவு கண்டு கத்தியவாறே எழுந்து அமர்ந்த தாமரை  இரவு விளக்கொளியில் ரோஜா அமர்ந்து கத்துவதை பார்த்து “என்ன பேய்னு சொல்லிட்டு நீ பேய் மாதிரி கத்துற  ஹா ஹா ஹா” என சிரிக்க ஆரம்பிக்க கடுப்பான ரோஜா, தாமரையின் வாயை ஒரு  கையால் மூடியவள் மறு கையால் கழுத்தை பிடித்து இறுக்கியவாறே “எதுக்குடி இப்போ கொல்லிவாய் பிசாசு மாதிரி சிரிக்கிற”

 

தாமரை மூச்சு விட சிரமப் படவும் கையை ரோஜா எடுக்க நெஞ்சை உள்ளங்கையால் தட்டிய வாறே இருமியவள் ரோஜாவை முறைத்தவாறே சிரிப்பை அடக்க அவள் மேல் கொலைவெறியில் ரோஜா தலையணையால் அடிக்க  ஆரம்பித்தாள்.

ரோஜாவுக்கு தாமரைக்கும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் வயசு வித்தியாசம் இருந்தாலும் தன்னை தாமரை “அக்கா” என்று அழைப்பதை சிறு வயதிலேயே வெறுத்த ரோஜா,  தாமரை “அக்கா” என்று அழைக்கும் போதெல்லாம் தலையில் கொட்ட “ரோஜா” என்றே தாமரை  அழைக்க ஆரம்பித்தாள். ரோஜாவை வெறுப்பேத்த சில சமயம் தாமரை “அக்கா” என்று அழைத்து சில பல அடிகளையும் வாங்கி கொள்வாள்.

 

தாமரை ரோஜாவை பேர் சொல்லி அழைப்பதை கண்டு செல்வராஜ் கண்டிக்க “அவ குண்டு பூசணிக்கா மாதிரி இருக்கா ரோஜாவ அக்கானு கூப்டா நம்ம பொண்ணுக்கு வயசு அதிகம்னு யாராவது நினைச்சிட போறாங்க” கோமளவள்ளி சிரித்தவாறே சொல்ல

“எப்படி மரகதத்தை உன் அக்கானு சொல்லறியே அப்படியா?” செல்வராஜ் கிண்டலடிக்க

“நா எங்க அக்கானு சொன்னேன் சிஸ்டர்ன்னு தானே சொன்னேன்” கோமளவள்ளி நொடித்துக் கொள்வாள்.

 

“அக்கா விடுக்கா விடு” என   தாமரை கத்த இன்னும் பல அடிகள் ரோஜாவிடமிருந்து பெற்றுக் கொண்ட தாமரை

“போ..க்கா.. சூப்பர் கனவு கண்டேன் சொல்லமாட்டேன்” என்று முறுக்கிக் கொள்ள ரோஜாவுக்கு கேக்க ஆர்வமாக இருந்தாலும்

“சொல்லாட்டி போய் தூங்கு” என்று படுக்கை விரிப்பை இழுத்து போர்த்திக் கொள்ள,  அவளின் போர்வையை இழுத்து “அக்கா” என்று சொல்வதை கைவிட்டு ரோஜா கேட்டுக் கொண்டு தான் இருக்கிறாள் என்று அறிந்தவளாக தான் கண்ட கனவை விவரிக்க சத்தமாக சிரித்தாள் ரோஜா.

இந்த முறை ரோஜாவின் வாயை தாமரை அடைக்க வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தவள்.

“செமடி எப்படி டி உனக்கு மட்டும் இப்படி கனவு வருது. அந்த தமிழ்செல்வி ஒன்னும் பட்டிக்காடில்ல நல்ல வெவரமானவதான். ஆனாலும் மாமா கூட” என்று மீண்டும் சிரிக்க

“ஏன் அவளுக்கென்ன கொறச்சல் அழகா தானே இருக்கா! ஜோடி பொருத்தம் சூப்பர்” தாமரை சத்யதேவ் உடன் தமிழ்செல்வியை மனக்கண் முன் நிறுத்திச் சொல்ல

தன் அன்னை சொன்னவைகளை நினைத்து  ஒரு பெருமூச்சு விட்ட ரோஜா “இப்பவே மணி நாளாகுது ஆறு மணிக்கே பாட்டி வந்து  கோவிலுக்கு போகணும்னு கதவை தட்டுவாங்க பேசாம தூங்கு” என்று அதட்டியவள் இழுத்து போர்த்தியவாறே தூங்கினாள்.

தாமரையும் முணுமுணுத்தவாறே தூங்க கனகாம்பாள் ஆறு மணிக்கே கதவை தட்ட ரோஜாவை தாமரையும், தாமரையை ரோஜாவும் மாறி மாறி நீ போ.. நீ போய் கதவை திறனு சொல்லிக் கொண்டிருந்தனர்.

