Advertisement

                                                 அத்தியாயம் 30
சத்யதேவ் வண்டியை நிறுத்தவும் ஒவ்வொருத்தராக இறங்க “மாப்புள கட்டின பொண்டாட்டிய வச்சிக்கிறதுல நான் ஸ்பெசலிஸ்ட் டா,  டிப்ஸ் வேணும்னா கேளு” என்று முருகவேல் சத்யாவை வம்பிழுக்க
“மனசுக்குள்ள பேசினாலும் கண்டு பிடிப்பீங்க போலயே”  என்றவாறு வீட்டின் உள்ளே செல்ல அங்கே மரகதமும், கனகாம்பாளும் திகைத்து அமர்ந்திருக்க, ரோஜா அழுதவாறே இருக்க பார்வதி பாட்டி அழும் குழந்தைகளிடம் சென்றிருக்க செல்வி ஒன்றும் புரியாமல் கனகாம்பாளிடம் அமர்ந்திருந்தாள்.
செல்வராஜ் சத்யாவை கண்டதும் “எங்க போய் இருக்கா உங்கக்கா?” என்று கேக்க
“அது வந்து” என்று இழுத்தவன் சத்யதேவுக்கு உண்மை தெரிந்து தான் கேக்கின்றான் என புரிந்தவனாக “அந்த நந்தன் அக்காவ பொய் கேசுல மாட்ட வச்சி உள்ள அனுப்பி இருக்கான் மாமா, நீங்க டென்ஷனாகாதீங்க அக்காவ எப்படியாச்சும் வெளிய கொண்டுவந்துடலாம்” சத்யதேவ் செல்வராஜை சமாதானப் படுத்த
” எந்த விஷயத்தையும் என் கிட்ட மறைக்க மாட்டியே மாப்புள, இத ஏன் மறச்ச?”  
“உங்க உடல்நிலையால உங்க கிட்ட எப்படி சொல்லுறதென்னு”
“போதும் மாப்புள இப்படி அடுத்தவங்க மனசு கஷ்டப்படும்னு மறச்சி, மறச்சி என்ன சாதிச்சிட்டோம், உங்கக்கா பண்ணத மறச்சதால மரகதம், தமிழ் ரெண்டு பேருமே பாதிக்கப் பட்டுட்டாங்க. ரோஜா அவ பேசின வீடியோவ காட்டினா. உங்கக்கா ஆட்டத்துக்கு நாங்க தான் மாப்புள காரணம். நந்தன் பொய் சொல்லி மாட்ட வச்சாலும், உங்கக்கா செய்த குற்றத்துக்காகத்தானே! இப்போ உள்ள இருக்கா”
“என்ன மாமா சொல்லுறீங்க?”
“ஆமாடா நம்ம கடன் வாங்கி பொழப்ப ஒட்டி கிட்டு போனா, என்னமோ உன் கிட்ட காசு கொட்டிக் கிடக்குனு தான் ரோஜாவ உனக்கு கட்டி வைக்க உங்கக்கா இவ்வளத்தையும் பண்ணி இருக்கா”
உங்களுக்கு யாரு சொன்னா?
“அவள ஜெயில்ல போய் பாத்துட்டு தான் வரேன். அவளே தான் சொன்னா” இவர்களின் சம்பாசனையை மற்றவர்கள் அமைதியாக  கேட்டிருக்க
“இந்தா இந்த பைல என்ன இருக்குனு பாரு” செல்வராஜ் தான் கொண்டு வந்த பையை சத்யாவிடம் நீட்ட அதை திறந்து பார்த்தவன் ஒன்றும் புரியாது,
“என்ன மாமா நகைகள் இருக்கு, யாரோட நகைகள்” என்று சத்யா ஏறிட
“எல்லாம் உங்கக்கா நகைகள், எல்லாம் சுத்த வைரம்” செல்வராஜ் சொல்ல
“என்ன சொல்லுறீங்க?”
செல்வராஜ் சொல்லலானான்.
