Advertisement

                                                   அத்தியாயம் 20

“கல்யாணத்த பண்ணோமா,  குழந்தை குட்டிய பெத்துப் போட்டோமா, புருசனுக்கு சோத்த ஆக்கிப் போட்டோமா, என்றில்லாம எதுக்கு இப்போ உனக்கு இங்கிலீசு. போய் உன் அத்தைக்கு சமைக்க உதவி செய்” பார்வதி பாட்டி ஹை பிச் குரலில்  கத்திக் கொண்டிருக்க செல்வி  படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடியவள் என்ன பதில் சொல்வதென்று முழிக்க அவளை காப்பாற்றும் தெய்வமாக பார்வதி பாட்டி முன் தோன்றினான் சத்யதேவ்.

“என்ன பாட்டி? என்ன பிரச்சினை?” சத்யதேவின் ஆளுமையான குரலில் பார்வதி பாட்டி கப் சிப் என்று அடங்கி விட

தன்னிடம் குரல் உயர்த்தும் அம்மாச்சி தன் கணவனிடம் பம்மும் போது குசியாகும் செல்வி அவரை மாட்டி விடவென்றே அவர் கூறியதை, அவர் கூறுவதை போலவே சொல்லிக் காட்ட

செல்வியை கொட்ட பார்வதி பாட்டியின் கை பரபரத்தாலும் செல்வியின் விஷயத்தில் பாட்டி என்றும் பாராமல் சத்யதேவ் தயவு தட்சணையே இல்லாமல் வெளுத்து வாங்க அவளை அடக்க முடியாமல் பொறுமை காத்தார்.

செல்வி பேசுவதை ரசனையாக பார்த்துக் கொண்டிருந்த சத்யதேவ் “பாட்டி கொஞ்சம் அங்கிட்டு திரும்புங்க” என்று அவரை பிடித்து திருப்பி விட்டவன்

செல்வியை இழுத்து கன்னத்தில் முத்தமிட்டு “இப்படியெல்லாம் பண்ணைக் கூடாது டி என் கியூட் பொண்டாட்டி. அப்பொறம் மாமா ஆபீஸ் போகாம வீட்டுலதான் இருக்கணும். பாட்டி சொன்னது நடந்திடும்”  என்று இரு பொருள் பட சொல்லியவன்

“பாட்டி நீங்க இப்போ திரும்பலாம்” என்று குறும்பு கூத்தாட சொல்ல

“என்ன வெறுப்பேத்தவே இப்படியெல்லாம் பண்ணி கிட்டு இருக்க கூடிய சீக்கிரம் புள்ளய பெத்து கைல கொடுக்க சொல்லு” என்று சத்யாவை கொஞ்சம் மிரட்டியவர் செல்வியின் முகத்தில் பூத்திருந்த வெக்கப் பூவை கண்டு நிம்மதியடைய

“உன் பேத்தி சுத்த பட்டிக்காடா இருக்கா உன்ன மாதிரியே!” என்று அவரை வம்பிழுத்தவனை இருவரும் முறைக்க

சீரியசான குரலில் ‘என் பசங்கள இங்கிலீசு ஸ்கூல சேர்க்கணும்னு இருக்கேன். நான் வேற வேல வேலனு அலையிறேன். யாரு பசங்களுக்கு வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுக்கிறதாம். அதான் உன் பேர்த்திய இங்கிலீசு கிளாஸ்ல சேர்த்து விட்டேன்” பிறக்காத குழந்தைகளுக்காக மனைவியை படிக்க வைக்கிறேன் என்று சொல்ல வாயை பிளந்தார் பார்வதி பாட்டி.

கருத்தடை மாத்திரை பாட்டிலால் பாடம் கற்ற தனக்காக தான் என்று அறிந்த செல்வி மெளனமாக புன்னகைக்க

“பாட்டி படிப்புக்கும் குழந்த பெத்துக்கிறதுக்கும், எந்த சம்பந்தமும் இல்ல படிப்பை காரணம் காட்டி உன் பேர்த்தி என்ன கண்டுக்க மாட்டேங்குறா. சரியா கவனிக்கிறதே இல்ல. கொஞ்சம் என்னன்னு கேளு” செல்வியை மாட்டி விட  

“படிக்கணும் இன்னைக்கு மட்டும் வேணாம் மாமான்னு சொன்னா கூட”

“போடி… உன் தம்பிங்கள உன் கூட சேர்க்கணும்னு, அப்பொறம் தான் எல்லாம்னு நான் இவ்வளவு நாள் பொறுமையா இருந்ததே பெரிய விஷயம்” என்று அவளின் புத்தகத்தை பறித்து வைத்து அவளை தூக்கிக் கொண்டே கட்டிலுக்கு செல்லும் போது செல்வி உருகிக் கரைந்து விடுவாள்.