 

“வணக்கம் அத்த” தமிழ் செல்வி காலையிலேயே குளித்து விட்டு கோவிலுக்கு செல்லவென வந்திருக்க அவளின் கலையான முகம் கண்டு கனகாம்பாள் வாஞ்சையாக

“என் கண்ணே பட்டுடும் போல் இருக்கேமா. வா பூஜைக்கு தேவையான தட்டெல்லாம் ஆயத்தம் பண்ணலாம்” என அவளை  அழைத்துச் செல்ல, எல்லாம் தயாராகியும் ரோஜா, தாமரை தயாராகி வரவில்லை.

“அத்த நா மணியண்ணன் கூட போய் பூஜைக்கான ஏற்பாடெல்லாம் பண்ணுறேன் நீங்க அக்கங்களக் கூட்டிக்கொண்டு மெதுவா வாங்க” என்று சொல்ல

“கொஞ்சம் இருமா” அவள் கையில் ஒரு புடவையை திணித்தவர் “முதல்ல இத கட்டு கோவிலுக்கு போறோம் புடவைல போனா தான் நல்லா இருக்கும்” என்று சொல்ல அதை மறுக்காது அணிந்து கொண்டவள் மணியுடன் கோவிலை நோக்கி புறப்பட்டு சென்றாள்.

 

கோவிலுக்கு செல்ல தயாராகி வந்த சத்யதேவ் ஒரு நிலையில்லாது மனம் அடிக்கவே “அம்மா இன்னக்கி கோவிலுக்கு போயே ஆகணுமா? மனசு ரொம்ப பாரமா.. ஏதோ மாதிரி இருக்கு” சத்யதேவ் தனக்குள் வந்த உணர்வை புரியாது சொல்ல

“எனக்கும் தாண்டா பூஜை எல்லாம் ஒழுங்கா நடக்குமோனு டென்ஷனாகவே இருக்கு”

 

“எனக்கு வேற கெட்ட கெட்ட கனவாவே வருது” என்றவாறே” தாமரை வர

“நீ என்ன சுடிதார்ல வந்திருக்க ரோஜா இன்னும் என்ன செய்ரா தமிழ்செல்வி வேற மணியோட கிளம்பி போய் அரைமணி நேரமாகுது”

“அவ புடவை கட்டுறேன்னு எதையோ சுத்திகிட்டு இருக்கா” தாமரை சொல்வதை கேளாது இடைமறித்த சத்யதேவ்

“என்னது தனியா போய் இருக்காங்களா? கோவில் வேற ஊர் எல்லைல இருக்கு, சுத்தி பொட்டல் காடு. என்னம்மா நீ தனியா போனாங்கனு அசால்ட்டா சொல்ற” ஏதோ கெட்டது நடக்க போவது போல் சத்யதேவுக்கு தோன்ற

 

“மணி கூட தாண்டா போனா” கனகாம்பாள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரோஜா கத்த

“எதுக்கு  டி கத்துற” என்ற வாறே அவளின் அறையினுள் கனகாம்பாள் புக.

 

பொறுமையை இழந்த சத்யதேவ் “ரோஜாவ வண்டிய எடுக்க சொல்லி நீங்க மூனு பேரும் வாங்க” சொல்லியவாறே காலணியை மாட்டியவன் தாமரையின் பதிலையும் எதிர் பாக்காமல் ஓடினான்.

 

“குமரேசா எங்கடா இருக்க, சீக்கிரம் ஊர் எல்லல இருக்குற கோவிலுக்கு வா” குமரேசனை போனில் அழைத்த வினோத் சொல்ல

“இவ்வளவு காலைல எங்க ஊர்ல என்னடா பண்ணுற”

“ஒரு வேல விஷயமா வந்தேண்டா அந்த தமிழ் பொண்ணு இங்க தனியா ஊர் எல்லல இருக்குற கோவில்ல இருக்கா சீக்கிரம் வா”

 

மணியுடன் தமிழ்செல்வி கோவிலை அடைந்த போது பூசாரி வந்திருக்கவில்லை. சரி தேவையானவற்றை எடுத்து வைக்கலாம் என்று பொருட்களை எடுத்து அடுக்கும் போது

“தமிழு மாலை வாங்க மறந்துட்டேன்” மணி சொல்ல

“ஒரு போன போட்டு சொல்லுங்க அண்ணே! அத்த வரும் போது வாங்கிட்டு வருவாங்க” கைப் பேசியை தேடியவர் அது கிடைக்காமல் போக  “போன எங்க வச்சேன்னு தெரியலையே! மறந்து வச்சிட்டு வந்துட்டேன் போல”

“சரி நீங்க போய் வாங்கிட்டு வாங்க. அவங்க வந்தா பூஜையை நல்ல நேரத்துல ஆரம்பிச்சிடலாம். பூசாரி ஐயாவும் இப்போ வந்துடுவாங்க”

“நீ எப்படி புள்ள தனியா இங்கன” மணி யோசனையை சொல்ல

“எனக்கென்ன நா கோவில்ல இல்ல இருக்கேன் எனக்கு துணையா சாமியே இருக்கும் போது என்ன கவல” தமிழ் கடவுளை கும்பிட்டவாறே சொல்ல

“சரி அப்போ நா சீக்கிரம் வந்துடுறேன்” என்றவாறு மணி கடைக்கு செல்ல, ஊருக்குள் நுழைந்த வினோத் தமிழை கண்டு குமரேசனுக்கு அழைத்து விட்டான்.

