Advertisement

                                                     அத்தியாயம் 25

அது ஒரு பல மாடிகளை கொண்ட ஹோட்டலில்  உள்ள அறை. அங்கே அமர்ந்தவாறே மித்ரன் அபிநந்தனுக்கு போன் செய்ய

“பாஸ் நீங்க சொன்னது போல் எல்லாமே பக்காவே பண்ணிட்டேன்” என்று சொல்ல

” குட் ஜாப் மித்ரா! எனக்கு அந்த வீடியோ வேணும் பக்காவா அந்த பொண்ணு ரோஜா முகம் தெள்ளத்தெளிவா இருக்கணும்” என்று நந்தன் சொல்ல

“ஓகே பாஸ்” என்று முறுவலித்தான் மித்ரன்.

அபிநந்தன் சத்யாவை போட்டியாக நினைக்க, சத்யாவின் வளர்ச்சியில் பொறாமை கொண்டவன் அவனின் கடன் சுமையை அறிந்து ஆடை தொழிற்சாலையை விலை பேச சத்யா மறுத்து விட்டான்.

அவனின் நம்பிக்கைக்குரிய பி,ஏ மித்ரனிடம் புலம்ப மித்ரனோ “என்ன சார் இது ஒரு சில்லி விஷயம் அவரோட அக்கா பொண்ணு என்  காலேஜ் தான். என் பின்னாடி லவ் பண்ணுறேன்னு சுத்தி கிட்டு இருப்பா, உங்களுக்காக அவள கல்யாணம் பண்ணி வரதட்சணையா பாக்டரிய எழுதி வாங்கிடலாம்” என்று சொல்ல

மித்ரனை இறுக அணைத்துக் கொண்டவன் “வாவ், சூப்பர் ஐடியா, நீ இப்போவே அவ லவ்வுக்கு ஓகே சொல்லுற” என்று நந்தன் கட்டளையிட தலையசைத்தான் மித்ரன்.

அதன் படி மித்ரன்  ரோஜாவுடன் காதல் வசனம் பேச ரோஜாவும் அவன் காதலில் உருகிக் கரைந்தாள்.  

காலேஜில் மித்திரனை கண்டத்திலிருந்தே ரோஜாவுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. அது காதல் என்று தோழிகள் ஏற்றி விட மித்திரனிடம் ப்ரொபோஸ் பண்ண மித்ரன் மறுத்து விட்டான்.

“என் மனசுல நீங்க மட்டும் தான் இருக்கீங்க, உங்க வரவுக்காக என் மனக் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும்” என்று சினிமா  வசனம் பேச ஒரு நக்கல் புன்னகையுடன் நகர்ந்தான் மித்ரன்.

“ஒருவருடமாக பின்னால் சுற்றி விட்டு நான் காலேஜ் முடிஞ்சி போன உடன் வேற எவனயாச்சும் கரெக்ட் பண்ணுவா, இல்ல வீட்டுல பாக்கும் மாப்பிளையை கல்யாணம் பண்ணிக்குவா, உன்ன மாதிரி அழகான பொண்ணுங்களுக்கு இதெல்லாம் ஒரு விளையாட்டு” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவன் அன்றிலிருந்து ரோஜாவை ஏறெடுத்தும் பாக்கவில்லை.  

அபிநந்தனிடம் வேலைக்கு சேர்ந்த பிறகு  சத்யதேவ், தாமரையுடன் ரோஜாவை ஒருநாள் காபி ஷாப்பில் பார்த்த போது  பத்தொன்பது வயதில் குழந்தை முகமாக இருந்தவள் இருபத்தி ஒரு வயதில் அழகான குமரியாய் இருக்க அவளின் அழகின் பரிமாணங்களை கண்டு “சே மிஸ் பண்ணிட்டேன்” என்று புலம்பலானான்.

அபிநந்தன் சத்யதேவை பற்றி சொல்ல ரோஜாவை தெரியும் என்று சொன்னவனுக்கு காதல் லீலை செய்ய காசும் கொடுப்பதாக சொல்ல மறுப்பானேன்.  