“யாருங்க வீட்டுல போலீஸ் வந்திருக்கோம்” சத்யமூர்த்தி கடைக்கு சென்றிருக்க, குறிஞ்சி குளியலறையில் இருக்க, அறையில் ரெஸ்டெடுத்துக் கொண்டிருந்த செல்வராஜ் வெளியே இருந்து குரல் வரவும் வாசலுக்கு வர அங்கே போலீசை கண்டு என்ன ஏதுன்னு விசாரிக்க
” உங்க வைப் இப்போ பண மோசடி, கையாடல் கேஸ்ல விசாரணை கைதியா ஜெயில்ல இருக்கிறதால அவங்க சம்பந்தமான எல்லாம் தரவா விசாரிச்சோம், உங்க வைப் பேங்க் டீடைல்ஸ் செக் பண்ணப்போ, பேங்க் லாக்கரில் இந்த வைர நகைகள் இருந்திருச்சி, ஆனா இது இருவது வருசத்துக்கு மேலா அந்த லாக்கர்ல இருக்கிறதால இந்த கேஸுக்கு எந்த சம்பந்தமும் இல்லனு உங்க கிட்ட ஒப்படைக்க சொல்லிட்டாங்க, அவங்க சொன்ன டீடைல்ஸ் படி இது உங்க கல்யாணத்துக்காக அவங்க அப்பா கொடுத்ததுனு சொன்னாங்க தரவா செக் பண்ணிட்டோம்”  என்று வந்த இரண்டு போலீசில் ஒருவர் சொல்ல
“என்ன சொல்லுறீங்க என் மனைவி திருப்பதி போய் இருக்கா” செல்வராஜ் கோபமாக சொல்ல
“உங்க பேர் செல்வராஜ், மனைவி கோமளவள்ளி, அவங்க அப்பா முத்துக்குமார், நாங்க சொல்லுறது சரி தானே!” ஒரு போலீஸ்  எரிச்சலடைய மற்றவர்
“செல்வமாணிக்கம் சார் நடத்தும் ஆசிரம சங்கத்துல உங்க மனைவியும் ஒரு உறுப்பினர், பணக்காரர்களிடம் காச வசூலிக்கிறேன் என்று ஆட்டைய போட்டிருக்காங்க, கையும் களவுமா பிடிச்சிருக்கோம், சின்ன கேங்கா செயல் பட்டு இருக்காங்க உங்க வைப் தான் மெயின் அக்கியூஸ்ட்” என்று சொல்லிக் கொண்டே போக செல்வராஜ் தொப்பென்று சோபாவில் அமர
வாசலில் பேச்சுக்கு குரல் கேக்கவே குறிஞ்சியும் வர போலீசை கண்டு செல்வராஜுக்கு உண்மை தெரிஞ்சிருச்சே அவனுக்கு ஏதாவது ஆகுமோ என்று பயந்தவராக தண்ணீரை புகட்ட சற்று ஆசுவாசமடைந்தவன் குறிஞ்சியை குடைந்து உண்மைகளை பெற்றுக் கொண்டு வள்ளியை காண ஜெயிலுக்கு சென்றான்.
செல்வராஜை கண்ட  வள்ளி ஆசையாக “மாமா” என்றழைக்க அவளை வெறுப்பாக பார்த்தவன்.
“உன் மனச தொட்டு சொல்லு நிஜமாகவே நான் உன் புருசங்குறதால “மாமா” னு கூப்பிடுறியா? இல்ல மாமா மகன்னு வாய் வார்த்தையாக “மாமா” னு கூப்பிடுறியா?”
