Advertisement

                                             அத்தியாயம் 17

“வணக்கம் சம்பந்தி நான் கனகா பேசுறேன். நல்லா இருக்கீங்களா?”

“எங்களுக்கென்ன குறைச்சல் சம்பந்தி? எங்க அப்பா புண்ணியத்துல நாங்க ஓஹோனு தான் இருக்கோம்”

“கடவுள் புண்ணியம்னு சொல்லுறதுக்கு பதிலா அப்பா புண்ணியம்னு சொல்லுறாங்க” என்ற யோசனையாகவே கனகாம்பாள் “சம்பந்தி உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் கால் பண்ணேன்” கனகாம்பாள் சத்யாவின் திடீர் கல்யாணத்தை பற்றி எவ்வாறு சொல்வதென குழம்பியவாறே இழுக்க

“பொண்ணுங்களுக்கு வரதட்சணையா கொடுத்தவற்றை கடனாக கேக்கப் போறாங்களோ?” என்ற சிந்தனையிலேயே சாருலதா

“இங்க ஒன்னும் பெரிசா சொல்லுறமாதிரி இல்ல சம்பந்தி நானே சத்யாகிட்ட கடன் கேக்கலாம்னு இருக்கேன்” என்று லதா கிடுக்குப்பிடி போட

“என்ன இவங்க என்ன பேச விடாம என்னெண்ணமோ பேசுறாங்க?” என்று கனகாம்பாள் புலம்பியவாறே, தான் பேசவில்லையானால் பேசவிடவே மாட்டாள் என்று எண்ணம் தோன்ற “சம்பந்தி சத்யாவுக்கு கல்யாணம் ஆச்சு அத சொல்லத்தான் கால் பண்ணேன்” என்று அவசர அவசரமாக சொல்ல   

“என்னது கல்யாணம் ஆச்சா? என்ன விளையாடுறீங்களா? சம்மந்தினு வாய் நிறைய கூப்புடுறீங்க சொல்லாம கல்யாணத்த முடிச்சிட்டீங்க?” லதா ஆதங்கமாக கத்த

லதா மேலும் எதுவும் பேசமும் “சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி ஆகிப் போச்சு. குலதெய்வ பூஜைக்கு போனப்போ. ஒரு பொண்ண காப்பாத்த போய் நானே அந்த பொண்ண கல்யாணம் பண்ணி வச்சிட்டேன்”  

ஏதோ தற்கொலை பண்ண போன பொண்ண காப்பாத்த போய் அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணி வச்சது போல் லதா

“அந்த பொண்ணுக்கு காதல் தோல்வியா” லதா கேக்க கனகாம்பாள் தான் முழிக்கும் படி ஆகிருச்சு. ஒரு வழியா நடந்ததை சுருக்கமாக சொல்ல

“அதானே  பார்த்தேன் இப்போவே சத்யாவுக்கு வயசாகிருச்சு. இனி கல்யாணமே நடக்காதுனு தான் நான் நெனச்சேன். இப்படி தடாலடியா கல்யாணம் நடந்தா தான். இல்லனா காலத்துக்கும் கல்யாணமே பண்ணாம மொட்டையா இருந்திருப்பான். திடீர் கல்யாணம் எங்குறதால வரதட்சணை ஒன்னும் கிடைக்கலையா. எதுக்கும் அந்த பொண்ண பத்தி நல்லா விசாரிங்க, ஆள ஏமாத்துறவளா இருக்கப் போறா.  உங்க கண்ணை அவமேல வைங்க, நீங்க ஒரு அப்பாவி உங்கள ஏமாத்திட்டு வீட்டிலுள்ள தட்டு முட்டு சாமானோட ஓடி போயிட்டான்னா என்ன பண்ணுறது. உங்க வீட்டுல விசேஷம் வச்சா உங்க பொண்ணுங்கள கூட்டிட்டு வரலாம்னு இருந்தேன். உங்க மருமக கிட்ட கொஞ்சம் திமிராகவே நடந்துக்கோங்க இல்லனா உங்க தலையில மொளகா அரச்சு எல்லா வேலைகளையும் உங்க தலைல கட்டிடுவா. சரி, சரி நான் வைக்கிறேன். எனக்கு நெறய வேல இருக்கு” லதா போனை வைத்தாலும் அவளின் பேச்சின் தாக்கத்தால் கனகாம்பாள் போனை காதில் வைத்தவாறே ஸ்தம்பித்து விட

