Advertisement

                                                       அத்தியாயம் 9

அதோ இதோன்னு செல்வியை எல்லாருமா சேர்ந்து பேசிப் பேசியே சமாதனப் படுத்தி ஒரு வாறு சத்யாவுடன் சென்னை செல்ல சம்மதித்திருந்தாள். தம்பிகளை கட்டிக்க கொண்டு அழுதவளை ஒருவாறு சமாதானப் படுத்தி நாளைய பயணத்துக்கு அவளை தயார் படுத்தியிருக்க “தாமரை” என்று கத்தியவாறே அவள் ஓட

“நம்ம தாமரை உள்ள இல்ல இருக்கா இவ எங்க வெளிய ஓடுறா” என்று சத்யதேவ் அவள் பின்னாடி ஓட  வேலியோரமாய் மேய்ந்துக் கொண்டிருந்த ஆட்டுக்கு குட்டியை தூக்கிக் கொஞ்சியவள் அதனுடன் சோககீதம் வாசிக்கலானாள்.

“பாத்தியாடி உன்ன விட்டு நா போய்தான் ஆகணுமாம், தம்பீங்கள விட்டுடு  எப்படிடி நா போவேன். இது எந்த ஊரு நியாயம் பொண்ணுங்க மட்டும் கல்யாணம் பண்ணா வீட்டை விட்டு போய்டணுமாம், ஏன் ஆம்பிளைங்க அவங்க வீட்டை விட்டு பொண்ணுங்க கூட வந்து தங்கமாட்டாங்களா? தம்பீங்க படிப்புல கெட்டிதான் ஆனா பாரு ஸ்கூல் போக எந்திரிக்கத்தான் கொஞ்சம் கஷ்டம். நா பொறுமையா எழுப்பி விடுவேன், இதுவே பாட்டினா பொறுமையா எழுப்புவாங்களா? கிள்ளியல்ல எடுப்பாங்க, பாவமில்லை அவனுங்க, அந்த ரோஜா வேற வீட்டுக்கு அடங்காம ஊரு பூரா சுத்தித் அலைவா நா போய்தான் தேடி கண்டு பிடிக்கணும். பாட்டிக்கும் வயசாகிருச்சு ரொம்ப தூரம் அலைய முடியாது, நா இல்லனா என்ன பண்ணுவாங்க நீ சொல்லு, செம்பருத்தி பாலு யாரு கறப்பா? வீடு வீடா போய் பால் கொடுக்கணும், யாராச்சும்  முட்ட கேட்டா கொடுக்கணும், காச சரியா வாங்கணும், பால் கணக்கெல்லாம் எனக்கு தானே தெரியும், நா போய்ட்டா இதெல்லாம் யாரு செய்வாக? என் குடும்பத்த நா தானே பாக்கணும், தம்பீங்கள பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்கணும் பாட்டி புரியாம பேசுறாங்களே! எனக்கு அழுக அழுகையா வருதுடி” ஆட்டுக்கு குட்டியை அணைத்ததிலிருந்து தொண்டை கமர சொல்லிக் கொண்டிருந்தவள் உடைந்து அழ ஆரம்பித்தாள்.

 

அவள் பின்னாடி வந்த சத்யதேவுக்கோ அவளின் மனநிலை நன்கு  புரிந்தது அக்கா மரகதவள்ளி முருகவேலை கல்யாணம் பண்ணி சென்ற  போது தமிழ்வாணன் போல் சத்யாவும் முருகவேலை முறைத்துக் கொண்டு திரிஞ்சவந்தான். என்னமோ அக்காவை தன்னிடமிருந்து பிரிக்கவந்த எதிரியாகவே பார்க்கலானான். அதற்க்கு வலுவான காரணமாக அமைந்தது மரகதவள்ளி தீபாவளி, பொங்கல் என்றாலும் மாலையில் முருகவேலோடு வந்து அவனுடனையே சென்று விடுவதும் வந்ததிலிருந்து பொண்டாட்டியை விட்டு ஒரு இன்ச் ஆவது நகராமல் அவளுடனேயே இருப்பதும் தன் அக்காவிடம் தனித்து பேசக்கூட முடியாமல் போகவே முருகவேலின் மேல் கொஞ்சம்  அதிதிருப்தி ஏற்பட்டது. கோமளவள்ளியால் தான் முருகவேள் இப்படி நடந்து கொள்கிறான் என அறியாத சத்யதேவ் செல்வராஜ் பல முறை சொல்லியும் முருகவேலிடம் உதவி கேக்க மறுத்து விட்டான். முருகவேளுக்கு இருக்கும் வசதிக்கு சத்யாவின் கடன் பிரச்சினை ஒரு விஷயமே இல்லை. இருவரும் வெவ்வேறு துறைகளில் இருப்பதாலும் சத்யா கடன் வாங்கியவர்களிடம் நேர்மையாக நடந்துகொள்வதாலும், முல்லை, மல்லிகை கல்யாணச் செலவும்  அவர்களின் மாமியார் சாருலதா சொன்ன  எல்லாவற்றையும் நிறைவேற்றியதால் முருகவேளுக்கு சத்யாவின் கடன் பிரச்சினை தெரியாமலேயே போனது.

