Advertisement

                                                        அத்தியாயம் 14

மாலை நேரம் ஆனதால் தெருவில் அதிக கூட்டம் இருக்கவில்லை அதை தான் கோமளவள்ளியும் எதிர்பார்த்தாலோ என்னவோ. செல்வியை அழைத்துக் கொண்டு தெருவில் இறங்கி  நடந்த கோமளவள்ளியின் எண்ணமெல்லாம் தான் செய்யப் போகும் வேலையை யாரும்  பார்த்து விடக் கூடாது என்பதிலேயே இருக்க சுற்றி முற்றி பார்த்தவாறு வந்தவள் செல்விக்கு  எந்த கடையையும் காட்டாது இருக்கவே

 

“என்ன அண்ணி மளிகைக் கடைய காட்டுவீங்கன்னு பார்த்தா என்ன தெருத்தெருவா தேர்போல  இழுத்துட்டு போறீங்க”

செல்வியின் கையை பிடித்து இழுக்காத  குறையாய் வள்ளி நடக்க செல்வி அவளை புரியாத பார்வை பார்த்து கேட்டு வைக்க

செல்வியின் கையை விட்ட வள்ளி

“இங்க மீன் வாங்க ஒரு நல்ல கடை இருந்துச்சு” என்று பொய்யாய் யோசித்தவாறே தேட

 

“ஓஹ் அப்படியா” என்று செல்வியும் தலையை அங்கும் அங்கும் திருப்பி தேடலானாள்.

 

அதை பார்த்து உள்ளுக்குள் சிரித்த வள்ளி “தேடு தேடு நல்லா தேடு” என்று மனதுக்குள் பொரும.

 

ஒரு சூப்பர் மார்க்கட்  கடையை கண்டு வள்ளி “அதோ அங்க எல்லாமே கிடைக்கும்” என்று அழைத்து சென்று பொருட்களை காட்டி “எல்லாம் தரமான பொருட்கள். நமக்கு தேவையானத ஒரே கூரையின் கீழ் வாங்க முடியும்” கிராமத்துக்காரி இவ எங்க இந்த மாதிரி கடையெல்லாம் பாத்திருக்கப் போறா என்று வள்ளி கடையின் பெருமை பாட

 

அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த செல்வி வெளியே வந்தவுடன் வயித்தை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

“இப்போ எதுக்கு சிரிக்கிற” என்று வள்ளி பல்லை கடிக்க

 

“என்ன அண்ணி கடைக்கு இலவசமாகவே விளம்பரம் பண்ணுறீங்க? உங்களுக்கு அவங்க இலாபத்துல பங்கு தாரங்களா?” என்று மீண்டும் சிரித்தவள் அங்கே சென்று கொண்டிருந்த காய்,கறி வண்டியை நிறுத்தி

 

“அண்ணா காயெல்லாம் புதுசா? எந்தநாளும் புதுசா கொண்டு வாரீங்களா?” என்று கேட்டாள்.

 

அவரும் “ஆமாம்மா… எங்க தோட்டத்துல விளைஞ்சது சிலவும் இருக்கு, மற்றது சந்தைல இருந்து கொண்டு வாரேன்” என்று சொல்ல சத்யதேவின் வீட்டை சொல்லி அங்கு வருமாறு கூற

 

“அட அந்தம்மா என் கிட்ட தான் வாங்குவாங்க, மீன் கூட  புதியதா பாத்துதான் வாங்குவாங்க, எங்கக்காதான் கீரை விக்குறா அவ கிட்ட தான் வாங்குவாங்க” என்று கூடுதலான தகவலையும் சொல்லி நகர்ந்தார்.

 

செல்வி தன்னை அவமானப் படுத்துவதாக வள்ளி உள்ளுக்குள்  கோவத்தில் கனன்றாலும் தான் வந்த வேலை முடியட்டும் என்று பல்லை கடித்து பொறுமை காத்தாள்.