“அத்த, அத்த என்ன பலமான யோசனை? எந்த கோட்டைய புடிக்க போறீங்க?” செல்வி புன்னகை முகமாகவே கனகாம்பாளை உலுக்க

“இந்த கள்ளம்கபடமில்லாத பொண்ண போய் என்னவெல்லாம் பேசிட்டா”  என்று வாஞ்சையாக அவளை பார்த்து புன்னகைத்தவர் “செல்வி ரொம்ப தலைவலிக்குது போய் ஒரு கப் காபி போட்டு எடுத்துட்டு வாம்மா”

“சரிங்க அத்த” என்று செல்வி சமையலறையை நோக்கி போனாள்.

புன்னகை முகமாக போகும் அவளையே பாத்திருந்தவர். சத்யா செல்வியின் வாழ்க்கைக்காக உடனடியாக கடவுளிடம் மனத்தால் பிராத்தனை செய்தார்.   

****************************************************************

சத்யாவின் ரெஜிஸ்டர் மேரேஜ் வேலைகளை செல்வராஜ் பொறுப்பெடுத்தாலும் அதை செய்ய அவனுக்கோ நேரமிருக்க வில்லை அது வேற தள்ளிப் போக ஒரு நண்பரின் மூலம் பத்திரங்களை பெற்றுக் கொண்டவன் கோமளவள்ளியிடம் கொடுத்து அனுப்பலாம் செல்வியின் விவரங்களை கேட்டு பத்திரத்தை நிரப்புவாள் என்று அவளிடம் கொடுக்க வைத்திருந்ததையும் மறந்து ஆடை தொழிற்சாலையை கதி என்று இருந்து விட்டான்.

வேலைக்குள் வேலையாக சத்யா ரெஜிஸ்டர் மேரேஜ் பத்திக் கேக்க செல்வராஜ் கோமளவள்ளிக்கு அழைத்தான். மறுமுனையில் அழைப்பு ஏற்றதும் விஷயத்தை சொன்னவன் உடனே போய் செய்து முடிக்குமாறு கட்டளையிட்டான்.

“நாம நெனச்சத விட வேல சீக்கிரமா முடிஞ்சிடும் போல இருக்கு” சத்யதேவ் முகம்கொள்ளா  புன்னகையுடன் சொல்ல

“முடியாம?  பசி, தூக்கம், குடும்பம், எல்லாம் மறந்து பாக்டரியே கதின்னு கெடந்த சீக்கிரம் முடியுமில்ல”  செல்வராஜின் குரலில் கவலை கலந்த சந்தோசமே இருந்தது.

“இன்னைக்காவது வீட்டுக்கு போடா, உன்  பொண்டாட்டி முகம் மறந்துட போகுது” செல்வராஜ்  சத்யதேவை வம்பிழுக்க   

“பக்கத்து  இலைக்கு பாயாசமா? அக்கா முகம் மறந்துட்டேனு  சொல்லுங்க” சத்யதேவ் செல்வராஜை  வம்பிழுக்க சிரித்தவாறே வேலை பார்த்தனர்.

*******************************************************************

ஆவணங்களுடன் உள்ளே நுழைந்தாள் ரோஜா. ஆம் கோமளவள்ளியின் போனில் செல்வராஜுடன் பேசியது ரோஜா. கனகாம்பாள் டிவியில் மூழ்கி இருக்க “பாட்டி” அழைத்தவாறே அவரை கட்டியணைத்தவள். செல்லம் கொஞ்சிய பின்

“எங்க நம்ம புது அத்த”

“தமிழ் உள்ள துணி மடிக்கிறா”

“சரி நா உள்ள போய் பேசிக்கிறேன்” என்றவள் செல்வியை காண சத்யதேவின் அறைக்குள் சென்றாள்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவள் வந்த வேலை நியாபகம் வர கைப்பையிலிருந்து ஆவணங்களை எடுத்து

“தமிழ் இத நிரப்பி  அப்பா உடனே  எடுத்து வர சொன்னாங்க.  