“கவனிக்கலையாமே!” என்று மனதுக்குள் பொறுமியவள் “என்ன அம்மாச்சி கிட்ட மாட்டியா விடுறீங்க? இருங்க உங்கள செமத்தியா கவனிக்கிறேன்” என்று அவனை துரத்த ஆரம்பித்தாள்.

அவர்களின் விளையாட்டை மன நிறைவோடு பார்த்திருந்தார் பார்வதி பாட்டி.

முருகவேலின் வீட்டுக்கு பால்காய்ச்சும் போது வள்ளி வந்தது தான் எல்லாருக்கும் பாலில் சக்கரையை கலந்து கொடுத்த செல்வி அவளுக்கு மட்டும் உப்பை அள்ளி போட அதை கண்டு ரோஜா கிழுக்கிச் சிரித்தாள்.

அதை சாப்பிட்டு வள்ளி கத்த முன்பே ” தமிழ் கையாள பால் கூட அமிர்தமா இருக்கில்ல சித்தி. யாராச்சும் ஏதாவது சொல்லுவாங்க என்று நினைக்கிறீங்க?”  என்று மரகதத்துக்கு கண்ணடித்தவாறே சொல்ல அதை புரிந்துக் கொண்ட மரகதம் செல்வியை ‘ஆஹா, ஓஹோ’   என்று புகழ வள்ளி தான் பல்லை கடித்த வாறே அமைதியாக வேண்டி இருந்தது.

செல்வியை அரனாய் மரகதமும் ரோஜாவும் காக்க செல்வியை நெருங்க தான் வள்ளியால் முடியவில்லை. பார்வதி பாட்டியும், செல்வியின் தம்பிகளும் வந்து சேர அவர்கள்  அங்கேயே தங்குவதை அறிந்துக் கொண்ட வள்ளி அவர்களை வார்த்தையால் சாட ஆரம்பித்தாள்.

“சே  வெக்கமே இல்லாம பொண்ண கொடுத்த வீட்டுல டேரா போட்டுறாங்க” என்று பார்வதி பாட்டியின் காது பட  சொல்ல

வள்ளியை போலி புன்னகையோடு “உன்ன கட்டிக் கொடுத்த கையேடு உன் அம்மாவும், தம்பியும் உன் புகுந்த வீட்டுல தானே இருந்தாங்க? அப்போ அவங்களையும் இப்படித்தானே பேசி இருப்ப எங்களை மட்டும் விட்டுடுவியா.

போ போய் வேற வேல இருந்தா பாரு. எந்த நாளும் காலைலயே வந்து பின்னாடி இருக்கிற பிராணிகளோட கூட்டையெல்லாம் சுத்தம் செஞ்சி அதுங்களோட கழிவை அள்ளி வீசு, அப்போ வாச்சும் உன் மனசுல இருக்கிற கழிவு போகுதான்னு பாப்போம். குனிஞ்சு நிமிர்ந்து வேல பார்த்தா உன் உடம்புல திமிரா இருக்கிற கொழுப்பும் கொறஞ்சிடும்” என்று விட்டு அகல

வள்ளியின் கோவத்தை கட்டுப் படுத்த முடியாவே இல்லை. பார்வதி பாட்டி வள்ளியின் குத்தல்  பேச்சுக்கு சரமாரியாக பதில் கொடுக்க சின்ன பசங்களான வள்ளியின் தம்பிகளை அதட்டுவதும், படிக்கும் போது ஏதாவது வேலை ஏவுவதுமாக இருக்க பொறுமையை இழந்த செல்வி  கோதுமையை டீயில் கலந்து கொடுக்க இரண்டு நாளாக வயிற்றுப் போக்கால் வள்ளியின் மெலிந்த தேகம் இன்னும் மெலிந்து பார்க்கவே பிணியில் பலநாள் படுத்தவள் போலானாள்.