 

வள்ளி பக்கம் திரும்பிய செல்வி “சூப்பர் மார்க்கட் கடையை பத்தி நம்ம சிவகார்த்திகேயன் படத்துல புட்டு புட்டு வச்சிருக்காங்களே அண்ணி இன்னும் நீங்க அந்த படத்த பாக்கலயா? ஒரு தடவ பாருங்க”

என்று செல்வி படத்தை விளம்பர படுத்த வள்ளியின் கோவம் எல்லை தாண்டி போய் கொண்டிருந்தது. அதை அறியாமல் செல்வி

 

“இப்படி பிரெஷ்ஷா கிடைக்கும் போது எதுக்கு பிரிஜ்ல வச்சத சாப்பிடணும்” என்று மேலும் வள்ளிக்கு பாடம் நடத்த, பொறுமையை இழந்த வள்ளி திரும்பி நடக்கலானாள்.

 

“அண்ணி நில்லுங்க, நில்லுங்க அண்ணி” என்று செல்வி கத்தியவாறே பின்னால் ஓடி வர தன் கோவத்தை அடக்க வழி தெரியாது அருகில் இருந்த சிறுவர் பூங்காவில் நுழைந்தாள் வள்ளி.

 

வள்ளியை மறந்து அங்கே விளையாடும் சிறுவர்களுடன் செல்வி ஐக்கியமாகிவிட தனது கோவத்தை கட்டுப் படுத்திக்க கொண்ட வள்ளி செல்வியின் அருகில் வந்து

“வா உன் கூட முக்கியமான விஷயம் பேசணும்” இழுக்காத குறையாய் செல்வியை அழைத்துச் செல்ல குழந்தைகளை பிரிய மனமில்லாது வள்ளியுடன் செல்வி செல்ல

 

“இப்படி உக்காரு” என்று ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்த வள்ளி செல்வியை அமரச் சொல்லி “யாரோ பெத்த குழந்தைகளை கொஞ்சுரியே உனக்குன்னு குழந்தை பெத்துக்கணும்னு எண்ணம் இல்லையா?” சொல்லும் போதே கடுப்பாக இருந்தது வள்ளிக்கு.

குழந்தை என்றதும் சத்யதேவிடம் மனம் தாவ வெக்கத்தில் முகம் சிவந்தவள், தலை குனிந்தவாறே வள்ளியை பார்க்க

செல்வியின் வெக்கத்தை கண்டு மேலும் கடுப்பான வள்ளி

 

“ஐயோ கடவுளே பாக்க சகிக்கல, என்னால முடியலையே! என் பொறுமை எல்லை தாண்டி போகுது” என்று முணுமுணுத்தவள் வரவழைத்த புன்னகையுடன் செல்வியின் புறம் திரும்பி “இது பாரின்ல இருந்து வரவழைச்ச விட்டமின் டேப்லெட் இத டெய்லி காலைல சாப்பாட்டுக்கு அப்பொறம் போடு. சீக்கிரம் குழந்தை பிறக்கும்” என்று சொல்ல     

 

“அப்போ இத மாமாவும் சாப்பிடணுமா? காலை மாலை ரெண்டு வேலையும் மாமாக்கு மறக்காம கொடுத்துடுறேன்”  என்று செல்வி ஆர்வமாக சொல்ல

கோவத்தின் உச்சிக்கே சென்ற வள்ளி செல்வியின் தலையில் “நங்” என்று பலமாக கொட்ட

“ஆ……….ய்”  என்று தலையை தடவியவாறே செல்வி “இப்போ எதுக்கு என்ன கொட்டுனீங்க” என்று அப்பாவியாக “தான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இந்த அண்ணி இப்படி கொட்டுறாங்க? இவங்களுக்கு அப்பத்தாவே பரவாயில்ல போலயே” என்று எண்ணியவாறே  கேக்க

 

செல்வியையே ஒரு நாளைக்கு ஒரு மாத்திரை சாப்பிடச் சொன்னால் தான் மரகதத்துடன் பங்கு போட பிடிக்காமல் பாசம் வைத்திருக்கும் தம்பிக்கு ஒரு நாளைக்கு இரண்டு மாத்திரைகளை கொடுத்து அவன் வம்சத்துக்கே வழி இல்லாமல் பண்ணிடுவாள் என்று கோவம் தலைத்தூக்க இவ்வளவு நேரமாக செல்வியால் அடக்கி வச்சிருந்த கோவம் பிச்சிக்கிட்டு வெளியே வர செல்வியின் தலையில் கொட்ட  செல்வி “ஏன் கொட்டிநீங்க” என்று கேக்க வள்ளி என்ன சொல்வதென்று முழித்தாள்.