உன் விவரமெல்லாம் டக்கு டக்குனு சொல்லு பாப்போம். உன் முழு பெயர்”

”  டக்கு டக்கு” செல்வி சிரிக்காமல் சொல்ல ரோஜா முழித்தாள்.  

“ஏய் என்ன விளையாடுறியா” ரோஜா கையிலிருந்த பத்திரர்தாலேயே அடிக்க அப்பாவியாக முகத்தை வைத்தவள்

“நீ  கேட்டதை தானே சொன்னேன்” என்று சொல்ல அவளின் முகத்தை பார்த்த ரோஜாவின் முகத்திலும் புன்னகை.

கொஞ்சம் நேரம் விளையாடி விட்டு “சீக்கிரம் சொல்லு அப்பா வைட்டிங் என்று ரோஜா அவசரப்படுத்த தனது விவரங்களை சொல்லலானாள் செல்வி.

“என்னது பதினெட்டு வயசா? இங்க பாரு அத்த விளையாடியது போதும். என்ன வெறுப்பேத்தாத, நான் பொல்லாதவளாகிடுவேன்” ரோஜா மிரட்ட

“அம்மாச்சி மேல சத்தியமா போனமாசம் தான்  பதினெட்டு பொறந்தது” செல்வி சொன்னபாவனையிலேயே உண்மை புரிய யோசனைக்குள்ளானாள் ரோஜா.

*******************************************************************

“எதுக்கு இப்போ போன் பண்ணி பக்டரிக்கு வெளிய வர சொன்ன, நிறைய வேல இருக்கு” செல்வராஜ்   ரோஜாவை கடிந்துக் கொள்ள. அவனை இழுத்துக்கொண்டு சென்ற ரோஜாவின் வயசை பற்றி சொல்ல புருவம் சுருக்கினான் செல்வராஜ்.

“இது சத்யாக்கு தெரிஞ்சா ரொம்ப மனசு உடைஞ்சி போவானே, இப்போ என்ன பண்ணுறது, வள்ளிக்கு சொன்னா உடனே தீர்வு சொல்வா” என்று செல்வராஜ் வள்ளியை போனில் அழைக்க போக உஷாரானாள் ரோஜா.

“அப்பா”என்று கத்தியவள் “அம்மாக்கு சொன்னா கண்டிப்பா மாமாக்கு சொல்வாங்க இன்னும் சிக்கலாகும். ஒன்னு பண்ணலாம் மாமாக்கு தெரிய வேணாம் மறச்சிடலாம். ரெஜிஸ்டர் ஆபீஸ் போய் கையெழுத்து போடும் போது தெரியாம பாத்துக்கலாம்” கடகடவென ரோஜா சொல்ல

“வயச சொன்னா எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியல? அவன்கிட்ட இதுவரைக்கும் எதையுமே மறைச்சதுமில்லை. பொய் சொல்லி அவனை ஏமாத்துறது போலயே இருக்கு. இது சரிவருமா?” என்ற யோசனையில் ஒருவாறு சமர்ப்பிக்க வேண்டிய எல்லா ஆவணங்களையும் சரி பார்த்து செல்வராஜ் சமர்ப்பித்திருக்க எல்லாம் சரியாக உள்ளதால் அடுத்த வாரத்தில் மணமக்களுடன் வரும் படி அறிவிக்க இதை எப்படி சமாளிப்பதென்ற யோசனையிலேயே வீடு திரும்பினான் செல்வராஜ்.

ஆறுமாதத்தில் முடித்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டிய துணிகள் ஐந்தாவது மாதத்திலேயே தயாராகிவிடும் என்ற சந்தோசத்தில் இருந்த சத்யதேவ் பழைய படி வீட்டுக்கு சாப்பிட வருவதும், செல்வியிடம் வம்பிழுப்பதுமாக நாட்கள் செல்ல

சத்யாவின் ரெஜிஸ்டர் மேரேஜை எப்படி தடுத்து நிறுத்துவதென்ற யோசனையில் கோமளவள்ளி இருக்க ரெஜிஸ்டர் மேரேஜுக்கான நாளும் வந்தது.