வேண்டுமென்றே ரோஜாவின் கண்ணில் படும்படியாக வலம் வர ஒருநாள் ரோஜாவே வந்து அவனிடம் பேசி விட்டு தான் இன்னும் அவனைத்தான் நினைத்துக் கொண்டிருப்பதாக  கூற பனிசாரால் மழையில் நனைந்தவன் போலானான் மித்ரன்.

அன்றிலிருந்து காதல் மொழி பேசி ரோஜாவை கல்யாணம் பண்ண எதிர் பாத்திருக்க அவளோ “இப்போதே முடியாது” என்று சொல்ல அதை அபிநந்தனுக்கு சொல்லப்பட

“அப்போ கல்யாணம் பண்ண முன்னாடியே முதலிரவ கொண்டாடிடு, நீ பின் வாங்குறதாக இருந்தா நான் கொண்டாடுறேன்” என்று அசட்டு சிரிப்பை உதிர்த்தவாறே சொல்ல

“இல்ல சார் நீங்க பண்ணா அவ போலீஸ், கேஸ் னு போய்டுவா, இதுவே நான் பண்ணா அவ என்ன காதலிக்குறத லேசா சந்தேகப்பட்டாலே போதும் அடங்கிடுவா. கல்யாணம் பண்ண சொல்லி கெஞ்சுவா பண்ணிக்கிறேன் சார். பொண்ணும் கெடச்ச மாதிரி இருக்கும்” மித்ரன் சொல்ல

‘ஒரே கல்லுல எத்தனை மங்கா அடிக்கப் போற? உண்மையிலேயே அவளை நீ லவ் பண்ணுறியா?” என்று கொஞ்சம் சந்தேகமாகவே கேக்க

“அடப் போங்க சார். லவ்வாவது, மண்ணாவது சும்மா வசனம் பேசிக் கிட்டு அவ தொல்லை தாங்க முடியல. இருந்தாலும் என்ன சின்சியரா…. ரொம்ப லவ் பண்ணுறா. நம்மள லவ் பண்ணுற பொண்ண கல்யாணம் பண்ணா வாழ்க்கை சொர்க்கம்னு சொல்லுறாங்களே! சார். கொஞ்சம் நாளாச்சும் அனுபவிச்சு பாத்துடுறேன். போரடிச்சா சண்டை வரும். சண்டை வந்தா? அப்பொறம் டிவோர்ஸ் தான்” என்று படபடவென பேச

“நானும் எங்க நீ காதல்ல விழுந்துட்டியோன்னு நெனச்சேன்” என்று நந்தன் சொல்ல

“ஹஹஹ” என்று சிரித்தவன் எப்படி ரோஜாவை ஹோட்டலுக்கு வரவழைப்பதென்று யோசிக்க அதற்கு அவளே வழியும் வகுத்து கொடுத்தாள்.

“மித்து  அடுத்த வாரம்  உங்க பொறந்தநாள் வருது அன்னைக்கி நாள் புல்..லா..  நீங்க என் கூட தான் இருக்கணும்” என்று ரோஜா போனில் மிரட்ட

“ஒரு நாள் நா இருபத்தி நான்கு மணித்தியாலங்கள் மேடம்”

“ஐயோ நைட்டெல்லாம் தங்க முடியாது. அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்பொறம் தான்” என்று பட்டென்று சொல்ல

‘எதெல்லாம்? நான் ஒருநாளைக்கு எத்தனை மணித்தியாளம்னு சொன்னா, நீ வேற எதையோ பேசுறியே! ஒரு வேல உனக்கும்” என்று இழுக்க

“மித்து ஒத பட போறீங்க ” என்று ரோஜா சிரிக்க

“உண்மையில் அன்னைக்கு எனக்கு நிறைய வேல இருக்கு ஒரு ரெண்டு மணித்தியாலம் நான் சொல்லுற இடத்துக்கு வர முடியுமா” என்று கேக்க

“முழுநாளும் உன்னுடன் இருக்கிறேன் என்று சொல்லி விட்டு பாதியிலேயே விட்டு விட்டு ஓடிவிடாமல் அவனது உண்மை நிலையை சொல்லி இரண்டு மணித்தியாலங்கள் மட்டும் இரு” என்று சொல்லும் காதலனின் காதலை நன்கு உணர்ந்தவளாக “கெட் ரெடி மித்து, ரோஜா உங்களை காண வந்து கொண்டே இருக்கிறாள்” என்று போனை அணைக்க

“ஐம் வைட்டிங் பேபி” என்று மித்ரன் மந்தகப் புன்னகையை உதிர்த்தான்.