“ஏன் மாமா இப்படியெல்லாம் பேசுறீங்க” வள்ளி கண்கலங்க
“இந்த நீலிக்கண்ணீர் வடிக்கிறது முதல்ல நிறுத்து, எத்துன வருஷமா என்ன ஏமாத்தி கிட்டு இருக்க?” செல்வராஜின் குரல் சீறிப்பாய
“மரகதமும், நீங்களும் லவ் பண்ணுறதா நினைச்சி உங்க ரெண்டு பேரையும் பிரிக்கணும், பலி வாங்கணும்னு தான் உங்கள கல்யாணம் பண்ணிகிட்டேன், ஆனா நீங்க என் மேல வச்ச காதலால  நானும் உண்மையாகவே உங்கள விரும்ப ஆரம்பிச்சேன்”  
அவள் சொன்ன செய்தி அவனுக்கு புதியதாக இருக்க “சி உன் புத்தி எப்படி… அப்படி உன்னால நினைக்க முடிஞ்சது, மரகதம் எனக்கு தங்கைனு சொன்னேனா இல்லையா?” பல்லை கடித்தவன், அடிக்குரலில் சீற
“ஆனா அவ உங்கள லவ் பண்ணாளே!”
“அப்போ தங்கச்சி லவ் பண்ணுறவன்னு தெரிஞ்சிதான் மாமா கிட்ட போய்… பொய் சொல்லி என்ன கல்யாணம் பண்ணிகிட்ட”
“நானும் உங்கள…”
“பேசாதடி…. அந்த ஆசிரமத்துல இருக்கிற பச்சை குழந்தைங்க என்ன பாவம் பண்ணிருச்சு, அவங்க சோத்துல மண்ணள்ளி போட்டிருக்க, இந்த பாவம் உன்ன சும்மா விடாதுடி” என்று கர்ஜிக்க தான் செய்ததை நினைத்து வள்ளி அமைதியாக
உனக்கு என்னடி குறை வச்சேன்? உங்கப்பா இறந்தப்போ எந்த மாதிரியான  சூழ் நிலைல நாம இருந்தோம். நீ மட்டும் கம்பிகளுக்கு வெளிய இருந்தா உன்ன அப்படியே! என் கையாலேயே கழுத்த நெருச்சி கொன்னிருப்பேன்” அந்த கம்பியின் மீது பலம் கொண்ட மட்டும் உள்ளங் கையால் அடிக்க வள்ளி மிரண்டு விட்டாள்.
“நானும் சத்யாவும் கடன் பட்டு, அத கட்ட, வீட்ட பாக்க , மல்லி முல்ல கல்யாணம்னு அலைஞ்சா நீ பேங்க் லோகார்ல வைரநகைகளை பதுக்கி வச்சிருக்க, யார் நகை இது? யார் கொடுத்தா?” கோபத்தை கட்டுப் படுத்தியவன் ஒன்றும் அறியாதவன் போல் கேக்க
“அப்போ உண்மையாகவே சத்யா கிட்ட எந்த சொத்தும் இல்லையா? கடன் வாங்கி தான் எல்லாம் பண்ணானா? இது தெரியாம நான் வேற ரோஜாவ கட்டி வைக்க பார்த்தேனே! என்று புலம்பியவள்.  நகைகளை பற்றி செல்வராஜ் அறிந்து கொண்டதை அதிர்ச்சியாக பார்த்து இனி மேலும்  மறைக்க முடியாதென்று “அது அப்பா நம்ம கல்யாணத்துக்காக வாங்கியது” தலை குனிந்தவாறே சொல்ல
“உங்க அப்பா கடன் வாங்கி நகை வாங்கினது உனக்கு தெரியாம இருந்தாலும், கடன்காரங்க வீட்டுக்குள்ளேயே வந்து சட்டமா உக்காந்து காச கொடுத்தா தான் போவோம் என்று சொன்ன போதும், உங்கம்மாவையும், தங்கச்சியையும் ஒருமாதிரியா பாத்த போதும், வைர வியாபாரி வீடு தேடி வந்து காசு கேட்ட போதும், உங்க அப்பா ஆசையாசையாக கட்டின வீட்டையும், கடையையும் விக்கும் போதும், ஏன் அமைதியாக இருந்த? அவ்வளவு நகை மேல ஆசையா? உன் குடும்பத்து மேலயே அப்படி என்ன வன்மம்? உன்ன நாலு சாத்து சாத்தினா தான்டி  என் மனசு ஆறும், பாதுகாப்பா போய் உள்ள உக்காந்து இருக்க
   
மரகதத்த சின்ன வயசுல இருந்தே கொடும படுத்துவ, சண்டை போடுவ, ஏதோ தெரியாம பண்ணுறதா நினச்சேன், உன் உடம்பு பூரா விஷம் டி விஷம், உன் கூட இத்துன வருஷம் வாழ்ந்தத நினைச்சாவே அருவருப்பா இருக்கு, உனக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்ல டைவர்ஸ் போபர்ஸ் வரும் சைன் பண்ணி அனுப்பு” திரும்பியும் பார்க்காமல் செல்வராஜ் செல்ல வள்ளி அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாள்.