 

தனது மனையாளின் மனக்குமுறலை கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு இந்த பிரச்சனைகளை சரிசெய்யாமல் அவளை அழைத்து சென்றால் நிச்சயமாக அவள் அவனுடன் சந்தோசமாக மனமொத்து வாழ மாட்டாள் என்று நன்கு தோன்றியது. அது போலவே மாலையில் வந்த தமிழ்வாணனும் பேசிவைக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கலானான்.

*****

“அம்மா உங்க கூட கொஞ்சம் பேசணும்” சத்யதேவ் தாயின் அறையினுள் புக

“சொல்லு சத்யா” நாளைக்கு சென்னை செல்ல பையில் துணியை அடுக்கிக் கொண்டிருந்தவர் அவனை கண்டு புன்னகைத்தவாறே”உன் முகமே சொல்லுது ஏதோ பெரிய விஷயம் உன் மண்டைய போட்டு கொடையுதுனு, ஆபீஸ் விஷயமென்றால் என் கிட்ட சொல்ல மாட்டியே! செல்வராஜ் மாப்பிள்ளை கிட்ட தான் சொல்லுவ அப்போ இது வீட்டு பிரச்சினை” என்றவாறே அறையில் இருந்த கதிரையில் அமர்ந்தார்.

இதுதான் அம்மாக்களின் சிறப்பு பிள்ளைகளின் முகத்தைக் கொண்டே,  நடத்தையை கண்டே அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று சரியாக கணித்து விடுவார்கள். அவர் அருகிலுள்ள கதிரையில் அமர்ந்தவன்.

“அம்மா செல்வி கிராமத்துல வளந்தவ உடனே அங்க வந்து எங்க கூட பொருத்தணும்னு இல்லையே!”

“இவன் என்ன சொல்ல வாரான். மருமகளை இங்கயே விட்டுட்டு போகணும்னு சொல்லப்போறானோ?”

“அவ சந்தோசமே இங்கதான் இருக்கு தம்பீங்கள விட்டுட்டு வர முடியாதுனு எப்படி அழுதா நீங்க பாத்திங்கல்ல”

“பொண்ணா பொறந்தா, கல்யாணம்னு ஒன்னு நடந்தா குடும்பத்த விட்டுட்டு போய் தான் ஆகனும் பா” கனகாம்பாள் விரக்தியாய் சொல்ல அது தான் குடும்பத்தை விட்டு வந்ததை நினைத்து சொன்னாரா? தன் இளைய மகள்கள் கல்யாணம் பண்ணி சென்று பொங்கல், தீபாவளிக்கு கூட வராமல் இருக்கும் விரக்தியா? அவரே அறிவார்.

“அம்மா நா சொல்ல போறத கேட்டுட்டு நீங்க முடிவு பண்ணுங்க” சத்யதேவ் இது தான் சரியான முடிவு அன்னை என்ன சொல்வாரோ என்று யோசனையாகவே சொல்ல மகன் தவறான எந்த முடிவும் எடுக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் அவர் அமைதிக்கு காக்க சத்யதேவ் தொடர்ந்தான்.

“செல்விக்கு இங்க பாட்டியும் ரெண்டு தம்பீங்களும் இருக்காங்க அவ பால் வியாபாரம் பண்ணி, கிடைக்கிற எல்லா வேலையும் பார்த்து அவங்கள படிக்க வச்சிட்டு இருக்கா, அவ எங்க கூட வந்தா அவங்க வருமானத்துக்கே வழியில்லாம போய்டும்”

அவன் பேச்சில் பதட்டமடைந்தவர் “இப்போ நீ என்ன சொல்ல வர அவ தம்பீங்க படிப்பு முடியும் வர இங்க இருக்க சொல்ல போறியா” செல்வி வரமுடியாது என்று போட்ட ஆட்டம் மகனின் வாழ்க்கையை நினைத்து அஞ்சி இப்படி கேட்டு விட

“சரியா போச்சு அவளை இங்க வச்சிட்டு நா யார் கூட குடும்பம் நடத்த” என்று முணுமுணுத்தவன்.