டேப்ளட்டுக்கு செல்வி யாரை கேப்பாள்? அவளுக்கு தெரிந்தது இது தான் ஒவ்வாமையான பொருள் சேர்ந்தாலே இப்படியாகும் என்று அறிந்தவள் பார்வதி பாட்டியும்  துணையிருக்க வள்ளியை படுத்தி எடுத்தாள்.

தன்னை என்ன சொன்னாலும் சத்யாவுக்காகவும், கனகாம்பாளுக்காகவும் பல்கலைக் கடித்து பொறுத்துக்க கொண்டவள் தம்பிகளை ஏதாவது செய்தால் பொறுமையை பறக்க விட்டு அவளுடைய செல்ல பிராணிகளான  ஆவரத்தையும், {நாய்} தாமரையையும் {ஆடு} ஏவி விடுவாள். ஆவாரம் வள்ளியின் மேல் எற மட்டுமே செய்யும் குறைக்காது, கடிக்காது. அதன் உருவத்தைக் கண்டு   வள்ளிக்கு அருவறுப்போடு, பயத்தையும் கொடுத்தது. ஆடு கொம்பே இல்லாவிட்டாலும் வள்ளியை எங்கு கண்டாலும் துரத்தி வந்து முட்டி விட்டு செல்லும். எல்லாம் செல்வி  ட்ரைனிங். {ஹேய் செல்வி புள்ள உனக்கும் ஷரப்புக்கும் ஏதாச்சும் லிங்க் இருக்கா? இல்லேன்னாலும் மிலா உருவாக்கிடுவா}

வள்ளி வரும் போது எழுந்து நின்று மரியாதையாக பேசுபவள் இப்போதெல்லாம் காலுக்கு மேல் காலைப் போட்டுக் கொண்டு ஆட்டியவாறே இங்கிலீஷில் பேசி வெறுப்பேத்த பார்வதி பாட்டியும் அவள் அவரை தாண்டும் போது வேண்டுமென்றே காலை நீட்டி விழ வைத்தார். அதில் சற்று கால் பிசக நொண்டிக் கொண்டு நடந்தவள். சத்யாவிடம் சொல்வதாக வள்ளி மிரட்ட

“போய் சொல்லுடி நான் இடுப்பை பிடிச்சிக் கிட்டு நீ என்ன தள்ளி விட்டேனு சொல்லுறேன்” பார்வதி பாட்டி நடித்துக் காட்டியவாறே  ஒரே போடாக போட வாயடைத்து போனால் வள்ளி.   

வள்ளியை பார்த்த உடனேயே பார்வதி பாட்டிக்கு புரிந்து போனது “இவள்  சரியில்லை” என்று அவளை கண்காணித்தவருக்கோ செல்வியை குத்தம் சொல்வதும், குறை சொல்வதுமா அதுவும் செல்வி தனியாக இருக்கும் போது சொல்ல. தன்னிடமும் வேலையை காட்டினாள் என்று காண்டாக கீழே விழ வைத்தவர் செல்வியை அதட்டி, மிரட்டி கருத்தடை மாத்திரை விஷயத்தையும் வாங்கி இருக்க வள்ளி வரும் போதெல்லாம் அவளை வெறுப்பேத்த அந்த வீட்டுப் பக்கம் வள்ளியின் ஆதிக்கம் குறையவே செல்வி சத்யதேவோடு நிம்மதியாக வாழ்க்கையை ஆரம்பித்தாள்.

சத்யதேவை செல்வியிடம் பிரிக்க என்ன செய்வது என்று வள்ளி முழி பிதுங்கிய போது தான் செல்வியும் சத்யதேவும் தேன்நிலவுக்கு கிளம்பிப் போனது.  

சத்யதேவின் கைவளைவுக்கு இருந்த செல்வி “மாமா ஹனிமூன்  கடி ஜோக் சொல்லவா” என்று கேக்க

“ம்ம்” என்று அனுமதி அளித்தவன் அவளை பின்னால் அணைத்தவாறே சூரிய அஸ்தமனத்தை அந்த மலை உச்சியிலிருந்து ரசித்துக் கொண்டிருந்தான்.

