Advertisement

                                                            அத்தியாயம் 27
அறைக்கு வந்த சத்யா உறங்கும் செல்வியின் முகத்தை பாத்திருந்தான். அமைதியான சிறு குழந்தை போல் தூங்கும் அவளை காணக் காண “அக்காக்கு எப்படி மனசு வந்தது இப்படி ஒரு அநியாயத்தை பண்ண?” என்று கண்கலங்கியவன் தூங்கும் அவளின் காலை பிடித்து மன்னிப்பு கேக்கலானான்.
“செல்வி என்ன மன்னிச்சுடு டி. இத்தன வருசமா பாசம் என்ற போர்வையில அக்கா வேஷம் கட்டுறாங்கனு தெரியாம நீ சொன்னதை நம்பாம போய்ட்டேன். உனக்கு ஏதாவது ஆகி இருந்தா, சாத்தியமா நானும் செத்திருப்பேன் டி” என்று கண்ணீர் வடிக்க அவனின் கண்ணீர் செல்வியின் பாதம் நனைக்க ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவள் விழித்து
“என்ன மாமா பண்ணுறீங்க” என்று விளக்கை போட்டவள் அங்கே சோர்ந்து போய் இருக்கும் சத்யதேவை கண்டு பதறியவள் “என்ன மாமா அச்சு செல்வராஜ் அண்ணனுக்கு ஏதாச்சும்…” என்று எழுந்தமர்ந்து அவனை தாங்க அவளை கட்டிக்கொண்டு அழுது கரைந்தவன் ஒருவாறு வள்ளியை போலீஸ் அரெஸ்ட் பண்ணதை சொல்ல
அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற செல்வி “என்ன மாமா சொல்லுறீங்க? அவங்களா இப்படியெல்லாம் பண்ணாங்க?”
“உன்ன கொல பண்ண பாத்தவங்களுக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லையே!” என்று அவனை அணைத்து கொள்ள, அவன் பேசியது நியாபகத்தில் வந்து அவனை தள்ளி விட்டவள்.
“ஆமா நான் நேத்து வந்தவ தானே! நான் பொய் மட்டும் தான் சொல்லுவேன். உங்கக்கா உங்கள மடியில் போட்டு சீராட்டி பாராட்டி வளர்த்து  விட்டங்கல்ல அவங்க சொல்லுரதத்தான் நீங்க நம்புவீங்க” என்று முகம் திருப்ப
அவளின் செய்கையில் புன்னகைத்தவன் “நீ பொய் சொல்லுறான்னு நான் நினக்கல்ல டி. பதினெட்டு வயசு சின்ன பொண்ணு, உன் பாட்டி கூட சேர்ந்து கண்ட கண்ட டிவி சீரியல் எல்லாம் பாத்து அக்கா ஏதாவது உன் கிட்ட பேசப் போய் அக்காவ வில்லியா கற்பனை பண்ணி சொல்லி இருப்பியோனு” அவள் முறைத்த முறைப்பில் அமைதியானான் சத்யதேவ்.    
“ஆமா உங்கக்கா தேவாத்மா பொய் சொல்லவே மாட்டாங்க, வள்ளிய வில்லியா நான் பில்டப் பண்ணனுமா? என்ன வார்த்த மாமா சொன்னீங்க இடைல வந்தவனு? அப்படி சொல்லலாமா? முல்லு மாதிரி நெஞ்ச குத்திகிட்டே இருக்குது மாமா. இடையில வந்தவள் தான் மாமா, ஆனா உங்க கூட கடைசி வரைக்கும் வாறவளும் நான் தான். அத மட்டும் நல்லா மனசுல பதிச்சு வச்சிக்கோங்க, திரும்ப இப்படி ஏதாச்சும் பண்ணுங்க உங்க மேல தாமரைய {ஆடு}  ஏவி விடுவேன்” என்று எச்சரித்து விட்டு வள்ளியை எப்படியெல்லாம் படுத்தினாள் என்று சொன்னவள், அவன் சொன்னதில் “பதினெட்டு வயசு” என்பது நியாபகத்தில் வந்து அதிர்ச்சியடைந்தவளாக “உங்களுக்கு யார் சொன்னா எனக்கு பதினெட்டு வயசுன்னு? வயச காரணம் காட்டி என்ன ஒதுக்கிட மாட்டீங்களே! என்று கண்ணில் பயத்தை தேக்கி வச்சி கேக்க
“முண்டகண்ணி முண்டகண்ணி என்னமா பயப்படுறா?” என்று அவளின் பயத்தை கண்டு சிரிப்பு வந்தாலும் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு “ஆமா எதுக்கு என் கிட்ட உன் வயச மறச்ச” என்று உறுத்து விழிக்க
அவனின் உதட்டோரம் வழியும் குறும்புப் புன்னகையை காணத்தவறியவள்  கண்ணில் இருந்த கோவத்தை கண்டு தொண்டை அடைக்க எச்சில் கூட்டி விழுங்கியவாறே! “மறைக்கணும்னு நினைக்கல நீங்க கேட்கவும் இல்லையே!” என்று அவனின் கண்ணை பார்க்க பயந்தவாறே தலை குனிய குரலும் மெதுவாகவே ஒலித்தது.