 

தன் கணவனையும் குடும்பத்தையும் தனது ஒரு விரலில் ஆட்டி வைக்கும் வள்ளிக்கு தெரியாதா? செல்வியை எப்படி சமாளிப்பதென்று.  ஆத்திரத்தில் தான் செய்த செயலை மனதால் தன்னையே  கண்டித்தவள் இன்முகமாகவே

 

“எனக்கு நீ வேற ரோஜா வேற இல்ல தமிழ். என் பொண்ணுக்கு என்ன நல்லது பண்ணணுமோ அதைத் தான் உனக்கும் பண்ணுவேன். இது பொண்ணுங்க மட்டும் சாப்பிட வேண்டிய மாத்திரை ஆம்பிளேங்க சாப்பிட கூடாது. ரோஜாவும் உன்ன மாதிரியே நா எது சொன்னாலும் புரிஞ்சிக்காம பேசிடுவா. அதான் ஒரு செக்கன் உன்ன ரோஜாவா நினைச்சி கொட்டிட்டேன். எனக்கு உன்மேல உரிமை இல்லையா?” என்று கண்ணை கசக்கி முகத்தை சோகமாக வைக்க

 

செல்வியின் அப்பாவி மனது வள்ளியை முழுதாக நம்பியது. “என்ன அண்ணி இப்படி சொல்லுறீங்க? உங்களுக்கு இல்லாத உரிமையா? நீங்க எப்போ வேணாலும் என்ன கொட்டுங்க” என்று தானாய் போய் தலையை கொடுக்க

 

“அப்படி வாடி என் வழிக்கு என் தம்பி பொண்டாட்டி… இல்ல இல்ல இன்னும் கொஞ்சம் நாளில் மாஜி  பொண்டாட்டியாக போன்றவளே” என்று மனதுக்குள் துள்ளிக் குதித்த வள்ளி செல்வியின் கையை பிடித்துக் கொண்டு

 

“மறக்காம டெய்லி ஒரு மாத்திரை காலைலபோடு.  போட மறந்தா மத்தியானம் போடு, இல்ல இரவுல போடு, விட்டமின் மாத்திரையினால எப்போ வேணா போடலாம். ஆனா மறக்காம ஒரு நாளைக்கு ஒன்னு போடு” என்று நங்கூரத்தை நச்சுன்னு செல்வியின் மண்டையில் படும் படியாக சொல்லி இறக்கினால் வள்ளி.

“ஆ சொல்ல மறந்துட்டேன்  யார் கண்ணிலயும் படும் படியாக பாட்டிலை வைக்காத ரொம்ப காஸ்டலி மெடிசின்” என்று சொல்ல ஆங்கில அறிவு கொஞ்சம் தெரிந்த செல்விக்கு “காஸ்டலி” என்ற வசனம் புரியாமல் குழம்ப

 

“பட்டிக்காடு  பட்டிக்காடு இவ கிட்ட போய் இங்கிலீசுல சொல்லிட்டேனே” என்று நெற்றியில் தட்டிக் கொண்டவள்

“இது கொஞ்சம் விலை அதிகம் யார் கண்ணிலயும் படாம பாத்துக்க அப்பொறம் அவங்களுக்கும் கொடுக்கணும்” என்று வள்ளி சொல்ல தனக்கு நல்லாகவே நீங்க சொல்லுறது புரிஞ்சது எனும் விதத்தில் செல்வி தலையை ஆட்டினாள்.