அந்த அந்தி நேர ஆதவனை ரசித்தவாறே ” ஒரு தோழி தேன்நிலவுக்கு போயிட்டு வந்த தன்னுடைய தோழியிடம் தங்களுடைய தென்னிலவை எங்க போய் கொண்டாடினோம், என்னென்ன பார்த்தோம் என்று சொல்லி விட்டு ஆவலாக தோழியை ஏறிட

“நான் மேல ஓடுற பேனையும், நாலு சுவரையும் மட்டும் தான் பார்த்தேன் அந்த தோழி சொன்னாளாம்”  என்று சொல்லி செல்வி சிரிக்க

“அப்போ நான் தான் உன்ன வெளிய இழுத்து கிட்டு வந்துட்டேனா? நாலு சுவத்துக்குள்ளேயே இருந்துக்கணுமா?”  சத்யதேவ் செல்வியின் காதுக்குள் ரகசியம் பேச

“போங்க மாமா” என்று அவனை விட்டு விலக நினைத்தவளை இன்னும் தன்னுள் இறுக்கிக் கொள்ள

“புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு தேன்நிலவுனு ஒரு விசயத்த ஏற்படுத்தி கொடுத்திருக்காங்க தெரியுமா?” சத்யதேவ் செல்வியை அழைத்துக் கொண்டு மலையிலிருந்து இறங்கியவாறே சொல்ல

ஆர்வமாக செல்வி “இல்லை” என்று கதை கேக்க

“ரெண்டு பேரும் தனிமையில் யார் தொந்தரவும் இல்லாம ஒருத்தரை ஒருத்தர் மனதாலும், உடலாலும்  புரிஞ்சிக்க” சத்யதேவ் சீரியசாக சொல்ல செல்வி பலத்த யோசனையில் விழுந்தாள்.

“என் செல்ல பொண்டாட்டிக்கு என்ன கேக்கணும்” செல்வியின் முகத்தை பார்த்தே புரிந்துக் கொண்டவன்

“மனசால புரிஞ்சிக்க மனம் விட்டு பேசணுமா இல்லையா? நீங்க தான் பேசுறதே இல்லையே”  என்று கண்ணை சுருக்க

“அப்போ உடலால் நல்ல  பேசுறேன்னு சொல்ல வர, அப்படித்தானே!” நடந்துக்க கொண்டிருந்தவன் நடையை நிறுத்தி செல்வியை தன் பக்கம் திருப்பிக் கேக்க அவன் சொன்னதை புரிந்துக் கொண்டவள்

“மாமா….” என்று பல்லை கடித்தவாறே அவனை அடிக்கத்  துரத்த அவளிடம் பிடிபடாமல் ஓடியவன்

“அதான் எனக்கும் சேர்த்து லொட, லொடன்னு நீயே பேசுறியே ” என்று சொல்ல

“உங்கள….” என்று கத்தியவாறே செல்வி துரத்த மித்திரன் ஏற்பாடு செய்திருந்தவன்  இவர்களை புகைப் படம் எடுத்து மித்திரனுக்கு அனுப்பி வைத்தான்.

அடுத்து வந்த மாதங்களில் ரோஜா படிப்பை முடித்து செல்வராஜோடு ஆடை தொழிற்சாலையில் இணைந்துக் கொள்ள. “அவளுக்கு வரன் பார்க்க வேண்டாமா” என்ற கனகாம்பாளின் கேள்விக்கு வள்ளி “இன்னும் ஒரு வருஷம் போகட்டும்” என்று தன் திட்டத்திலேயே இருக்க. ரோஜாவும் “இப்பொழுதே வேண்டாம்” என்று மறுத்திருந்தாள்.

 செல்வி சத்யா ஒரு நிறைவான வாழ்க்கையில் இணைந்திருக்க செல்வி கர்ப்பமானாள். அவளை குடும்பத்தார் தாங்க வள்ளி தான் படு தோல்வியடைந்ததாக புலம்பிக் கொண்டிருந்தாள்.