அவளின் முகத்தை நிமிர்த்தியவன் “இங்க பாரு செல்வி, என்ன பாருன்னு சொல்லுறேன்ல, நிச்சயமாக நம்ம கல்யாணம் இப்படி திடீருனு நடக்கலைனா உன் வயச கேட்டு உன்ன வேணான்னு தான் சொல்லி இருப்பேன்” என்று சொல்ல கண்கள் கலங்க அவனை ஏறிட்டாள் செல்வி
அவளின் முகத்தை இரு கைகளிலும் தாங்கியவன் மூக்கோடு மூக்கு உரசியவாறே “உனக்கு நான் எனக்கு நீனு கடவுள் எப்பயோ முடிவு பண்ணிட்டான் டி. என் குணம் தெரிஞ்சி தான் நம்ம கல்யாணத்த தடாலடியா நடத்திட்டான். இல்லனா எனக்கு இந்த அழகான தேவதை கிடைக்காமலேயே போய் இருக்கும்” என்று சொல்ல முகம் மலர்ந்தவள் அவனை இறுக்கி அனைத்துக் கொள்ள
“என்ன இன்னும் நீ சின்ன பொண்ணு குழந்தை விசயத்த கொஞ்சம் தள்ளி போட்டு இருக்கலாம்” என்று சொல்ல அவனை மொத்த ஆரம்பித்தவள்
“பாப்பாங்கள பாத்துமா இப்படி பேசுறீங்க?  பேசுவீங்களா? பேசுவீங்களா?” என்று அடிக்க அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்
“இல்லடி நா அந்த அர்த்தத்துல சொல்லல, கொஞ்சம் நாள் கழிச்சு அத பத்தி யோசிக்கலாம்னு”
“எப்போ? எனக்கு இருவத்தஞ்சு வயசு வரும் போதா? இல்ல உங்களுக்கு ஐம்பது வயசு வரும் போதா?” என்று முகம் தூக்க அவளிடம் சரணடைந்தவனாக
“அதனால தாண்டி கடவுள் பாபங்களையும் அனுப்பி வச்சிருக்கான், என்ன நீ ரொம்ப கஷ்டப்பட்டுட்ட” என்று முகம் வாட அவனின் கவலையை பொறுக்காது
“எனக்கு தான் இப்போ சரியாகிருச்சே! என் மாமா கவலைப்படலாமா?” என்று அவனின் நாடியை பிடித்து ஆட்ட அவளின் செயலில் கவரப்பட்டவனாக அவளின் கன்னத்தில் முத்தமிட்டான் சத்யதேவ்.
“ஆமா உனக்கு கருத்தடை மாத்திரைகளை தந்தது அக்கானு சின்னக்கா சொன்னாங்க, அதையும் நீ என் கிட்ட இருந்து மறச்சிட்டியே”  முகம் இறுக சத்யா சொல்ல
“சொல்லி இருந்தா மட்டும் உடனே நம்பிடவா போறீங்க”  என்று முகத்தை சுருக்கியவாறே முணுமுணுக்க அது சத்யாவின் காதில் விழுந்து தொலைக்க அவளை பாவமாக பார்க்கலானான்.