“அது வந்துமா அவங்க எல்லாரையும் அங்க கூட்டிட்டு போய்டலாம்னு  தோனுது செல்வி மட்டுமில்ல அவ குடும்பமும் என் பொறுப்புதானே” என்று மெதுவாக  சொல்ல

“நா இத யோசிக்கவே இல்லடா நீ ஆபிஸ் போய்ட்டா அந்த வீட்டுல நா மட்டும்…. எவ்வளவு நேரம் தான் டிவி பாக்குறது. மருமகனு ஒருத்திவந்தா ஜாலியா சண்டபோடலாம்னு பாத்தா என்ன அந்த பார்வதி அத்த கூட கோர்த்து விட பாக்குறியே இது நியாயமா? தர்மமா?” என வந்த சிரிப்பை அடக்கி புடவை முந்தானையால் மூக்கை துடைக்க  

அவரின் கேலியை புரிந்துக் கொள்ளாமல் “கல்யாணம் பண்ணி ஒருநாள் கூட ஆகல, வாழ்க்கையை கூட ஆரம்பிக்கல இதுல மருமக கூட சண்டை போட முடியலன்னு மூக்க சிந்தூரங்க” என கடுப்பாக ஒன்னும் சொல்லாமல் அமைதி காத்தான்.

“ஏன் டா நீ இப்படி இருக்க அம்மா நான் கேலி பேச கூடாதா” சிரித்தவாறே சொல்ல அப்பா இறந்த பின் இன்று தான் சந்தோசமாக கேலி செய்யும் அன்னையை புதிதாய் பார்த்தான் சத்யதேவ்.

******

 

“என்னது நா பட்டணத்துக்கு வரணுமா? முடியாது முடியாது பொறந்ததிலிருந்தே இந்த ஊர்ல தான் இருக்கேன். அங்கேயெல்லாம் வந்து என்னால இருக்க முடியாது” பார்வதி பாட்டி முறுக்கிக் கொள்ள

சத்யாவுக்கோ “ஐயோ” என்றானது.

சத்யதேவ் எடுத்திருந்த முடிவு இதுதான் வேந்தனையும், வாணனையும் சென்னையிலுள்ள நல்லதொரு பாடசாலையில் சேர்த்துவிடுவதும் தங்கள் வீட்டிலேயே அவர்களை தங்க வைப்பதும், அப்படி பெண் கொடுத்த வீட்டில் தங்க முடியாது என்று பாட்டி மறுத்து விட்டால்? வீடு பக்கத்திலேயே ஒரு வீட்டை பார்த்து தங்கவைப்பது, செல்வியின் பிராணிகளை இப்போதைக்கு அங்கு கொண்டு செல்ல முடியாது வீட்டையும், பிராணிகளையும் பராமரிக்க இரண்டு பேரை வேலைக்கு வைப்பதென்றும், கொஞ்சம் நாள் கழித்து பிராணிகளை வளர்க்க இட வசதியுள்ள வீடா பார்த்து மாறி அவைகளை அங்கு கொண்டு செல்லலாம் என்பதே!

 

பிராணிகளை தானும் சென்று பார்த்துக் கொள்கிறேன் என மணி சொல்லியிருக்க,  இவ்வளவு நேரமும் முறைத்துக் கொண்டிருந்த வாணனும் அவனை “தாங்க்ஸ் மாமா” என்று கட்டியணைத்திருக்க வேந்தனும் ஓடி வந்து அவனை அணைக்க, சத்யதேவ் பேசப் பேச   செல்விக்கு தம்பிகள் தன் கூட இருப்பதில் அளவுக்கடந்த ஆனந்தத்தில் சத்யாவை சைட் அடித்துக் கொண்டிருந்தவள் தம்பிகளுடன் சேர்ந்து அவளும் பின்னாடி வந்து  அவனை அணைக்க ஒரு கணம் அதிர்ச்சியடைந்தாலும் அவளின் இந்த சிறு பிள்ளை போன்ற செயலை ரசித்தவனை முறைத்தனர் அக்கா மகள்கள் இருவரும்.