 

அதன் பின் செல்வியை அழைத்துக் கொண்டு ஐஸ் கிரீம் பலருக்கு  சென்ற வள்ளி வித விதமான ஐஸ் கிரீமை வாங்கி கொடுத்து

“நல்லா சாப்பிடுடி பட்டிக்காடு வீட்டுல போய் நீ இத பத்தி மட்டும் தான் பேசனு” என்று மனதுக்குள் சிரிக்க

 

“என்ன அண்ணி நீங்க ஒண்ணுமே சாப்பிடலயா” என்று தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த  கரண்டியால் அள்ளி அவள் புறம் நீட்ட

 

“சீ….. எச்சில் பண்ணத நீட்டுறா அறிவு கெட்டவ. மெர்னஸ் என்றா என்னனு தெரியாத கழுதைக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்த என்ன சொல்லணும்” என்று மனதால் செல்வியை திட்டியவள் இழுத்து வைத்த புன்னகையில் “நா டயட்டில” இருக்கேன் என்று சொல்ல

 

விடிந்ததிலுருந்து தூங்கும் வரை உடம்பை வளைத்து வேலை செய்யும் செல்விக்கு என்ன தெரியும் நகரத்து மக்கள் செய்யும் டயட்டை பற்றி

 

“அப்படினா” ஐஸ் கிரீம் நிறைந்த வாயால் கேக்க பார்ப்போருக்கு “ஹவ் கியூட்” னு சொல்ல வைக்கும் என்றால் சத்யா பார்த்திருந்தால் ஒரு ரொமான்ஸ் சீனையே நடத்தி முடித்திருப்பான்.

“இது வேறயா” என்று யோசித்தவள் “உடம்ப இப்படி வச்சிருக்க சில உணவுகளை நான் சாப்பிட மாட்டேன்” என்று வள்ளி தனது மெலிவான உடலை  காட்டி சொல்ல

 

ஹா ஹா ஹா என்று சத்தமாக சிரித்த செல்வி  “என்ன அண்ணி நீங்க நமக்கு பிடிச்சதை சாப்பிடாம இப்படி உடம்ப வச்சிருக்கணுமா? பிடிச்சதை சாப்பிட்டு நல்லா வியர்வை சிந்தி வேல பார்த்தா உடம்பு ஆரோக்கியமாக இருக்கும். அத விட்டுட்டு” என்று மீண்டும் வள்ளிக்கு பாடம் எடுத்தாள் செல்வி

 

செல்வியின் பேச்சை பொறுமையாக கேட்டிருந்த வள்ளி பாட்டிலை திறந்து ஒரு மாத்திரையை எடுத்து செல்விக்கு சாப்பிடும் படி சொல்ல

 

“இப்போ எதுக்கு அண்ணி? நாளையிலிருந்தே சாப்பிடுறேன்” என்று வள்ளியை ஏறிட

 

“ஆமா நீ என் தம்பியோட இன்னக்கி கூடிக்கொலாவி பிள்ளையை சுமந்துட்டா அப்பொறம் நா மாத்திரை வாங்கினதுல என்ன பிரயோஜனம்” என்று பல்லை கடித்தவள்

 

“அதென்ன நாளைக்கு இன்னைக்கே ஆரம்பிக்கலாம்” என்று வலுக்கட்டாயமாக மாத்திரையை வாயில் திணித்து தண்ணீரை புகட்டினாள் வள்ளி

 

வந்த வேலைதான் முடிந்ச்சிருச்சே என்று எழுந்துக்க கொண்டவள் “எனக்கு லேட் ஆச்சு நா வீட்டுக்கு போகணும் நீ தனியாய்  போய்க் கொள்வியா? இல்ல துணைக்கு நான் வரணுமா என்று கேக்க

 

ஐஸ் கிரீமை ஏக்கமாக பார்த்தவள் “நீங்க போங்க அண்ணி நான் போகிறேன்” என்று சொல்லி, மற்றவர்கள் அவளை வித்தியாசமாக பார்ப்பதை கண்டுக்காது   கப்பில் இருந்த ஐஸ் கிரீமை வழித்து வழித்து சாப்பிட்டவள். தம்பிகள் வந்தால் இங்கே கூட்டிக் கிட்டு வரணும் என்ற எண்ணத்துடனேயே வீடு நோக்கி நடக்கலானாள்.

 

போகும் வழி எங்கும் கண்ட மக்களிடம் நலம் விசாரித்து தன்னை அறிமுகப் படுத்திக்க கொண்டவள் தான் கிராமத்து பொண்ணு என்று நிரூபித்தாள்.  