அதன் படி அபிநந்தன் மித்திரனின் பெயரில் அந்த உயர்தர ஹோட்டலில் அறை ஒதுக்க ரோஜாவின் வரவுக்காக காத்திருந்தான் மித்ரன்.

அந்த கட்டிடத்தை பார்த்தவளுக்கோ தலை சுற்றியது “ஹோட்டலா? மாளிகையா? எதுக்கு இந்த வீன் செலவு” மித்ரனை மனதுக்குள் அர்ச்சித்த வாறே உள்ளே வர

“மேம் திஸ் இஸ் போர் யு” ஒரு பெண் சிவப்பு ரோஜா மலர்களிலான  பூச்செண்டு தர நன்றி சொல்லி அதை வாங்கியவள் அதில் உள்ள அட்டையை பார்க்க அறையின் எண்னோடு வித் லவ் மித்ரன் என்றிருக்க

“ரோஜாவுக்கே ரோஜாவா” என்று மென்னகை சிந்தியவள் அவனின் பெயரை வருடியவாறே மின்தூக்கியில் நுழைந்தாள்.

மித்ரன் சொன்ன அறையுள்ள தளத்தின் என்னை அழுத்தியவள் பூச்செண்டை ஆசையாக பாத்திருக்க தளமும் வந்தது. அவனின் அறை முன் சென்று கதவில் கைவைக்கமுன் கதவு திறந்து அவள் உள்ளே இழுக்கப் பட்டு கதவு மூடப்படவும் அதிர்ச்சியடைய அவளை அணைத்திருந்தான் மித்ரன்.

அப்போதுதான் குளித்திருந்தான் போலும் இடுப்பில் ஒரு துண்டு மாத்திரமே இருக்க, அவனின் வெற்று தேகத்தில் மோதியதில் புது வித உணர்ச்சி பிடிக்குள் தள்ளப்பட ரோஜாவின் கைகள் அவனை தானாக அணைத்துக் கொள்ள மித்ரன் தனது வேலையை ஆரம்பித்தான். ரோஜா தன்னை மறந்து வேறு ஒரு உலகத்துக்குள் பயணித்துக் கொண்டிருந்தாள்.  

*******************************************************************

“மாமா கார் சாவிய விட்டுட்டு போறீங்க”

“நான் ஆட்டோலேயே போய்க்கிறேன் மாப்புள. இந்த சென்னை டிராபிக்ள பைக்கில போறது தான் சரி, வண்டி ஓட்டுற மூட்ல நானில்ல, சோ ஆட்டோலேயே போய் வாரேன்”

“கார்ல போனா தான் கெத்துனு சொல்லுவீங்க”

“ஆமாடா மாப்புள கெத்துதான். இப்போ போனா நாளைக்கு தான் போய் சேர வேண்டி இருக்கும் பரவாலையா? இப்போ என்ன உனக்கு பிரச்சினை ஆட்டோவ நூறு மீட்டர் தாண்டி கட் பண்ணிட்டு நடந்தே போறேன்” என்ற செல்வராஜ் கிளம்பிச் செல்ல

“போய் சேர்ந்ததும் எனக்கு போன் பண்ணுங்க”

“ஆமா நான் பச்சக் குழந்தை பாரு” என்று முணுமுணுத்தவன் சத்யாவின் அக்கறையை அறிந்தவனாக தலையாட்டியவாறே சென்றான்.   