 

குமரேசன் வர தாமதமாக ஆகா பொறுமையை இழந்த வினோத்  எந்தநேரமும் கையில் உள்ள பையில் மயக்க மருந்தை வைத்திருக்க அதை கை குட்டையில் தடவி  அவள் இருக்கும் இடத்துக்கு சத்தம் காட்டாதவாறு சென்றவன், அவள் அரவம் கேட்டு திரும்பும் முன் கைக் குட்டையை கொண்டு அவளின் முகத்தை மூடியிருக்க தனக்கு என்ன நடந்தது என்று உணரும் முன் தமிழ்செல்வி  மயக்க நிலைக்கு சென்றாள்.

 

சுற்றும் முற்றும் பார்த்த வினோத் யாருமில்லை என்றதும் தமிழ் செல்வியை தூக்கிக் கொண்டு காட்டுப் பக்கம் போக, பாதையோரம் நிறுத்தி இருந்த  யார் சைக்கிளையோ எடுத்துக் கொண்டு சத்யதேவ் அங்கே வந்து சேர்ந்தான்.

 

மணி குறுக்கு வழியால் ஊருக்குள் சென்றதால் பாதையில் வந்த சத்யதேவ்வை காணவில்லை. கோவிலில் பொருட்கள் போட்டது போட்டது போல் இருக்க யாரையும் காணாது பதட்டம் அடைந்தவன் மணி, என்றும் செல்வி என்றும் அழைக்க யாரும் குரல் கொடுக்காது போகவே கலவரமடைந்தவன் அவர்களை தேடலானான்.

 

அவனது குரல் கேட்டு உஷாரான வினோத் ஒரு புதர் மறைவில் ஒழிந்துக் கொள்ள செல்வி நிலத்தில் கிடந்தாள்.

 

“இவன் பெரிய ஹீரோ போல இவள காப்பாத்தவென்றே  பறந்து வரானே” எரிச்சல் பட வினோத்தின் போன் ஒலி எழுப்பியது. பதட்டத்தில் அதை கையில் எடுத்து நிறுத்த அவன் பாடு படும் போதே சத்யதேவ் அவனருகில் ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தான்.

 

வினோத் அழைத்ததும் அடித்துப் பிடித்து கோவிலை அடைந்த குமரேசன் யாரையும் காணாது வினோத்துக்கு அழைக்க, ஒரு வேல தண்ணி எடுக்க அந்த பக்கமா போய் இருப்பாங்களோ என்று சத்யதேவ் தூரமாக உள்ள கிண்ணத்தை நோக்கி செல்ல தொலைபேசி மணி அடிக்கும் சத்தம் கேட்டு காதை தீட்டியவன் ஒலி கேட்க்கும் திசை நோக்கி சென்றான். அங்கே அவன் முதலில் கண்டது தரையில் இருந்த செல்வியின் கால்களை அவளை அணுகும் போது வினோத்தை கண்டவன் அங்கே நடக்க இருந்த கோரத்தை கண்டு கொதித்தெழுந்தவன் வினோத்தை அடி பின்னி விட வினோத் தலை தெறிக்க ஓடி விட்டான்.

 

வினோத் ஓடுவதை கண்ட குமரேசன் நிலைமை சரியில்லை என்று பதுங்க ஊர் நாட்டாமையும் பெரியவர்கள் சிலரும் “கோவிலையும், கோவிலை சுத்தியுள்ள இடத்தையும் சுத்தப் படுத்தி வேலியடிக்கணும். இன்னும் என்னெல்லாம் பண்ணனும்” என்று பூசாரியிடம் கலந்தாலோசிக்க வரவும், அதேநேரம் சத்யதேவ் தமிழ்செல்வியை தூக்கிக் கொண்டு வரவும் சரியாக இருக்க, அதை கண்டு பெரியவர்கள் சத்யதேவ்வால் தான் தமிழுக்கு ஆபத்து என்றெண்ணி ஆளாளுக்கு பேச பதுங்கி இருந்த குமரேசனும் வெளியே வந்து சத்யதேவின் மேல் இருந்த கடுப்பில் தமிழை சத்யதேவ் காட்டுப் பக்கம் தூக்கிச் சென்றதை தன் கண்ணால் பார்த்ததாக கூற பஞ்சாயத்தை கூட்டினார் நாட்டாமை.

 

Advertisement