 

  வீடு வந்தவள் வள்ளியின் எண்ணப் படி ஐஸ் கிரீம் சாப்பிட்டதை பெருமையாக பேச  மாத்திரையை மறந்தாள்.

 

தன்னை விட்டு விட்டு தனியாக ஐஸ் கிரீம் சாப்பிட்ட மாமன் மனைவியின் மேல் கடுப்பில் இருந்த தாமரை முகத்தை திருப்பிக் கொள்ள  கனகாம்பாள் அவளை அதட்டினார்.

 

கனகாம்பாளின் முகம் வாடி இருப்பதை கண்டு செல்வி “என்ன அத்த உங்களுக்கு ஐஸ் கிரீம் தரலனு கவலையா? மாமாக்கு சொல்லி நிறைய வாங்கி சாப்பிடலாம்” என்று ஆறுதல் படுத்த

 

“இவ ஒருத்தி” என்று கடுப்பான தாமரை “பாட்டி என்ன சின்னக் குழந்தையா ஐஸ் கிரீம் தரலனு அழ. எல்லாம் மல்லி, முல்ல சித்தீங்க மாமியார் சாருலதாவால் வந்தது” என்று பொரும

“யாரவங்க” என்று செல்வி யோசனையாக கேக்க

 

“சரிதான் போ கல்யாணம் பண்ண வீட்டுல இருக்குற மனுஷங்களையே தெரியல” என்று தாமரை நொடித்துக் கொள்ள

 

“ஐயோ” என்றானது செல்விக்கு “தான் என்ன கல்யாணம் பேசியா சத்யதேவை மணந்தேன்? இவங்க சொந்த பந்தங்களோட பொண்ணு பாக்க வந்து நா அவங்கள மறந்துட்டு மாதிரி பேசுறா?” என்று செல்விக்கு எண்ணம் தோன்ற புன்னகைத்தவள்

 

“எனக்கு தெரியாது என்பதால் தானே கேட்டேன். சொல்ல இஷ்டமிருந்தா சொல்லு இல்லாட்டி போ” என்று செல்வி முகம் திருப்ப

 

“இவ நம்மள விட பெரிய கேடியா இருப்பா போலயே கொஞ்சம் பிகு பண்ணி சொல்லலாம்னு பார்த்தா புள்ள படு உஷாரு. சொல்லலைனா என் மண்டை உடைஞ்சிடுமே” என்று தாமரை யோசிக்க

அவளின் முகத்தில் வந்து போன பாவங்களை கண்டு உள்ளுக்குள் சிரித்தவள் இன்னும் கொஞ்சம் நேரத்தில் அவளே வந்து சொல்வாள் என்று புரிய இரவு உணவை தான் சமைப்பதாக சமையல் அறையினுள் புகுந்துக் கொண்டாள்.

 

முல்லை மல்லியின் மாமியார் சாருலதா பேசியதை நினைத்து நினைத்து மனம் வருந்திய கனகாம்பாள் வாசலிலிருந்து சின்ன பூஜையறையில் முன் தஞ்சமடைந்தார்.

 

சமையலை முடித்துக் கொண்டு வந்த செல்வி கனகாம்பாள் கண்ணை மூடியவாறே கடவுளின் முன் அமர்ந்திருக்க “அப்படி என்ன அந்தம்மா சொல்லி இருப்பாங்க என்ற எண்ணம் தோன்றி” முதலில் அத்தைய பாக்கலாம் மாமா வந்தா என்ன ஏதுன்னு கேப்பாங்களே!” என்று கனகாம்பாளின் தோளை தொட்டு அவரை அழைத்தாள்.

 

“ரொம்ப நேரமா அமர்ந்த வாக்குலேயே இருக்கீங்க, கால் வேற மரத்து போய் இருக்கும் வாங்க அத்த” என்று கை பிடித்து தூக்கி விட்டவள் அவரை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்று அவரை கட்டிலில் அமர வைத்து காலுக்கு எண்ணெய் பூசி நீவி விட்டாள் செல்வி.