மூன்று மணிக்கு இவர்ககை வர சொல்லி இருக்க,

அன்று ஆபீசுக்கு வரக் கூடாது என்று செல்வராஜ் உத்தரவிட்டிருக்க

நடு இரவில் வந்து செல்வியை அணைத்து கொண்டு தூங்கிய சத்யாவின் முகத்தில் விழித்தே எழுந்தாள் செல்வி.

கொஞ்சம் நாட்களாக சரியாக தூக்கமும் இல்லாது வேலை வேலை என்று ஓடும் கணவன் இன்று ஆழ்ந்து தூங்குவதை  அன்பாக பாத்திருந்தவள், அவனின் தலையை கோத அவளை இழுத்து அணைத்தவான்

“நான் தூங்கினா தான் என் கிட்டேயே வர” என்று இன்னும் அவளை தன்னுள் இறுக்க

“உங்களுக்கு தான் என் கிட்ட பேசவே நேரம் இல்லையே! பேச எங்க? உங்கள பாக்க கூட முடியிறது இல்ல” கவலையா? வெறுமையா என்ற ஒரு குரல் செல்வியின்

“உனக்கு மொபைல் வாங்கி தந்தேன் ஒரு நாளாவது எனக்கு போன் பண்ணியா?  ஊருக்கு போன போட்டு தம்பிங்க கூட கொஞ்ச  வேண்டியது” என்று சிரித்தவாறே சொல்ல செல்விதான் திருதிருனு முழித்தாள்.

‘அதானே அவருக்கு போன் பண்ண வேணான்னு அவரு சொல்லலையே!” என்ற செல்வியின் மனது “அவரும் தான் போன் பண்ணல, திருடன் மாதிரி வீட்டுக்கு வராரு, போறாரு” என்று சத்யதேவை தக்க தருணத்தில் மாட்டி விட

“நீங்களும் தான் போன் பண்ணல, நீங்க ஏன் பண்ணல” என்று சத்யதேவை முறைக்க

“என் பொண்டாட்டி ரொம்ப அறிவாளி” என்று முணுமுணுத்தவன் “வேலைனு வந்தா நா வெள்ளைகாரண்டி எல்லாத்தையும் மறந்து வேலைனு இருந்துடுவேன். செல்வராஜ் மாமா இல்லனா சாப்பாடு கூட இல்ல” என்றவனை பாவமாக பார்த்தவள்

“சாப்பிடாம அப்படி என்ன வேல உங்களுக்கு, வீட்டுக்கும் வாறதில்ல, சாப்பாடு எடுத்துட்டு வாறென்னா வேணாம்னு சொல்லிட்டீங்க” குரல் சற்று ஓய்ந்து வரவே

“அதுக்குதாண்டி போன் வாங்கி தந்தேன், போன போட்டு ‘மாமா சாப்டீங்களானு’ கேட்டியா? ‘இல்லனு’ சொன்னா ‘போய் சாப்பிடுங்க’னு மிரட்டி இருக்கணுமா இல்லையா?”  

உண்மையில் சத்யா செல்வியின் அழைப்பை சில நேரம் எதிர் பார்த்தான்,  அவளை அழைக்க நினைத்தாலும் வேலை அவனை இழுத்துக் கொள்ளும், அல்லது யாரவது கூட இருப்பாங்க

தன் மேல் தான் தவறோ என்று செல்வி எண்ண

“நா ஆபீஸ்ல பிசியா இருப்பேன் நீ எண்ண வீட்டுல செய்ற”

சத்யா கேட்ட ஒரு கேள்விக்கு காலையிலிருந்து மாலை வரை யார் யார் கூட பேசுவா எண்ண எல்லாம் செய்வா என்று மடை திறந்த வெள்ளம் போல சொல்ல அவளின் முக பாவனையில் லயித்தவன் அவள் சொல்வதை தலைக்கு கீழ் இரண்டு கைகளையும் வைத்தவாறே படுத்து கொண்டு கதை கேக்க ஆரம்பித்தான்.