செல்வராஜ் சொல்லி முடிக்க சத்யா, முருகவேல், செல்வியும் அதிர்ச்சியாக பார்க்க மற்றவர்கள் ஏற்கனவே தெரிந்த விஷயம் என்ற முக பாவத்தை காட்ட  
“இனி மேல் எந்த விஷயத்தையும், யாருக்கும் மறைக்க வேண்டிய அவசியமில்ல மாப்புள, குடும்பத்துல ஒரு பிரச்சினைனா எல்லாருக்கும் தெரியட்டும், எதுக்கு மறைக்கணும்” செல்வராஜ் சொல்ல
ஆமாம் மாமா சந்தோசத்த பகிர்ந்தா இரட்டிப்பாகும், துக்கத்த பகிர்ந்தா குறையும்னு சும்மாவா சொன்னாங்க, வீட்டு பொம்பளைங்க தலயில எங்க பாரத்த சுமத்த கூடாதுன்னு நினைச்சதால அக்கா என்னவெல்லாம் பண்ணிட்டாங்க” என்று சத்யா செல்வியை ஆழமாக பார்க்க  கனகாம்பாள் அவனை கட்டிக்க கொண்டு அழ ஆரம்பித்தார்.
“இத்துன கஷ்டத்தையும் தாங்கிகிட்டு சிரிச்சு கிட்டே இருப்பியே! உன் கஷ்டத்த நான் புரிஞ்சிக்காம போய்ட்டேனே!” என்று கதற
“அது சரி பொண்ணையும் புரிஞ்சிக்கல பையனையும் புரிஞ்சிக்கல” செல்வராஜ் கிண்டலடிக்க
நான் கொஞ்சம் பேசலாமா? முருகவேல் தொண்டையை செரும அனைவரும் அவன் புறம் திரும்பினார்.
“நடந்த எல்லா விஷயத்துக்கும், மனசு நோக கூடாது, தலையில பாரமேத்த கூடாதுனு ஒருத்தொருக்கொருத்த ஒவ்வொரு விஷயத்தையும் மறைச்சதால வந்த வினை.  என் கிட்ட இல்லாத காசா? சத்யா கேட்டிருந்தா கொடுக்காம இருப்பேனா? படிக்கும் போது வேல பாத்தான், உதவி செய்ய பாத்தா ஏதேதோ காரணம் சொன்னான், சரி முயற்சி செய்யட்டும்னு விட்டுட்டேன். அதுக்காக கடன், தங்கைகளின் கல்யாண செலவுனு, தனியா சமாளிக்க நினைச்சது தப்பில்ல, என் கிட்ட ஒரு வார்த்த கேட்டா செய்யாம இருந்திருப்பேனா? எங்க செஞ்சிட்டு சொல்லி காட்டுவான்னு நினைச்சிட்டியா?” கொஞ்சம் கோபம் குரலில் எட்டிப் பார்த்தாலும்
“அப்படியில்ல மாமா” சத்யா பேசு முன் தடுத்தவன்.
“நடந்தது பத்தி எந்த விளக்கமும் வேணா, உன் கடன நான் அடைகிறேன்,  உன்னால எப்போ முடியுமோ காச கொடு. இது என்னுடைய உத்தரவு. மீறனும்னு நினச்சா உங்க அக்கா மரகதத்த மறந்துட்டு”
“அப்படி போடு அருவாள” செல்வராஜ் கட்டியணைக்க அனைவரினதும் முகத்தில் புன்னகை எட்டி பார்த்தது.

Advertisement