 

அவளின் கரிசனத்தில் கண்ணில் நீர் கோர்க்க “இப்படி பேசிட்டாங்களே! முகம் தெரியாத பொண்ணையும் விடாம இப்படியெல்லாம் எப்படி பேச வருமோ?” என்று புலம்ப

 

“என்னத்த அவங்க சொன்னதையே யோசிச்சிக் கிட்டு இருக்கீங்களா? அவங்க என்ன சொன்னாங்கனு எனக்கு தெரியாது, இருந்தாலும் சொல்லுறேன்.

 

“சில பேர் யோசிக்காம நம்ம மனசு நோகும் படியா பேசிடுவாங்க, நம்ம அதையே நினைச்சி வருந்திக் கிட்டு இருந்தா சரி வருமா? அவங்க சொன்னதுல உண்மையில்லன்னு நம்மளுக்கு தெரிஞ்சும் எதுக்கு வருந்தனும்? சொல்லுற அவங்க எங்கள கஷ்டப் படுத்த வென்றே சொல்லும் போது கேட்ட நாம அவங்க இஷ்டப் படி அழுது கிட்டே இருந்தா வெற்றி யாருக்கு? அவங்களுக்கு தானே.

நல்லவங்க சொன்னா கேட்டுக்கணும். இவங்கள மாதிரி  இருக்குறவங்க சொன்னா ஒரு காதுல வாங்கி மறு காது வழியா வெளியேத்தி எங்க வேலைய பாத்துட்டு போய்டணும். அது தான் நாம அவங்களுக்கு கொடுக்கும் பதிலடி. புரிஞ்சுதா இப்போ சிரிங்க” என்று சொல்ல

 

செல்வியின் வார்த்தையில் இருந்த உண்மையை புரிந்துக் கொண்ட கனகாம்பாளின் மனம் இலேசாக,  புன்னகைத்தார்.

அவரின் கண்களை துடைத்து விட்டவள் “வாங்க வந்து சாப்பிட்டுடு மாத்திரை போடுங்க” என்று அவரை அமர்த்தி சாப்பாடு பரிமாற

 

“நீ சாப்பிடல”

” நா  மாமா கூட சாப்பிடுறேன்” என்று தலையை குனித்தவாறே வெக்கப் பட்டு சொல்ல மனம் குளிர்ந்தார் கனகாம்பாள்.

 

தாமரையும் அமர்ந்து சாப்பிட்டு விட்டு செல்ல சத்யாவுக்கு, தனக்கும் சாப்பாட்டை எடுத்து வைத்தவள் சமையலறையை சுத்தம் செய்து விட்டு வந்து கனகாம்பாளுக்கு மாத்திரையை எடுத்து கொடுக்க நியாபகம் வந்தவளாக

 

“வள்ளி அண்ணி தந்த விட்டமின் மாத்திரை ரொம்ப விலை கூடியதாக சொன்னாங்க அத்த ரொம்ப சோர்வா இருக்காங்க அவங்களுக்கு ஒன்னு கொடுப்போம்” என்று வள்ளி கொடுத்து விட்டு சென்ற கருத்தடை மாத்திரைகளில் ஒன்றை கனகாம்பாளின் மாத்திரைகளுடன் கலந்து அவருக்கு கொடுத்தவள்

 

“இங்கிலீசுல என்னவோ சொன்னாங்களே” சில கணங்கள் யோசித்தவள் நியாபகம் வந்தவளாக “ஆ…. காஸ்ட்லீ ம்ம்… அதுதான்” என்று தனது கற்பூர புத்தியை பாவித்து அவ் ஆங்கில சொல்லை மனதில் பதித்தாள்.

 

தூங்குமாறு அவருக்கு போர்வையையும் போர்த்தி விட தாமரையும் தூக்கம் வருவதாக கனகாம்பாளோடு உறங்கி விட்டாள்.

 

டிவி யின் முன் அமர்ந்து அதை மாற்றி மாற்றி ஒன்னையும் பார்க்காது இருந்தவள்  எண்ணமெல்லாம் சத்யதேவின் மேலும், நேற்று நடந்த கூடலின் மேலும் இருக்க தன்னை கொஞ்சம் அலங்கரித்து கொண்டவள் நேரம் பதினொன்றை தாண்டியும் போய் கொண்டிருக்க யாரிடம் கேப்பது என்று குழம்பி அவனுக்காக காத்திருக்கலானாள்.

 

Advertisement