வள்ளியால் ஏதாவது பிரச்சினை வருமோ என்று அஞ்சியது மரகதம் தான். பார்வதி பாட்டியால் வள்ளி வீட்டுக்கு வருவதில்லை என்ற போதும் செல்வி ஆங்கிலம் கற்பதோடு, ஆடை வடிவமைப்பையும் கற்றுக் கொண்டிருக்க கற்பமானவுடன் சத்யா செல்ல வேண்டாம் என்று சொன்ன போதும், அவனை மிரட்டியவள் படிப்பை தொடர்ந்தாள். வகுப்புகளுக்கு சத்யாவே அழைத்து சென்று விட்டு விட மரகதம் வள்ளியின் மேல் இருந்த பயத்தாலேயே செல்வியை தனியே விடாது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து விடுவாள்.

“அண்ணி நீங்க பண்ணுறது கொஞ்சம் ஓவரா தான் இருக்கு. பெரியண்ணி அப்படி என்ன செய்வாங்க” என்று செல்வி காப்பியை அருந்தியவாறே கேக்க

“உனக்கு குழந்தையே பிறக்கக் கூடாதென்று, மாத்திரையை தந்தவ உன்னையும், குழந்தைகளையும் ஏதாவது பண்ணிட்டானா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று  அந்த காப்பி ஷாப்பில் அமர்ந்து காப்பியை உறிஞ்சிய மரகதம்

ஆம் செல்வி இரட்டை குழந்தைகளை சுமந்துக் கொண்டிருந்தாள்.

யோசனைக்கு குள்ளான செல்வி “அப்படி ஏன்? எதுக்கு?  மாமாவ ரோஜாகே கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பிடிவாதமா இருக்காங்க” செல்வி கேக்க

“எல்லாம் நான் தாமரையை கட்டி வச்சிடுவேனோ என்று வந்த பயமும், சத்யாவின் பணமும்” மரகதம் கவலையாக

“அப்போ ரோஜாக்கு கல்யாணம் ஆனா அவங்க மாறிடுவாங்கல்ல” என்று சந்தோசமாக சொல்ல

“மாறிடுவாளா? வன்மம் அதிகமாகுமே? நினைச்சாலே பயமாக இருக்கு” என்று மரகதம் நெற்றியை தடவியவாறே

“அவங்கள நல்ல ஒரு சைக்காட்ரிக் கிட்ட கூட்டிட்டு போனா என்ன?”

“தமிழு கலக்குற போ. இப்போ தான் படிச்சவ மாதிரி பேசுற” என்று சந்தோசமாக சொன்னவள் “அதுக்கு அவ இஷ்டப் பட்டு டிரீட்மென்ட் எடுக்கணும். பலவந்தமாக இழுத்து கிட்டு போக முடியாதே” மரகதம் என்ன தான் செய்வது என்ற ரீதியில் சொல்ல செல்வி யோசனைக்குள்ளானாள்.

“ஏழாம் மாசம் பொறந்த உடனையே வளைகாப்பு வைப்போமா” மரகதம் பேச்சை மாற்றும் பொருட்டு கேக்க

“எப்போ வெச்சா என்ன அண்ணி நான் தான் பொறந்த வீட்டுக்கு போக போறது இல்லையே” சந்தோஷமாகவே சொன்னாள் செல்வி

அவளின் மலர்ந்த  முகம் கண்டு தனது அன்னை அவளை எவ்வாறு பார்த்துக் கொள்கிறார் என்று அறிந்திருந்தவளோ  “அப்போ எங்க வீட்டுக்கு வந்துடு நான் உன்ன நல்லா பாத்துக்கிறேன்”

“உங்க அன்பு தம்பிய கேளுங்க அனுப்பி வைப்பாரான்னு பாப்போம்” என்று கணவன் தன்னை எங்கும் அனுப்ப மாட்டான் என்ற கர்வக் குரலிலேயே சொல்ல

தான் கர்ப்பமாக இருந்த போது  கணவன் அவளை தாங்கிய விதம் நினைவில் வந்து மரகதத்தின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது

ஆறுமாத வயிற்றோடு செல்வி சமையல் அறையிலிருந்து உணவுப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வர தமிழ்வாணனும், தமிழ்வேந்தனும் ஓடி வந்து பாத்திரங்களை வாங்கி கொண்டு