 

அந்த சந்தோசத்தை  கெடுக்கவென அவன் பேசி முடிந்ததும் ஒப்பாரி வைக்காத குறையாய் பார்வதி பாட்டி கத்த அவரை முறைத்தனர் அக்கா தம்பீகள் இருவரும். என்ன சொன்னாலும் சமாதானமடையாத பார்வதி பாட்டியை செல்வியின் பேச்சு யோசிக்க வைத்தது

“எங்கம்மா உன் விருப்பமில்லாம கல்யாணம் பண்ணணு ஒதுக்கி வச்ச, அவங்க சாகும் வர ரோட்டுல கண்டாலும் முகத்தை திருப்பிக் கிட்டு போயிட்ட, செத்ததுக்கப்போறமா பாசம் பொங்கி எங்க கூட வந்து இருந்த, இப்போ என்தம்பீங்கள தனியா விட்டுடாம மாமா யோசனை சொன்னா வீம்பா இங்கயே இருக்கணும்னு பிடிவாதம் பிடிக்கிறியே! நீ இங்கயே இருந்துக்க யார் வேணான்னு சொன்னா? நா என் தம்பீங்கள கூட்டிட்டு போய்டுவேன். வயசான காலத்துல சொந்தம்னு சொல்லிக்க யாருமில்லாம நீதான் கஷ்டப் படப்போற ஊரக கட்டிக் கிட்டு அழு” ஆவேசமாக செல்வி பேச பார்வதி பாட்டி கொட்டும் போதும், அடிக்கும் போதும் அவருக்கு அடங்கியவளா இது என்று அங்கே அவளை ஆச்சரியமாக அனைவரும் பார்க்க ரோஜா மட்டும் ஆராச்சியாய் பார்த்தாள்.

 

“இவ அன்புக்கு அடிபணிபவள் எங்கம்மாவ அடக்க இவ போதும் போலயே!” உள்ளுக்குள் குதூகலித்தாலும் கோமளவள்ளியின் அணுகுமுறை எப்படிப் பட்டதென்று அறிந்தவளுக்கு சிறு கலக்கம் தோன்றத்தான் செய்தது. இல்லையெனில் இவ்வளவு நாளும் குடும்பம் நடத்தும் தந்தையே அன்னையை பற்றி எந்த குறையும் கூறியதில்லை. அன்னை தந்தையிடம் நடிக்கிறாங்களா? இல்லை உண்மையாகவே அன்பாய் இருக்காங்களா? என்று பலதடவை குழம்பும் அளவுக்கு இருக்கும் அன்னையின் நடவடிக்கை. தந்தைக்கு சிறிதேனும் சந்தேகம் வராமல் அன்னை  செய்யும் காரியங்களிலிருந்தே அவர் எப்படிப் பட்டவர் என்பதை புரிந்திருந்தவள் ஒரு போதும் அன்னையை பற்றி யாரிடமும் குறை கூறியதில்லை. கூறினாலும் யாரும் நம்பப போறதுமில்லை, இவ்வளவு காலமாய் பாதிப் படைத்த சித்தியே பொறுமை காக்கும் போது தானும் அமைதியாக இருப்பதே குடும்பத்தாரின் மனநிம்மதிக்கு வழி வகுக்கும் என்று இருந்து விட்டாள்.

பார்வதி பாட்டிக்கு யோசிக்க அவகாசம் கொடுத்து விட்டு அனைவரும் தூங்கச்செல்ல அப்பொழுதுதான் நியாபகம் வந்தவனாக “அட இன்னைக்கு நமக்கு முதலிரவு” சத்யதேவ் செல்வியை பார்த்தான் அவளோ தம்பிகளை அழைத்துக் கொண்டு தூங்க செல்ல ரோஜாவும், தாமரையும் ஒன்றாகவே

“கல்யாணம் தான் அவசரமாக நடந்ததாம் மத்த விஷயமெல்லாம் நல்ல நேரம் பார்க்கணுமாம். போங்க மாமா போய் கனவு கண்டு கிட்டே தூங்குங்க” ஹை பாய் கொடுத்தவாறே கிண்டலடிக்க அவர்களை அடிக்க துரத்தினான் சத்யதேவ்.

 

நாளைய விடியல் நல்லதாகவே விடியட்டும்

 

Advertisement