“அது வந்து மாமா ரோஜாவும், சின்னண்ணியும் சொல்ல வேணான்னு சொல்லிட்டாங்க” என்று இழுக்க
“ஏன் செல்வி அக்கா மேல உள்ள பாசத்தால் நீ சொல்லுறது பொய்னு ஆகிடாதே. நீ சொல்லி இருந்தா அவங்கள கண்டிப்பா கண்காணிச்சிருந்திருப்பேன்” என்று சொல்ல
“அடப் போங்கப்பா உங்க அக்கா தம்பி ஆட்டத்துக்குள்ள நான் வரல”
“ஏன் வரல?”
“ஆ எல்லாம் தெரிஞ்ச ரோஜாவே அன்னைக்கி உண்மைய சொல்லல, உங்கம்மா கிட்ட சொன்னப்போ, பிறகு பேசலாம்னு சொல்லிட்டாங்க, நீங்க மட்டும் என்ன பண்ணிட போறீங்க? வேணும்னா என்ன ரெண்டு அடி அடிச்சி வீட்டை விட்டு வெளில போனு சொல்லி இருப்பீங்க” கண்ணை உருட்டி உருட்டி அவள் சொன்ன விதம் மனசை பறிக்க அவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டவன்
“ஏண்டி நீ கருத்தடை மாத்திரைகளை பாவிக்கிற னு சொன்னப்போ கூட உன்ன அடிச்சேனா? என்ன கொடுமைக்காரனாகவே சித்தரிக்கிற” என்று அவளின் கன்னத்தை கடிக்க
“வலிக்குது மாமா” என்று சினுங்க செல்வராஜின் நிலையையும், கனகாம்பாள் கூறியதையும் சத்யா கூற
“ஓ…” என்று இழுத்தவள் “என் மனநிலையை மட்டுமே யோசிச்சிட்டேனே! மத்தவங்க மனச புரிஞ்சிக்காம விட்டுட்டேன்” என்று முகம் வாட
“அதுக்குதான் சொன்னேன் உனக்கு வயசு கம்மி, பக்குவம் பத்தலன்னு” அவன் சொன்ன தொனியில் கடுப்பானவள்
“ஆமா இவரு பெரிய பிஸ்னஸ் மேன், கழுத வயசாகுது, கூமுட்டை கூமுட்டை சொந்த அக்காவே நல்லா ஏமாத்தி இருக்காங்க அத கண்டு புடிக்க தெரியல, எதுக்கெடுத்தாலும் சின்ன புள்ள மாதிரி நடத்திக்கிட்டு. கல்யாணம் பண்ணி ஒன்னுக்கு ரெண்டா புள்ளய பெத்து வச்சிருக்கேன் இன்னமும் வயச பத்தி பேசி கிட்டு லூசு மாமா” என்று கண்ட மேனிக்கு சத்யாவை அர்ச்சனை செய்ய  
அவள் திட்ட ஆரம்பித்ததும் திகைத்தவன் அவள் சொல்வதை கேட்டு சிரிப்பு வர “செல்வி இப்படி முணுமுணுக்குறதா நெனச்சி சத்தமா சொல்ல கூடாது” என்று வம்பிழுக்க
“உங்க காதுல விழட்டுமேனு தான் முணுமுணுத்ததே” செல்விக்கும்  சிரிப்பு வர
“நல்ல பேச கத்து கிட்ட, ஓவரா பேசுற இந்த வாய்க்கு சரியான தண்டனையை கொடுத்துடலாமா” என்று செல்வியின் உதடுகளை சிறையெடுத்தான் சத்யதேவ். நெடுநாளைக்கு பிறகு கிடைத்த முத்தத்தில் கரைந்தாள் செல்வி.
பிரச்சினைகளை மாத்திரமே சமாளித்த சத்யதேவின் வாழ்க்கையில் வந்த வசந்தம் செல்வி, அவளின் அருகாமையில் தன்னையே மறப்பவன், கவலைகளை மறந்து அவளில் மூழ்கத் தொடங்கினான்.