“எதுக்கு நீ அலையுற சொன்னா நாங்க எடுத்து வருவோமில்ல” என்று செல்வியை கடிந்துக் கொள்ள

“ஆமாடா  புள்ள தாச்சி பொண்ணு குனிந்து, நிமிர்ந்து வேல பார்த்தா தான் சுகாப் பிரசவமாகும். இங்க  என்னடானா கட்டிக்கிட்டவனும் சரி, கூட பிறந்தவங்களும் ஒரு வேல செய்ய விட மாட்டேங்குறீங்க  பத்தாததுக்கு மாமியார்காரி புள்ள சாப்பிடாம படிக்கிதுன்னு சோத்த பிசைஞ்சி ஊட்டி விடுது. இனி இவள பிடிக்க முடியாது” என்று பார்வதி பாட்டி செல்வி இரட்டை குழந்தைகளை சுமந்து கொண்டிருப்பதால் பயந்தவாறே சொல்ல அவரை முறைத்தனர்  சகோதரர்கள் இருவரும்

செல்வி கர்ப்பமாக உள்ளாள் என்று அறிந்ததிலிருந்தே கனகாம்பாள் அவளை தங்கு தாங்கென தாங்க மூன்று மாதங்களாக வாந்தியும், தலை சுற்றலினாலும் செல்வி படுக்கையிலேயே இருக்க பயந்து தான் போனான் சத்யா.

அன்னை மல்லிகை, முல்லையை சுமந்து கொண்டிருந்த  போது வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதை கண்டிருந்தவன், வள்ளி ரோஜாவை சுமந்த போது சதா சாப்பிட்டுக் கொண்டே இருந்ததை கண்டிருந்தவன் செல்வி சாப்பிடாமல் கொள்ளாமல் சுருண்டு சுருண்டு படுப்பதும் சாப்பிட்ட உடனேயே வாந்தி எடுப்பதுமாக இருக்க  நடுங்கிப் போனான் சத்யதேவ்.

“மூனு நாலு மாசம் அப்படிதாண்டா இருக்கும் என்று அன்னை எவ்வளவோ சொன்னாலும் காதில் வாங்காது டாக்டரை அணுகி விசாரித்தவன். எவ்வாறு செல்வியை சாப்பிட வைப்பது என்று கேட்டுக் கொண்டு அவ்வாறே செய்தான்.  

வாந்தியெடுத்தாலும் செல்விக்கு பிடித்தமான  உணவுகளையும், திரவ உணவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக ஏதாவது கதை பேசியவாறே அவளை திசை திருப்பி கொடுத்தவன் அவளை சாப்பிட வைப்பதில் வெற்றியும் கண்டான். நான்காம் மாதத்தின் தொடக்கம் வரை மசக்கை படுத்தி எடுக்க படிப்பை தொடர முடியாதவள் உடம்பு சற்று தேறவும் அடம்பிடித்து வகுப்புகளுக்கு செல்ல சத்யாவும் அவளை விட்டு விட்டான்.

செல்வி கர்பமடைந்தாள் என்று அறிந்ததிலிருந்து தம்பிகள் இருவரும் குழந்தைகளுக்காக சண்டைப் போட்டுக் கொள்ள இரட்டை என்று சொன்னதும் ஆளுக்கு ஒரு குழந்தையா என்று குதூகலித்தவர்கள் என்ன குழந்தை பிறக்கும், என்ன மாதிரி பெயர் வைக்கலாம் என்ற ஆராய்ச்சியில் இறங்கி விட்டனர்.

இரட்டை என்று அறிந்ததிலிருந்தே என்ன குழந்தை என்று அறிய ஆவல் இருந்தாலும் டாக்டரிடம் கேக்க இருவருக்குமே தோன்றவில்லை.

“எந்த குழந்தையென்றால் என்றால் என்ன? ஆரோக்கியமாக பெத்து கொடு” என்று பர்வதம்  பாட்டியும், கனகாம்பாளும் வேண்டுதலோடு கேட்டுக் கொள்ள. பார்வதி பாட்டி பயந்தது போல்  பிரசவிக்கும் நேரம் செல்வி துடிக்கும் துடிப்பை கண்டு யார் அதிகமாக அழுதார்கள்? ஏன் அழுதார்கள்?

Advertisement