செல்வியும் இயல்பாகவே அவனின் நெஞ்சில் தலை வைத்து சாய்ந்து கதை சொல்லிக் கொண்டிருந்தவள் அடிக்க கடி சத்யாவின் முகத்தை பார்த்து தான் சொல்வதில் கவனமாக இருக்கிறானா என்று பார்த்துக் கொண்டாள்.

உண்மையில் அவள் சொன்னவற்றில் பாதி கூட அவன் காது வழியாக மூளையை அடைந்ததோ இல்லையோ கண்கள் மட்டும் செல்வியின் முகத்திலேயே இருந்தது. அவளை அள்ளி அணைக்க கைகள் பரபரக்க தலையைக் கொண்டு கையை இறுக்கியவன் “இன்னும் கொஞ்சம் நாள் தான்” என்று தன்னை தானே சமாதானப் படுத்தினான்.

இவர்களின் அந்நியோன்யத்தை குலைக்கவென மூக்கு வேர்த்தவாறே வந்து சேர்ந்தாள் கோமளவள்ளி.

“என்ன உன் மருமக இன்னும் தூங்குறா போல” என்றவாறே சத்யதேவின் அறைக் கதவை  கோமளவள்ளி முறைக்க

“சத்யாவோடு இருக்கா சின்னங்சிறுசுங்க” என்று கனகாம்பாள் சொல்ல

மனதுக்குள் முறைத்தவாறே “எங்க உன் செல்ல பேத்தி” என்று தாமரையை பற்றி கேக்க

“செல்வி வந்த பிறகு என் ரெண்டு பேத்திங்களுமே இந்த பக்கம் வர்ரதில்ல” என்று மறைமுகமாக ரோஜாவும் வாறதில்ல என்பதை சொல்ல

“அவ படிக்கிற பொண்ணு. காலேஜ் போக வேணாமா? அதுவும் கடைசி வருஷம்” வள்ளி அடுக்க வெளியே கீரை விற்கும் அழகம்மாவின் குரல் கேட்டது.

கனகாம்பாள் வெளியே செல்ல கூடவே வள்ளியும் சென்றாள்.

“எங்க அம்மா உங்க மருமக” அழகம்மா தன்மையாக கேக்க அவரின் குரலை வைத்தே ஏதோ சரி ல்லை என்று கணித்த வள்ளி

“எதுக்கு இப்போ எங்க வீட்டு மருமகளை பத்தி கேக்குற?” என்று கொஞ்சம் குரல் உயர்த்திய வள்ளி

“நா அவங்க கிட்ட தான் பேசணும் வர சொல்லுங்க” என்று அந்தம்மாவும் குரலில் கடுமையை கொண்டு வர கனகாம்பாள் யோசனையாக உள்ளே வரும் படி சொல்ல

“எதுக்கு இப்போ இவங்களையெல்லாம் உள்ள கூப்புடுற” வள்ளி வேண்டுமென்றே கத்த

கனகாம்பாள் வள்ளியை முறைத்து விட்டு “நீங்க உள்ள வாங்க” என்று அவரை கையேடு அழைத்தது வர வள்ளி

“தமிழ், தமிழ்” என்று பலமாக கத்தியவாறே செல்வியை அழைக்க

என்ன ஏதோ என்று செல்வியோடு சத்யதேவும் வர

“உன்ன தேடி கண்ட கண்டவங்களெல்லாம் உள்ள வராங்க” என்று அழகம்மாவை பற்றி மேலும் தரக் குறைவாய் பேச அது அவரின் தன்மானத்தை சீண்டிப் பார்த்தது.

“ஏய் நிறுத்து நா ஒன்னும் உங்க வீட்டுல விருந்து சாப்பிட வரல. ஏதோ கள்ளம் கபடமில்லாம புள்ள பேசுதே அதையும் யாராச்சும் ஏமாத்தி இருக்குமோனு தான் வந்தேன். இங்க வந்து பார்த்தா தானே தெரியுது, உள்ள ஒன்ன வச்சிக்கிட்டு வெளிய ஒரு மாதிரி பேசுற மனிசனுங்க” என்று அவர் கையை ஆட்டி ஆட்டி பேச

“யார் இவங்க? செல்வியை எதுக்கு பாக்க வந்தாங்க?” என்று சத்யதேவின் எண்ணம் போக

செல்வியோ “இவங்க என்ன பேசுறாங்க ஒன்னும் புரியலையே” என்று நின்றிருந்தாள்.