  *******************************************************************
எவ்வளவு சமாதானப் படுத்தியும் அழும் ரோஜாவை பார்த்தவாறே தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான் மித்ரன். அவனின் நினைவுகள் பின்னோக்கி செல்ல
ரோஜாவை கண்ட நாள் முதலே அவள் மேல் காதல் தான், அவளின் பார்வையும் அவனை காதலிப்பதாகவே பறை சாற்ற  அவன் சாதாரண வர்க்கத்தில் பிறந்து வளந்தவன். அன்னை குடும்பத்த தலைவியாக இருக்க தந்தையின் மாதச்சம்பளமே எல்லாவற்றுக்கும் என்றிருக்க, இரண்டு தங்கைகளை கரை சேர்க்க வேண்டிய கடமையும் அவனதே. இந்த நிலைமையி காதல் மட்டும் தான் குறை என்று தன்னையே திட்டிக் கொண்டவன்,
ஒருவருடமாக பின்னால் சுற்றி விட்டு நான் காலேஜ் முடிஞ்சி போன உடன் வேற எவனயாச்சும் கரெக்ட் பண்ணுவா, இல்ல வீட்டுல பாக்கும் மாப்பிளையை கல்யாணம் பண்ணிக்குவா, உன்ன மாதிரி அழகான பொண்ணுங்களுக்கு இதெல்லாம் ஒரு விளையாட்டு” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவன் அன்றிலிருந்து ரோஜாவை ஏறெடுத்தும் பாக்கவில்லை.  
அன்று ரோஜாவை சத்யதேவுடன் காபி ஷாப்பில் பார்த்த போது சத்யதேவுடன் அவள் உரிமையாக நடந்துக்க கொள்வதை கண்டு, சத்யதேவை இன்டெர்வியுவில் சந்தித்திருந்ததால்  ஒரு வேல நிச்சியக்கபட்டு இருக்கலாம்,  “சே மிஸ் பண்ணிட்டேன்” என்று புலம்பலானான்.
அபிநந்தனிடம் வேலைக்கு சேர்ந்ததிலிருந்து அவன் மற்றவர்களின் தொழிலை கெடுக்க செய்யும்  அநியாயங்களை கண்டு “இந்த காலத்துல எவன் நியாயமா சம்பாதிக்கிறான், எல்லாருமே காலவாரி முன்னுக்கு வரத்தானே காத்துக் கிட்டு இருக்கிறானுங்க, என்று புலம்பியவன், இந்த வேலை தனக்கு எவ்வளவு முக்கியம் என்றறிந்து பல்லை கடித்து பொறுமை காக்க அபிநந்தனோ மித்ரனை அவனின் வலது கையாக இருத்திக் கொண்டான்.
சத்யதேவின் பாக்டரியை வாங்க முயற்சி செய்து சத்யதேவ் மறுத்ததால்  சத்யதேவின் மேல் நந்தன் வன்மத்துடன் இருக்க அவனின் தொழிலை முடக்க செய்யும் ஒவ்வொன்றையும் முறிக்க மித்ரன் முன்னின்றான். அதற்க்கு காரணம் சத்யதேவை ரோஜா திருமணம் செய்ய இருப்பது மாத்திரமன்றி சத்யதேவின் நற்குணமும் தான்.
ரோஜாவின் புகைப் படத்தை காட்டி சத்யதேவின் அக்கா மகள் என்றும் அவளை காதலிக்குமாறு நடிக்கும் படி நந்தன் சொல்ல கரும்பு தின்ன கூலியா? என்றதோடு “சார் ஒரு வேல அவங்களுக்கு கல்யாணம் நிச்சயிக்க பட்டிருந்தால்?” என்று நந்தனிடம் கேக்க
“இல்ல அக்கா பொண்ணுங்கள கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டான்” தரவா விசாரிச்சிட்டேன், நீ பக்காவா மூவ் பானு என்று நந்தன் சொல்ல சிறகில்லாமலேயே வானில் பறந்தான் மித்ரன்.
அதன் படி ரோஜாவின் முன் போய் நின்றவனுக்கோ ரோஜா ஓகே சொல்ல இருவரும் காதல் கடலில் மூழ்கினர்.