அந்த பைஸ்ட்டார் ஹோட்டலில் உள்ள ஒன்பதாம் மாடியிலுள்ள உணவகத்துக்கு சென்று பார்க்க வேண்டியவரை பார்த்து பேசி விட்டு மின் தூக்கியில் ஏற அது ஆறாம் மாடியில் நின்று, கதவு திறக்க அங்கே உள்ள விருந்தினர் அரங்கத்தில் பார்ட்டி நடை பெறுவதற்கான அறிகுறிகளோடு கூட்டம் நிரம்பி வழிய தூரத்தில் வள்ளி யாருடனையோ பேசுவது தெரிய மனைவியை கண்ட சந்தோசத்தில் அவளிடம் பேசி விட்டு செல்லலாம் என்றெண்ணி வெளியேற முட்படும் போது கதவு முடிக்க கொண்டது.

அது ஐந்தாம் மாடியில் நின்று கொள்ள படி வழியாக ஏறியவன் அவளைத்தேட அவள் அங்கே உள்ள மின் தூக்கில் உள்ளே நுழைவதைக் கண்டு அப்பக்கம் ஓட அங்கே வந்த பெண்ணொருவர்

“வாட்ட சப்ரைஸ் நீங்க கோமளவள்ளியோட வீட்டுக்காரர் தானே!” என்று கேக்க செல்வராஜும் “ஆமாம்” என்று தலையசைத்தான்.   

“நீங்க எவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேன், ஆச்சரியமாக இருக்கு எங்க பாட்டிக்கு எல்லாம் வந்திருக்கிறீங்க” என்று சொல்ல

“புருவம் சுருக்கியவன் “அவ எங்க கூப்புடுறா சுத்த போர் னு தானே சொல்லுவா” என்று மனதில் நினைத்தவன் சுற்றி முற்றி பார்க்க அது ஒரு பணக்கார வர்க்க பாட்டியாகவே இருந்தது ஒழிய ஏழைகளுக்கு உதவி செய்வோர் வைக்கும் எளிமையான பாட்டியாக தெரியவில்லை.

செல்வராஜின் தேடலை பார்த்த அப்பெண் “உங்க வைப் இப்போ தான் கிளம்பி போனாங்க” என்று விட்டு “மிஸ்டர் செல்வராஜ் இப் யு டோன்ட் மைன்ட் உங்க வைப்க்கு எந்த கடைல புடவ வாங்குவீங்கன்னு சொல்ல முடியுமா? உங்க செலேக்சன் எல்லாம் பிரமாதம்” என்று புன்னகைக்க

“உங்க பேர்?” என்று செல்வராஜ் கேக்க

 “ஐம் கலா எனும் சித்ரகலா அமெரிக்க பிரெண்டுனு சொல்லி இருப்பாளே!” செல்வராஜ் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றான்.

தனது அமெரிக்க நண்பி கலா தான் வற்புறுத்தி விலை கூடிய புடவைகளை பரிசாக தந்ததாக வள்ளி சொன்னதென்ன? இந்தம்மா புடவை கடையை பற்றி கேக்கும் விதம் என்ன? நடக்கும் பாட்டியே போதும் வள்ளி தன்னிடம் பொய் சொல்லி இருக்கிறாள் என்பதற்கு. ஏன் இந்த பொய்? எதற்க்காக? என்று குழம்பியவன்

“அத வள்ளி கிட்டேயே கேளுங்க, நான் சொன்னா எனக்கு தர்ம அடி கிடைக்கும்” என்று நழுவியவன் வள்ளியிடம் உடனடியாக பேசவேண்டும் என்று வீடு கிளம்பினான்.

*******************************************************************

“போதும்  ரோஜா அழாத. அழுதா? நடந்தது இல்லனு ஆகுமா? இனிமே நடக்கப் போறத வேணா தடுக்கலாம். இப்படியே அழுது கிட்டு இருந்தா சரிவராது” என்று மித்ரன் ரோஜாவை கடிந்துக் கொள்ள ரோஜா இன்னும் தேம்பித்தேம்பி அழலானாள்.

பட படவென கதவு தட்டப் படவும் ரோஜா போர்வையை இழுத்து கழுத்துவரை மூடிக்கொள்ள மித்ரன் சென்று கதவை திறந்தான்.