“இந்தாம்மா நீ செல்வியை பாக்க தானே வந்த வந்த விசயத்த சீக்கிரம் சொல்லிட்டு கிளம்பு. வீண் பேச்சு வேணாம்” என்று கனகாம்பாள் சொல்ல

“இந்தாம்மா நீ கொடுத்த விட்டமின் மாத்திரை. பொண்ணுங்களுக்கு மட்டும் உகந்தது, சீக்கிரம் கொழந்த பொறக்கும்னு கொடுத்தியே, ஏதோ நல்ல மனசு, வெள்ளமனசுனு உன் கிட்ட பேசினா, இத என் பொண்ணுக்கு கொடுக்க சொன்னியே! அப்படி நான் உனக்கு என்ன பாவம் பண்ணிட்டேன்னு எங்க வம்சத்தையே இல்லாம பண்ண பாத்திருக்கியே”

இந்தம்மா என்ன பேசுறாங்க? எதை பற்றி பேசுறாங்க என்று சத்யாவும், கனகாம்பாளும் யோசனைக்குள்ளாக

“அடிப்பாவி என் புருஷன டேமேஜ் பண்ணி அந்த டாக்டர் கிட்ட கேட்டு மாத்திரையை உனக்கு கொண்டு வந்து தந்தா, நீ யாருக்கோ தானம் பண்ணி எஸ்கேப் ஆகிட்டியே!” என்று கோமளவள்ளி வாயை பிளக்க

“நாம தான் மாமாவை விட்டு தூரமா, இல்ல இல்ல மாமா வேல வேலைனு என்ன விட்டு தூரமா இருக்குறதால இது இப்போ எனக்கு தேவ படாதுன்னு அந்த அக்காக்கு கொடுக்க சொன்னோமே! அண்ணிக்கு தெரிஞ்சா திட்டுவாங்கனு அவங்கள சமாளிக்க டேப்லெட் போட்டேனு சொன்னேனே இப்போ அண்ணிய எப்படி சமாளிக்கிறது” என்று செல்வி அழகம்மா சொன்னதை சரியாக புரிந்துக் கொள்ளாமல் வள்ளியை எவ்வாறு சமாதானப் படுத்துவது என்று முழிக்க

எங்கே நான் தான் கொடுத்து விட்டதாக செல்வி சொல்லி விடுவாள்  என்று புரிய அதை எப்படி செல்விக்கு எதிரா திருப்புவது என்று ஒரு கணம் யோசித்த  கோமளவள்ளி அப்படியே பிளேட்டை திருப்பி அழகம்மை நீட்டிக்கொண்டிருந்த பாட்டிலை வாங்கி பார்த்தவள்

“ஐயோ ஐயோ நான் படிச்சு படிச்சு சொன்னேனே என் பொண்ணு ரோஜாவை கட்ட சொல்லி கேட்டியா?” என்று சத்யதேவிடம் திரும்பி பாட்டிலை கொடுத்தவள்

“உன் வம்சமே தலைக்காம இருக்க இவ என்ன காரியம் பண்ணி இருக்கா பாத்தியா?   எவளையோ திடீரென கல்யாணம் பண்ணி கிட்டு வரும் போதே நினச்சேன் இப்படியெல்லாம் நடக்குமென்று” என்று தலையில் அடித்தவாறே அழ

“இந்த அண்ணி என்ன சொல்லுறாங்க? அவங்க தானே இத தந்தாங்க, இப்போ எதுக்கு அழுறாங்க” என்று செல்வி மொழி தெரியாத குழந்தை போல் முழிக்க

சத்யதேவ் பாட்டிலில் ஆங்கிலத்தில் எழுதி இருந்த கருத்தடை மாத்திரை என்ற வாசகத்தை பார்த்து   தான் மட்டும் நிற்க பூமி மட்டும் சுத்துவது போல் திகைத்து நின்ற இடத்தில் ஆணி அடித்ததை போல் நின்று விட அவனின் எண்ணமெல்லாம் அன்று நடந்த கூடலில் செல்வி கருவுற்றிருந்தால்?

Advertisement