சத்யாவின் கப்பலில் செல்லும் சரக்கை கடத்த நந்தன் நினைக்க அவனை ஏமாற்றி விட்டு சத்யாவுக்கு உதவியதும் மித்ரன்!  நந்தனின் சதிகளை முறியடித்தாலும் சத்யாவிடம் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று மித்ரன் நினைத்தாலும், நந்தன் கண்டு பிடித்தால் என்ன மாதிரி விளைவுகள் வருமோ என்றஞ்சி அவனை சந்திக்க முயற்சி செய்ய வில்லை
தனது எல்லா முயற்சிகளிலும் தோல்வியுற்ற நந்தன் கொத்தித்து “அந்த சத்யாவோட மனைவிய கடத்தி பாக்டாரிய எழுதி வாங்குறேன்” என்று கத்த
அவனை அமைதி படுத்த மித்ரன் “சார் அப்படிப் பண்ணா அவன் முதல்ல போலீசுக்கு தான் போவான்”
“அப்போ என்ன பண்ணலாம்? மித்ரா சொல்லு என்ன பண்ணலாம்?” என்று வெறி பிடித்தவன் போல் கத்த
“ஒரு வழி இருக்கு, சரிவருமா” என்று அவனுடைய ஐடியாவை  விவரிக்கலானான்.
“அந்த பொண்ணு ரோஜா தான் என்ன லவ் பண்ணுறால்ல? அவ அப்பா செல்வராஜுக்கும் அந்த பாக்டரில பாதி பங்கு இருக்கு கல்யாணம் என்ற பேர்ல சீதனமா பாதியையாவது வாங்கி உள்ள நுழைஞ்சிடலாம்” என்று சொல்ல
“அப்போ மீதி”
“பொண்ணு வாழ்க்கைல பிரச்சினை வந்தா தானா எழுதி கொடுத்துட்டு போறாங்க” என்று மித்ரன் சொல்ல நந்தனுக்கு அதுவே சரியென தோன்ற அவனை சத்யதேவிடம் திருமணம் பேச அனுப்பி வைத்தான்.
சத்யதேவை சந்தித்தவன் ரோஜாவை காதலிப்பதாக சொல்லி விட்டு தான் வேலை செய்வது நந்தனிடம் என்றும், செல்வராஜுக்கு  தன்னை தெரியும் என்று சொல்லவும் “நான் பாத்துக்க கொள்கிறேன்” என்று சத்யதேவ் சொன்னதும் அவனை ஆச்சரியமாக பார்க்க
“என்ன மித்ரன்” என்று சத்யா கேக்க
“இல்ல சார் நந்தன் சார் கிட்ட வேல பாக்குறேன் என்றதும் எங்க ரோஜாவ எனக்கு கட்டி கொடுக்க மாட்டீங்களோனு” என்று இழுக்க
“உங்கள பத்தி எனக்கு கொஞ்சம் தெரியும் மித்ரன், நேர்மையானவன்னு தான் சொன்னாங்க, என் அக்கா பொண்ணுங்க தப்பானவங்கள லைப் பாட்னரா கண்டிப்பா செலெக்ட் பண்ண மாட்டாங்க, நீங்க எப்படி இவ்வளவு நாளா நந்தன் கிட்ட வேல பாக்குறீங்க”  என்று சத்யா கேக்க
நந்தன் விரிக்கும் சதி வலையையும் அதை அவன் தடுத்ததையும் சொல்லி விட்டு “எதுக்கும் நீங்க கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்க சார்”
“நான் இருக்குற பிஸில கோவில் கோவிலா அலையிறவன் கிடையாது, ஆனாலும் எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். அவனோட ஒவ்வொரு செயலுக்கும் ஏதோ அர்த்தம் இருக்கும்னு நான் நம்புறவன், அவன் தான் எனக்கு உதவி செய்ய உங்கள அனுப்பி இருப்பான்” என்று புன்னகைக்க ரோஜா உள்ளே வந்ததால் அவர்களின் பேச்சு தடைப்பட்டது.
ரோஜா வந்தபின் “நந்தனை பற்றி ரோஜாவுக்கு தெரியும் சார்”  என்று மித்ரன் சொல்ல
பாக்டரியை கேட்டு நந்தன் மிரட்டி சென்றதில் செல்வராஜுக்கு மைல்டு அட்டாக் வந்தாய் சத்யா சொல்ல ரோஜா பதறினாள்.