கதவை உடைக்காத குறையாக செல்வராஜ் வர, மித்ரன் செல்வராஜை அங்கே எதிர்பார்க்காத அதிர்ச்சியில் திகைத்து நின்று விட

ரோஜா “அப்பா” என்று முனகியவாறே கண்ணீர் வடிக்க “ரோஜா” என செல்வராஜ் திகைத்தவன் மித்ரனை அடிக்க ஆரம்பித்தான்.

செல்வராஜின் அடிகளை தடுக்காது மித்ரன் வாங்கி கொள்ள ரோஜா கட்டிலிலிருந்து குதித்திரங்கி “அப்பா விடுங்கப்பா.. அவரை விடுங்க” என்று கத்த

அவளின் கன்னத்தில் அறைந்தவன் “அப்போ நீயும் சேர்ந்துதான் இந்த தப்ப பண்ணியா?” என்று அவளின் முடியை பிடித்தவாறே உலுக்க உதடு கடித்து பொறுமை காத்தாள் ரோஜா.

ரோஜாவின் மௌனம் செல்வராஜை ஏதோ செய்ய கண்ணீரை துடைத்துக் கொண்டவள்  “நா சொல்லறதை கொஞ்சம் பொறுமையா கேளுங்கப்பா” என்று ரோஜா சொல்ல நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே சரிந்தான் செல்வராஜ்.

“அப்பா” என்று ரோஜா கத்த மித்ரன் உடனே அம்பியூலன்ஸ்சுக்கு கால் செய்து செல்வராஜை மருத்துவமனையில் அனுமதித்தான்.

*******************************************************************

“என்ன மாமா போன் அடிச்சிக் கிட்டே இருக்கு எடுக்க மாட்டேங்குறாரு” சத்யதேவின் மனம் அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.

ஒரு வேலை விஷயமாக வெளியே சென்ற செல்வராஜ் இன்னும் வரவில்லை என்ற உடன் அவனுக்கு போன் செய்து மறுமுனை ஏற்கப்படாததால் செல்வராஜுக்கு ஏதாச்சும் ஆகி இருக்குமோ என்று மனம் ஒருநாளும் இல்லாதவாறு  பதை பதைக்க வள்ளிக்கும் அழைத்து பார்த்தவன், அவளும் அழைப்பை ஏற்காதிருக்க பொறுமையை இழந்து வெளியே செல்ல கிளம்ப அவனின் போன் அலறியது. அதை காதில் வைத்ததும் மறுமுனையில் பேசியது மித்ரனே அவன் சொன்ன செய்தியில் அடித்து பிடித்து மருத்துவமனைக்கு வர

அங்கே ரோஜா பெஞ்சில் காலை மடக்கி அமர்ந்து “என்னாலதான் அப்பாக்கு இப்டியாச்சு, என்னாலதான் அப்பாக்கு இப்டியாச்சு” என்று புலம்பியவாறே இருக்க மித்ரன் கைகளை மார்புக்கு குறுக்காக  கயட்டியவாறே நின்று கொண்டிருந்தான்.

“என்னாச்சு மித்ரன்? மாமாக்கு என்னாச்சு?” தன்னுடன் சிரித்து பேசி விட்டு சென்றவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளான் என்று கேள்விப்பட்டதும் ஓடிவந்தவன் பொறுமையை இழந்தவனாக கேக்க மித்திரனிடம் மௌனமே பதிலாக கிடைத்தது.

டாக்டர் வெளியே வரவும் அவரிடத்தில் ஓடியவன் “மாமாக்கு என்ன ஆச்சு” பயம் எட்டிப்பார்க்க  

“அவருக்கு சிவியர் ஹார்ட் அட்டாக். சரியான சமயத்துல கொண்டுவந்ததால ப்ரொபேர் ட்ரீட்மெண்ட் கொடுக்க முடிஞ்சது. கண்ணு முழிச்சி பிறகு போய் பார்க்கலாம்” என்று விட்டு அகல இத்தனை வருடங்களாக தனக்கு தோழனாய் தோள் கொடுத்தவன் இன்று குழாய்கள் பொருத்தப்பட்டு கட்டிலில் கிடப்பதை கண்டு மனம் கனக்க அப்படியே அமர்ந்து விட்டான் சத்யதேவ்.  

ஒருவாறு வீட்டாருக்கு விஷயம் சொல்லப்பட மரகதம், முருகவேல் மற்றும் கனகாம்பாள் மாத்திரம் வர “என்ன நடந்தது” என்ற அதிர்ச்சியில் இருந்தனர் அனைவரும்.

வள்ளிக்கு எல்லாருமே போனில் அழைத்து அழைத்து பார்த்து ஓய்ந்து போக ஒருவாறு வள்ளி போனை ஏற்றதும் மருத்துவமனைக்கு உடனடியாக வரும் படி முருகவேல் சொல்ல

“யாரு ஹாஸ்பிடல்ல இருக்காங்க? ஒருவேளை அந்த செல்வியை மறுபடியும் அட்மிட் பண்ணி இருப்பாங்க” என்று எண்ணியவாறே மருத்துவமனைக்குள் பிரவேசித்தவள் செல்வராஜ் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான் என்றறிந்தது மயங்கிவிழுந்தாள்.

வள்ளி மயங்கி விழ அவளை ஒரு அறையில் படுக்க வைத்து கூடவே கனகாம்பாள் பார்த்துக் கொள்ள

“பரவால்ல உங்கக்காக்கு சகலமேல உண்மையாகவே காதல் இருக்கு” என்று முருகவேல் மரகதத்தின் காதுக்குள் கிசுகிசுக்க

முழங்கையால் அவனின் இடுப்பில் குத்தியவள் “என்ன நிலைமையில நாம இப்போ இருக்கிறோம் உங்களுக்கு ஊம குசும்பு, வீட்டுக்கு வாங்க வச்சிக்கிறேன்” என்று சொல்ல

“கட்டின பொண்டாட்டியையே வச்சிக்கிறது செம இன்டெரெஸ்டிங்கான மேட்டர் டி” என்று முருகவேல் சொல்ல அவனை கண்ணால் எரித்தாள் மரகதம்.  

ஒருவாறு கண்விழித்த வள்ளி “எனக்கு அவரை பாக்க விடுங்க” என்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ண செல்வராஜும் கண்விழித்தான். அவனை வேறொரு அறைக்கு மாற்றியுள்ளதாகவும் ஒவ்வொருவராக சென்று பார்க்குமாறும் தாதி ஒருவர் வந்து சொல்ல சத்யதேவ் உள்ளே நுழைய வள்ளி அவனை தள்ளிக் கொண்டு வந்து செல்வராஜின் மேல் விழுந்தவாறே அழ

வள்ளியை வெளியே அழைத்து செல்லுமாறு செல்வராஜ் சொல்ல அவள் போக மாட்டேன் என்று அடம் பிடிக்க அங்கே ஒரு குட்டிக் கலவரம் உருவானது.

“மாமா நான் உங்க பக்கத்திலேயே இருக்கேன். என்ன போக சொல்லாதீங்க” என்று கண்ணீர் வடித்தவாறே கெஞ்ச நர்ஸ் இருவர் வந்து பேச்சாற்ற

“போ வள்ளி நான் சத்யா கிட்ட கொஞ்சம் தனியா  பேசணும்” என்று சொல்ல

“எதுவானாலும் என் கிட்ட சொல்லுங்க, நான் உங்க மனைவி தானே! என்ன  விட்டுட்டு என்ன ரகசியம் வேண்டி கிடக்கு” என்று மூக்கை உறிஞ்ச

“புரியாம பேசாத வள்ளி இது நம்ம ரோஜா வாழ்க்க சம்பந்தப் பட்ட விஷயம். போ” என்று செல்வராஜ் சொல்ல சமாதானம் அடையாமலேயே வெளியேறினாள்.

“நல்லா இருந்த உங்களுக்கு இப்படி திடீரென என்னாச்சு மாமா” என சத்யா ஆதங்கமாக கேக்க  செல்வராஜ் சொல்லலானான்.

 

Advertisement