{இதுதான் கியூட்டிபாய்ஸ்  ரோஜா அன்று ஹாஸ்பிடலில் அமைதியாக இருந்ததும் காரணம்}
“மாமா நான் சொன்னா சரி என்று சொல்லுவாரு, உங்க கல்யாணத்த பண்ணி வைக்க வேண்டியது  என் பொறுப்பு” சத்யதேவ் சொன்னால் செய்வான் என்ற நம்பிக்கையில் மித்ரன் கிளம்பினான்.   
ஒருநாள் அபிநந்தன் மித்ரனுடன் காப்பில் ஷாப்பில் நுழைந்த போது அங்கே அமர்ந்திருந்த வள்ளியை கண்டு “அது யார் தெரியுமா? சத்யதேவுடைய  அக்கா, சத்யதேவின் மனைவியை இவங்க கொள்ள பார்த்ததாக ஹாஸ்பிடல்ல ஒரு பேச்சடிப்படுத்து வா பேசிப்பார்க்கலாம்”  நந்தன் சொல்ல
“பாஸ் உங்களுக்கு எப்படி இந்த மாதிரியான விஷயங்கள் கிடைக்குது” மித்ரன் யோசனையாக கேக்க
“சத்யதேவின் ஒவ்வொரு அசைவும் என் கண்ண விட்டு தப்பாது” என்றவன், வள்ளியின் முன் அமர, மித்ரன் அவர்கள் பேசுவதை தனது அலைபேசியில் பதிவு செய்யலானான்.
“ஹாய் ஐம் அபிநந்தன் கங்கா இண்டஸ்ட்ரி எங்களுடையது, கங்கா இஸ் மை வைப்” என்று தன்னை நந்தன் அறிமுகப்படுத்திக்கொள்ள
ஒரு பெரிய பணக்காரனே தன்னிடம் பேசும் போது அவனிடம் ஆசிரம நிதுனு எவ்வளவாவது கறந்துடனும் என்ற எண்ணத்துடன் தன்னை அறிமுகப் படுத்தியவள் ஆசிரம அட்டையையும் காட்டினாள்.
“அப்பொறம் மிஸ்டர் செல்வராஜ் எப்படி இருக்குறாரு? உங்க பொண்ண சத்யாவுக்கு கட்டி கொடுக்க போறதா சொன்னாரு கல்யாண சாப்பாடு எப்போ போடுவீங்க” என்று வள்ளிக்கு வலை விரிக்க
“ஓஹ் பெரிய பிசினஸ்மேன் என்பதால சத்யாவையும், மாமாவையும் தெரியும் போல வீட்டு விஷயங்களையும் பேசி இருக்காங்க” என்று நினைத்தவள்
“அதை ஏன் கேக்குறீங்க ஏன் தம்பி ஒரு கிராமத்துகாரியை கல்யாணம் பண்ணி கிட்டு வந்துட்டான்” என்று சத்யா, செல்வியின்  கல்யாணம் எவ்வாறு நடந்தது என்று வள்ளி சொல்ல
“அடப்பாவமே! செல்வராஜ் மனசு ஒடஞ்சி போய் இருப்பாரே! ஏதாவது பண்ணி அந்த பொண்ண துரத்தி விட்டிருக்கணும்” என்று சொல்ல முகம் மலர்ந்த வள்ளி தான் செய்ததெல்லாம் சொல்ல மித்ரனோடு, நந்தனும் அதிர்ச்சியடைந்தான்.
“அவளை துரத்திட்டு என் பொண்ணு ரோஜாவ சத்யாக்கு நான் கட்டிவைப்பேன்” என்றவள் நந்தனிடம் சில லட்சங்களை கறந்த பின்னே விடை பெற்றாள்.
தான் அதி புத்திசாலி என்று நினைத்து கொண்டிருந்த வள்ளி நந்தனிடம் ஏன் உண்மையை சொன்னால் என்பது அவளுக்கு மட்டுமே வெளிச்சம். தன்னுடைய அழிவு நெருங்கும் போது வள்ளியின் புத்தி மங்கியதோ?
அவள் கொடுத்த வாக்கு மூலம் தெளிவாக மித்ரனின் போனில் பதிவாகியது.

Advertisement